May 30, 2016

நீர்நெருப்பு :கலைப்பொருள் உருவாக்கிய பெருநிகழ்வு

புரொவிடென்ஸ், ரோட் தீவின் தலைநகரம் அந்த நகரின் மையத்தில் ஓடுகிறது வூனாஸ்க்வாடக்கெட் என்னும் சிற்றாறு. அதன் கரையில் இருக்கும் சட்டசபை மேடான பகுதியாக இருக்கிறது. அங்கிருந்து தொடங்குகிறது. நீர்வழிப் பூங்கா.பூங்காவின் முடிவில் தொடங்கும் 
நகர்மையத்திலிருக்கும் அந்தப் பெருஞ்சிலையிலிருந்து விழா நடக்கும் அந்த மூன்று குறுக்குப்பாலங்களும் இருக்கின்றன.  20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருகலைஞனின் கொடையாகத் தொடங்கிய நீர் நெருப்புப் பெருவிழாவைப் பெரும் நிகழ்வாக்கியிருக்கிறார்கள் அந்த நகரவாசிகள். ஒவ்வொரு கோடையிலும் மே கடைசியில் தொடங்கி நவம்பர் முதல்வாரம் வரை நடக்கும் அந்நிகழ்வுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமுழுவதுமிருந்து வந்துபோகிறார்கள். நேற்றுக் கூடியிருந்த கூட்டத்தினிடையே நடந்துபோனபோது இதுவரை காதில் விழாத மொழிகளின் ஒலிகளும் கேட்டன; அனைத்துக் கண்டத்து முகங்களும் தெரிந்தன. இந்த ஆண்டில் மொத்தம் ஒன்பது நிகழ்வுகளைத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் நிகழ்வு நேற்று (28/05/16).
 சூரியன் மறையும் நேரம் 08.11 என்பதால் நெருப்பேற்றும் நிகழ்வு 08.15 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வின்போது மட்டும் தான் நின்று பார்க்கமுடியும் என்பதால், ஆற்றங்கரையின் கீழ்புறத்து இருக்கைகளில் கூட்டம் இடம்பிடிக்கத் தொடங்கியது. நகரைச் சுற்றிவிட்டு ஒருமணிநேரத்துக்கு முன்பாகவே நாங்களும் ஆற்றங்கரையில் இடம்பிடித்து அமர்ந்துவிட்டோம். படகுவழிக் காட்சிகளுக்காகப் பிரிக்கப்பட்டது போல ஆறு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. நீளமான படகுகளில் சுற்றுலாப்பயணிகள் மதுவருந்தியபடியும் இசையெழுப்புக்கொண்டும் போய்க் கொண்டிருந்தார்கள். கறுப்புவண்ணப்படகுகளில் வந்த கறுப்புடைக்காரர்கள் வெட்டப்பட்ட விறகுத்தூண்டுகளை ஆற்றின் நடுவிலிருக்கும் அடுப்புத்தூண்களில் அடுக்கி முடிந்துவிட்டுச் சரிபார்த்தபின் திரிகளைச் சொருகினார்கள்.
சரியாக 08.15க்கு இசை நிறுத்தப்பட்டுப் பேரோசை கிளம்பியது. தென்புறத்திலிருந்து கறுப்புப்படகுகள் வரிசையாக வந்தன. இன்னும் கூடுதலாக மனிதர்கள் இருந்தார்கள். புதிதாக வந்தவர்களின் உடம்பில் கூடுதல் விறைப்பு. முதல் படகில் பற்றவைக்காத தீப்பந்தத்தை ஏந்தியவன் ஆண். அடுத்தபடகில் பெண். அடுத்து ஆண்; அடுத்துப் பெண். நகர்ந்து வந்தன படகுகள். எழுப்பப்பட்ட இசையில் ராணுவ அணிவகுப்புக்கான ஓசையும் திரண்டுபெருகும் நெருப்பின் குவியலின் கூச்சலும் கலந்திருந்தன. படகுகள் வடக்குநோக்கி அணிவகுத்துச் செல்வதுபோல நகர்ந்தன.
வடகடைசியிலிருந்த  முதல் அடுப்பின் அருகே இசையும் நெருப்பும் மனித உடல்களும் அசையும் நடனம் நிகழ, முதல் படகிலிருந்த தீப்பந்தக்காரர் நெருப்பைத் தொட்டுத் திரியில் மூட்டினான. அங்கிருந்து ஒவ்வொரு அடுப்புத்தூண்கள் அருகில் வந்து நெருப்புப்பந்தைத் தாளலயத்தோடு அசைத்து நடனமிட்டபின்னர், நெருப்பைப் பற்றவைத்தபடியே தெற்குநோக்கி நகர்ந்தான். மூன்று தூண்களை அடுத்துப் பந்தம் பற்றவைக்கும் எண்ணெய்க்கிண்ணங்கள் இருந்தன. எண்ணெயை உள்வாங்கி எரிந்த தீப்பந்தத்திலிருந்து பற்றிய விறகுகள் பற்றியெழுந்து ஆடின.
 எல்லா அடுப்புகளிலும் நெருப்பை மூட்டிமுடிக்கும்போது மணி ஒன்பது. நெருப்பின் ஜ்வாலை கொழுந்துவிட்டு எரிந்தபோது அதன் பிரதிபலிப்பு நீருக்குள்ளும் நெளிந்துகொண்டிருந்தது. மொத்த ஆறும் நெருப்பின் அலையாய் விரிந்த காட்சியைக் கண்டுகளித்துக் கூட்டம் கைதட்டி ரசித்தது. பின்னரும் தொடர்ந்தன கலைநிகழ்ச்சிகள். நெருப்பின் அலையைப் பார்த்துவிட்டுத் திரும்பினால் கரைகளெங்கும் நட்சத்திரக்குவியல்களாய் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.
புரொவிடென்ஸ் நகரின் கோடைகால அடையாளப்பெருநிகழ்வை உருவாக்கிய கலைஞன் பர்னபி இவென்ஸ் என்னும் சிற்பி. ரோட் தீவின் வரைகலைப்பள்ளியோடு தொடர்புடைய கலைஞர்.  புரொவிடென்ஸ் நகரின் முதல் வீரனுக்கான பத்தாம் ஆண்டுவிழாவில்  விருதுபெற்ற சிற்பம்  கலைஞர் பர்னபி இவென்ஸின் நீர்நெருப்புச் சிற்பம்.  பர்னபி உருவாக்கிய நீர்நெருப்புச் சிற்பத்திற்கு 1994 ஆம் ஆண்டில் முதல் பரிசும் பாராட்டும் கிடைத்துள்ளது. பத்திரிகைகளும் நகரமக்களும் தந்த உற்சாகத்தின் தொடர்ச்சியாக அந்தச் சிற்பத்தை மையப்படுத்தி 1996 அந்தப் பெருநிகழ்வு உருவாகியிருக்கிறது. அந்த உற்சாகம் இந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கர்களையும் உலகச் சுற்றுலாவாசிகளையும் ஈர்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது.
பர்னபி இவென்ஸ் அந்தச் சிற்பத்தை உருவாக்கியபோது ‘உள்வாங்குவதையும் வெளியேற்றுவதையும் கொண்டது சக்தி; அச்சக்தி ஒவ்வொரு நபருக்குள்ளும் நீராகவும் நெருப்பாகவும் அடங்கிக்கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும்போது சமூகம் பயன்பெறும்’ என்னும் குறியீட்டுத் தன்மையோடு உருவாக்கியிருக்கிறார். ஆனால் நகரின் பெருநிகழ்வாக மாறியபின் சடங்கியல் தன்மையும் தொன்ம நினைவுகளைத் தூண்டும் கதைகளோடும் இணைந்துகொண்டது. அதனைப் புரிந்துகொள்ள விறகுகளையும் நடனக்கலைஞர்களையும் சுமந்துகொண்டு  தீப்பந்தங்களோடு தெற்கிலிருந்து வந்த படகுகளின் பெயர்களைக் கவனிக்கவேண்டும்.  
முதல் படகாக வந்த படகில் ப்ரொமித்யூஸ் என்று அதன் பெயர் இருந்தது. ப்ரொமித்யூஸ் ஒலிம்பஸ் மலையிலிருந்து நெருப்பைக் கொண்டவந்து உலகின் பயன்பாட்டிற்குக் கொடுத்த வேற்றுகிரகவாசியென்னும் கிரேக்கத் தொன்மத்தோடு தொடர்புடைய பெயர். கிரேக்கச் செவ்வியல் நாடகக்காரன் எஸ்கிலஸின் ப்ரொமித்தியூஸ் பவுண்டு என்னும் புகழ்பெற்ற துன்பியல் நாடகத்தைப் படித்தவர்களுக்கு அது தெரியும். இரண்டாவது நிக்; அடுத்து அப்பல்லொ; தொடர்ந்து ஈயோஸ். இந்தப் பெயர்களெல்லாம் வீரதீரச் செயல்களைச் செய்தவர்களோடு தொடர்புடையது. அந்த வகையில் தொன்மங்களாகி வெகுமக்களின் மனங்களில் தங்கியிருக்கும் பெயர்கள். சமகாலவாழ்வில் இவையெல்லாமே அமெரிக்கப் பெருமுதலாளிகள் வியாபார அடையாளங்களாக மாறியுள்ளன என்பது தனிக்கதை.
பனிக்கால முடிவில் தொடங்கும் கோடையின் வரவைக் கொண்டாடும் நீர்நெருப்பு விழாவுக்குள் இருக்கும் நம்பிக்கையும் கொண்டாட்ட முறையும் திருநெல்வேலி நெல்லையப்பார் கோவில் முன் கட்டியெழுப்பப்படும் சொக்கப்பனையை நினைவில் கொண்டுவந்தது. கார்த்திகைமாதப் பெருமழைக்குப் பின் சொக்கப்பனை கொழுத்தும்போது வளர்க்கும் தீயிக்கும், அதன் பின்னிருக்கும் நம்பிக்கைக்கும்  இருக்கும்  தொன்ம நம்பிக்கை இதிலும் இருக்கிறது. தொன்மங்களோடு மனிதர்கள் எப்போதும் எங்கும் தொடர்பில் இருக்கிறார்கள்.


No comments :