June 07, 2016

“தெள்ளத்தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”

சாட்சியமாய்த் தங்குதல் புலப்படாத வன்கொடுமைகள், பேசமுடியாக் குற்றங்கள்-  மே, 6, 7 தேதிகளில் நடந்த அக்கருத்தரங்கின் தலைப்பு. கருத்தரங்கு நடந்த இடம் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில்.இந்தக் கருத்தரங்கம், தமிழியல் ஆய்வுகள் என்னும் பொருண்மையில் டொறொண்டோவில் நடக்கும் 11 வது கருத்தரங்கம். 2006 தொடங்கி நடக்கும் தமிழியல் ஆய்வுகள் என்னும் இருமொழிக்கருத்தரங்கின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் சேரன்.

அண்மையில் மறைந்த டொறொண்டோ பல்கலைக்கழகப் பேரா. செல்வ கனகநாயகத்தின் முழு அர்ப்பணிப்போடு நடந்துவந்த இக்கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை நீண்ட நாள் ஆசை. 2012 இல் அந்த ஆசை நிறைவேற இருந்தது. அப்போது வருகைதரு பேராசிரியராகப் போலந்தில் இருந்தேன். கருத்தரங்கிற்கான ஆய்வுச் சுருக்கமெல்லாம் அனுப்பியபின் முறையான அழைப்பையும் பெற்றேன். ஆனால் பாஸ்போர்ட், விசா போன்ற அனுமதிச்சிக்கலில் மாட்டிக் கலந்துகொள்ளமுடியாமல் போனது. இந்த முறை எந்தச் சிக்கலும் இல்லாமல் எனது கட்டுரையோடு கனடாவிற்குச் சென்று கலந்துகொண்டேன். நான் வாசித்த அமர்வின் தலைப்பு: முரண்பாட்டின் இலக்கியங்கள்.
 ஈழம்: போரும் போருக்குப்பின்னும் - அண்மைப்புனைகதைகளை முன்வைத்து என்ற தலைப்பில் நான் வாசித்த கட்டுரைக்காக,
1.  விமல் குழந்தைவேல்-கசகறணம்(2011)
2.  சயந்தன் - ஆறாம்வடு (2012)
3.  தமிழ்க்கவி - ஊழிக்காலம் (2013)
4.  ஸர்மிளா ஸெய்யித் - உம்மத் (2013)
5.  குணா கவியழகன்-நஞ்சுண்ட காடு (2014)
6.  தேவகாந்தன் -கனவுச்சிறை (2014)
7.  சயந்தன் - ஆதிரை (2015)
8.  சாத்திரி - ஆயுத எழுத்து (2015)
9.  குணா கவியழகன்-விடமேறிய கனவு (2015)
10.         சோபா சக்தி - Box கதைப்புத்தகம் (2015)
11.         சேனன் - லண்டன்காரர் (2015)
12. குணா கவியழகன் - அப்பால் ஒரு நிலம் (2016)
ஆகிய நாவல்களைப் படித்து எனது கட்டுரையை எழுதியிருந்தேன்.
இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டிய விரிவான அந்தக் கட்டுரையில் “2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் வெளியாகியுள்ள இந்நாவல்களில்,   பேரினவாத அரசுக்கும் மொழிச்சிறுபான்மை மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போராட்டங்களையும், பின்னர் ஆயுதந் தாங்கிய போரையும் நடத்திய போராளிக்குழுக்கள் - பின்னர் ஒற்றைப் போராளிக்குழுவாக மாறிய விடுதலைப்புலிகளின் போர்க்களம் பற்றிய நினைவுகளினூடாக நாவலாசிரியர்கள், இலங்கைத் தீவின் தமிழர் பிரச்சினையின் அனைத்து உட்கூறுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். ஈழமையவாதம், கிழக்கு மாகாணத்தை இணைத்து உருவாக்கக் கூடிய தமிழ்நிலப்பரப்பு, மலையகத்தமிழர் வாழ்வுரிமை, சமய அடிப்படையில் தங்களைத் தனியான இனமாக நினைக்கும் இசுலாமியர்கள் வாழ்வுரிமை என அனைத்தும் இந்நாவல்களின் சொல்லாடல்களாக மாறியிருக்கின்றன. அச்சொல்லாடல்களின் கவனம் அந்நிய தேசங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் உழல்தல் வாழ்வாகவும், தேசந்தொலைத்த மனமாகவும் வாசிப்பவர்களிடம் வந்துசேர்கின்றன.” என்ற முடிவை நோக்கிய கருத்துகளை முன்வைத்து உரையாற்றினேன். அந்த அமர்வின் தலைவராகக் கவி சேரன் அமர்ந்திருந்தார். எனது அமர்வில் மொழிபெயர்ப்பாளர் கீதா சுகுமாரன் கலிங்கத்துப்பரணியின் போர்க்களப் பாடுகளையும் ஈழத்துச் சமரகவிகளின் உளவடுவையும் முன்வைத்துப் பேசினார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கவியுமான அகிலன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்களை மையப்படுத்தியும் கட்டுரைகள் வாசித்தார்.  
எங்கள் அமர்வுக்கு முந்திய அமர்வாகத் தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பாளர் லட்சுமி ஹோம்ஸ்டாம் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்த ஈழத்தமிழ்க் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுச் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸாஷா எபெலிங்கின் உரையும், அந்த அமர்வை ஒருங்கிணைத்த யோர்க் பல்கலைக்கழகத்தின் அருண் நீத்ரா ராட்றிகோவின் உரையும் கவிதைகள் சார்ந்த இலக்கிய மையங்களைப் பேசின.
இரண்டு நாள் நடந்த இப்பன்னோக்குக் கருத்தரங்கில் கலை, இலக்கியப் பிரதிகளை முன்வைத்துக் கட்டுரைகளும் உரைகளும் நிகழ்த்தப்பட்ட அமர்வுகள் குறைவுதான். முதல் நாள் பிற்பகலில் கலாநிதி தா.சனாதனுடன் கலை வட்டமேடைப் பயிலரங்கமாக நடந்த அமர்வு ஓர் முக்கியமான அமர்வு. பெண்ணியப் புகைப்படக்காரர் திலானி பாலசுப்பிரமணியம், நுண்கலைப்பள்ளி மாணவியான லக்‌ஷனா வசுந்தராதேவி செபராஜா, சமூகத்துலக்கப் பார்வையாளர் சந்தியா பகீரதன், அகதிகள் மற்றும் குடியேற்றம் பற்றிய ஆய்வுகளைச் செய்யும் வித்தியா மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்ற இந்த அமர்வைப் போன்ற ஓர் அமர்வை இதற்கு முன்னர் பார்த்ததில்லை, மிகக் குறைவான தரவுகளின் மேல் நுட்பமான மனநிலைகளையும் முடிவுகளையும் நோக்கிப் பார்வையாளர்களின் கவனத்தைக் குவித்து விவாதித்தனர். உலக அளவில் விவாதம் செய்யும் கோட்பாடுகளையும் திறனாய்வு முறையியல்களையும் அற்புதமாகக் கையாண்டனர்.  அவர்கள் அனைவரும் இளையோர் என்பதும் ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் என்பதும் கவனிக்கத்தக்க தகவல்கள்.  ஒருங்கிணைப்பு செய்த கலாநிதி சனாதனன், ஆவணப்படுத்துதலின் பின்னுள்ள அரசியல் என்றொரு விரிவான உரையை வழங்கினார். போரில் அழிக்கப்பட்ட நினைவகங்கள், குடும்பப் பத்திரங்கள், மரபுரிமைச் சொத்துகளைப் பற்றிய ஆவணங்கள் போன்றவற்றைத் தரவுகளாக்கி வட்டார வரலாறு, வாய்மொழிவரலாறு போன்றவற்றை உருவாக்குவது பற்றிய கட்டுரை அது.
இம்மூன்று அமர்வுகளின் மைய விவாதங்கள் கலை இலக்கியங்கள் முன்வைத்ததாக இருக்க, முதல்நாளின் இரண்டு அமர்வுகளில் அரசியல் சொல்லாடல்கள் தூக்கலாக இருந்தன. போருக்குப் பிந்திய பாதுகாப்பு, ராணுவத்தின் பொறுப்புக்கூறல், சட்டத்துக்குட்பட்ட நீதி, உலகநாடுகள் அவைகளின் பங்கு, பன்னாட்டு மனிதநேயவாதிகளின் பார்வைகளில் ஏற்படவேண்டிய மனப்பாங்கு மாற்றங்கள் போன்றன அந்த அமர்வுகளில் விவாதிக்கப்பட்ட முக்கிய விசயங்கள். அவ்விரு அமர்வுகளிலும் பங்கேற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த குமாரவடிவேல் குருபரனின் முன்வைப்புகளும் விவாதங்களும் கவனிக்கத் தக்கனவாக இருந்தன.  இவைகளோடு கல்விப்புலச் செயல்பாடுகள், உடல் நலம், அகதிவாழ்க்கை, மீள எழுதுதல் போன்ற தலைப்புகளின் முன்வைப்புகள் எல்லாம் சேர்ந்து கருத்தரங்கத்தைப் பன்னோக்குக் கருத்தரங்காக மாற்றின.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அங்கே விவாதிக்கப்பட்ட பொருண்மைகளும் விவாதித்த விதமும் உரையாடல்களும் என்னைக் கவர்ந்தன என்பதைச் சொல்ல வேண்டும். ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் இலக்கிய விமர்சகனாகவும் கடந்த 30 ஆண்டுகளில் 100 -க்கும் அதிகமான கருத்தரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன்; கட்டுரைகள் வாசித்திருக்கிறேன்; கருத்துரை செய்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இல்லாத ஒரு துல்லியமும் முன்வைப்புகளும் இக்கருத்தரங்கில் வெளிப்பட்டது. இதுபோன்றதொரு கருத்தரங்கை தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்துவது சாத்தியமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. காரணம் கருத்தரங்கில் பங்களிப்புச் செய்து பங்கேற்க வரும் ஆளுமைகளும், விவாதங்களில் கலந்துகொண்டு பயனடைய வரும் பங்கேற்பாளர்களும் அதற்கான தயாரிப்புகளோடு வரவேண்டும். இவைகளை உண்டாக்குவதென்பது தமிழ்நாட்டு அரசியலைச் சரிசெய்ய முனையும் முயற்சியைப் போன்றதுதான்.
பொதுவாகக் கல்விப்புலக் கருத்தரங்குகள் மீது இலக்கியவாதிகளுக்கும், களப்பணியாளர்களுக்கும்  ஒவ்வாமைகள் இருக்கின்றன என்பதை நானறிவேன். அதுவும் கால் நூற்றாண்டுக் காலம் நடந்த நீண்ட போரையும் பேரழிவுகளையும் பூட்டிய குளிரறைகளில்  பல்கலைக்கழகக் கருத்தரங்காக மாற்றுவதையே உள்நோக்கத்தோடு விமரிசனம் செய்பவர்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால் இதுபோன்ற  கருத்தரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் நிலையான ஆவணங்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அவைகளை ஒன்றுதிரட்டு அளிக்கப்படும் அறிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவை நம்பத்தகுந்த முன்வைப்புகளாகவும்,  விவாதங்களாகவும் தரவுகளாகவும் மாறத்தக்கன. அவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்களும் விளைவுகளும் நூறுபேர் கூடி அடையாளப் போராட்டமாகக் கோஷமெழுப்புவதைவிடக் கூடுதலானவை என்பதை என்னால் சொல்ல முடியும். 

பூர்வீகக் குடிகளாக யாரும் இல்லாமல், பலநாடுகளிலிருந்தும் வந்து குடியேறிய வந்தேறிகளின் நாடான கனடாவில் அகதிகளாக வாழ்க்கையைத் தொடங்கி, குடியேற்ற உரிமை, நாட்டின் குடிமக்கள் என நகர்ந்த ஈழத்தமிழர்கள் அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழியல் படிப்புகளைத் தொடங்கவைக்கும் முனைப்பில் வெற்றிகண்டுள்ளார்கள். அந்த வெற்றியின் முதன்மையான அடையாளமே ஒவ்வோராண்டும் நடக்கும் தமிழியல் ஆய்வுகள் மாநாடு. இதன் பின்னணிச் செயல்வீரராக இருந்த செல்வா கனகநாயகம் மறைந்தாலும் அவரோடு இணைந்து ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த கவி சேரன் இப்போது முக்கிய மையமாக இருக்கிறார். அவரது ஆலோசனையை ஏற்று இந்த மாநாட்டை நடத்திய குழுவில் நீத்ரா ராட்றிகோ, கீதாசுகுமாரன், வாசுகி சண்முகநாதன் ஆகியோர் இருந்தார்கள். அவர்களின் உற்சாகமான செயல்பாடுகள் இந்த மாநாடு ஒவ்வோராண்டும் தொடர்ந்து நடக்கும் என்ற உத்தரவாதத்தை அளிப்பதாக இருந்தது.  
====================================== அம்ருதா

No comments :