April 09, 2016

இமையம் - கலைஞர் மு. கருணாநிதி சந்திப்பு: ஒரு நினைவோட்டம்இன்று காலை இந்தப் படத்தைத் தனது பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.அதன் பக்கத்தில்: வாழ்வில் நிகழ்ந்த அற்புத கணம் என்ற குறிப்பும் தந்திருந்தார். தொலைபேசியில் பேசியபோது உற்சாகமாக இருந்தார் இமையம்..இமையத்தோடு எனக்குக் கால் நூற்றாண்டுப் பழக்கமுண்டு; அதனை நட்பென்று சொல்ல முடியாது. நண்பர்களிடம் மற்றவர்களைப் பற்றி விவாதிக்கலாம்; அவர்களின் நிறைகுறைகளைச் சொல்லமுடியாது. பழகியவர்களிடம் இரண்டையும் சொல்லலாம். இது எனது புரிதல்.
பக்தன் கடவுளைக் கண்டதாக நினைக்கும் தருணத்தை உச்சரிக்கும் சொல்லால் குறிப்பிடும் இமையத்திற்குக் கலைஞர் கருணாநிதியின் மீது இருப்பது அசைக்க முடியாத பக்தி. அந்தப் பக்தி திராவிட இயக்கத்தின் மீதும் உண்டு; ஆனால் கொஞ்சம் வேறுபாடுகளுடன். அந்த வேறுபாடுகள் தான் முற்றமுழுதான மூட நம்பிக்கையாக நினைக்காமல், நம்பிக்கையாக ஆக்கியிருக்கிறது. திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் மீது செலுத்தியிருக்கும் தாக்கம், மாற்றம், உண்டாக்கியிருக்கும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது இமையத்திற்கு அபரிமிதமான நம்பிக்கையும் ஈர்ப்பும் உண்டு.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மீதும், அவரது அரசியல் செயல்பாடுகள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதமாகவும், தந்திரமாகவும் இருக்கிறது என்றெல்லாம் பேசும்போது கேட்டுக்கொள்வார்; ஆனால் ஏற்கமாட்டார். மறுக்க மாட்டார்; ஆனால் மாற்றிக் கொள்ளவும் மாட்டார். இந்த மனநிலை தான் பக்தியின் மனநிலை. ஆக பக்தன் இமையம் நேற்றுத் தன் கடவுளைக் கண்டுகொண்டான் என்பது அந்தப் படத்தில் வெளிப்படுகிறது. இதுபோன்ற அற்புதக் கணத்தைப் பலர் அனுபவத்திருக்கக் கூடும். பக்தர்களுக்கு வாய்க்கும் ஒன்று.
இமையம் கலைஞர் மு.கருணாநிதியைப் பார்ப்பது இது முதல்முறையல்ல. தனது சின்ன வயதிலிருந்தே அவரது மேடைப்பேச்சுகளைக் கேட்டவர். தன் அண்ணனோடு தி.மு.க. வின் கூட்டங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் பார்த்து வணக்கம் சொன்னவர் தான். தலைவரின் பிறந்தநாட்களில் தொண்டர்களில் ஒருவராக வரிசையில் நின்று பூங்கொத்துகளோடு தனது புத்தகங்களையும் தந்துவிட்டு வந்திருக்கிறார். சென்ற ஆட்சியின் போது கலைஞர் தலைமையினாலான அரசு வழங்கிய முக்கிய விருதொன்றையும் பரிசுத் தொகையையும் அவர் கையால்
வாங்கியிருக்கிறார். அப்போதெல்லாம் இருந்த மனநிலையைத் தாண்டிய மனநிலையை நேற்றைய சந்திப்பு அவருக்குத் தந்திருக்கிறது என்பது புரிகிறது. காரணம் நேற்றையச் சந்திப்பு கடவுள் இறங்கிவந்த தருணம். முந்தியனவெல்லாம் பக்தன் கடவுளை நாடிச் சென்ற தருணங்கள்
ஒருதடவை மனிதர்கள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதைப் பற்றிப் பேச்சு வந்தது. நாங்கள் இருவருமே பெரும்பாலும் சொல்லிக்கொள்வதில்லை. கொண்டாடியதுமில்லை. இமையம் சொன்னார்; இந்த நாட்டில் பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடலாம்; தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடலாம். மற்றவர்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று. இதுவும் அவரது கலைஞர் மீதுகொண்ட பக்தியின் வெளிப்பாடு தான்.
இமையத்தின் எல்லா எழுத்துகளையும் வாசித்தவன் என்ற நிலையில் நினைத்துப் பார்க்கிறேன். அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிந்திய இலக்கியப்போக்கு அவரது எழுத்துகளைத் தலித் எழுத்தாக அடையாளப் படுத்தினாலும் முற்றிலும் அதனோடு பொருந்திப் போவதில்லை என்றே நினைக்கிறேன். இமையத்தின் எழுத்துகள். மனிதாபிமானம் சார்ந்த நடப்பியல் தன்மையும் உள்ளார்ந்த விமரிசனப் பார்வையும் தான் அவரது எழுத்துகள். தமிழ்ச் சமூகத்தின் குறுக்குவெட்டைத் தனது எழுத்துகளால் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்; விமரிசனத்தோடு பார்க்கும்படி தூண்டிக்கொண்டிருக்கிறார். இது ஒருவிதத்தில் பெரியாரியத்தை உள்வாங்கிய திராவிட இயக்கத்தின் தொடக்க எழுத்துகளின் நீட்சி. புனைகதைகளிலும் நாடகங்களிலும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய பார்வை விமரிசனப்பார்வையும் நடப்பியல் வெளிப்பாடும் தான். அந்த நீட்சியில் இப்போது எழுதும் முக்கிய எழுத்தாளர்களில் இமையம் தான் நிகழ்கால அடையாளம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கும் எழுத்தாளர்கள், கவிகள் பலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்களின் எழுத்துகளில், கவிதைகளில் வெளிப்படும் இலக்கியப் பார்வை திராவிட இயக்கத்தின் இலக்கியக் கொள்கையோடு முழுமையாகப் பொருந்திப் போவன அல்ல, அவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் எழுத்தாளர்கள். இமையம் திராவிட இயக்க எழுத்தாளர். அவர் கடைசிவரை எழுத்தாளராக மட்டுமே இருப்பார் என்று நம்புகிறேன்; இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.கட்சியில் இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவராக ஆகிவிடக்கூடாது
கோவேறு கழுதைகள் உருவாக்கிய இலக்கியத் தாக்கத்தைப் பாராட்டியவர் சுந்தரராமசாமி. அவரது எழுத்துகளைச் செம்மையும் சிறப்புமாக வெளியிடுவது க்ரியா பதிப்பகம் கலைஞர் கருணாநிதி -இமையம்- க்ரியா பதிப்பகம் என்பது சுவையான முரண்பாடு. முரண்பாடுகளின் வெளிப்பாடுதானே கலையின் இருப்பு.