March 10, 2016

கடந்து வந்த 20 வருடங்கள்: நிகழ்வுகளும் நினைவுகளும்

                                          
கடந்த காலத்தை நினைத்துக் கொள்வது, எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு ஒருவழி. தனிமனிதர்கள் தங்கள் மனத்திற்குள் செயல்படுத்தும் இந்தச் செயலை, நிறுவனங்கள் கூடிப்பேசி விவாதித்துச் செய்கின்றன. 1991 -ல்  தொடங்கப்பட்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஐந்துவருடங்களுக்குப் பிறகுதான் தமிழியல்துறை (1996)   ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளிவிழாவைக் கொண்டாடும் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறை 20 ஆண்டுகளைத் திரும்பிப்பார்க்கும் 3 நாள் கருத்தரங்கைக் கடந்தவாரம் - 2,3,4 தேதிகளில் நடத்தியது.  
இத்துறையின் முதல் பேராசிரியரான பேரா.தி.சு.நடராசனும்சரி, அவருக்குப் பின்  பணியமர்த்தப்பட்ட . பேரா.தொ.பரமசிவம், பேரா.அ.ராமசாமி,  பேரா.சு.அழகேசன், பேரா.ஞா.ஸ்டீபன்,  ஆகியோரது நூல்களும் கட்டுரைகளும் பல்கலைக்கழக எல்லையைத் தாண்டித் தமிழகக் கல்விப்புலத்திலும், இலக்கியத்தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.   இவர்கள் வெறும் பேராசிரியர்களாக மட்டுமல்லாமல் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் விமர்சன நூல்களையும் எழுதியிருக்கின்றனர். இந்த ஆய்வுக் கட்டுரைகளும், விமர்சன நூல்களும் – தமிழகம் முழுவதும் கவனம் பெற்றவையாக இருக்கின்றன. இதனை மனதில் கொண்டு இதுவரை தமிழ்த்துறை நிகழ்த்திய செயல்பாடுகளையும் கடந்து வந்த பாதைகளையும் திரும்பிப் பார்க்கும் விதமாக  "தமிழியல் ஆய்வுகளில் துறையின் தடயங்கள் 1996 - 2015 " என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை பதிவாளர் முனைவர். ஜான் டி. பிரிட்டோ அவர்கள் தொடங்கி வைத்தார். கருத்தரங்கின் சிறப்பு நிகழ்வாக, பேரா.தி.சு.நடராசன், பேரா.தொ.பரமசிவன், பேரா.அ.ராமசாமி, முனைவர்.பே.நடராசன், பேரா.சு.அழகேசன், பேரா.ஞா.ஸ்டீபன் என அனைத்துப் பேராசிரியர்களுக்கும் பாராட்டி நினைவுப்பரிசினை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா. முனைவர். கி. பாஸ்கர் வழங்கினார்.  அதோடு தமிழ்த்துறையில் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்களின் இலக்கியப் பங்களிப்பினைப் பாராட்டியதோடு, தொடர்ந்து இலக்கிய ஆய்வில் ஈடுபட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேரா.தி.சு.நடராசன் பெயரில்  அறக்கட்டளை நிதியாக ரூபாய் இரண்டரை லட்சத்தை தமிழ்த்துறைக்கு வழங்க அதனை துணைவேந்தர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கினார். அதன் சார்பில் இனி ஒவ்வோராண்டும் திறனாய்வாளர் -செம்மல் என்ற விருது வழங்கப்படும்
           
2/3/16 கருத்தரங்கின் முதல் அமர்விற்கு கணிதவியல் துறையைச் சார்ந்த பேரா.சு. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் " தொ.பரமசிவனின் பண்பாட்டு ஆய்வுகள் " குறித்து செந்தீ நடராசன் உரை நிகழ்த்தினார். பேரா.தொ.ப பண்பாடு குறித்து பல்வகை நிலைகளில் ஆய்வினை மேற்கொண்டவர். அவ்வாய்வுகள் குறித்து மிக ஆழமாகவும் தெளிவாகவும் தனது விமர்னத்தை செந்தீ நடராசன் முன் வைத்தார். பண்பாடு குறித்து அவர் எழுதியிருக்கிற பல நூல்கள் குறித்தும் நூல்களின் மையமான விஷயங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து "தொ.பரமசிவனின் இலக்கியப் பார்வையும் முறையியலும்" என்ற தலைப்பில் முனைவர் . கருப்பையா உரை நிகழ்த்தினார். சங்க இலக்கியம், காப்பியம், சைவ, வைணவ இலக்கியங்கள், அறஇலக்கியம், சிற்றிலக்கியம்,  பிற்கால இலக்கியங்கள் என அனைத்து இலக்கியங்களும் பண்பாட்டை எவ்வாறு முன்னிறுத்துகிறது என்பது குறித்து தொ.ப. எழுதிய ஆய்வு நூல்கள் குறித்து தெளிவான விமர்சனத்தை முன்வைத்தார். 
           
புள்ளியியல் துறையைச் சார்ந்த பேரா.க. செந்தாமரைக் கண்ணன் தலைமையில் நடந்த இரண்டாவது அமர்வில் தி.சு.நடராசனின் கோட்பாட்டு ஆய்வுகள் என்ற தலைப்பில் பேரா. தோதாத்ரி உரையாற்றினார். மார்க்ஸிய, எதார்த்த, நவீனத்துவ, பின்நவீனத்துவ, பெண்ணிய, உளவியல் கோட்பாட்டு ஆய்வுகளை தி.சு எவ்வாறு உள்வாங்கினார்,  உள்வாங்கியதோடு அதனை எப்படி அணுகுவது என்பதையும் தனது கோட்பாட்டு ஆய்வுகளில் விளக்குறார் என்பதை அவர்  விமர்சனம் செய்தார். "தி.சு.நடராசனின் முறையியலும் இலக்கிய ஆய்வுகளும்" என்ற தலைப்பில், தி.சு.நடராசன் ஒரு இலக்கியத்தை அணுகுவதற்கான அலகுகள் என்ன? இலக்கியப் படைப்பை புரிந்து கொள்வதற்கான அலகாக என்னென்ன மேற்கொண்டிருந்தார் என்பதை அவரின் ஆய்வின் வழியாக எவ்வாறு விரிவாக விளக்கியுள்ளார் என்பது குறித்து முனைவர்.க. நாகநந்தினி சிறந்த உரை நிகழ்த்தினார்.
3/3/16 கருத்தரங்கின் மூன்றாம்  அமர்விற்கு தகவல் தொழில்நுட்பத் துறையின் பேரா.ந.கி.ருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் சு.அழகேசனின் இலக்கண ஆய்வுகள் குறித்து பேரா. ஏ.ஆதித்தன் பேசுகையில் சு.அழகேசனின் இலக்கண ஆய்வுகள், நன்னூல் உரை, உரையாசிரியர் குறித்த ஆய்வுகள், அகராதி உருவாக்கம், பல மொழி சார்ந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளமை வரவேற்புக்குரியது என்றும் அனைத்து வகை ஆய்வுகளிலும் மொழியியல் தன்மையினையும் நிலையினையும் சேர்த்து ஆய்வு செய்தோமானால் அவ்வாய்வானது முழுமை பெறும் என்ற தனது கருத்தோடு விமர்சனத்தினையும் முன் வைத்தார்.  அவரைத் தொடர்ந்து " சு.அழகேசனின் இலக்கண உரைகளும் தொகுப்புகளும்" என்ற கட்டுரையில் முனைவர்.கவிதா சு.அழகேசனின் இலக்கணக் குறிப்புகள் பற்றிய ஆய்வுகளையும், உரை வேறுபாட்டு ஆய்வுகளையும், நச்சினார்க்கினியரின் உரைச் சிறப்புகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

கருத்தரங்கின் நான்காவது அமர்வில் சமூகவியல் துறையைச் சார்ந்த பேரா.ந.கண்ணன் தலைமை வகித்தார். "அ.ராமசாமியின் திரைப்பட மற்றும் இலக்கிய ஆய்வுகள்" என்ற தலைப்பில் எழுத்தாளர் இமையம் பேசினார். அ.ராமசாமி எழுதிய நாவலிலக்கியக் கட்டுரைகளை, "நாவல் என்னும் பெருங்களம்" என்ற தலைப்பில் தொகுத்துக் கொண்டு விரிவானதொரு விமர்சனக் கட்டுரையை வழங்கினார். அந்த கட்டுரை தமிழில் மிக முக்கியமானது என்று கருதப்பட்ட கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட, மிகவும் முக்கியமான நாவல்கள் என்று அறியப்பட்ட  நாவல்கள் குறித்து அ.ராமசாமி எழுதியிருந்த கட்டுரைகள் பற்றி இமையம் சரியாகவும், நேர்மையாகவும் விமர்சித்தார். இமையத்தினுடைய பேச்சும் கட்டுரையும் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. அடுத்ததாக அ.ராமசாமி எழுதியிருக்கும் திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்புகளான ‘அகவெளியும் புறவெளியும், தமிழ் சினிமா காட்டப்படுவதுவும் காணப்படுவதுவும்’ என்ற இரண்டு நூல்கள்பற்றி தன்னுடைய ஆழமான விமர்சனத்தை எழுத்தாளர் இமையம் முன்வைத்தார். இமையத்தினுடைய பேச்சு விமர்சகர் அ. ராமசாமியின் விமர்சனங்கள் குறித்து ஆழமான புரிதலை உண்டாக்கியது. ஒரு கட்டுரை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு இமையத்தினுடைய கட்டுரைகள் நல்ல உதாரணங்களாக இருந்தன. இமையத்தைத் தொடர்ந்து பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் தலித் சிந்தனை, தலித் பார்வை, தலித் அழகியல், தலித் இலக்கியம் குறித்து எழுதியிருக்கும் அ.ராமசாமி கட்டுரைகள் மீது தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார். பேரா. ஸ்டாலின் ராஜாங்கத்தின் பேச்சு அ.ராமசாமியின் தலித் எழுத்துகள் மீதான அக்கறையை காட்டுவதாக இருந்தது.
4/3/16 கருத்தரங்கின் ஐந்தாவது அமர்விற்கு ஆங்கிலத் துறையைச் சார்ந்த பேரா.பொ.கு.கல்யாணி தலைமை தாங்கினார். "ஞா.ஸ்டீபனின் பண்பாட்டியல் ஆய்வுகள்" என்ற நூல் குறித்து பேசிய பேரா.சீ.பக்தவத்சல பாரதி இலக்கியப் படைப்புகளுக்குள் இருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும், கலாச்சாரக் கூறுகளையும் ஆராய்ந்து, அவை எந்த அளவிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெளிவாக கூறினார். ஒரு இலக்கியப் படைப்பு என்பது வெறும் இலக்கியப் படைப்பு மட்டுமல்ல, பண்பாட்டுக் கூறுகளையும், கலாச்சாரக் கூறுகளையும் அது எவ்வாறு முதன்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதையும் தனது ஆய்வின் மூலமாக ஞா.ஸ்டீபன் கண்டறிந்தார் என்பதை பேரா.சீபக்தவத்சல பாரதி விவரித்துப் பேசினார். "ஞா.ஸ்டீபனின் இலக்கிய மானிடவியல் ஆய்வுகள்" குறித்து முனைவர் ஆ.தனஞ்செயன் ஒரு இலக்கியப் படைப்பு என்பது ஒரு சமூகத்தின் படைப்பாக இருக்கிறது. படைப்புக்குரிய எழுத்தாளர் பிரதானமல்ல. சமூக அசைவியக்க காரணிகளே முதன்மையானது. அந்த வகையில் ஒரு இலக்கியப் படைப்பின் சமூகவியல் ஆய்வு, மானிடவியல் ஆய்வு இனவரைவியல் ஆய்வு ஆகிய கூறுகள் இலக்கியப் படைப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை ஞா.ஸ்டீபன் ஆராய்ந்து எழுதியிருப்பதுப்பற்றி உரையாற்றினார்.
கருத்தரங்கின் இறுதி அமர்விற்கு கல்வியியல் துறையைச் சார்ந்த முனைவர்.பி.வில்லியம் தர்மராஜா தலைமையேற்றார். இந்த அமர்வில் "தமிழியல் துறையில் இதுவரை நிகழ்ந்துள்ள இலக்கிய ஆய்வுகள்" என்னும் தலைப்பில் முனைவர்.மு.புஷ்பகவல்லி கட்டுரை வாசித்தார்கள். தமிழ்த்துறையில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடுகளின் தனமைகள், தரம், அதனுடைய பண்முக தன்மைகள் குறித்தும் பேசினார்.  அதனைத் தொடர்ந்து "தமிழியல் துறையில் நிகழ்ந்துள்ள பண்பாட்டியல் ஆய்வுகள்" என்ற தலைப்பில் முனைவர்.நவநீதகிருஷ்ணன் பேசினார். "தமிழியல் துறையின் பாடத்திட்டப் பங்களிப்புகள்" குறித்து முனைவர். கந்த சுப்பிரமணியன் என்பவர் உரை நிகழ்த்தினார். பிற பல்கலைக் கழகங்களைக் காட்டிலும் இப்பல்கலைக்கழக பாடத்திட்டம் எவ்வாறு சிறப்பானதாக இருக்கிறது என்பதுகுறித்து அவருடைய பேச்சு அமைந்திருந்தது.  " தமிழியல் துறையின் கருத்தரங்குகளும் பயிலரங்குகளும்" அ.என்ற தலைப்பில் முனைவர். சு.பேச்சியம்மாள் கட்டுரை வாசித்தார். தமிழ் புலத்தில் நடந்த மிக முக்கியமான கருத்தரங்கம், அதில் பங்குபெற்றோர், பேசப்பட்ட பொருள் – அது எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறித்து அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

    
மூன்று நாள் கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக கடந்த 20 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தங்களுடைய பல்கலைக்கழக நாட்களை நினைவு கூர்ந்து பேசினர். தங்களுடைய வளர்ச்சி, சிந்தனை மேம்பாட்டிற்கு பேராசிரியர்களும், பல்கலைக்கழகமும் எவ்வாறு துணையாக இருந்தது என்பதை நெகிழ்ச்சியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மனதின் ஆழத்திலிருந்து பேசிய வார்த்தைகளாக இருந்தன.
======================================================================
மஜீதா பர்வீன்

No comments :