June 08, 2016

ஆயிரம் தீவுகளுக்குள் ஒரு நீர்ப்பயணம்


யோர்க் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டோடு துறைசார்ந்த ஒரு நிகழ்வு முடிந்தது. இனிச் சுற்றுலா தான். பாஸ்டனிலிருந்து கிளம்பும்போதே கனடாச் சுற்றுலாத் திட்டம் தயாராக இருந்தது. அதை வட்டச்சுற்று எனச் சொல்ல முடியாது. நீண்டசெவ்வகமென்று சொல்லலாம். வணிகத் தலைநகரமான டொறொண்டோவுக்குப் பிறகு அரசியல் தலைநகரமான ஒட்டாவா. அதன் பிறகு பிரெஞ்சு அடையாளங்களோடு இருக்கும் மாண்ட்ரியாலும் க்யூபெக்கும். இடையில் வரும் ஏதாவது இடங்களைப் பார்ப்பதுதான் திட்டம்.


நான்கு நகரங்களிலும் தங்குவதற்கு விடுதிகள் முன்பதிவு செய்துவிட்டோம். இந்த நான்கு நகரங்களும் இரண்டு மாநிலங்களுக்குள் இருக்கின்றன. டொறொண்டோவும் ஒட்டாவாவும் (அதனை அட்டோவா என உச்சரிக்கிறார்கள்) ஒண்டாரியோவில் இருப்பவை. க்யூபெக் மாநிலத்தைச் சேர்ந்தவை மாண்ட்ரியாலும் க்யூபெக் நகரமும். ஒவ்வொன்றும் பெரும் வித்தியாசங்கள் கொண்ட நகரங்கள்; நிலவியல், அரசியல், வாழ்வியல் முக்கியத்துவம் கொண்டவை. இந்த நான்கைத் தவிர இரவுத்தங்கல் இல்லாமல் பார்க்க நினைத்த நகரம் கிங்ஸ்டன். அதுதான் 1000 தீவுகளின் வாயில்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தொட்டுக்கொண்டும் விலகிக் கொண்டும் ஓடும் நதி புனித லாரன்சு.  ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களோடு ஓடுகிறது. இந்த நதியை இரண்டுநாடுகளும் தங்களின் எல்லைக்கோடாகவே நினைக்கின்றன. வடதுருவத்தில் உறையும் பனிக்கட்டிகள் மெதுவாகக் கரைந்துகரைந்து நகரும் நீராகவும் ஆறாகவும் குளங்களாகவும் நீர்வீழ்ச்சிகளாகவும் ஏரிகளாகவும் பொங்கிவழிகிறது. அதன் பாதையெங்கும் ஆழமான பள்ளங்களை உண்டாக்கும்போது மணல் பரப்புகளாகவும் தேங்கி நிற்கும் திட்டைகளாகவும் நிலம் மாற்றம் அடைகின்றன. அதனால் அங்கங்கே தீவுகள் உருவாகிநிற்கின்றன. இந்தத் தீவுகளை முக்கிய சுற்றுலாத்தலமாகவும் உயர்விலையில் விற்கக்கூடிய பகுதிகளாகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள். அந்தத் தீவுகளில் பாதிக்குமேல் இருப்பது கனடாவில்.  அமெரிக்காவிலும் தீவுகள் இருக்கின்றன. கனடாவிற்குள் இருக்கும் தீவுகளைப் பார்க்க முதன்மையான இடம் கிங்ஸ்டன்.  அமெரிக்காவிற்குள் இருக்கும் தீவுகளைப் பார்க்க  நியூயார்க் மாநிலத்திற்குச் செல்லவேண்டும். இப்போது அந்தத் திட்டமில்லை.

டொறொண்டாவிலிருந்து அதன் அரசியல் தலைநகரான ஒட்டாவா வரும்வழியில் தான் கிங்ஸ்டன் இருக்கிறது. நாம் தரும் பணத்திற்கேற்பத் தீவுகளைக் காட்டித்தரும் படகுப் பயணத்திற்கு கிங்ஸ்டனில் ஏற்பாடுகள் இருக்கின்றன. நாள் முழுவதும் பயணம், அரைநாள் பயணம், இரண்டுமணி நேரப்பயணமென நமது விருப்பப்படி தேர்வு செய்யலாம். எல்லாப் படகுகளிலும் உணவுச்சாலைகள் உண்டு. சின்னப் படகுகளை ஓட்டும் உரிமம் இருந்தால் எடுத்துக்கொண்டு ஏறி ஏதாவதொரு தீவில் போயிறங்கித் தங்கிவிட்டு வரலாம். உங்களுக்கு மீன் பிடிக்கத் தெரிந்தால் மீன்களைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிடலாம். தீவுகளில் இருக்கும் வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாட்கணக்கில் தங்கிக்கொள்ளலாம்.

தீவு என்பதைக் கணக்கிடும் முறையைச் சொன்னபோது அந்த வழிகாட்டி மங்கை சிரித்துக்கொண்டாள்.  இரண்டு மரங்கள் மட்டும் இருக்கும் ஒரு சதுரமீட்டருக்கும் குறைவான ஒரு தீவும் இருக்கிறது. பெரிய தீவின் அளவு 100 சதுர கீலோமீட்டர் அளவில் ஒரு பெரிய தீவும் இருக்கிறது என்றார் வழிகாட்டிப் பெண். பெரும்பாலம் ஒன்றைத்தாண்டி ஏறிய ஊசிக் கோபுரத்தின் உச்சியில் இருந்து 1000 தீவுகளைப் பற்றிய கதைகளைச் சொல்லும்  அந்தப் பெண் எத்தனை தடவை இந்தக் கதைகளைச் சொல்லியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது அதே சிரிப்பையும் சேர்த்தே வெளிப்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது.
 புனித லாரன்ஸ் நதியால் கனடாவிலும் அமெரிக்காவிலுமாக உருவாக்கப்பட்டுள்ள மொத்தத் தீவுகளின் எண்ணிக்கை 1864. ஆனால் பெருவழக்காக ஆயிரம் தீவுகளின் கூட்டம் என்றே அழைக்கிறார்கள் என்பது அவர் சொன்ன தகவல் தான். அதற்காக இவ்வளவு குறைக்கவேண்டுமா என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் சேர்த்து 2000 ஆயிரம் தீவுகள் என்று சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. 1000 தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி அல்லது 1001 அரேபிய இரவுகளை நினைவுபடுத்தும் நோக்கமாக இருக்கலாம். கனடிய, அமெரிக்கப் பணக்காரர்கள் கைவசம் இருக்கும் பணத்திற்கேற்ப ஒரு தீவையோ, தீவில் ஒரு வீட்டையோ வாங்கி வைத்துக்கொண்டு விரும்பும்போது வந்துபோகிறார்கள்.  அமெரிக்கர்களும் கனடியர்களும் மட்டுமல்லாமல், உலகின் பெரும்பணக்காரர்களுக்கும் தீவு வீடுகளும் தீவுகளும் இருக்கின்றன. இந்தியாவிலிருந்துகூட தீவுகள் வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்தத்தகவல்களையும் அவர்தான் சொன்னார். 

டொறொண்டாவிலிருந்து ஒட்டாவிற்குச் செல்லும் திட்டத்தை வைத்திருந்ததால் கிங்ஸ்டனிலேயே படகுப் பயணத்தை மேற்கொண்டோம். நண்பகல் 12 மணிக்கு கிங்ஸ்டனில் இறங்கிவிட்டோம். முன்பதிவு செய்திருந்த படகு கிளம்பும் நேரம் பிற்பகல் 03.00. இரண்டுமணிநேரம் படகில் இருக்கலாம்.   அதற்குள் கிங்ஸ்டனை ஒரு சுற்றுச் சுற்றிவிடலாம் என்று கிளம்பினோம். எல்லாமே பெரும்பெரும் வீடுகள். செவ்வக அடுக்குகளாகத் திட்டமிட்ட சாலைகளால் உருவாகியிருக்கிறது அந்நகரம். ஒவ்வொரு கனடா நகரத்திற்கும் ஐரோப்பாவிலிருந்து எந்த நாட்டுக்காரர்கள் முதலில் வந்து இறங்கினார்கள் என்ற வரலாறும், வரலாற்றுக்கு ஆதாரமான ஒரு கட்டடமும் இருக்கின்றன. சுற்றுலாவாசிகளாகக் கட்டப்பட்ட பயணியர் விடுதிகளாலும் கேளிக்கைக் கூடங்களும் நிரம்பியிருந்தது கிங்ஸ்டன் நகரம். அந்த நகரில் மேலே உயரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கிடையாது. ஏராளமான இடங்கள் இருப்பதால் தரத்தளத்திலேயே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஏரிக்கரை என்பதால் குளிர் காற்று உதறலெடுக்கும் அளவுக்கு வீசியது.
 நகரைச் சுற்றிவிட்டு படகுத்துறைக்கருகில் இருக்கும்  பூங்காவில் அமர்ந்தபோது அந்த இசை மெல்லிதாகக் கேட்கத் தொடங்கி உச்சத்திற்குப் போனது. இசைக்குக் காதுகொடுத்துத் திரும்பிப் பார்த்தபோது ஒரு பெண் அந்தச் செவ்வகமான மேடைபோன்ற மைதானத்தில் சிவப்பு, மஞ்சள், சிவப்பும் மஞ்சளும் கலந்த தீயின்வண்ணமெனப் பெரியபெரிய வண்ணத்திரைகளை வீசி அசைந்துகொண்டிருந்தாள். இசைக்கேற்ற நடனமாக இல்லையென்றாலும் நடனமெனக் கருதியே ஆடிக் கொண்டிருந்தாள். பத்துப் பேருக்கும் குறைவானவர்கள் அதனை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார்கள். நாங்களும் போய் அங்கே நின்றபோது, வேடிக்கை பார்த்தவர்களையும் தன்னோடு ஆடவரும்படி கோரினாள். 
அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கைகளில் வண்ணக்கொடிகளை வாங்கி அவளோடு சேர்ந்து உடலை அசைத்துவிட்டுச் சின்ன இடைவெளியில் பேசிக்கொண்டிருந்தோம். அவளது உடலை அசைப்பதிலும் இயக்குவதிலும் குறையொன்றிருப்பதை அந்தப் பேச்சின்போது உணரமுடிந்தது. அவளது கைகளும் கண்களும் இயங்கும் வேகத்தோடு தாடைகள் இயங்கவில்லை. திக்கித்திக்கிப் பேசுகிறாளா? திக்குவது தெரியாமல் இருப்பதற்காகச் சிரிக்கிறாளா? என்னுமளவிற்குச் சிரித்துப் பேசினாள். அவளுக்கிருக்கும் உடலியக்கக் குறையைச் சரிசெய்ய அவளது மருத்துவர் கண்டுபிடித்த உடல்பயிற்சியே இந்த நடனமென்பதைச் சொன்னபின்பே கண்டுபிடிக்க முடிந்தது. அவளுக்கிருக்கும் இசைவிருப்பத்தையும் நடன ஆர்வத்தையும் இணைத்து உடலுக்குத் தேவையான ஒரு பயிற்சியாகத் தந்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டபோது அவளது சிரிப்பு அனைவருக்குள்ளும் புகுந்துகொண்டது.  உடற்பயிற்சியை -உடலசைவும் இசையையும் - மருந்தாகவும் கலைவெளிப்பாடாகவும் ஆக்கிக் கொண்டு அந்த மைதானத்தை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் தாட்டியான உடம்போடு அவள் அசையும்போது விசிறும் வண்ணக்கொடிகள் சோகத்தைச் சொல்லும் கவிதைகளாக மாறிக் கலந்துகொண்டிருந்தன. அவளது முகம் கவிதை முகமாகத் தெரிந்தது.  இசையையும் கவிதையையும் இணைத்துப் பேசிய அனாரின் வரிகள் பல்லிடைப்பட்ட நாராக உறுத்த,  “ மகத்துவம் மிகுந்த இசை தீர்வதேயில்லை நான் பாடல் எனக்கு கவிதை முகம்” என்று முடித்திருப்பார் என்பதும் நினைவுக்கு வந்தது.  இணையத்தில் தலைப்பிட்டுத் தேடியபோது மொத்தக் கவிதையும் கிடைத்தது. 

எல்லா மயக்கங்களுடனும்
மெல்ல
அதிர்கிறது இசை.
படிக்கட்டுகளில் வழிந்தோடும் நீர்ச் செரியலாய்.

வறண்ட சுண்ணாம்புப்
பாதைகளின் மேற் கிளம்பும்
வெண் புழுதியில் மணக்கிறது
அவன் குதிரைக் குளம்பொலி

சாம்ராஜ்ஜியங்களின்
அசைக்க முடியா கற்றூண்களை
பிடுங்கி ஒரு கையிலும்
போர்களை வெற்றி கொண்ட
வாள் மறு கையிலுமாய்
அதோ வருகிறான் மாவீரன்

இருபுறமும் பசு மரங்கள் மூடியிருக்க
மூடுபனி தழுவி நிற்கும்
சிறுத்து ஒடுங்கிய பாதையில்
என் கனவின் உள் புகுந்து
தாவுகின்றன இரண்டு முயல்கள்

விடிந்தும் விடியாத
இக் காலைக் குளிரில்
புகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
“ கோள் “ மூட்டுகிறது
பெயர் தெரியா ஒரு காட்டுப் பூச்சி

அதனாலென்ன
எனக்குத்தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று

எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை

நான் பாடல்
எனக்கு கவிதை முகம்.
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். கோவில்களும் அரசவைகளும் தான் நமது கலை வெளிப்பாட்டுக் களங்களாக இருந்திருக்கின்றன. பண்டைக்காலத்தில் புரவலனை நாடித்தான் புலவர்கள் போய்ப் பாடிப்பரிசில் பெற்றிருக்கிறார்கள். கூத்தரும் பொருநரும் விறலியரும் பாடினிகளும் ஆற்றுப்படுத்தப்பட்ட விதங்களைத் தமிழிலக்கியங்கள் சாட்சிப்படுத்துகின்றன. புரவலன் இல்லையென்றால் இறைவன். இறைவன் இருப்பதாக நம்பும் இடத்தில் நின்று நெக்குருகிப் பாடியிருக்கிறார்கள்.
ஒரு பொது இடத்தில் நின்று இலக்கற்ற பார்வையாளர்களை நோக்கிக் கவிதை பாடிய கவிஞனை நமது பாரம்பரியத்தில் காணவில்லை. தனது சொல்லாடல்களை ஏதென்ஸ் நகரத்து தெருமுற்றங்களில் முன்வைத்து விவாதித்த சாக்ரட்டீஸ் போன்ற  தத்துவவாதிகளையும் வரலாறு நமக்கு உருவாக்கி அடையாளப்படுத்தவில்லை. தலைக்கோல் அரிவையெனும் பட்டத்திற்காக ஆடிய மாதவியின் பதினோராடல்களின் பின்னணியில்  புகார்நகரத்துப் பெருந்தனக்காரர்களின் இச்சையும் காமமும் இருந்தன. பதியிலார்களும் தேவரடியார்களும் தங்கியிருந்து சதுராடிய களங்கள் கோயில்கள். மாங்குடி மருதன் தலைவனாக இருந்த சொற்போரும் கவிப்புலமையும் காட்டிய இடங்கள் அரசவைகள். பாங்கருந்தேறிய பட்டிமண்டபங்கள் நடந்த இடங்களெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்கள். அமைப்புக்குள்ளிருந்து செயல்படும் பாணிகளே இந்திய/ தமிழகப் பாணிகள்.
இதற்கு மாறானது ஐரோப்பிய அறிவுவாத மனம். பேச்சு, எழுத்து, ஆடல், பாடல், ஓவியம் என ஒவ்வொன்றையும் மக்களை நோக்கி இலக்கற்ற நிலையில் வெளிப்படுத்துவதை இப்போது கனடாவில் பார்க்கிறேன். ஐரோப்பியப் பெருநகரங்கள் பலவற்றிலும் இதுபோன்ற கலைஞர்களைப் பொது இடங்களில் பார்த்திருக்கிறேன். இசைக்கலைஞர்கள், உடலியக்கக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியக்கலைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். கோபர்நிகஸோடு சேர்த்து அறியப்படும் தோரூணில் நம்மூர் கலைக்கூத்தாடிகளைப் போல பெருந்தெருவொன்றில் நடனமும் சாகசக் காட்சிகளும் செய்துகாட்டினார்கள் மூன்றுபேர்.
வார்சாவில் அதிபர் மாளிகையும் பழைய அரண்மனையும் இருக்கும் பெருவீதியில் வசந்தகாலத்தில் ஒவ்வொருநாளும் தெருவில் இசைக்கச்சேரிகளும் நடனக் கச்சேரிகளும் நடந்துகொண்டே இருக்கும். சேர்ந்து பாடலாம்; ஆடலாம். ஓவியர்கள் வரைந்துகொண்டிருப்பார்கள். நம்மை வரையவேண்டுமென்றால் வரைவார்கள். பணம் தந்து வரைந்த ஓவியத்தை வாங்கிக்கொள்ளலாம்.
கிங்ஸ்டன் படகுத்துறையிலிருந்து தீவுகளுக்குள் படகுப்பயணம் செய்தபோது உள்ளே  போகப்போக அலைபுரளும் நதி அலையடிக்கும் கடற்பரப்புபோலப் படகில் மோதிச் சிதறியது. படகின் மேல் தளத்தில் உட்கார்ந்து ரசித்தவர்களெல்லாம் நடுக்கத்தோடும் அச்சத்தோடும் இறங்கித் தரைத் தளத்தில் அடைக்கலாமானார்கள். தீவுகளில் அசையும் மரங்களுக்கு நடுவே காற்றாலைக் கோபுரங்கள் உயர்ந்து நின்றன. பரபரவென வீசும் காற்றில் உயர்ந்து நிற்கும் காற்றாலைகள் சுற்றிச் சுற்றிச் சுழன்று மின்சக்தியை உருவாக்கிக் கொண்டிருந்தன. திரும்பிய பக்கமெல்லாம் காற்றாலைக் கோபுரங்கள். ஆண்டில் பாதிநாளுக்கும் மேல் சூரியனையே பார்க்கமுடியாத நாடுகளில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். எங்கே காற்றடிக்குமோ அங்கே காற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

ஆண்டுமுழுக்க வெயிலடிக்கும் நமது நாட்டில் சூரியஒளி மின்சாரம் பற்றி இப்போதுதான் திட்டங்கள் தீட்டுகிறோம். தென்மேற்குப் பருவக்காற்றாகவும் வடகிழக்குப் பருவக்காற்றாகவும் அடிக்கும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி யோசிக்காமல் அணுசக்தி மின்சாரத்திற்கும் அனல் மின்சாரத்திற்கும் மனித உடலையும் மனதையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீரோட்டத்திற்குக் குறைவில்லாத ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும் நிரம்பிய அமெரிக்காவிலும் கனடாவிலும் நீர்மின்சார உற்பத்தியைவிடவும் காற்று, சூரியஒளி மின்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்று நாம் யோசிக்கவேண்டும்.No comments :