November 22, 2015

மணற்கேணியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்


முன்னுரை
ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியின் இயல்பையும் இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப்போக்கிற்கான காரணங்களோடு அறிந்து கொள்ள வேண்டியது  அடிப்படைத்தேவை. அந்தத்தேவை நிறைவேறும் போதுதான் அந்த நபர் தனது சொந்தப் பண்பாட்டுக்குள் இருப்பதை உணரமுடியும்.  ஒருவரின் தன்னிலை அல்லது இருப்பு என்பதே அவரது தாய்மொழியாலும், அதில் உருவான இலக்கியப்பிரதிகளாலும், அதன் வழியாக உருவாகும் பண்பாட்டுக் கூறுகளாலுமே உருவாக்கம் அடைகிறது. அதனை நிறைவேற்றும் நோக்கம் கொண்டதாக மொழி இலக்கியக் கல்வியின் பாடத்திட்டங்கள் அமையவேண்டும். ஆனால் மொழி இலக்கியக் கல்வியின் சிறப்புப்பாடத்திட்டங்கள் பொதுப்பரப்பின் ஒருபகுதியை விருப்பப் பாடமாக மாற்றி ஆய்வை நோக்கி நகர்த்தவேண்டும். ஆய்வாளர்கள் தாங்கள் தேர்வு செய்யும் சிறப்புத்தலைப்பில் ஆழமான பொதுநிலை அறிவையும், தலைப்பில் புதியன கூறலையும் வெளிப்படுத்தவேண்டும்.
 இப்போது தமிழகப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பெற்றுள்ள - பின்பற்றப்படுகின்ற பாடத்திட்டங்கள் மற்றும் ஆய்வேடுகள்  இத்தகைய நோக்கங்களோடு இருக்கின்றனவா என்பது ஐயத்திற்குரியது.

பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகள் முதன்மை நோக்கங்களிலிருந்து விலகும்போது தனிநபர்களும், அமைப்புக்குள் முழுமையாகச் செயல்பட முடியாதவர்களும் உருவாக்கக் கூடிய அமைப்புகள் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்காக இணை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அப்படியான நடவடிக்கைகளில் ஒன்றே மணற்கேணி ஆய்விதழின் தொடக்கமும் அவை நடத்தும் ஒரு பொருள் குறித்த கருத்தரங்குகளும் எனக் கொள்ளலாம். மணற்கேணி இணைநடவடிக்கையின் வெளிப்பாடு என்றாலும், எதிர்நடவடிக்கையாகச் செயல்படக்கூடாது என்ற திட்டத்தோடு கல்விப்புல ஆய்வாளர்களோடு தொடர்ச்சியாக உறவைப்பேணி வந்துள்ளது. 

 இதுவரை வந்துள்ள 30 இதழ்களையும் முழுமையாக மதிப்பீடு செய்யும்விதமாக இந்த ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கருத்தரங்கைக் கருதுகிறேன்.மொத்தமாக அதன் மொத்த எழுத்துகளையும் பொருள் சுட்டியாகவும் பெயர் சுட்டியாகவும் சொற்சுட்டியாகவும் பிரித்துப் பார்க்கும் பணியை எனது இளநிலை ஆய்வாளர்களின் துணையோடு செய்து கொண்டிருக்கிறேன். பின்னர் அதனை விரிவாகக் கூறலாம்.  இங்கே மணற்கேணியில் வந்துள்ள செவ்வியல் தொடர்பான எழுத்துகளை மட்டும் முன்வைத்து எனது மதிப்பீடுகளை முன்வைக்கிறேன். செவ்வியல் இலக்கியங்கள் என்பதாக தமிழ்ச்  செம்மொழி மைய நிறுவனம் வரையறை செய்துள்ள பட்டியலை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபற்றிய விவாதங்களுக்குள்ளும் இப்போது போகவில்லை.

பார்வைகள்

ஆய்வாளருக்குக் கிடைக்கும் பனுவல்களை எந்தக் கோணத்திலிருந்து பார்க்கிறார் என்பதிலிருந்து ஆய்வின் நோக்கமும் கிடைக்கும் முடிவுகளும் பின்பற்றும் ஆய்வுமுறையியலும் மாறுபடுகின்றன.  ஆய்வாளர் முன்னுள்ள பனுவல்களைத் தகவல்கள் நிரம்பிய தகவல்களாகப் பார்ப்பது ஒருவகைப் பார்வை.  அந்தப் பார்வை இலக்கியம் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என நம்புகிறது. அந்த நம்பிக்கை எழுதியவனையும் எழுதக் காரணமான சமூக நெருக்கடியையும் கண்டுகொள்வதில்லை. பனுவல்கள் தகவல்கள் நிரம்பிய பிரதிகள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தத் தகவல்களை எழுதியவன் என்னென்ன காரணங்களுக்காக , என்னென்ன முறையில் அடுக்கித்தருகிறான் என்பதும் கவனிக்கவேண்டியன. அப்படியான ஒட்டுமொத்தப்பார்வையே கலையியல் பார்வை எனச் சொல்லப்படுகின்றது.

கல்விப்புலத்தினர் இலக்கியப்பிரதிகளை எவ்வாறு கணிக்கின்றனர் என்பதும் அக்கணிப்பின் காரணமாக நேர்ந்துள்ள பிழைகளைக்கண்டறிந்து களையவேண்டியதும் தமிழ் இலக்கியக் கல்வியில் முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒன்று.  இலக்கியம் வெறும் தகவல்களின் களஞ்சியமாகவும் விவரணத் தொகுப்புக்களாகவும் கணிக்கப்படும்நிலை இன்று தூக்கலாக உள்ளது.  அதன் தொடர்ச்சியாக இலக்கியம் சமூகத்தின் பிரதிபலிப்பு, காலக் கண்ணாடி என்ற திறனாய்வுக் கருத்தியல்களுக்குள் முடங்கிப் போனதாகவும் ஆகிவிட்டது. மொழியின் இலக்கணத்தை பேசும் தொல்காப்பியத்தையும் அதற்குள் கவிதைகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான இலக்கணங்களாகத் திணைக் குறிப்புக்கள், அவற்றின் பல்வேறு நிலைகளான துறைக் குறிப்புக்கள், கவிதைகளில் இடம்பெறும் புனைவுப் பாத்திரங்கள், அக்கவிதையின் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனப் பொருள் கோட்பாடு எனக் கற்றுத்தேர்ந்துள்ள மரபுத்தமிழ் வாசகர்கள் இலக்கியத்தை இவ்வாறு வாசிக்க நேர்ந்தது எப்படி என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி.  “ சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்எனவும் அகம், புறம் எனவும் களவு, கற்பு எனவும் செவ்வியல் இலக்கியக் கோட்பாட்டையும், கவிதை அழகியலாக நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த புலனெறி வழக்கம் பற்றியெல்லாம் படித்துள்ள தமிழ் மாணாக்கர்களின் ரசனையை வெறும் தகவல் சார்ந்த ரசனையாகவும், இடம்பெறும் குறிப்புக்களின் விளக்கங்களாகவும் மாற்றிய அம்சங்கள் எவை எனச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் நம்முன் இருக்கிறது.  அழகியலின் நுட்பங்களாக உள்ளுறை, இறைச்சி, உவமம், வண்ணம், நோக்கு எனச் சிந்தித்துக் கவிதை எழுதி ரசித்த வளமான கவிதைப் பாரம்பரியத்தில் வந்த தமிழ் மாணவனும் ஆய்வாளனும் இன்று கவிதையைப் பற்றிய படிப்பை வெறும் அர்த்தம் சொல்லும் படிப்பாகப் பார்க்கும் அவலம் எவ்வாறு நிகழ்ந்தது எனக் கண்டறிய வேண்டியது தேவையாக உள்ளது.

தமிழுக்கெனத் தனித்துவம் கொண்ட மொழி மற்றும் இலக்கிய வரையறைகளைக் கொண்ட நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். அதனைப் பற்றிய பார்வையிலிருந்தே தமிழியல் ஆய்வுகளின் போக்கை - ஆய்வாளர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். தொல்காப்பியத்தை அதன் எழுதப்பெற்ற நோக்கம் மற்றும் சாரம் தமிழ் மாணவர்களுக்குச் சரியாகக் கற்றுத்தரப்படாததன் விளைவுகள் பாரதூரமான எதிர்விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது.

போக்குகள்
பல்கலைக்கழகங்களில் செய்யப்படும் ஆய்வுகளில் பெரும்பாலானவை தொல்காப்பியத்தை ஒற்றை நூலாகக் கருதாமல் இரண்டுவிதமான நூல்களாகக் கருதுகின்றன.  தனது காலத்தில் செய்யுள்/இலக்கியம் எவ்வாறு இருந்தது என்பதை பேசும் தொல்காப்பியர் ஒரே நேரத்தில் அதன் உருவாக்கமுறையையும் அதனைப் பகுத்து விளக்கித்திறனறியும் பேசியிருக்கிறார். இதற்கான அடிப்படைகளை எழுத்ததிகாரத்திலிருந்தே தொடங்குகிறார்; சொல்லதிகாரத்தின் வழியாகப் பொருளதிகாரத்தில் நிறைவு செய்கிறார். பொருள் என்பது இலக்கியமே. தொல்காப்பியரின் வரையறைப்படி அவரது கவிதையியல் கோட்பாடு என்பது பொருள் கோட்பாடே. அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளச் செய்யுளியலின் முக்கியத் துவத்தை உணரவேண்டும். அதை உணர்ந்த ஆய்வுகளே சரியான திசைவழிகளைக் கையாளும் செவ்வியல் ஆய்வுகளாக அமையும். இதற்கான முன்னோடி ஆய்வாளராகச் சொல்லவேண்டியவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரன். அவரது வழியில் தொல்காப்பியத்தைப் புரிந்து கொண்டு விளக்கியவர்கள் பேரா. எஸ். அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கா. சிவத்தம்பி போன்றோர்.

இவர்களின் போக்கிற்கு மாறான போக்குடையோர் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். பேரா.மு.வரதராசன் , பேரா. வ.சுப.மாணிக்கம் தொடங்கி நீளும் அந்த மரபினர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தனித்த ஒன்றாக நினைத்தனர். அது பழந்தமிழர்களின் வாழ்க்கைபற்றிய வரையறைகளைத் தொகுத்துப் பதிவுசெய்த தகவல் திரட்டாகப் பார்த்தனர். அதனைப் பின்பற்றியே தமிழர்கள் வாழ்ந்தார்கள்; அந்த வாழ்க்கையையே சங்ககாலப் புலவர்கள் அகம் மற்றும் புறக்கவிதைகளாகப் பதிவு செய்தனர் என நம்பினார்கள். அதன் காரணமாகவே செவ்வியல் கவிதைகளில் அகவாழ்க்கை, புறவாழ்க்கை போன்றன தேடப்பட்டன. அத்தகைய வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவரும் முனைப்புகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் செவ்வியல் என்பது ஒரு கலையியல் கொள்கை. அதன்படி எழுதப்படுவது இலக்கியப்பிரதிகள் மட்டுமே; வாழ்க்கை அல்ல.

தமிழின் செவ்வியல் பிரதிகளைத் தரவுகளாகக் கொண்டு செய்யப்பெற்றுள்ள ஆய்வுகளில் பெரும்பாலானவை இரண்டாம்வகைப்பட்ட ஆய்வுகளே. ஆனால் மணற்கேணி அந்தப் பெரும்போக்கோடு தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் சிறுபான்மைக் கருத்தியலோடு, தெ.பொ.மீனாட்சி சுந்தரனின் முன்வைப்பாக இருந்த தொல்காப்பியமென்னும் கவிதையியல் என்னும் பனுவல் என்னும் போக்கோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை முக்கியமான திசைமாற்றம் எனச் சொல்லவேண்டும். 

தமிழ்க்கல்வியில் மொழி பற்றிய அறிவியல் பார்வையையும் இலக்கியம் பற்றிய உலகப்பார்வையையும் உள்வாங்கிய பேரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரனின் வழித் தோன்றல்களான பேரா. செ.வை. சண்முகம், கா. சிவத்தம்பி, கோ.விசயவேணுகோபால், அ.அ. மணவாளன், இந்திரா பார்த்தசாரதி, சோ.ந. கந்தசாமி, இ.அண்ணாமலை,  இரா. கோதண்டராமன், துரை. சீனிச்சாமி, குளோறியா சுந்தரமதி, கி.நாச்சமுத்து, பெ. மாதையன், செ. ரவீந்திரன், ராஜ் கௌதமன், க. பஞ்சாங்கம், வீ. அரசு, அ.ராமசாமி, முதலான பேராசிரியர்கள் மணற்கேணியில் தொடர்ந்து தொல்காப்பியம் பற்றியும் செவ்வியல் இலக்கியங்கள் பற்றியும் பங்களிப்பு செய்துள்ளனர்.

இந்தப் போக்கை முதன்மையாகக் கருதி வளர்த்தெடுப்பதில் அதிக அக்கறை காட்டியுள்ள மணற்கேணி இலக்கியப்பனுவல்களைத் தகவல்களின் திரட்டாகப் பார்க்கும் பார்வையை முன்வைக்கும் பேராசிரிய மரபையும் புறந்தள்ளவில்லை. தேடுவதிலும் முன்வைப்பதிலும் ஒரு கல்விப்புல ஒழுங்கை முதன்மையாகக் கருதும் பேரா. அறவாணன், இலக்குவனார் திருவள்ளுவன், பத்மாவதி, அ.அறிவுநம்பி, வி.எஸ்.ராஜம், சிலம்பு நா. செல்வராசு ஆகியோரையும் பங்கேற்கச் செய்து இரண்டு போக்குக்கும் உறவை ஏற்படுத்த முயன்றுள்ளது. இத்தகைய இணைவுகள் காலத்தின் தேவை.

இவ்விரு போக்கில் தங்களின் பார்வை என்பதை இன்னும் அடையாளப்படுத்திக்கொள்ளாத ஆய்வாளர்களும் கூட மணற்கேணியில் பங்கு பெற்றுள்ளனர். அ.மங்கை,  இரா.சம்பத், ராஜேஸ்வரி,  விஜயராணி, அ.குணசேகரன், இரா. ஜெயராமன், அ.மோகனா, சா. உதயசூரியன்,  புதியவர்கள் தொடர்ந்து பங்கேற்கும்போது அவர்களின் ஆய்வடையாளம் உறுதியாகக் கூடும். தமிழியற்புல ஆய்வாளர்களோடு கா.ராஜன், பக்வச்சலபாரதி, ஜெய்சங்கர், பெ. வெங்கடாசலம், இ. ஜெயப்பிரகாஷ் பிறபுலத்து ஆய்வாளர்களின் பங்களிப்பும் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முக்கியத்துவம்
செவ்வியல் குறித்த மொத்தமான கட்டுரைகளில் தொல்காப்பியம் மற்றும் தனிநிலைக் கவிதைகளான எட்டுத்தொகை குறித்த பார்வைகளைக் காத்திரமாக - கவிதையியல் என்னும் முதன்மை நோக்கத்தோடு- முன்வைக்கும் செ.வை. சண்முகம், பெ.மாதையன், துரை.சீனிச்சாமி ஆகியோரின் கட்டுரைகளையும், இலக்கிய உருவாக்கத்தில் ஒரு கால கட்டத்தின் சமூக இயங்கியலுக்கிருக்கும் பங்களிப்பை வெளிக் கொண்டுவந்துள்ள ராஜ் கௌதமனின் கட்டுரைகளையும் முக்கியமானவையாகக் கருதுகிறேன். அதேபோல் சிலப்பதிகாரம் , மணிமேகலை என்னும் தமிழின் தனித்துவமான உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்கள் பற்றிய கட்டுரைகளும் மணற்கேணியின் முக்கியமான பங்களிப்புகள். மிகப்பிற்பட்ட காலத்தில் தமிழுக்குள் அறிமுகமான தண்டியலங்காரத்தின் காப்பியக்கொள்கையைக் கொண்டு இவ்விரு பனுவல்களையும் ஆய்வுசெய்யும் போக்கு மாற்றப்படவேண்டிய ஒன்று. அதேபோல் தமிழியல் ஆய்வுகள் நெடும்பாடல்களாக வளர்ந்த பத்துப்பாட்டை மையப்படுத்திய கட்டுரைகளிலும் கவனம் செலுத்தவேண்டும். மணற்கேணியில் அத்தகையன  எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.

இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுபவராக மணற்கேணியின் ஆசிரியர் ரவிக்குமார் செயல்பட்டுள்ளார் என்பதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். ஒருங்கிணைப்புச் செய்யும் ஆய்விதழின் ஆசிரியர் என்பதைத் தாண்டி மொழி, இலக்கியம், தத்துவம், அரசியல் எனப் பலதுறை அறிவைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் எப்போதும் அயராது பாடுபடுபவர் அவர். மணற்கேணியில் வந்துள்ள செவ்வியல் தொடர்பான பனுவல்களைத் தொகுத்துப் பார்க்கும்போது அவரது பங்களிப்புகள் ஆய்வுக்கட்டுரைகள் என்பனவாக இல்லாமல், ஆய்வாளர்களை ஆய்வின் நுட்பங்களுக்குள்ளும் புதியபுதிய திசைகளுக்குள்ளும் செல்லவேண்டியனவற்றை உணர்த்தும் வழிகாட்டலைச் செய்யும் ஒருவரின் பணியாகப்படுகிறது. அதுதான் ஆய்விதழ் ஒன்றின் ஆசிரியப்பணி. இந்தத் தொடர்ச்சியான பணிக்காக அதன் ஆசிரியர் பொறுப்பிலிருக்கும் ரவிக்குமாருக்குப் பாராட்டுகள். உடன் பணியாற்றும் எழுத்தாளர் தேன்மொழிக்கும் பாராட்டுகள்.

· · செவ்வியல் இலக்கியங்கள் (தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உட்பட)
1.      அண்ணாமலை,இ.,  தமிழ்ச் செவ்விலக்கியம் பயிற்சியில் பாதை, 11:57-63
2.      அறவாணன், க.ப., சங்ககாலத் தமிழகத்தில் பொதுமக்கள் கல்வி, 13:79-82
3.      அரசு, வீ., தமிழ்ச்செவ்வியல் படிப்பும் தமிழ்ச் செவ்வியல் ஆய்வும், 13:40-44
4.      அறிவு நம்பி, அ.,தொல்காப்பியரின் காலம்: மரபுகளை முன்வைத்து,18:71-74
5.      அறிவு நம்பி, அ.,புறநானூறு : மன்னர் இலக்கியமன்று; மக்கள் இலக்கியமே,21:33-38
6.      இந்திரா பார்த்தசாரதி, செம்பதிப்பு அணுகுமுறைகள்,13:21
7.      இலக்குவனார் திருவள்ளுவன், புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்ல ,19: 55-61
8.      உதயசூரியன், சா., தமிழ்ச்செவ்வியல் ஆய்வுகளை அயலக மண்ணில் விரிவு செய்தல், 13:53
9.      கந்தசாமி, சோ.ந., செவ்வியல் தமிழிலக்கியம்,14:35-36
10.   காந்தி,சி., செவ்வியல் ஆய்வு சிறக்க சில முன்மொழிவுகள், 13:19-20
11.   கார்த்திகேசு சிவத்தம்பி, சங்ககால இலக்கியம், ஆய்வின் பரிமாணங்கள், 7:52-72
12.   குணசேகரன்,அ., தேவை ஒருங்கிணைந்த செவ்விலக்கியப் பயிற்சி மையம், 13:45-46
13.   குளோறியா சுந்தரமதி, இலா., “முன்னம்” என்னும் செய்யுள் உறுப்பு,16:99-104
14.   சண்முகம்,செ.வை., நாடாகொன்றோ காடாகொன்றோ- தெ.பொ.மீ.யின் ஒப்பாய்வு , மொழிபெயர்ப்பும் மீள்பார்வையும், 9:49-53
15.   சண்முகம்,செ.வை.,சங்க இலக்கியத்தில் இறைச்சி, 24: 3-15.
16.   சீனிச்சாமி, முனைவர் து. தொல்காப்பியரின் செய்யுள் கோட்பாடு,16:82-98
17.   சுந்தரமூர்த்தி,இ., பாணர் இசைமரபு, 12:86-91
18.   செயராமன்,ரா., தமிழ்ச்செவ்வியல் கல்வியில் நசிவு தடுக்க
19.   செல்வராசு, சிலம்பு, நா., சங்க இலக்கிய ஆய்வுகள், நெடுங்கனவுகள், 13: 47-52
20.   நாச்சிமுத்து, கி., தமிழ்ச்செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று. 13:5-10
21.   பக்தவத்சல பாரதி, திராவிடமும் ஆரியமும் ; பண்பாட்டு மூலங்கள் நோக்கிய மானிடவியல் குறிப்புகள்,15: 31-40
22.   பஞ்சாங்கம், க., சங்ககால மகளிர் -உடன்போக்குத்துறைப்பாடல்களை முன்வைத்து, 6:63-70
23.   பஞ்சாங்கம், க., செவ்வியல் இலக்கியக்கல்வியை மீட்டெடுத்தல் -சில குறிப்புகள்
24.   மங்கை, அ., நக்கண்ணையின் விழைவுரை, 6: 71-76
25.   மணவாளன், அ.அ., தமிழும் சமஸ்கிருதமும் /கேடும் பெருக்கமும் இல்லல்ல,15: 6-8
26.   மயிலை சீனி வேங்கடசாமி, சமஸ்கிருதமும் எழினி யவனிகா, 27: 70-74
27.   மாதையன், மா., தமிழகச்சூழலும் செம்மொழித்தமிழாய்வின் எதிர்காலமும், 13:31-35
28.   மாதையன், மா., தொல்காப்பியச் செய்யுளியலும் தனித்தன்மையும் மைய ஈர்ப்பும்,14:9-17
29.   மாதையன், பெ., தொல்காப்பியப் பொருளதிகாரத்தொன்மையும் தனித்தன்மையும்,15:9-16
30.   மாதையன், பெ., தொல்காப்பிய நோக்கில் சங்க இலக்கிய அகத்திணைக்கவிதையியல், 17: 61-85
31.   மோகனா,அ., உளவியல் நோக்கில் சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்,6:77-86
32.   ரவிக்குமார், பொருளோடு முழங்கிய புலம்புரிச்சங்கம்- கோவை உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு பற்றிய சில குறிப்புகள், 1:84-98
33.   ரவிக்குமார், ( மதிப்புரை) -Foreign Notices of Tamil Classics, by S.S. Kandaswamy, 2010, Tamil University ,சமஸ்கிருதமும் சங்க இலக்கியமும், 9:110-117
34.   ரவிக்குமார், செம்மொழிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் (ஷெல்டன் பொல்லாக்கின் ஆய்வை முன்வைத்துச் சில குறிப்புகள்,11: 47-56
35.   ரவிக்குமார், தமிழ்ச்செவ்வியல் ஆய்வுகள் இன்று, 13:3-4
36.   ரவீந்திரன், செ., தமிழ்ச்செவ்வியல் ஆய்வுகள் இன்று-சில பதிவுகள் 13:57- 64
37.   ரவீந்திரன், செ., தமிழும் சமஸ்கிருதமும் இருவேறு கலைமரபின் நீரோட்ட இணைவும் எதிர்வும்,14:43-57
38.   ரவீந்திரன், சங்ககாலக் கூத்துக்கலையும் அதன் வகைகளும் ,19:100-109
39.   ராமசாமி,அ., தன்னிலையைக் கட்டமைக்கும் எடுத்துரைப்புக்கூறு, 1:108-118
40.   ராஜ்கௌதமன், புனைவுமொழியாடலும் மீள்நிலை நிறுத்தலும் அரசியலும், 9:18-26
41.   ராஜ்கௌதமன்,நான்மாடக்கூடலும் திருவிளையாடலும், 9:67-78
42.   ராஜ்கௌதமன், தமிழ்ச் செவ்வியல் மரபும் களவுக்காமமும்,11 :64 -72
43.   ராஜம், வி.எஸ்., “ஈ” என்று இரந்தான் அவன், 4:33-35
44.   ராஜம், வி.எஸ்., வேறென்ன வேண்டும், 5: 80-84
45.   ராஜம், வி.எஸ்., காமம்சான்ற கடைக்கோட்சாலை, 6: 60-62
46.    ராஜம், வி.எஸ்.,சங்கப்பாடல்களில் “சாதி” “தீண்டாமை”.. இன்னபிற.. 22:10-24
47.   ராஜம், வி.எஸ்.,சங்கப்பாடல்களில் “சாதி” “தீண்டாமை”.. இன்னபிற.. முன்னுரை, 23:23-59
48.   ராஜன், கா., சங்க இலக்கியக்காலமும் வரலாற்றுத்தரவுகளும்14: 3- 8
49.   ராஜேஸ்வரி,த., கலித்தொகைப்பாடல்களைப் பாடியவர் ஐவர் - ஓர் ஆய்வு,14:30-34
50.   விஜயராணி,இரா., சங்க இலக்கியத்தில் பெண்சார் தொழில்கள், 17:105-111
51.   விஜயவேணுகோபால்,கோ., அறநெறி இலக்கியங்களில் திருக்குறள் காட்டும் தமிழகச்சமுதாயம், 12:70-76
52.   விஜயவேணுகோபால்,கோ., செவ்வியல் ஆய்வுகள் இன்று, 13: 38-39
======================================================
· மொழி இலக்கணப்பார்வைகள்
1.      அறவேந்தன், இரா., இலக்கணமரபில் மொழித்தூய்மையாக்கமும் சமஸ்கிருதமயமாக்கமும்,15: 26-30
2.      இந்திரா பார்த்தசாரதி, சமஸ்கிருதம் திராவிடமொழியா?, 14:58-59
3.      கார்த்திகேயன்,ஆ., செம்மொழித்தமிழாய்வும் பிராகிருதம், 13:54-56
4.      கோதண்டராமன், இரா., ஓர்யான் மன்ற அஞ்சாதானே, 11:38_40
5.      கோதண்டராமன், இரா.,தமிழியற்கல்வி ஒரு நுண்பார்வை, 13:11-15
6.      கோதண்டராமன், இரா., தொல் சந்தி,14:18-23
7.      கோதண்டராமன், இரா., ஆரிய திராவிடச் சிந்தனைகள் - ஒரு மேல் நோக்குப்பார்வை,15:17-25
8.      கோதண்டராமன், இரா.,தமிழ் நெடுங்கணக்கில் ஒரு குறுக்குச்சால் , 16: 79-81
9.      கோதண்டராமன், இரா., செய்திகள் வினைகள், 19:42-45
10.   கோதண்டராமன், இரா.,மொழிக்குடும்பங்களும், மொழிவகைகளும், 20: 3-8
11.   சண்முகம், செ.வை., செவ்வியல் இலக்கியக்கல்வி இலக்கணக்கல்வி,13:27-29
12.   சண்முகம், செ.வை., குறிப்பில் தோன்றல், ஆகுபெயர்(இருபெயரொட்டு) , 20:9-15
13.   சண்முகம், செ.வை., குறிப்பில் தோன்றல், ஆகுபெயர்(இருபெயரொட்டு) , 21:49-60
14.   சம்பத், இரா., தொல்காப்பியக்கவிதையியலும் எச்சமும், 12:113-120
15.   நாச்சிமுத்து, கி., (தமிழும் வடமொழியும் ) தமிழர் வடமொழியைச் சமயச்சார்பற்றதாகிக்  கற்றலின் தேவை
16.   பால்ராஜ்,ச., தமிழ் வடமொழி நிகண்டு தோற்றப்பின்புலம், 17:73-77
17.   ரவிக்குமார், தமிழின் மரணம்; சமஸ்கிருதத்தின் புத்துயிர்ப்பு, 14: 60-67
18.   ரவிக்குமார், தமிழிலிருந்து பலவற்றை சமஸ்கிருதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள், 15: 3-5
19.   ராஜம், வி.எஸ்., வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழுக்குப் பகையா? 10: 15-25
20.   வெங்கடாசலம், பெ., தமிழ் இலக்கணங்களும் வடசொற்கிளவியும், 14-78-81
21.   ஜெயசங்கர், தொல்காப்பியமும் கச்சாயன வியாகரணமும் காட்டும் பொது இந்திய இலக்கணமரபு,18:75-80
22.   ஜெயப்பிரகாஷ், இ., உயர்மொழி அதிகாரமனோபாவமும் இலக்கண உருவாக்கமும்14:68-72

========================================================
· உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்கள் (கதை தழுவிய நெடும்பாடல்கள்)

1.      இந்திராபார்த்தசாரதி,  ‘சிலப்பதிகார’ச் சிக்கல்கள், 23: 60-69, அதன்மீது ராஜம், வி. எஸ்., நாச்சிமுத்து, கி., பஞ்சாங்கம், க.,  இளங்கோவன். நாக., ஆகியோரின் கருத்துரை, 70-76
2.      இராமச்சந்திரன், எஸ்., சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா: வரலாற்றியல் ஆய்வு,18:54-61
3.      உதயசூரியன், பேராசிரியர். சா., சிலப்பதிகாரத்தில் பெண்மொழிக்கெதிரான பதிவுகள்11:27-31
4.      சுப்பிரமணியம்,வ.அய்.( தமிழாக்கம். வெ.கீதா), பஞ்சதந்திரமும் சிலப்பதிகாரமும், 18:30-36
5.      நாச்சிமுத்து, பேராசிரியர், கி. சிலப்பதிகாரம் சேரநாட்டுக்காப்பியம்:பண்பாட்டு வரலாற்றுக் கிளைமொழி வழக்கு,11:8-26
6.      பஞ்சாங்கம்,க., சிலப்பதிகாரமும் இருபதாம் நூற்றாண்டுச் சமூக இயக்கங்களும்,18:63-70
7.      பஞ்சாங்கம்,க., மணிமேகலையில் பௌத்தக்கோட்பாடு, 22:4-9
8.      பத்மாவதி, டாக்டர், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்கபூதம் அக்னிருத்ரனே, 18:37-43
9.      பத்மாவதி, டாக்டர்.ஆ., மணிமேகலைக்கோட்டம்,10;23-28
10.   மயிலை சீனி வேங்கடசாமி மணிமேகலை காலம்10;29-35
11.   மாதையன், பெ., மணிமேகலை உருவாக்கமும் சமுதாயச் சூழலும்,10;10-22
12.   ரவீந்திரன், செ., சிலப்பதிகாரத்தில் தொல்நாடகமரபுகள், 17:86-92
13.      ராஜம், மணிமேகலை: கணிகைக்குலத்தில் பிறந்த கந்தசாலி வித்து வி.எஸ்., 10;3-9
14.   வாணி அறிவாளன், இளங்கோவடிகள் காட்டும் நெய்தல் நில மகளிரின் இரங்கல் வாழ்வு,18:44-53 

No comments :