January 03, 2016

மரத்தில் மறையும் யானை:அ.முத்துலிங்கத்தின் சிப்பாயும் போராளியும்

ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான்.
நிதானமான ஒருநாளில் அல்லது கொண்டாட்ட மனநிலையில் தன் மகளை மகனாக ஆக்கிப் பார்க்க விரும்பும் அம்மா, அரைக்கால் சட்டையொன்றை அணிவித்து கையில் ஒரு தடியைக் கொடுத்து விரைப்பாக நடக்கச் சொல்வாள். அந்த நாளின் நினைவு மறையாத  அந்தப் பெண் பின்னாளில் ஆண்களுக்கான வேலைகள் என நினைக்கும் காவல்துறை, ஓட்டுநர்கள் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது நினைவுபடுத்துவதுண்டு.உண்மையில் அப்படியான வேலைகள் இல்லை. அதன் மறுதலையாக ஆண் பிள்ளைகளுக்கு பொட்டுவைத்துப் பெண்ணாக்கிப் பார்ப்பதுமுண்டு.
ஆக்கிப் பார்க்கும் வேலையை எழுத்தாளர்களும் செய்கிறார்கள். கதையைக் கவிதையாக்குவதும், நாடகத்தைக் கவிதையில் எழுதுவதும் அப்படி நடப்பதுதான். ஒன்றின் அடிப்படை அடையாளத்தை இன்னொன்றிற்குள் வைப்பதன் மூலம்  அதனைச் செய்துவிட முடியும். கவிதையின் அடிப்படை வெளிப்பாட்டுக் கூறு  ஒலி இடைவெளி. கவிதை மரபானாலும் புதுசானாலும் ஒருவித ஒலியிடைவெளியை - இசைரூபத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அதேபோல கதையின் அடிப்படைக் கூறு சொல்லுதல். நாடகத்தின் அடிப்படைக்கூறு உரையாடல். சொல்லுதலை முதன்மையாகக் கொண்ட கதையில் உரையாடலை வெளிப்பாட்டுக் கருவியாக ஆக்குகின்ற போது நாடகக் கதையாகத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியாது. இந்தமாதக் காலச்சுவடில் வந்துள்ள அ.முத்துலிங்கத்தின் கதை அப்படி ஆகியிருக்கிறது.
சாதாரண உரையாடல், நாடகத்தின் உரையாடலாக மாற்றுவது இரண்டு கதாபாத்திரங்களின் முரண்பாட்டு நிலை தான். முரண்பாட்டு அடையாளம் நாடகத்தில் பலவிதமாக உருவாக்கப்படும். மேடையைப் பற்றிய விவரிப்பாகத் தரப்படும் [ ] அடைப்புக்குறி விவரணையேகூட அந்த முரண்பாட்டை உண்டாக்கிவிடும். தேர்ந்த நாடக ஆசிரியர்கள் நாடகத்தொடக்கத்தின் விவரணையில் அதைச் செய்திருப்பதை வாசித்திருக்கிறேன். அ.முத்துலிங்கமும் தேர்ந்த நாடக எழுத்தாளரைப் போல விவரணக்காட்சி ஒன்றைத் தருகிறார் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் அவரது கதைத் தலைப்பே முரண்பாட்டை முன்வைக்கும் வேலையைச் செய்கிறது பிறகு புரிந்தது. தலைப்பு: சிப்பாயும் போராளியும் ( காலச்சுவடு, டிசம்பர், 2015, பக்.39-45).
”ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான்”
என்று தொடங்கி நீண்டதொரு உரையாடலாய் விரிகிறது அ.முத்துலிங்கத்தின் கதை. அங்கிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் முதலில் எதிரி என்பதிலிருந்து நகர்ந்து இணக்கம் கொண்டவர்களாக மாறப்போகும் ஓர் உச்சநிலையை நோக்கி நகர்கிறது. அந்நகர்வின் பகுதியை மட்டும் இங்கே வாசிக்கலாம். 
’நீ என் எதிரி. உன்னை எப்படி நான் கருணையுடன் பார்ப்பேன்?’
‘ ஏன் முடியாது. நான் உன்னை என் மகன்போல பார்க்கிறேனே. போகப்போக உன் நடை, பாவனை எல்லாம் என் மகனையே நினைவூட்டுகின்றன. அதுசரி. உன் காதலியின் பெயர் என்ன சொன்னாய்?
‘நான் சொல்லவில்லையே, என் பெயரே உனக்குத் தெரியாது. காதலி பெயரை எப்படி சொல்லியிருப்பேன்’
‘சரி, உன் காதலியின் பெயரைச் சொல்’
‘ இன்னும் சில நிமிடங்களில் சாகப்போகிறாய். என் காதலியின் பெயரைத் தெரிந்து என்ன பிரயோசனம்? சரி பரவாயில்லை. உனக்கு ஒன்று சொல்வேன். என் பெயரை மாற்றிப்போட்டால் காதலியின் பெயர் வந்துவிடும். இந்தப் புதிரை உடைக்க முயற்சித்தபடியே நீ இறந்துபோகலாம்..ஆ.. விசை சரிவந்து விட்டது’.
’சரி. சரி மகனே. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. நான் உன்னை மகனே என்று அழைக்கலாமா?
‘ அழை. அதனால் ஒரு மாற்றமும் வந்துவிடாது. நான் உன்னை அப்பா என்று அழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதே. சீக்கிரம். உன் ஆசையைச் சொல்.

கதை மொத்தமும் உரையாடல் தான். ஒருவேலை போராளியின் அன்பான பேச்சில் மயங்கி, சிப்பாய்க்குள் இருக்கும் கருணைமனம் உயிர்பெற்றுவிடுமோ என நினைக்கும்போது எதிர்பார்ப்பைக் குலைத்து எதிர்முடிவு வைக்கிறார். முடிவு இப்படி இருக்கிறது:
‘ பேசாதே. பேசாதே. பேசாதே.’
‘ஏன் உன் கைநடுங்குகிறது. பதறாதே. என் கண்களைப் பார். துப்பாக்கியின் குறி எங்கேயெல்லாமோ அலைகிறது. என் நெஞ்சுக்கு நேராகப் பிடித்துச் சுடு. மறுபடி வேலை செய்யவில்லையா? விசையை இழு.
‘ ஆ. பறிக்காதே! என் துப்பாக்கியை தா. துப்பாக்கியைத் தா. என்னை சுட்டுவிட்டாயே அப்பா’

‘ முட்டாளே என் மனைவியின் தலைமுடியை நான் வாரவேண்டும். நீ என் மகனா? செத்துப் போ. இது போர்”
தொடக்கம், வளர்ச்சி, உச்சம், எதிர்நிலை முடிவு எனக் கச்சிதமாக அமையக்கூடிய ஓரங்க நாடகம். இப்போதுள்ள வடிவமே கூட இயக்குநருக்கு உதவும் ஒரு நிகழ்த்துப்பிரதியாகவே இருக்கிறது. 
நாடக எழுத்துக்குத் தமிழ் இதழ்களில் அதிகம் இடமில்லை என்பதால் சிறுகதை என்று அனுப்பியிருக்கிறார் அ.முத்துலிங்கம் என்றே தோன்றுகிறது. சிறுகதை என்றால் வாசிப்பவர்கள் கூட நாடகம் என்றால் வாசிக்காமல் விலகிப்போய்விடுவார்கள் என்பதுதான் தமிழ் வாசிப்பு மனநிலை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நாடகங்களைத் தேடிப்படிக்கும் எனக்கு அ.முத்துலிங்கம் நாடகத்தைச் சிறுகதையாக ஆக்கியிருக்கிறார் என்றே தோன்றியது.


 -----------------------------------------------------------------------------------------------------------------

http://www.kalachuvadu.com/issue-192/page39.asp

No comments :