தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்
தண்ணீர்


***************

இது ஒரு ஆற்றுகைப் பனுவல் (PERFORMANCE TEXT)

இப்பனுவலில் உள்ள கவிதை வரிகளை எழுதிய கவிகள்

சி.சுப்பிரமணிய பாரதி

வ.ஐ.ச.ஜெயபாலன்

கோடாங்கி

தேன்மொழிதாஸ்

ஆதவன் தீட்சண்யா

மகேஷ் பொன்

******

ஆற்றுகைப் பனுவலாக்கம் :

அ.ராமசாமி

                                                                       88888888888888

காட்சி : 1


[கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று நபர்கள் மேடையில் அமர்ந்துள்ளனர். முக்கோண வடிவத்தில் அமரவேண்டும். கையில் மரத்தால் ஆன சுத்தியல் இருக்கிறது. அவற்றைக் கொண்டு முன்னால் உள்ள கட்டையில் தட்டுவதே அவர்களின் மொழி]

முதலாமவன் : ஒன்று – ஒன்று – ஒன்று என்ற தாளத்திலும்
இரண்டாமவன் : ஒன்று இரண்டு - என்ற தாளத்திலும்
மூன்றாமவன் : ஒன்றுஇரண்டுமூன்று –என்ற தாளத்திலும் பேசுகின்றனர்.

[ஒளி அவர்கள் முகத்தில் இல்லை. மெல்ல பரவுகிறது.]

நபர் : 1 -2 -3
நபர்.2 ; 1,2 -1,2 -1,2
நபர் 3 : 1,2,3, - 1.2.3 – 1,2,3
நபர் 1 :( திரும்பவும் தாளகதிப் பேச்சு)

(ஒருவன் பார்வையாளர் பகுதியில் அடித்துப் புரட்டப்படும் ஓலம்.)
அவன் : அய்யா விட்டுடுங்க அய்யா.. அய்யா விட்டுடுங்கய்யா..
நபர்.2 : (தாளகதிப் பேச்சு)
அவன் : அய்யோ அடிக்காதீங்க… அய்யா.. அடிக்காதீங்க அய்யா..
நபர் 3 : (தாளகதிப் பேச்சு)
அவன் : அய்யா மன்னிச்சிடுங்கய்யா… அய்யா மன்னிச்சிடுங்கயா.
(மூவரின் தாளமும் ஒன்றிணைந்து மோதுகின்றன.)
நபர் : (தாளகதிப் பேச்சு)
அவன் : (மேடைக்கு வந்து விடுகிறான்) நீரைத் தேடி நீண்ட கால்கள் எவர் கால்கள்…?
நபர் 2 : (தாளகதிப் பேச்சு)
அவன் : பாறைகளைப் பிளந்து நீரை உண்டாக்கிய கரங்கள் யார் கரங்கள்…?
நபர் 3 : (தாளகதிப் பேச்சு)
அவன் :

குட்டையைத் தோண்டிக் குளங்களை உண்டாக்கிய

கூட்டம் எந்தக் கூட்டம்..?

(நபர்கள் மூவரும் தாளகதியில் அடித்துத் துவைத்துப் போடுகின்றனர்.)
நபர்.2 :

தண்ணீர் சுத்தமானது;

தண்ணீர் புனிதமானது;

தண்ணீரைத் தீட்டாக்கியது பெருங்குற்றம்
நபர் 3 :

அம்மன் கலசம் கலக்கும் நீர் தீட்டானது;

தீட்டைக் கழுவிச் சுத்தம் செய்யப் புனிதப் பலி அவசியம்.
மூவரும் ; ( தாளத்துடன்)

புனிதப்பலி அவசியம்..

புனிதப்பலி அவசியம்..
(அவனைக் கோணிப்பையில் அமுக்கி கயிற்றில் கட்டித் தொங்க விடுகின்றனர். மேடையின் நடுவில் கோணிப்பை ஆடிக் கொண்டிருக்கிறது. பின்னணியில்
ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆரிரரோ….
(என்ற தாலாட்டின் இசை ரூபம் கேட்டுக் கொண்டிருக்கிறது)

[ஒற்றைத் தாளலயத்தில் சுத்தியல்வழி ஒலி]

நிலையமைதிமிக்க சமத்துவம் தண்ணீரில் இருக்கிறது
தண்ணீர் யாவருக்குமானது

[இரட்டைத்தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

திட்டமிடத் தெரியாத நதியின் கதியை
திட்டமிட்டு நேர்வழியில் திருப்புவோம்..

[மூன்று தாள லயத்தில் சுத்தியல் ஒலி]



காட்சி: 2

(நான்குபேர் ஒரு பெரியவரைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து வருகின்றனர்.

பல்லக்கின் உள்ளே இருப்பவரின் முகம் முதலில் தெரியாது.

கையில் கமண்டலம் வைத்துள்ளார். அது மட்டும் வெளியே தெரியவேண்டும்.

பல்லக்குத்தூக்கிகள் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் நகர்கின்றனர்.

நால்வரும் வெவ்வேறு தொனிகளில் பாடுகின்றனர்)

தூக்கி.1. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

முள்ளும் புதரும் மேனிக்கு மருந்து

பெரியவர் சரணம்: பெரியவர் சரணம்

தூக்கி.2. பாதை ஒன்னும் மோசமில்லை..

பாரம் மட்டும் கனமாயிருக்கு…

தூக்கி.3. பாரம்கூடத் தாங்கிக்கொள்ளலாம்.

பாதை தெளிவாய் இருந்தா போதும்

தூக்கி.4. ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்..

எத்தனை மேடு.. எத்தனை பள்ளம்

பொசுக்கும் வெயிலில் கால்கள் வெடிக்கும்

உறையும் பனியில் தோல்கள் விரியும்

எத்தனை மேடு.. எத்தனை பள்ளம்

தூக்கி.1 பெரியவர் பல்லக்கு பெரியவர் பவனி ; பெரியவர் சேவகம் பெரிய தியாகம்..

நாட்டின் தலைவர் நமது பெரியவர்;நமது சேவை நாட்டுக்குத் தேவை

தூக்கி.2. இருந்தாலும் பாதையா..? இது பாதையா..? கல்லுங்கரடும் முள்ளும் புதரும்

காட்டாற்று வெள்ளம் கழுத்தில புரளும்; இது பாதையா..?

தூக்கி.3. ஆமாம்.. பாதையா.. இது பாதை?

தூக்கி.4. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

முள்ளும் புதரும் மேனிக்கு மருந்து

பெரியவர் சரணம்: பெரியவர் சரணம்

தூக்கி.2. வந்தாச்சா.. வந்தாச்சா>>

தூக்கி.4. வந்தாச்சு.. வந்தாச்சு..

( பல்லக்கு நிற்கிறது: இறக்கப்படுகிறது. பெரியவர் இறங்கி வானத்தை நோக்கி..) பெரியவர்: பொழிக! பொழிக!! வானம் பொழிக..

பொழிக பொழிக மழை பொழிக

மழை நன்று; நீர் நன்று; நீரே உயிர்களின் ஆதாரம்

பொழிக! பொழிக!! வானம் பொழிக..

பொழிக பொழிக மழை பொழிக

(பின்னணியில் இருந்துவரும் பாடலுக்குப் பல்லக்குத் தூக்கிகளும் பெரியவரும் ஆடுகின்றனர்)

பாடல்:

சட்டச்சட சட்டச்சட சட்டச்சடாவென்று

தாளங்கள் கொட்டித் திளைக்குது வானம் (2)

எட்டுத்திசையும் அதிர மழை எங்ஙனம் வந்ததடா?

தம்பி வீரா.. மழை எங்ஙனம் வந்ததடா?(2)

கண்டோம்.. கண்டோம்.. கண்டோம்..

காலத்தின் கோலத்தைக் கண்முன்னே கண்டோம்..

கண்டோம்.. கண்டோம்.. கண்டோம்..(2)

(பல்லக்குத்தூக்கிகள் வெவ்வேறு இடங்களில் அமர்ந்துள்ளனர். பெரியவர் கமண்டலத்திலிருந்து நீரைக்குடித்துவிட்டு வைக்கிறார். பல்லக்குத்தூக்கிகள் நீர் தேடி அலைகின்றனர். ஓடைகளிலும் குட்டைகளிலும் மேலே கிடைக்கும் குப்பை கூளங்களை விலக்கிவிட்டுப் பருகுகின்றனர். ஒருவர் மாத்திரம் பெரியவர் குடித்துவிட்டு வைத்த நீரை எடுத்துக் குடிக்கின்றான். கோபம் கொண்ட பெரியவர் ‘ தகிட தகிட தகிட ‘ என்ற தாளகதியில் ஆடிமுடித்துச் சாபமிடுகிறார்.)

பெரியவர்: நீர் புனிதமானது.. நீர் சுத்தமானது..

நீரை அசுத்தப்படுத்தியது பெருங்குற்றம்

(பின்னணியில் “பலி.. பலி.. பலி..” என்ற குரல்கள் கேட்கின்றன.. தாளத்துடன் சுற்றிவந்து)

பெரியவர்: புனித நீரைத் தீட்டாக்கிய நீ..அண்டங்காக்கையாகப் போகக்கடவாய்..

(அவன் காகமாக மாறிப்பறக்கின்றான்.)

(ஆராரோ.. .. ஆராரோ.. ஆராரோ.. .. ஆரிரரோ.. ஒலிக்கின்றது. கோணிப்பை அசைந்து தொங்கி ஆடுகிறது. பை மேலே உயரும்போது)

[ஒற்றைத்தாள லயத்தில் சுத்தியல்வழி ஒலி]

நிலையமைதிமிக்க சமத்துவம் தண்ணீரில் இருக்கிறது
தண்ணீர் யாவருக்குமானது

[இரட்டைத்தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

திட்டமிடத் தெரியாத நதியின் கதியை
திட்டமிட்டு நேர்வழியில் திருப்புவோம்..

[மூன்று தாள லயத்தில் சுத்தியல் ஒலி]


காட்சி:3

(கடலோரக் கிராமம் ஒன்றின் பிம்ப அடுக்குக்குள் தொட்டிலில் போட்டு ஒரு குழந்தையைத் தாலாட்டும் காட்சிப் படிமம் பின்னணியில் தெரிகிறது. குரலில் சோகம் கரைய)
பாடல் :

தாழைமரவேலி… தள்ளி ஒரு சிறு குடிசை..
சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் ஒரு குழந்தை
ஆராரோ.. .. ஆராரோ.. ஆராரோ.. .. ஆரிரரோ..

[கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் ஒருவன் மேடையில் தள்ளப்படுகின்றான். அவனது ஓலம் முடியும் நிலையில்]

சாதி மேலாளர் குளிக்கிற குளமடா.. அது

சாதி மேலாளர் குளிக்கிற குளமடா
அந்தக் குளத்தில் இறங்கிக் குளிச்சான்னு – உங்க மாமன்

எறங்கிக் குளிச்சான்னு-
தென்னை மரத்தோட சேர்த்து வச்சுக் கொன்னாங்க -உங்க மாமனெ
சேர்த்துவச்சுக் கொன்னாங்க - பாவிங்க
சேர்த்துவச்சுக் கொன்னாங்க

[அவன் மரத்தில் கட்டப்பட்டு மரத்தோடு வெட்டி வீழ்த்தப்படுகிறான்]

காற்று பெருங்காற்று… காற்றோடு கும்மிருட்டு..
[ மேடை இருளாகிறது.. காற்று புயலாகச் சீறுகிறது.]

காற்று பெருங்காற்று.. காற்றோடு கும்மிருட்டு.
கும்மிருட்டோ குலைநடுங்க கோசமிட்ட கடல்பெருக்கு
கல்லுவைத்த கோயிலெல்லாம் வரம் இரந்த

அந்த இரவு.. அந்த இரவு…(2)

[ கலவரம் நடக்கிறது.. வெட்டு,.. குத்து… பிணங்களாய்.. மனிதர்கள்]


அந்த இரவு … அதற்குள் மறக்காது..

அந்த இரவு … அதற்குள் மறக்காது
பாடல் :

தானாய் விடிவெள்ளி.. தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான் வாழ்வில் இருள் தொடரும்

[ஆராரோ.. ஆராரோ.. என்ற தாளகதியின் பின்னணியில் கோணிப்பை தொங்குகிறது, பிணங்களாய் இருந்தவர்களிடமிருந்து குரல் ]

[ஒற்றைத்தாள லயத்தில் சுத்தியல்வழி ஒலி]

நிலையமைதிமிக்க சமத்துவம் தண்ணீரில் இருக்கிறது
தண்ணீர் யாவருக்குமானது

[இரட்டைத்தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

திட்டமிடத் தெரியாத நதியின் கதியை
திட்டமிட்டு நேர்வழியில் திருப்புவோம்..

[மூன்று தாள லயத்தில் சுத்தியல் ஒலி]



காட்சி .4
                    பள்ளிக்கூட மணி அடிக்கிறது. நடிகர்களில் ஒருவன் ஆசிரியராக ..

மற்றவர்கள் மாணவர்களாக அமர்கின்றனர்.



ஓரெண்டா ரெண்டு.. ஓரெண்டா ரெண்டு..
ஈரெண்டா நாலு ஈரெண்டா நாலு
முவிரண்டா ஆறு முவிரண்டா ஆறு
ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணாக்கர்கள் திரும்பச் சொல்கின்றனர்.

சொல்லிய ஆசிரியர் மாணவராக .. இன்னொரு நடிகர் ஆசிரியராகின்றார்.

[கோலாட்ட ரூபத்தில் பாடம் நடக்கிறது].
ஆசிரியர் ( பாடல்):

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

(மாணாக்கர்கள் சேர்ந்து சொல்கின்றனர். மணி அடிக்கிறது . மாணாக்கர்கள் வெளியேறுகின்றனர். பானையில் உள்ள தண்ணீரை மொண்டு குடிக்கின்றனர். இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒருவனை இழுத்து வருகின்றனர்.)
ஆசிரியர் :

ஏண்டா.. கொழுப்பேறிப்போச்சா.. டம்ளரைத் தொட்டு பானைக்குள்ள கையைவிட்டுத் தண்ணீர் குடிப்பீங்களோ.
அவன் :

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் ……. பாடலாக


ஆசிரியர் : ஏண்டா .. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்னு நினைப்போ..
நான் சொன்ன பாடத்தெ எனக்கே சொல்ல வந்துட்டயோ..

[அடிக்கிறார். அவன் அடிதாங்க முடியாமல் குதிக்கிறான்.

திடீரென்று கண்களை மூடிய படி]
அவன் :

அய்யோ.. என் கண்ணு போச்சே.. என் கண்ணு போச்சே..
கண்ணு கண்ணு தெரியலயே…. கண்ணு..

எல்லாரும் : கண்ணு தெரியலயா.. ? கண்ணு தெரியலயா?
கண்ணு போச்சா.. கண்ணு போச்சா..
[ஆராரோவின் பின்னணியில் பிணமூட்டை இறங்குகிறது]

பாடல் : (குழுவாக)
கண்ணு வித்து வாங்கப் போற சித்திரத்த – அந்தக்
கண்மாய்க் கரைமேல போட்டுவிடு கண்மணியே –
நீ பச்சத் தண்ணி குடிச்சதனால் பழிகாரி ஆன கதை
பார்த்திருந்த பாவிகளை என்ன செய்ய கண்மணியே – ( கண்ணு)

[ஒற்றைத்தாள லயத்தில் சுத்தியல்வழி ஒலி]

நிலையமைதிமிக்க சமத்துவம் தண்ணீரில் இருக்கிறது
தண்ணீர் யாவருக்குமானது

[இரட்டைத்தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

திட்டமிடத் தெரியாத நதியின் கதியை
திட்டமிட்டு நேர்வழியில் திருப்புவோம்..

[மூன்று தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

காட்சி:5

தாளமொழி திருப்பு நிலையில் ஒலிக்கின்றன

முதலில் மூன்று, அடுத்த இரண்டு, அடுத்ததாக ஒன்று என. தாளமொழி முடியும்போது..

முதலாமவர்:

கையெடுத்து கும்பிடுவதற்கு

ஒரு கூட்டம் இருந்தது

அடிமை சேவகம் செய்வதற்கு

ஒரு கூட்டம் இருந்தது

இரண்டாமவர்:

குட்ட குட்ட குனிவதற்கு

ஒரு கூட்டம் இருந்தது

அவ்வப்போது அடிவாங்குவதற்கு

ஒரு கூட்டம் இருந்தது

பயந்து நடுங்குவதற்கென்றே

ஒரு கூட்டம் இருந்தது

மூன்றாமவர்:

அந்த கூட்டம் இருந்தவரை

ஆண்ட பரம்பரையினர் உயிர்ப்புடன் இருந்தனர்…

கூனிக்குறுகி நின்ற அந்த கூட்டம்

காலப் போக்கில் கலைந்து போய்விட்டது.

மூவரும் சேர்ந்து ஒரே நேரத்தில்

என்ன நடந்தது? எப்படி நடந்தது?

மூன்றாவது நபர்:

கூட்டம் கூட்டமாய்

கல்விக்கூடங்களுக்கு போய்விட்டனர்…

இரண்டாமவர்:

அதற்காக ஆண்ட பரம்பரைப் பெருமையை

விட்டுத்தரமுடியுமா..

நாங்கள் ஆண்ட பரம்பரையினர் – ஆம்

நாங்கள் ஆண்ட பரம்பரையினர்

மூன்றாமவர்:

ஆண்ட பரம்பரையை இனிப்

பேண்ட பரம்பரையாக்குவோம்

நீர்த்தொட்டியில் பேண்ட பரம்பரையாக்குவோம்


(ஒருவன் ஏணி வழியாக ஏறித் தொட்டியில் நிற்கின்றான்.

இன்னொருவன்கையில் கொண்டுவந்த வாளியோடு கூடிய கயிறைத் தூக்கி எறிகிறான். வாளி காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.

தாங்கள் கழித்த மலத்தை வாழை இலைகளில் அள்ளிக் கொண்டு வந்து வாளியில் நிரப்புகின்றனர் . வாளி மேலும் கீழும் போய்வருகின்றது.

மூன்று பெண்கள் இப்போது சாமியாடியபடி அந்த வாளியைச் சுற்றிவருகின்றனர்.

(கூட்டத்திற்குள்ளிருந்து குரல் ஒலிக்கிறது)

களத்தில்…

நிமித்தம் பாராமலும்

நற்சொல் கேளாமலும்

நெடுங்காலமாய்

நீ தொடுத்துவரும் போரினால்

சமத்துவத்திற்கான பாதையில்

முன்னகரும் நான்

புறங்காட்டப்போவதில்லை

(அதேபோல் அக்குரல் வந்த திசையின் எதிர்ப்புறத்திலிருந்து இன்னொரு குரல்)


நான்

உனது படைக்கலமனைத்தையும் முறித்துப்போட்டு

பாசறையை வெறுங்கூடாரமாக்கிய நாளில்

நீயோ

பீயை அள்ளிக்கொண்டு வருகிறாய்

ஆயுதம் எதுவென்றறியாத

உன்னுடன் போரிடுவது அவமானம்

உன்னை

எதிரியென ஏற்குமளவு

நாணமற்றுப் போகவில்லை நான்

நாசினியால்

கைகளைக் கழுவித் தூய்மையாகு

மலத்தை நினையாமல் சோறுண்ணப் பழகு

(இன்னொரு திசையிலிருந்து இன்னொரு குரல்)

குடிநீரைப் பாழ்படுத்தும்

குணக்கேடரல்ல யாம்

தைரியமாய் தண்ணீர் குடி

மலையேறி துவண்டிருக்கும்

உன் சாமிக்கும்

ஒரு முழுங்கு கொடு

இன்று போய் நாளை

எதிரியாகும் தகுதியுடன்

திரும்பி வா

எதிரியாவதற்கு

நீ மனிதராக வேண்டும்

நான் காத்திருக்கிறேன்.

குரல்கள் :

நாங்கள் வளருவோம்; நாங்கள் நிமிருவோம்
அந்த மரத்தின் இலைகளைத் தொடுவோம்
இந்தக் குளத்தில் இறங்கிக் குளிப்போம்
மீண்டும் ஒரு சிறுவன் அந்தக் குளத்தில்
கல்லெறிவான். நாங்கள் வளர்வோம்.நாங்கள் நிமிர்வோம்.

பார்வையாளர்களை நோக்கி. எல்லோரும் சேர்ந்து ஒலிக்கும்படி கேட்டுக்கொண்டு

[ஒற்றைத்தாள லயத்தில் சுத்தியல்வழி ஒலி]

தண்ணீர் நிறமற்றது: தண்ணீர் சுத்தமானது

நிலையமைதிமிக்க சமத்துவம் தண்ணீரில் இருக்கிறது
தண்ணீர் யாவருக்குமானது

[இரட்டைத்தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

திட்டமிடத் தெரியாத நதியின் கதியை
திட்டமிட்டு நேர்வழியில் திருப்புவோம்.

நிறமற்ற நீரில் மலம் கலந்தது அறிவீனம்

குடிக்கும் நீரைக் கலங்கலாக்கியது ஆணவம்.

அறிவீனம் தொலைப்போம்; ஆணவத்தைக் கைவிடுவோம்

சாதி ஆணவத்தைக் கைவிடுவோம் .

[மூன்று தாள லயத்தில் சுத்தியல் ஒலி]

==========================================================

நன்றி: இந்தக் குறுநாடகத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளை எழுதிய கவி பாரதி, கவி வ.ஐ.ச. ஜெயபாலன், கவி கோடாங்கி, ஆதவன் தீட்சண்யா, தேன்மொழிதாஸ், மகேஷ்பொன் ஆகியோர் நன்றியுடன் நினைக்கப்படுகிறார்கள்

கருத்துகள்

saru.manivillan இவ்வாறு கூறியுள்ளார்…
arumai....arumai....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்