மரணமும் மதுவும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.  பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது.  உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடியடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும்   மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்புவவில்லை.

அந்தரங்க வெளி எது? பொதுவெளி எது? என்ற குழப்பம் பொதுப்புத்தியில் இருப்பது தவிர்க்கமுடியாதது. இவ்விரண்டும் உருவாகும் புள்ளிகளும் கோடுகளும் பற்றிய புரிதல் இருக்குமென நம்பும் எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இருப்பது சிக்கலானது.  இந்திய/ தமிழ்ச் சூழலில் மதுப்பழக்கம் எப்போதும் தனிமனித அந்தரங்கத்தின் பகுதியே. அந்தரங்கத்தை நட்போடு பகிர்ந்துகொள்வார்கள்; இணைந்துகொள்வார்கள்; பிரிவார்கள்; நிறுத்தவும் செய்வார்கள். ஆகவே பொதுவெளியில் விவாதிப்பதை விரும்ப மாட்டார்கள்.  .

தனிமனித அறம், சமூக அறம், பொது அறம் என அறங்களைப் பிரித்துப் பேசும் திருக்குறள் கூடக் கள்ளுண்ணாமையைத் தனிமனித அறத்தின் பகுதியாகவே வைத்திருக்கிறது.கள்ளுண்ணாமை அதிகாரம் நட்பியல் என்னும் பெரும்பிரிவுக்குள் இருக்கிறது. கள்ளுண்பதால் உடலின் ஒளி குறைந்துவிடும்; சான்றோர்கள் உன்னை நினைக்கமாட்டார்கள்; நாணம் கெட்டுவிடும்; உடலின் மென்னுணர்வு போய்விடும்; அது ஒருவிதத்தில் நஞ்சு போன்றது; தெரியாமல் அருந்திவிட்டுக் குடிப்பதே இல்லையெனப் பொய்பேசவைக்கும்; உடல் சோர்வு உண்டாகுமென நண்பனுக்குச் சொல்லும் அறிவுரையாகவே சொல்கிறது. ஆனால் திருவள்ளுவருக்கு முந்திய காலம், நட்பின் நெருக்கத்தைக் காட்டும் அடையாளமாகக் கள்ளுண்ணுதல் இருந்திருக்கிறது. புலவு மணம் வீசும் தன் தலையைத் தன் நறவுமணம் கொண்ட கையால் தடவிக்கொடுக்கும் அதியமான் கொஞ்சமாகக் கிடைத்தால் எனக்குக் கொடுப்பான்; நிறையக் கிடைத்தால் இருவரும் சேர்ந்து குடிப்போம்; நான் பாடுவேன்; அவன் கேட்டு மகிழ்வான் எனச் சொல்கிறாள் கவியும் பாடினியுமான ஔவை. அவளது புறப்பாடல் (235) வரிகள் இவை: இவ்வரிகளில் வெளிப்படும் உணர்வு குற்ற வுணர்வல்ல; இப்போது அவன் இல்லை என்ற சோகம் இதில் இழையோடுகிறது என்றாலும் குடியால் செத்துவிட்டானே என்று அவள் மனம் அழவில்லை.

சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே.

#####################

மது அருந்துதல் ஐரோப்பா போன்ற பனிப்பரவல் உள்ள நாடுகளில் உணவின் பகுதியாக இருக்கிறது. இந்தியா போன்ற வெப்பப்பிரதேச நாடுகளில் அப்படி இருக்க வேண்டியதில்லை. என்றாலும் உடல் உழைப்பில் ஈடுபடும் மனிதர்களுக்கு அஃதொரு வலி மறப்பு மருந்தாக இருந்திருக்கிறது; இருக்கிறது. உடல் உழைப்புக்குழுக்களைப் போல மூளை உழைப்புக்குழுக்கள், தங்கள் மனச்சோர்வை நீக்கும் மருந்தாக நினைத்துக் கைக்கொண்டுள்ளன. மது வகைகள் பெரும்பாலும் தங்கள் நிலப்பரப்பில் விளைந்த தாவரங்களிலிருந்து கிடைக்கும் சாறாகவே இருந்துள்ளன. அதனை இடம்பெயரச்செய்யும் விதமான அயல் பிரதேசக் குடிபானங்கள் வந்தபோது எதிர்ப்புணர்வும் கூடியிருக்கிறது. உள்ளூர்த் தேறலோடு யவனச் சரக்கு வந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. உடல்  மற்றும் மனச்சோர்வின்போது அதைப் போக்கும் மருந்துகளில் ஒன்றாகக் குடியும் குடிசார் மனநிலையும் இருந்ததிலிருந்து மாறியபோது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பரப்புரைகள் தோன்றியுள்ளன.

நிகழ்காலத்தில், தனிமனிதப் பழக்கம் சமூகத்தின் வேலைத்திட்டமாகவும், அரசின் பொருள்வருவாய்க் காரணியாகவும் ஆகியிருக்கிறது. அந்தக் காரணம் பற்றி குடியும், குடிப்பொருள் விற்பனை அமைப்பும் விமரிசிக்கப்பட வேண்டியன. நமது நிகழ்கால வாழ்க்கை முறைகளும் அதனை அனுமதிக்கும் அரசுகளும் தனிமனித அந்தரங்கங்கள் பலவற்றைப் பொதுவெளிக்குரியதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

அனைத்து மக்களுக்குமான அரசுகள் குடிப்பொருளாதாரத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுகின்றன. அத்தோடு அரசியலற்றவர்களாகத் திரள்மக்களை மாற்றிக் குற்றவாளிகளும் கெடுமதியாளர்களும் அரசதிகாரத்தைக் கைப்பற்ற மதுப்பழக்கமும், அதனால் கிடைக்கும் பொருளாதாரமும் காரணமாக இருக்கின்றன என்பது நிகழ்கால உண்மை. இதனாலேயே எதாவதொரு காரணம்பற்றி மதுவுக்கெதிரான கருத்துரைகளை வைத்துவிடவேண்டுமெனப் பரப்புரையாளர்கள் நினைக்கிறார்கள்.  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்