ஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகதைகளை முன்வைத்து

இலக்கிய உருவாக்கத்தில் உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவுபற்றிய சொல்லாடல்கள் முடிவிலியாகத் தொடர்பவை. எழுதப்படும் நிகழ்வு ஒன்றே ஆயினும், வெளிப்பாட்டுத்தன்மையையும் எழுப்பும் விவாதங்கள் அல்லது விசாரணைகளையும் இலக்கியத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அடிப்படை இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், கதைகள் என்ற மூன்றிலும் எல்லாவற்றையும் எழுதிக் காட்டமுடியும் என்றாலும், வெளிப்படும்போது வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் பொருத்தமான சம்பவங்களும் சொல்முறையும் இருக்கவே செய்கின்றன. இலக்கியப் பிரதிகள் அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பதிவுசெய்யும் வெளிப்பாட்டு வடிவங்கள். உணர்வுகளும்சரி, உறவுகளும்சரி மனிதர்களுக்கிடையேயானதாகவும், மனிதர்களுக்கும் இயற்கைக்கு மிடையேயானதாகதாகவும் இருக்கின்றன. 

இந்தக் கட்டுரை இலங்கைத் தீவில், ஈழம் என்றொரு தனிநாட்டுக் கருத்தியலை முன்வைத்து நடந்த போரின் பின்னணியில் எழுதப்பட்ட 12 புனைகதைகளை (நாவல்கள்) பண்பாட்டு நிலவியல் [CULTURAL GEOGRAPHY] என்னும் திறனாய்வு அணுகுமுறையை முன்வைத்து வாசித்துள்ளது. இப்புனைகதைகளின் இலக்குகளையும் நோக்கங்களையும் விவாதிப்பதே கட்டுரையின் நோக்கம் என்றாலும், அதனைப் பண்பாட்டு நிலவியல் பின்னணியை முதன்மைப்படுத்தி வாசிக்க இரண்டு காரணங்கள் உண்டு. 
நாம் வாழும் இந்தச் சமகாலம் -21 ஆம் நூற்றாண்டின் இலக்கியவகையான புனைகதைகளை வாசிக்க மிகப்பொருத்தமான அணுகுமுறை அது என்பதை ஏற்றுக்கொண்டது. பல்வேறு காரணங்களால் இடப் பெயர்ச்சிகளும் புலப் பெயர்ச்சிகளும் அதிகமாகிக் கொண்டிருக்கும் காலம் நமது சமகாலம். இடப்பெயர்வு அல்லது புலம்பெயர்வு போன்ற பெருநிகழ்வுகளை எழுதும்போது பெருவெளிப் பரப்பையும், நீண்ட காலப் பின்னணியையும், எண்ணிக்கையில் கூடுதலான பாத்திரங்களையும் அனுமதிக்கும் இலக்கியவகைமையே அதற்குத் தேவை. அத்தகையதொரு இலக்கியவகைமையாக இருப்பது புனைகதைகள். தமிழில் மட்டுமல்ல வளர்ச்சியடைந்த உலகமொழிகள் பலவற்றிலும் சமகால இலக்கிய வடிவமாக நாவல் கருதப்படுகிறது. நம் காலத்தின் முதன்மை இலக்கிய வடிவமாகக் கருதப்படும் நாவல் இலக்கியங்களை அவற்றின் உருவாக்கக் காரணிகளோடு இணைத்துப் பேசும் இலக்கியத்திறனாய்வு அணுகுமுறையாகக் கருதப்படுகிறது பண்பாட்டு நிலவியல். இப்புதிய திறனாய்வு அணுகுமுறையின் பின்னணியில் புனைகதைகளை வாசிப்பதன் மூலம், அவை உருவாக அல்லது எழுதப்படக் காரணமாக இருந்த உரிப்பொருளை விவாதத்திற்குள்ளாக்கி முடிவுகளை முன் வைக்கமுடியும். இது முதல் காரணம். பண்பாட்டு நிலவியல் என்னும் திறனாய்வு அணுகுமுறை, தமிழின் தொடக்கநிலை இலக்கியவியலான தொல்காப்பியரின் திணைசார் பொருள்கோட்பாட்டோடு நெருங்கிய உறவுடையது எனக் கருதுவது இரண்டாவது காரணம். 

இலக்கியமும் பண்பாட்டு நிலவியலும்
மனிதர்களை,மனிதர்களின் வாழ்வெளியால் உருவாக்கப்படும் பண்பாட்டுக் கூறுகளோடு இணைத்து ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தும் பண்பாட்டு நிலவியல் அதனளவில் இலக்கியத்தோடு நேரடித் தொடர்பு கொண்டது அல்ல. ஆனால் மனிதர்களின் வாழ்க்கை மற்றும் மன அமைப்புகளே இலக்கிய உருவாக்கத்திற்கு காரணம் என்னும் பொது அடிப்படையில் பண்பாட்டு நிலவியல் இலக்கியத்தோடு உறவுடையதாக இருக்கிறது. எனவே பண்பாட்டு நிலவியல் எவற்றையெல்லாம் தன்னுடைய ஆய்வுக்கருவியாகவும் வெளியாகவும் கருதுகின்றதோ, அவற்றையெல்லாம் இலக்கியத்திறனாய்வு தனக்கான கருவியாகக் கொள்ளமுடியும். நிலப்பரப்பிற்குப் பதிலாக இலக்கியப் பிரதி/பனுவல் என்னும் பரப்பிற்குள் தேடித் தொகுத்துக்கொண்டு பண்பாட்டு நிலவியல் இலக்கிய அணுகுமுறையாக - புதுவகை அணுகுமுறையாக மாற்றம் பெற்றுள்ளது 

பண்பாட்டு நிலவியல் என்பது பண்பாட்டு உற்பத்தி, அதற்கான விதிகள் ஆகியவற்றைப் பற்றிக் கவனம் செலுத்துவதோடு, அவற்றின் வெளியைக் குறுக்கும்நெடுக்குமாக நிறுத்திக்காட்டி அவற்றிற்கு இடையேயுள்ள உறவுகளையும் விளக்க முனைகிறது. பொருளாதார உற்பத்தி முறைகள், அரசின் கட்டமைப்புகள், கலை, இசை, கல்வி, மொழி, சமயம் போன்றனவற்றை முக்கியமான பண்பாட்டு நடவடிக்கைக் கூறுகளாகக் கருதுகிறது. இவை எவ்வாறு? அல்லது ஏன்? மக்களுக்குத் தேவையாக இருக்கின்றன. அந்தத் தேவை குறிப்பிட்ட வெளி சார்ந்த தேவையாக இருக்கின்றனவா? நிரந்தரத் தேவைகளாக இருக்கின்றனவா? எனப் பேசுகிறது. இந்தப் பின்னணியில் உலகமயமும் இதன் கவனத்திற்குரிய பொருளாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் இவ்வம்சங்கள் அனைத்தும் உலகமயத்தின் பின்னணியில் ஓரிடம் விட்டு இன்னோர் இடத்திற்குப் பயணம் செய்யும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. 

முதன்மைத் தரவுகள்: சில குறிப்புகள் 
இந்தக் கட்டுரைக்காக வாசிக்கப்பட்ட புனைகதைகள் பன்னிரண்டு. இப்பன்னிரண்டும் 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தி வெளியாகியுள்ளன. இப்பன்னிரண்டைத் தாண்டிக் கூடுதலாகச் சில புனைகதைகள் வந்திருக்கக்கூடும். 
1. விமல் குழந்தைவேல்-கசகறணம்(2011) 
2. சயந்தன் - ஆறாம்வடு (2012) தமிழினி, சென்னை 
3. தமிழ்க்கவி - ஊழிக்காலம் (2013) ,தமிழினி, சென்னை, 
4. ஸர்மிளா ஸெய்யித் - உம்மத், காலச்சுவடு, நாகர்கோவில் (2013, 2015) 
5. குணா கவியழகன்-நஞ்சுண்ட காடு (2014) அகம், சென்னை 
6. தேவகாந்தன் -கனவுச்சிறை (2014) காலச்சுவடு, நாகர்கோவில் 
7. சயந்தன் - ஆதிரை (2015) தமிழினி, சென்னை 
8. சாத்திரி - ஆயுத எழுத்து (2015) 
9. குணா கவியழகன்-விடமேறிய கனவு (2015) அகம், சென்னை 
10. சோபா சக்தி - Box கதைப்புத்தகம் (2015) 
11. சேனன் - லண்டன்காரர் (2015) கட்டுமரம் பதிப்பகம், லண்டன் 
12. குணா கவியழகன் - அப்பால் ஒரு நிலம் (2016) தமிழினி, சென்னை, 

புனைகதை வாசிப்பு பற்றிச் சில குறிப்புகள்: 
புனைகதைகள் ஐரோப்பியரின் வருகைக்குப்பின் உருவான இலக்கிய வகைமை. எனவே அவற்றைப் பற்றிய விவாதங்களைப் பேச ஐரோப்பியத் திறனாய்வுக் கலைச்சொற்களே பொருத்தமானவை என்றொரு கருத்து உள்ளது. அக்கருத்தாளர்கள் தமிழின் முதன்மை இலக்கியவியல் பனுவலான தொல்காப்பியத்தின் அடிப்படை நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள். அப்பனுவல் கவிதைக்கான கலைச் சொற்களைத் தரும் பனுவலன்று. இலக்கியமென்னும் பொதுநிலைக்கான கலைச் சொற்களை முன்வைக்கும் பனுவல். 
தொடக்கநிலைக் கவிதைகளை அகம், புறமெனப் பிரித்துப் பேசிய தமிழின் இலக்கியவியல் பனுவலின் மையநோக்கத்தை உரிப்பொருள் எனச் சொன்னது. நவீன இலக்கியவியலில் கரு(theme)வாகக் கருதப்படும் உரிப்பொருள் வெளிப்பட நிலமும் பொழுதுமான முதல் பொருளும், அவற்றிற்குரிய கருப்பொருளும் பின்னணியாக அமையும் என்பது அதன் அடிப்படை வரையறை. இவையே மேற்கத்திய இலக்கியவியலைப் பின்பற்றும் நவீனத்திறனாய்வில் காலப்பின்னணியாகவும் இடப் பின்னணியாகவும் கருதப்படுகின்றன. 
ஒன்பது எழுத்தாளர்களின் பன்னிரண்டு நாவல்களும் அச்சாகி வாசிப்புக்குக் கிடைத்த காலம் இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் ‘போருக்குப் பிந்திய காலம்’. ஆனால் நாவல்களுக்குள் விவாதமாகும் காலம் பெரும்பாலும் போர்க்காலகட்டம். 12 பிரதிகளில் லண்டன்காரர் தவிர்த்து மீதமுள்ள 11 நாவல்களின் கதைவெளி, கதைநிகழும் காலம், நிகழ்வுகளில் இடம்பெறும் பாத்திரங்கள் ஆகியன சார்ந்து முழுமையும் போர்க்கால நாவல்கள் என வகைப்படுத்தத்தக்கன. நாவல் இலக்கிய வடிவத்தின் வழமையான நேர்கோட்டுக் கதைகூறல் உத்தி 10 நாவல்களில் வெளிப்பட்டுள்ளன. நேர்கோட்டுக் கதைசொல்லலில் நேரடிக்கூற்று, மனப்பதிவு, நினைவோடைக்குள் பயணம், அதன் வழியாகக் கடந்த காலத்திற்குள் சென்று வருதல் போன்றன கூற்றுமுறைகளாக உள்ளன. ஆனால் சோபாசக்தியின் Box ( பாக்ஸ்) கதைப்புத்தகம் நாவலை அத்தகைய கூற்றுமுறையில் அமைந்துள்ள நாவல் என்று சொல்ல முடியாது. நேர்கோட்டுக் கதை சொல்லலைத் தவிர்ப்பதற்காகக் கேட்டுச் சொல்லும் புராணிகத்தன்மையைக் கொண்டுள்ளது. 
தமிழின் இலக்கியவியல் அடிப்படையில் சொல்வதானால் போரும் போரின் நிமித்தமுமே இப்பதினொரு நாவல்களின் உரிப்பொருள். அவைகளில் விவரிக்கப்படும் தொடர்ச்சியான, தொடர்ச்சியற்ற நீண்டகாலப் போர்நிகழ்வுகள் சார்ந்தும், போர்க் காரணங்கள் அடிப்படையிலும் வெட்சிப் போர், வஞ்சிப்போர், உழிஞைப்போர், தும்பைப்போர் எனப்பிரித்துக்கூடச் சொல்ல முடியும். அப்போர்க்காலத்திய இலக்கியப் பனுவல்களில் இடம்பெற வேண்டிய கருப்பொருட்களும் முதல் பொருட்களும் கூடப் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதையும் பொருத்திக் காட்டலாம். அதேபோல் போருக்குப் பிந்திய நிகழ்வுகளைப் பாடும் திணைகளான வாகை, பாடாண், காஞ்சி, ஆகியனவற்றின் தன்மைகொண்ட நிகழ்வுகள் போர்களுக்கிடையே ஏற்பட்ட சமாதான காலத்தில் நிகழ்ந்தன என்பதை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கனவாக இருக்கின்றன. 2009, முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்திய புலம்பல்களும் கதியற்ற தன்மையும் காஞ்சித் திணையின் உரிப்பொருளான நிலையாமையோடு தொடர்புகொண்டன என்பதையும் விளக்க முடியும். ஆனால் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. 
பண்டைத்தமிழர்களின் போர்த்தன்மைகளையும் பெருமிதங்களையும் உள்வாங்கிய ஈழப்போர் பேரழிவாய் முடிந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த 6 ஆண்டுக் காலத்தில் தான் இந்தப் புனைகதைப் பனுவல்கள் எழுதப்பட்டு வாசிப்புக்குக் கிடைக்கின்றன.
லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காவு கொண்டதோடு, அதற்கிணையான எண்ணிக்கையில் சொந்த நிலத்திலிருந்து அகதிகளாய் வெளியேற நேர்ந்த மனிதர்கள் இந்தப் பூமிப்பரப்பின் பல இடங்களிலும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தாங்க வேண்டியதும், தக்க வாழ்க்கையை வழங்க வேண்டியதும் மனிதாய குணம்கொண்ட உலக மனிதர்களின் கடமை. இந்தக் கடமை உணர்வை/ உலகத்தின் பொறுப்பை உணர்த்தும் வேலையை இந்தப் புனைகதைப்பிரதிகள் எவ்வளவுதூரம் செய்துள்ளன என்பதைச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதால் அந்த விவாதத்திற்குள் நுழைவதற்கான அடிப்படைகளை முன்வைக்கிறது. 

போர்களும் போர்களின் நிமித்தங்களும் 
“மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக ஒதுக்குதல் நிலவுகிறது” என்ற உணர்தலின் அடிப்படையில் உருவான உரிமைப்போராட்டங்கள், ஆயுதப்போராட்டமாக மாறிய வரலாற்று நிகழ்வு ஈழப்போர். பல பரிமாணங்கள் கொண்ட அப்போரின் கால அளவு கால் நூற்றாண்டு (1983-2009). அதன் போர் நிகழ்வுகள் ஒற்றைத் தன்மையும் ஓரடையாளம் கொண்ட பகைமுரணாக எப்போதும் இருந்ததில்லை. தொடக்கத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான யுத்தமாக ஆரம்பித்தது. விடுதலையை வேண்டியவர்கள் இலங்கை அரசை பேரினவாதத்தை ஆதரிக்கும் சிங்களப் பௌத்த அரசாக உணர்ந்தனர். தங்களை மொழிச் சிறுபான்மையினராக முன்வைத்தனர். அதற்குள் இருந்த சமயச் சொல்லாடல்களைப் பண்பாட்டு அடையாளங்களென முன்வைத்து, அவற்றைத் தக்கவைப்பதற்கான போராட்டமாக முன்வைத்தனர். 

விடுதலைப் போராட்டக்குழுக்கிடையேயான அழித்தொழிப்புப்போராக மாறிய காலகட்டம் இரண்டாவது கட்டம். அதற்கான காரணங்களும் ஒருபடித்தானவையல்ல. போருக்குப் பிந்திய தனிநாட்டில் யாருடைய அதிகாரம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது உள்நோக்கமாக இருந்தாலும், போராடிய குழுக்களின் கொள்கைகள், நம்பிக்கைகள், பிரசார உத்திகள், அதன்வழியாக சேர்க்கப்படும் ஆள் எண்ணிக்கைகள் வெளிப்படையாகத் தெரிந்தவை. 
மூன்றாவது கட்டப்போராக அமைதிகாக்கும் படையாகச் சென்ற இந்திய ராணுவத்தோடு நடந்த போர் இருந்தது. இந்திய/தமிழகத்தொடர்புகள் ஏற்படுத்திய நம்பிக்கை மட்டும் எதிர்பார்ப்பு காரணமாக இந்தியப் படையை அனுமதித்ததும், அவை பொய்யாகப் போனபோது எதிர்த்ததும் பின்னணிக்காரணங்கள். இப்போரின் பின்விளைவு, ஈழப்போர்க்களத்தில் ஒற்றைப் போராளிக்குழுவாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 
இந்திய ராணுவம் திரும்பியபின் முழுமையாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே களத்தில் நின்று அரசையும், அதன் ஆதரவு சக்திகளான அண்டை நாட்டு ராணுவ உதவிகளையும் ஒரேசேர எதிர்த்ததைக் கடைசிக் கட்டப்போராகக் கூறலாம். தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் போராட்டங்கள் வழியாகப் பின்வாங்கிக்கொண்டு இந்திய அமைதிகாக்கும்படை நாடு திரும்பிய நடந்த நான்காம் கட்டப் போர் முழுமையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கையின் பேரினவாத அரசுக்குமிடையில் நடந்தபோராக மாறியது. அப்போரில் பலவெற்றிகளை அடைந்ததோடு குறிப்பிட்ட பகுதிகளில் ஆட்சி நிர்வாகமொன்றை நடத்திக்கொண்டே தொடர்ச்சியாகப் போரையும் நடத்தினர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள். 
போர்க்காலத்தோடும் போர்நிறுத்தக்காலங்களும் இடையிடையே உருவானது. தனி ஈழத்துக்கான உள்நாட்டுப் போர் முழுமையாக உள்நாட்டுப் போர் என்பதைத் தாண்டி அண்டைநாடுகளின் பார்வையோடும் பரிவோடும் வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டது. இலங்கைத் தீவின் இருப்பு உலகப்புவிசார் கேந்திர இடத்தில் இருப்பதால், பல்வேறு நாடுகளும் பின்னணியிலிருந்து இயக்கிய போர்க்களமாக மாறியது. உலகமய வர்த்தகப்பின்னணியில் போரில்லா புவிசார் மையமாக இலங்கைத் தீவு மாறவேண்டிய தேவையும் உணரப்பட்டது. இந்தப் பின்னணியில் 2009 இல் முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்த்தப்பெற்றது. 
புனைகதை வடிவத்தின் சாத்தியங்கள் 
நான்குகட்டப் போர்க்காலத்தை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலவிதமாகப் பதிவு செய்துள்ளனர். உணர்ச்சியின் வடிவமான கவிதையே போரின் தேவையையும் போர்க் களக்காட்சிகளையும் பேசுவதற்கேற்ற வடிவமாக நீண்ட காலம் இருந்தது. சகோதர யுத்தமும் அகதி வாழ்வும் புலம்பெயர்வும் என இலங்கைத் தமிழரின் வாழ்க்கை மாற்றம் கண்டபோது கவிதைகளைத் தாண்டிப் புனைகதைகளும் -குறிப்பாகச் சிறுகதைகளும் அதைப் பேசின. ஆனால் போருக்குப் பிந்திய நிதான மனநிலையைப் பேசக் கவிதைகளும் சிறுகதைகளும் போதாமை கொண்ட வடிவங்கள் என்பது உணரப்பட்டது. கால் நூற்றாண்டென்னும் நீண்ட காலப்பரப்பை விசாரித்துக் கொள்ள நாவல் இலக்கியவடிவம் ஏற்றது என்பது உணரப்பட்டுள்ளது. காலத்தையும் வாழ்க்கையையும் குறிப்பிட்ட இடப்பின்னணியில் விசாரணை செய்யும் வடிவமாக நாவல் உலக இலக்கியப்பரப்பில் அறியப்படுகிறது. இதனையே கார்ல் சாசர் முன்வைத்த பண்பாட்டு நிலவியல் # என்னும் அறிவிப்புலத்தை உள்வாங்கிய திறனாய்வுக்கோட்பாடும் வலியுறுத்துகிறது. இதனை நிரூபிக்கும் விதமாகவே ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்ட நாவல்களும் வந்துகொண்டிருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. 
போரையும் போர்க்காலத்தையும் நாவலாசிரியர்கள் எழுதியுள்ள தன்மையை முன்வைத்து மூன்று வகைப்பட்ட நாவல்களாக இப்பதினொன்றையும் பிரிக்க முடிகிறது. 1. போரில் பங்கேற்று நேரடி அனுபவம் பெற்றவர்களின் எழுத்து என உணரத்தக்கதாக ஐந்து நாவல்கள் இருக்கின்றன. தமிழ்க்கவியின் ஊழிக்காலம், சாத்திரியின் ஆயுத எழுத்து, குணாகவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் ஆகியன இம்முதல்வகை. இவ்வைந்து நாவல்களின் மொழிதல் முறையை தன்மைக்கூற்றுநிலை எனச் சொல்லலாம். அதற்கான கூறுகள் அதிகம்கொண்ட பிரதிகள் இவை, 2. இரண்டாவது வகை நாவல்களாக சயந்தனின் ஆறாவடு, ஆதிரை, தேவகாந்தனின் கனவுச்சிறை ஆகிய மூன்றையும் கூறலாம். போர்க்காலத்தையும் போர் நிகழ்வுகளையும் அண்மையிலிருந்து பார்த்து அல்லது பங்கேற்று விலகிவந்து, தொடரும் நினைவுகளாக முன்வைப்பது இம்மொழிதலின் தன்மை. போர் நிகழ்வுகளையும் புலம்பெயர் வாழ்க்கையையும் விவரிக்கும் முன்னிலைக் கூற்றுத் தன்மையை இந்நாவல்களில் வாசிக்கலாம். முழுமையாகப் போரைப் படர்க்கைநிலையில் சொல்லும் விலகல் தன்மை கொண்ட நாவல்களை மூன்றாவது வகையாகச் சொல்லலாம். இத்தன்மையில் 1. விமல் குழந்தைவேலின் கசகறணம் 2. ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத்,, 3.சோபா சக்தியின் Box - கதைப்புத்தகம். 

ஒருபனுவலின் மொழிதல் முறைக்கேற்ப அதன் வாசகத்தளம் உருவாகும். அவ்வாசகத்தளத்தின் இருப்புக்கும் தன்னிலைக்குமேற்ப பனுவல் உண்டாக்கும் எதிர்வினைகளும் மாறுபடும். மூன்று வகைப்பட்ட நாவல்களின் காலம், வெளி, பாத்திரங்கள், அவற்றிற்கிடையே ஏற்பட்ட அக, புற முரண்பாடுகள் ஆகியனவற்றைப் பிரதிக்குள் கிடைக்கும் போர் நிகழ்வுகளோடும், புனைவல்லாத வரலாற்றுத் தரவுகளோடும் பொருத்தி விவாதிக்கலாம். அந்த விவாதம் நாவல்கலையின் நுட்பங்களுக்குள் விரியும் தன்மைகொண்டது. அதன் வழியாக ஒவ்வொரு பனுவலின் தனித்திறன்களைக் கண்டறியும் திறனாய்வுச் சொல்லாடலுக்குள் நுழையலாம். இக்கட்டுரையின் மையநோக்கத்திற்கு அச்சொல்லாடல்கள் தேவையற்றது என்பதால் சாராம்சமான விவாதம் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. சாராம்ச விவாதத்திற்குத் தேவையான அளவில் நாவலில் இடம் பெற்றுள்ள காலம், நிகழ்வெளிகள், இங்கே தரப்பட்டுள்ளன. 

இப்பன்னிரண்டு நாவல்களில் காலத்தில் முந்திய நாவலான விமல் குழந்தைவேலின் கசகறணம், போரை எழுதிய நாவல் அல்ல; போர்க்காலத்தை எழுதிய நாவல் எனலாம். இலங்கையில் நடந்த போரைச் சாதாரண மனிதர்களின் பார்வையிலிருந்து காட்டுகிறது. அதன் கதைவெளி மட்டக்களப்பு. வட்டாரமொழியின் வழியாகப் பாத்திரங்களின் உண்மைத் தன்மையைக் கடத்தும் நாவலை வாசிக்கும்போது கிடைப்பன சாதாரண மனிதர்களிடையே நிலவும் சுமுகமான உறவுகளும் அந்நியோன்யமும். அன்றாட வாழ்க்கையிலும், சிறப்பான நிகழ்வுகளிலும் வெளிப்பட்ட பகையற்ற போக்கை லாவகமாக எழுதிக்காட்டும் நாவலாசிரியர், நாட்டிற்குள் தலையெடுத்த போரால் அந்த வாழ்க்கை சிதைந்துபோனது என விரிப்பதைத் தனது பணியாகக் கருதியிருக்கிறார். மனிதர்களின் வாழ்க்கையில் குடும்பவெளி தனித்த அடையாளங்களைப் பேணவேண்டிய வெளியாகவும், பொதுவெளி அவ்வடையாளங்களைத் துறக்க வேண்டிய வெளிகளாகவும்- (சந்தை, வீதி, சினிமாத் தியேட்டர், கொண்டாட்ட நிகழ்வுகள் போன்றன) இருப்பதை உணர்ந்தவர்களாக இருந்த காலகட்ட வாழ்க்கையை விரிவாகச் சொல்கிறது. பின்னர் இவ்விருவெளிகளின் எல்லைகளை அழிப்பதாகப் போர் வந்தது மெல்லமெல்லக் காட்டுகிறது. இந்நாவலின் பாத்திரங்களும், பாத்திரங்களால் உருவாகும் சம்பவங்களும் எழுதப்படும்போது விரிவாக விரிவன நாவலின் களமான மட்டக்களப்பின் கருப்பொருள் தகவல்கள் என்பது கவனித்துக்கொள்ள வேண்டிய ஒன்று. தமிழர்கள், சிங்களர்கள், இசுலாமியர்கள் எனத் தனித்த அடையாளங்களோடு -பண்பாட்டு அலகுகளோடு- உலவும் மனிதர்கள் வாழும் பிரதேசம் காணாமல் போன தொடர்ச்சியைக் காட்டுவதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. 

இதே நோக்கம் கொண்டதே சயந்தனின் ஆறாவடுவும் ஆதிரையும் என்றாலும் அவை சாதாரண மனிதர்களின் பார்வையில் அல்லாமல் போரில் ஈடுபட்டவர்களின் பார்வையில் விரிவனவாக உள்ளன. குறிப்பாக ஆறாவடு இந்திய அமைதி காக்கும்படை இலங்கைக்குச் சென்ற காலத்தை மையமிட்ட பின்னணியைக் கொண்டது. இந்திய ராணுவத்தின் வரவுபற்றிய எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பு தவறாகிப் போனதின் குமுறல், அதன் பின் விளைவுகள் ஏற்படுத்திய வலியும் வடுக்களும் எனப் போரின் உக்கிரமான காலகட்டத்தைப் பேசுகிறது. அதன் தொடர்ச்சியாக இலங்கைத் தீவைவிட்டுத் தமிழர்கள் பலதேசங்களையும் நோக்கி நகரவேண்டிய நெருக்கடிகளையும் விரிக்கிறது. 

1987 தொடங்கி 2003 வரையிலான காலகட்டத்தில் அமுதன் என்னும் மனிதன் அடைந்த தன்னிலை மாற்றங்களையும் அதனால் அவனது மனதில் உண்டான வடுவையும் முன்வைக்கிறது நாவல். கொழும்பு கடற்கரை யிலிருந்து இத்தாலிக்குக் கடற்பயணமாகச் செல்லும்போது உண்டாகும் நினைவோட்டமே நாவலின் நிகழ்வுகள். தனிமனிதனொருவன் போராளியாக மாறியதும், இலங்கைக்குள் வந்த இந்திய அமைதிகாக்கும் படைக்கு உதவும் மனிதனாக மாறியதும், பின்னர் விடுதலைப்போராட்ட இயக்க உறுப்பினராக மாறியதும், காதலுக்காக இயக்கத்தைவிட்டு வெளியேறுவதுமான நகர்வுகள் விரிகின்றன. இந்திய அமைதிகாக்கும் படை நிகழ்த்திய பாலியல் வல்லுறவுகளையும் போரினால் இடம்பெயரும் நெருக்கடிகளையும் சொல்கிறது. இந்நாவலில் வரும் மையப்பாத்திரமான அமுதன் போராட்டம், விடுதலை, தனிநாடு, போராளி என்ற புரிதலோடு இயங்கியவனாக இல்லாமல் சந்தர்ப்ப சூழல், பிறர்தரும் நெருக்கடி, தனிமனிதர்களுக்குண்டாகும் காதல் வாழ்க்கைக்காகப் போராளி அடையாளத்தைத் துறக்கும் ஒருவனாக இடம் பெறுகிறான். வெளியேற்றத்திற்கான முனைப்புகள், அதில் இருக்கும் ஆபத்துகள், புலம்பெயர் தேசத்து வெளிகள் என நாவல் களத்தை விரித்துள்ளார். யாழ்ப்பாணம், அனுராதபுரம், முல்லைத்தீவு போன்ற இலங்கைத் தீவின் வெளிகளில் இயங்கிய போராளிக்குழுக்களின் உறுப்பினர்களையும் சாதாரண மனிதர்களையும் பாத்திரங்களாகக் கொண்ட இந்த நாவல், புலம்பெயர வேண்டிய நெருக்கடிகளை உருவாக்கியதாக இருதரப்பையும் முன்வைக்கிறது. அரசின் படைகளும், படைகளை எதிர்கொண்ட போராளிக்குழுக்களின் தேவைகளும் முனைப்பும் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படுத்திய வலிகளும் வேதனையும் சம்பவங்களாக விரிக்கப்பட்டுள்ளன. 
சயந்தனின் இன்னொரு நாவலான ஆதிரை, கதை சொல்லல், சம்பவங்களை முன்வைத்தல், மொழிப்பயன்பாடு ஆகியவற்றில் பெரிதும் வேறுபாடு இல்லை. ஆனால் அதன் காலப்பரப்பும் பாத்திரங்களும் அதிகம். நாவலின் தொடக்கம் 1991 என்பதாக இருந்தாலும், 1978க்குச் செல்வதோடு மலையகத்தமிழர்களின் இருப்பைக் கண்டுகொள்ளாத - மறுக்கிற யாழ்ப்பாணத்தமிழர்களின் நிலையையும் முன்வைக்கிறது. புலிகள் முன்நின்று நடத்திய முக்கியமான போர்நிகழ்வுகள் பலவற்றை முன்வைத்துச் சம்பவங்களை விரிக்கும் நாவலில் தொடர்ந்து இடம்பெறுவது இடப்பெயர்வுகளும் புலம்பெயர நினைக்கும் மனங்களும்.

போரை எதிர்மனநிலையிலிருந்து விமரிசிக்காத தொனிக்குக் காரணம், தமிழர்கள் மீதான போர் அரசதிகாரத்தாலும், அதற்கு உதவ வேண்டுமென்ற நோக்கத்தோடு நுழைந்த இந்திய அமைதிப்படையாலும் திணிக்கப்பட்ட போர் என்பதை சயந்தனின் விவரணைகள் காட்டுகின்றன. போரில் ஈடுபடப் பெண்களும் இளைஞர்களும் பெரிதும் ஆர்வத்தோடு வந்ததை மறுக்கவில்லை. வலி மற்றும் இழப்புகளை ஏற்கும் மனநிலை தொடர்ந்ததையும், இறுதிப்போரில் திட்டமிடலும், எதிரிகளின் தந்திரங்களும் அறியாமல் தோற்க நேர்ந்ததை விவரிப்பதோடு, போருக்குப் பின்னான புனர் நிர்மானம் பற்றிய பார்வையும் தரும் புனைவாகச் சயந்தனின் இப்பெருநாவல் விரிந்துள்ளது. ஆதிரையின் கதைசொல்லலில் போர்க்காலம் முழுவதுமாக இருந்தாலும், நீண்ட கால நிகழ்வுகளைச் சொல்லிவிடும் முனைப்பு வெளிப்பட்டுள்ளது. 14 அத்தியாயங்களைக் கொண்ட ஆதிரை 1977 இல் மலையகத்தில் நடந்த இடப்பெயர்வை முன்வைத்துக் கதையைத் தொடங்குகிறது. 

தமிழ்க்கவியின் ஊழிக்காலம் முழுமையும் போர்க்காலத்தையும் போர் வெளியையும் எழுதிய புனைகதை. கிளிநொச்சியிலிருந்து பார்வதியின் குடும்பம் அக்டோபர் 8 ஆம்தேதி இடம் பெயர்வது தொடங்கி, மே 16 ஆம் தேதி வட்டவாசலில் முடிவதாக அமைந்துள்ளது. வட்டக்கண்டல், ஆண்டான்குளம், முருங்கன் பகுதி,பளை, முழங்கா நாச்சிக்குடா, கிராஞ்சி போன்ற கடற்கரைக் கிராமங்களிலும் வன்னிவீதி, கோட்டைகட்டி, கோணா, கட்டைக்காடு, மயில்வாகனபுரம், நாதன் குடியிருப்பு, உடையார் கட்டு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உண்டியற்பிள்ளையார் கோவில்வீதி, சுதந்திரபுரம், தேவிபுரம்,விசுவமடு, மல்லாவி ஒட்டங்குளம், மூங்கிலாறு, வட்டக்கச்சி, பொக்கனை வீதி, வட்டவாசல் எனப் பலக் கிராமங்களைக் கதைவெளியாகக் கொண்டிருக்கும் இப்புனைகதையில் 100க்கும் மேற்பட்ட பாத்திரங்கள் வந்துபோகின்றனர். பார்வதி என்ற பாத்திரமாக மாறி ஆசிரியரே சொந்த அனுபவங்களை எழுதுவதுபோல எழுதப்பெற்ற இந்நாவலின் தலைப்பின் வழி முள்ளிவாய்க்கால் பெருநிகழ்வுக்கு முன்பான ஓராண்டுக்காலத்தை பேரழிவின் காலமாக - ஊழியின் காலமாகச் சொல்வதாகக் கொள்ளலாம். அவ்வூழிக்காலத்தை உருவாக்கியவர்களாக இருதரப்பாரையும் சம அளவில் விமரிசிக்கும் தொனியை நாவலில் காணமுடிகிறது, புலிகளால் தலைமையேற்று நடத்தப்பெற்ற போர்முறைகள் மீது விமரிசனங்களை வைக்கும் விதமாகச் சம்பவங்கள் விரித்துள்ளன. ஊழிக்காலத்தின் வலியாக ஆயுதங்கள் உண்டாக்கிய வடுக்களோடு இயற்கையால் ஏற்படும், வெயில், மழை போன்றனவும் நோயும் பசியும் உண்டாக்கிய அழிவுக்காலமாகக் காட்டுகிறது. போராளிகளுக்குள் துரோகிகளும் காட்டுக்கொடுத்தவர்களும் பற்றிய வெளிப்படையான தகவல்களைக் கொண்டுள்ள இப்புனைகதை முழுமையும் போர்க்கால எழுத்து. 
தமிழ்க்கவியின் ஊழிக்காலத்தின் இன்னொரு பிரதியாக சாத்திரியின் ஆயுத எழுத்தை வாசிக்கலாம் எனச் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் சாத்திரியின் ஆயுத எழுத்து சொல்லும் கதை கூறல் முறை, கதைவெளிகளின் பரப்பு, போரை நடத்தும் அமைப்பின் மீதும், அமைப்பின் உறுப்பினராக இருக்கும், தன்னையும் தன்னையொத்த போராளிகளின் குற்றவுணர்வற்ற மனங்களையும், எழுதிக் காட்டியுள்ள வகையில் முக்கியமான இலக்கியப்பனுவலாக மாறியிருக்கிறது. போரைத் தின்று வளர்ந்த இளைஞர்களுக்குள் தொலைந்துபோன ஆதார மனித உணர்வுகளும் அப்படி ஆக்கிய தன் அமைப்பையும் எதிர் அமைப்புகளையும் முரணிலைப்படுத்தி எழுதியுள்ள சாத்திரியின் எழுத்துமுறை, அனுபவங்களைக் கலையாக்கும் கலைஞனின் எழுத்தாக மாறியிருக்கிறது. 
பெயரிலியான அவனை மையமாக்கிக் கொண்டு பல்வேறு சம்பவங்களையும் அதில் ஈடுபட்ட பல்வேறு மனிதர்களையும் பாத்திரங்களாக்கிக் கலைத்துப் போட்டுள்ள சாத்திரி, 1983 தொடங்கி 1990 வரையிலான காலப் பகுதியைக் கதையின் காலமாக்கியுள்ளார்,ஈழத்தின் கிராமங்கள், சிறுநகரங்கள், நகரங்கள் சார்ந்த போர் நிகழ்வுகளை விவரிக்கும் நாவல் இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜெர்மனி, கம்போடியா, ஜோகன்ஸ்பர்க், குரேசியா, ரஷ்யா எனப் பரந்த எல்லைக்குள் ஈழப்போராளி இயக்கம் என்னென்ன வேலைகளை - நிதி திரட்டல், ஆயுதம் வாங்குதல், ஆதரவுத்தளத்தை உருவாக்கல் - போன்ற வேலைகளைச் செய்து இயங்கியது என்பதோடு இந்தியாவின் சில மாநிலங்களில் நடந்த பயிற்சிகளையும் மருத்துவ உதவிகள் பற்றியும் விவரிக்கிறது. யாழ்ப்பாணத்தில் 32 போராளி இயக்கங்கள் இருந்தன என்ற தகவலைத் தரும் ஆயுத எழுத்து, முக்கிய இயக்கங்கள் எவ்வாறு ஒழிக்கப்பட்டன என்பதையும், விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் என்ன மாதிரியான கெடுபிடிகள் மற்றும் அதிகார இறுக்கம் இருந்தது என்பதை நேர்மையாகச் சொல்கிறது. நாவலை வாசிக்கும்போது விடுதலைப்போராட்ட அரசியல் நாவலை வாசிக்கும் தொனியிலிருந்து விலக்கம் செய்யும் பல இடங்கள் உள்ளன. அந்த விலக்கம் போராளிகளின் நியாயமற்ற செயல்களை விமரிசனப் பார்வையோடு வாசிக்கவேண்டும் என்பதற்கான இடைவெளி உருவாக்கம் என்று கூடச் சொல்லலாம். 
ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் போரின் மீது வேறொரு கோணத்திலிருந்து வெளிச்சம் காட்டும் புனைகதை. போராளிகளாக மாறும் பெண்களின் பின்னணிகளையும், போரில் அவர்களின் பங்களிப்பும், போரினால் பாதிக்கப்பட்ட பின்னர் அவர்களின் வாழ்க்கையின் போக்கும் என்பதான களத்தில் இயங்கும் புனைகதைக்குள், புலிகளின் தவறான முடிவுகளால் அங்கிருந்த இசுலாமிய சமூகத்து மனிதர்களின் வாழ்க்கையில் துயரம் படிந்த கதை விவரிக்கப்படுகிறது. யோகா, தெய்வானை, தவக்குல் என்னும் மூன்று பெண்களின் உறவு சார்ந்து நகரும் நாவலில் யோகா, தெய்வானை ஆகிய இருவரும் போராளிகள். தவக்குல் போரினால் பாதிக்கப்பெற்ற பெண்களுக்கு சேவை செய்ய வந்த இசுலாமியப் பெண். இருபெண் போராளிகளையும் வெவ்வேறு பின்னணியில் போராளியாக மாறியவர்கள் எனச் சித்திரிக்கிறார் ஸெய்யித், தெய்வானை 1987 தொடங்கி நடந்த தாக்குதல்களைக் கண்ணுற்று இயக்கத்தின் செயல்பாடு, அரசியல் தெரிந்து போராளியானவள், ஆனால் யோகா இதற்கு மாறாக உள்ளே வந்தவள். இயக்கத்தின் பரப்புரையையும் தமிழீழம் என்னும் தனிநாட்டுக் கொள்கையின் மீது ஈடுபாடுகொண்டு இயக்கத்திற்கு வந்தவளல்ல யோகா. வறுமையும் அடிக்கும் காற்றில் அசையும் வாழ்க்கையும் அவளை இயக்கத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. தவக்குல் சமூகசேவையை விரும்பி ஏற்றுக்கொண்ட இசுலாமியப்பெண். இம்மூன்று பெண்களின் உறவு,உரையாடல் வழியாக விரியும் போர்க்கால நிகழ்வுகளாக நாவல் அமைந்துள்ளது. நெருக்கடியான போர்க்காலத்திலும் செயல்படும் பாலின பேதம், மதம் சார்ந்த எண்ணங்களை விவாதப்புள்ளிகளாக ஆக்கியிருக்கிறது. போரினால் உண்டாகும் பாதிப்புகள் பெண்களுக்குக் கூடுதல் இழப்பையும் மனச் சிக்கலையும் உண்டாக்கும் சூழல் இருப்பதாக முன்வைக்கிறார் ஸர்மிளா ஸெய்யத். தேசவிடுதலையின் பின்னணியில் கட்டுப்பாடுகளை மீறிப் புதுவெளிக்குள் நுழையும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும் அவர்களை ஆண்மையச் சமூகம் நடத்தும் விதங்களையும் முன்வைக்கிறார் ஸர்மிளா. 
தேவகாந்தனின் கனவுச்சிறை விரிவான கதைவெளிகளைக் கொண்ட நாவல். இலங்கையின் நயினா தீவில் தொடங்குகிறது. அங்கிருந்து சுன்னாகம், கம்பஹாவி,கச்சாயி, திரிகோணமலை என நகர்ந்து இந்தியாவிற்குள் அகதிவாழ்க்கையைப் பேசும் நிலைக்குள் நகர்கிறது. தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைச்சாலையில் இருக்கும் அகதிமுகாம் வாழ்க்கையை விவரிக்கிறது. பின்னர் பம்பாய், ஜெர்மனி, ப்ரான்ஸ் என்னும் சர்வதேச வெளிகளை நாவலின் வெளியாக மாற்றுகிறது. இந்தியாவின்போரால் துரத்தப்பட்ட வாழ்க்கையாக ஈழத்தமிழர்களின் வாழ்க்கை மாறிவிட்டதைச் சொல்லும் தேவகாந்தனின் கனவுச்சிறை ஒருவிதச் செவ்வியல் தன்மைகொண்ட நாவல் வடிவமாக உருவாக்கப்பெற்றிருக்கிறது. இழந்ததை நினைவில் கொண்டு வருவதின் மூலம் நிகழ்வுகளையும் இழப்புகளையும் காரணிகளையும் காரணங்களையும் வாசிப்பவர்களுக்குக் கடத்தும் படர்க்கை நிலையில் தேவகாந்தன் பயணம் செய்கிறார். 
சோபா சக்தியின் பாக்ஸ் கதைப்புத்தகம் வரிசைக்கிரமமான கதைசொல்லலைக் கைவிட்டுப் போர்க்கால நிகழ்வுகளுக்குள் இருந்த குரூரம், மனிதர்களை உயிரியாகப் பார்க்காமல் உடமைப்பொருட்களாகப் பார்த்த மனநிலையைத் தனித்தனிக் காட்சிகளாக முன்வைக்கிறது. போர் விருப்பம் நிறைந்த போராளிகளின் தலைமையின் மீது கூடுதல் கவனிப்பை வைப்பதின் மூலம் தனது விமரிசனப் பார்வையை முன்வைக்கிறார். 

குணா கவியழகனின் முதல் நாவல் நஞ்சுண்ட காடு, இயக்கத்திற்குள் இழுத்துவரப்பட்ட ஒருவனின் பயிற்சிக்கால அனுபவம். விருப்பமில்லாமல் பயிற்சியில் ஈடுபட்டு முழு ஈடுபாடில்லாமல் பயிற்சியை ஏற்றுக் கொண்ட மனநிலை. கடுமையான பயிற்சிகள், காடு, அரசியல் வகுப்புகள், முக்கியமானோர் வருகை என விரியும் நாவலில் இனியனின் மனப்பதிவுகளாகவே காட்சிகள் விரிகின்றன. ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ராணுவக் கட்டமைப்பு உருவாக்கம் பற்றிய விமரிசனங்களுக்குப் பதிலாகவும் இன்னொரு விதத்தில் அரசியல் அமைப்பாக அது உருவாகவில்லை என்ற விமரிசனமாகவும் அமைகின்றன அம்மனப்பதிவுகள். தேசவிடுதலையென்னும் பொது வெளியைவிடக் காதல், குடும்ப உறவுகள் உண்டாக்கும் எண்ணங்களே மனிதர்களைப் போராட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுகிறது என்பதை விவரிக்கும் எழுத்து அது. 
இரண்டாவது நாவலான விடமேறிய கனவு போருக்குப் பின் சரணடைதல், சிறை வாழ்வு, விசாரணை, புனர்வாழ்வுமான காலகட்டப்பதிவு. விசாரித்தலின் அபாயகரமான முறைகள். விஷத்தை வாயிலும் குதத்திலும் மறைத்துக் கொண்டு வாழும் ஒருவனின் தந்திரம். இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்கள் தங்களை மறைத்துக் கொண்டு புனர்வாழ்வில் வாழ்தல். அங்கிருந்து தப்பி நண்பர் உதவியால் நாட்டைவிட்டு வெளியேறிவிட நினைப்பவனின் மனப்பதிவு. போருக்குப் பின் சரணடைந்த போராளிகளின் மனநிலையை விவரிக்கும் இந்நாவல், உள்முகமாக புலிகளின் அமைப்பு செயல்பட்ட விதத்தைத் திரும்பிப் பார்த்து விமரிசனங்களை முன்வைக்கிறது. இராணுவச்சிறை, ஜோசப்கேம்ப், செட்டிகுளம் மிலிட்டரி காம்ப்ளக்ஸ், முள்ளிவாய்க்கால், ஓமந்தை, சுதந்திரபுரம், இரணைப்பாலை, மாத்தளன், புதுக்குடியிருப்பு, மன்னார், நந்திக்கடல், விசுவமடு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, இரகசிய சிறைமுகம் எனப் பலவெளிகளுக்குள் சென்று திரும்பும் நினைவுப்பாதையில் போராளிகளும் அவர்களின் தலைவர்களாக இருந்த மனிதர்களின் வீரமும், அறிவும் விசாரணைக் காலத்தில் எங்ஙனம் மறைக்கப்பட்டது என்பதைச் சொல்லும் கவியழகனின் மொழிநடை இந்நாவலில் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. விசாரணைக்காலத்திலும் புனர்வாழ்வு வெளியிலும் குடிநீர், உணவு கிடைக்காததோடு கழிப்பிட வசதி, படுக்கை வசதி, மருத்துவவசதி என அடிப்படைத் தேவைகளின்றி அடியையும் உதையையும் தாங்கிக் கொண்டு பொறுமை காக்கும் போராளிகளின் மனநிலையைச் சொல்லும் நாவல், முழுவதும் அதற்கான காரணமாகத் தங்களின் லட்சியமான - கனவான தனிநாடுக் கோரிக்கையே - விடமேறிய கனவே இருந்தது என நினைவூட்டுகிறது.
மூன்றாவது நாவல் அப்பால் ஒரு நிலம் கண்காணிப்பு மனநிலைக்குள் இயங்கும் போராளிகளின் மனம் பற்றியது. மக்களுக்காக ஒரு நாட்டை உருவாக்க நினைக்கும் தன் மகனுக்காக ஒரு வீட்டிற்கான நிலத்தைக் காப்பாற்ற நினைக்கும் தாயின் மனம் என வாசகர்களைப் பயணிக்கச் செய்கிறது. இந்நாவலில் உணர்ச்சிகரமான நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் எழுதிக்காட்டும் குணாகவியழகன், ஈழப்போராட்டம் உணர்வுகளைத் தவிர்த்துத் தேசம் பற்றிய பொதுவெளிக்குள் வாழும் மனிதர்களையே உருவாக்க நினைத்ததைப் பேசுகிறார். ஆனால் மனிதர்கள் இரண்டுமாகவே - உணர்வு அறிவு - என இணைந்து செய்யும் பயணத்தையே கொண்டிருக்கின்றனர் என்பதை முன்வைக்கிறார். கிளிநொச்சி, வன்னிப் பின்னணியில் போருக்கான தயாரிப்பாக உளவுப் பணி செய்யும் போராளியின் மனநிலைக்குள் கடமையுணர்வும் அமைப்பின் மீதான விமரிசனப்பார்வையும் இணைந்தே பயணிக்கின்றன. 
சேனனின் லண்டன்காரர் முழுமையும் லண்டனுக்கு அகதியாகச் சென்ற இலங்கைத் தமிழர் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கலைப் பேசும் பிரதி. அதன் கதைவெளி போரின் களம் என்பதிலிருந்து விலகலாக இருக்கிறது. மையப் பாத்திரத்தின் இயங்குவெளியாக இருப்பது புலம்பெயர் தேசம்; குறிப்பாக இங்கிலாந்தின் லண்டன். நினைவுவெளியாக மட்டுமே இலங்கைத் தீவின் தமிழர் வாழ்விடமும் அங்கு நடக்கும் போரும் வந்துபோகின்றன. போரினால் பெயர்க்கப்பட்ட ஒருவரின் அகதி நிலையை முன்வைப்பதன் மூலம் அதன் வாசகத்தளம் ஒற்றைப் பரிமாணத்தில் நிலைகொள்கிறது. போரினால் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியையும், பண்பாட்டுச் சிக்கல்களையும் முன்வைப்பதைத் தாண்டி அதன் கேள்விகள் போரின் உக்கிரமான பகுதிகளுக்குள் நுழையவில்லை. 

புனைவெளியின் அடையாளங்கள்
வாசிக்கப்பட்ட மூன்று வகைப்பட்ட புனைகதைகளிலுமே இலங்கையின் தமிழர் பகுதிகள் அவற்றின் பண்பாட்டு அடையாளங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. போருக்கு முந்திய வாழ்க்கையாகவும் போர்க்கள நிகழ்வுகள் நடந்த வெளிகளாகவும், அமைதிக்கால நடவடிக்கையின் போது நடந்த தயாரிப்புக்களாகவும், போருக்கான தயாரிப்புப் பாசறைகளாகவும், அவற்றிற்குச் செல்லும் பாதைகளாகவும், உக்கிரமான போர்களால் இடம்பெயர்ந்த மனிதர்களுக்கு அச்சமூட்டிய வெளிகளாகவும், போரின் விளைவால் நடந்த அழிவுகளாகவும், புனர்வாழ்வாகவும் இலங்கைத் தமிழர் வாழ்விடங்கள் புனைவுவெளிகளாக அதிகம் எழுதப்பட்டுள்ளன. எழுதப்பெற்றுள்ள வெளிகள் வெறும் இடங்களாக எழுதப்படாமல் கொண்டாட்டமான - அமைதியான வாழ்க்கையைக் கொண்ட பண்பாட்டு வெளிகளாக எழுதப்பெற்று அவை தொலைந்து போய்விட்டன எனக் கசிந்துருகும் மனநிலையைப் பாத்திரங்களின் நினைவுகளாகவும் ஆசிரியர்களின் கூற்றுகளாகவும் வாசிக்க முடிகிறது. 
பேரினவாத அரசுக்கும் மொழிச்சிறுபான்மை மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போராட்டங்களையும், பின்னர் ஆயுதந்தாங்கிய போரையும் நடத்திய போராளிக்குழுக்கள் - பின்னர் ஒற்றைப் போராளிக்குழுவாக மாறிய விடுதலைப்புலிகளின் போர்க்களம் பற்றிய நினைவுகளினூடாக நாவலாசிரியர்கள், இலங்கைத் தீவின் தமிழர் பிரச்சினையின் அனைத்து உட்கூறுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். ஈழமையவாதம், கிழக்கு மாகாணத்தை இணைத்து உருவாக்கக் கூடிய தமிழ்நிலப்பரப்பு, மலையகத்தமிழர் வாழ்வுரிமை, சமய அடிப்படையில் தங்களைத் தனியான இனமாக நினைக்கும் இசுலாமியர்கள் வாழ்வுரிமை என அனைத்தும் இந்நாவல்களின் சொல்லாடல்களாக மாறியிருக்கின்றன. அச்சொல்லாடல்களின் கவனம் அந்நிய தேசங்களுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் உழல்தல் வாழ்வாகவும், தேசந்தொலைத்த மனமாகவும் வாசிப்பவர்களிடம் வந்துசேர்கின்றன.

மொழிப்பயன்பாடு இலக்கு நிறைவேற்றமும் 
சொந்த நிலத்தைத் தொலைத்து அச்சமும் புதிர்த்தன்மையும் நிரம்பிய அந்நிய வெளி வாழ்க்கையைத் தந்த போர்க்காலத்தை எழுதும் நாவலாசியர்களின் பனுவல்களுக்குப் பலவிதமான நோக்கங்கள் உண்டு. அவற்றையும் மூன்று விதமாகப் பகுத்துக் கூறலாம். அப்பகுப்பு பனுவலாசிரியர்களின் மொழிப்பயன்பாட்டோடு தொடர்புடையது. 
எந்தவொரு மொழியிலும் வணிகம் மற்றும் மிகையுணர்ச்சி எழுத்திலிருந்து தீவிர எழுத்து விலகும் முக்கியமான ஓரிடத்தை, வாசகப்பரப்பைப் பற்றிய கவனம் அல்லது கவனமின்மை என்ற சொல்லால் குறிப்பிடலாம். வணிக எழுத்தாளர் ஒவ்வொரு வாக்கியத்தை எழுதி முடிக்கும்போதும் அதன் இலக்குவாசகர்களின் (Target readers) வாசிப்புத்திறன் அல்லது திளைப்பிலாழ்த்தும் உத்தி பற்றிய கவனத்துடன் எழுதுகிறார். ஆனால் தீவிர எழுத்தாகத் தனது எழுத்தை நினைக்கும் ஒருவர் அப்படியான கவனத்தை வைத்துக்கொள்வதில்லை. ஒருவிதத்தில் தீவிர எழுத்து வாசகப்பரப்பை மறந்துவிட்டு எழுதும் எழுத்து. வணிக எழுத்தாளரைப் போல ஒவ்வொரு வாக்கியத்தையும் வாசகர்களை நினைத்துக்கொண்டு எழுதுவதில்லை. அந்தவகையில் வாசகக் கவனமின்மை எழுத்தாக இருந்தாலும், அந்த எழுத்து உருவாக்கும் அடிப்படைக் கட்டுமானங்கள் வாசகப்பரப்பையும் வாசகத் தளத்தையும் உருவாக்க மறப்பதில்லை. எழுதப்படும் மொழிப் பயன்பாட்டின்வழியே தீவிர எழுத்து வாசகத் தளத்தைப் பலபடித்தானதாக உருவாக்கிக்கொள்ளும். 
இங்கே வாசிக்கப்பட்டுத் தொகுத்துக்கொள்ளப்பட்ட 12 பிரதிகளிலும் ஒரேவிதமான வாசக இலக்கு இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. இருக்கவும் முடியாது. இந்நாவல்களின் மொழி பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களின் பொதுமொழியாகவும் பேச்சுமொழியாகவும் இருக்கிறது. பேச்சு மொழிக்குள்ளும் இலங்கையின் பிரதேச வேறுபாடுகள் -யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத்தமிழ் போன்றவைகளும் அவற்றுக்குள்ளிருக்கும் வட்டார வேறுபாடுகளும் - இருக்கின்றன என்பதை இலங்கைக்கு வெளியிலிருக்கும் ஒரு தமிழ் வாசகனாக உணரமுடிகிறது. 
பொதுமொழி, பேச்சுமொழி என்ற இரண்டுநிலை கொண்ட தமிழ் போன்ற மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் பேச்சுமொழியைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் எழுத்துகளுக்கு நம்பகத்தன்மையை உருவாக்க முயல்கிறார்கள். உருவாக்கப்படும் பாத்திரங்கள் உண்மையின் சாயல் கொண்டவை; இந்தக் காலகட்டத்தில், இந்தவெளியில் வாழ்ந்தவர்கள்; இவர்கள் இத்தகைய போர்க்களத்தில் இப்படியான நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்; அழிந்தார்கள்; அகன்றார்கள் எனச் சொல்வதோடு இன்னும் தொடர்கிறது அந்தத் துயரம் என்பதை நம்பும்படி செய்வது அதன் முதன்மையான நோக்கம். அதைக் கச்சிதமாகச்செய்வதற்கு நாவலாசிரியர்கள் கையாண்டுள்ள கருவி பேச்சுமொழி. மூன்றுவகைப்பட்ட நாவல்களிலும் பேச்சுமொழியைக் கையாண்டுள்ள நாவலாசிரியர்கள் அதன் மூலம் தங்கள் பனுவல்களை ஆவணப்பதிவுகளாக ஆக்கமுயன்றுள்ளனர். பேச்சுமொழியை இணைக்கும் பொதுமொழிக்கு ஆசிரியரின் பார்வையையும் விமரிசனத்தையும் முன்வைக்கும் ஆற்றல் உண்டு. இப்பன்னிரண்டு பனுவலின் ஆசிரியர்களும் வேறுபட்ட இவ்விரு மொழிக்கூறுகளையும் பயன்படுத்தத் தவறவில்லை

இந்த ஆவணப்பதிவுகளை நேரடியாக வாசிக்கும் வாசகர்கூட்டம் மூன்று வகைப்பட்ட தமிழ்க்கூட்டம். முதல் வகைக்கூட்டத்தினர் இன்னும் இலங்கைத் தீவில் வாழும் தமிழ்மக்கள். இரண்டாம் வகையினர் இலங்கையிலிருந்து வெளியேறி உலகநாடுகள் பலவற்றிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள், மூன்றாம் வகையினர் பேசும் மொழியால் உறவுநிலை பேணும் இந்தியத்தமிழர்களும், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து குடியேறி மலேசியத் தமிழர்களாகவும், சிங்கப்பூர்த் தமிழர்களாகவும் ஆகிவிட்ட கூட்டம். இம்மூவகைத் தமிழ்க் கூட்டத்தினரும் இந்தப் போர்க்காலத் தமிழ்ப் புனைகதைகளின் நேரடிவாசகர்கள்/இலக்குவாசகர்கள் என்றாலும் அவர்களிடம் இப்புனைகதைகள் உருவாக்கும் உணர்வும் மனநிலையும் ஒன்றாக இருக்கமுடியாது. 

முதல் வகையினரான இலங்கையில் வாழும் தமிழர்கள் இந்நாவல்களின் நிகழ்வுகளைத் தாங்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தகவல்களாக வாசித்துத் திரும்பவும் அத்தகைய நிகழ்வுகள் வேண்டுமென்றோ! வேண்டாமென்றோ முடிவு எடுக்கக் கூடும். தனிநாடு கோரிக்கையின் நியாயங்களும் அதன் வழி கிடைக்கக் கூடிய விடுதலையின் சாத்தியங்களும் திரும்பவும் உணரப்படும் நிலையில் போர்க்காலத்தை உருவாக்கும் வேலையை இந்நாவல்கள் செய்யக்கூடும். ஆனால் 11 நாவல்களிலும் போர்க்கால நிகழ்வுகள் விவரிக்கப்பட்ட விதமும் விசாரணைகளும் இன்னொரு போரை இலங்கைத் தமிழர்கள் விரும்புவதற்குத் தூண்டக்கூடியன அல்ல என உறுதியாகக் கூறலாம். போரின் தேவைகள் இருந்தபோதிலும் ஏற்பட்ட அழிவின் கணமும், அலைக்கழிப்பின் ஆழமும் எல்லாருடைய எழுத்திலும் தூக்கலாகவே நிற்கின்றன. 

இரண்டாவது வகையினரான புலம்பெயர் இலங்கைத்தமிழர்களை, நேரடியாக யுத்த களத்தில் நிற்காமல் ஓடிவந்தவர்கள் என்ற குற்றவுணர்வுக்குள் தள்ளக்கூடும். அதன் காரணமாகவும், புலம்பெயர் தேசங்களில் உருவாகும் அச்சவுணர்வும் அந்நிய வாழ்க்கையும் தங்களுக்கான நாடொன்று இருந்தால் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம் என்ற நினைப்பை உருவாக்கலாம். ஆனால் அந்த நினைப்பை உருவாக்கும் கூறுகளையும் இப்புனைவுகள் தன்னகத்தோ கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பற்ற வாழ்க்கையும் பொருளாதார நிலையில் குறைந்தபட்ச வாழ்க்கைக்கான உத்தரவாதமும் இலங்கையென்னும் நாட்டிற்குள் இல்லை; அது உருவாகும் சூழலும் இல்லை என்பதை உறுதியாகக் கூறியுள்ளன விவரிப்புகள். போருக்கு முந்திய வாழ்க்கையைவிடக் கூடுதலான ஆதிக்க உணர்வும் உரிமை மறுப்புகளும் இலங்கைக்குள் தொடர்கின்றன என்பதை இந்நாவல்கள் விவரித்துள்ளன. இதனால் புலம்பெயர் இலங்கையர்கள், அந்நிய நிலங்களில் கிடைக்கும் பொருளாதார நலவாழ்வை ஏற்றுக் கொண்டுச் சொந்த நாட்டுக்குத் திரும்புதலைத் தள்ளிப்போடும் மனநிலையை அதிகப்படுத்தக் கூடும். இந்தப் பொதுப்போக்கிலிருந்து சிறிது விலகலைச் சோபா சக்தியின் புனைவில் காணமுடிகிறது. முந்திய நிலையிலிருந்து மாறுதல் தெரிகிறது என்பதான நிலைபாட்டை முன்வைக்க முனைகிறார். 

மூன்றாவது வகைத் தமிழ் வாசகர்களான இந்தியத் தமிழர்கள் வழக்கம்போல இவ்வளவு குரூரமான கொலைகளையும் வன்முறையையும் பக்கத்து நாட்டில் தம் மொழிபேசும் மக்கள் அனுபவித்துள்ளார்கள். ஆனால் அதைத் தட்டிக்கேட்கும் வகையற்றவர்களாக நாம் இருந்துள்ளோம் என்ற இரக்கவுணர்வோடும், குற்றவுணர்வோடும் வாசிப்பார்கள். தனிமனிதர்களாக அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதால், அவர்களின் உரிமைகளைக் காக்கும் அமைப்பாக விளங்கும் அரசுகளிடம் கோரிக்கை எழுப்புவார்கள். இது நீண்டகாலமாக நடந்த நிகழ்வுகள் என்பதால், இப்பிரதிகள் வெறும் வாசிப்புக்கான பிரதிகளாக மட்டுமே கருதப்படும் வாய்ப்புகளும் உண்டு. மலேசிய, சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கைக்குள் இப்பிரதிகள் விவரிக்கும் வாழ்க்கைக்கு எவ்வகையான அர்த்தங்கள் இருக்கும் என்பதை அச்சூழலில் வாழும் ஒருவர்தான் சொல்ல முடியும். இதுவரையிலான எனது அனுபவத்தில் அந்நிலப்பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களைப் புறமொதுங்கிய தமிழர்களாக நினைக்கும் மனநிலையில் இருப்பவர்கள் என்றே கணக்கிட்டுள்ளேன். இந்தப் பிரதிகள் அவர்களால் வாசிக்கப்பட்டால், அதில் சிறிய மாற்றங்கள் உருவாகலாம். நலவாழ்வுக்கான நிதியுதவி போன்றன கிடைக்கும் சாத்தியங்களைக் கூடுதலாக்கலாம். 
இம்மூவகைத் தமிழ் வாசகக்கூட்டத்தைத் தாண்டி, இந்நாவல்கள் மொழிபெயர்ப்புகளின் வழியாகச் சர்வதேச வாசகர்களிடம் செல்லவேண்டியன என்பதையும் நாவலாசிரியர்கள் உணர்ந்துள்ளனர். அவ்வுணர்தல் காரணமாகவே போர்க்காலத்தில் போரை விரும்பிய இருதரப்பார் மீதும் விமரிசனங்களை முன்வைத்துள்ளனர். அரசதிகாரம் சிறுபான்மைத் தமிழர்கள் மீது - சொந்த நாட்டு மக்கள்மீது போரைத் திணித்தது என்பது தொடங்கி, சமாதானத்தை விரும்பாது நீண்ட காலம் போரை நீட்டித்ததில் அரசதிகாரத்தின் இனவாதத்தன்மைக்கு முக்கியப் பங்குண்டு என்பதை நாவல்களின் உரையாடல்களும் ஆசிரிய கூற்றுகளும் உறுதி செய்கின்றன. அதே போல் சர்வதேச அளவில் ஆயுதந்தாங்கிப் போராடிய விடுதலைக் குழுக்களின் அனுபவங்கள் எதையும் உள்வாங்காமல், எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ அவர்களை அரசியல் மயப்படுத்தாமல், போராளிகளை மட்டுமே தயாரித்த அமைப்பாக விடுதலைப்புலிகளை விமரிசிக்க நாவலாசிரியர்கள் தவறவில்லை. அப்பாவிகளும் பெண்களும் சிறார்களும் வன்மையாகப் போரில் ஈடுபடுத்தப்பட்ட நிலைப்பாடுகள் தொடங்கி, எல்லாவற்றையும் ஆயுதத்தால் முடிவு செய்யலாம் என்ற நம்பிக்கையையும், அமைப்பிற்குள் மாற்றுக்குரல்களை அனுமதிக்காமல், எதிரிகளாக மாற்றுதல் அல்லது தீர்த்துக்கட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன. மாறிவிட்ட போர்ச்சூழல், அண்டைநாடுகளின் ஒன்றிணைவு, சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டுதலைத் திசைதிருப்பிவிடுதல் போன்றன நடந்தன என்ற விவாதங்களையெல்லாம் இந்தப் புனைகதைகளின் பிரதிகள் அதனதன் கட்டமைப்புக்கும் இயங்குவெளிக்கும் ஏற்ப உள்ளடக்கியுள்ளன. 
இத்தகைய உள்ளடக்கத்தில் யாருடைய பிரதி வலிமையாகச் செய்திருக்கிறது; யாருடைய பிரதி நீக்குப்போக்கோடு எழுதப்பட்டிருக்கிறது; யாருடைய அனுபவங்கள் வெறும் போர்க்கள அனுபவங்கள்; யாருடைய அனுபவங்கள் இலக்கியவியலைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட அனுபவங்களைச் சொல்லும் கதையாடலாக இருக்கிறது என்பதெல்லாம் தனியொரு ஆய்வு. அந்த ஆய்வின் வழி இப்புனைகதையாசிரியர்களின் இலக்கியத்திறனை மதிப்பிடலாம். அதற்கு மாறாக விடுதலைப்போராட்டத்தின் ஆதரவாளர் அல்லது எதிரி அல்லது துரோகி என்ற முத்திரைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. அப்படிச் செல்வது இலக்கியப் பிரதியை வாசிக்கும் முறைக்கு மாறான மனநிலை. அதிலும் புனைகதை போன்ற நம் காலத்தின் இலக்கிய வடிவத்தை வாசிக்க உதவும் நவீனத்துவ மனநிலைக்கு முற்றிலும் மாறானது. அப்படியான ஒரு ஆய்வு நடத்தப்படவேண்டும். அந்த ஆய்வு, இந்த நாவல்களில் யாருடைய பிரதிகளெல்லாம் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டிப் பார்த்து, ஈழத்திற்கான யுத்தகாலத்தையும் அதன் நியாயப்பாடுகளையும் சொல்லக்கூடியன என்பதையும் கண்டு சொல்லும். அப்படிச் சொல்வதற்கான அனைத்துக் கூறுகளும் இந்த நாவல்களின் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு வடிவத்திலும் சொல்முறையிலும் இருக்கின்றன என்பது மட்டுமே இந்தக் கட்டுரை இப்போது சொல்லும் முடிவு. 
=============================================================== 
உதவிய நூல்கள் 


· Barry Peter, Beginning Theory-An Introduction to Literary and Cultural theory, First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995) 
· DON MITCHEL , CULTURAL GEOGRAPHY – A CRITICAL INTRODUCTION, Blackwell Publishing,350 Main Street,Malden,MA 48-5020,USA.021, 2000 I.B.TAURIS&C 
· CULTURAL GEOGRAPHY – A CRITICAL DICTIONARY OF KEY CONCEPTS, Edited by DAVID ATKINSON, PETER JACKSON, DAVID SIBLEY & NEIL WASHBOURNE 
குறிப்புகள் 
Carl Sauer's Legacy 
During his 30 years at U.C. Berkeley, Carl Sauer oversaw the work of many graduate students who became leaders in the field and worked to spread his ideas throughout the discipline. More importantly, Sauer was able to make geography prominent on the West Coast and initiate new ways of studying it. The Berkeley School's approach differed significantly from the traditional physical and spatially oriented approaches and though it is not actively studied today, it provided the foundation for cultural geography , cementing Sauer's name in geographic history. 
[http://geography.about.com/od/historyofgeography/a/carlsauer.htm] 
Carl Ortwin Sauer (December 24, 1889 – July 18, 1975) was an American geographer. Sauer was a professor of geography at the University of California at Berkeley from 1923 until becoming professor emeritus in 1957 and was instrumental in the early development of the geography graduate school at Berkeley. One of his best known works was Agricultural Origins and Dispersals (1952). In 1927, Carl Sauer wrote the article "Recent Developments in Cultural Geography," which considered how cultural landscapes are made up of "the forms superimposed on the physical landscape." 


=============================================================== 
## பண்பாட்டு நிலவியல்: சில குறிப்புகள் 
பண்பாட்டு நிலவியல் புலம், அமெரிக்காவிலுள்ள பெர்க்லி நகரத்துக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கார்ல் சாசரின் பொறுப்பில் முக்கியத் துறையாக வளர்த்தெடுக்கப்பட்டது. அவர் நிலவெளிகளைப் பண்பாட்டின் அலகுகளாகப் பார்க்கும் பார்வையை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதி, “பண்பாடு, நிலவெளிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு தூரம் உண்மையானது நிலவெளிகள் பண்பாடுகளால் உருவாக்கப்படுகிறது என்பதும்” எனக்கூறியுள்ளார். இயல்பியல் நிலவியலில் முக்கிய நபராகக் கருதப்படும் அவரது கூற்றும், பணிகளும் பண்பாட்டு நிலவியலை எண்ணிக்கை அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படிப்புத் துறையாகக் கருதாமல் தரம்சார்ந்த படிப்புத் துறையாக ஆக்கி இருக்கிறது. அவரது நூலில் இடம்பெற்றுள்ள இயல்களின் தலைப்புகளை இங்கே தருகிறேன். அவற்றை வாசிக்கும்போது அவர் நிலவியலைப் பண்பாடு, கலை இலக்கியப் பிரதிகளோடு இணைத்துப் பேசுபவர் என்பது புரிய வரலாம். 
1. பண்பாடு : வரையறைகளை உருவாக்குதலின் பிரச்சினைப்பாடுகள் 
2. பூமியின் முகத்தை மாற்றுதல் பற்றி 
3. குறியீட்டு நிலவெளி 
4. இலக்கிய நிலவெளி 
5. தன்னிலையும் பிறவும் 
6. உருவாக்கப்படும் பன்முகச் சூழல்கள் - (திரைப்படம், தொலைக்காட்சி, இசை) 
7. இடமா?அல்லது வெளியா? 
8. நுகர்பொருள் மற்றும் நுகருதலின் நிலவியல்கள் 
9. உற்பத்திகளின் பண்பாடு 
10. கலந்துகட்டிய இந்த உலகத்தில் தாய் நாடுகளும் அன்னை பூமிகளும் 
11. அறிவியலின் பண்பாடுகள் - மொழியாக்கமும் அறிவும். 
நிலவியல் (Geography) என்பது தொடக்க நிலையில் சமூக அறிவியலின் ஒரு பிரிவாக அறியப்பட்டது. பூமிப்பரப்பின் இருப்பு, அவற்றை உருவாக்கும் தட்ப வெப்பநிலை, அதன் விளைவுகளால் ஏற்படும் சூழல் மாற்றங்கள், தாவரங்கள் குறித்த அறிவு, உயிரினங்களின் வாழ்க்கை முறை, அவற்றை மனிதர்கள் தங்களுக்கானதாக மாற்றும் முறைகள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என நிலவியல் புதிய பரிமாணங்களை அடைந்து வருகிறது. இதன்மூலம் சமூக அறிவியல் துறை என்பதிலிருந்து விலகி இயற்பியல் துறையோடும் சூழலியல் துறையோடும் உறவுகொண்டு விரிவடைவதை மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன 
புவிபரப்பின் பல்வேறு நிலவெளிகளின் (Landscape) இயல்புநிலையை விளக்கும் நிலவியல், புவியை வாழும் இடமாகவும், வாழிடங்களைச் சார்ந்த இடமாகவும் விளக்குகிறது. மனிதர்கள் குறிப்பிட்ட நிலவெளிகளில் தொடர்ச்சியாக வாழத் தொடங்கும்போது அந்த வெளி சார்ந்து பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் உருவாகின்றன. அவையே தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் போது பண்பாட்டுக் கூறுகளாக மாறுகின்றன. இந்த வகையில் பண்பாட்டுக் கூறுகள் குறிப்பிட்ட நிலவெளிகளோடு பின்னிப்பிணைந்து அந்நிலவெளிகளுக்குக் குறிப்பான அடையாளங்களைத் தருகின்றன. நிலவெளியின் குறிப்பான அடையாளங்களை மனிதர்கள் தங்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய அடையாளமாகக் கட்டமைக்கின்றனர். 
மனித வாழ்க்கைக்குப் பயன்படும் வெளிகள் பல்வேறு விதமானவை. அவற்றை நிரந்தரவெளிகள் (Permanent Space) எனவும் தற்காலிக வெளிகள் (Temporary Space) எனப் பிரிக்கலாம். ஒரு மனித உயிரியின் நிரந்தர வெளியின் மிகச் சிறிய கூறு குடியிருப்பு. தமிழில் வீடு, மனை, இல்லம் போன்ற சொற்களால் குறிப்பிடப்படும் குடியிருப்பு ஒவ்வொரு பண்பாட்டுக்கூறுகளாலும் அர்த்தப்படுத்தப்படுகிறது. குடும்பம் என்கிற சமூக நிறுவனத்தின் நிரந்தர வெளியே இல்லம். இல்லம் தனிநபருடைய இருப்பிடமன்று; குடும்பமாக வாழ்தலின் அடையாளம். ஆணும் பெண்ணும் இணைந்து தங்களுடைய வாரிசுகளை உற்பத்தி செய்வதற்காகத் தங்கியிருக்கும் விதமாக இல்லம் என்னும் வெளி அடையாளப் படுத்தப்படுகிறது. இல்லம் என்னும் ஒரு புவிப் பரப்பு, குடும்பம் என்னும் சமூகநிறுவனத்தோடு இணைகிறபோது பண்பாட்டு வெளியாக மாறுகிறது. இந்த எடுத்துக்காட்டின் வழியாக நிலவியல், பண்பாட்டு நிலவியலாக மாறுவதை விளங்கிக் கொள்ளலாம். இல்லம் என்னும் நிரந்தர அடிப்படைப் பண்பாட்டு வெளியைப் போலவே, இல்லங்களால் உருவாக்கப்படும் தெருக்கள், தெருக்களால் உருவாக்கப்படும் ஊர் அல்லது நகரம், ஊர் மற்றும் நகரங்களைக் கொண்ட மாநிலம், மாநிலங்களின் தொகுதியான நாடு என ஒவ்வொன்றும் பண்பாட்டு வெளிகளாக விரிகின்றன;மாறுகின்றன. மாறும் நிரந்தரமான நிலவெளிகளைத் தனிமனிதனும் கூட்டமும் உரிமையாகவும் உடைமையாகவும் கருதுகின்றன. அவையே நிரந்தரமான பண்பாட்டு வெளிகளை உருவாக்கும் என்பதை இதனோடு இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். 
நிரந்தரமான நிலவெளிகளைப் போல மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான தற்காலிக நிலவெளிகளும் உள்ளன. நமது சமகாலத்தில் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் நிரந்தர வெளிகளோடும், தற்காலிக வெளிகளோடும் உறவு கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பண்பாட்டு நிலவியல் மையப்படுத்துகிறது. நிரந்தர வெளியான இல்லத்திலிருந்து அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக தற்காலிக நிலவெளிகளுக்குச் சென்று வரவேண்டியவர்களாகச் சமகால மனிதர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கல்வியின் பொருட்டுப் பள்ளி, கல்லூரி,பல்கலைக்கழகங்கள் போன்ற தற்காலிக வெளிகளுக்கு போய்வர வேண்டியுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைப் பெறும்பொருட்டு, பணியிடங்களான அலுவலகங்கள், தொழிற் சாலைகளுக்கும் சென்றுவர வேண்டிள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இவை போலச் சிறியதும் பெரியதுமான தற்காலிக வெளிகளுக்குள் மனிதர்கள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருக்கின்றனர். இவ்வாறு நுழைந்து வெளியேறுவதன் மூலமாகக் குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் மனிதர்கள் தற்காலிக வெளியில் இயங்கும் தற்காலிக உறுப்பினர்களாக மாறி, திரும்பவும் குடும்ப உறுப்பினர்களாக மாறுகிறார்கள். இதன்மூலம் நிரந்தர நிலவெளி உருவாக்கும் பண்பாட்டுக் கூறுகளோடு, தற்காலிக நிலவெளி உருவாக்கும் பண்பாட்டுக் கூறுகளும் தாக்கம் கொள்கின்றன என்பதைப் பண்பாட்டு நிலவியல் விரிவாக விளக்குகிறது. 
மனிதர்களே விரும்பி நுழைந்து- திரும்பும் தற்காலிக நிலவெளிகளான கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் போன்றவை மட்டுமல்லாமல் சுற்றுலாத்தலங்கள், கோயில்கள்,ஓய்வுக்கான பூங்காக்கள், கடற்கரைகள், கலைகளின் இயங்கு வெளிகளான அரங்குகள் போன்றனவும் தற்காலிக வெளிக்குள்ளேயே அடங்கும். மனிதர்களின் விருப்பமின்றிச் சில நேரங்களில் காவல் நிலையங்கள், சிறைகள் போன்ற நிலவெளிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுண்டு. குடும்பம் என்னும் சிறு சமூக அமைப்பின் மறுதலையாக அரசு என்னும் அமைப்பைப் பெரும் நிறுவனமாகச் சொல்லலாம். மொத்த சமூகத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அதற்கு உண்டு. அதற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்காகக் கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், மருத்துவ மனைகள் போன்றவற்றை உருவாக்கித் தரும் அரசு, கட்டுப்படாத மனிதர்களுக்காகச் சில தற்காலிக நிலவெளிகளை உருவாக்கி வைத்துள்ளன. காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் போன்றவற்றை அத்தகைய நிலவெளிகளாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிலவெளிகளுக்குள் சென்று வர வேண்டிய மனிதர்களோடும், சில வகையான பண்பாட்டு அடையாளம் ஒட்டிக் கொள்ளும். அடையாளமாகிவிடும்.






























================================== 
2016, மே, 6,7 தேதிகளில் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. கருத்தரங்கின் பொதுத்தலைப்பு: 
சாட்சியமாய்த் தங்குதல்:புலப்படா வன்கொடுமையும் பேசமுடியாக் குற்றங்களும். அமர்வின் தலைப்பு:முரண்பாட்டின் இலக்கியங்கள் 


கருத்துகள்

simproduction இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு விரிந்த பார்வையை முன்வைத்திருக்கின்றீர்கள்.
மிகப் பொறுமையாக வாசிக்கும் போது உங்கள் உரையைச் செவிமடுப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. ஒரு கட்டுரை பஎக்கின்றோம் என்று தோன்றவில்லை.
எனது ஆர்வத்திற்கு அப்படித் தோன்றியதோ தெரியாது.
வாழ்த்துக்கள்.
-முஸ்டீன்-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்