March 16, 2016

கவிதை வாசிப்பு 1/2016

ஆனந்தவிகடன் கவிதைகளை வெளியிடும் பக்கங்களுக்குச் சொல்வனம் எனப் பெயரிட்டுக் கொண்டிருக்கிறது. 16/3/16 தேதியிட்ட ஆ.வி.யில் சௌவி, ஆர்.ஜவஹர் பிரேம்குமார், ம.மகுடீசுவரன் ஆகிய 3 பேரின் கவிதைகள் அச்சாகியுள்ளன.
இந்த மூன்று பேரின் 3 எழுத்து வரிகளும் கவிதையாக நினைக்கப்படும் காரணஙகள் என்னவாக இருக்கும்?
மூன்றையும் வாசித்து முடித்து பின்பு அப்பிரதிகளுக்குள் இருக்கும் நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும்போது அவர்கள் காலத்தைப் பேசியவர்களாகத் தோன்றினார்கள். ம.மகுடீஸ்வரனின் நல்ல வெயில்- பிரதியில் 'ஒரு நிகழ்வின் பொழுது' நினைக்கப்படுகிறது. அந்த நிகழ்வு கோடைகாலத்தின் வரவைச் சொல்லும் முன்வைப்பு. கோடையின் வரவைக் காட்சியாக விவரிக்கும் முயற்சியில் வெட்டப்படும் தர்ப்பூசணி நம்முன் அதன் நிறம், அதன் சேர்மானம், அதன் குளிர்ச்சி என்ற முப்பரிமாணத்தோடு காட்டப்படுகிறது. காட்சிப்படுத்தல் அணுபற்றிய உண்மையோடு நேர்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. அவ்வளவு போதும் என்று முடிந்து போகிறது.
ஜவஹர் ராஜ்குமாரின் கதைசொல்லியின் டெடிபியர், 'தொடரும் காலத்தை' நினைவுபடுத்துகிறது. அந்தத் தொடரும் காலம் எல்லாருக்கும் உரிய ஒன்றைத் தேடிப்போகாமல் குறிப்பான ஒருவகை மனிதர்களை முன்வைக்கும் காட்சியை உண்டாக்கும் வேலையைச் செய்கிறது. அவர்கள், 'ஒற்றை மகளைப் பெற்ற பெற்றோர்கள் மட்டுமல்ல. அவர்கள் முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலும் ஊஞ்சலில் அந்தப் பெண்ணை பிரதிமை செய்து கொண்டிருக்கும் டெடிபியரும்'. அந்த நினைவுகள் தடைபட்டுப் போகாத நினைவுகள். மகளை அனுப்பிவிட்டுத் தனிமையில் தவிக்கும் பெற்றோரின் வகைமாதிரிகள் நம் நினைவில தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
ஒரு ஞாயிற்றுக்கிழமையை நினைவுபடுத்தும் சௌவி, அந்த ஞாயிற்றுக்கிழமையை, ஓய்வு நாளாக முன்வைக்காமல் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தங்களது கொண்டாட்ட மனநிலைக்காக உருவாக்கப்பட்டவை என்று நம்பும் மனித இயல்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அதன்வழி ஓய்வு நாளைக் குற்றஞாயிறாக முன்வைக்கிறார்.ஒரு குடும்ப உறுப்பினர்களின் விலகலைத்தாண்டி மதிய உணவாகப் போகும் கோழியிடம், 'உன் பெயரென்ன? ' என்று கேட்கும் சிறுவன் வழியாகக் குற்றமனநிலை காட்சிப்படுத்தப்படுகிறது.

ம.மகுடீசுவரனின் நல்லவெயில்
-----------------------------------------------
தர்பூசணி வெட்டி
கோடையைத் திறந்துவைத்தார்
சாலையோரத்து வியாபாரி

தாம்சனின் அணுமாதிரியை
சிறுசிறு துண்டுகளாகக்
கூறுபோட்டார்.

மண்டை பிளந்திருந்த
பழத்தின் சிவந்த முகத்தில்
விதைகள் ஆயிரங்கண்களாக
நீர் வடிந்திருந்தது

வெட்டிய பழமொன்றின்
கீற்றைக் 
கவ்விச் சுவைத்து
தாம்சன் சொன்ன 
எலெக்ட்ரான்களைத் துப்பியபடி
“என்னா வெயில்” என்று
சலித்துக்கொண்டேன்

“நல்ல வெயில் சார்”
என்றார் வியாபாரி
======================================
ஆர்.ஜவஹர் பிரேம்குமார், கதைசொல்லி ‘டெடிபியர்கள்’
------------------------------------------- ------------------------------------------
ஒற்றை மகளைக்
கட்டிக்கொடுத்த வீடுகளில்
மகள் ஆடிய ஊஞ்சல்களில்
நிச்சயம்
ஒரு ‘டெடிபியர்’
ஆடிக்கொண்டிருக்கும்
அந்த மகளைப் பற்றிய
கதைகளைச் 
சொல்லிக்கொண்டு 
===========================================

சௌவியின் ஞாயிற்றுக்கிழமை
----------------------------------------------------
கறிக்குழம்பாகி மதியப் பசி தீர்க்க
வாசலில் இன்னமும்
உயிரோடு படுத்திருக்கிறது கோழி.
மஞ்சளும் அருவாமனையும் அருவாளும்
செய்யப்போகும் கொலையை நினைத்தாலும்
சலனமின்றித் தயாராக அமர்ந்திருக்கின்றன
முற்றத்துத் திண்ணையில்
அப்பா செய்தித்தாளில்
அம்மா சமையலறையில்
தங்கை துணி துவைப்பில்
தம்பி தொலைக்காட்சியில்
நான் அலைபேசியில்
அழகான ஞாயிற்றுக்கிழமை
தன் கோரப்பற்களைக் காட்டிக்காட்டி
பயமுறுத்துகிறது

மௌனமாகப் படுத்தபடியிருக்கும்
கால்கள் கட்டப்பட்ட கோழியுடன்
பேரென்ன.. உன் பேரென்ன
எனக்கேட்கிறான் மோனிக்குட்டி
மோப்பம் பிடித்துவிட்ட காகமொன்று
நெல்லிமரத்தின் மேலமர்ந்து கரைகிறது
எவற்றையும் கண்டுகொள்ளாமல்
வைக்கோல் போரில் வைக்கோல் திருடுகிறது
ஒற்றைச் சீட்டுக்குருவி
எதையும் சொல்லாது நானும்
எதையும் சொல்லாது நீயும்
பரமேறி அழுத்திக்கொண்டிருக்கிறது
எதையும் சொல்லாத
இந்த ஞாயிற்றுக்கிழமை
===================================================

நினைவுபடுத்துதலிலும் காட்சிப்படுத்தலிலும் கவிதை சொல்வனமாக மாறுகிறது.

No comments :