June 21, 2016

மாண்ட்ரியால் : ஐரோப்பிய நகரத்தின் நகல்

நிலவியல் என இப்போது சொல்லப்படும் பாடம் எனது பள்ளிப் படிப்பில்  பூகோளமாக இருந்தது.  கனடா என்றொரு நாட்டைப்பற்றிப் பூகோளப் பாடம் சொன்னதெல்லாம் பனிப்பொழிவுகள் நிரம்பிய வடதுருவ நாடு என்பதாக மட்டுமே நினைவில் தங்கியிருந்தது. நதிகள், மலைகள், நகரங்கள், மக்கள், தொழில் என அதன் உள்விவகாரங்களெல்லாம் அப்போது ஒன்றும் தெரியாது. அந்தத் தகவல்களைத் தாண்டி மூளைக்குள் பதிந்து அழியாமல் இருக்கும்  கனடிய நகரத்தின் பெயர் டொறொண்டோ; அதற்கடுத்து மாண்ட்ரியால். இரண்டுமே ஒரே வருடத்தில் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் பெயர்களாகவும் காதில் விழும் பெயர்களாகவும் ஆன வருடம் 1975- 76 ஆம் கல்வியாண்டு.

 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புகுமுக வகுப்புப் படிக்கச் சேர்ந்த அந்த வருடத்தில் டொறொண்டோ என்ற பெயர் நகைச்சுவையாக மாறிய பெயர். அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்தவர் மனுவெல் அ. தங்கராஜ் என்ற பெயரை ஆங்கிலத்தில் எம்.ஏ. தங்கராஜ், எம்.ஏ.பிஎச்.டி. (டொறொண்டோ) என்றே எழுதப்பட்டிருக்கும். நீண்டகாலம் (1967 - 79) முதல்வராக இருந்தவர். தன்னாட்சிபெற்ற அமெரிக்கன் கல்லூரியில் மட்டுமல்லாமல் தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் மாற்றங்கள் வரக்காரணமாக இருந்தவர். உள்மதிப்பீட்டு முறையோடு கூடிய பருவமுறைத் தேர்வுகள் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானதில் அவருக்குப் பங்குண்டு. கல்லூரிக்குள்ளேயே இருக்கும் அவரது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு எப்படி வருவாரென்று உறுதியாகக் கூறமுடியாதபடி வருவார். அவருக்கான அலுவலகக்கார் சரியான நேரத்துக்கு வந்துசேரும். ஆனால் அவர் அதற்கு முன்பே சைக்கிளில் வந்து அவரது துறையான இயல்பியல் துறையில் பாடம் நடத்திவிட்டு வருவார். சில நாட்கள் நடந்தே வந்துவிடுவார். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுப்பார். இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலைக்கெதிராகப் போராடிய மாணவர்களைக் கல்லூரிக்குள் புகுந்து தாக்கும்படி உத்தரவிட்டார் அப்போதைய துணை ஆட்சியர் சந்திரலேகா. கழிப்பறைகள்வரை புகுந்து விரட்டியடித்த காவலர்களைக் கடுமையான கோபத்தோடு எச்சரித்தவர். அந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்ட சந்திரலேகாவை  உடனடியாகக் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்படி எச்சரிக்கைசெய்து வெளியேற்றியவர். கண்டிப்புக்காட்டும் அவர்மீது இருக்கும் கோபத்தை மாணவர்களும் ஆசிரியர்களும், அவரது பெயரைச் சொல்லும்போது தரும் அழுத்தத்தில் காட்டுவார்கள்.
அவரது பெயரைக் கல்லூரியின் விவரங்கள் அடங்கிய சிற்றேடுகள், தகவல் பலகைகள், அழைப்பிதழ்கள் என அனைத்திலும் வாசிக்கும்போது டொறொண்டோ என்ற பெயரோடு சேர்த்தேவாசிப்பார்கள். அவரது பெயருக்குப் பக்கத்தில் முனைவர் பட்டம்பெற்ற ஊரான டொறொண்டோவும் இணைத்தே அச்சடிக்கப்பட்டிருக்கும். ஆசிரியர்களும் மாணவர்களும் அவரது பெயரை உச்சரிக்கும்போது “ எம்.ஏ. தங்கராஜ், எம்.ஏ., பிஎச்.டி.,( டொறொண்டோ)” என முழுமையாகவே சொல்வார்கள். அத்தோடு டொறொண்டோ என்று அந்த ஊர்ப்பெயரை அழுத்தமாகவும் உச்சரிப்பார்கள். அந்த அழுத்தம்தான் டொறொண்டோவை ஞாபகத்தில் இருக்கும் பெயராக ஆக்கிவிட்டது. அந்த வருடத்திலேயே மாண்ட்ரியால் நகரமும் நினைவில் இருத்தப்பட்டது. ஆங்கிலப்பாடம் நடத்தவரும் ஜே. வசந்தன் ஒவ்வொருநாளும் ஆங்கிலப்பத்திரிகை படிக்கவேண்டும் என்று சொல்வதோடு, கடைசி பக்கத்திலிருக்கும் விளையாட்டுச் செய்திகளைப் படித்துவிட்டுவரச் சொல்லிக் கேள்விகேட்பார். குறிப்பாக டென்னிஸ் வீரர்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் வகுப்பில் ஒருவரை எழுப்பிச் சொல்லச்செய்வார். ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்பது கட்டாயம்.
1976 இன் கோடையில்தான் மாண்ட்ரியால்  ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருந்தன என்றாலும் அறிவிப்பு முதலிலேயே வந்துவிட்டது. ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய செய்திகள் வரத்தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு வகுப்பிலும் மாண்ட்ரியால் நகரம் உச்சரிக்கப்பட்டது. தினசரியில் இருக்கும் செய்தியை வகுப்பில் கேட்பார் என்பதால் ஆங்கிலத் தினசரிகளில் தேடித்தேடிப் படிப்போம். ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்போது படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்றாலும், ஒலிம்பிக் போட்டிகள் நடந்த மாண்ட்ரியால் நகரமும், அதற்காகக் கட்டப்பட்ட வட்டவடிவ அரங்குகளும் நினைவில் இருந்தன.
200 கிலோமீட்டர் தூரத்தை இரண்டுமணி நேரத்தில் கடந்தாகிவிட்டது.  12 மணிக்கெல்லாம் நகர எல்லையைத் தொட்டுவிட்டோம். மாண்ட்ரியலில் இரவுத் தங்கலுக்கான அறை மூன்று மணிக்குத் தான் கிடைக்கும். பெரும்பாலான தங்கும் விடுதிகள் அப்படித்தான் ஒதுக்கித் தரப்படுகின்றன. பிற்பகல் 3 மணிக்குச் சாவி வாங்கினால் மறுநாள் 11 மணிக்குத் திரும்பத்தரவேண்டும். தந்துவிட்டால் ஒருநாள் கணக்கு. மாண்ட்ரியாலில் தங்கிய விடுதியை வழக்கமான விடுதியோடு இணைக்கமுடியாது. எல்லா அறைகளும் தரைத்தளத்தில்தான் இருந்தன. பகரவடிவத்தில் அந்த வளாகத்தைத் திட்டமிட்டுக்கொண்டு அதன் நடுவில் அலுவலகம் மட்டும் வீடு என்பதாக ஏற்படுத்திக்கொண்டு அதன் சொந்தக்காரர்கள் இருந்தார்கள். மொத்த அறைகளின் எண்ணிக்கை 24. எல்லாமே இரண்டு படுக்கைகள் கொண்ட அறைகள். விடுதிக்குச் செல்வதற்குப் போவதற்கு முன்பு பார்க்கவேண்டிய பட்டியலிலிருக்கும் ஒன்றிரண்டு இடத்தைப் பார்த்துவிட்டு அறைக்குப் போவதென முடிவாயிற்று.

ஒட்டாவாவிலிருந்து கிளம்பும்போது மாண்ட்ரியாலில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றாக ஒலிம்பிக் போட்டி நடந்த மைதானமும் இருந்தது. அந்த மைதானத்திற்குப் பக்கத்தில் தான் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவும் இருந்தது. இரண்டையும் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பலாம். சிறிது ஓய்விற்குப் பின் நகர்மையத்திற்குப் போகலாம் என்பதாக திட்டம் மாறியது. தாவரவியல் பூங்காவிற்கும் மைதான வளாகத்திற்கும்  இடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு முதலில் பூங்காவில் நுழைந்து சுற்றிவந்தபின் ஒலிம்பிக் மைதானத்திற்குள் நுழைந்தோம்.
40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரங்குகளும் விளையாட்டு மைதானமும் இப்போதும் புத்தம்புதியனவாக இருக்கின்றன. ஒவ்வொரு விளையாட்டரங்கும் பன்னோக்கு அடிப்படையில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரங்கின் உச்சிக்குச் சென்று நகரைப் பார்க்க உதவும் மேல்தளத்திற்குக்  கயிற்றில் நகரும் காரில் பயணம் செய்யலாம். உச்சிக்குப் போனால் அங்கே உணவகம், கடைகள் என இருக்கின்றன. ஏறிச் சென்று பார்த்துவிட்டு விருப்பம்போல இறங்கிவரலாம். ஒருநேரத்தில் பெருந்தொகையை முதலீடு செய்து உருவாக்கும் விளையாட்டுக்கூடம், அரங்குகள், விழாக்காட்சியகங்கள் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் வைத்திருப்பது ஒருவிதத்தில் பொருளாதாரத்தோடு தொடர்புடைய திட்டமிடல். சுற்றுலா மற்றும் கேளிக்கைப் பொருளாதார வருவாயை அவற்றோடு இணைத்துவிடும் நிலையில் அவற்றைப் பராமரிப்பதும் உயிர்ப்புடன் இயங்கச் செய்வதும் முடியும். இந்தியாவில் இந்தத் திட்டமிடல் இல்லாததால் பெரும் நிதிமுதலீடுகள் வீணாகிவிடுகின்றன. விளையாட்டு மைதானங்களை விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுமிடமாக வைப்பதிலிருந்து மாற்றியோசிக்கவேண்டும்.
மாண்ட்ரியால் நகரம் முழுமையும் பிரெஞ்சு அடையாளத்தோடு இயங்கும் நகரம். அண்டோரியா மாநிலத்தின் ஆட்சிமொழி ஆங்கிலம். ஆனால் க்யூபெக் மாநிலத்தின் ஆட்சிமொழி பிரெஞ்சு. ஒரு தேசத்தில் இரண்டு மொழியைச் சமமாகப் பாவிக்கும் பாங்கைக் கற்றுக்கொள்ள இந்த இரண்டு மாநிலங்களும் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்கின்றன. பிரெஞ்சு அடையாளத்தை மொழிரீதியாக மட்டும் கொண்டதாக இல்லை. கட்டமைப்பு, கட்டடங்களின் வண்ணம், நகர்மையத்தின் தன்மை, அதன் நடுவே இருக்கும் சிலை, அதனைச் சுற்றி எழும்பி நிற்கும் கட்டடங்கள் என அனைத்திலும் ஐரோப்பிய நகலாகவே இருக்கிறது.
க்யூபெக் மாநிலத்தின் முக்கிய நகரமான மாண்ட்ரியால் மலையோரத்தில் அதன் உச்சியிலிருந்து அடிவாரம் வரை இறங்கும் நகரம். சமதளத்தில் நகர்மையம் இருக்கிறது. அதன் முடிவில் புனித லாரன்ஸ் நதி ஓடுகிறது. பெருங்கப்பல்கள் வந்துசெல்லக்கூடிய அளவு பெரிய ஆறாக இருக்கிறது. மீன்பிடிக் கப்பல்களும் படகுகளும் வரிசையாக நிற்கின்றன. அதன் ஓரத்தில் நீளும் சாலையில் கூடும் கூட்டம் நகர்மையத்திற்குள்ளும் நுழைந்துவெளியேறும் வகையான அமைப்புடன் இருக்கிறது.  நகர்மையம் கடலோரத்தில் இருக்கும் பழைமையான கட்டடங்களில் தொடங்குகிறது. துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களையும் பெரும்படகுகளையும் பார்த்துவிட்டு எந்தவீதியின் வழியாகவும் நகர்மையத்திற்குள் நுழையலாம்.
நகர்மையங்களுக்குள் வாகன நிறுத்தம் கிடைப்பது அவ்வளவு எளிதன்று. குறைந்தது அரைகிலோ மீட்டர் தூரம் நடந்துதான் நுழையமுடியும். அந்நகர் மையச் சதுக்கத்தில் இருக்கும் பெருஞ்சிலையையொட்டி அண்ணாந்து பார்க்கும் கட்டடங்கள் ஐரோப்பிய ஒழுங்குடன் கட்டப்பட்டுள்ளன. அந்நகரின் கோடைகாலத்தில் நடக்கும் இசைக்கச்சேரி ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருக்கும். அகலமான வீதியொன்றில் ஓவியங்களால் தீட்டப்பட்ட காட்சிகளும் கடைகளும் நிரம்பியிருந்தன. அவற்றிற்கிடையே ஓவியர்களும் இசைவாணர்களும் தங்கள் திறமைகளைக் காட்டியபடி இருக்கிறார்கள்.
மாண்ட்ரியால் நகரம் மலையின் சரிவுகளில் அடுக்கடுக்காக ஏறி மேலே போகிறது.  கனடாவின் மிகப்பெரிய தேவாலயமான செயிண்ட் ஜோசப் ஆலயம், அம்மலையின் உச்சியிலிருக்கிறது. அத்தேவாலயத்தைப் பகலில் பார்ப்பதைவிட இரவில் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. தேவாலயக் கட்டடத்தின் வனப்பைக் கூட்டும் விதமாக ஒளியமைப்புகள் செய்திருக்கிறார்கள். அங்கிருந்து சுற்றிச் சுற்றி வளையும் சாலையில் இறங்கும்போது பெருங்கடல் ஒன்றில் இறைந்துகிடைக்கும் நட்சத்திரக்குவியல்போல நகரத்தின் தெருக்களும் வீடுகளும் மின்னுகின்றன.

  


No comments :