நம்பிக்கையை விதைத்து நம்பிக்கையை அறுவடை செய்யலாம்.

தமிழகத் தேர்தலை ஊடகங்கள் தான் முன் தொடங்கி வைத்தன. 24x7 செய்தி அலைவரிசைகளுக்கு நீண்ட நாள் தீனியாக இருக்கக் கூடியவை விபத்துகளோ, கலவரங்களோ, சாதனைகளோ, கொண்டாட்டங்களோ அல்ல. அவையெல்லாம் ஒரு நாள் பசிக்கான தீனிதான். தேர்தல் களியாட்டங்கள் நீண்ட நாளைக்கான உணவுச் சேகரிப்பு. எடுத்து எடுத்துப் பரிமாறலாம்.
சொம்பில் நீரை வைத்து இலை போடுவதில் தொடங்கி உப்பு, ஊறுகாய், அவியல், பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் எனப் பரிமாறியபின் சோற்றைப் பரிமாறும் விருந்துச் சாப்பாடுபோல. கடந்த இரண்டுமாதங்களாகப் பரிமாறிக் கொண்டிருக்கும் செய்தி அலைவரிசைகளுக்குத் தீனிபோட முடியாமல் தவிப்பவை அரசியல் கட்சிகள். கூட்டணிக்குக் கட்சிகளைத்தேடும் பின்னணி வேலையைப் பார்த்துக் கொண்டே எல்லாத் தொகுதிகளுக்கும் விருப்பமனு விற்கும் வியாபாரத்தையும் செய்கின்றன. அதையும் வரிசையில் நின்று வாங்கும் பணியைச் செவ்வனே செய்யும் தொண்டர்களும் பிரமுகர்களும், தங்கள் தலைமையின் குரூரத்தை ரசித்தபடியே கட்சி உண்டியலில் காணிக்கையைச் செலுத்தித் தங்கள் பெயரெழுதிய சீட்டையும் இணைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கட்சிகள் தான் ஆட்சிக்குவந்து இணையவழி நிர்வாகத்தைக் கொண்டுவரும் - இ கவர்ன்ஸ் -பற்றியும் பேசுகின்றன. இவற்றை முரண் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
இந்த அபத்தத்தைச் செய்யக்கூடாது என்ற தெளிவோடு ஒரு கட்சி முன்கை எடுக்க வேண்டும். முதல்வர் யார் என்று முடிவு செய்வது ஜனநாயக விதிகளுக்கு மாறானது என்று சொல்லும் மக்கள் நலக்கூட்டணி ஜனநாயகத்தையும் மக்களின் மனநிலையையும் புரிந்துகொண்டிருப்பதைத் தனது பரப்புரைக் காலத்திலேயே வெளிப்படுத்த முடியும். மாற்று என்பது ஆட்சிமுறையில் கொண்டுவரப்போகும் மாற்று என்பதோடு தேர்தல் காலத்தில் பின்பற்றும் நடைமுறைகளிலேயே அதைக்காட்ட முடியும். வேட்பாளர்களை முடிவு செய்யவேண்டியது தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் செய்யவேண்டியது. மக்களைச் சந்திப்பதே தேர்தலுக்குத் தயாராவதின் முதல்பணி என்ற புரிதலுடன் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறது 
மக்கள் நலக்கூட்டணி. அக்கூட்டணியின் தலைவர்களுக்கு மக்களிடம் சொல்லவும் அவர்களைத் தேர்தலுக்குத் தயார்படுத்தவும் நிறைய விசயங்கள் இருக்கின்றன.தமிழகத்தில் சமூகப் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளில் தங்களின் நிலைப்பாட்டைத் தெள்வுபடுத்தவும் நிரூபிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற நிலையைத் தேர்தல் காலத்திலேயே வெளிப்படுத்தும்போது நம்பிக்கை ஏற்படும். மக்கள் தங்களை நம்புவதன் மூலம்தான் வாக்களிப்பார்கள் என்பதை நம்பவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்