November 16, 2015

திரு.வைரமுத்தின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறது

வெகுமக்கள் அரசியல் தளத்தில் இயங்கும் ஒருநபரின் எதிர்பார்ப்பு ஊடகங்களில் தனது பெயர் உச்சரிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கிறது. ’நல்லவர்; திறமையானவர்’ என்று மட்டுமே உச்சரிக்கப்படவேண்டும் என்பதில்லை அவரது விருப்பம். விமரிசனமாகக்கூட உச்சரித்தால் போதும். அந்த விமரிசனத்திற்குப் பதில் சொல்லும்விதமாக இவரும் தன் பெயரைத் திரும்ப ஒருமுறையோ பலமுறையோ சொல்லிச்சொல்லித் தன்னை நிலை நாட்டிக் கொள்வார். இதே மனநிலை வெகுமக்கள் ரசனைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் எழுதுவதாக நம்பும் எழுத்தாளர்களிடம் எப்போதும் இருக்கிறது. சுஜாதா கடந்தகால உதாரணம். வைரமுத்து நிகழ்கால உதாரணம்.
தொலைக்காட்சிப் பட்டிமன்றமாக விவாதிக்கப்பட்ட அவரது சிறுகதைகளைப் பற்றிய விமரிசனத்திற்கு நேற்றைய (14/11/15) தமிழ் இந்து தனது நடுப்பக்கத்தில் கால்பக்கத்தைத் தந்திருக்கிறது. வண்ணப் படங்களோடு கூடிய அந்தப் பக்கத்தில் எழுதப்பட்ட விமரிசனக்குறிப்பின் கடைசி வரிகள் இவை:
‘குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவை கொண்டவையாக இருக்க வேண்டும்’ என்று சொன்னார் செட்ஜ்விக் என்கிற சிறுகதை ஆய்வாளர்.
தன்னுடைய 40 கதைகளிலும் செட்ஜ்விக் சொன்னதை சாதித்திருக்கிறார் வைரமுத்து.
இந்தவரிகள் உணர்த்தும் விமரிசனம் வைரமுத்துவின் கதைகள் - 40 கதைகளும் - ஒன்றேபோல் இருக்கின்றன; ஆகப்பழைய சிறுகதை இலக்கணத்தைப் பின்பற்றியுள்ளன என்பது. ஆனால் இந்த விமரிசனத்தை எழுதிய மானா பாஸ்கரனோ, இந்து ஆசிரியர் குழுவோ தந்த தலைப்பு “ புதிய பரிணாமம்” எழுதப்பெற்ற விமரிசனத்தின் போக்கிற்கு எதிராகத் தரப்பட்டுள்ள தலைப்பு போதும் வைரமுத்துவுக்கும் வைரமுத்துவைக் கொண்டாடு பவர்களுக்கும். தமிழ் இந்துவின் கதை நேற்றையது என்றால், ஜெயமோகனின் கதை இன்றைய சரக்கு. இன்று அவரது வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார் : 

---------------

அவை (வைரமுத்து சிறுகதைகள்) தமிழ்ச்சிறுகதைமரபின் இதுவரை அடையப்பட்ட அழகியல்நெறிகளை முன்னெடுக்கவில்லை. மீறிச்சென்று புதிய இடங்களைக் கண்டடையவும் இல்லை.அவை தமிழின் பிரபலப் பத்திரிகைகளில் வரும் வழக்கமா(ன)க கதைகளாகவே உள்ளன. ஒருசூழல்சித்தரிப்பை சுருக்கமாகச் சொல்லி, வழக்கமான குணங்கள் கொண்ட வரையறுக்கப்பட்ட கதைமாந்தர்களை நேரடியாக அறிமுகம்செய்து, அவற்றை ஒட்டி நிகழ்ச்சிகளை சமைத்து, அவற்றின் உச்சமாக ஒரு மையக் கருத்தை திருப்பமாக முடிச்சிட்டு வைக்கும் எழுத்துமுறை இது.
நூறாண்டுக்கால உலகச்சிறுகதை மரபு சிறுகதைக்குரியவை என சில பண்புகளை வரையறை செய்துள்ளது. ஒன்று, குறிப்பமைதி.இரண்டு கூற்றமைதி. மூன்று, வடிவ அமைதி,இப்பண்புகள் இக்கதைகளில் பெரும் பாலும் இல்லை. ஓசையிடும் மொழிநடையும் கூறவந்ததை எடுத்து எடுத்து முன்னால் வைக்கும் தன்மையும் கொண்டுள்ளன. சிறுகதைகளின் அமைப்பு மிகச் சம்பிரதாயமாக, முடிச்சுகள் வழக்கமானவையாக உள்ளன. தமிழின் நல்ல சிறுகதைகளை வாசித்த வாசகனுக்கு இவற்றில் அடைய ஏதுமில்லை

----------------

மொத்தமாக எதிர்மறை விமரிசனத்தை முன்வைக்கும் ஜெயமோகன், பின்வரும் இரண்டு தொடர்களை எழுதியுள்ளார். இவை போதும் வைரமுத்துவுக்கு.
“ வைரமுத்து தன்னை புதுமைப்பித்தனின் மரபில் நிறுத்திக்கொள்வதில் நாம் மகிழ்ச்சியே அடையவேண்டும். தமிழில் எழுதுபவர் எவரும் அப்படி உருவகித்துக்கொள்வது நல்லதுதான். அங்கிருந்துதான் தொடக்கமே”

இப்படிப் பேசப்படுதலே வெகுமக்கள் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் தேவை. அதனை இலக்கிய அங்கீகாரமாக மாற்றும் கலையும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதனை வைரமுத்துதான் செய்யவேண்டும் என்பதில்லை. வைரமுத்துவின் ரசிகர்களும் ஆய்வாளர்களும் அதைச் செய்வார்கள்

.

No comments :