May 15, 2016

சோ.தர்மன்:நிலவியலில் நிறுத்திய எழுத்து

என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.

எழுத்தாளர் -சமூகச் சூழல் என்ற இரண்டுக்குமான உறவும் முரணும் விசித்திரமானது. எழுத்தாளருக்கான தரவுகளைத் தருவது அவரைச் சுற்றியுள்ள மனிதர்களும், அம்மனிதர்களின் வாழ்விடங்களான நிலவியலும், வாழும் காலமும்தான். அவற்றினால் உந்துதல் பெற்ற எழுத்தாளர் அவற்றைத் திருப்பியொரு கோணத்தில் எழுதுவதன் மூலம் படைப்பாளியாக மாறுகிறார். படைப்பாளி உருவாக்கித் தந்த பனுவல்களில் தன்னையும் தன்னையொத்த மனிதர்களின் குறியீடுகளையும் கவனிக்கும் மனிதர்கள் வாசகர்கள் ஆகிறார்கள். வாசகர்களின் சிந்தனை மற்றும் கருத்து திரட்டப்பட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை எழுதிய எழுத்தாளர்களைத் தங்களோடு இணைத்துக்கொண்டு கொண்டாடுகிறது வாசகர்கூட்டம். அதே வாசகர்கூட்டம், தங்களை எழுதவில்லையென்றோ, தங்களையொத்த மனிதர்களின் நிலையைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லையென்றோ முனகல்களையும் விளக்கங்களையும் சொல்லும்போது விமரிசனம் பிறக்கிறது.
விமர்சனம் வாசகர் கூட்டத்தை ஓரளவு வழிநடத்தவும் செய்கிறது. ஒவ்வொரு காலகட்ட எழுத்தையும் சமூக இயக்கத்தின் மையவிசையால் அடையாளப் படுத்தப்பார்க்கும்  விமர்சகர்களால் வழிநடத்தப்படுகிறது வாசகக் கூட்டம். அது எல்லாவற்றையும் ஏதாவது ஒரு வரையறைக்குள் வைத்துப் புரிந்துகொள்வதை விரும்புகிறது. எதையும் புரிந்து கொள்வதற்கு அதுதான் எளியவழி என்பதால் அதனைத் தவறெனச் சொல்லமுடியாது. தமிழ் இலக்கியப் போக்கில் 1990-களின் மையவிசைப் போக்காக இருந்த தலித் எழுச்சியோடு இணைத்துப் பேசத்தக்க கூறுகள் ஏதாவது ஒன்று ஒரு பிரதிக்குள் இருந்தால் போதும், அப்பிரதியைத் தலித் பிரதியென முத்திரையிட்டுக் கொண்டாடுவதாக நகர்ந்தது அந்தக் காலம். ஆனால் சோ.தர்மன் அப்போதிருந்தே அத்தகைய கொண்டாட்டத்தை ஏற்கவில்லை; நிராகரித்தே வந்தார். கடந்த கால் நூற்றாண்டுக்காலமாகச் சிறுகதை, நாவலெனத் தமிழ்ப் புனைகதைப்பரப்பில் இயங்கிவரும் சோ.தர்மனை வாசகர்களும் விமர்சகர்களும் தலித் எழுத்தாளர் என்ற வகைப்பாட்டிற்குள் சொல்லிப்பார்த்தார்கள். அப்படிச் சொன்னதை- சொல்லப்பட்டதை அவர் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. இப்படிச் சொல்பவர்கள், எனது எழுத்துக்களின் அனைத்துக்கூறுகளையும் கண்டு கொண்டவர்கள் அல்ல என்று மறுத்தே வந்துள்ளார்.

சோ.தர்மன். 2000 -க்குப்பின் தமிழில் எழுதப்பெற்ற நாவல்களில் மிகமுக்கியமான நாவலான கூகையை வாசித்தபொது, அவரது இந்தவாதம் உண்மையானது என்றே உணர்ந்தேன். பின்னர் அவரது சிறுகதைகளை ஆய்வு செய்யும்படி எனது மாணவிகளைக் கேட்டுக்கொண்டு நானும் வாசித்துப் பார்த்தபோது அவரது கூற்று மிகவும் சரியானது என்று உணர்ந்துகொண்டேன். அவரைத் தலித் எழுத்தாளர் எனச் சொல்வது முழுவதும் பொருத்தமானது அல்ல . தலித் எழுத்து என்பது எழுத்தின் மிக முக்கியக் கூறுகளான முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பொருண்மைகளையும் முதன்மையாகக் கருதி உருவாக்கிய வரையறை அல்ல. காலமும் இடமும் முதன்மைப் படுத்தப்படாமல் பாத்திரங்களை முதன்மையாகக் கருதிய வரையறை. 
ஒரு எழுத்தாளரால் எழுதப்படும் பனுவல்களில் இந்திய சாதி அடுக்கில், ஆகக்கடைசியிலும் இல்லாமல் வெளியே ஒதுக்கப்பட்ட மனிதர்கள் அதிகம் இடம்பெறும் நிலையில், அந்த எழுத்தைத் தலித் எழுத்து என வகைப்படுத்தினர். சோ.தர்மனின் கதைகளில் பாதிக்கும் மேலான கதைகளில் இடம்பெறும் பாத்திரங்கள் அத்தகைய ஒதுக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மனிதர்களே என்றாலும், அவர்களின் வலியும் சோகமும் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று சொல்லிவிட முடியாது. தனக்கு முன்னால், கரிசல் வட்டார நிலவியலில் உழைக்கும் மனிதர்களான விவசாயிகளையும், விவசாயத்தின் துணைத்தொழிலில் ஈடுபட்டவர்களையும் புதிதாக வந்த தீப்பெட்டித்தொழிலில் உழன்றவர்களையும் எழுதிய பா.செயப்பிரகாசம், பூமணி, ச.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் எழுதிய மனிதர்களையே சோ. தர்மனும் எழுதினார். ஆனால் அவரால் எழுதப்பெற்ற மனிதர்களெல்லாம் வாழிடத்தால், சாதி அடுக்கின் அதிகாரம் ஒதுக்கிவைத்த நிலவியலாக இருந்தன என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.

கோவில்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் வாழும் இந்த மனிதர்களின் - ஒதுக்கப்பெற்ற மனிதர்களின் இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வியை வாசிப்பவர்களிடம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கும் கதைகள் அவரது கதைகள். மொத்தக் கதைகளையும் வாசித்து அவரை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாத வாசகர்களுக்காகப் பத்துக்கதைகளைத் தேர்வுசெய்து தருகிறது அம்ருதா பதிப்பகம். இந்தப் பத்து கதைகளில் வரும் விசாரணைகள் எளிய மனிதர்கள், தாங்கள் வாழ நேர்ந்த காலத்தையும், நிலவியல் வெளியையும் நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துபவர்கள். ஒவ்வொரு கதையையும் விளக்கிச் சொல்வது வாசகர்களைத் தடுத்துவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 
நீங்கள் வாசித்துப் பாருங்கள். சோ.தர்மனின் எளிய கதைசொல்லல் உத்தி உங்களை அதற்குள் இழுத்துக்கொள்ளும். அந்த மனிதர்களைப்பற்றி நீங்கள் நினைத்துப்பார்ப்பீர்கள். அந்தக் கதாபாத்திரங்களைப் பற்றிமட்டுமல்ல. அவர்களையொத்த மனிதர்களை நீங்கள் சந்திக்கும்போதும் சோ.தர்மன் நினைவில் வருவார். அதுதானே எழுத்தின் திறன். 

No comments :