December 11, 2015

கலை - கலைஞன் - காலம்

 எஸ். வைத்தீஸ்வரனின் கதையெழுப்பும் விசாரணை

[இந்தக் கட்டுரையை வாசிக்க ஒரு நிபந்தனை உண்டு. கடந்த மாத அம்ருதாவில் கதையை வாசித்திருக்க வேண்டும்]
வாசிப்பு என்பதற்கும் இலக்கிய வாசிப்பு என்பதற்கும் அடிப்படையான வேறுபாடு வாசித்து முடித்தவுடன்,  ‘ஒரு இலக்கியப்பனுவலை வாசித்தோம்’ என்பதை உணர்வதில் இருக்கிறது.
இலக்கியப்பனுவலென நினைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி முடிக்கும் எல்லாப் பனுவல்களும் அந்த உணர்வை தந்துவிடுவதில்லை. சில பனுவல்களை அப்படி நினைக்காமலேயே வாசிக்கத் தொடங்கி முடிக்கும்போது ‘நீ வாசித்தது கூடுதல் கவனம் செலுத்தி வாசித்திருக்கவேண்டிய இலக்கியப்பனுவல்’ என மனம் சொல்லும்.  திரும்ப வாசிக்கும்போது இன்னொரு புரிதலும் உருவாகும். அப்படியான புரிதல்கள் கிடைக்கவும், உணர்வெழுச்சி உண்டாகவும் காரணமாக இருப்பவை எழுதுகிறவர் உருவாக்கித் தரும் பின்னணிகள் சார்ந்தவைகள் என்பது ஏற்கத்தக்க ஒன்று

இலக்கியப்பனுவலுக்கு எழுதியவர் சிலவகையான பின்னணிகளை உருவாக்கித் தருவதன் மூலமே நம்பகத்தன்மையை உருவாக்குகிறார். இலக்கியத்தின் பின்னணியைப் பொதுவாகச் சமூகப்பின்னணி எனச் சொன்னாலும் அதற்குள் உருவாக்கப்படும் காலம் மற்றும் இடம், ஆகியனவே அந்தப் பின்னணிகளை உருவாக்குகின்றன. [இந்தப்பின்னணிகளைக் கருப்பொருள் எனவும் முதற்பொருள் எனவும் பிரித்துக் கூறியது தமிழின் இலக்கியவியல்.]
 
முதல் வாசிப்பில் எதையோ தவற விட்ட உணர்வைத் தந்த எஸ்.வைத்தீஸ்வரனின் இந்தக் கதை மீதான இரண்டாவது வாசிப்பு அதன் இடம் மற்றும் காலப்பிண்ணனியில் தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றான சிற்பியின் நரகத்தை நினைவூட்டியது.  நினைவில் நின்றி அகலாமல் இருக்கும் புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகத்தோடு  போட்டிபோடும் கதையாக ஆகியிருக்கிறது எஸ். வைத்தீஸ்வரனின் இந்தக்கதை. எழுதப்பெற்ற முறை, எழுப்பும் விவாதம், விவாதத்தின் முடிவில் வைக்கும் கேள்விகள் என எல்லாம் சேர்ந்து நம் காலத்தின் முக்கியமான அரசியல் கதையொன்றை வாசித்த உணர்வை உண்டாக்கியது.

குறிப்பாகச் சுதந்திரமான எண்ணங்களையும் கருத்துக்களையும்  நேரடியாகச் சொல்லிவிடும் அரசியல்வாதிகளெல்லாம் அவர்களுக்கிருக்கும் அமைப்புபலம் காரணமாக அச்சமின்றி வாழ்கிறார்கள். ஆனால் அதே வகையான சுதந்திரச் சிந்தனைகளையும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய மனநிலையையும் வலியுறுத்தும் கலைஞர்களால் பயமின்றி வாழமுடியாத சூழல் நிலவுகிற காலமாக நமது காலம் இருக்கிறது. தாங்கள் நம்பும் கருத்தியலை மறைமுகமாகவும் கலைநுட்பத்தோடும் தங்களின் வெளிப்பாட்டுக் கருவிகளான கலைவடிவங்களின் வழி வெளிப்படுத்தும்  கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் கலை வாழ்க்கை மட்டுமல்ல; உயிர்வாழ்க்கையும் அச்சத்திற்குள் இருக்கிறது என்பதைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறது ஊரில் இரண்டு காளி என்னும் இந்தக் கதை.

முதல் வாசிப்பில் முன் பகுதிக்கும் பின் பகுதிக்கும் தொடர்பில்லாததுபோலவும் குறைந்த வாடகைக்குக் கிடைக்கிறது என்பதற்காகப் பழைய கட்டடம் ஒன்றில் வாடகைக்குப் போன இருவரின் பிரச்சினைபோலவும் கதை நீண்டது. ஆனால் கதையின் முடிவில் ஸவிதாவின் நிர்வாணப்பெண் சிற்பம் விருதுபெற்றது என்ற தகவலையும், கலை விமரிசகர்களும் பத்திரிகையாளர்களும் அறிவு ஜீவிகளும் அந்தச் சிற்பத்தை வடித்த பெண்ணைப் பாராட்டுவதற்காகத் தேடிக் கொண்டிருந்தார்கள் என்ற குறிப்பைத் தருவதன் மூலம் நிகழ்கால இந்தியாவில் - குறிப்பாகப் புனே திரைப்படக்கல்லூரி நிகழ்வு, எழுத்தாளர்கள் கொலை, மாதொருபாகனுக்குத் தடை, போன்ற செய்திகளின் பின்னணியில் கலை, கலைஞன், காலம் ஆகிய மூன்றும் சந்திக்கும் நெருக்கடியைப் பேசும் முக்கிய கதை என்பதாக மாறுகிறது. அந்த மாற்றம்  கதையைத் திரும்பவும் மறுவாசிப்புச் செய்யத் தூண்டுகிறது.

 கதைசொல்லியும் கதைக்குள் ஒரு பாத்திரமாகவே இருக்கிறான். ஒருவிதத்தில் அவன் வினையாற்றும் பாத்திரமல்ல என்றாலும் கதை நிகழும் அந்த இடத்தில் இருந்தாக வேண்டியவன்; உடன் இருந்து இந்த நிகழ்வுகளைப் பார்த்துச் சொல்வதன்மூலம் வாசிப்பவர்களுக்கு நம்பகத்தன்மையையும் உண்டாக்கி அவர்களைச்  சார்பெடுக்கும்படி தூண்டும் நிலைக்கு நகர்த்திக் கொண்டு செல்பவன்.

“நான் இரண்டாம் மாடியில் உள்ள கலாச்சார வரலாற்று வகுப்பில் உட்கார்ந்திருந்தேன்” என்று கதையை ஆரம்பித்துச்சொல்கிறான் என்றாலும் சொல்லப்படும் கதை அவனது கதையல்ல; அவனது நண்பன் அம்ரீஷின் கதை. கதை நிகழும் இடம் தமிழ்நாடும் அல்ல; மகாராட்டிரம்.  அம்ரீஷின் கதையைச் சொல்ல விரும்பும் அவன் முதலில் அறிமுகப்படுத்தும் பாத்திரம் ஸவிதா.

 “ஸவிதா, இரண்டாம் ஆண்டுப்படித்துக் கொண்டிருந்த சிற்பக்கலை மாணவி. பார்ப்பதற்குச் சற்றுக் கருப்பாக இருப்பாள். மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த பின் தங்கிய வகுப்பைச்சேர்ந்தவள். அருமையான மாணவி. அவள்சிற்பம் செதுக்கும்போது அவளைக் கவனிப்பது மிக உற்சாகமாக இருக்கும்”.

அவளும் அவளோடு பயிலும் சிற்பம் மற்றும் ஓவியக்கல்லூரி உணவகம், வகுப்பறை, அங்கு நிலவும்ஆண் -பெண் தடைகளைத் தாண்டிய சுதந்திரமனோபாவம், கலையின் மீதான ஈடுபாடு, அர்ப்பணிப்பு பற்றியெல்லாம் சொன்னவன் கடைசியாகவே அம்ரீஷ் என்னும் மையப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.

 “அம்ரீஷ், மூன்றாம் ஆண்டு ஓவியம் படித்துக் கொண்டிருந்தான். அவனும் ஓர் அருமையான ஓவியன். துணிச்சலான கற்பனைத் திறன் கொண்டவன். ஸவீதாவைப் போலவே சுதந்திரமான கூர்மையான மனப்போக்குகளை மாணவன்”.

“சமஸ்தானத்துக்குச் சொந்தமான அந்தக்குடியிருப்பு சில கட்டு திட்டங்களுடன் நிர்வாகிக்கப்பட்டு வந்தது. அங்கே அம்ரீஷுக்கு எப்படித் தங்குவதற்கு அறை கிடைத்தது என்று தான் பலதடவை அதிசயப்பட்டதுண்டு. ”

அம்ரீஷுக்கு கதைசொல்லி தங்கியிருக்குமிடத்தில் தங்கும் வாய்ப்புக்கிடைத்ததும், அந்தத் தங்குமிட நிர்வாகத்தோடு அம்ரீஷுக்கு ஏற்படும் முரண்பாடுகளுமே கதை. அம்ரீஷ் செய்த காரியங்களில் முதலாவது காளியின் ஓவியத்தை நவீன ஓவியமாக வரைந்து, அதனது குடியிருப்பின் சாளரத்தைத்தில் தொங்கவிட்டது. இரண்டாவது அவனது அறைக்குத் தனது தோழியான ஸவீதாவை அழைத்து வந்து மாடலாக வைத்து ஓவியம் தீட்டியது.

இந்த இரண்டையுமே விரும்பாதவர்கள் கட்டட நிர்வாகிகள் அல்ல; கட்டடத்தின் அடிமட்ட ஊழியர்களான காவலாளிகள் தான். கலையின் நோக்கம்,  கலைஞனின் தனித்துவம், அவன் இயங்கும் அகவெளி, அவனது வெளிப்பாடுகளுக்கு உலக அளவில் இருக்கும் மதிப்பு மற்றும் மரியாதை என எதையும் தெரிந்துவைத்திருக்காத மனிதர்களிடம் கலைஞன் பேசவேண்டிய நெருக்கடியை நமது காலம் உருவாக்கிக் கொண்டுவருகிறது என்ற பின்னணியில் இந்தச் சித்திரிப்பு முக்கியமான ஒன்று. இந்த முரண்பாடுகளின் போது கதை சொல்லியை அம்ரீஷின் பக்கம் நிற்க வைக்கிறார் கதாசிரியர் என்பதும் முக்கியமானது. ஏனென்றால், கதைசொல்லி ஒற்றை நபரல்ல; இந்த தேசத்தில் நடக்கும் முட்டாள் தனங்களைக் கண்டு செய்வதறியாது தவிக்கும் பெருங்கூட்டத்தின் பிரதிநிதி அவன்.

முதல் முரண்பாடான காளியின் நவீன ஓவியம் வரையப் பட்டபின் நடக்கும் உரையாடல் :
‘இதெல்லாம் என்ன? காளியைப் பற்றிய உங்கள் கற்பனையா!’ என்றேன்.
‘ சார், கற்பனை என்று ஏன் சொல்லவேண்டும்? கடையில் விற்கும் காளி படங்களை நிஜம் என்று நம்பி பூஜை செய்யும்போது இதையும் காளியும் நிஜம் என்று நான் ஏன் சொல்லக்கூடாது.”
வேண்டாம் அம்ரீஷ்.. இப்போது இங்கே இது அவ்வளவு அவசரமா? யோசித்து முடிவு செய்”
நடந்தைத் தடுக்கமுடியாத இயலாமையோடு நடப்பதைக் கண்டு கலங்கி நிற்கும்  அவனது எண்ணத்தை ஒரேயொரு இடத்தில் மட்டுமே தருகிறார் கதாசிரியர். கதையின் மையப்பாத்திரமான அம்ரீஷை எச்சரித்துவிட்டு ஊருக்குப் போய்த்திரும்புகிறான் அந்தக் கதைசொல்லி அப்போது அவன் இப்படி நினைக்கிறான்:
 “ஊரில் எனக்கு அமைதியைவிட அதிர்ச்சிகள்தான் அதிகம் நேர்ந்தது. அங்கே போனபோது ஏதோ இரண்டு தெருவுக்குள் சண்டை. மனஸ்தாபம் கொலை ஊரே எதோ மௌனப் பகையில் வெந்துகொண்டிருந்தது. மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். அல்லது ஏதோ ஓர் ஈனமான சக்தி இவர்களை இப்படி ஆட்டுகிறதா? உலகம் ஏன் இப்படிக் குறுகிக் கொண்டே வருகிறது”.
கதைசொல்லியின் இந்தக்கூற்றைபோலத்தான் நிகழ்கால இந்தியர்கள் - சிந்திப்பதாகவும் மாற விரும்புபவர்களென நம்புகிறவர்களும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் காதுகொடுத்துக் கேட்கத் தயாரில்லாத அதிகார அமைப்புகளோடும், அதன் ஏவலைக்கேட்டு முரட்டுத்தனம் காட்டும் அதன் தொண்டர்களிடமும் எந்த மொழியில் பேசுவது என்று தெரியாமல் தவிக்கிறோம். அத்தகைய புலம்பலொடு பொருந்திப் போகும் உரையாடல் இப்படி இருக்கிறது:
 ‘குடியிருப்பு அறையில் இருப்பவர்கள் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு நடக்கவேண்டுமென்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். உங்கள் சொந்த விஷயங்களை உங்கள் அறைக்குள்ளேயே வைத்துக்கொள்ளவேண்டும். அதை மீறி நடந்தால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இனிமேல் இப்படி நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” அம்ரீஷ் ஏதோ சொல்ல முயன்றான்.
விதிகளை மீறாமல் இருந்தால்தான்   அங்கே தங்க முடியும். அவ்வளவுதான் சொல்லமுடியும். நீங்கள் போகலாம்’ என்றார் அவர்.
“நான் தவறாக எதுவும் செய்யவில்லை. சார். காளி படத்தைத் தான் மாட்டினேன்” அம்ரிஷ் அடங்கிய கோபத்துடன் சொன்னான்.
முதல் செயலுக்குக் கிடைத்த எதிர்வினைக் காளி படத்தைக் கிழித்ததும் சாணி அடித்ததும். இரண்டாவது செயலுக்குக் கிடைத்த எதிர்வினை உயிர்த் தாக்குதல். அதைக் கேட்கப்போன கதைசொல்லிக்கு நிர்வாகம் சொன்ன பதில்:
“ சார், நீங்க தெளிவாத் தெரியாமல், பேசறீங்க! அவன் சொந்த அறையிலே அவன் ஓவியம் வரைஞ்சிண்டிருந்தான். அது அவனுக்குப் படிப்பு, தொழில்”
அவன் உள்ளே என்ன செஞ்சாங்கிறதுக்கு எங்களுக்குச் சாட்சி இருக்கு உங்களுக்கு அவன் செய்கை நியாயமானதாக இருந்தா நீங்களும் உடனே அவற்றைக் காலிபண்ண வேண்டியிருக்கும். இங்கே அதெல்லாம் நடக்காது. நீங்க கெளம்புங்க. இதுக்கு மேலே பேசாதீங்க”.
உங்கள் விருப்பத்தை உங்கள் அறைக்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்று முதலில் சொன்ன நிர்வாகம், அறைக்குள் செய்த அவனது கலைச்செயல்பாட்டை - பெண்ணை ’மாடலாக’ வைத்து ஓவியம் வரைந்ததை “ நியாயமானதல்ல; ஒழுங்கீனமானது ” என்கிறது.  இந்த இரட்டை நாக்கு தான் நமது அதிகாரத்தின் அரசின் நிலைபாடாக இருக்கிறது. இரட்டை நாக்கு கொண்ட நவீன காளியாக நமது அரசுகளும் அதன் பரிவாரங்களும் நடமாடுகின்றன .

தான் வாழும் காலத்தின் ஆகப்பெரும் சீர்கேட்டைக் கலைத்துவமான படைப்பாக மாற்ற நினைக்கும் ஒருவருக்கான சவால்கள் சிக்கலானவை. எல்லா எழுத்தும் அதனளவில் அரசியல் கேள்விகளை முன்வைக்கின்றன என்றாலும் பேரரசியலின் பின்னணியில் இயங்கும் நுண்ணரசியலின் இயங்குநிலையைக் கலைப் படைப்பாக்குவது கூடுதல் சவால்கள் நிரம்பியவை. இது அரசியல் எழுத்து எனச் சொல்லப்படும் எல்லா எழுத்துக்கும் இத்தகைய சவால் இருக்குமெனச் சொல்லமுடியாது.  அதிகாரத்தில் இருக்கும் அமைப்போடு முரண்படும் அமைப்புகளை எழுதுவது வெளிப்படையான அரசியல். ஆனால் இரட்டைநிலையோடு இயங்கும் ஓர் அதிகாரத்துவ அமைப்பை விசாரணைக்குள்ளாக்குவது கூடுதல் சவால்கள் கொண்டது. அந்தச் சவாலைச் சரியாகக் கையாள்பவர்களே ஆகச்சிறந்த அரசியல் படைப்பாளர்களாக ஆகின்றார்கள். ஏனென்றால் சீர்கேட்டிற்குக் காரணமான அமைப்பும் மனிதர்களும் நேரடியாக இடம்பெறும் விதமாகத் தனது எழுத்தைத் தந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் முன் வைக்கவிரும்பும் கேள்விகளும் நம்பகத் தன்மையோடும், எழுப்பவிரும்பும் விசாரணையையும் நழுவிப்போய்விடவும் கூடாது. ஒருவிதத்தில் கத்திமேல் நடக்கும் வித்தை அது. அந்த வித்தையைச்செவ்வனே செய்துள்ளார் எஸ்.வைத்தீஸ்வரன். கதைக்கு அவர் வைத்த “ஊருக்குள் இரண்டுகாளி” என்ற தலைப்பில் தொடங்கும் அந்த வித்தையை, தங்குமிடத்தின் நிர்வாகம் பேசும் முரண்பாடான பேச்சை எழுதிக் காட்டுவதன் மூலம் நீட்டித்துச் செல்கிறார்.

அந்தக் குடியிருப்புச் சிவப்புக் கற்களால் கட்டப்பட்ட பழங்காலக் கட்டிடம். போன நூற்றாண்டில் பரோடா சமஸ்தானத்துக்குச் சொந்தமான சிப்பாய்களின் கூடாரமாகவோ குதிரைலாயமாகவோ இருந்திருக்க வேண்டும்.    இப்படி வர்ணிக்கப்படும் அந்தக் குடியிருப்பு ஒரு குடியிருப்பை மட்டும் குறிப்பதல்ல. இந்தத்தேசத்தையோ குறிப்பதாகும். இந்தத் தேசம் மன்னராட்சிக்காலத்தின் ஒழுக்கவிதிகளுக்குள்ளும் கலைப்பார்வைக்குள்ளும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

பின்குறிப்பு:
 ‘சிற்பக் கலை அதன் பார்வையாளர்களின் ரசனையால் மட்டுமே முழுமையடையும்; மூலவிக்கிரகமாகக் கோயிலில் வைக்கப்படும்போது அல்ல’ எனச் சொன்ன பைலார்க்கஸைத் துரத்திய பழைய சோழநாட்டின் பின்னணியில் கலையின் இருப்பைப் பேசிய கதை புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம். அதை நாடகமாக மாற்றி மேடையேற்ற முடிந்தது.  நவீன கலையின் இருப்பையும் அதன் அடிப்படை விதிகளைப் புரிந்துகொள்ளாமல் அழித்துவிடத்துடிக்கும் முட்டாள் கூட்டத்தையும் அக்கூட்டத்தின் புரவலர்களாகவும் மூளையாகவும் இருந்துகொண்டே உலகின் முன்னால் எல்லாவற்றையும் ஏற்கும் சகிப்பின் நாயகனாகவும் வேடமிடும் அரசதிகாரத்தை விசாரணைக்குள்ளாக்கியிருக்கும் இந்தக் கதையை -நவீன ஓவியம் அதனை உருவாக்கும் ஓவியக்கலைஞனின் கேள்விக்குள்ளாக்கப்பட்ட இருப்பை, நல்லதொரு சினிமாவாக எடுக்கலாம். என்னால் இயலுமென்று சொல்லவில்லை. கலையின் மீது ஆர்வமுள்ள திரைக்கலைஞர்கள் யாராவது முயன்று பார்க்கலாம்.
=============================================  
வைதீஸ்வரன்
ஊருக்குள் இரண்டுகாளி/ அம்ருதா, பக்.14 -23/  நவம்பர் 2015

No comments :