April 23, 2016

தெறித்து விழும் அடையாளக்குச்சிகள்

சொல்லப்படுவது அதிகப்பரவல். ஆனால் நடைபெறுவது  அதிகார உருவாக்கம்.  உலகம் முழுவதும் தேர்தல்கள் அதிகார உருவாக்கமுறைகளாகவே இருக்கின்றன. மனிதர்கள் இதுவரை கண்டறிந்ததில் மிகக்குறைவான கெடுதல் கொண்டது என்ற நம்பிக்கை இருப்பதால், தேர்தல் அரசியல் செல்வாக்கோடு இருக்கிறது.  
இந்தியத் தேர்தல்கள் இருவழி வழி நடப்புகள். ஒரு வழி கட்சி மற்றும் சின்னம். இன்னொன்று வேட்பாளர்கள். சின்னங்கள் வழிப்பயணம் மையப்படுத்தப்பட்டது. வேட்பாளர்வழிப் பாதை மையமழிப்பது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிகப்படியாகக் குத்துவாங்கும் சின்னம் வெற்றிச் சின்னம். அதிகமான நபர்களைக் கண்டுபேசி நம்பிக்கைக்குரியவராகும் வேட்பாளர் வெற்றியாளர். தேர்தல்வழி அதிகாரத்தில் இந்த இருவழிகளிலும் ஒருவர் பயணம் செய்தாகவேண்டும்.
சின்னங்களை அறிமுகப்படுத்துவதில் இருக்கிறது கட்சிகளின் திறமை. ஒரு கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தத் தேவை குரல். அந்தக்குரல் வசீகரமான முகத்தின் குரலாக இருக்கவேண்டும் என்பது வெகுமக்கள் ஜனநாயகத்தின் அரிச்சுவடி. வசீகரமான முகத்தின் வழியாக வரும் வசீகரக்குரலை வாக்காளர்கள் நம்புவதில் இருக்கிறது ஒருகட்சியின் உயிர்நிலை. நம்பிக்கையூட்டும் வசீகரக் குரலைக் கொண்ட தலைமையே போதுமென்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்று கருதித்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அறிஞர்கள் வாக்காளர் வழியையும் பரிந்துரைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அம்சத்தைப் பார்க்காதவர்கள் மட்டுமே இந்தியாவுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதிதுவப் பரிந்துரை செய்வார்கள். விகிதாச்சாரப் பிரநிதித்துவம் இப்போதிருக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கூட்டவே செய்யும். கட்சியின் தலைமையை அனுசரித்துப் போகும் நபர்கள் மட்டுமே உறுப்பினர்கள் ஆவார்கள். இப்போதிருக்கும் வேட்பாளர்கள் வழித்தேர்தலில் தனது தொகுதியில் நடக்கும் கல்யாணம், காதுகுத்து, சாவு வீடு எனப் போய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உறவை வளர்த்து உறுப்பினராகத் திகழ்ந்த தாமரைக்கனிகளுக்கும், ஒரு தொகுதியின் செல்லப்பிள்ளையாவதின் மூலம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுவிட முடியுமென நம்பும் ஜோதிமணிகளுக்கும் வாய்ப்பு உண்டு.
 அதிருக்கட்டும். ஏறத்தாள முக்கியக்கட்சிகளெல்லாம் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. கட்சிகள் வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்துள்ளன என்று அலசிப்பார்க்கலாம்?
நானே எல்லாம்; கட்சியே முக்கியம்; கொள்கைகளே வழிநடத்துகின்றன என்றெல்லாம் கட்சிகள் சொல்லிக்கொண்டாலும், கட்சியின் சின்னமும் தலைமையும் வாக்குகளை வாங்கிவிடப் போதுமானவையல்ல என்பது எல்லாக்கட்சிகளின் தலைமைக்கும் தெரியும். கட்சிகளின் வாக்குவங்கி என ஊடகங்கள் சொல்வதைக் கட்சிகள் அப்படியே நம்பிக்களம் இறங்குவதுமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்தப்படும் வேட்பாளர் எத்தனை பேரைச் சந்திக்க முடியும்? எத்தனை பேரைத் தொட்டுப் பேசமுடியும்? எத்தனை பேரோடு தொடர்ந்து உறவில் இருப்பார்? என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டே வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்கள்.
ஒரு தொகுதிக்குள் அதிகப்படியான எண்ணிக்கைகொண்ட சாதிகளிலிருந்து தங்கள் வேட்பாளர்கள் நிறுத்துவது பாதுகாப்பான விளையாட்டு எனக் கருதுவது கட்சிகளின் பொதுமனநிலையாக இருக்கிறது. ஒரு கட்சி நிறுத்தும் வேட்பாளரின் சாதி அபிமானம் ஒருவரிடம் குவியும் எனத் தோன்றும்போது அத்தொகுதியிலிருக்கும் அடுத்த பெரியசாதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கடந்தகாலக் கணக்குகள். இந்திய சமூகம் சாதிய சமூகம் என்பதை உறுதிசெய்யும் மனநிலை இது.  இந்தத் தேர்தலில் சாதிப் பின்னணியோடு, செலவுசெய்யும் திறனையும் அறிந்துகொண்டு வேட்பாளர்கள் தேர்வு நடந்திருக்கிறது. சாதிய- நிலவுடைமைப் பிடிமானத்தோடு முதலாளியக் கட்டுமானத்தை உள்வாங்கும் போக்கு இது.  இந்தப் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கியது திராவிட முன்னேற்றக்கழகம். எல்லாவற்றிலும் தாய்க்கழகத்தைப் பின்பற்றும் அ இ அதிமுக, அதனையே அப்படியே உள்வாங்கிக் கொள்வதோடு இன்னும் கூடுதலாக எட்டடி பாய்கிறது.
தலைமையே/மையமே முக்கியம் எனக் கருதும் ஆளுங்கட்சி 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம் வரையப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது; இரட்டையிலைச் சின்னத்துக்கும், அதனை உருவாக்கிப் பரப்பிய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும், இந்நாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்காகவும் தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்  என்ற நம்பிக்கை அதன் பின்னே இருக்கிறது. அந்த நம்பிக்கை கட்சித்தலைமைக்கும் உண்டு; தொண்டர்களுக்கும் உண்டு. என்றாலும் அந்த நம்பிக்கை போலியானது என்பதை ஒவ்வொரு நாளும் மாற்றிவிளையாடும் வேட்பாளர் விளையாட்டு உறுதிசெய்கிறது.
ஒருவேளைச் சோற்றுக்கு வழிசெய்யும் திட்டங்களை முன்வைத்து, விலையில்லா வீட்டுபயோகச் சாதனங்கள், இலவசங்கள், மானியங்கள் தேவைப்படும், பெருங்கூட்டத்தை நோக்கிப் பேசக்கூடிய -உறவாடக்கூடியவர்களே அஇஅதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறார்கள். பெருங்கூட்டத்தை நாடிப் பேசும் -உறவாடும் தகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தால், அடுத்த தேர்தலில் வாய்ப்பைப் பெறுகிறார்.  அந்தத் தகுதியை இழந்துவிட்டதாகத் தலைமை  கருதும்போது வாய்ப்பை இழக்கிறார்.
இந்தக் கறார்த்தனத்தில் ஆளுங்கட்சியின் பலம் இருக்கிறது. முதல் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட 234 பேரில் செம்பாதி முகங்கள் புதுமுகங்களாக இருந்தன. புதுமுகங்கள் என்ற சொல்வதால் அரசியலுக்கே புதியவர்கள் என்று பொருளல்ல. சட்டமன்றத் தேர்தலுக்குப் புதியவர்கள். ஆனால் கட்சிக்காக, கட்சியின் செயல்பாட்டுக்காக; தலைமைக்காக - தலைமையின் கட்டளையை ஏற்றுத் தங்களின் இலக்கு வாக்காளர்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்த பழைய முகங்கள். இந்தப் பெருங்கூட்டம் தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட சாதித் திரட்சிகளாக இருக்கின்றன என்பது சமூக யதார்த்தம். அந்தத் திரட்சிகள் சாதிகளாக இருக்கும்போது மூர்க்கம் கொண்டவையாகவும், அரசியல் சக்தியாக ஆகும்போது மூர்க்கம் தவிர்ப்பனவாகவும் ஆகின்றன என்பதும் சுவையான நகைமுரண். இதனைச் சாதுர்யமாக உருவாக்கிக் கையாளும் திறன்கொண்ட தலைமை முன் நிறுத்தும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் எப்படி வாக்காளர்களைச் சந்தித்து உறவாடப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி. இந்தக் கேள்வி தோன்றியதாலும், பழக்கமான குதிரைகளே ஓடக்கூடியன என நம்புவதாலும், ஏற்கெனவே பதவியில் இருந்து பணம் சம்பாதித்த பழைய முகங்கள் திரும்பவும் வேட்பாளர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு காரணமும் இந்த மாற்றங்களின் பின்னே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களுக்காக வாக்காளர்களிடம் நேரடியாகப் பேசிவந்த தலைமை அந்தச் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
2016 சட்டமன்றத் தேர்தல், இதுவரைக் கண்டிராத  புதிய பரிமாணத்தை உருவாக்கிவிட்டது . ஆளுங்கட்சியின் முதன்மை எதிர்க்கட்சி எது? என்ற குழப்பம் ஊடகங்களுக்கும் வாக்காளர்களுக்கும் வந்துவிட்டது. ஆனால் ஆளுங்கட்சிக்கு இல்லை என்பதுபோலப் பாவனை செய்கிறது. முதன்மை எதிராளி திமுகவே என்பதானப்  பாவனை வெற்றியை எளிதாக்கும் சூத்திரமாகத் தோன்றியிருக்கலாம். தமிழ்ச் சினிமாவில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பின்பற்றும் அதே உத்தி. ரஜினிகாந்தின் வில்லனாக அதிகப்படியான படங்களில் ரகுவரனின் தேர்வுகளையும், கமல்ஹாசனின் வில்லனாக நாசரின் தேர்வையும் நினைத்துக்கொள்ளுங்கள். என்னை எதிர்க்க எனக்கிணையான - என்னைப் போன்ற நடிப்புப்பாணிகள் கொண்ட வில்லன் வேண்டும் என நினைப்பதின் வெளிப்பாடு. அஇதிமுக X திமுக  இருமுனை எதிர்வு இரண்டு கட்சிகளுக்கும் தோதானவை என்பது வரலாறு. நிர்வாகத்தைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது, பொதுத்துறைகளை நாசம் செய்வது, பொதுவளங்களை எந்தவிதத்திட்டமிடலும் இல்லாமல் தனியார் வசம் ஒப்படைப்பது, மக்களுக்கு எளிய பரிசுகளை அரசின் திட்டங்களாக அறிவிப்பது என இரண்டும் ஒன்றுக்கு இன்னொன்று எதிர்வு என்பது அவைகளே உருவாக்கிக் கொண்டவை.
 வரலாறு நேர்கோட்டில் நகர்வதில்லை. இந்தத் தேர்தலில் இதுவரை அரசியல் அதிகாரத்தில் பங்குபெறாத - அதிகாரத்தை ருசித்துப் பார்க்காத குடும்பங்களைச் சேர்ந்த - சமூகங்களைச் சேர்ந்த மனிதர்களின் தலைவர்கள் ஒரு கூட்டணியாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் அத்தகைய ஆசையோடு அரசியலில் இறங்கியிருக்கும் மனிதர்களை வேட்பாளர்களாகக் களம் இறக்குகிறார்கள்.  அவர்கள்  தமிழ்ச் சமூகத்தின் சாதிப் பிரிவுகளில் பெரும்பான்மைச் சாதிகளிலிருந்து வருபவர்களாக இல்லை. ஆனால் விளிம்புநிலை மனிதர்களாக- ஒடுக்கப்பெற்றவர்களாக - பெண்களின் உழைப்பில் குடும்பம் நடத்தும் உதிரிப் பாட்டாளிகளாகத் தங்களைக் காட்டுவார்கள். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை எப்படிச் சந்தித்துத் தங்களை அறிமுகம் செய்துகொள்ளப்போகிறார்கள்; நம்பிக்கை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது அவர்களின் வெற்றி வாய்ப்பு.
சென்ற தேர்தலில் இரண்டாமிடத்தைத் தவறவிட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் முதலிடத்தை நோக்கிய பயணத்திற்கான திட்டமாக நம்புவது அதன் சொல்லாடல்களையே. இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; எப்போதும் அதன் தேர்தல் அறிக்கையும், அதனை முன்வைக்கும் தலைவர் மு.கருணாநிதியின் ஆற்றலுமே முதன்மையாக நிற்கும். அவரால் அடையாளம் காட்டப்படுபவர்களே வேட்பாளர்கள், அந்த வேட்பாளர்கள் எப்போதும் கட்சியின் அமைப்புகளில் அதிகாரம் செலுத்தும் குடும்பத்தவர்களாகவே இருந்துவருகிறார்கள். இந்தமுறையும் மாறவில்லை. தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரசும் இதே நிலையில் தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளது.

கட்சியதிகாரத்தையும் அரசதிகாரத்தையும் பிரித்துப் பார்க்காத இந்த மனநிலை எல்லா நேரமும் வெற்றியைப் பெற்றுத் தரும் ஒன்றல்ல. சில தேர்தல்களின் சூழலில் வெற்றியையும் பெற்றிருக்கிறது.  இந்தப் போக்கை -கட்சியின் அதிகார மைய உருவாக்கப்போக்கை ஏற்காததைத் தான் கட்சிவேட்பாளர்களை ஏற்காமல் நடக்கும் போராட்டங்கள் காட்டுகின்றன. ஐபிஎல் போட்டிகளைவிடவும் கூடுதல் சுவாரசியம் கொண்டதாக ஆகிக்கொண்டிருக்கிறது தமிழகத்தேர்தல். ஐபிஎல் ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களால் பதம்பார்க்கப்படும் அடையாளக்குச்சிகளில்-ஸ்டம்புகளில் ஒளிரும் வெளிச்சத்தைப் போல தேர்தல் களத்தில் விழப்போகும் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் வாக்காளர்கள்.

No comments :