March 19, 2016

ஒருமாதிரிப்பெண்கள்


மார்ச் 8. உலகப்பெண்கள் தினம். இப்படியொரு தினத்தை உருவாக்கி முன்மொழிந்து கொண்டாடிய ஆண்டு 1975. முன்மொழியப்படும் ஒவ்வொன்றையும் ஏற்பதும் நிராகரிப்பதும் நடைமுறைச் செயல்பாடு. நடப்புவாழ்க்கையில் எதிர்ப்படும் நெருக்கடியில் இரண்டிலொன்றைத் தேர்வுசெய்து விட்டு நகர்வது  ‘இயல்பு’ என நம்பப்படுகிறது. இயல்பானது எனக் கேள்விக்குள்ளாக்கப்படாமல் விட்டுவிட்டவை ஏராளம். உன்னைப்பற்றி/பெண்ணைப் பற்றிச் சொல்பவைகளும் சொல்லப்பட்டவைகளும் இயல்பானவை என்று நம்பவேண்டாம் எனக் கூவிக்கூவிச் சொல்லிக்கொண்டிருக்கும் நாள் மார்ச் 8.

பெண்களை மொழிந்தனவும் மொழிவனவும் பற்றிக் கவனிக்க வேண்டுமெனச் சொன்னவர்களின் வேலை 1975 இல் தொடங்கியதில்லை. அதற்கும்  அரைநூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கி, தன்னைப்பற்றியும் தான் பேசப்பட்ட விதம்பற்றியும் பேசிப்பேசி உலகப்பரப்பில் தன் இருப்பு எவ்வாறிருக்கிறது என்பதை உலகத்திற்கு உணர்த்திய நாள் மார்ச் 8, 1975. இந்த நாளைப் பற்றியும் மொழிந்தார்கள்; அந்த நாளுக்குப் பின்னரும் மொழியப்படுகிறாள் பெண்.
பெண்ணை மொழியாத இலக்கியம் ஏது? பாதாதிகேசமாகப் பெண்ணை மொழிந்த கவிதைப் பாரம்பரியம் நம்முடையது.  செம்பாதிக்கும் அதிகமாகவே அவளை மொழிந்திருக்கிறது. அவளை உடலாக மட்டுமே தமிழ்க் கவிதை மொழிந்தது என்று சொல்லிவிட முடியாதது. கனன்று எரியும் நெருப்புத் துண்டமாக்கித் தன்முலையைத் திருகியெரிந்த கண்ணகியையும், பசித்துயிர்போக்க அமுதத்தட்டோடு அலைந்த மணிமேகலையையும் மொழிந்த மொழி நமது தமிழ். அத்தமிழில் உலகத்து ஞானமெல்லாம் வந்தபின் உருவான இலக்கிய வடிவம் சிறுகதை. தமிழின் முதல் சிறுகதையான மங்கையர்க்கரசியின் காதல் தொடங்கித் தன்னுணர்வோடு பெண்ணை முன்மொழியும் இலக்கியவடிவாமாக இருக்கிறது சிறுகதை. தமிழ்ச் சிறுகதைகள் பெண்ணை - பெண்ணெனும் உடலை, பெண்ணெனும் கருத்தை, பெண்ணின் மனதை, பெண் வெளியை, பெண்ணின் நினைவை, பெண்ணின் இருப்பை, பெண்ணின் நினைப்பை எவ்வாறெல்லாம் மொழிந்தன எனப்பேசலாம்.
பல்வேறு கதைகளை ஒன்றாக்கித் தொகுத்த ஒரு தொகுப்பில் இந்த இரண்டு கதைகளையும் வாசித்தேன். தொகுப்பின் தலைப்பு: தில்லிச் சிறுகதைகள். (தொகுத்தவர்: முனைவர் ச.சீனிவாசன், 2014, காவ்யா) முதல் கதையினை எழுதியவர் பிரபலமான எழுத்தாளர் சுஜாதா, மனைவி பெயரில் எழுதிய ஆண் எழுத்தாளர். தலைப்பு: பெண்கள் வருஷம்; இரண்டாவது கதையின் தலைப்பு: அவள் ஒருமாதிரி. எழுதியவர்- லட்சுமி ரமணன், கணவர் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்ட பெண் எழுத்தாளர்.
இந்தியத் தலைநகர் தில்லி மாநகரில் நிகழும் இவ்விரு கதைகளிலும் வரும் பெண்கள் இருவரும் தமிழச்சிகள் அல்ல; பஞ்சாபிகள். இருவரையும் உருவாக்கிமொழிந்த கதையாசிரியர்கள் அப்பெண்களைப் பஞ்சாபிகள் என்று சொன்னதற்குத் தனித்துவமான காரணமெதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை. பேசும் மொழியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இருவரும் பெண்கள்.
சுஜாதா உருவாக்கிய பெண்ணின் பெயர் ப்ரியா; திருமதியாகாதவள். லட்சுமிரமணன் முன்மொழியும் பெண்ணின் பெயர் நிஷா: திருமதி (மிஸஸ்) சோப்ரா. திருமதியாகாத பெண்; திருமதியான பெண் என்பதே மொழிதலின் அடையாளங்களைக் கட்டமைக்கும் முதல் கருவியாகிவிடுகின்றன. திருமதியின் இயங்குவெளி குடும்பம்; அதன் பருண்மையான வெளி வீடு. திருமதியாகாதவளின் இயங்குவெளி குடும்பத்திற்கு வெளியே. பருண்மையான வெளியாக ஒன்றுதான் இருக்கும் என்பதில்லை. மாணவியாக இருந்தால் வகுப்பறையாகவும் கல்விநிறுவன வளாகமாகவும் அவள் பயணம் செய்யும் வாகனங்களாகவும் இருக்கலாம். பணிக்குச் செல்பவளாக இருந்தால், வளாகச் சூழல் மாறும்; வாகனங்கள் கூட மாறலாம். இந்த வேறுபாடுகள் வழியாகப் பெண்ணின் சமூக அடையாளம் உருவாக்கப்படுகிறது.
திருமதி நிஷா சோப்ராவை உருவாக்கிய லட்சுமி ரமணன் அவளை ஒரு மனைவியாக உருவாக்கி முன்மொழிகிறார். முன்மொழியும்போதே முதல்வாக்கியமாக - தலைப்பாகச் சொல்வது ‘அவள் ஒருமாதிரி’ என்பது. ஒருமாதிரி என்ற தொடர்பிரயோகம் வழியாக உருவாக்கப்படும் எண்ண ஓட்டம் வாசகர்களின் மனத்திற்குள் இருக்கிறது. அவள் ஒருமாதிரி என்றவுடன் ஆணுக்கு அந்த ஒருமாதிரி உருவாக்கும் எண்ண ஓட்டம் போலவே தான், பெண்ணுக்கும் உருவாகும் என்பதில்லை.  ‘ஒருமாதிரி’ என்பது ஆணிடம், இலகுவாகத் தனது இச்சைக்கு அணுகமுடியும் என்ற எண்ணத்தை உருவாக்கலாம். ஆனால் பெண்ணிடம் அதையும் தாண்டி அவளது பலவித குணங்களையும் பற்றிய எண்ணங்களை உருவாக்கலாம்.  அந்த எண்ண ஓட்டங்களை உருவாக்கித் தரும் லட்சுமி ரமணன், திருமதி நிஷாசோப்ராவின் நடவடிக்கைகளை ’கோபக்காரி’யாக முன்வைக்கிறார். தன் குடும்பத்து உறுப்பினர்களோடு மட்டுமல்லாமல், அண்டை வீட்டாரிடமும், குடியிருப்புவாசிகளிடமும் கூடச் சப்தமாகச் சண்டையிடும் பெண்ணாக இருக்கிறாள். இப்படியிருப்பதற்கு என்ன காரணம்? இதுதான் கதாசிரியர் எழுப்பும் அடிப்படைக்கேள்வி.
நிஷாசோப்ராவின் அண்டைவீட்டுக்காரியான பிரேமா சங்கரனின் பார்வையில் சொல்லப்படும் கதை, குடியிருப்பை விட்டு இன்னொரு வெளிக்கு நகரும்போது காரணத்தைக் காட்டும் முடிச்சை அவிழ்க்கிறது. அந்த வெளி ஒரு சினிமா தியேட்டர். அங்கே நிஷாவின் கணவரின் தோள்மீது இன்னொரு பெண் சாய்ந்துகொண்டும் உரசிக்கொண்டும் இருக்கிறாள். அப்போது நிஷாவின் கதையைப் பார்த்துச் சொல்லும் பிரேமா- சங்கரன் தம்பதிகளின் உரையாடலாகக் கதை விவாதம் நகர்கிறது. அந்த உரையாடலின் மையம் இதோ:
சங்கரன் அவள் கையைக் கிள்ளி “பார்த்தாயா... கட்டினவள் ஒழுங்காக இல்லாமல் போனால், ஆணின் மனம் இப்படிப் பேதலித்துப் போகிறது” என்றான்.
“ இவன் இப்படி அலைவதால் தான் அது நிஷாவின் மனதைப் பாதித்து அப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்கிறேன் நான். அவள் கோபத்தில் கத்துவது, பொருள்களை விட்டெறிவது, எல்லாமே தன் கணவன் தன்னுடையவனாக இல்லையே என்ற ஏக்கத்தினால்தான்” என்றாள் பிரேமா.
எது சரி என்பது அவளுக்குப் புரியாத ஒன்றாக இருந்தது
அவள் ஒருமாதிரி என்ற எதிர்மறை மனநிலைத் தலைப்பை வைத்துக்கொண்டு குடும்ப அமைப்பிற்குள் வதைபடும் ஒரு பெண்ணின் மாதிரியைக் காட்டும் லட்சுமிரமணனுக்கு கதைத் தலைப்பை நேர்மறை மனநிலையோடு முடிக்கத் தோன்றியிருக்கிறது. அவள் ஒருமாதிரியாக இருக்க முழுமையான காரணம் அவள் மட்டுமல்ல என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் கதாசிரியர்.
இதற்கு மாறாக இருப்பது சுஜாதாவின் கதை. சுஜாதா, கதைத்தலைப்பு தொடங்கி கதை நிகழ்வுகளை அடுக்கும் கதைப்போக்கும் அமைந்திருக்கிறது. அக்கதைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் ப்ரியா குடும்பவெளிக்கு வெளியே இருக்கும் ஒருபெண்ணின் வகைமாதிரி.ஆண்களின் வெளியாக நம்பப்படும் பணியிடத்தில் ஆணோடு போட்டிபோடும் ஒரு பெண்ணாகப் ப்ரியாவை முன்வைக்கிறார் சுஜாதா. பணிபுரியும் போட்டிக்களத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்ட பெண்கள் என்ன செய்கிறார்கள்? என்பதை விவரித்துக்காட்டிவிட்டு, இவர்களுக்கென்று -இவர்களின் உரிமைகளுக்கென்று ஒரு தினமும், கொண்டாட்டமும் தேவையா? என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்ப முனைகிறார்.  
கதையில் இடம் பெறுவது இரண்டே பாத்திரங்கள் தான். அனந்தராமன் -ப்ரியா எனப்பெயர் சூட்டப்பட்டுள்ள இருவரும் திருமணமாகாதவர்கள். தொழில்போட்டியில் இருக்கும் இரண்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியின் ஊழியர்கள். தனது முதலாளிகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கூலி வாங்கிக் கொள்ளும் ஊழியர்கள். கூலிக்கான வேலையைச் செய்வது என்பதற்குள் மனத்தைத் தருவதுபற்றிய யோசனையில் இருப்பவர்கள். பணத்தின் தேவையைத் தொடர்ந்து உருவாக்கும் நிகழ்கால வாழ்க்கையில் மனம் பற்றிய விவாதத்திற்குள் நுழைகிறது கதை. 
மனத்தைத் தன்னிருப்பாகத் தக்கவைப்பதா? அல்லது அதன் போக்கில் சூழல் நெருக்கடியில் விட்டுவிடுவதா? என்கிற கேள்வியில் இரண்டுபேரை - ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் நிறுத்துவதன் மூலம் பெண் பற்றிய கருத்துருவைக் கட்டமைக்கிறார் சுஜாதா. ஒரே மாதிரியான சூழலில் இருக்கும் நிலையில் ஆண் தனது மனச்சாட்சிக்குக் கட்டுப்படுகிறார் என்றும், பெண் தன்னைக் காட்டிக் கொள்ளும்பொருட்டு- தன் முனைப்புக்காகத் தனது மனத்தை மட்டுமல்ல, தனது உடலையும்கூடக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாமல் இருக்கத் தொடங்கிவிடுகிறாள் என்று கதை நகர்கிறது .
தனது போட்டிக் கம்பெனி ஊழியரான அனந்தராமனிடமிருந்து அதன் ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பும் ப்ரியா, அவனைத் தொடர்ந்து வீழ்த்த முனைவதே கதையின் நிகழ்வு அடுக்குகள். தனக்கான மனைவியைத் தேர்வுசெய்து குடும்பத்தை உருவாக்கவே அவனுக்குப் பணம் தேவைப்படுகிறது. அதை அறிந்துகொண்டு, பணம் தருவதை முதல்வேலையாக முன்வைக்கிறாள். தயங்கும்போது தனியாக அழைத்துக் கொண்டு போய்ப் பேரம் பேசுகிறாள். ஆயிரம் ரூபாயில் தொடங்கி 5000 வரை பேரம் உயர்கிறது. அதற்கும் அவன் இறங்கிவராதபோது தனியாகச் சந்திக்கலாம்; என் ப்ளாட்டுக்கு நீ வரலாம்; நான் தனியாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் பேசுவதாக அவளது பாத்திரம் வடிவமைக்கப்படுகிறது.
இப்படி வடிவமைத்துக் காட்டுவதின் மூலம் பெண்கள் வருஷத்தில் கதையில் வரும் ப்ரியாவை ‘ஒருமாதிரி’ எனக் கட்டமைத்துவிடுகிறார் சுஜாதா. அவளை ஒருமாதிரியெனக் கட்டமைப்பதன் மூலம் உரிமைகள் கோரும் பெண்கள் எல்லாருமே ’ஒருமாதிரிக்குள்’ அடங்கும் பொதுக்கருத்திற்குள் அடங்கிப்போவார்கள்; அவர்களுக்கென்று எதற்கு ஒரு வருஷம்; ஒரு தினம் என்ற கேள்வியை மௌனமாக முன் மொழிகிறார் சுஜாதா. 
முன்மொழியப்படும் பெண்கள் எல்லாம் ஒருமாதிரிதான் என்றால், அது எந்தமாதிரி? அந்த மாதிரிகளை உருவாக்குவதில் ஆண்களுக்குப் பங்கில்லையா? கேள்விகள் மட்டும் இப்போது. பதில்களைத் தொடர்ந்து தேடலாம்.

 நன்றி: மின்னம்பலம்

No comments :