குற்றநீதிபற்றிய விசாரணைகள் : காப்காவின் நாய்க்குட்டி


நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத் தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.  

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக் கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம்.  அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட  காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின்  கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட  கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும்  ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும்.   வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர்  நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.
 நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில்  சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.  

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .

காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக  2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப்  பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி)  உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில்  அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள்.  அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.
நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி  குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம்  அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது.  செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத்

முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை.  நீண்ட காலமாகத் தங்களுக்குக்  குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே  அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி - நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி   நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான  குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .
========================
நன்றி: குமுதம் தீராந்தி





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்