ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும்

இடம் : முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு  ஹால்.
பின் இடது புறம்  சமை யலறையின் ஒரு பகுதி தெரிகிறது.
பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது.
பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.
ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால் மூவர் அமரக் கூடிய ஒரு சோபா ; அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள். வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.
நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.
அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.
இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.

தொலைக்காட்சிப் பெட்டி ஒரு மரத்தாலான வேலைப்பாடுகள் நிரம்பிய ஸ்டேண்டில்                வைக்கப் பட்டிருக்கிறது.
சமையலறையிலிருந்து வந்த திருமதி ஜேம்ஸ் ஒரு முறை நின்று திரு ஜேம்ஸைப் பார்க் கிறாள். அவர் தினசரித்தாளை அகலவிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.
வந்தவள் படுக்கையறைக்குள்போய்விட்டு உடனடியாகத்திரும்புகிறாள்.
படுக்கையறைச் சுவரில் இயேசுவின் படம் ஒன்று மாட்டப்பட்டுள்ளது.
அதன் அருகில் சில நிழற்படங்கள்.
அவர்கள் இருவரும் இருக்கும் படங்கள்.
வெவ்வேறு வயதில்.
தயாராக இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தவள் வாசலில் நின்றபடி .. . ]

திருமதி:      நான் போகிறேன்
திரு:           [சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ்]
என்ன அவ்வளவுதானா..? நிஜமாகவா..? என்னை விட்டுப் பிரியும்போது உனக்குச் சொல்ல வேறு ஒன்றுமே இல்லையா..? என்று கேட்டார்.
திருமதி:      ஒன்றுமே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
திரு:           எங்கே போவாய்..?
திருமதி:      எங்கோ.. வெகுதூரம்.. யாருமற்ற தனிமைக்கு..
[ இடதுபுற ஒற்றைச் சோபாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றபடி] இறக்கும் போதேனும் நான் மட்டும் தனியாக வெறுமையுடன் கொந்தளிப்பற்ற மனத்துடன் இறக்க விரும்புகிறேன்.
திரு:            பைத்தியம் போல் உளறாதே.    
[சாய்வு நாற்காலியிலிருந்து எழும்பி இரண்டடி முன் நடந்து]
இறக்கும்போதுஎல்லாரும் அப்படித்தான் இறக்க வேண்டும். அவரவர்கள் மட்டுமே தனியாக. தனித்தனியாக . உலகமே திரண்டு வந்து நின்றாலும் மரணம் உன்னைத் தனிமையில் ஆழ்த்தித் தான் அணுகும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     உன் 42 ஆவது வயதில் இப்படியொரு முட்டாள் தனத்தைச் செய்ய விரும்புவாய் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
                           [ சோபாவைச் சுற்றி வந்து]
                 என் பேச்சைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்து விடு
திருமதி:      இல்லை நான் போக வேண்டும்.
[எதிரிலுள்ள சோபாவை நோக்கி நகர்ந்து செல்கிறாள். கையில் உள்ள பெட்டி அவளை யறியாமல் அங்கு உள்ள டீபாயின் மேல் குறுக்குவாட்டில் நிற்கிறது. அதன் மீது ஒட்டப் பட்டுள்ள படத்தில் ஒரு பறவை கிளையில் உட்கார்ந்திருக்கிறது. தூரத்தில் நீருக்கு மேலே ஒரு பறவை பறந்து கொண்டிருக்கிறது]
திரு:     அப்படியே தான் என்றாலும், நீ விரும்பும் தனிமைக்கு இங்கு என்ன குறைவு.? நீயும் நானும், எவ்வளவு ஆண்டுகளாக - இதே வீட்டில் தான் என்றாலும்- இரண்டு முதிர்ந்த பிராணிகளைப் போல் தனித்தனியாகத் தானே  இருந்து வருகிறோம். நீ விரும்பினால் இன்று முதல் வேறு வேறு அறையில் படுத்துக் கொள்ளலாம்.
திருமதி:      இல்லை, நான் நிச்சயித்து விட்டேன்.நான் போய்த்தான் தீர வேண்டும்
[ கடந்த இரண்டு மாதங்களாகவே திருமதி ஜேம்ஸுக்குள் அந்த எண்ணம் பதுங்கிப் பதுங்கி வளர்ந்திருந்தது. மெல்லமெல்ல அது ரத்தமும் சதையுமாய்த் திரண்டு ஒரு வினோத பூதத்தைப் போல் அவளைப் பற்றிக் கொண்டது. முதல் நாள் இரவு முற்றத்தில் அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது தான் ஜேம்ஸ் தீர்மானித்தாள். மறுநாள் சென்றுவிடுவதென்று. மேகங்களற்ற வானத்திற்கு அப்பாலிருந்து அவளை யாரோ மீண்டும் மீண்டும் அழைப்பது போல் தோன்றியது. திரும்பவும் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
திரு ஜேம்ஸ் தன் நரைத்த தலைமுடியை இரு கைகளாலும் வருடிக் கொண்டே கீழ் நோக்கிப் பார்த்தபடி யோசித்தார். நடந்து வந்து சோபாவில் செய்வதறியாமல் உட்கார்ந்தார்.
திருமதி ஜேம்ஸ் பேசாமல் நின்றிருந்தாள். சில கணங்களுக்குப் பின் அவள் கதவை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.உடனே திரு ஜேம்ஸ், சிறிது உணர்ச்சி வசப்பட்டவராய்,விரைவாக ஒரு       குழந்தையைப் போல் அவளை நோக்கி நகர்ந்தார். வலது புறச் சோபாவிற்கருகில் வந்து]
திரு:     கொஞ்சம் பொறு. 25 ஆண்டுகளாக நீடித்திருந்த நம் வாழ்க்கையையும் பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே
திருமதி:      [ஒன்றும் சொல்லவில்லை அவளுக்குச் சொல்ல ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்                          போனால், இனி அவளுக்குச் சொல்ல மட்டுமல்ல, பேச, நினைக்க, யோசிக்க, சிரிக்க,
துக்கப்பட எதற்குமே ஒன்றுமில்லை. அவள் முற்றாக உலர்ந்துவிட்டிருந்தாள். ஆனால் திரும்பி நின்று கேட்கத் தயாராக இருந்தாள்.]
திரு:     யோசித்துப் பார். 25 ஆண்டுகள் நாம் ஒன்றாகவே பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆவலும் வேகமும் மிகுந்த அந்த முதல் இரவிலிருந்து, நாளங்கள் உலர்ந்து, உறைந்து போய்விட்ட இந்தச் சோகம் மிகுந்த மாலை நேரம்வரை. நீ என்னை விட்டு விலகிவிடலாம். ஆனால் நினைவுகளின் சுமையை என்ன செய்வாய்?
திருமதி:      [ஒன்றும் பேசவில்லை. நினைவுகளைச் சுமக்க மனம் தொடங்கிய போது கை                       பெட்டியை நழுவ விட்டது.]
திரு:     உன் அந்த நாளைய முகம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. செம்மையும் பளபளப்பும் மிகுந்த கன்னங்களுடன் ஓர் அற்புத ஜ்வாலையைப் போல் நீ என்முன் நின்ற கோலம் எனக்கு என்றுமே மறக்காது. அந்த நேரத்தில் நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் தெரியுமா?
திருமதி:      [ஒன்றும் பேசவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த நிழற்படத்தை உற்றுப் பார்த்தபடி நிற்கிறாள்]
திரு:     என் உடலெங்கும் படர்ந்த உன் வெப்பமான மூச்சுக்காற்றின் அலாதியான போதை, ஒரு சிவந்த திரட்சியான சர்ப்பத்தைப் போல் நீ என்மீது படர்ந்திருந்தது- எதையும் மறக்கவில்லை.
திருமதி:      [ஒன்றும் பேசவில்லை]
திரு:     ஆனால் பார், காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. உணர்வுகளின் பிரவாகத்தில் எதுவும் பதிவாவதில்லை
திருமதி:      [ஒன்றும் பேசவில்லை]
திரு:     உனக்கு நினைவிருக்கிறதா... திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்தபடுக்கையாகிவிட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும் குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்
திருமதி:      [ஒன்றும் பேசவில்லை. ]
திரு:     அந்த நாட்களில் நான் எவ்வளவு துடித்துப் போனேன் தெரியுமா? உன் வயிற்றிலிருந்த கட்டி புற்றுக் கட்டி அல்ல என்று டாக்டர்கள் சொல்லும்வரை
திருமதி:      [ஒன்றும் பேசவில்லை]
திரு:     உனக்குத் தெரியுமோ என்னவோ... அறுவை சிகிச்சைக்கு முன்பான எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்தேன் என்பது. நீ என்னருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய்
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. தாக்கத் தொடங்குகிறான் என்பதை உணர்ந்தவள் போல் அவனைக் கூர்மையாகப் பார்க்கிறாள். திருப்பித் தாக்கும் ஆவேசம் அதில் தெரிகிறது]
திரு:     நான் உன்னையே வெறித்துக் கொண்டிருப்பேன்.உன் சீரான மூச்சுக் காற்றின் ஒலியைக் கேட்டபடி, பின் திடீர் திடீரென்று ஆவேசமும் வாஞ்சையும் கொண்டு உன் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தமிடுவேன். உன் உள்ளங்கையைப் பற்றி என் மார்பின் மீது பதித்துக் கொள்வேன். உறக்கம் சற்றும் கலையாது நீ அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. இதையெல்லாம் கேட்கத் தயாரில்லை என்பது போல் விடுவிடுவென்று சமையலறைக்குள் நுழைந்து ஜக்கிலிருந்து டம்ளருக்குத் தண்ணீரை மாற்றிக் குடித்தபடி வருகிறாள். டம்ளரை சோபாவின் முன்னுள்ள டீபாயில் வைத்து நிமிர்ந்த போது அவளைத் தொடர்ந்து வந்த ]
திரு:     அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. நினைவிருக்கிறதா உனக்கு?
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     எத்தனை இரவுகள், கொடூரமான இரவுகள், என் இளமையின் ஆவேசத்தையும் வேட்கையையும் இரக்கமற்று அழித்துக் கொண்ட இரவுகள்!
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     அப்போது நீ மிதிபட்டு வதங்கிய கொடியைப் போல் உறங்கிக் கிடப்பாய். உன்னருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எஃகுத் துண்டைப் போல் கிடப்பேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. தாக்கப்பட்டவள் போல் சோபாவில் விழுகிறாள்]
திரு:           நீ உடல் தேறும்முன் நான் முற்றாகத் தணிந்துவிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் கலவிச் சுகம் நமக்கு என்றுமே பூரணமாக வாய்த்ததில்லை. இளமையின் சக்தியை நுகர்ந்து, திளைத்துத் துவளும் இன்ப லஹரி என்றுமே கானலாகத்தான் இருந்தது. கலவியின் உச்ச சுகத்தை ஸ்பரிசிக்கும் முன் ஒவ்வொரு முறையும் அது கைநழுவியே போனது. இளமை மின்னிய உன் உடலின் செழுமை எனக்கு அங்குல அங்குலமாக இன்றும் நினைவிருக்கிறது. உன் தாபமூட்டும் பளிங்கு போன்ற ஸ்தனங்களையும், வெறியூட்டும் வாளிப்பான தொடைகளையும் நான் எப்படி நேசித்தேன் தெரியுமா?
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     அப்போது நானும் அழகாக இருந்தேன். என் புஜங்களையும் மார்பு ரோமங்களின் அடர்த்தியையும் கருமையையும் பார்த்துப் பார்த்து எவ்வளவு மமதை கொண்டிருந்தேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. திரும்பவும் கிளம்பத் தயாரானவள் போல் எழுகிறாள்]
திரு:     நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.ஆனால் என்ன பயன்? நாம் வெறும் உடல்களாகத்தானே வாழ்ந்தோம் என்று நினைக்கிறாய். வாஸ்தவம் தான். நாம் வெறும் உடல்களாகத்தான் வாழ்ந்தோம். வயது வந்த இரண்டு வெற்று உடல்களாக. ஏழு ஆண்டுகளுக்குப் பின் தெரிந்தது. நான் மலடன் என்பது. என் ஜீவனற்ற விந்துக்களை எத்தனையோ முறை பெற்றும் கூட உன் கருப்பை அதல கிணற்றைப் போல் மௌனமாய் இருந்ததன் ரகசியம் எனக்குப் புரிந்தது.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. மௌனம் நிறைந்த மனதுடன் நடக்கத் தொடங்குகிறாள்]
திரு:     உண்மைதான். நான் மலடன் தான். நான் குடிகாரன் தான். உனக்குத் தெரியுமா, உலகில் மலடிகளைவிட மலடர்கள் குறைவு என்று . அந்தக் குறைவானர்வர்களில் நானும் ஒருவன் என்றால் எப்படி இருக்கும்?
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     ஆண் மலடுகள் ஒன்று தற்கொலை செய்து கொள்வார்கள். அல்லது சமூக சேவையில் ஈடுபடுவார்கள். எனக்குத் தற்கொலை செய்துகொள்ளத் துணிவில்லை. அதனால் குடிக்க ஆரம்பித்தேன். குடித்துக் கொண்டே சமூகசேவையில் ஈடுபட முடியாது என்பதால் கவிதைகள் எழுதினேன். கழிவிரக்கத்தில் தோய்ந்த உதவாக்கரைக் கவிதைகள். இப்போதுகூட எழுதுகிறேன். நேற்றுகூட ஒன்று எழுதினேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. அவர் உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியின் விளிம்பில்
                 சாய்ந்து நிற்கிறாள்]
திரு:           [வலது பக்க அறைக்குள் சென்று அந்தத் தாளை எடுத்து வந்து வாசிக்கிறார்]
வாழ்க்கையின் எல்லாப் பருவங்களும் முடிந்து
மறைந்துவிட்டன.
பூக்களில் மகரந்தம் வற்றிவிட்டது?
தளிர்விட்ட இறகுகள் சருகாகிவிட்டன.
சிறகசைப்பு ஓய்ந்துவிட்டது?
இதோ , அந்தியும் சாய்ந்துவிட்டது.
நாளங்கள் உலர
நரம்புகள் தளர்ந்து தேகம் சில்லிடுகிறது.
இரவும் மணமும் கவியும்போது எல்லாம்
குளிர்ந்துவிடும்
நிச்சயமாய்
அமைதி பனி போன்று படர்ந்து போர்த்திவிடும்
எல்லாவற்றையும்.....
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. நகர்ந்து வலது பக்கச் சோபாவில் கையை இறுகப் பற்றிய படி நிற்கிறாள். அவள் வைத்த டம்ளரை இறுகப் பற்றியபடி]
திரு:     உண்மைதான். நான் நிறையத்தான் குடித்தேன். இரவு பகல் என்று பாராமல், வீடு வெளி என்று பாராமல்..
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     என் வேலையைக் கூட விட்டுவிட்டேன். தெருப் பையன்கள் என்னைக் கேலி செய்தார்கள். ரிக்ஷாக்காரர்கள் முதல் சாராயக்கடைக்காரர்கள் வரை எல்லோரிடமும் வசையும் உதையும் வாங்கினேன். வாஸ்தவம் தான். நான் மீள முடியாத குடிகாரனாகிவிட்டேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     எல்லாவற்றுக்கும் மேலாக உன்னை நான் வெறுத்தேன். உன்னைத் தவிர நான் யாரை வெறுத்திருக்க முடியும்? என் வெறுப்பைப் பொருட்படுத்துபவர்கள் வேறு யாரிருக்கிறார்கள் எனக்கு!
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [ அவளை மேலிருந்து பார்த்தபடி வந்து இடுப்பில் பார்வையை நிறுத்தி]
என் மலட்டுத் தன்மையைப் பரிகசித்தது உன் வெறும் வயிறு. உன்னை நான் மிகவும் வெறுத்தேன். போதையூட்டிய உன் தேகத்தைக் குதறிவிட விரும்பினேன். கட்டுக் குலையாத உன் அடிவயிற்றை உதைத்துவிட விரும்பினேன். சில சமயம் அப்படிச் செய்யவும் செய்தேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           எனக்குத் தெரியும் நீ மிக நல்லவள் என்பது.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [அவளைக் கவனிக்காதவர் போல நடந்தபடி]
                 மாதம் தோறும் ரேஷன் வாங்க நீயே சென்றாய். காய்கறி வாங்கவும் நீயே சென்றாய்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [மேலும் நடந்து தொலைக்காட்சிப் பெட்டி அருகில் வந்து]
அடகு வைக்க மார்வாடிக் கடைக்கு நீதான் போனாய். எல்லாம் நீதான். துவைத்துப் போட, உதைவாங்க, பட்டினி கிடக்க, எல்லாம் நீதான்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [ வேகமாகத் திரும்பி வந்து அவள் அருகில் நின்று]
இவ்வளவுக்கும் பிறகும் நான் அவ்வளவு மோசமான மனிதன் என்று எனக்குத் தோன்றவில்லை.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     [ எதிர்ப்புறம் நடந்து பார்வையாளர்கள் அருகில் வந்து] பெண்களின் சுகதுக்கங்களை நான் நன்கறிவேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           அதுசரி, நான் உனக்கு இழைத்த அநீதிகளை நீ ஏன் சகித்துக் கொண்டாய்?
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           உண்மையில் நீ எவ்வளவு மென்மையானவள் என்பது எனக்குத் தெரியும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நம் வீட்டு அசோக மரத்திலிருந்து அழகிய கோலம் போல மலர்கள் இறைந்து கிடப்பதைப் பார்க்க உனக்குப் புல்லரித்துவிடும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை.அவனது பேச்சைக் கேட்கத் தயாரானவன் போல பெட்டிக்கும் சோபாவுக்கும் இடையில் அமர்ந்து விடுகிறாள்]
திரு:     மழை நாட்களில் நனைந்த காகம் எதிர்வீட்டு மொட்டை மாடியில் ஈரச் சிறகுகளைப் படபடவென்று ஓசையுடன் அடித்தபடி தன் சிறிய கழுத்தை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிச் சிலிர்த்துக் கொள்வது உனக்கு மாபெரும் அற்புதம்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     சமையலறையில் சற்றும் பயமின்றித் திரியும் அந்தச் சுண்டெலி சோற்றுப் பருக்கையை வாயில் திணித்துக் கொண்டே முழித்துமுழித்துப் பார்ப்பதை நீ எப்படி ரசிப்பாய் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     குளியலறைத் தடுப்புச்சுவர் மீது அசையாமல் கிடந்த அந்தச் சாம்பல் நிறக் கர்ப்பிணிப் பல்லியைக் கூடத்தான் நீ மிகவும் நேசித்தாய்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நம் வீட்டுக் காம்பவுண்ட் சுவரருகே இருக்கும் தென்னை மரம் ஒவ்வொரு பருவத்திலும் காய்களை இரவோடிரவாகத் திருட்டுக் கொடுத்துவிட்டு நிற்கும். அந்த அசட்டுத் தென்னை மரத்திற்குக் கூட மழை நாட்களில் வந்துவிடும் மேனிச் செருக்கை நீதான் எனக்கு உணர்த்தினாய்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை.அவனது பேச்சு உண்டாக்கிய நினைவுக்குள் மிதந்து கொண்டிருக்கிறாள்]
திரு:           உன்னிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நீ காட்டித் தந்த சந்தோஷங்களை நான் மறுப்பதற்கில்லை என்றாலும் உன் உலகம் சிக்கலற்றது. அது முகிழ்ந்த மலர்களாலும் ஈரக் காக்கைகளாலும் சுண்டெலிகளாலும் கர்ப்பிணிப் பல்லிகளாலும் அசட்டுத் தென்னை மரங்களாலும் ஆனது.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     ஆனால் என் உலகம் அப்படியல்ல. அது சுண்டெலிகளுக்கும் கர்ப்பிணிப் பல்லிகளுக்கும் வெகு அப்பால் இருந்தது. வேதனையும் தள்ளாட்டமும் ஏமாற்றமும் நிறைந்தது.
[சொல்லும்போது ஏற்படும் பதட்டம் மேசையில் இருந்த ஆல்பத்தைத் தட்டி விட்டு விடுகிறான்.விரிந்து விழுகிறது]
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [ஆல்பத்தின் பக்கங்களைப் புரட்டியபடி]
மலைக்காற்று வீசும்போது உனக்கு அதன் குளிர்ச்சி தெரிகிறது. எனக்கு அதனால் சோகம்தான் ஏற்படுகிறது. காற்றுக்குள் காலமும் காலத்திற்குள் வெறுமையும் மறைந்து கிடக்கின்றன.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் குடிகாரன். கவிஞன். அதனால் உளறுகிறேன். எப்போதும் தரையில் கால் பதியாமல் மிதக்கிறேன் என்றுதானே.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     உண்மைதான். நான் மிதப்பில்தான் உளறுகிறேன் என்றே வைத்துக் கொள். ஆனால் தரையோடு பிணைந்த வாழ்க்கையின் சிறுமை, மிதக்கும்போதுதான் கண்களுக்குப் புலப்படும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     இத்தனையும் நீ என்னை விட்டுப் பிரிந்துவிடுவாய் என்பதற்காகச் சொல்லவில்லை.[ அவளைத் தூக்கி நிறுத்த நினைத்துக் கைகளை நீட்டுகிறார். அவள் அந்தக் கரத்தைப் பற்றிக் கொள்ளாமல் எதிர்ப்புறம் பார்த்து எழுகிறாள். பெட்டிக்கருகில் சென்று விட்டாள்]
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை.]
திரு:     சரிதான் . நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் ரொம்பவும் சரிதான். ஒருவேளை நான் நீயாக இருந்து நீ நானாக இருந்திருந்தால் நிச்சயம் வெகு நாட்களுக்கு முன்பே உன்னை விட்டு நான் பிரிந்திருப்பேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் நம்மால் சரியானதை யோசிக்க மட்டுமே முடிகிறது. செய்ய முடிவதில்லை. வாழ்க்கை எத்தனை கொடூரமானது என்பதை நீ அறியமாட்டாய்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     எப்படியிருந்தாலும் உனக்கு நான் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பே கிடையாது. நான் மலடன் என்றால் அதற்கு நீ என்ன செய்வாய்? என் தவறுகளை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தவறுகளை ஒப்புக் கொள்வதால் மட்டும் என்ன பயன்?
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. பெட்டியை எடுத்துவிட்டாள்]
திரு:     ஒருவேளை, ஒருவேளை எனக்கு ஒரு குழந்தை, ஒரேயொரு குழந்தை மட்டும் பிறந்திருந்தாலும் கூட நான் முற்றிலும் வேறு விதமாக வாழ்ந்திருப்பேனா என்று நீ யோசிக்கக் கூடும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. ஓரடி கதவை நோக்கி நடந்தவளைத் திரும்பவும் திருப்பிவிடும் பாவனையில்]
திரு:     நானும் அப்படி யோசித்துப் பார்த்ததுண்டு. ஆனால் நான் வேறு மாதிரி இருந்திருப்பேனா என்பதை நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. இதுவரை வாழ்ந்ததை விடச் சற்றுக் கண்ணியமானவனாக வாழ்ந்திருக்கக் கூடும். என்றாலும் அப்போதும் நான் இன்று போலவே ஒரு பரிதவித்த ஆத்மாவாகவே இருந்திருப்பேன். அப்போதும், இப்போது போலவே காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமைதான் என் கண்களில் பட்டிருக்கும்.[ பேசியபடி இடதுபுற மேடைக்கு வந்து விட்டான். கையில் ஆல்பத்தைத் தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் உள்ள இடத்தில் வைக்கிறார்]
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. பெட்டியுடன் அவரைப் பின் தொடர்ந்து வந்தவள் இப்பொழுது நடு மேடையில் நிற்கிறாள்.]
திரு:     உனக்குத் தெரியுமா? வாழ்க்கையின் வெறுமையை அனுபவங்களால் நிரப்பிச் சரிக்கட்டிவிட முடியாது. அன்பாலுங்கூட அதை நிரப்பிவிட முடியாது என்றே தோன்றுகிறது.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     வயோதிகத்தில் அனுபவங்களுக்கும் அன்புக்கும் வாய்ப்புகளே இல்லை. வயோதிகம் எல்லாவற்றையும் உலர்த்திவிடும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     கால்களின் ஆடுசதை சூம்பிவிடும்போது ஓட்டம் நின்றுவிடும். அப்போது காலம் என்ற வேசை உன்னைச் சூறையாட உன்முன் அம்மணமாய் வந்து நின்றுவிடுவாள்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [ அவளைச் சுற்றி வந்தபடியே]
வயோதிகம் எவ்வளவு இரக்கமற்றது தெரியுமா? அது உனக்குப் புலப்பட இன்னும் நாட்கள் பிடிக்கும். நீ என்னைவிடப் பதினைந்து வயது இளையவள். உன் கால்களில் இன்னும் பலம் இருக்கிறது. நடப்பதற்கும் கடப்பதற்கும் உனக்குப் புரியாது.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     என் பேச்சு நாடகத்தன்மை மிகுந்ததாக இருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதா? வாழ்க்கை எப்போதும் அப்படித்தான். ஆனால் நாம் தான் அது அப்படியில்லை என்று எதிர்நாடகம் ஆடுகிறோம்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     வயோதிகம் எப்படிப் படர்கிறது தெரியுமா? வைகறைக்கு முன்பான அந்த இளம் இருட்டில் ஒளியின் முதல் கீற்றுச் சந்தடியின்றி திடீரென்று இழைந்துவிடுவதைப் போல் வெகு ரகசியமாய் உனக்குள் பாய்ந்துவிடும் அது. உன் நாளங்களை வற்றச் செய்துவிடும். உன் அழகிய கரிய கேசத்தை உதிர்த்து, உன் காதோரங்களில் நரைபடியச் செய்துவிடும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     திடீரென்று, ரொம்பவும் திடீரென்று உன்னை யாரோ ஒரு விண்வெளிக் கப்பலில் ஏற்றி வெகு தூரம் அழைத்துச் சென்று யாருமற்ற ஒரு தனிக் கோளத்தில் இறக்கி விட்டது போலிருக்கும். முதுமை என்னும் அந்தக் கோளத்தில் தனியாக நீ மட்டும் , நீ மட்டுமே இருக்க நேர்ந்துவிடும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           இளமையும் வேகமும் மிகுந்த உலகம் உன் கண்முன் இயங்கித் துடித்தாலும் அதை நீ நெருங்க முடியாது. உனக்கும் அதற்கும் இடையில் ஒரு பெரிய கண்ணாடித் திரை விழுந்துவிட்டிருக்கும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நான் சொல்வதை, நீ என்னை விட்டுப் பிரிந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் நீ நிச்சயம் உணர்வாய்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     என் பேச்சைக் கேள்! நீ என்னை விட்டுப் பிரிவது ஒரு வகையில் சரிதான் என்றாலும்கூட நீ என்னை விட்டுப் பிரியாதே. தயவுசெய்து வயோதிகத்தின் வெறுமையையும் தனிமையையும் ஏற்றுக் கொள்ளாதே. அது மிகவும் பயங்கரமானது. அதைவிட உன்னை நீ மாய்த்துக் கொள்; உனக்காக நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை.அவரது குரூரத்தைப் புரிந்து கொண்டவளாய்க் கோபத்துடன் கிளம்பத் தயாரானவளிடம்]
திரு:     வயோதிகத்தின் தனிமை மனிதனிடம் ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் வினோதமானவை. மாலையில் சூரியன் அஸ்தமித்து இருள் சூழத் துவங்கும்போது எல்லாமே மாறிவிடும் நீ கற்பித்துக் கொண்டிருக்கிற தனிமையின் வசீகரம் திடீரென்று மறைந்துவிடும். மேகங்கள் குவிந்து அவற்றில் மஞ்சளும் செம்மையும் படர, அக்குறுகிய நேரம் ஆழ்ந்த கசப்புணர்வை விளைவித்துவிடும். அப்போது மனிதத் துணைக்காகப் பரபரப்புடன் யாசித்து நிற்கும் உன் மனம்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நீ நினைப்பது போல் இயற்கை அவ்வளவு ரம்மியமானதல்ல. இதோ பார்! வெளியே பனிக்காலம் முடிந்து வசந்தம் வரத்தொடங்கிவிட்டது. எங்கும் பசுமை படர்ந்து சிரிக்கிறது. ஆனால் என்ன? அது உன்னை என்ன செய்யும்? ஒன்றுமே செய்யாது. வசந்தம் வயதானவர்களை ஒன்றுமே செய்யாது. வாழ்க்கையின் வெறுமைக்கு முன் இயற்கையின் பாத்திரம் ஒன்றுமில்லை.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     ஏன் கர்த்தருக்குக் கூட வெறுமையில் ஏதும் பாத்திரம் இல்லை. ஒருவேளை வழங்கியதைத் தவிர.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     நான் வாழ்க்கையைக் கண்டு பயப்படுகிறவன். அதன் வெறுமைக்கு முன் எப்போதும் கையைப் பிசைந்து கொண்டு நிற்பவன். உனக்கு நினைவிருக்கிறதா? நீ ஒவ்வொரு ஞாயிறன்றும் ஸ்தோத்தரிக்கும் அந்த சங்கீத வரிகள்! அவற்றை நான் இப்போது அடிக்கடி உச்சரிக்கிறேன்.
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும். என் விண்ணப்பத்தின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல; பெரிய காரியங்களிலும் எனக்கு மிஞ்சிய காரியங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.
தாயின் பால் மறந்த குழந்தையைப் போல் என் ஆத்மாவை அமரப்பண்ணினேன்.. என் ஆத்மா பால் மறந்த குழந்தையைப் போல் இருக்கிறது.
தேவனே, மௌனமாய் இராதேயும், பேசாமல் இராதேயும், தேவனே சும்மா இராதேயும்.
வாழ்வின் வெறுமை ஒருவகையில் பால் மறந்த குழந்தையின் உணர்ந்தும் உணராததுமான சோகத்தைப் போன்றதுதான்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:     சொல்வதைக் கேள். பேசாமல் இங்கேயே இருந்துவிடு. நம் பிரிவு நம்மிருவருக்கும் மேலும் அதிகமான துக்கத்தைத் தான் தரும். நாற்பத்திரண்டாவது வயதில் ஒருவிடலைச் சிறுமியைப் போல் நடந்து கொள்ளாதே.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும் அல்லது மறக்கச் செய்துவிடும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [ஜன்னல்களைத் திறந்து வைத்து]
பார். குளிர்ந்த மலைக்காற்று கூர்மையாக வீச ஆரம்பித்துவிட்டது. வெளியே முற்றாக இரவு சில்லிட்டுப் பரவி விட்டது. நிலவும் நட்சத்திரங்களும் அற்ற பனிக்காலத்து இரவு எல்லையற்ற ரகசியம்போல் சூழ்ந்து விட்டது. அங்கு ஒன்றுமில்லை. இருளைத் தவிர. மௌனமும் வெறுமையுமே படிந்திருக்கிறது எங்கும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை. காற்று உண்டாக்கிய உணர்வில் ஈடுபட்டவளாய்த் திரும்பவும் பெட்டியை மடியில் வைத்தவளாய்ச் சோபாவில் அமர்கிறாள்]
திரு:     [பொருட்கள் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தபடி]இந்தப் புராதன வீட்டின் நிசப்தம் என்னை அச்சுறுத்திக் கொன்றுவிடும். தயவுசெய்து என்னை விட்டுப் போகாதே, என் தளர்ந்த முகத்தைப் பார். என் நடுங்கும் மெலிந்த கைகளைப் பார்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [ அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்து விட்டார்]
முதுமையையும் வெறுமையையும் யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாது. என்றாலும் ஒருவருக்கொருவர் துணை என்ற ஆசுவாசம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். இரண்டு குடிகாரர்களைப் போல், தனித்தனிக் கோப்பைகளில் நமக்கான விஷத்தைக் குடிப்போம். என் விஷம் என்னைக் கொல்லும் வரை அல்லது உன் விஷம் உன்னைக் கொல்லும் வரையேனும்.
திருமதி:      [ஒன்றுமே சொல்லவில்லை]
திரு:           [திடீரென்று கைகளால் முகத்தை மூடியபடி விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார்]
திருமதி:      [வெகு நேரமாகத் தன் கணவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த திருமதி ஜேம்ஸ் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு மெல்ல அவரிடம் சென்று, அவரது தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.]
திரு:     [தன் மனைவியின் கைகள் தன்மீது பட்டவுடன் திரு ஜேம்ஸ் மேலும் சத்தமிட்டு அழுதபடி அவளை இறுகத் தழுவிக் கொண்டார்.]
திருமதி       [ஒன்றும் சொல்லவில்லை]
                                              
                                              -சிறுகதை மூலம்: திலிப்குமார்


கருத்துகள்

sivakumarcoimbatore இவ்வாறு கூறியுள்ளார்…
திருமதி ஜேம்ஸ் பெட்டியைக் கீழே வைத்துவிட்டு மெல்ல அவரிடம் சென்று, அவரது தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்