தன் வரலாற்றைச் சொல்லுதலின் அரசியல்: கே.ஏ. குணசேகரனின் வடு



தலித் இயக்கம் இந்தியாவில் அதிரடி மாற்றங்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது. பிற இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களை நிகழ்த்திட எடுத்துக் கொண்ட கால அளவை விடத் தலித் இயக்கங்கள் எடுத்துக் கொண்ட கால அளவு மிகக் குறைவானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று . இலக்கியம் அல்லது எழுத்துப் பரப்பில் பிற இயக்கங்கள் தயங்கித் தயங்கிக் காலடி எடுத்து வைத்த பல பிரதேசங்களில் தலித் இயக்கங்கள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நுழைந்துள்ளன  என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அப்படித் தயக்கமின்றித் தனதாக்கிக் கொண்ட ஒரு எழுத்து வகை தன்வரலாறு . மகா மனிதர்கள் மட்டுமே தன் வரலாற்றைச் சொல்லலாம் என்றிருந்த நிலையைத் தலித் படைப்பாளிகளும் தனிமனிதர்களும் மூர்க்கமாகத் தாக்கி விட்டுத் தனிப்பாதைகளைப் போட்டுள்ளனர். கடந்த நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளின் முக்கிய வெளிப்பாட்டு வடிவமாகத் தன் வரலாற்றை மாற்றியவர்களே தலித் படைப்பாளிகள் தான் எனலாம். இந்திய அளவில் பல்வேறு தன் வரலாறுகள் வந்துள்ளன. மராத்தியிலும் கன்னடத்திலும் அதிகமான தலித் தன்வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் பேராசிரியரும் நாடகக் கலைஞருமான டாக்டர் கே.ஏ. குணசேகரனின் தன்வரலாற்று நூல் வடு சமீபத்தில் வந்துள்ளது.கே.ஏ.ஜி என அழைக்கப்படும் கரு . அழ. குணசேகரன் என்னும் பெயர் தமிழ் அறிவுலகிலும் செயல் உலகிலும் பல தளங்களிலும் ஊடும் பாவுமாக வந்து போகும் பெயர். இயக்கம் சார்ந்த மேடைக் கச்சேரிகளைப் பற்றிய  பேச்சுக்களின் போது தவிர்க்க முடியாத பெயர் என்று சொல்வது போதாது. அந்தப் பெயர்தான் அந்தத் துறையின் முன்னோடிப் பெயர். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் களின் வேலையாக இருந்த தொகுப்புப் பணியைப் பாடும் பணியாகவும் மாற்றியவர் அவர். மக்களிடமிருந்து தொகுக்கப் பட்ட பாடல்களைத் திரும்பவும் மக்களிடம் வேறு அர்த்தத்தில் அந்தப் பாடல்களைக் கொண்டு போய்ச் சேர்த்தவர். நாடகத்துறை சார்ந்த பரிசோதனைகள் பலவற்றில் அவரது தடங்கள் உண்டு. 1990- களுக்கு முன்பு இடதுசாரி மேடைகளில் அதிர்வுகளை எழுப்பிய அவரது குரல் தொண்ணூறுகளுக்குப் பிந்திய தலித் அலையின் தவிர்க்க முடியாத வீச்சு.செயல்பாட்டுத் தளத்தில் ஒரு பாடும் கலைஞனாகவும் நாடக நடிகராகவும் இயக்குநராகவும் திகழும் அதே நேரத்தில் , எழுத்துத் துறையிலும் முழுமையாகக் கவனம் செலுத்தி வருபவர். நாட்டார் வழக்காற்றியல் துறை சார்ந்த தொகுப்புக்கள், ஆய்வு நூல்கள் என்பனவற்றோடு நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் குணசேகரனிடம் முடியாது என எதையும் ஒதுக்கித் தள்ளி வைக்கும் மனநிலையைப் பார்க்க முடியாது. மிகச் சரியாகத்தான் எதையும் செய்ய வேண்டும் என்ற தீர்மானங்களும் அவரிடம் இருந்ததில்லை. முன் வைக்கக் கூடிய விமரிசனங்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளும் அவருக்கு இருந்ததில்லை. இவை யெல்லாம் ஒரு மனிதனின் பலவீனமா..? அல்லது பலமா..? என்று கேட்டால் பேராசிரியர் குணசேகரனை முன் உதாரணமாகக் கொண்டு பலம் என்றே சொல்ல வேண்டும். சிந்திப்பதைச் சொல்லி விடுவதும், நினைத்ததைச் செயல்படுத்தி விடுவதும் அவரது பாணியாக இருந்தது. உச்சபட்ச வெற்றியல்ல அவரது இலக்கு; அடையாளப் படுத்தக் கூடிய தேர்ச்சிகளே அவரது கவனம். இப்படிச் சொல்வதற்குக் காரணம் அவரோடு எனக்கிருந்த அனுபவங்கள் தான். ஆய்வு மாணவராக அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்த ஐந்தாண்டுக் காலத்தில் உடன் பயின்ற மாணவன்;புதுச்சேரியில் அவரோடு ஒரே நாளில் நாடகப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து எட்டாண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவன். தொடர்ந்து அவரது நாடகம் மற்றும் எழுத்துக் களைக் கவனித்து வரும் நிலையில் அவரது படைப்பு மனநிலைகளை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றவன். இந்த வாய்ப்புகள் எல்லாம் சேர்ந்து அவரது தன்வரலாற்று பிரதியான வடுவை ஆவலுடன் வாசிக்க வைத்தன.

இந்த வடு நான் அவருடன் பழகிய கால கட்டத்தின் பதிவுகளாக இல்லை. அதற்கு முந்திய காலகட்டத்தின் பதிவுகளாக இல்லை. அதற்கு முந்திய காலகட்டத்தின் வெளிப்பாடுகள். அதனால் எனது வாசிப்பு தெரிந்தனவற்றை வாசிக்கும் நிலையிலிருந்து தெரியாதனவற்றை- ரகசியங்களை வாசிக்கும் வாசிப்பாக மாறிக் கொண்டது. வடு என்னும் இந்த நூல் குணசேகரனின் வாழ்க்கையில் செம்பாதிக் காலத்தைச் சொல்லும் ஆவணம். ஏறத்தாழ அவரது படிப்புக் கால நிகழ்வுகள் இதில் பதியப்பட்டுள்ளன. கல்லூரி வாழ்க்கைப் பிந்திய அவரது வாழ்வை அருகிருந்து கவனிக்கும் வாய்ப்புப் பெற்ற நான் இந்த நூலில் இடம்பெற்ற நிகழ்வுகள் பலவற்றை அவரிடம் வாய் வார்த்தையாகக் கேட்டிருக்கிறேன். இன்று ஒரு பல்கலைக்கழகத்தின்  துறைத் தலைவராகப் பணியாற்றும் ஒருவரின் இளமைக் காலம் எவ்வளவு வலியும் துயரங்களும் நிறைந்தது என்பதை வாசிக்கும்போது உணரலாம்.

பொதுவாக வாசகர்களின் வாசிப்பு அனுபவம் இது போன்ற தன்வரலாற்றை வாசிக்கும் போது கொள்ளும் மனப்பான்மை முக்கியமான ஒன்று என நினைக்கிறேன். இந்தியாவின் சாதியப் பின்புலத்தில் வாழ நேர்ந்துள்ள எந்தவொரு வாசகனுமே எல்லாப் பிரதிகளையும் ஆசிரியனின் நோக்கு நிலையிலிருந்தே வாசித்து விடுவதில்லை. அவனவன் சாதித் தன்னிலையிலிருந்தே வாசிக்கிறான்; புரிந்து கொள்கிறான்; விளக்கம் சொல் கிறான்.ஆனால் தன் வரலாறு சொல்லும் எழுத்துக்கள் வாசகனின் தன்னிலையிலிருந்து வாசிக்கும்படி வலியுறுத் துகின்றன என்பதுதான் அதன் பலமும் பலவீனமும். இதன் காரணமாகவே சத்திய சோதனை மாதிரியான தன்வரலாறுகள் சொல்பவனை உதாரணமனிதர்களாக முன்னிறுத்துகின்றன. மொத்தச் சமூகப் பின்புலத்தையும் புறந்தள்ளிவிட்டு தனி மனிதனின் சாகசங்களை அடுக்கும் அத்தகைய பிரதிகள் நடைமுறை எதார்த்தங்களைக் கணக்கில் கொண்டவை அல்ல.

இன்று எழுதப்படும் தலித் தன்வரலாற்றுப் பிரதிகளிலும் தனிமனிதர்களை முன்னிறுத்தும் கூறுகள் உள்ளன என்றாலும் இவற்றில் மிக முக்கியமான வேறுபாடு உள்ளது. இத்தனி மனிதர்கள் சாகசங்கள் நிகழ்த்திய மகாமனிதர்கள் அல்ல; தொடர்ந்து ஒதுக்குதலுக்குள்ளாகும் சமூகப்பரப்பிலிருந்து கிளர்ந்தெழுந்த வகை மாதிரிகளாக இந்தத் தனிமனிதர்கள் வெளிப்படுகிறார்கள் என்பதுதான் இந்தப் பிரதிகளின் சிறப்பம்சம். வடு என்னும் இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் ஒற்றைத் தளத்தில் அதனை வாசித்துவிடப் போவ தில்லை; வாசித்துவிடவும் முடியாது. காரணம் அதன் கூற்று நிலை அப்படி. தனது வரலாறு இது என நேரடியாகப் பேசும் குணசேகரனின் மொழியின் வசியம் கூட அத்தகைய வாசிப்பை அனுமதிப்பது இல்லை. நம்பகத் தன்மையை உண்டாக்கும் எளிமை தான் அந்த மொழியின் வசியம். தனது வாழ்க்கைச் சரித்திரத்தைக் கால வரிசைப்படி சொல்ல வேண்டும் என்று நினைக்காத அவரது எழுத்து முறை, தொடர்ந்து படிப்பதில் ஒரு தலித் சிறுவன் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஆழமாகவே வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அவரது வாழ்க்கைப் பரப்பிற்குள் கிறித்துவம், இசுலாம், இந்து என்ற மத அடையாளங்கள் சுயமற்றுக் கலந்து கிடந்தன என்பதையும் விவரிக்கிறது.

பொதுவாகத் தமிழில் தனிமனிதர்களின் கதைகளை அல்லது வரலாற்றைப் படர்க்கைக் கூற்றிலிருந்து வாசித்துப் பழக்கப்பட்ட வாசக மனோபாவம் இந்த எளிமையையும் நேரடித்தன்மையையும் கொண்ட மொழியினூடாக அடையும் மனநிலை மாற்றம் எப்படி இருக்கும் என உறுதியாகக் கூற முடியாது. பேராசிரியர் குணசேகரனின் தன்வரலாற்றை ஒரு தலித்தின் தன்வரலாறு என்ற அளவில் வாசித்து, இந்த சாதியச் சமூகத்தின் மீது கோபம் கொள்ளத் தூண்டக்கூடிய வரலாறு என முடிவு செய்து விட முடியாது. இதனை வாசிக்கும் போது இந்து மதம் சார்ந்த ஒதுக்குதலின் கொடூரம் அவ்வளவாக வெளிப்படவில்லையென்றே கூறலாம். இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். மிக முக்கியமான காரணம் அவரது குடும்பத்தில் அவர் இரண்டாம் தலைமுறைப் படிப்பாளி என்பது.அவரது பெற்றோர்களே பள்ளிக் கல்வியின் பலனை ஓரளவு அனுபவித்தவர் களாக உள்ளனர். இரண்டாவது முக்கியமான காரணம் அவரிடம் உள்ள இசைத் திறமை.பலவிதமான மனிதர் களின் சாதிய முகத்தைச் சந்திப்பதற்குக் காரணமாக இருந்த அக்கலையே அவரது இயங்கு பரப்பைத் தொடர்ந்து விரிவாக்கிக் கொண்டே இருந்துள்ளது. பொதுவாக தலித்துகளின் வாழ்விட எல்லையைச் சுருக்கி விடும் சாதிக் கட்டுமானத்தை மிக எளிதாக மீறி விட குணசேகரனுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு எல்லாத் தனிமனிதர்களுக்கும் கிடைக்கக் கூடும் என்பதில்லை. ஆனால் அவரது வரலாற்றை வாசிக்கும் போது தடுக்கும் வெளிகள் எவை என்பதை அறியவும், எப்படி மீறுவது என்பதை உணரவும் கூடும் . அந்த வகையில் வடு விடுதலைப் போராட்டக் கருவிகளுள் ஒன்றாகி நிற்கிறது. 

                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்