காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும்.
தொடர்ந்து காதலையும் காதலின் நீட்சியான காமத்தையும் எழுதியெழுதித் தீர்க்கும் இவர்கள் பெண்கள் தானா என்ற சந்தேகம் கூட எழுந்ததுண்டு. அந்தச் சந்தேகத்தை வாரம் இரண்டுமுறை மாற்றும் படங்களின் மூலம் சாய் இந்துவும் கவிதாவும் தீர்த்துவிடுவார்கள். படங்களும் உண்மை; படங்களுக்கான பெயர்களும் உண்மை; பெயர்கள் எழுதும் கவிதைகளும் உண்மை என்பதுபோல. ஆனால் பாலைவன லாந்தர் என்ற பெயரும் புனைவு; அந்தப் பக்கத்தில் வரும் படங்களும் புனைவு; அங்கு இடம்பெறும் கவிதைகளும் புனைவின் பரிமாணங்கள் கூடியவை.

சொற்கள் தீர்ந்துபோகக்கூடியன அல்ல. அதுவும் காதலைச் சொல்லும் சொற்கள் தீர்ந்து போகக்கூடியன அல்ல. ஒருவேளை காதலென நினைத்துக் காமத்தைச் சொல்லிவிட்டால் பூரணத்துவம் அடைந்து தீர்ந்து போகக்கூடும். காமமாகாதவரை காதல், பெருக்கெடுக்கும் இருள். காதலைக் காமத்துக்குக் கடத்தும் களியேறும் சொற்களைக் கண்டடைந்த தமிழ்க் கவிகளை - அள்ளூர் நன்முல்லை, மாறோக்கத்து நப்பசலை, காமக்கண்ணியென விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்கள் எழுதியதன் சாயல் இப்போது எழுதுவோரிடம் தென்படுகிறதா? என்று தேடுவதைவிட இப்போது எழுதுபவர்களிடம் வெளிப்படுவது எவ்வகையானது? எனப்பார்ப்பது சுவாரசியம் தருவது. அப்படித்தான் அகத்தை எழுதுவதில் தீவிரம் காட்டும் இம்மூவரின் கவிதைகளை வாசித்து ‘ விருப்பம்’ சொல்லிவிட்டு விலகிக் கொள்வேன். இப்போது திகட்டத் திகட்ட இம்மூவரின் கவிதைகளை வாசித்தபின் இவர்கள் கொண்டாடுவது அகத்தை அல்ல; அகத்தின் வெளிப்பாட்டுக் கருவியான புறத்தை எனத் தோன்றியது. அதனால் அதைச் சொல்லிவிடலாம் என்பதால் இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

இம்மூவரின் சொல்முறையும் மொழிப் பயன்பாடும், உருவாக்கும் காட்சிச் சித்திரங்களும் வெவ்வேறானவை. சாய் இந்துவிடம் காட்சிச் சித்திரங்களை உருவாக்கவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லையென்றுகூடச் சொல்லலாம். சடசடவெனப் பெய்யும் மழையின் வேகத்தோடு வந்துவிழும் வரிகள் அதிர்ச்சியூட்டுவதை நோக்கமாகக் கொண்டவை போலத் தோன்றுகின்றன. ஆனால் அந்த அதிர்ச்சிகள் தேவையானவை. கவிதாவிடம் உருவாகித் திரளும் காட்சிச் சித்திரங்களோடு சொல்ல நினைத்தது போட்டிபோடுவதால் இடையிலேயே காணாமல் போய்விடுகின்றன சித்திரிப்புகள். ஆனால் லாந்தர் தீவிரமாகச் சித்திரங்களை வரைகிறார். அதன்பின்பு நிதானமாகச் சொல்கிறார்.

பெண்ணுடல் மீது ஆணுடல் கொள்ளும் ஈர்ப்பை முழுமையாக அறிந்துகொண்டவர்கள் போலப் பெண்ணுடலையும், பெண்ணுடலும் ஆணுடலும் அருகிருக்கும்போது கிளம்பும் கிளர்ச்சியையும் எழுதியெழுதித் தீர்த்துவிடப்பார்க்கிறார்கள் இம்மூவரும். தொட்டணைக்க ஊறும் கிளர்ச்சியின் வேகம் தீராத பெருங்குளிர்ச்சியாய் உறைபனிநிலை நோக்கி நகர்கின்றன இவர்களின் கவிதைக்குள். இப்படி எழுதுவது தடுக்கப்பட்ட பெண்ணின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்தவர்களாய், அவர்கள் காட்டும் வஞ்சினம் ஆண்களைப் போட்டிக்கிழுக்கும் உச்சநிலைக்குப் பலநேரங்களில் சென்றிருப்பதை இவர்களின் கவிதைகளில் வாசித்திருக்கிறேன். அந்த வஞ்சினத்தின் உச்சம் வெறுப்பல்ல; ஈர்ப்பு என்பது முக்கியமான ஒன்று. ஆணை வெறுத்தொதுக்கும் பெண்ணிலைத் தன்மையை நீக்கி, ஆண்மையை அடக்கிவிடும் ஆவேசம் கொண்டவை. அடங்கமறுக்கும் ஆண்மைக்கு இடமளிக்காத பெண்மை. இந்தப் புரிதலில்லாத ஆண்களால் இந்தக் கவிதைகளை வாசித்தல் கூடச் சாத்தியமாகாமல் போகலாம். அப்படி வாசித்துத்தீர்க்கும் மனம் நிதானத்தில் ஏற்புமனநிலைக்கு நகரும் என்பது இயங்கியல். எதிர்வினையால் உருவாகும் வினை.

மூவரின் ஒவ்வொரு கவிதையும் எப்படி இந்த வேதிமாற்றத்தைச் செய்யும் மொழிக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்று விளக்கலாம். ஆனால் அந்த விளக்கங்கள் உணர்தலைத் தடுப்பதாக ஆகிவிடும். எனவே ஒவ்வொருவரின் சில கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன். அதனை வாசித்துவிட்டு இன்னும் இன்னும் வேண்டுமென்பவர்கள் அவர்களின் முகநூல் பக்கங்களுக்குள் சென்று தங்கலாம்:
சாய் இந்து /https://www.facebook.com/saikrupa.ravishankar?fref=ts
மழையாகியவனே
எனக்கான
தேனீரும்
போர்வையும்!
****
எதிலும் நீ
----------------------
எங்கிருந்தோ
கரைந்து வரும் பாடல்
அருகாமையின் ஸ்வரங்களை
நிமிட்டும்
சிதறாது வரும்
உனதிருப்பின் சாயல்
செயலிழந்த மண்ணீரல்
நாளத்தில் நாள்தோறும்
காதலின் சிகப்பணுக்கள்
தண்ணீரில் தாரகை
அள்ளவா அணைக்கவா
அறிவில்லா அன்பிற்கு
அத்தனையும் சாத்தியம்
கைகளுள் சிக்காத பூச்சியை
கண்களில் பிடிக்கையில்
மனமெங்கும்
மஞ்சள் புன்னகைகள்
கண்களை கண்டித்தாயிற்று
கண்டபடி அலையும் நினைப்பையும்
நிந்தித்தாயிற்று
மதிலின் நிழலை இரவிடம் தருகிறேன்
அது ஒரு உடன்பாடு
ஒரு கண்துடைப்பு
தற்காலிக வலிநிவாரணி
கண்டும் அறியா நம் கோளின்
கேளிக்கை ராட்டிணத்தின்
ஏறுமுகம்
வீழும் இலக்கணத்தில்
மீளும்
நாம் தவறவிட்ட யுகம்..
நரம்பெங்கும் முறுக்கிய உனை
கவிதையாய் கோர்க்கிறேன்
கையாலாகாதக் கவிதையை
எழுதி விட்டேன்
வாசித்து விட்டு போ
என்னைப் பற்றி
சிறிதும் யோசிக்காமல்
மேஜையை அலங்கரிக்கும்
காகித பூவிற்கு
கண்ணீர் உகுவது
உகந்ததில்லை
அரூப ஆழியில்
அபத்தங்களும் அழகானது
உறையும் உயிரில்
எது நான் ???
****
ஏதொரு முன்னறிவிப்பில்லாமல் கொல்கிறாய்
ஆக பெரும் முன்னேற்பாடோடும்
இறக்கிறேன் !
****
காமக் கங்கு தெறிக்கும் தீப்பொறி
பொசுங்கும் பூவிதழ்
தேவதைகள் தாசிகளாகும் தருணங்களில்


சாத்தானின் சேலையில்
விண்மீன் பிடிக்கும் விழிகளில்
பதிவதில்லை
பால்நிலா வெளிச்சம்


உடல் தேவை உதறிய உயிர்நிலத்தில்
படர்வதில்லை
பசலைக் கொடிகள்


பருந்துக்கு இரையான பின்
பாம்பின் பயணங்கள்
தூரம் இல்லை

இரவில் பசித்தழும் குழந்தையாய்
முனகும் மகுடிக்கு
மறுக்காது ஆடும்
அங்கு இருந்தும் இல்லாத
அரவம் ஒன்று

இரவு போர்த்திய வேட்கைத் தீவுகள்
கடக்க முடியா கடலுக்குள் மூழ்கும்
கருத்த வெறுமையைக் கிழித்தபடி

அகோரி உண்ணும் உடல் உயிரற்றுப் போயினும்
விரைந்து வரும் விந்துப் பெருக்கில்
அது அளைந்து தேடும்
எப்போதேனும் அடித்து வரப்படும்
கரைந்த காதலின் கடைசித் துளிகளை.

****
//அவள் யோக்கியங்களுக்கான நற்சான்றிதழ்//
வளர்ந்த கதிர்கள் வரப்பு மீறும்
குற்றச்சாட்டுடன் வெட்டும் கைகள்
இரவின் இருளில்
இறைவனையும் புணரும்
பதிந்து புதைந்து
படரும் வேர்களுக்கான
அதன் விளைச்சலில்
எவருக்கும் வினாக்களில்லை
கண்ணம்மாவின் நிர்வாணத்திற்கு
காயசண்டிகையின் சேலை போர்த்தியபின்
பசியோடலையும் காட்டு விலங்கை
வீட்டு நாய்க்கு பழக்கி
முற்றத்தில் கட்டினாள்
அறிவுரைகளை அள்ளித் தின்றும்
அடிவயிற்றைக் கடித்துக் குதறும்
குதறிய ரணத்தை
அருவெறுப்பென்னும் அதே வாய்
அன்பையும் கேட்கிறது
நம்பிக்கைக் காலாவதியான
களிம்பை நீட்டி
பட்டாம்பூச்சியை பட்டுப்புழுவிற்கு
மாற்றும் முயற்ச்சியில்
வாழ்நாள் தோறும்
அவள் யோக்கியங்களுக்கான
உங்கள் நற்சான்றிதழின்
வார்த்தைகளைக் கொண்டு
முட்டுத்தெருக் கடையில்
மூன்று இட்லி கேட்கிறேன்
மிடறு தேநீர் கூடப்
பெறாதென்று நாயர் சிரித்தார்
அறையெங்கும் தொங்கும்
சான்றிதழின் சட்டத்தில்
நல்லவள் நகைக்கிறாள்
நகம் கடித்தபடி!
எதிர் புன்னகை எறிகிறேன்
அறுத்தெறிந்த விரல்களின்
அழுகை
அனைவரையும் போல
அவளும்
அறியாதிருக்கட்டும் !!
==============

இறையாகும் பக்தன்

May 27, 2014 at 8:17am
பாதத்தின் வாசலில் பாதம் பதித்து
கால் தூண்கள் பிடித்து
தொடைத் தாழ்வாரங்கள்
தாண்டியபின்
தொப்புள் குளத்தில் விரல் நனைத்து விளையாட்டு
இடுப்பு பிரகாரத்தில் இடைவிடா பிரதட்சணங்கள்
நெஞ்ச வளைவுகளில் கிரி வலம் நிகழ்த்தி
கோபுர தரிசனம் முடித்து கருவறை உட்புக
உதடெங்கும் உதிர்த்த முத்த அர்ச்சனைகளோடு
காதில் ஓதப்படும் காதல் கோரிக்கைகள்
கூப்பிய கைகள் கண்ணில்
கடவுளைத் தேடிட
தீண்டலில் தொடங்கி தீர்த்தங்களில் முடியும்
கூடு விட்டுக் கூடு பாயும் தருணங்கள்
வரம் கேட்டு வந்தவன் இறையாகி
தேவியோ பக்தையாக
கர்ப்பக்கிரகத்தில்
மென் வெப்பதின்பின்
பனிக்கூழ் குளிர்ச்சி
ஆறுகால பூசையின் பின்
அயர்ந்து துயிலில்
பூசைப் பாத்திரங்கள்
ஆலிங்கனத்தில் ஜோடிப் புறாக்கள்
====================================================================
கவிதா ரவீந்திரன்// https://www.facebook.com/kavitha.raveendaran?fref=ts
======================
சோடியம் விளக்கொளியில்
வந்து படுத்த அவன் நிழல் மேல்
பெய்துகொண்டிருக்கிறது மழை.....
என்ன செய்வது
அவ்வளவு சுலபத்தில் முடிந்துவிடுவதில்லை
காதல் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது
======================
நடுமுதுகில் மோவாய் உரசி
நின் கூச்சம் தீண்டிய தருணம்
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
காவு விட
கள்ளம் பழகுகிறேன் ...
===================
கலவிக்கு பிந்தைய நெற்றி முத்தத்தில்
இன்னும் அழகாகிறது காதல் !
==========================
ஒரு பெரிய இல்லைக்கு மத்தியில்
ஒரு சிறிய ஆமாமாய் வந்தமர்ந்த காதலனுக்கு ,
வாக்கியங்களின் சீட்டுக்கட்டில்
ஒரு ஜோகர் துருப்பாய் -காதல்
ஒரு பதிலாக எப்போதும் அமையப் பெறாத
ஏதேதோ கேள்விகளுக்கு
மொள்ளத்தயாராக இல்லாத குடம் அவரவர் சுயம்
உச்சி சூரியனோடு சம்பாஷிக்கும் பளிங்கு மீராக்கள்
இருக்கும் வரைக்கும்
அவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுவதில்லை ,காதல்
எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்..
என் விடையில் நீயும்
உன் விடையில் நானும்
முத்தத்தின் எல்லா பற்களோடும் என்னை காதல் செய்


என்ன வகையான அன்புடா உன்னுடையது ?
வகை வகையாக சமைத்து தருகிறேன்
பசியில்லை என்கிறது
பழங்களைப் பறித்துத் தருகிறேன்
காடே வேண்டும் என்கிறது
நெடும்தூரம் பயணம் போவோம் என்றேன்
உறக்கம் வருதென்று படுத்துக்கொண்டது
தண்ணீர் வேண்டுமா என்றேன்
கடலே வேண்டும் என்கிறது
அமர்ந்து கொள்ள ராஜ சிம்மாசனம் தந்தேன்
சூன்யத்தை பிடித்து வா என்றது
இப்படித்தான் வாழ வேண்டும் என்றேன்
அதை சொன்ன மூதாயை கூட்டி வா என்றது
இன்னும் எதையெல்லாம் காவு கொடுக்க என்று தெரியாமல்
நீண்டுகொண்டே போகுது
நமக்கான நெடுந்தூர பயணமொன்று ...
======================

எந்த உறவுக் குடுவைக்குள்ளும்
அவனை நுழைக்க முடியவில்லை
காற்றாய் பறக்கவிட்டு
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
=============================================
பாலைவன லாந்தர் /https://www.facebook.com/palaivanam999?fref=ts


எதைக் கொண்டு நிறைப்பது உனது இழப்பை
******************
தொண்டைக் குழிக்குள் சதா அல்லாடுகிறது அந்த வார்த்தை
சிலந்தியின் எச்சில் இது
அத்தனை எளிதில் உலர்ந்து விடுமா என்ன
புன்னை குயில்கள் கராவுகிறது
நாம் லயித்துக் கிடந்த நிலத்தில் ஒரு சோடி உயிரற்ற நிழல்கள் கிடந்ததாம்
சொல் ..
அறுத்த மாமிசங்களின் உறையாத ரத்த வாடையை எழுதுவாயா
தைலம் பூசிக்கொண்ட நெற்றிப் பொட்டில் தெறிக்கிறது மந்தகாச முகம்
மழிக்காத மீசையில் ஊடுருவி தவிக்கும்
இயலாமை
அந்தரங்க அறைக்கு ஆணிகள் அறையப்பட்ட எண்பது வாசல்கள்
எரிகின்ற எந்த விளக்கிலாவது எனக்கான நெருப்பு இருக்குமா
நினைவிருக்கிறதா
வாரண்டியோடு வாங்கிய அலைபேசி
அதன் அழைப்புமணி ஏளனம் செய்கிறது
வெடித்த பிளவுகளையுடைய பாதையில் சரசரவென ஓடுகிறபோது
உள்ளங்கைகளில் உணர்கிறாள்
வெப்பக்காற்றை
செம்மறி ஆட்டுப் பிடறியை
விஷம் உமிழும் சர்ப்பத்தை
எதைக் கொன்று நிறைப்பாய் உனது இழப்பை . .


பசித்தீரா இருள்
***********************
ப்ரியமானவனைச் சந்திக்க இருளைத் தேடும் சகி
உயர்தர மதுக்கோப்பைகள் குலுங்கும் விடுதி
நிலவைத் தீண்டாத மொட்டைமாடிகள்
தவளைகள் துள்ளும் கொல்லைப்புறம்
சாத்தான்கள் துளிர்க்கும் நடுநிசி
முத்தமிடுவதற்கு முன் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே
உள்ளங்கைகளை அழுந்தியபடியே
மூச்சுக்காற்று நிறம்மாறும்
அசாத்தியத் தைரியம் தலைக்கேறும்
முத்தத்தை விட இன்னும் ஏதோயென
தேடுதல் தொடங்கும்
பிடிக்காத நாகரீகங்களை
ஊசிதுளைக்கும் பார்வைகளை
கண்ணீர்த் திவலைகளை
நடுங்கும் விரல்களை
இருள் போர்த்திவிடுகின்றது
கர்வம் அழகாக காவு வாங்கப்படுகிறது
கெட்ட வார்த்தைகளைக் கேட்டுப்பெறுகிறது
பாகுபாடின்றி பாவம் பங்கிடப்பட்டபின்
தாகம் தீர்ந்த அசதியில் இருள் உறங்குகிறது
இருள் சினேகன்
இருள் எதிரி
இருள் துரோகி
இருள் தியாகி
இருள் யாதுமானவன்
ஆளரவமற்ற மயானத்தில் பாதிவெந்த ஜடம்போல
நன்மைக்கும் தீமைக்கும் அல்லாடும்
பிரளயச் சிதறல்களை எழுதித் தீர்க்கும்
இருட்டின் நாக்குகளுக்குப் பசியடங்கவேயில்லை


இரத்தம் கசியும் பியானோ
***************************************
எனக்கென ஒரு பியானோ கொடுக்கப்பட்டது
எனக்கு அதை உபயோகிக்கத் தெரியவில்லை
வீட்டின் மூலையை ஆக்கிரமித்து
போகையிலும் வருகையிலும் இம்சிக்கிறது
அமானுஷ்யக் கனவுகள் நிறைந்தக் கூதிர் இரவில்
கருப்பு வெள்ளைக் கீபோர்டு தானாக நகர்கிறது
அதன் இசை கடந்தக்கூதிரில் மாண்டுப் போன
சிநேகிதியின் குரலில் ஸ்வரம் கூட்டியபடியே
புதுவருடக் கொண்டாட்டத்தில் லேசான
போதையில் முத்தமிடத் துணிந்த இதழ்களின்
உதட்டுச்சாயம் சோடியம் விளக்கொளியில்
ரத்தமாய் பியானோவில் சிதறியது
உறக்கம் தொலைத்த இன்னோர் இரவில்
கடுஞ் சினத்துடன்
ஓங்கியுதைத்தப் பியானோ
அவள் உடலென மாறித் தெளிந்தது
அந்த விடியலில்
சூரிய ஒளியில்
கரையான் அரித்த அடிப்பகுதியும்
பூனையின் கால்கள் மீட்டிய இசையும்
அதிகாரப்பூர்வ வெறுமையை
தொண்டைக்குழியில் இறக்கியது


இந்நேரம்
***********
இந்த இருட்டின் சாயம் தேயத்தேய
ஒங்கரிக்கிறதது நிழலின் செரிமானம்
அசட்டுத் துணிச்சலில் வெளியேறிய ரோஷம்
முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு நிற்கிற நிலை
இந்நேரம்
சந்திரத் தூரிகையால்
கஜுராஹோவின் இடையும் உடையற்ற அங்கங்களும்
தடவித் தடவித் தோய்ந்திருக்கும்
இந்நேரம்
முழங்காலில் முகம் புதைத்திருந்த
அவளுக்கு அன்றைய ராவின் கூலி
கஞ்சனொருவனால் பேரம் பேசப்பட்டது
இந்நேரம்
சக இனத்துக்குத் தெரியாமல்
புதைத்துவைத்த சதைத் துண்டுகளை
கூரிய நகங்களால்
பிராண்டித் தேடுகிறது கிழட்டு செந்நாய்
அகம் பிரம்மாஷ்மி
அகம் பிரம்மாஷ்மி
அகம் பிரம்மாஷ்மி
என்று அரற்றும் அகோரியின்
போதை நிழலில் சாய்கிறது
கங்கைக் கசடுகள்
இந்நேரம்
தவளையினம் அழிவதைக் கொண்டாடும் சாத்தான்
தாங்க இயலாத பாவத்தை
நடுநிசி பிரதிகளிடம்
சட்டென இறக்கிவைக்கிறான்
இந்நேரம்
வெடித்தப் பாதங்களில் ஊற்றிய
சாராயத்துடன் பதினேழாம் மாடிக்கு
சும்மாடு சுமக்குபவளின்
குழந்தை பாலுக்கு வீறிடுகிறது
இந்நேரம்
உலகம் அமைதியானது என்பதை நம்பும்
இளம் கவிஞன்
காதலைப் பற்றி கவிதை எழுதுகிறான் ..

============================================

கருத்துகள்

யோகியின் தேடல்கள் இவ்வாறு கூறியுள்ளார்…
கட்டுரைக்கு நன்றி சார். தோழிகளின் அழகான கவிதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்