April 23, 2016

ஆடப்படும் பந்துகள்

எல்லா நிகழ்வுகளுக்கும் இரண்டு கோணங்கள் உண்டு. எந்த முடிவுகளுக்கும் இரண்டுக்கு மேற்பட்ட பார்வைகளும் இருக்கும். அதிலும் வெகுமக்களின் முடிவால் தீர்மானிக்கப்படும் பொதுத்தேர்தல்களில் இதுதான் முற்றமுழுதான முடிவு என்று சொல்லிவிடமுடியாது. வேட்பாளர் தேர்வுகளையும் அறிவிப்பையும் கவனித்தவர்களுக்கு இது எளிதாகப் புரியும். 
ஒருபுறம் சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் அறிவித்த கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களும் மாறுகின்றன.
இதுதான் எனது தொகுதியெனப் பிடிவாதம் பிடித்த வேட்பாளர்களுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் செய்திகளாகின்றன. கட்சிகள் எடுக்கும் முடிவை நடுநிலையாளர்கள் எனச் சொல்பவர்கள் சமூக ஊடகங்கள் வழி மாற்றிவிட முயல்கிறார்கள். திடீரென்று அரசியல் களத்தில் இறக்கப்படும் நபர் திசைதெரியாமல் குழம்புவதும் நடக்கிறது. 
இதனை மக்களாட்சியின் பக்குவநிலையென்றும் நீங்கள் சொல்லலாம்; இல்லையென்றால், தனிநபர்களின் செல்வாக்கு கட்சியின் அடையாளத்தைக் கடந்து நிற்கிறது என்றும் வாதிடலாம். பரப்புரையைத் தொடங்கிய பின்னும் வேட்பாளர்கள் மாற்றம் என்பது இந்தத் தடவை அதிகம். அறிவித்த கட்சியே மாற்றுவது ஒருபக்கம் என்றால், அறிவிக்கப்பட்டவர்கள், ‘ நான் போட்டியிட விரும்பவில்லை’ எனச் சொல்லிப் பின்வாங்குவதும் நடக்கிறது. ‘அறிவிக்கப்பட்டவர் சரியான வேட்பாளர் அல்ல’ எனக் கட்சிக்காரர்களே எதிர்ப்புக் காட்டிப் போராட்டம் நடத்தும் நிலையும் முந்திய தேர்தல்களில் இல்லாத அளவுக்குக் கூடியிருக்கிறது. வேட்புமனுதாக்கலுக்குப் பிறகும்கூட மாற்றங்கள் இருக்கலாம். திரும்பப் பெறும் நாளில்கூட அதிகாரப் பூர்வ வேட்பாளரின் மனுவை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டுப் பதிலிவேட்பாளரையே அதிகாரப் பூர்வ வேட்பாளராக்கலாம். இன்றிலிருந்து இன்னும் 10 நாட்கள் இந்தத் தடுப்பாட்டங்களும் அடித்தாடுமாட்டங்களும் தொடரப்போகின்றன.

மாறுதல்களும் மாற்றங்களும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். வாக்காளர்களை நோக்கிவரப் போகும் வேட்பாளர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருக்கவேண்டும். ஆனால் அதை மட்டுமே கவனிக்க வேண்டுமா? என்றால், அதையும் தாண்டி வாக்காளர்கள் நினைத்துப் பார்க்கவேண்டியன சில உள்ளன. இவை இலட்சிய நோக்கம் கொண்ட எதிர்பார்ப்புகள் அல்ல: எளிய எதிர்பார்ப்புகள் தான்.
• நமது வேட்பாளர்கள், தமிழகத்தின் அரசியல் சூழல் மூலம், சமூக நல்லிணக்கம் உருவாக வேண்டுமென நினைப்பவர்களாக இருக்கவேண்டும். 
• கடந்த கால் நூற்றாண்டுகளாகப் புதிய பொருளாதார நடைமுறைகள் அமுலில் உள்ளன. அவற்றில் நேர்மறைக் கூறுகளும், எதிர்மறைக் கூறுகளும் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு விவாதித்துக் கொள்ளுவன கொள்ளவும், தள்ளுவன தள்ளவும் தெரியவேண்டும். 
• மனிதவளத்தை உருவாக்கும் கல்வி நிறுவனங்கள், மொழிக்கொள்கைகள், கற்கைமுறைகள் போன்றவற்றிற்கு முதன்மை கொடுத்துச் செயல்படுகிறவராக இருக்கவேண்டும். 
• சமூகத்தில் நிலவும் ஆண் - பெண் பால் வேறுபாட்டையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் களைவதற்கான கருத்துருக்களையும் திட்டங்களையும் முன்மொழிபவராக இருக்கவேண்டும்.

இவையெல்லாம் பரந்தபட்ட எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகள் தமிழகம் தழுவியன. இந்த எதிர்பார்ப்புகளைவிடவும் முக்கியமான எதிர்பார்ப்புகள் சில உள்ளன. அவை நமது ஒவ்வொருவரின் அடிப்படைத்தேவைகளோடு தொடர்புடைய எதிர்பார்ப்புகள்.
• முதன்மையான எதிர்பார்ப்பாக இருப்பது நல்ல குடிநீர். விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் நல்ல குடிநீர் கிடைக்கவில்லை என்பது நமது அரசுகளின் ஆகப்பெரும் தோல்வி. நமது வீடுகளுக்குத் தேவையான குடிநீரையும் புழங்கும் நீரையும் தந்து உடல்நலம் காக்கும் உறுதியை நமது வேட்பாளர்கள் தரவேண்டும்.
• அதற்கிணையான இன்னொரு எதிர்பார்ப்பு நல்ல சாலைகள். நமது வீட்டிலிருந்து வெளியேறிப் பணியிடத்திற்குச் சென்றுவரத்தேவையான நல்ல சாலைகள் வேண்டும். 
• நமது உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாகக் கவனிக்கத்தக்க மருத்துவமனைகளின் அருகிருப்பு அடுத்த தேவை. 
• நமது உடல் உழைப்பையும் அறிவுழைப்பையும் பயன்படுத்திக்கொள்ளும் தொழிற்கூடங்களை நாம் இருக்குமிடங்களில் தொடங்கும் மனநிலையை நமது வேட்பாளர்கள் உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும். 
இத்தகைய புரிதல்களைக் கொண்ட வேட்பாளர்களை நமது அரசியல் கட்சிகள் நிறுத்தியிருக்கின்றனவா? இல்லை; நிறுத்தவில்லை. நிறுத்தப்பெற்ற வேட்பாளர்களில் இவற்றைப் புரிந்துகொண்டவர்களை அடையாளம் காணவேண்டும். அதற்காக வாக்காளர்கள் சின்னச்சின்ன முயற்சிகளை எடுக்கலாம். நம்மை நோக்கி வரும் வேட்பாளர்களை அழைத்து அவரது தாகத்துக்குத் தண்ணீரோ, ஒரு சொம்பில் மோரோ கொடுத்து உபசரிக்கலாம். நமது குடியிருப்பு எதுவாயினும் -அது குடிசையாயினும் மாளிகையாயினும் உள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசலாம். இப்போதே பேசாதவர் அதிகாரமிக்க சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் நம்மோடு பேசவா போகிறார்? ஒவ்வொருவரும் பேசவில்லையென்றாலும் ஒரு குழுவாக- தெருவாக - கிராமமாக நின்று நாம் பேசவேண்டும். அவர் கேட்கவேண்டும். தேர்தல் பரப்புரையும் மக்களாட்சி நடைமுறையும் ஒருவழிப்பாதையெல்ல என்று உணர்த்தவேண்டும்.

அந்த உரையாடல்களில் இவையெல்லாம் எங்கள் தேவைகள்; இவைகளை நீங்கள் நிறைவேற்றித் தரமுடியுமா? என்று கேட்கக் கூட வேண்டாம். இந்தத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியவை என்பதை உணர்ந்துள்ளாரா என்றாவது சோதிக்கவேண்டும். இதுதான் வாக்காளர்களின் கடமை. வாக்காளர்களின் அதிகாரம் வாக்களிக்கும்வரைதான் வாக்கை அளித்து மையப்பூசிக்கொள்ளும்போது நமது அதிகாரம் கைமாறிவிடும். நமது கடமையைச் சரியாகச் செய்வதிலிருந்து வேட்பாளர்களின் கடமைகளை உணரச்செய்யலாம்.

No comments :