June 28, 2016

ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்

இப்படியொரு நாடகத்தை எழுதுவேன் என நினைக்கவில்லை.  எழுதக்காரணமாக இருந்தவர், அப்போது எனது மாணவராக இருந்த சிபு எஸ்.கொட்டாரம் ( இப்போது கள்ளிக்கோட்டை நாடகப்பள்ளியின் ஆசிரியர்). இயக்கத்தைச் சிறப்புப்பாடமாக எடுத்த அவரது தேர்வுக்கான தயாரிப்பாகச்  சாமுவேல் பெக்கட்டின் புகழ்பெற்ற நாடகமான கோதாவுக்காத்திருத்தல் -வெயிட்டிங் ஃபார் கோடார்ட்- நாடகத்தைத் தமிழாக்கித் தரமுடியுமா எனக்கேட்டார். வாசித்துப் பார்த்தபோது அவ்வளவு எளிதான வேலையாகத் தெரியவில்லை. அத்தோடு அந்த நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து ஒருவர் வைத்திருப்பதாகவும் தகவல் வந்தது.  வெளி நாடக இதழ் வந்துகொண்டிருந்த நேரம் அது. ரெங்கராஜனிடம் கேட்டபோது ஆமாம் சச்சிதானந்தனிடம் இருக்கிறது. அவரைத் தொடர்புகொள்ளமுடியாமல் போனபோது, பெக்கெட்டின் வேறு ஏதாவதொரு நாடகத்தை முயற்சிசெய்யலாம் என்று அவரது நாடகங்களைப் பற்றிய அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். அதன்பிறகு சிபுவும் நானும் விவாதித்து க்ராப்பின் கடைசி ஒலிநாடா - க்ராப்ஸ் லாஸ்ட் டேப் என்ற ஒற்றையாள் நாடகத்தை மொழியாக்கம் செய்யலாம் என்று முயற்சி செய்தேன். மொழியாக்க முயற்சியின்போதே, இன்னொரு விவாதம் நடந்தது. இரண்டு உலகப்போர்களின் பின்னணியில் விரியும் இந்த நாடகத்தை அப்படியே மேடையேற்றுவதைவிட, இந்தியப்பின்னணிக்கேற்பத் தழுவி மேடையேற்றலாம் என்று அந்த விவாதத்தில் முடிவாகியது. நாடகக்கட்டமைப்பின் வழி, பெக்கெட் உருவாக்கும் தொனியை உள்வாங்கிக்கொண்டு புதிதாக எழுதப்பெற்ற நாடகம். ஓரிரவு நாடகத்தை ஒரே இரவில் எழுதினார் அண்ணாதுரை.  நான் இந்த நாடகத்தை ஒரேயிரவில் எழுதி முடித்தேன். பாண்டிச்சேரியின் கடல் பார்க்க இருந்த வீட்டின் கிழக்குக் கதவைத் திறந்துவைத்து, இரவு 10 மணிக்கு எழுதத்தொடங்கி, காலை 5 மணிக்கு முடித்தேன். அன்று மதியமே சிபு எஸ். கொட்டாரம் ஒத்திகையைத் தொடங்கினார். 10 நாட்கள் ஒத்திகைக்குப் பின் 50 நிமிட நிகழ்வாக மேடையேறியது. ஒளியமைப்பின் சாத்தியங்கள்வழிக் கவனத்திற்குரிய நிகழ்வாக மாறியது. இந்திய அரசியலில் பெருமாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில் சின்னச்சின்ன மாற்றங்களோடு திரும்பவும் எழுதியிருக்கிறேன். மேடையேற்றும் இயக்குநருக்காகக் காத்திருக்கிறது.ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்


  • ·                     நாடகப்பிரதி இயக்குநருக்கு முழுச்சுதந்திரம் தருவதாக அமையவேண்டும். இதன் காரணமாக நடிகனுக்கான அசைவு,பேச்சுத்தொனி பற்றிய குறிப்புகளோ, இடம், உடை போன்ற குறிப்புகளோ இல்லாமல் அமைகிறது. இந்நாடகத்திற்கு இவை அவசியமில்லாதவைகளும்கூட.
  • ·                     தனியொரு மனிதனின் நினைவுக்குறிப்பே என்றாலும் காட்சிரூபங்களுக்கும் நடிகர்களுக்கும் இடமுண்டு.
  • ·                     வயது முதிர்ந்த அந்த மனிதன் பேசத்தொடங்குகிறான்.

இன்னும் இருக்கிறேன்...
நேற்று இருக்கிறேன்...
இன்று இருக்கிறேன்...
நாளை இருக்கிறேன்...
இன்னும் இருக்கிறேன்...

நேற்று ஆகஸ்டு 15.
கோட்டை உச்சியில் பறந்திருக்கும்
யூனியன் ஜாக்கிற்குப் பதிலி..
மூவர்ணம், நடுவில் சக்கரம்..
அதற்குப் பதிலி இது
ஒன்றன் இடத்தில் இன்னொன்று
காந்தியினிடத்தில்
இன்னும் சில காந்திகள்

அப்படியானால் நான்..
எனக்குப் பதிலி...?

நான்... என்.. வயசென்ன?
வருசங்களில் சொன்னால்..
நூற்றுக்கும் மேலே..
மாதங்களில் - சில ஆயிரங்களும் சொச்சமும்..
நாட்களில் - பற்பல ஆயிரங்கள்...
மணிகளில், மணியின் துளிகளில்..
நிமிடங்களில்.. நிமிடங்களின் அணுக்களில்..
ஏன் சொல்லக்கூடாது..
ஒவ்வொரு கணமும் வாழ்ந்தேனே
அதை வழிநடத்தியது எது..?

மூவர்ணக்கொடு பறக்கத் தொடங்கிய -
பிறந்த நாள்.. தெரியும்.
நான் பிறந்த..?
“ஜமீந்தாரின் சாரட்டு, வீட்டுக்கதவினை
ஜப்திசெய்துகொண்டு போனதிற்கு
முதல் நாள் எனது ஜனனம்”
என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

ஜமீந்தார் என்ன ஆனார்?
என் வீட்டின் கதவு ஏன் பெயர்த்தெடுக்கப்பட்டது?
அந்தக் கதவு திரும்பவேயில்லை..
அப்பாவால் மீட்கவே முடியவில்லை.
என்னாலும்தான்..
என்னால் அதற்குப் பதிலீடு செய்யமுடிந்தது.
திண்ணைப்பள்ளிக்கூடம்.
ஆற்றுமணலில் ஆள்காட்டி விரலில்
அகரமெழுதி எழுதிக் கையெல்லாம் வலிக்கும்.

சிப்பாய்க் கலகம் -
மேன்மைதங்கிய கம்பெனியாளர்களின் கட்டளைக்கு
இந்தியச் சிப்பாய்கள் கீழ்ப்படியவில்லையாம்.
எதிர்த்தார்களாம்..
கப்பல்படை வீரர்கள் கடுமையாகச் சண்டையிட்டனராம்..
ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது.

எந்தச் சிப்பாய்? எத்தனை சிப்பாய்..?
அவர்களின் பதிலிகள் யார்?
நான் ஒருவரின்.. சிலரின்.. பதிலிதானோ..?
இருக்க முடியுமா? இருக்கமுடியும்..

நான் சின்னப்பையன்..
எனக்குக் குளத்துக்கரையில்
காற்றாடி விடுவதில் விருப்பம்
என்னொத்த பெண்ணின் முன்னால்
திடுமெனக் குதித்து நீந்துவதில் விருப்பம்
நான் எப்படிக் கப்பற்படை வீரனின் பதிலியாவேன்...

என் தகப்பனின் ஆசையைப் பூர்த்தி செய்திருக்கலாம்..
ஐ.சி.எஸ். படிப்பு; லண்டனில் வாசம்..
நந்தினியின் கனவுகள் நிறைவேற உதவியிருக்கும்.
நானும் அவளும் என்னவெல்லாம் பேசிகொண்டோம்.
எப்படியான விளையாட்டுகள்..
அவள் இருப்பாளா..?
எங்கு..? எப்படி..?
அவளை நிராகரித்தது எது..?
நிராகரிப்பு.. அவளை மட்டுமா..?
ஐ.சி.எஸ்..,லண்டன் வாசம்....
“சர்”ப்பட்டம்; துரை அழைப்பு
மான்செஸ்டர் கிளாத்.. கறுப்பு ஷூ.. கழுத்துப்பட்டை..
சுதேசியானேன்.., விதேசத்தை வெறுத்த சுதேசியானேன்.


இந்திய மக்களைக் கொன்றுகுவித்த ஜெனரல் டயர்..
அவனை வெறுத்த விதேசி..
என்னைக் கவர்ந்தது காந்தி இல்லை.
அவர் உடுத்தச்சொன்ன கதர் இல்லை
விதேசி மீது வெறுப்பான சுதேசியானேன்.
நந்தினி விதேசியானாள்..
அப்பா.. விதேசியானார்
அம்மா.. விதேசியானாள்..
எல்லாம் என்னைச் சிறைப்படுத்திய விதேசிகள்.
வெறுத்தொதுக்கினேன்..
முற்றமுழுதாக விட்டுவிடுதலையாகும் விருப்பம்..
மூர்க்கமாய் விதேசத்தை விரோதித்த சுதேசி..

அந்தக் கிராமபோன் குழாய்கள் எத்தனை செய்திகளை
எனக்குச் சொல்லியது.
தண்டல் நாயகனின் வரவை..
விக்டோரியா மகாராணியின் அழகை..
வெல்லெஸ்லியின் மேன்மையை..
எட்வர்டின் பவனியை..
இன்னும்.. இன்னும்..
செய்திகள்.. தகவல்கள்..
மேலும்.. மேலும்.. அறிவிப்புகள்..
நானும் என் மனைவியும் சேர்ந்தே கேட்டோம்.
நந்தினியை விதேசியாக்கிய மனம்,
இவளைச் சுதேசியாக்கிக் கொண்டது.
நந்தினிக்குப் பதிலி இவள்.

அந்தக்குழாய்கள் அதையும் சொன்னது:
‘காந்தியடிகள் தலைமையில்
உப்புச்சத்தியாக்கிரகம் தொடங்குகிறது.
ஆங்கில ஆட்சிக்கெதிராக இந்திய மக்கள்
அனைவரும் பங்களிப்பு செய்யவேண்டும்’
உப்புச்சத்தியாக்கிரகம்,
அவளிடமிருந்து என்னைப் பிரித்தது
நான் யோசிக்கவே இல்லை.

அவள் என்ன செய்வாள்...
என்னையே நம்பி, என் கரம் பற்றியவள்.
‘இந்திய மாதா’ யார் கரம் பற்றுவாள்?
யாரை நம்புவாள்?
அதுதான் அன்றைய சமாதானம்.

சிறைக்குச் செய்திகள் வந்தன.
காந்தி வெள்ளைத்துரைகளோடு பேசுகிறார்.
லண்டன் போகிறார்.
திரும்பவும் பேசுகிறார்.
வட்டமேஜைகள்.. ஒப்பந்தங்கள்..
இர்வின்.. டல்ஹௌசி.. மாண்டேகு..
காந்தி .. அம்பேத்கர்.. காந்தி..
இன்னும் அவளும் நானும்
அவளும் குழந்தைகளும்..
உறவினரும் சுற்றத்தாரும்..
வாழ்க்கை ஒப்பந்தம்.. வணிக ஒப்பந்தம்..
எல்லாம் நிர்ப்பந்தம்..

கனவு முடிந்து விடியவே இல்லை
அந்தக்கனவு, அவளின் கனவு..
பத்துச்சவரனில் தொங்கு சங்கிலி
குழந்தைகள் ஓடிவிளையாட ஒருவீடு
‘காணிநிலம் வேண்டும்’
அந்தக்கனவு முடியவே இல்லை
முடிந்தால்தானே விடிய..

முடியாத கனவை முடித்து வைத்தது.
அந்தக் கோஷம், உக்கிரமான காட்டுத் தீ...
‘போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள்’
வெள்ளைத்துரைமார்கள் கொல்லப்பட்டார்கள்...
பகத்சிங் ஜிந்தாபாத்..
ரயில்கள் ஓடவில்லை..
சக்கரங்கள் சுற்றவில்லை..
சாத்வீகம் பறிபோனது..
நிர்ப்பந்தம்..

வெள்ளையர்களுக்கு நிர்ப்பந்தம்
‘வெள்ளையனே வெளியேறு’
‘வந்தே மாதரம் என்போம்
எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்’
‘இன்குலாப் ஜிந்தாபாத்’
‘வீ வாண்ட் ப்ரீடம், க்யுட் இண்டியா..’
‘வெளியேறு; வெளியேறு வெள்ளையனே வெளியேறு..’
எத்தனை கோடி முகங்கள்.
அத்தனை வாயிலிருந்தும் வார்த்தைகள்..
நிர்ப்பந்தம்.

வெளியேறவில்லை வெள்ளையன்,
நான் உள்ளே தள்ளப்பட்டேன்.
சதிவழக்குகளின் வலைப்பின்னல்,
நீண்ட நெடும்வாசம்...
சிறைக்கதவுகள் திறக்கவே இல்லை.
சிறைக்குள் செய்திகள் வந்தன.
கடிதங்களும் வந்தன.
‘போராட்டங்கள் தொடர்கின்றன,
கிளர்ச்சிகள் வெடிக்கின்றன’

”குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவில்லை,
வீடு மழைத்தண்ணீரை உள்ளே வரவிடுகின்றது”

‘காந்தி பயப்படுகின்றார்; உண்ணாவிரதம் இருக்கின்றார்’
“குழந்தைக்கு ஜுரம் பயப்பட ஒன்றும் இல்லை”

‘ஜின்னாவும் காந்தியும் பேசுகிறார்கள்,
முஸ்லீம்களின் உரிமை காக்கப்படவேண்டும்’
“குழந்தைகளில் ஒன்று செத்துப்போய்விட்டது;
நானும் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன்”

செய்திகள்; தகவல்கள்

செய்தித்தாள்கள்; கடிதங்கள்
சிறைக்கதவுகள் திறக்கவே இல்லை.
நீண்ட நெடிய வாசம்.

நீண்ட நாட்களாகக் கடிதம் வரவில்லை.
அவளுக்கு என்ன ஆயிற்று!
நீண்ட நாட்களாகச் செய்திகளில் குழப்பம்
சுதந்திரம் வரப்போகிறதாம்..
நாடு பிரியப்போகிறதாம்..
இந்துக்களென்றும் முசல்மான்களென்றும்
பிரிக்கச்சொன்னது யார்?
இந்தச் சிறைக்கொட்டடியில் அந்தப் பிரிவினை இல்லையே.
அவள் எழுதவே இல்லை.
இன்னொரு குழந்தையும் இறந்துபோனதை
எழுதவே இல்லை.

1947, ஆகஸ்டு 14
நள்ளிரவு அறிவிப்பு

இனிக்கதவுகள் திறக்கும்.
ஆடுவோமே.. பள்ளுப்பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று..

திறந்தது. ஓடினேன்.. பார்த்தேன்...
என் குடும்பம் என்று எதைச் சொல்வேன்..
மனைவிமட்டுமே.. எலும்பும்தோலுமாய்..
குழந்தைகள் தியாகிகள் ஆனார்கள்..
நான் தியாகியா..?
தியாகிகளின் பதிலிதானே நான்..
குழந்தைகளின் பதிலி நான்.
என்னைப்போல எத்தனை பதிலிகள்.
வயதான பதிலிகள்
முளைத்துவளரும் செடிகளின் இடத்தில்
வாடிவதங்கிய மலர்களோடு...

அவள் இருந்தாள்..
ஆம்! நம்பிக்கையும் இருந்தது.
ஐந்தாண்டுகளின் மேல்..
நவீனத்துவத்தின் மேல்..
தேசத்தின் மேல்..
வழிகாட்டுதலின் மேல்..

காந்தி கொல்லப்பட்டார் என்று செய்தி சொன்னது.
காந்தி வாழ்கின்றார் என்று சித்தாந்தம் சொன்னது
காந்தி வழிகாட்டுகின்றார் என்று தலைவர்கள் சொன்னார்கள்.

எத்தனை தலைவர்கள்.. எத்தனை பதிலிகள்..
கோட்டிப்போட்ட பதிலிகள்..
குல்லாய் போட்ட பதிலிகள்..
வேட்டி கட்டிய பதிலிகள்..

பச்சைவண்ணப்பதிலிகள்..
சிவப்பு வண்ணப்பதிலிகள்..
மஞ்சள் நீலம் வெளுப்பு... 
கறுப்புவெளுப்பு...
எத்தனை நிறங்கள்.. எத்தனை வண்ணங்கள்..
இரண்டு மூன்றாய்.. தனித்தனியாக...
திட்டங்கள்.. கோட்பாடுகள்.. முஸ்தீபுகள்..
பசுமைப்புரட்சி.. வெண்மைப்புரட்சி..
மொழிவாரி மாநிலம்.. சின்னதாயொரு கூடு.. 
தேசியமயம்.. பொதுத்துறை.. தனியார் மயம்
கலப்புப்பொருளாதாரம்.. ஏகாதிபத்தியம்.. உலகமயம்..

நம்பிக்கை இருந்தது, நம்பிக்கை வளர்ந்தது.
கனவுகள் இருந்தன;  காலம் தேய்ந்தது,
அவள் செத்துப்போனாள்
எலும்பும் தோளுமாய் இருந்தவள்
சாம்பலும் புழுதியுமாய்.. கரைந்துபோனாள்..
 ‘வெள்ளையனே வெளியேறு’ என்றோம்.
வெளியேறினார்கள்
‘வறுமையே வெளியேறு’ என்றோம்.
வெளியேறவில்லை.

வெள்ளையனுக்கு தேசம் உண்டு, வெளியேறினான்.
வறுமையின் தேசம் எது? எங்கு போகும்?
தவித்தது.. போகுமிடம் தெரியாமல் தவித்தது.
அடைக்கலமென்று வந்தவர்களை
விரட்டுவது சரியல்லவென்று விட்டுவிட்டோம்.
வறுமையே சுகம்.. பாரமே.. அபாரம்..
மந்தபுத்தி.. நிதான புத்தி..
ஊழலே சராசரி வாழ்க்கை
ஆக்டோபஸின் கால்களாய்..
வியாபகம்.. வியாபகம்.. எங்கும்.. எதிலும்..

என் கால்கள் இங்கும் அங்கும்
கனவுகளை விதைத்தவர்களோடு
கனவுகள் கண்டேன்.
புதியபுதிய கனவுகளோடு பதிலிகள்..
தேச அளவில் பதிலிகள்..
மாநில அளவில் பதிலிகள்..
மாவட்டப்பதிலிகள்..
மதப்பதிலிகள்.. சாதிப்பதிலிகள்..
குடும்பப் பதிலிகள்..
எனக்கே.. இன்னொரு பதிலி..

நான்.. என்.. பதிலி..
கொரில்லா.. சாத்வீகம்.. ஓட்டு..
ஒருமைப்பாடு.. அகண்டபாரதம். சமூகநீதி...

நான்.. என்.. பதிலி..
ஏகாதிபத்தியம்.. சோசலிசம்.. முதலாளித்துவம்..
உழைப்புக்கேற்ற கூலி.. கூலிக்கேற்ற வேலை..
வேலைசெய்யாமல் கூலி.

தேசத்தை விட்டுவெளியேறு..
தொழில்நுட்பம் கொடுங்கள்..
அன்னிய செலாவணி அவசியம்.
ஓபன் மார்க்கெட்.. கொலாபரேசன்..
அந்நிய மூலதனம்.. சுயச்சார்பு..

தேசத்தைவிட்டு வெளியேறினர்
வெள்ளையர்கள்..
தேசத்தைவிட்டு வெளியேறினர்
இந்தியர்கள்- இந்தத்
தேசத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்..

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்
என் மனைவி செத்துப்போனாள்.
இந்துக்களும் முஸ்லீம்களும்
வெட்டிக்கொண்டு செத்தார்கள்..
நான் - என் -பதிலி..

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார் .
ஆலமரம் விழும்பொழுது சின்னஞ்சிறு செடிகள்
ஆயிரமாயிரம் ஒடிந்துவிழும்.
நான் - என் -பதிலி..

இன்னொரு காந்தி வெடித்துச் சிதறினார்
தேசம் தேடியது கொலைகாரனை..
கொலைக்கான காரணத்தை...
நான் - என் -பதிலி..

காந்தியினிடத்தில் இன்னும்சில காந்திகள்
நானிடத்தில் என் பதிலி..?
என்னிடத்தில் நான் பதிலி..?

ஜப்திக்கு முதல் நாள் என் ஜனனம்.
நந்தினியோடும் நண்பர்களோடும்
ஆற்றங்கரையில் விளையாண்டேன்.
இன்னொரு அவளின் கரம்பற்றினேன்.
இரண்டு குழந்தைகளின் மரித்தலில்
தியாகியானேன்
ஜெயில் கம்பிகளின் பிடியில் கண்ணீர்.


நம்பிக்கை இருக்கிறது.
நம்பிக்கை இருந்தது
நான் இருக்கிறேன்.
இன்னும் இருக்கிறேன்..
நேற்று இருக்கிறேன்
இன்று இருக்கிறேன்
 இன்னும் இருக்கிறேன்.

                        [எழுந்துகொள்ள முயற்சிக்கிறான். முடியவில்லை. சுற்றியுள்ள                                  போர்வையைக்கூடத் தூக்கமுடியவில்லை.]
ரேடியோவில் செய்தி: சோவியத் யூனியன் பல்வேறு குடியரசுகளாகச் சிதறும் அபாயத்தைத் தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
                   [ போர்வைக்குள்ளிருக்கும் உடல் எழும்பி நின்று மெல்லசைவுகள் வழியாகச்                 சில சிற்பக்காட்சிகளக் காட்டிவிட்டுப் படுக்கிறது] 
தொலைக்காட்சியில் செய்தி விமரிசனம்:
ஒருங்கிணைப்பாளர்: தேசியக்கட்சிகள் வலுவிழந்து மாநிலக் கட்சிகள் வளர்வதை                                                          எப்படிப்பார்க்கிறீர்கள்?
 “ பொருளாதாரத் திட்டமிடல்களின் தோல்வி இது.” (தொடர்ந்து அவரது வாய் அசையும்; விவாதம் தொடரும். குரல் வராது)
இந்தியப்பாரம்பரியம் என்று இருப்பதை உறுதிசெய்யத் தவறியதின் விளைவுகளை அனுபவிக்கிறோம். (தொடர்ந்து அவரது வாய் அசையும்; விவாதம் தொடரும். குரல் வராது)

இந்தியா என்பதே ஒரு கற்பிதம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். (தொடர்ந்து அவரது வாய் அசையும்; விவாதம் தொடரும். குரல் வராது)

ஐரோப்பாவைப் போலப் பலதேசங்கள்
உருவாவதற்கான அறிகுறி.. (தொடர்ந்து அவரது வாய் அசையும்; விவாதம் தொடரும். குரல் வராது)

ஐரோப்பிய ஒன்றியம் உருவாகி வளர்ச்சிப்பாதையில் நிற்பதை மறந்துவிடவேண்டாம். (தொடர்ந்து அவரது வாய் அசையும்; விவாதம் தொடரும். குரல் வராது)

தூரமாக ஒரு குரலில் தொடங்கிப் பலகுரல்களாக ஒலிக்கின்றன்
          வளர்ச்சி.. வேகம்.. அடையாளம்..
          குடும்பம்.. மொழி.. சமயம்.. அடையாளம்..
          நமது பண்பாடு நமது பெண்கள் நமது பொருட்கள்

          தீண்டாமை.. இட ஒதுக்கீடு.. மானியங்கள்
          ரத்து ரத்து ரத்து.. ரத்தம் ரத்தம் ரத்தம்
          ரத்தம் ரத்து ரத்துரத்தம் ரத்தம் ரத்து
செய்திஓடை:
ஐரோப்பிய ஒன்றியம் உடைகிறது.
உலகம் உடைகிறது.
மனிதர்கள் உடைகிறார்கள்.
உடைதலே அடையாளம்; உடைவதே இயல்பு.
பகையே இயற்கை; போரிடல் சாகசம்.

         =======================================  நன்றி: வெளி.