July 15, 2016

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

தமிழுக்கு இருக்கை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு நிதிதிரட்டும் பணியில் இரண்டு இந்திய- அமெரிக்க மருத்துவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற தகவலின்பேரில் இந்தப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வாயிலும் மூளையிலும் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 400 ஆவது ஆண்டுவிழாவைக்கொண்டாட இன்னும் 20 ஆண்டுகள் உள்ளன. 1636 இல் தொடங்கப்பட்ட மசுசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரான் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியின் பெயர் கேம்பிரிட்ஜ். இப்பல்கலைக்கழகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பழையது.
ஜான் ஹார்வர்ட் என்ற புரவலர் தனது நூலகத்தையும் பல்கலைக்கழகத்திற்காகத் தனது எஸ்டேட்டில் பாதியையும் தந்ததால் அவரது பெயரையே பல்கலைக்கழகத்திற்குச் சூட்டியிருக்கிறார்கள். பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கி இரண்டாண்டுகள் கழித்து 1638 இல் அவர் மரணம் அடைந்திருக்கிறார். அவரது மிகப்பிரமாண்ட சிலை பல்கலைக்கழகத்தில் முக்கிய வளாகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் மாணவர்களும் பார்வையாளர்களும் அவரது காலடிகளைத் தொட்டு நின்று படம் எடுத்துக்கொள்வதால் பாதப்பகுதியின் கறுப்புவண்ணமே தேய்ந்திருக்கிறது. நானும் ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.
அச்சிலையிலிருந்து இடதுபுறம் போனால் பிரமாண்டமான நூலகம் இருக்கிறது. பின்னே இருப்பது தேவாலயம். தத்துவத்துறையும் அருகில் தான் இருக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிக்காட்ட ஒருமணிநேரத்திற்கொரு வாகனம் கிளம்புகிறது. முன்பதிவுசெய்து வாகனத்திலிருந்தபடி பார்த்துவரலாம்.
9 மாணவர்களோடும் ஒரேயொரு ஆசிரியரோடும் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000.பட்டம் வழங்கும் 12 புலங்களின் கீழ் ஏராளமான துறைகள் செயல்படுகின்றன. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வுகள், தொழில்துறைப் படிப்புகள் என அனைத்தும் வழங்கும் புலங்கள் கொண்ட உலகத்தரப்பல்கலைக்கழகத்தில் படித்த அதன் முன்னாள் மாணவர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து 190 நாடுகளில் இருக்கிறார்கள். 3,60,000 முன்னாள் மாணவர்கள் இப்போதும் உயிருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என அதன் வலைத்தளம் சொல்கிறது.
தரம் பேணுவதில் கவனமாயிருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான நிதியை வழங்கும் அறக்கட்டளைகள் 1300 இருப்பதாகத் தெரிகிறது. பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வுகள், வாய்மொழித்தேர்வுகள், விவாதங்களில் கலந்துகொண்டு தேர்வுபெற்றுவிட்டால், படிப்பு உதவுகள் தர அந்த அறக்கட்டளை நிதிகள் காத்திருக்கின்றன. ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அறக்கட்டளை நிதியும் பெருந்தொகையோடு செயல்படுகிறது. இந்தியப்பல்கலைக்கழகங்களில் இப்படியொரு நிதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் மிகப்பழைமையானதும் உலகத்தரப் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பதுமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே தமிழ்ப்படிப்பு இருக்கிறது. தென்னாசியவில் துறையின் பகுதியாக இருக்கும் அத்துறையில் ஒருவிரிவுரையாளர் தமிழ் கற்றுத்தருகிறார். சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் நார்மனிடம் பயின்ற ஜோனாதன் ரிப்ளேயைச் சந்திக்க முடியவில்லை. விடுமுறைக்காலம் என்பது ஒருகாரணம். இத்துறையைத் தாண்டித் தமிழுக்கென ஓர் இருக்கையை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஒருபேராசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்குப் பெரும்பணம் வைப்புநிதியாக வைக்கவேண்டும்.
உலகத்தின் மற்ற செவ்வியல் மொழிகளான லத்தீன், கிரீக்,சம்ஸ்க்ருதம், ஹீப்ரு, பெர்சியன், சீனம் ஆகியனவற்றோடு ஹார்வர்ட்டில் இணைத்துவைத்துத் தமிழையும் நிலைநிறுத்தவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு செயல்படும் மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் ( Dr. S.T. Sambandam , Dr.V. Janakiraman) தங்கள் பங்காக ஒருமில்லியன் டாலரைக்கட்டி இருக்கையை உறுதிசெய்திருக்கிறார்கள். இன்னும் கட்டவேண்டிய பணம் 5 மில்லியன் டாலர்கள். அவர்களோடு அமெரிக்காவில் இருக்கும் செவ்வியல் இலக்கிய மொழிபெயர்ப்பாளர் வைதேஹி ஹெர்பர்ட், கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் போன்றோர் இணைந்திருக்கிறார்கள்.
6 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்தியப் பணத்தில் 40 கோடி ரூபாய்) வைப்புநிதியாக வைத்து உருவாக்கப்போகும் இந்தத் தமிழ் இருக்கை என்னசெய்யப்போகிறது என்ற பார்க்கும்போது தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுத்தரும்/ ஆய்வுசெய்யும் இருக்கையாக அமையும் எனக் குறிப்புகள் கூறுகின்றன. இதே நோக்கத்தில் இயங்கும் தமிழ்ச்செம்மொழி நிறுவனம் தனது நிதியை வழங்கிச் செவ்வியல் தமிழ் இருக்கையை உறுதிசெய்யலாம். தமிழுக்கு ஓரு உயரிய அங்கீகாரம் கிடைக்கும் நிலையை இப்போதிருக்கும் மைய அரசு உறுதிசெய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை. தனியார் நிதிநல்கைகளோடு நிறுவப்படும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைத் தமிழை உலகவரைபடத்தில் நிலைக்கச்செய்யும் என்ற வகையில் இம்முயற்சி வரவேற்கத்தக்கது.
இந்த இடத்தில் இன்னொன்றையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. இதுபோல் உலகப்பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தமிழ் இருக்கைகள் இருக்கின்றன. நான் பணியாற்றிய போலந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகத்திலும் க்ராக்கோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைகள் உள்ளன. அவற்றிற்குத் தமிழ்ப்பேராசிரியர்களை வருகைதருபேராசிரியர்களாக அனுப்புவதில் இருந்த தாராளத்தன்மை குறைந்து புதியநெருக்கடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 9 மாதம் மட்டுமே என்ற காலக்குறைப்பின் காரணமாக போகநினைப்பவர்களும் தடுமாறுகிறார்கள். போனாலும் அங்கிருக்கும் மாணாக்கர்களுக்குப் பயன்படும் விதமாகப் பாடத்திட்டத்தில் பங்கெடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.  பிரான்சு, ஜெர்மனி, செக், இங்கிலாந்து, பின்லாந்து, ரஷ்யா போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்பட்டு வருகின்றன. சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளில் அந்தந்த அரசுகளின் உதவியாலும் ஆர்வத்தாலும் மட்டுமே தமிழ்ப் பேராசிரியர்கள் நீடிக்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் தங்கள் முயற்சியால் தமிழ்த்துறைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இவைகள் எல்லாவற்றையும் தமிழர்களும் தமிழ் அரசுகளும், தமிழர்களைத் தம் குடிகளாகக் கருதும் பேரரசுகளும் கவனிக்கவேண்டும்; நிதி வழங்கவேண்டும். மனது இருந்தால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளோடு பரிவர்த்தனைத் திட்டங்களின் அடிப்படையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரிமாறிக்கொள்ளலாம்.
அயல்நாடுகளில் தமிழ்வளர்ச்சிக்கு உதவும் அதேநேரத்தில் உள்நாட்டில் தமிழ் வளர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட தமிழியல் நிறுவனங்களான உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், செம்மொழி நிறுவனம், உலகத்தமிழ்ச்சங்கம், பல்கலைக்கழகத் தமிழியல் துறைகள் போன்றவற்றிற்கும் நிதியுதவி வழங்கி ஆய்வுகளை ஒருங்கிணைப்புச் செய்யும் பொறுப்பை அரசுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழ் செம்மொழியாக மட்டுமல்லாமல், வாழும் மொழியாகவும் வளரும் மொழியாகவும் ஆகவேண்டும்.No comments :