April 30, 2016

சூழலில் அர்த்தமாகும் கவிதை:

இது கவி சமயவேலின் அடையாளம் அல்ல. அவருடைய பெரும்பாலான கவிதைகள் வெளிப்படையான அரசியல் கவிதைகள் அல்ல. சமூகப் போக்கைச் சந்திக்கும் கணத்தில் அதை விளங்கிக் கொள்ள முடியாமலும், விளங்கிக்கொள்ள முடிந்தாலும் அதைச் சந்திப்பது எப்படியெனப் புரியாமலும், கடந்துசெல்லும் வழியறியாமலும் தவிக்கும் தனிமனிதர்களின் தன்னிலைகளை அவரது பலகவிதைகளில் வாசிக்க முடியும். அந்தத் தன்னிலைகளை முழுமையாகக் கவி சமயவேலின் தன்னிலை என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அவர் முன்வைக்கும் மனிதர்களின் தன்னிலையாகவும் விளங்கிக் கொள்ளலாம்.

இந்தக் கவிதையை அது இடம்பெற்றுள்ள தொகுப்பில் முன்பு வாசித்தபோது இப்போது கிடைத்த அர்த்தங்களும் உணர்வுகளும் கிடைக்கவில்லை. உள்ளே உள்ளே என்று தேடிச்சலிக்கும் மனம், சூழலைப் பார்த்துக் கொஞ்சம் புன்னகை செய்யும். அந்தப் புன்னகைக்குள் இருப்பது கேலி. கேலி செய்யும் வினையில் பெரும்பாலும் தன்னை விலக்கி நிறுத்திக்கொண்டு மற்றவரைக் கண்டு நகைப்பதே இருக்கும். கேலிக்குப் பதிலாகப் பகடி செய்யலாம் என்று உணரும்போது தன்னிலிருந்து தொடங்க வேண்டும் என்று தோன்றும். கேலிக்கும் பகடிக்குமான இந்த நுண்ணிய வேறுபாட்டைப் பலருடைய எழுத்துகளில் பார்க்க முடிவதில்லை. இப்போது எழுதிக்கொண்டிருக்கும் முக்கியக் கவிகளில் யவனிகா ஸ்ரீராமிடம் தூக்கலாக இருப்பது பகடி. ஆனால் வாசிக்கும்போது கேலி அதிகமிருப்பதுபோலத் தோன்றும். சமயவேலின் இந்தக் கவிதை முந்திய வாசிப்புகளில் முழுமையும் கேலியாகவே நினைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று திரும்பவும் வாசிக்க நேர்ந்தபோது அதற்குள் இருந்த பகடி மட்டுமே வெளிப்பட்டது. சூழலில் அர்த்தமாதல் இதுதான். நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் காலச் சூழலில் இந்தக் கவிதையை ஆகச்சிறந்த அரசியல் கவிதையாக வாசித்தேன். அந்தக் கவிதைக்குள் இருக்கும் கவி, தன்னில் தொடங்கி, வெளியில் திரியும் அனைத்து மனிதர்களையும் நோக்கிப் பகடியையும் கேலியையும் நகர்த்துகிறான். அவை இரண்டும் சேர்ந்து தேர்தலைக் கேளிக்கையும் கொண்டாட்டமுமாக மாற்றிவிடும் போக்கைப் பார்த்து நகைக்கின்றன.

தேர்தல் காலத்தில் ஒரு பின்காலனியக் கவிஞன்
காதில் பலப்பல விழுகின்றன
ஓட்டு ஓட்டு ஓட்டு
உங்கள் ஓட்டு எங்களுக்கு
உங்கள் சின்னம் மறந்துவிடாதீர்கள்

அம்மாவுக்கு ஓட்டு அய்யாவுக்கு ஓட்டு
அண்ணனுக்கு ஓட்டு தம்பிக்கு ஓட்டு

அவங்க தான் ஊழல்
இவங்க தான் ஊழலோ ஊழல்
உங்க ஆட்சியீல என்ன நடந்தது
சரி உங்க ஆட்சீல என்ன நடந்தது

தண்ணீர் இல்ல கேஸ் இல்ல
கரண்ட் இல்ல
 இல்ல இல்ல

சாதிய இந்தியர்களில்
நானும் ஒருவன் தானே
எனக்கும் ஓட்டு இருக்கான்னே தெரியவில்லை

சரியான குடிமகன் இல்லை நான்
டாஸ்மாக் கடைக்கு நண்பர்கள் துணைக்கு
செல்வதுண்டு ஆனால் நான் குடிமகன் இல்லை

கோடிகள் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன்
ஓட்டுக்கேட்டு வரும் கண்களுக்குள் முட்டை முட்டையாய்த்
தெரிவதுதான் கோடிகள்
இதுகூடத் தெரியவில்லை ஆனால்
ஓட்டுப்போட இன்னும் கிளம்பாத சுத்த சூன்யம்

நான் சரியான குடிமகன் இல்லை
உலகக் குடிமகன் என்ற மிதப்பில் இருக்கும் கவிஞர்களுக்கு
ஏதேனும் விதிவிலக்கு இருக்கிறதா?
யகுதா அமிக்னவ், அன்னா அக்மதேவா. ரில்கே பால்செலான்
பாப்லோ நெருடா, ஜேன் ஹிர்ஷ்ஃபீல்டு, அக்டேவியாபாஸ்
ஆகியவர்களுக்கு நண்பன் என்ற முறையில்

குடிமகனின் கடமைகளிலிருந்து இந்த சோம்பேறிக்
கவிஞனுக்கு ஏதேனும் சலுகை உண்டா?
பாரில் உட்கார்ந்துகொண்டு
கேட்கலாம் நண்டுப்பொரியல்
எனக்கு ஒரு சரியான நாடு வேண்டும்
என்றெல்லாம் கேட்கமுடியுமா என்ன?
நம் பெருமதிப்பிற்குரிய ஆபிரகாம் லிங்கன் வாசலில் நிற்கிறார்

மக்களாட்சியில் திறக்கப்பட்ட கடைகளில் மக்கள்
கூச்சலிட்டு சண்டையிடுவதை அவர் காணவேண்டாம்
பெரும் லாபம் கொழிக்கும் இந்தக் கடை ஏன் இப்படி இருக்கிறது
இன்னும் சுத்தமாக நல்ல வசதிகளோடு இருக்கலாமே
மருத்துவர் அறை வேண்டாம் நல்ல கழிப்பறைகளாவது

வேறுவழியே இல்லை நண்பர்களே
காலையில் எழுந்து குளித்துவிட்டுக் கிளம்புங்கள்
உங்கள் விரலில் மைக்கறை படியட்டும்

வெளியே ஊடகக் கருவிகள் காத்திருக்கின்றன
அந்த இடது கைவிரலை ஆட்டியபடி
ஒரு படம் எடுத்துவிடலாம்

இங்கே ஒரு பின்காலனியக் கவிஞன்
ஓட்டுப் போடப் போகிறான்
போடுங்கப்பா ஓட்டு
போடுங்கம்மா ஓட்டு
-------------- சமயவேல்,பறவைகள் நிரம்பிய பின்னிரவு, 48No comments :