கெட்டுப்போகும் பெண்கள்


மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதுபோல் அடிப்படை உணர்வுகள் இவைதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. அடிப்படைத்தேவைகளைப் பெறவும் தனதாக்கிக்கொள்ளவும் உரிமைகொண்டாடவும் உருவாக்கப்படும் நடைமுறைகளே உழைப்பின் விதிகளாக மாறுகின்றன. உழைப்பு விதிகளின்படி கிடைக்கும் அடிப்படைத்தேவைக்கான பொருட்களைப் பிரித்துக்கொள்ளும் முறைகள் உருவாக்கப்படும்போது பொருளியல் அல்லது தொழில்முறை நடைமுறைகள் உருவாகின்றன.

உழைப்பு, தொழில், பொருளியல் நடைமுறைகளைத் தனிமனிதர்கள் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்காக உருவானவை அரசின் வடிவங்களாகின்றன. முழுமையான அரசுகள், நடைமுறைகளைச் சட்டங்களாகவும் விதிகளாகவும் மாற்றிக் கொண்டு அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பைத் துணை நிறுவனங்களிடம் வழங்குகின்றன. சட்டம், நீதி, காவல் என்பன அரசின் முதன்மையான துணை நிறுவனங்கள்.
பாலின ஈர்ப்பும் எதிர்ப்பால் கவர்ச்சியும் அடிப்படைத்தேவைகள் அல்ல; அடிப்படை உணர்வுகள். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு உருவாகும் உணர்வு என்ற நம்பிக்கையைக் கூட உளவியல் இப்போது தகர்த்துவிட்டது. பிறப்பிலிருந்தே ஆண்பாலுக்குப் பெண்பால் மீதான ஈர்ப்பும் விருப்பமும் அதன் மறுதலையும் இருக்கவே செய்கின்றன; வெளிப்படும் விதங்களும் முறைகளும் வேறானதாக இருக்கலாமே தவிர அந்த அடிப்படை உணர்விலிருந்து விலகுவதும் விலக்குவதும் சாத்தியமற்றவை என்பது உளவியல் அறிவின் வாதம். ஆனால் பாலியல் ஈர்ப்பு தனிமனிதக் கட்டுப்பாட்டில் வைக்கத்தக்கது என வாதிடும் இறையியல், அதனைப்பாவம் எனச் சொல்லித் தள்ளிவைக்கப்பார்க்கிறது. அதே நேரத்தில் இந்த உலகில் மனிதவிருத்தியின் தொடர்ச்சிக்கு பாலியல் ஈர்ப்பும் இணைவுமே காரணமாகவும் தேவையாகவும் இருக்கிறது என்பதால் அதனை முறைப்படுத்தவும் விரும்புகிறது. இறையியலும், இறையியலின் பக்கத்தில் நிற்கும் அறவியலும் பாலியல் விவகாரங்களைப் பேசுவதற்காகத் துறவறம், இல்லறம் என்ற எதிர்வைகளை உருவாக்கிப் பேசுகின்றன. ஆனால் இவை இரண்டும் சந்திக்கும் புள்ளி திருமணம். திருமணமே குடும்ப அமைப்பை உருவாக்குகிறது. திருமணத்திற்குப் பின்னான - திருமணத்தின் வழியாக உருவாக்கப்பட்ட இரண்டுபேர்களுக்கிடையே ஏற்படும் உறவை மட்டுமே முறையான பாலியல் என்கின்றன இறையியலும் அறவியலும்.
திருமணப் பந்தத்தால் பிணைக்கப்படாத ஆண் - பெண் இடையே ஏற்படும் பாலியல் உறவுகளைத் தகாத பாலியல் உறவுகளாகக் கட்டமைப்பது சமூகவியலின் தேவையாக இருக்கிறது. உளவியல் உண்மைகள் சமூகவியல் காரணங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றபோது ஒழுக்கவிதிகள் உருவாகின்றன. ஒழுக்க விதிகளை நிலை நிறுத்த அரசுகள், தனது துணை நிறுவனங்களை நம்புவதைவிடவும் தனக்கிணையான வேறு நிறுவனங்களையே அதிகம் நம்பியிருக்கின்றன. மனித வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் சமயமும் இறையியலும் அரசுக்கிணையான தன்னாட்சித் தன்மை கொண்ட நிறுவனங்களாகவே இருந்து வருவதை உணரலாம். அரசுக்குக் கட்டுப்படவனபோல அவை தோன்றினாலும், அவற்றின் விதிகளிலும் நடைமுறைகளிலும் அரசுகள் தலையிடுவதில்லை. அப்படித் தலையிடும் அரசுகளைச் சமய நிறுவனங்கள் ஏற்பதில்லை; அவற்றிற்கெதிரான போர்களைச் சமயங்களே தூண்டுவிட்ட வரலாறுகளும் உண்டு. அதற்குள் இப்போது நுழையவேண்டியதில்லை.
சமய நிறுவனங்கள் சட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக ஒழுக்க விதிகளை உருவாக்குகின்றன. அவற்றை மரபு எனவும், நம்பிக்கை எனவும் சடங்கு எனவும் வரையறுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றன. அதனை மீறுகின்றவர்களுக்கான தண்டனையை வழங்கும் ஆயுதங்களை வெளியில் உருவாக்காமல் அவரவர் மனதிற்குள் உருவாக்கிக் காக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கப்படும் கருத்துகளே ஆயுதங்களாக இருந்து தனிமனிதர்களைத் தண்டிக்கின்றன. அப்படித் தண்டிக்கும் அதிபயங்கரமான ஆயுதங்களில் ஒன்று மானம். குறிப்பாகப் பாலியல் உறவு மீறல்கள் எனக் கருதப்படும் குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டதாக இருப்பது இந்த மானம் தான். கற்புநிலையென்று சொல்லவந்தால் இருகட்சிக்குமதனைப் பொதுவில் வைக்கவேண்டுமெனச் சொன்ன கவி, இந்த மானமென்னும் ஆயுதத்தைத் தான் பொதுவில் வைக்கச் சொன்னான். ஆனால் நமது இந்தியச் சமூகம் மானத்தைப் பெண்களைக் கொல்லும் ஆயுதமாகப் பெண்களுக்குள்ளேயே வளர்த்தெடுக்கிறது; கூர்தீட்டுகிறது. அந்த ஆயுதம் பெண்களிடம் மட்டுமே தங்கியிருக்கிறதோ இல்லையோ, நமது பொதுப்புத்தியிலும், எழுத்தாளர்களின் புத்தியிலும் தங்கியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மனமும் ஆண் - பெண் என்ற வேறுபாடில்லாமல் மீறுவதற்கும் துடித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் உண்மை. வெளியில் தெரியாதவரை மானம் போவதாக நினைப்பதால், வெளிப்படா உறவாக பாலியல் இச்சையை வளர்த்துக்கொண்டே இருக்கின்றன மனித உயிரிகள். அப்படி வளர்ப்பதுதான் கொண்டாட்டம் என நினைக்காவிட்டாலும் அப்படியான இச்சையை உருவாக்கும் சூழலையும் நெருக்கடிகளையும் சமூக நிறுவனங்களே உருவாக்குகின்றன. உளவியல் உணர்வுகளுக்கும் சமூகவியல் நெருக்கடிகளுக்குமிடையில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் வெல்வது எது? தோற்பது எது? அந்தரங்கத்தைப் பேணுவது வரை உளவியல் வெற்றி தொடர்கிறது. அந்தரங்கம் பகீரங்கமாக ஆகும்போது சமூகவியல் தண்டனை - கொலையைப் பரிசளிக்கிறது. அல்லது தற்கொலையை உளவியலின் பேராலேயே வழங்கித் தீர்க்கிறது.

நவீனத்துவ மனநிலையை உள்வாங்காத பல எழுத்தாளர்களின் கதைகளில் மானத்திற்காகத் தற்கொலை செய்துகொண்ட கதைகளை வாசித்திருப்போம். அதற்காகப் பெரிதும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவையெல்லாம் பழைமையைப் போற்றும் பழைமையாளர்களின் கதைகள் என்று தள்ளவிடக்கூடிய கதைகள் . ஆனால் சமகாலத்தின் மிகமுக்கியமான பிரச்சினைகளை, அதன் சகல பரிமாணங்களோடும் எழுதும் இமையமும் அந்த முடிவையே - தற்கொலையையே பெண்ணுக்கு வழங்கியுள்ளார் என வாசித்தபோது மனம் ஏற்க மறுத்தது; அந்தக் கதையை மறந்துவிடவேண்டிய கதையாக நினைத்து ஒதுக்க நினைத்தது. ஆனால் நாலு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு கதைசொல்லி, மானத்தைக் காலில் ஒட்டிய சேறுபோலத் துடைத்துவிட்டு வாழலாம் எனக் கதையாக்கிக் காட்டியதும் நினைவுக்கு வந்தது. எனவே அவ்விரு கதைகளையும் இங்கே பேசுகிறேன்.
இமையத்தின் கதை இந்தமாத உயிர்மையில் வந்துள்ளது. கதையின் தலைப்பு: துபாய்க்காரன் பொண்டாட்டி. கதை இப்படித் தொடங்குகிறது:
“ மணி ஆவுறது தெரியலியா? காலயில ஸ்கூலுக்குப் போவ வாணாமா? காலயில ஏழு மணிக்கே கான்வெண்ட் வேன் வந்து வாசல்ல நின்னுடும். நேரத்திலேயே தூங்குனாத்தான் காலயில எழுந்திருக்க முடியும்? வெளியில் மழ பெய்யுது. இடிவேற இடிக்குது. கரண்ட் போனாலும் போயிடும்.படுங்க” என்று சொல்லிக்கொண்டே போய்த் தொலைக்காட்சியை நிறுத்தினாள் பத்மாவதி. பிள்ளைகள் இரண்டும் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தன. “போய்த் தூங்குங்க. காலயில நேரத்திலியே எழுந்திருக்கணும்” அப்போது செல்போன் மணி அடித்தது.
“ இந்த நேரத்தில் எந்த சனியன் கூப்பிடுது?” போனை எடுத்து, “ஹலோ,யாரு பேசுறது?” அவளுடைய புருசன் மதிதான் பேசினான். உடனே உற்சாகமாகி ஆசையோடு கேட்டாள்: “ நல்லா இருக்கியா?”
“ஊருக்கு வந்துகிட்டிருக்கன். மெட்ராசுக்கு வந்திட்டன்.”
“என்னா திடுதிப்புன்னு சொல்ற? போன வாரம் பேசுனப்பக்கூட சொல்லலியே”
“ஒங்கிட்ட சொல்லிட்டுத்தான் நான் ஊருக்கு வரணுமா?”
“என்னா சொல்ற?” சரியா கேக்கமாட்டேங்குது. இங்க ஒரே மழயா இருக்கு”
”போன வை. ஊர்ல வந்து ஒன்னப் பேசிக்கிறன்”
“துபாயில எதாச்சும் பிரச்சனையா? தப்பு ஏதாச்சும் செஞ்சுட்டியா? திருப்பி அனுப்பிட்டாங்களா?
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நானாத்தான் வர்றன். நீ போன வை”
”எதுக்குக் கோவமா பேசுற? ஹலோ..ஹலோ..”
மதி போனை நிறுத்திவிட்டான். இனிமேல் அவனாக கூப்பிட்டால்தான் பேச முடியும். வெளிநாட்டுக்குப் பேசுகிற வசதி அவளுடைய போனில் இல்லை. “ஊர்ல வந்து ஒன்னப் பேசிக்கிறன்” என்று எதற்காகச் சொன்னான்?
======== இது கதையின் ஆரம்பம்
போன வெள்ளிக்கிழமை ஆலமரத்தின்கீழ் இருக்கிற செட்டியார் கடைமுன் கண்ணனிடம் பத்மாவதி சண்டை போட்டாள். அந்தச் சண்டையை ஊர்ச் சனம் மட்டுமல்ல, அவளுடைய நாத்தனார், மாமியார், மாமனார் என்று அனைவரும் பார்த்தார்கள். அவர்கள் தான் துபாய்க்கு போன்போட்டுச் சண்டையைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும். சொந்த அப்பா, அம்மா, தங்கை சொல்லும்போது யாரால் நம்பாமல் இருக்க முடியும்? அப்பா, அம்மாவே சொன்ன பிறகு சந்தேகப்பட்டு மதி யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. ஊர்க்காரர்கள் சொன்னால்தானே சந்தேகப்பட்டுக் கேட்பதற்கு? யார் சொன்னால் என்ன? விசயம் மதிக்குத் தெரிந்துவிட்டது. இனி செய்வதற்கு எதுவுமில்லை. தன்னுடைய நிலைமை கசாப்புக்கடைக்காரனிடம் மாட்டிக்கொண்ட ஆடுதான் என்று நினைத்தாள்.
======கணவன் ‘வந்து பேசுக்கிறன்’ என்று கோபமாகக் கூறியதற்கான பின்னணி நிகழ்வு. அந்த நிகழ்வுக்கு- சண்டைக்குக் காரணமான முன் நிகழ்வு இது:
கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கண்ணனுடைய வண்டியை மறித்துக் கொண்டு “ என்னா மரியாத கெட்டுடும்? என்று கேட்டாள்.
“வழிய விடு. இல்லைன்னா வண்டிய மேல ஏத்திடுவன்” கோபத்தில் கண்ணன் கத்தினான். பதிலுக்கு “ ஏத்து பாக்கலாம்” பத்மாவதியும் கத்தினாள்.
“வழிய விடு”
“நகெயக் கொடு”
“கொடுக்கிறன் வழிய விடு”
“நகெயக் கொடுகலன்னா ஒம் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிவிடுவன்”
”அப்பிடியா? நீயும் நானும் படுத்ததையும் சேத்துச் சொல்லு. கேக்கறதுக்கு நல்லா இருக்கும்”
பத்மாவதிக்கு யாரோ வாயில் நெருப்பைக் கொட்டியது மாதிரி இருந்தது. துடித்துப்போனாள். இந்த வார்த்தையைச் சொன்ன பிறகு அவனை விடக்கூடாது என்கிற வெறி உண்டாயிற்று. ஒரே தீர்மானமாகச் சொன்னாள். “ நகைய வச்சிட்டு எட்டப்போ”
“தரமுடியாது”
“ஏன்?”
“ ஒன்னெ ஒரு வருசம்கிட்ட வேல செஞ்சன்ல்ல? அதுக்குச் சரியாப்போச்சு” கண்ணன் சொன்னதுதான் பத்மாவதிக்குத் தெருவில் பேசுகிறோம். கூட்டம் கூடியிருக்கிறது என்பதெல்லாம் மறந்துபோயிற்று. கூட்டத்தில் தன்னுடைய மாமனார், மாமியார், நாத்தனார் நிற்பதெல்லாம் அவளுக்குக் கண்ணில் படவில்லை. கோபம், ஆத்திரம், எரிச்சல் எல்லாம் சேர்ந்து அவளைப் பைத்தியமாக்கிவிட்டது.
========== அதனால் அவள் மனதில் உண்டான தவிப்பால் எழுந்த கேள்வி:
“உசிரு பெரிசா? மானம் பெரிசா? “ இந்தக் கேள்விக்கும் அவளால் பதிலைக்கண்டுபிடிக்க முடியவில்லை. “சாதாரணமான புருசன் பொண்டாட்டி சண்டைக்கே எத்தனையோ பேர் செத்துப் போகலயா?” தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். சாவது தான் நல்லது. “ நெனச்ச நேரத்துக்குச் செத்துப்போற மாதிரி இருக்கக் கூடாதா? ஏக்கத்துடன் அழுதாள்.
======== இந்தத்தவிப்பால் அவள் எடுத்த முடிவாக இமையம் தரும் முடிவு தற்கொலை. அந்த முடிவு கதையின் கட்டமைப்புக்குள்ளும் முன்வைக்கும் முறையிலும் ஏற்கத்தக்க முடிவாக இருந்தாலும், சமூகத்தில் நடக்கும் மாற்றத்திலும் பெண்களின் மாறிவரும் மனநிலையிலும் இந்த முடிவு ஏற்கத்தக்க முடிவல்ல.
மிக விரிவாக நெடுங்கதையாக இமையம் எழுதியிருக்கும் துபாய்க்காரன் பொண்டாட்டி, திருகித்திருகி அவள் மனச்சாட்சியைப் பேச வைக்கிறது. இரவு பத்துமணிவாக்கில் தொடங்கும் கதை அவளை விடிவதற்குள் ஏதாவது ஒரு வழியில் தற்கொலை செய்துகொள்ளத்தூண்டும் மொழியால் நிகழ்வுகளையும் மன உணர்வுகளையும் கட்டமைக்கிறது. மிக நுட்பமான மனப்போராட்ட உணர்வுகளை எழுதும் இமையத்தின் மொழியால் வாசகர்கள் அந்தத் தற்கொலை முடிவை ஏற்கலாம் . ஆனால் எனக்கு அந்த முடிவு ஏற்கத்தக்க முடிவல்ல.
இமையம் எழுதும் மனப்போராட்டத்தில் உடல்களின் உணர்வும் தேவையும் பற்றி ஒரு கேள்வியோ பதிலோ இடம்பெறவே இல்லை. அந்தப் பேச்சில் அவளது உடல் இப்படியொரு தேவையை உணர்ந்தது என்ற ஒரு வரிகூட இல்லை. திருமணத்தால் பிணைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் பிரியாமல் வாழும் வாழ்க்கையில் உடல்களின் தேவைகளையும் கேட்டுப்பெற்றுக் கொள்ளவும் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்புகளுண்டு. ஆனால் நீண்ட காலம் பிரிந்திருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு இப்படியொரு தேவை இருக்கும் என்ற எண்ண ஓட்டங்களுக்குள் கதையின் எந்தப் பகுதியும் செல்லவில்லை. அப்படிச் செல்லும்படியான எழுத்து, அந்தக் கணவன் அங்கே -துபாயில் தனித்திருக்கும் துயரத்தையும் இணைத்தே பேசியிருக்கும். தனித்திருக்கும் துயரம் இருபாலாருக்கும் பொதுவானது. அதற்காக அந்த உடல்கள் சமூகம் உருவாக்கிய விதிகளை - பந்தங்களை மீறுவதும் இயல்பு. அந்த மீறலை எழுத நினைக்கும்போது ஆண்களுக்குச் சலுகைகளையும் பெண்களுக்குத் தண்டனையையும் தருவதாக இருக்கிறது சமூகத்தின் விதிகள் - மரபுகள்.
சமூகத்தில் நடப்பதை எழுதுகிறேன்; அப்படியே தருகிறேன்; மன உணர்வுகளைத் துல்லியமாக வடித்துக் கொடுக்கிறேன் எனத் தனது தொழில் திறமையைக் காட்ட நினைக்கும் எழுத்தாளர்கள் - ஆண் எழுத்தாளர்கள் பெண்களுக்குத் தற்கொலையைத் தண்டனையாகத் தருகிறார்கள். அப்படித்தரும்போது ஆழ்ந்த வருத்தமான மொழியால் எழுதித்தீர்க்கிறார்கள். இமையம் எழுதும் தீர்ப்பின் மொழி இதோ..
தண்டவாளத்தில் ஒரு பெண் படுத்திருக்கிறாள் என்பது சேலம் சென்னை எக்ஸ்பிரஸுக்குத் தெரியாது. சரியான நேரத்துக்கு நல்லூரை எந்தத் தடையும் தடங்கலும் இல்லாமல் ரயில் கடந்து போனது. ஒவ்வொரு நாளும் செல்வதுபோல.
***************

இதற்கு மாறானது ஜெயகாந்தனுடையது கதை கதையின் தலைப்பு: அக்கினிப் பிரவேசம் . அந்தக் கதை எழுதப்பெற்ற ஆண்டு 1966. நாற்பதாண்டுகளுக்கு முன் கெட்டுப்போனவள் என்று தண்டிக்கப்பட வேண்டியவளுக்கு அந்தக் கதை வாழ்க்கையைப் பரிசாக அளிக்கிறது. அதன் தொடக்கம்:
மத்தியானத்திலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது.
மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ள பஸ் ஸ்டாண்டில், வானவில்லைப் போல் வண்ணஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று, பஸ்ஸுக்காகக் காத்து நின்றுகொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தி, தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். வழக்கமாக கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு, அந்தச் சாம்பல் நிற வேனும் விரைகிறது.
========== தொடர் நிகழ்வுகள்
''தேங்க் யூ! என் பஸ்ஸும் வந்துடுத்து'' என்று கூவியவாறு பெரியவளை வழி அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முகமாற்றத்தைக் கண்டே, இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்துகொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால், பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்கிறான்.
======== கலக்கம்
அந்தக் காரை ஓட்டிவந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடதுபுறம் சரிந்து படுத்து, பின் ஸீட்டின் கதவைத் திறக்கிறான்.
''ப்ளீஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் பிளேஸ்'' என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.
அவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு, காதோரமும் மூக்கு நுனியும் சிவந்துபோகிறது: ''நோ... தேங்க்ஸ்! கொஞ்ச நேரம் கழித்து... மழை விட்டதும் பஸ்லேயே போயிடுவேன்.''
''ஓ! இட் இஸ் ஆல் ரைட்... கெட் இன்'' என்று அவன் அவசரப்படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...
==================
'இதென்ன கார் இந்தத் தெருவில் போகிறது?’
''ஓ! எங்க வீடு அங்கே இருக்கு'' என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன.
============================
''எங்கே போறீங்க?''
''எங்கேயும் போகலே... இங்கேதான் வரேன்.'' என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பமாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறான்.
========================
அவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: ''உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாடியே அலைஞ்சிண்டிருக்கு - டு யூ நோ தட்?'' என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய்ம்மறந்துபோகிறாள்.
''ரியலி..?''
''ரியலி!''
அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது; அவனது ரகசியக் குரல் அவளது ஹிருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது; ''டு யூ லைக் மீ?''- 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’
''ம்'' - விலக இடம் இல்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.
வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ட்ரம்ப்பட்டின் இசை புதிய புதிய லய விந்நியாசங்களைப் பொழிந்துகொண்டிருக்கிறது.
''ரொம்ப நல்லா இருக்குல்லே?''- இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.
''நல்லா இருக்கு... ஆனா பயம்மா இருக்கே...''
===================================
'ஆம். அடிமை! - உணர்ச்சிகளின் அடிமை!’ என்று அவன் உள்ளம் உணர்கிறது. அவன் அவளிடம் ரகசியம்போல் கூறுகிறான்: ''ஐ ஆம் ஸாரி!''
================= இனி அவள் வராமல் தவித்த வீட்டின் காட்சிகள்:
அம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவதுபோலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.
''என்னடீ, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு நேரம்? அழாமல் சொல்லு?'' தன் மீது விழுந்து தழுவிக்கொண்டு புழு மாதிரி துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரணம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையால் கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தாள்: ''ஏண்டி, ஏன் இப்படி அழறே... சொல்லு.''
=============================
'இவளை என்ன செய்யலாம்?... ஒரு கௌரவமான குடும்பத்தையே கறைப்படுத்திட்டாளே. தெய்வமே, நான் என்ன செய்வேன்?’ என்று திரும்பிப் பார்த்தாள்.
அம்மாவின் பின்னே சமையலறையில் அடுப்பின் வாய்க்குள் தீச்சுவாலைகள் சுழன்றெரிய கங்குகள் கனன்றுகொண்டிருந்தன.
'அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.
- அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப்போல் நெளிந்து, கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.
'அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போய்விடுமா? ஐயோ! மகளே, உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா? நானும் என் உயிரைப் போக்கிக்கொண்டால்?’
'ம்... அப்புறம்? அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா?’ - அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப்பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.
=========================
'ம்... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ - என்று பொங்கிவந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பதுபோல் இன்னும் ஒரு கை சீயக்காயை அவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்!
''இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே!
==========================
''நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே.
நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பாக்கறே? நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே... ஆமா - தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார். எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்
========================
அதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ற பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே! சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் - தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.
============================ இது ஜெயகாந்தன் தந்த முடிவு.
இமையம், துபாய்க்காரன் பொண்டாட்டி, உயிர்மை, மார்ச், 2016


ஜெயகாந்தன், அக்கினிப்பிரவேசம் http://azhiyasudargal.blogspot.in/2010/12/blog-post_31.html

கருத்துகள்

யோகியின் தேடல்கள் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல ஒப்பீடு... தெளிவான விளக்கம். தன்மீது கலங்கம் ஏற்படும் என்று தெரிந்த பிறகு அவள் தப்பு செய்தாலும் (தப்பு என நினைப்பவர்களுக்கு) செய்யாவிட்டாலும் தற்கொலை ஒன்று மட்டுதான் சரியான முடிவு என்று தோன்றுவது இயற்கையாகி விட்டது. இதுதான் யதார்த்தமாகவும் இருக்கு. ஜெயகாந்தன் போல புரட்சி செய்ய எத்தனை பெண்கள் தயாரா இருக்காங்க. உடல் நேர்மை மட்டுமே கற்பு என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இமையம் அண்ணா எழுத்தில் நீங்கள் உடன்படாவிட்டாலும் அது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இருந்தால் என்ன செய்ய முடியும்? அவளின் முடிவு தற்கொலையில் முடியாமல் இருந்திருந்தால் கதை வேறொரு திசையில் பயணிக்க தொடங்கியிருக்கும் என்பதும் மறுப்பதற்கு இல்லை.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்