April 24, 2016

கனவுகள் ; காட்சிகள்

                                                            இந்திய நாட்டின் ஜனநாயக அரசைத் தேர்ந்தெடுப்பதில் மற்றவர்களின் பங்கு எத்தகையதாக இருந்ததோ தெரியாது. ஆனால் என்னுடைய பங்கு எப்பொழுதும் குறிப்பிடத் தகுந்தது என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதுவரை வாக்களித்தவிதம் பற்றிய உண்மையைப் பேசவேண்டும் என்றால் கூடக்  கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. முந்தைய தேர்தல்களில் நான் பங்கேற்றவிதம் சட்டப்படியான தவறுகளைக் கொண்டதாகவும் இருந்துள்ளன. முதல்தடவை நான் ஓட்டுப்போட்ட போது எனக்கு வயது 18 கூட ஆகியிருக்கவில்லை. அப்பொழுதெல்லாம் ஓட்டுப் போடும் வயது 21. வாக்காளர் பட்டியலில் எனது பெயர் அ. ராமசாமி என்பதற்குப் பதிலாக தீர்க்கவாசகன் என்று எழுதப் பட்டிருந்தது. அப்படியொரு பெயர் எனக்கு எங்கள் ஊரில் உண்டு. என்றாலும் தீர்க்கவாசகனுக்கும்  இருபத்தியோரு வயது ஆகியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளாமலேயே பதிவு செய்திருந்தார்கள்.

பொய்யான தகவலின் பேரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிந்திருந்த போதிலும் ஓட்டுப்போடும் விருப்பம் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. காரணம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீது இருந்த கோபம். அவசர நிலைக்கு அடுத்து வந்த தேர்தலில் அவர் சார்ந்த காங்கிரஸ் தோல்வி அடைய வேண்டும் என்ற ஆவேசம் இருந்தது. ஓட்டுப்போட்டேன்; காங்கிரஸ் தோற்றது. இந்திரா காந்தி தோற்றார். அவசரநிலைக் காலக் கதைகள் பல வாசிக்கக் கிடைத்தன. போட்ட ஓட்டின் பலன் நிறைவேறிவிட்டது என்பதில் மகிழ்ச்சி. ஆனால் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஓட்டுப் போடும் ஆர்வம் குறைந்து போய்விட்டது.
தேர்தல் பாதை திருடர் பாதை என்று பேசிய நக்சல்பாரிகளின் கோஷங்கள் தலைக்குள் ரீங்காரம் செய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து சில தேர்தல்களில் ஓட்டுப் போடுவதை அமைதியாகத் தவிர்த்து விட்டேன். அந்தக் கொள்கையிலும் கூட ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல் போய்விட்ட நிலையில், தொகுதியில் நல்ல வேட்பாளர் யார் என்று பார்த்து ஓட்டுப் போடுவது என்று மாறியது. அப்படியான மாற்றத்திற்குக் காரணம் தோழர் விசுவநாதன் தான். பாண்டிச்சேரியில் இருந்தபோது வீடுதேடி வந்து ஓட்டுக்கேட்டு விட்டுப் போனவருக்குப் போட்ட ஓட்டு விரும்பிப்போட்ட ஓட்டு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்த தோழர் விசுவநாதன் தொடர்ந்து வெற்றிபெறும் வேட்பாளராக இருப்பதற்கு கட்சி , கொள்கைகளைத் தாண்டிய அவரது அணுகு முறைதான் என்று இன்றும் பாண்டிச்சேரி வாசிகள் கூறுகின்றனர். பாண்டிச்சேரியை விட்டு திருநெல்வேலிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் இருக்கிற அரசியல்வாதி அவர் தான்.
அந்த இடத்தை இன்னொருவருக்குத் தரும் தேர்தலாக இந்தத் தேர்தல் ஆகிவிட்டது. அந்த இன்னொருவர் நண்பர் ரவிக்குமார்.  இந்திய ஜனநாயகத்தை உருவாக்கும் தேர்தலில் வாக்களிக்கும் அனுபவத்தைவிடக் கூடுதலான அனுபவத்தை ரவிக்குமாரின் அரசியல் நுழைவு எனக்குத் தந்தது. அவர் சார்ந்திருந்த விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் நிலைபாட்டில் அதிகஅளவு கருத்து வேறுபாடு எனக்கு இருந்தது இல்லை.சாதிகளாகப் பிளந்து கிடக்கும் இந்திய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் நடத்தும் ஓர் இயக்கம் கைக்கொள்ள வேண்டிய உத்திகளைத் தான் அவர்கள் பின்பற்றுகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகளின் பண்பாட்டுத் தள நடவடிக்கைகளில் பல எனக்கு உடன்பாடாக இருந்தன அல்ல. தலித் பண்பாட்டுப் பேரவைகள் தொடங்கியபோது முன்வைக்கப்பட்ட கருத்துக்களிலிருந்து வெகுமக்கள் அரசியலுக்குள் நுழைந்த பின்பு அவ்வியக்கம் பண்பாட்டுத் தளச் செயல்பாடுகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்பது எனது நிலைபாடு. ரவிக்குமாருக்கும் கூட அத்தனைக் கருத்தியலோடும் முழுமையான உடன்பாடு உண்டு என்று நான் நினைக்கவில்லை. என்றாலும், ஒரு மக்கள் இயக்கத்தின் நெருக்கடிகளையும் சமரசங்களையும் தொடர்ந்து விமரிசனம் மட்டுமே செய்துகொண்டிருப்பதும் சரியானதல்ல என்ற நிலைபாடும் அவருக்கு உண்டு. அந்த வகையில்  ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவாளர் மட்டுமல்ல; அந்த இயக்கத்தின் அங்கமும் கூடத்தான்.
விடுதலைச் சிறுத்தைகளைத் தேர்தல் அரசியலுக்குள் திருப்பியது முதலே அவர்களின் செயல்பாட்டின் பின்னணியில் இருந்தவர் ரவிக்குமார். இன்று வெகுமக்கள் ஊடகங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் இடம் உறுதி செய்யப்பட்டதில் அவரது பங்களிப்பு கணிசமானது. அந்த அமைப்பிற்குச் சரியான தத்துவத் தலைமை உருவாகும் என்றால் அவரது பங்களிப்போடு தான் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இருக்கிறது. அந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகளின் சிந்தனையாளர்கள் மையம்  என்ற  அமைப்பில் கூட நான் பங்கேற்றிருக்கிறேன். தொண்ணூறுகளில் தொடங்கிய தலித் எழுச்சியை சாதி ஒழிப்பு இயக்கமாகவே பலரும் கருதினர்; இடதுசாரி அமைப்புகளிலிருந்து ஒதுங்கிய பலரும் ஆர்வத்தோடு இணைந்து செயல்பட்டனர். ஆனால் ஏற்பட்ட முரண்பாடுகளும் தன் முனைப்புகளும், நடந்த விவாதங்களும், முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் இன்று வெகுமக்கள் ஊடகங்கள் முன்வைக்கும் சாதிக்கட்சி என்ற அடையாளத்தைத் தந்துவிட்டன. இதற்கான காரணங்கள் ஒருபக்கச் சார்பானவை அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாதவை. ஒதுங்குதலும் ஒதுக்குதலும் ஒருசேர நடந்தன. இந்தியச் சாதியத்தின் கருத்தியல் திரும்பவும வெற்றி பெற்றிருக்கிறது என்று மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியது தான்.
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பின்னணியில் இருந்த ரவிக்குமார் வெளிப்படையான அரசியல் களத்திற்கு இழுக்கப்படுவார் என நான் நினைத்ததில்லை. தேர்தலில் அவரை ஒரு வேட்பாளராக நிற்கும்படி இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொள்வார் என்று எதிர்பார்க்கவுமில்லை.ஆனால் அது நடந்தது. கருத்தியல் மற்றும் குடும்பச் சூழல் சார்ந்து மறுத்துவிடக் கூடும் என்று தெரிந்திருந்தும் அவர் கேட்டுக் கொண்டதும், இவர் ஏற்றுக்கொண்டதும் கொஞ்சம் ஆச்சரியம் தான். ரவிக்குமாரை ஒரு வேட்பாளராக நிறுத்துவது என்ற சிறுத்தைகளின் முடிவே அவ்வியக்கத்தின் மீது நம்பிக்கையூட்டுவதாக ஆகியிருக்கிறது.
 ‘எழுத்தாளர் ரவிக்குமார் அரசியல்வாதியாகிறார்’ என்று வெகுமக்கள் பத்திரிகைகள் எழுதியபோது சிரிப்புத்தான் வந்தது. காரணம் ரவிக்குமார் எப்பொழுதும் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. அவரது எழுத்து முழுக்க முழுக்க அரசியல் எழுத்து. அவரோடு நேரடித் தொடர்பு கொண்ட இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவர் எழுதிய எல்லாவற்றையும் -கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், புனைவுகள், கவிதைகள், பாடல்கள், முன்னுரைகள் என எல்லாவற்றையும்-அச்சா வதற்கு முன்பும் அச்சான பின்பும் படித்திருக்கிறேன். அவரது மாணவப் பருவக் கவிதைகளைக் கூட அவரைச் சந்திப்பதற்கு முன்பே வாசித்திருக்கிறேன். நிகழ்கால அரசியலோடு தொடர்பற்ற எழுத்தாக ஒருவரியும் எழுதியவர் அல்ல அவர். சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் காவல்துறையினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பத்மினியின் நேரடி வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு  அவர் எழுதிய நாடகம்- வார்த்தை மிருகத்தை- நான் மேடையேற்றியிருக்கிறேன். நிறப்பிரிகை, ஊடகம், கூட்டுக்குரல் என எங்கள் செயல்பாடுகள் கொடுத்து வாங்கிய செயல்பாடுகளாக இருந்த காலகட்டம் தொண்ணூறுகள். கடலூர், நெய்வேலி,விருத்தாசலம், மதுரை எனத் தலித் கலைவிழாக்களுக்கும்,பண்பாட்டுப் பேரவைகளுக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளோம். தெருநாடகங்கள், நவீன நாடகங்கள் எனச் செய்த முயற்சிகளின் தொடர்ச்சியில் அரசியலற்றவை எதுவும் இருந்ததில்லை. திராவிட இயக்கங்களின் எதிரியாக ரவிக்குமாரை இன்று அடையாளப்படுத்தியுள்ள எழுத்துக்களை ,  பெரியாரை விமரிசனம் செய்த எழுத்துக்களை அச்சாவதற்கு முன்பே வாசித்துவிட்டு எழக்கூடிய எதிர்வினைகளைப் பற்றிப்பேசியிருக்கிறோம். அப்பொழுது அவர் சொன்னது  இப்பொழுது நினைவுக்கு வருகிறது:
’’ பெரியார் இன்று தமிழ்நாட்டில் உச்சரிக்கப்படும் பெயராக மட்டுமே உள்ளார். அவரைப் பற்றிய விமரிசனங்கள் தான் அவரது எழுத்துக்களைத் திரும்பப் படிக்கச் செய்யும்’’. அவர் சொன்னது ஓரளவு உண்மையாகி விட்டது. ரவிக்குமார் பெரியார் மீது வைத்த விமரிசனங்களை எதிர்கொள்ளும் விதமாகப் பலரும் வாதங்களை எழுப்புகின்றனர்.அதற்காகத் திரும்பவும் பெரியார் படிக்கப்படுகிறார். பெயராக இல்லாமல் கருத்தாக அவர் வாழ்கின்றார்.
பெரியார் மீது எழுப்பப்பட்ட விவாதங்கள் தமிழ் அறிவுலகத்தைக் கருத்தியல் சார்ந்த விவாதத்தளத்திற்கு நகர்த்தி யிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பெரியோரோடு சமநிலையில் வைத்து அம்பேத்கர், அயோத்திதாசர், காந்தி, கார்ல் மார்க்ஸ் எனச் சிந்தனையாளர்கள் படிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பெரியாரியவாதிகள் ரவிக்குமாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். பெரியார் தொடங்கி வைத்த பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்ற எதிர்வுச் சொல்லாடலைத் தலித்-தலித் அல்லாதார் என்ற எதிர்வுச் சொல்லாடலாகவும், பிராமணர்கள்- இடைநிலைச் சாதிகள்- தலித்துகள் என்று மும்மையச் சொல்லாடலாகவும் மாற்றிக் கட்டமைத்ததன் மூலம் கிடைத்த ஆசுவாசத்தில் பிராமணர்களின் நன்னூலிலும் இடம் பிடித்தார். ஆசுவாசம் தந்ததற்காகப் பிராமணர்களும் ரவிக்குமாருக்கு நன்றி சொல்லலாம்.
சட்டமன்றத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ரவிக்குமார் நிற்பது என்ற முடிவினை எடுத்த நாள் தொட்டே அவரது தொடர்பில் இருந்த நான், அவரோடு தொகுதியில் பயணம் செய்வது என்ற முடிவை அப்பொழுதே எடுத்துவிட்டேன். கோடை விடுமுறைக் காலம் என்பதால் விடுப்பு எடுக்கவேண்டும் என்ற பிரச்சினையும் எழவில்லை. இரண்டு கட்டங்களில் நான் சிதம்பரத்திற்குப் போனேன்.

ரவிக்குமார் போட்டியிட்ட தொகுதி காட்டுமன்னார் கோவில் என்றும் காட்டுமன்னார் குடி என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் இரவில் தங்கிக் கொண்டு பகலில்  தொகுதிக்குள் வாக்காளர்களைச் சந்திக்கும் விதமாக ஏற்பாடுகள் இருந்தன. இரண்டு தவணைகளில் ஒருவார காலம் நானும் தங்கி பங்கேற்பாளனாக இல்லாமல் பார்வையாளனாக இருந்தேன். என்னுடைய பங்கேற்பாக நாங்கள் திட்ட மிட்டிருந்த பலவும் பணத்தட்டுப்பாடு காரணமாக நிறைவேறாமல் போய்விட்டது. தெரு நாடகங்கள் தயாரித்தும், தெருக்கூத்துக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்தும் அவர்களை ஊர்ஊராக அனுப்பி வாக்குச் சேகரிப்பது போன்ற பிரசார உத்திகளைச் செயல்படுத்தும் வாய்ப்புக்கள் நிறைவேறவில்லை. அவர் சார்ந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் அத்தகைய பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்யப்  போதிய நிதிவசதி இல்லை. ஏற்பாடு செய்யவும் இயலவில்லை. நகரவாசிகளின் கலையாகக் கருதப்பட்ட நவீன நாடகத்தை வெகுமக்களின் சாதனமாக மாற்றும் ஓர் அரிய வாய்ப்பு தவறிவிட்டது என்பதில் எனக்கு வருத்தம்தான். இருந்தாலும்  தொகுதி முழுக்க குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்வதும், தேர்தலை இந்தியக் கிராமங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைப் பக்கத்தில் இருந்து அறியவும் இந்தத் தேர்தல் வாய்ப்பாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி தான். அத்துடன் நண்பர் ரவிக்குமாரின் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போது மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகி விட்டது.
காட்டுமன்னார் குடித்தொகுதியின் பெரும்பாலான கிராமங்கள் காவிரியின் பாசனப்படுகைப்பிரதேசம். விவசாயம் சார்ந்த கிராமங்கள் அவை. விவசாயம் சார்ந்தவை என்பதனாலேயே சாதிய இறுக்கமும் கூடுதலாக இருக்கக் கூடியன. கிராமங்கள் என்றும் சேரிகள் என்றும் பிரித்துப் பார்ப்பதற்குத் தோதான வேறுபாடுகளுடன் காணப்படும்  அந்தத் தொகுதியைப் பற்றிக் குறிப்பிடப் பல தகவல்கள் உண்டு. விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் பெருமளவு மாற்றங்கள் எதனையும் சந்திக்காத கிராமங்களே அதிகம் உள்ளன. அப்படி இருப்பதற்குக் கூட முக்கியக் காரணம் அத்தொகுதி தனித்தொகுதியாக இருப்பது தான்  என்று தோன்றியது.
தமிழ்நாட்டில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குப் போட்டியாகத் தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட அண்ணாமலை நகரை உள்ளடக்கிய தொகுதி அது. வரலாறு , சுற்றுலா மற்றும் புனிதத் தலம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த சிதம்பரம் நகரத்திலிருந்து அதிகதூரம் இல்லை.தமிழ் நாட்டின் மிகப்பெரிய ஏரி வீராணம், இந்தத் தொகுதிக்குள் தான் இருக்கிறது. அந்த ஏரியில் உள்ள நீரை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளனர். முந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது நினைத்திருந்தால் அற்புதமான சுற்றுலாத்தலமாக ஆக்கியிருக்க முடியும். அதன் மூலம் அத்தொகுதி மக்களின் வருமானம் பெருகும் வாய்ப்பு உண்டு. சில நூறு பேருக்கு வேலை கிடைத்திருக்கும். சிதம்பரம் கோயிலுக்கு வரும் கூட்டம் ஒருநாள் பொழுதை உல்லாசமாகக் கழிக்க முடியும்.
ஆங்கிலேயர்கள் முதலில் வந்து இறங்கிய ஆர்க்காட்டுப் பகுதி என்ற சிறப்புகள் கூட உண்டு என்றாலும் காட்டுமன்னார்குடி ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற காலத்திலேயே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். விவசாயம் கூட நவீன விவசாயமாக ஆகவில்லை என்றுதான் தோன்றுகிறது. நெல் தவிர வேறு வகைப் பயிர்களை- குறிப்பாகப் பணப் பயிர்களையோ, தோட்டப் பயிர்களையோ விளைவிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. வளமான மண்ணும் காவிரி ஆற்றுத் தண்ணீரையும்  நம்பி நடக்கும் தமிழ்நாட்டு விவசாயம் பெரும்பாலான மாவட்டங்களில் இப்படித்தான் இருக்கிறது. வேளாண்மையை மையப்படுத்தித் திட்டமிடும் அரசாங்கங்கள் இல்லாததால் நிலைமை பெரிதாக மாறவில்லை.

அதிலும்  தனித் தொகுதிகளின் நிலையோ இன்னும் மோசம் என்று தான் சொல்ல வேண்டும். அதிகாரிகளின் பாரா முகமும் பயமின்மையும் சேர்ந்து , கிடைக்க வேண்டிய குடிதண்ணீர், சாலைகள், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளே இன்னும் கிடைக்காத பகுதிகள் உள்ளன. இதையெல்லாம் செய்வது ஜனநாயக அரசாங்கத்தின் கடமை என்பதைக் கூட அறியாத மனிதர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று அறிந்தால் நகரவாசிகள் வெட்கமும் குற்றவுணர்வும் கொள்ள வேண்டும். காரைக் கட்டடங்கள் இல்லாத சேரிகளில் வாழும் மனிதர்களின் எதிர்பார்ப்பு பணமும் பொருளும் உதவிகளும் அல்ல. அவர்களை அவ்வப்போது வந்து பார்த்து விட்டுச் செல்லும் உறுப்பினர் வேண்டும் என்பது தான். அவர்களின் பெரிய வேண்டுகோள் திரும்பவும் அவர்களிடம் தேடி வந்து பார்த்துவிட்டுச் செல்லவேண்டும். அந்த விதத்தில் தேர்தலைத் திருவிழாவாகவும், வேட்பாளர்களையும், வெற்றிபெறும் உறுப்பினர் களையும் கடவுளின் பிம்பங்களாகவும் தான் கருதுகின்றனர். ஊர்த் திருவிழாவில் ஆண்டுக்கொரு முறை தங்கள் தெருவழியே வந்து வீட்டிற்கு முன்னால் நின்று அவர்கள் படைக்கும் படையலைப் பெற்றுச் செல்லும் கடவுள் போல அரசியல்வாதிகள் ஆண்டிற்கு ஒருமுறை வந்து போனால்போதும். வரும்போது ஏதாவது உதவிகள் கிடைக்கும் என்றால் அந்தக் கடவுள் கேட்காமலேயே வரம் தந்ததாகக் கருதிக் கொள்ளத் தயங்குவதில்லை.

ரவிக்குமாரின் வெற்றியை அவரது தனிப்பட்ட வெற்றி என்பதைவிட தலித் உணர்வுடன் ஒன்றிணைக்கப் பட்ட வரலாற்றிற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் பகுதிகளில் வாழும் ஆதிதிராவிடர்கள், இன்று தலித் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர் என்றாலும், இந்த ஒன்றிணைப்பின் தொடக்கம் சில பத்தாண்டுகளுக்கு முற்பட்டது என்றே தெரிநத்து. சேரிகளில் வாழும் ஏழு வயதுப் பையனும் எழுபது வயது முதியவரும் தொல்.திருமாவளவனை அன் விகுதிக்குப் பதிலாக அர் விகுதியுடன் வளவர் என்றுதான் அழைக்கின்றனர். அவரது அரவணைப்பும் ஆளுமையும் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்து, இறந்த எல்.இளையபெருமாளின் ஆளுமையுடன் ஒத்துப்போவதாக நம்புகின்றனர். அதிகாரத்திற்கெதிராக ஒன்றுபட வேண்டிய பாடத்தைச் சேரி மக்களுக்கும், வன்முறைக்குப் பதில் வன்முறையாகத்தான் இருக்கும் என்ற பாடத்தை ஆதிக்க சாதியினருக்கும் உணர்த்திய ஆசான் எல். இளையபெருமாள் என்றும் அவரது சரியான வாரிசு திருமாவளவனே என்றும் நம்புவதில் நூறு சதவீதம் மாற்றம் இல்லை. இதைக் கண்கூடாகப் பார்த்த முதல் சுற்றுப் பயணத்தின் போதே ரவிக்குமாரின் வெற்றி தூரத்தில் உள்ள வெளிச்சம் அல்ல என்பது ஓரளவு புரிந்தது.
சாதியை மையப்படுத்திப் பார்ப்பதில் இந்தியக் கிராமங்களில் வாழும் படிக்காதவர்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல மெத்தப் படித்த மேதாவிகள். தங்கள் தொகுதியில் ஒரு எழுத்தாளர் - மக்கள் உரிமைகளில் அக்கறை செலுத்தும் நபர்- வேட்பாளராக நிற்கிறார் என்ற தகவலைத் தரும் ஒரு துண்டுப் பிரசுரத்தை வாங்கிப் படிக்க மனம் இல்லாத கல்விமான்கள் தான் இங்கு பேராசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள் என்பது முதலிலேயே தெரியும் என்றாலும், கண்ணெதிரே அந்தக் காட்சியைக் காணும்போது அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ‘தனித் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யாராயிருந்தால் என்ன ..?அவன் ஒரு தீண்டக் கூடாத சாதியைச் சேர்ந்தவன் தான் ‘ என்ற மனோபாவம் தூக்கலாகவே வெளிப்பட்டது. பலர் துண்டுப் பிரசுரங்களை வாங்கிக் கொள்ள மறுத்தார்கள். சிலர், இவர்கள் எல்லாம் அதிகாரத்திற்கு வந்து விட்டால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான் என்று சொன்னார்கள். அவர்கள் பேசிய போது வெளிப்பட்ட பாவனைகளும் மொழியும் சாதித் திமிரின் ஒரு அங்குலத்தைக் கூடப் படிப்பு கறைத்துவிடவில்லை என்பதற்கான சாட்சிகள். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிகம் வாழும் அண்ணாமலைநகர்ப் பகுதிக்கெனத் தனியான துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து வீடுவீடாக எடுத்துச் சென்றவர்களின் அனுபவங்கள் கண்ணில் நீர் கறையும் அனுபவங்கள். படித்தவர்கள் என்ற வகைப்பாட்டில் எழுத்தாளர்களும் அடக்கம் தான்.
அங்கீகரிக்கப்பட்ட  கட்சிகளுக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் நமது தேர்தல் முறை கண்கூடாகக் காட்டும் பாரபட்சம் சின்னம் ஒதுக்குதல். அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே தனது  சின்னத்தைக் கூறி வாக்குக் கேட்கும் வாய்ப்பு அந்த வேட்பாளருக்கு உண்டு. ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சி வேட்பாளருக்குச் சின்னம் கிடைப்பதோ சரியாக இருபத்தியோரு நாட்களுக்கு முன்புதான். தள்ளுபடி செய்தல், வாபஸ் வாங்குதல் எல்லாம் முடிந்த பின்புதான் சுயேச்சைகளுக்கும் அங்கீகாரம் பெறாத கட்சியின் வேட்பாளர் களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. பெயரைச் சொல்லி ஒரு முறையும் சின்னத்தை அறிமுகப்படுத்தி ஒரு முறையும் பிரசாரத்தை தொடர வேண்டியுள்ளது.
ரவிக்குமாருக்கு மணிச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த வெங்கலக் கடையில் ஒரு பெரிய மணியை வாங்கி திறந்த ஜீப்பில் கட்டிக் கொண்டு காட்டுமன்னார் குடியின் வீதிகளில் போனபோது கண்ட காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின. பல தேர்தலைக் கண்ட கைச் சின்னம் வரையப்பட்ட சுவர்கள் பளிச்சென்று தெரிந்தன. ஆனால் மணிச்சின்னம் வரையப்பட்ட சுவர்கள் அதிகம் தென்படவில்லை. சுவர்களில் மணி வரையப்படாத நிலையில் சின்னம் அறிமுகமாவது சிரமம் என்று பேசிக் கொண்டோம். ஆனால் அடுத்த நாள் கிராமங்களுக்குப் போன போது இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு குடிசை வீட்டு முன்னாலும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு வேட்பாளரை வரவேற்கக் காத்திருந்தனர் பெண்கள். குலவைகள் , ஆரத்திகள், சூடம் காட்டுதல் என்று நகர்ந்த போது நான் தெருக்களின் கோலத்தைக் கவனித்துக் கொண்டே போனேன். ஒவ்வொரு  கோலத்திற்குள்ளும் மணிச் சின்னம் தூக்கலாகத் தெரிந்தது. கோலம்போடும் கைகள் மணிச்சின்னத்தை லாவகமான ஓவியக் கலைஞர்களின்  கைவண்ணம் போல  விதம்விதமாகத் தீட்டியிருந்தன. அந்தக் கோலங்களும் ஆரவாரமும் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தன. ஆனால் சொந்தக்கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சிக்காரகளும் தொடர்ந்து அதிருப்தியையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களின் அதிருப்திக்கு வெளிப்படையான காரணம் பணம் செலவழிக்கப்படவில்லை என்பதாக இருந்தது.

நமது தேர்தல்களில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை பணம் செலவழித்த வேட்பாளர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். எங்கள் கிராமத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ; சாவடி கட்டுங்கள்; கோயில் கட்ட நிதி உதவி செய்யுங்கள் என்றுதான் கேட்கிறார்களே தவிர என்னுடைய ஓட்டுக்கு இவ்வளவு பணம் தாருங்கள் என்று கேட்கும் மனம் இன்னும் வரவில்லை. வாக்களிக்கும் வாக்காளர்கள் வேட்பாளரிடமிருந்து பணத்தை எதிர்பார்த்து நிற்க வில்லை என்பது இன்றும் உண்மையாகவே இருக்கிறது. வாக்களிப்பதற்குப் பணம் வாங்குவது குற்றம் என்றே பெரும்பாலான வாக்காளர்கள் கருதுகின்றனர். தனிநபர் ஒழுக்கத்தை- பணம் சார்ந்து மதிப்பீடுகளை இழந்துவிட கிராமத்து மனிதர்கள் தயாராக இல்லை. ஆனால்  அந்த மக்களின் பெயரைச் சொல்லிக் கட்சிக்காரர்கள் என்ற அடையாளம் பூண்ட அரசியல் வாதிகள் தான் தேர்தல் காலத்தைப் பணம் புரளும் காலமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். பணத்தை எதிர்பார்த்து, பணத்தை மையப்படுத்தி வேலை செய்வதிலாவது சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற வேறுபாடுகள் இருக்குமா என்று தெரியவில்லை. தனிநபர்களை மையப்படுத்தி- குடும்பத்தை மையப் படுத்தி நடத்தப்படும் பெரும் அரசியல் கட்சிகளின் தொண்டர்களுக்கும் குட்டித் தலைவர்களுக்கும் அந்த எண்ண ஓட்டம் இருப்பது ஆச்சரியமானதல்ல. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள், விடுதலை எனச் செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளிலேயே பணத்தை மையப்படுத்திப் பணியாற்றுவது என்ற போக்கு பரவியிருப்பது ஒட்டு மொத்தச் சமூகத்தையும் பணம்சார்ந்த மதிப்பீடுகளே நிறைத்துள்ளன என்ற அபாயத்தைத் தெரிவிக்கும் குறியீடாகப் புரிந்து கொள்ள வேண்டியது தான்.
அரசாங்கத்திடம் அதிகம் எதிர்பாராத மனிதர்களான கிராமத்து அப்பாவிகளின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் நடுத்தரவர்க்கத்து நகரவாசிகள் தான். சம்பளங்கள், சலுகைகள் எனப் பணமாகவும் வளர்ச்சிகள், வாய்ப்புகள், ஆடம்பரங்கள், அழகுணர்வு வெளிப்பாடுகள் என அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருமளவு உரிமையாக்கிக் கொள்ளும் இவர்களின் தேர்தல் பங்களிப்புகூட முழுமையானதல்ல. கருத்துக் கணிப்பு களில் கவனம் செலுத்தும் அளவுக்குக் கூட வாக்களிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இந்தத் தேர்தலில் ரவிக்குமாருக்காக மேடையேறிப் பேசிய பேராசியர் கல்யாணியின் உணர்ச்சி ததும்பிய உரை இதுவரை நான் கேட்காத ஒன்று. பல தடவை அவரது பேச்சைக் கேட்டிருக்கிறேன். அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கிண்டலடிப்பதில் வாய்தேர்ந்தவர். இல்லையென்றால் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டும் அளவுக்குக் கோபத்தை  வார்த்தைகள் இல்லாமலேயே வெளிப்படுத்தக் கூடியவர்.அவர் பேசும்போது,  ‘இதுவரை நான் தேர்தலில் ஓட்டுப் போட்டதில்லை; இப்பொழுதும் நான் போடப் போவதில்ல; காரணம் நான் வாக்களிக்கத் தக்க வேட்பாளர் எனது தொகுதியில் நிற்கவில்லை. ஆனால் உங்கள் தொகுதி வேட்பாளர் வாக்களிக்க வேண்டியவர்’ என்று வலியுறுத்திப் பேசும் போது அவர் குரல் தழுதழுத்தது. மனிதர்கள் மட்டுமல்ல; மாமனிதர்களும் உணர்வுகளுக்குள் பயணம் செய்யும் தருணமாக அதை நினைத்துக் கொண்டென்.
நண்பர் ரவிக்குமார் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆகிவிட்டார். சபையில்  உரைகள் நிகழ்த்திவதும் வெளிநடப்புச் செய்வதும் அவரது பணிகளில் ஒன்றாக இருக்கலாம்.வாய்ப்புக் கிடைத்தால் மாதவி சிலை, நூலகங் களுக்கு அதிகம் நூல்கள் வாங்குவது போன்ற கோரிக்கைகளையும் அவர் எழுப்பக் கூடும். சபைக்கு உள்ளே பெரிதளவு வித்தியாசங்களைக் காட்டும் வாய்ப்பு அவருக்கு வாய்க்கும் என்று எதிர்பார்ப்பது இப்போதைக்கு அதிக ஆசைதான். ஆனால் சபைக்கு வெளியேயும் காட்டுமன்னார்குடித் தொகுதிக்குள்ளேயும் ஒரு வித்தியாசமான எம்.எல்.ஏ. வாக அவரால் வலம் வர முடியும். எழுத்தாளராக ஊடகங்களில் வலம் வருவது போலவே கிராமங்களிலும் அவர் வலம் வரலாம். அடிப்படை வசதிகளுக்கான பணிகளோடு கற்பனை வளர்ச்சியையும் கலை ஈடுபாட்டையும் தொகுதி மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் அவர் கவனம் செலுத்தலாம். காட்டுமன்னார்குடி இளைஞர்களுக்கான கலைவிழாக்களும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் பயிலரங்குகளும் பட்டறைகளும் மேடை யேற்றங்களும், அந்தத் தொகுதியின் அடையாளத்தை வேறொன்றாக ஆக்கிக் காட்டும். ஒரு ஓவியக் கலைஞனை , சிற்பியை, நாடகக் காரனை அழைத்துப் போய்க் கிராமத்து மனிதர்களோடு உறவாடவிட்டு அனுபவம் தந்த ஒரு அரசியல்வாதியைத் தமிழகம் கண்டதில்லை. ஒரு கவிஞனின் கவிதையை  அவன் வாசிக்க, கூடியிருக்கும் மக்கள் திருப்பிச் சொல்லிச் சந்தோசம் கொண்ட காட்சிகளைக் கேரளத்தில் பார்த்திருக்கிறேன். அந்த வாய்ப்பைத் தமிழ்  எழுத்தாளர்களுக்கும்  கவிகளுக்கும்  தருவதின் மூலம் காட்டுமன்னார்குடி மக்களின் நாவுகளில் நவீனத்  தமிழ்க் கவிதையைப் புரட்டி எடுக்கலாம். அப்படிப் பட்ட புரட்டுதலில் அந்தக் கவிதையின் உணர்வும், சேதியும் சேர்ந்து கொள்ளாமலா போகும்.? ரவிக்குமார் என்ற சட்டமன்ற உறுப்பினரிடம் வித்தியாசமான அணுகுமுறைகளைத் தமிழகம் எதிர்பார்க்கத் தான்செய்யும்.==========================================================

                                                                                        நன்றி: காலச்சுவடு /2006

No comments :