April 27, 2016

இரண்டு புத்தகங்கள்

செல்வா கனகநாயகம் தொகுத்துள்ள இத்தொகுப்பிற்கு அவர் வைத்துள்ள பெயர் வேரோடு பிடிங்கப்பெற்ற பூசணிக்கொடி (Uprooting the Pumpkin -Selections from Tamil Literature in Sri Lanka edited Chelva Kanaganayakam Oxford University Press). 
இத்தொகுப்பில் அரைநூற்றாண்டுக்கால இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கவனிக்கத்தக்க பதிவுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிற்றி பிரஸின் வெளியீடான இத்தொகுப்பு உலகமனச்சாட்சியை நோக்கிப்பேசும் தன்மைகொண்ட தொகுப்பு. தொகுப்பாசிரியர் வைத்த ஆங்கிலச் சொற்களை நேர்பொருளில் அப்படியே மொழிபெயர்த்து ஏற்றுக்கொள்ள என் மனம் விரும்பவில்லை. ஏனென்றால் சூழல் தந்துள்ள அர்த்தம் வேறொன்றாக இருக்கிறது.


கடுங்கோடையில் காற்றின் ஈரத்தை உறிஞ்சி வளரும் பூசணிக்கொடியின் வேர்கள் ஆழமாய்ச் சென்று நிற்பவையல்ல. தரையின் மேற்பரப்பில் கிடக்கும் மணற்பரப்பில் வேர்விட்டுத் தளைத்துப்பரவும் தன்மையுடையது. குப்பையின் பரப்பில் கிடைக்கும் இடைவெளியில்கூட வேர்விட்டுப் பரவிக்கிடக்கும் பூசணிக் கொடியைப்பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியப்பரப்பின் நீண்ட காலத்திற்குச் சொந்தம். அதன் வாழ்நாள் குறுகியது. அதனைப் பிடுங்கி இன்னொரு இடத்தில் நட்டு வளர்த்துவிடவும் முடியாது. ஒரு முறை பிடுங்கிவிட்டால் அப்படியே வாடி வதங்கிவிடும். ஆனால் தரும் விளைச்சலோ குண்டுகுண்டாய்ப் பெருங்காய்கள்; பெரும்பழங்கள். இந்த எண்ணத்தோடு தான் பேரினவாதம் சிறுபான்மைத் தமிழர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துவிட நினைத்தது. அந்தப்பொருளை உலகிற்குச் சொல்வதற்காகத்தான் செல்வா கனகநாயகம் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். ஆனால் பேரினவாத அரசு நினைத்தது அப்படியே நடக்கவில்லை. பூசணிக்கொடி தனது இயல்புக்கு மாறாகப் பிடுங்கியெறியப்பட்ட ஒவ்வொரு தேசத்திலும் தனது வேர்களைப் பரப்பித் தமிழர்களின் அடையாளத்தை -குரலை- பூசணிக்காய்களாகவும் பழங்களாகவும் விளைச்சலாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அந்த ஆங்கிலச் சொற்களை வேரறுத்து வேர்பிடிக்கும் பூசணிக்கொடி என மொழிபெயர்த்துச் சொல்லத்தோன்றுகிறது.
2009, முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவில் - ஆயுதப்போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் குண்டடிபட்டு மரணத்தைத் தழுவியதாக ஒரு படத்தைக் காட்டியதையடுத்து இலங்கைத் தமிழர்களின் போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இந்தியா உள்பட்ட அதன் ஆதரவு நாடுகளும்கூட அப்படியே நினைத்துக்கொண்டன. அரசுகளின் நினைப்பை மக்களும் ஏற்றுக்கொள்ளும்போது போர்க்காலம் முடிவுக்குவருகிறது. எந்தவொரு தேசத்திலும் விடுதலைப் போர்கள் தொடங்குவதற்கு முன்பு போராட்டங்கள் தொடங்கியிருக்கும். அந்தப் போராட்டத்தைத் தூண்டுவதாகவும், பதிவு செய்வனவாகவும் இருப்பன கலை இலக்கியப்பனுவல்கள்.

தனியீழப்போருக்கு முன்பு போராட்டத்தைப் பதிவுசெய்த பனுவல்கள் தமிழில் தனிநூல்களாகவும் தொகுப்புநூல்களாகவும் வந்துள்ளன. 11 ஈழத்துக் கவிதைகள் என்ற கவிதைநூலை அப்படிச் சொல்லலாம். அந்தத் தொகுப்பை நான் மாணவனாக இருந்த காலத்தில் வாசித்திருக்கிறேன். தொடர்ந்து பல தொகுப்பு நூல்கள் வந்துகொண்டே இருந்தன. இலங்கைக்குள் அச்சிடும், வெளியிடும் வாய்ப்புகள் குறைவு என்பதால் புலம்பெயர் நாடுகளைப் பதிப்புமுகவரியாகக் கொண்டு வெளியான தொகுப்பு நூல்கள் என்வசமே 20 க்கும் அதிகமாக என்னிடம் உள்ளன. உலகநாடுகள் பலவற்றிலும் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் போர்க்குணத்தைத் தக்கவைக்கவும், இருப்பைக் காட்டிக் கொள்ளவும் அவற்றை வெளியிட்டார்கள். புலம்பலாகவும், அச்சமாகவும், கையறுநிலையாகவும், தோல்வியாகவும் மட்டுமல்லாமல், கோபமாகவும், ஆவேசமாகவும்,வெற்றியாகவும் பதிவுசெய்து பரிமாறிக்கொண்டவை அவை.
போராட்டங்கள், போராக மாறித் தோல்வியில் முடிந்துபோனதால் போராட்டங்கள் முடிந்துபோவதில்லை. அவை வெவ்வேறு வடிவில் தொடர்ந்துகொண்டே இருக்கும். அதன் ஒருவடிவம் மொழிபெயர்ப்பு. தங்கள் மொழியில் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட கருத்துகளை -உணர்வுகளை- உலகமக்களுக்குச் சொல்வதன்மூலம் உலகத்தின் மனச்சாட்சியைக் கிளறமுடியும் என்ற நம்பிக்கை இதன் பின்னணிக்காரணம். உலகத்தின் கிளறப்பட்ட மனச்சாட்சி உலகளாவிய அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும். அதன்மூலம் ஒருதேசத்தின் அரசு நெருக்கடிக்குள்ளாகும். எனவே அதுவும் விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியே. செல்வா கனகநாயகம் தொகுத்துள்ள இத்தொகுப்பில் 24 கவிகளின் கவிதைகளும் 16 புனைகதைக்காரர்களின் கதைகளும் ஒரு நாடகமும் இடம்பெற்றுள்ளன.

==================================================
செல்வா கனகநாயகம், அண்மையில் 
மறைந்த இலங்கைத் தமிழ்க் கல்வியாளர். 
கனடாவில் தங்கியிருந்தார். 
ஒவ்வோராண்டும் கனடாவில் நடந்த 
தமிழியல் கருத்தரங்கின் முக்கியச்செயல்பாட்டாளர்.


முடிந்தபோன மாலைப்பொழுதுகளும்
தொலைந்துபோன வாழ்க்கையும்
-------------------------------------------------------------
LOST EVENINGS LOST LIVES என்ற தலைப்பில் லட்சுமி ஹோம்ஸ்ட்ராமும் சாஷ்சா எபலிங்கும்(Lakshmi Holmstrom & Sascha Ebeling) இந்த 49 கவிதைகளைத் தெரிவுசெய்து மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள். தமிழ்க் கவிதைகள் உலகக் கவிதை வாசகர்களுக்குக் கிடைக்கின்றன என்ற வகையில் மட்டுமே மகிழ்ச்சியானது. இ
ங்கிலாந்திலிருந்து ஏஆர்சி பதிப்பகம் (ARC Pnblications Ltd, UK, 2016 ) வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் இருக்கும் ஒரே ஒழுங்கு 1977 தொடங்கி 2015 வரையிலான 39 வருடங்களில் வந்துள்ள கவிதைகள் ஆண்டுவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் நடந்த தமிழீழப் போராட்டப்பின்னணியில் கவிதைகளைத் தேர்வுசெய்து ஆண்டுவரிசையில் அடுக்கும்போது ஆண்டுக்கொரு கவிதையாவது இடம்பெற்றிருக்கலாம். எந்த அடிப்படையும் இல்லாமல் 39 ஆண்டுக்காலத்தில் 49 கவிதைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. தொகுப்பின் அடிப்படையாகக் காலத்தைக் காரணமாக்கும்போது அந்தக் காலத்தின் நிகழ்வாக இருந்தால் அந்த ஒழுங்கிற்கு ஒரு அர்த்தம் உருவாகியிருக்கும். அதுவும் இந்தத் தொகுப்பில் இல்லை. மொழிபெயர்த்தவர்கள் தொகுப்புசெய்வதற்காகப் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. தாங்களே தமிழில் வாசித்துத் தேர்வு செய்யாமல், தமிழ் இலக்கியப்பரப்பில் செயல்படும் ஒன்றிரண்டு நபர்களை/ பதிப்பகங்களை/ குழுவைச் சார்ந்து நிற்கும்போது இப்படித்தான் நடக்கும். அவர்கள், அவர்களின் உள்வட்டம் அல்லது அவர்கள் நம்பும் இலக்கியக் கொள்கை, அல்லது அவர்களின் பிரியமான எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டுமே எடுத்துக் கொடுத்து மொழிபெயர்க்கச் செய்துவிடுகிறார்கள். என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பிறமொழிகளுக்குப் போகும் தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றைப் பற்றிப்பேசும்போதும் இந்தக் குறைபாட்டைச் சொல்லமுடியும்.

இந்தத் தொகுப்பில் ஆழியாள், பா. அகிலன், அனார், கி.பி.அரவிந்தன், ஔவை,பால சூரியன், சேரன்,துஷ்யந்தன், பாத்திமா ஜஹான், வ.ஐ.ச.ஜெயபாலன்,, அ.யேசுராஜா, கருணாகரன், குட்டிரேவதி, லதா கனகலதா, மாலதி மைத்ரி, எம்.எ.நுஃமான் , ரேஷ்மி அகமது, ரவிக்குமார்,எம்.ரிஷான் ஷெரீப், அ.சங்கரி, ஸர்மிளா ஸெய்யித், சிவரமணி, எஸ்.சிவசேகரம்,சுகிர்தராணி, தமிழினி, தீபச்செல்வன், தேவ அபிரா, திருமாவளவன், ஊர்வசி, கேப்டன் வானதி, சு.வில்வரத்தினம் என 31 கவிகளின் கவிதைகள் உள்ளன. இடம்பெற்றுள்ள கவிதைகள் மொழிபெயர்க்கப்படவேண்டியன என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் ஈழப் போராட்டப் பின்னணியில் இப்படியொரு தலைப்பில் கவிதைகள் மொழிபெயர்க்கப்படும் போது எல்லாத்தரப்புக் குரல்களும் இடம் பெறுவதே சரியாக இருக்கும். சிலரது கவிதைகள் ஒன்றுக்குமேற்பட்ட எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. பலரது கவிதைகள் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஈழம்பற்றி எழுதிய கவிகள் இந்தத் தொகுப்பில் இருப்பவர்களைத் தவிர வேறொருவரும் இல்லை. தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் காட்டும் அச்சாக்க நுட்பங்கூட இல்லாமல் லண்டனிலிருந்து ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்பதும்கூட வருத்தமானதுதான்.


No comments :