March 27, 2016

உலக அரங்காற்று தினம்-2016

ஒவ்வொரு ஆண்டும் ஹெய்சிங்கி நகரிலிருந்து மார்ச் 27 இல் உலக அரங்காற்று தினச்செய்தியை ஒருவர் வழங்குவார். அந்த வாய்ப்புக்கிடைக்கும் அரங்கியலாளர் அந்த ஆண்டில் நோபெல் விருதைப் பெற்ற இலக்கியக்காரர் மகிழ்ச்சி அடைவதைப் போலப் பெருமையடைவார். அரங்கியல் துறையின் மிக உயரிய அங்கீகாரம் அது. இந்த ஆண்டு  அந்த வாய்ப்பு அனதோலி வாசிலியெவ்க்குக் கிடைத்திருக்கிறது.. ரஷ்யாவின் முக்கியமான நாடக இயக்குநராகவும், பேராசிரியராகவும் அறியப்படுகிறார். இப்போது ஸ்ரெடெங்கா சாலையில் இயங்கும்  மாஸ்கோ நாடகப்பள்ளியின் நிறுவகர் அவரே.
அது முன்பு மாஸ்கோவின் போவர்ஸ்கைய சாலையில் அவரால் தொடங்கப்பெற்றது. 2001 இல் அவரது நாடக்குழு இப்போதிருக்கும் இடத்திற்கு மாறியது. வாசிலிவ்யோடு இகொர் போபவ், போரிஸ் டிகோர், செர்கெய் கொய்ஸ்ஸரெவ் ஆகியோரால் திட்டமிடப்பட்ட அந்த அரங்கம் இரண்டு மாடிகளைக் கொண்டது. ஒன்று மெனகோ அரங்க வடிவத்தையும் இன்னொன்று குளோப் அரங்கையும் மாதிரிகளாகக் கொண்டவை. பெரிய சாளரங்களையும் கண்ணாடிகளையும் கொண்ட அந்த அரங்கு முழுவசதிகளும் கொண்ட ஒரு சோதனை அரங்கக் கூடம்
அனதோலி வாசிலியெவ் பணியாற்றிய அரங்கக்கலை நிறுவனங்களைக் குறிப்பிட்டால் போதும்  அவர், ரஷ்யாவில் மதிக்கப்பெற்ற பெரும் நாடக இயக்குநராக இருந்தார் என்பது புரிந்துவிடும்.  அரசு அரங்காற்றுக் கலை ஆவணக்காப்பகமும் கற்கைக்கூடமுமான லூனசார்ஸ்கி நிறுவனத்தில் பலமுறை ஆசிரியராக இருந்துள்ளார். அதல்லாமல் விளாதிமீர் கிராடின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி நிறுவனத்திலும், லியானிலிருக்கும் அரங்கியல் கலை நுட்ப உயர்நிறுவனத்திலும் கற்கையாளராக இருந்தவர் அவர்.
1968 இல் அனதோலி அரங்கியல் மாணவராகச் சேர்ந்தபோது அவருடன் பயின்றவர்கள் அந்த்ரே போபொவும் மரியா க்னெபெல்லும். 1973 இல் படிப்பை முடித்து மாஸ்கோ அரங்காற்றுக்குழுவில் இணைந்து வேலைசெய்தார். அப்போது அவர் உருவாக்கிய நாடகம் ஆஸ்வால்டின் சக்ரட்நிக்கின் தனியாள் நாடகம். 1977 முதல் ஆந்த்ரெ போபொவின் தலைமையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அரங்காற்றுக் கலையகத்தின் பணியாற்றினார்.அப்போது மார்க்ஸிம் கார்க்கியின் கதை (The First Draught of Vassa Zheleznova)யொன்றையும் விக்டர் ஸ்லாவ்கினின் கதை (The Grown Daughter of a Young Man)யையும் நாடகமாக்கிப் பெயர் பெற்றார்.1980 முதலே நாடக எழுத்து மற்றும் இயக்கம் குறித்துக் கற்பித்துவந்தார்.1982 இல் யூரி லூபிமொவின் தகங்கா அரங்காற்றுக்கழகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கே 1985 இல் அவர் தயாரித்த நாடகம் செர்செவ் (Cerceau) தழுவல் நாடகத்திற்கான சிறந்த பரிசைப் பெற்றது.
அவரது சொந்த நாடகப்பள்ளியை 1987 இல் நிறுவினார். அதன் முதல் நிகழ்வாக லூயிபிரெண்டெல்லாவின் ஆறுகதாபாத்திரங்கள் எழுதிய ஆசிரியரைத் தேடுகிறார்கள் (Luigi Pirandello's Six Characters in Search of an Author ) அந்த நாடகத்துடன் தான் தழுவி எழுதிய விக்டர் ஸ்லாவ்கின் நாடகத்தையும் எடுத்துக்கொண்டு  1987 - 88 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்தார். அவரது நாடகப்பள்ளி நடிகரின் குரல் மற்றும் உடலுக்கான சிறப்புப் பரிசோதனைச் சாலையாகக் கருதப்பட்டது. அவரே நாடகத்தன்மையற்ற பிரதிகளைத் தேர்ந்தெடுத்து அதிலிருக்கும் குரல் மற்றும் இலக்கிய மதிப்புகளைக் கற்பிப்பதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். தன்முயற்சியால் இசையைக் கற்றுக்கொண்ட வாசிலெவ், தனது படைப்புகளில் இசையொழுங்கு வரும்படி உருவாக்கினார். நாடகப்பிரதிகளில் இருக்கும் சொற்களை அதன் உள்ளர்த்தம் மற்றும் வாழ்க்கையனுபவம் சார்ந்து உச்சரிக்கும் பயிற்சிக்கான முறையியலைக் கற்றுத்தந்தார். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் இருக்கும் தொனி, ஒலியளவு, அதனை உச்சரிக்கும்போது செய்யவேண்டிய உடல் அசைவு மற்றும் நகர்வு பற்றிய ஆழமான புரிதல் பற்றிய கல்வியை வழங்கினார். தொன்னூறுகளில் மெதுவாக அவரது படைப்புகள் பன்னாட்டுக் கவனம் பெற்றன. 1992 இல் மேடையேற்றிய லெர்மாண்டோவின் நகைச்சுவை நாடகம் (Lermontov's Masquerade in the Comédie Française) ரோமில் அரங்கேற்றம் கண்டது. 1997 இல் தயாரித்த (Lamentations of Jeremiah) இத்தாலியிலும் பெர்லினிலும் அவிக்ஞான் நாடக விழாக்களில் பங்குபெற்றது. அவைகளுக்காக ரஷ்யா தேசத்தின் தங்கமுகமூடி விருதைப் பெற்றார். 1998 இல் புஸ்கினின் பிரதியொன்றை (Pushkin’s Don Juan or the Stone Guest in the Cartoucherie) நாடகமாக்கினார்.
தாஸ்தியெவ்ஸ்கியின் அங்கிள் ட்ரீம் (Uncle's Dream )  என்னும் பிரதியை 1994 இல் புடாபெஸ்டிலும்,  சைக்கோவ்ஸ்கியின் டேமா பிக்காவை ( )1996 இல் வெய்மாரிலும் ஓஸ்ட்ரோவ்ஸ்கியின் கப்பிள்ஸ் இன்னொசண்டை ( ) 1998 இல் ஹங்கேரியிலும், புஸ்கினின் ( ) மொஸார்டும் சலியிரியும் என்னும் பிரதியை 2000 இல் , மெடியா மெட்டிரியலை 2001 இலும் மேடையேற்றினார். திரும்பவும் 2005 இல் மேடிய மெட்டிரியலை நாண்டெர்ராவில் மேடையேற்றினார். 2006  இல் திரும்பவும் அவிங்ஞான் நாடகவிழாவிற்கு அழைக்கப்பட்டார்.
2006 இல் மாஸ்கோ நாடகப்பள்ளி நிர்வாகத்தோடு ஏற்பட்ட முரண்பாட்டினால் பதவிவிலகி ஐரோப்பாவிற்குப் போய்விட்டார். அங்கு பாரிஸிலும் லியான், லண்டன் போன்ற இடங்களில் நாடகக்குழுக்களோடு இணைந்து வேலை செய்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் போல்ஸ்ஹாய் அரங்காற்றுக்களத்தின் இயக்குநரால் அழைக்கப்பட்டு டான் ஜியாவன்னியின் தழுவலை மேடையேற்றம் செய்தார்.
2010 நாடகம் கற்கிறவர்களுக்காக 3 ஆண்டுப் படிப்பொன்றைத் தொடங்கினார். வெனிஸில் இயங்கிய அக்கல்வி நிறுவனம் இத்தாலிய நாடகக்காரர்களை முதன்மை இலக்காகக் கொண்டிருந்தது. என்றாலும் உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 2011 இல் போலந்து நாட்டு வ்ரொக்லொவில் இருக்கும் க்ரோட்டோவ்ஸ்கி அரங்காற்று நிறுவனம் , வெனிஸில் இயங்கிய இந்நிறுவனத்தின் நடிப்புக் கோட்பாடு மற்றும் நுட்பங்களை உள்வாங்கி ஒரு  கருத்தரங்கை நடத்தியது. அதில் இவரது மாணவர்களோடு ஐரோப்பாவில் பலநாட்டு மாணவர்களும் கலந்துகொண்டனர்.
2016 வாசிலெய்வ் மார்கெரெட் துரய்ஸின் நகைச்சுவை நாடகமொன்றை பாரிஸில் மேடையேற்றினார் (Marguerite Duras' La Musica Deuxième, in the Comédie Française in Paris ) அந்நாடகத்திற்கு நடிப்புப் பயிற்சி தருவதில் கைதேர்ந்த அவரது நீண்டகால இணைப்பணியாளர் நடாலியா - இஸ்ஸவா மொழிபெயர்ப்பாளராகவும் ஆய்வுப்பணியாளராகவும் வேலை செய்தார்.
இன்று அவர் வழங்கும் அரங்காற்றுதினச் செய்தியை வாசிக்க:
http://www.aitaiata.org/gil/2016/03/world-theatre-day-27-march-2016-message-from-anatoli-vassiliev/
 =================================
இந்த வருடம் நண்பர் கருணாபிரசாத் ஏற்பாட்டில் நடந்த உலக அரங்காற்றுதின நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அரங்கியல் பேராசிரியர்கள் சே.ராமானுஜனும் கே.ஏ.குணசேகரனும் மறைந்த ஆண்டு. அவர்களின் நினைத்துக்கொள்ளும் விதமாக நடத்தப்பெற்ற நிகழ்வில் நானும் கலந்துகொண்டு நண்பர் குணசேகரனை நினைத்துக்கொண்டதோடு உலக நாடகதினச்செய்தியையும் சொல்லிவிட்டு வந்தேன். 


========================================================= 


No comments :