November 12, 2015

விவேக்: ஓசைகளின் நேசன்


வாசி எத்தஸ்து கர்தவ்யஹ் , நாட்ய ஸ்யஸ்யா தனஸ்மிருதா
அங்கனே பத்தியஸ்துவானி , வாக்யாரத்னம் ஜயைந்தி ஹீ
- பரதரின் நாட்ய சாஸ்திரம்; இதன் பொருளாவது யாதெனில், எண்ணிய கருத்தை எடுத்துரைப்பது மொழி. அடிமனத்தில் உள்ள கருத்தை அவனுடைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மொழிக்கே அந்த ஆற்றல் இயல்பாக அமைந்திருப்பதால் அந்த நுட்பத்தை குறிப்பால் பொருள் உணர்த்தும் தொனி என்கிறார்கள்
கருத்து கந்தசாமி, நாயகனாக நடிகர் விஜய் நடித்த யூத் படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் ஏற்ற  கதா பாத்திரத்தின் பெயர். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆளுயர பென்சில் ஒன்றைத் தோளில் வைத்துக் கொண்டு தெனாவட்டாக நுழையும் விவேக், அந்தப் பென்சில் எதுக்குன்னு கேட்கும் ஒருவனிடம் இந்த நாட்டுக்கு,

நாலு கருத்துச் சொல்லனும்னா சாதாரணப் பென்சில் போதாது. இத வச்சுத் தான் நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்குஎன்று சொல்வார்.சொன்னவரிடம் இந்தப் பென்சிலை  எப்படிச் சீவறது என்று கேட்பார் எதிரில் இருப்பவர். அதற்கு விவேக் சொல்லும் பதில் தான் அந்தக் காட்சியின் சிரிப்புக்கான வசனமாக அமையும். அவர் சொல்லும் பதில் ;
 ‘’ஓடுற கிரைண்டருக்குள்ள பென்சில நுழைச்சுட வேண்டியதான்’’.
பென்சில் சீவ ப்ளேடு , கத்தி அல்லது அதற்கான ஷார்ப்னர் என்னும் கருவியைப் பயன்படுத்துவது சாதாரணமான நடைமுறை. ஆனால் அவர் தன்னுடைய பென்சிலை மாவாட்டும் கிரைண்டரில் சீவுவதாகச் சொல்லும் போது பார்வையாளர்களிடம் மெலிதான சிரிப்பலை எழத்தான் செய்கிறது.
இன்னொரு காட்சி ; இடம்பெற்ற படம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே.., நாயக நடிகர் ஷாம். காதலிக்கத் தொடங்கி இருக்கும் நாயகனின் மனநிலையை அறிவதற்காக மூன்று கேள்விகள் கேட்பார் விவேக்.
 ‘’ முதல் கேள்விஉன் முன்னால ஒரு கடல் வருது என்ன செய்வெ..’’
‘’ கடலெக் கடந்து அக்கறைக்குப் போகணும்னு நினைப்பேன்’’
ஆகா..கடல்தான் வாழ்க்கை; வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொள்ளணும்னு நினைக்கிறே.. நல்லது.
இனி கேள்வி இரண்டு; ‘’ ஒரு பெரிய சுவர் வருது என்ன செய்வே..?’’ 
‘’ சுவரெத் தட்டிப் பார்ப்பேன்’’ .
‘’ ஆகா.. சுவர்ங்கிறது தடை, மரணம். அதையும் தட்டிப் பார்ப்பேன் என்பது உனது துணிச்சல் .
அடுத்த கேள்வி . ஒரு காபி கிடைக்குது. நீ என்ன செய்வே..?’’
‘’காபியெப் புத்துணர்ச்சியோட குடிச்சுடுவேன். ‘’
‘’ஆகா அற்புதம். காபி தான் காதல்.’’
இந்த உரையாடலில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளும் , அதற்கான பதிலும் நகைச்சுவைப் பகுதிகளே அல்ல. பொதுப்புத்திசார்ந்த உளவியல் கருத்துக்களைச் சொல்லும் ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள். அப்பகுதி , வெகு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் அல்லது கருத்து.
பொதுப்புத்தி சார்ந்தே தங்களின் நடிப்பை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த நாலு நல்ல கருத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக நடிகர்கள்  கருதுகிறார்கள். ஒரு திரைப் படத்தின் நாயக நடிகனுக்கும் இந்த ஆசை இருக்கிறது. அதனால் அவன் தான் பேச பஞ்ச்டயலாக் எழுதும்படி இயக்குநரிடம் வேண்டுகோள் வைக்கிறான். நாயக நடிகனை  விடக் கூடுதலாகவே கருத்துச் சொல்லும் ஆசைகள் நகைச்சுவை நடிகர்களுக்கு இருப்பதாகத் தமிழ் திரைப்பட உலகமும் ரசிகர்களின் மனமும் கருதுகிறது என்பது வேடிக்கையான யதார்த்தம்.  ஆனால் கருத்துச் சொல்வது மட்டுமே நகைச்சுவை நடிகனின் பணி அல்ல என்பதும் இருதரப்பினருக்கும் புரிந்தே இருக்கிறது. நகைச் சுவை நடிகனிடமிருந்து பார்வையாளர்கள் கருத்தை எதிர் பார்ப்பதைவிட கூடுதலாக நகைச்சுவை நடிப்பையே எதிர்பார்க்கிறார்கள் என்பதும் அத்தகைய நடிகர்களை மட்டுமே நினைவில் வைத்திருக் கிறார்கள் என்பதும் கூட முரண்பாடான் யதார்த்தம் தான்.

சிரிப்புக்குப் பின்னால் பார்வையாளர்களின் சிந்தனைக்கு இடமிருக்கிறது என்றால் அந்த நகைச்சுவை தரமான நகைச்சுவை எனக் கருத வாய்ப்புண்டு. அத்தகைய நகைச்சுவைகள் நடிக்கின்ற நடிகனையும், அவன் ஏற்கும் பாத்திரத்தையும் கனவானாகக் காட்டுவதோடு சமூகத்தின் எந்தத் தரப்பு மனிதர்களையும் அசூயை கொள்ளச் செய்யாது. மேலே விவரித்த யூத் படக்காட்சியில் தொடர்ந்த நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வருவோம். ¢ காதல் என்பது உணர்வு . காபி என்பதும் உணர்வு தருவது . எனவே காதலும் காபியும் ஒன்றுதான் என நிறுத்திவிட்டு , வழியில் போகும் அவர்களது ஆசிரியரை [ மதன்பாப்]  மரியாதையுடன் வணக்கம் சொல்லி அழைத்து உரையாடுவார்கள் அந்த நண்பர்கள் குழாத்தினர்.அந்த உரையாடலில் ‘’காபி ‘’ என்ற சொல் புதுவிதப் புலப்பாட்டுக்குள் செல்வதைக் காணலாம். ஆசிரியரோ, காபியைக் காபி என்ற பொருளிலேயே பயன்படுத்துவார்; ஆனால் விவேக் உள்பட்ட நண்பர்கள் கூட்டமோ  காபிஎன்ற வார்த்தையைக் காதல் என்பதாகப் பாவனை பண்ண, மதன் பாப் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்திலும் [ காபி சாப்பிடப் போறேன்; சின்ன வயசிலேருந்து காபி சாப்பிடுறது எனக்கு அலுக்கல; ஒரு நாளைக்கு நாலு காபி சாப்பிடுவேன்; பில்டர் காபிதான் விருப்பமானது ஆனாலும் இன்ஷ்டெண்ட் காபியையும் விடுறதில்ல; சரி வாங்க காபி சாப்பிடப் போகலாம் என்பதாக] இடம்பெறும் காபி என்ற சொல் அவரது பெண் உறவுப் பழக்கமாகக் கொள்ளப்பட்டு சிரிப்பலைகள் எழும். காட்சியில் இடம்பெறும் நடிகர்களிடம் எழும் அந்த சிரிப்பலைகள் திரையரங்கிலும் பார்வையாளர்களிடமும் வெடித்துக் கிளம்பின. ரசிக்கத் தக்க இக்காட்சி புத்திபூர்வமான நகைச்சுவைக் காட்சிக்கோர் எடுத்துக்காட்டு.
இவ்விருவகை காட்சிகளில் இரண்டாம் வகைக்காட்சிகள் நடிகர் விவேக்கின் நடிப்பில் அரிதாகவே  இடம்பெற்றுள்ளன. அதற்கு மாறாக கருத்துச் சொல்லும் விதமாகவே தனது காட்சிகளை அமைத்துக் கொள்கிறார். சிரிக்கவும் சிந்தனையைத் தூண்டவும் வல்ல காட்சிகளைத் தருவது தனது நோக்கம் எனக் கருதும் விவேக் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில் குழம்பி நிற்கிறார் என்பதைப் பல படங்களில் காண முடிகிறது. அந்தக் குழப்பத்தில் அவர் கண்டடைந்த முடிவு கருத்துச் சொல்லுவதே தனது நகைச்சுவை பாணி என்ற முடிவுக்கு வந்து விட்டாரோ என்று எண்ணும்படியாகப் பல படங்களிலும் பொதுமக்களுக்குக் கருத்துச் சொல்லி ஈடேற்றும் போதகனாகவே வெளிப்பட்டு வருகிறார்.  
அதே யூத் படத்தில் சென்னை நகரத்துக்கு வேலை தேடி வந்ததாகச் சொல்லும் விஜயிடம் , நடக்கும் உரையாடல் இது;
‘’ ஆ..ஊ..ன்னா ஒரு மஞ்சப் பையை கையில் புடுச்சிக் கிட்டு பஸ் ஏறி சென்னையைப் பார்த்து வந்திர்ரீங்க.. ஆனா.. சென்னையைப் பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு..’’
‘’ Ê சரி உனக்கு என்ன தெரியும்..? ‘’
இந்தக் கேள்விக்கு அடுத்து உரையாடல் ஒருவழிப் பாதையாக மாறி விவேக் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். மற்றவர்கள் கேட்டுக் கொண்டி ருப்பார்கள். காமிரா அவரது சாய்ந்த கழுத்தை அண்மையில் காட்டும். கழுத்தை இடது புறமும் வலது புறமும் திருப்பி மாறி மாறி அவரே பேசுவார்.
‘’ சொல்றேன் கேட்டுக்கோ..
சென்னையில தண்ணி லாரிக்கு ப்ரேக் கிடையாது;
குப்பை லாரிக்கு மூடி கிடையாது..
பான்பராக் போட்டு துப்பறவனுக்கு விவஸ்தை கிடையாது..
பள்ளம் தோண்டிப் போடுறதுக்குக் காரணம் கிடையாது..
இதையெல்லாம் கேட்கிறதுக்கு இங்கெ  நாதியும் கிடையாது;
அதனால சென்னைக்கு வந்தமா..? சமாதிகள  பாத்தமா..
அப்படியே ஷகிலா படம் பாத்தமா..?
சாயந்தரம் பஸ்ஸெப் பிடிச்சு ஊரப் பாத்துப் போணமான்னு இருக்கணும்.
இந்த உரையாடலில் சென்னை மாநகரத்தைப் பற்றி ஒரு கருத்து இருக்கிறது; கருத்து என்பதை விட விமரிசனம் இருக்கிறது. ஒரு கருத்து விமரிசனமாக ஆகத் தேவையானது என்ன..?
சென்னையைப் பற்றிக் கருத்துக் கந்தசாமி சொல்லும் தகவல்கள் எல்லாமும் பொதுவான தகவல்கள் தான். ஆனால் நடிகை ஷகிலா மட்டும் தற்காலிகத் தகவல்¢. இளைஞர்களின் மனநிலையைப் பற்றிப் பேசும் ஒரு உரையாடலில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதைக் குறிக்கும் [A] சான்றிதழ் படங்களில் நடிக்கும்  ஷகிலாவின் பெயரைச் சேர்ப்பதன் மூலம் அந்தக் கருத்துக்கு ஒரு நிகழ்காலத் தன்மையை உருவாக்குகிறார் விவேக். ஷகிலா என்ற பெயரைச் சேர்த்ததைப் போல அவரது வசனங்களில் வந்து போன பிரபலங்கள் பலர்.
பொதுவான பேச்சில் தற்காலிகத் தகவல்களைச் சேர்ப்பதன்மூலம் தன்னுடைய பேச்சைக் கருத்து என்ற நிலையிலிருந்து சமகாலச் சமுக நிகழ்வுகளின் மீதான விமரிசனம் என்ற நிலைக்கு மாற்ற முயற்சி செய்கிறார் விவேக். ஆனால் ஒரு சினிமாவின் மொத்த அமைப்பிற்குள் அவசியமான ஒரு பகுதியாக இல்லாமல் தனியான பாதையில் செல்லும் திசையில் இருப்பதால் அவரது வசனங்களும் கருத்துக்களும் காற்றில் கறையும் ஓசைகளாக மட்டுமே இருக்கின்றன .  
தொடர்ந்து அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இடம் பிடிக்கும் பிரபலங்கள், நிகழ்வுகள், பெயர்கள் போன்றவற்றைத் தனது நகைச்சுவைத் தயாரிப்பு என்னும் கிரைண்டரில் போட்டு ஆட்டி அவரே சொன்னதைப் போல சிறு சிறு குறிப்புகளாக ஆக்கித் தனது நகைச்சுவைக் காட்சிகளை ஆக்கி வருபவர் அவர். அவரது வசனங்களில் செக்ஸ் டாக்டராக அறியப்பட்டுள்ள மாத்ருபூதம்பட்டிமன்ற நடுவர் பாப்பையா, தனது கடை விளம்பரத்தில் வரும் வசந்தகுமார், இந்தி , ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிக, நடிகையர்கள், கிரிக்கெட்,டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் புகழ்பெற்று விளங்கும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் , பாடகர்கள், ஆட்டக்காரர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் வந்து போயுள்ளனர். பிரபலங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் மையப்படுத்திப் பேசப்படும் பேச்சு சார்ந்த நகைச்சுவைகள் அனைவரையும் சென்று சேரத்தக்கன
என்று சொல்வதற்கில்லை. ஏற்கெனவே இவை பற்றிய அறிமுகம் பெற்றுள்ள நகர்சார் நடுத்தர வர்க்கத்துக்கே விவேக் தரும் விமரிசனம் சார்ந்த அந்தத் தகவல்கள் நகைச் சுவைகளாகத் தோன்றும். இல்லையென்றால் அர்த்தமற்ற  அல்லது அர்த்தம் தராத வாக்கியங்களாகவே காற்றில் கலந்துவிடும்.

ஒவ்வொரு நாளும் சன் டி.வி.யில் தினம் ஒரு குறள்என்று திருக்குறள் விளக்கம் அளிக்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்பது தெரியவில்லை என்றால் , ‘’ பிகர் என்று வாழ்வுதனில் வந்துவிட்டால் , மற்றாங்கே ப்ரண்ட்ஷிப்பே நாறிவிடும்’’ என்று திருக்குறளை மாற்றிச் சொல்லும் விதமும், சாலமன் பாப்பையாவின் பெயருக்கீடாக ‘’ ஆலமன் ஆப்பையா’’ மாற்றிச் சொல்லும் திறனும் நகைச்சுவை என்பதற்குப் பதிலாக உச்சஸ்தாயியில் கத்தும் காட்டுக் கத்தல் என்பதாக நின்றுவிடும் வாய்ப்புண்டு.
கிராமங்களில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தனி மனிதர்களின் தான் தோன்றித் தனமான கட்டைப்பஞ்சாயத்துக்களுக்கு எதிராகவும் இருக்கும் பாத்திரம் போல் தோன்றும் பல காட்சிகளைக் கொண்ட படம் காதல் சடுகுடு. அதில் நாட்டுப் புறப்பாடல்களின் வழி புகழ்பெற்ற பரவை முனியம்மாவின் பேரனாகவும் கிராமத்தலைவர் சாத்தப்பனின் மகனாகவும் வரும் விவேக், கற்பழிப்பு செய்த கிராமத்துச் சண்டியருக்கு வழங்கும் தண்டனை சிறுநீரகத்தில் துப்பாக்கி சூடு என்பதாக அமையும் காட்சி நினைத்துக் கொள்ளுங்கள். மூடத்தனங்களுக்கு எதிராக பாமரத்தனமான அறிவியல் பார்வையை முன்வைக்கும் அப்பாத்திரம் பார்வையாளர் மனதில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதை விட எதிர்மறை விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தவல்லது. பெயரளவுக்கான விசாரணையைக் கொண்டுள்ள கிராமப்பஞ்சாயத்துக்கு மாற்றாக விசாரணையில்லாமல் தண்டனை வழங்கும் முறையை அது பரிந்துரைக்கிறது.
நடப்பு வாழ்க்கையில் திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளனுக்குப் பல வகையான மனிதக் கூட்டங்களைப் பற்றி பொதுவான அபிப்பிராயங்கள் பல உண்டு. அந்த அபிப்பிராயங்களில் சில அவனது அனுபவங்களிலிருந்து உருவானவை ; சில பிறர் சொல்லி உருவானவை ; வேறு சில நிகழ்கால ஊடகங்களால் உருவாக்கப்படுபவை. இந்த அபிப்பிராயங்கள் எப்பொழுதும் அதிருப்தியின் வெளிப்பாடுகளாக இருப்பது நடைமுறை உண்மை. அதிலும் வேலையற்ற  இளைஞர்கள், மாற்றத்துக்குத் தயாரில்லாத கிராமத்தினர், மக்களுக்கு உதவாத அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், காவல்துறையினர, பெண்களின் நாகரிக மாற்றம், காமலீலைகள் புரியும் சாமியார்கள் போன்றவர்களின் மீது ஒவ்வொருவருக்கும் கோபத்துடன் கூடிய அதிருப்தியே உண்டு. அதனால் அந்த அதிருப்தியைக் கண்டு முன் வைக்கும் நபர்கள் மீது அவர்களுக்கு விருப்பம் ஏற்படுவது இயல்பு. அப்படி முன்வைக்கும் நபர் அன்றாடம் சந்திக்கும் நபராக இருந்தால் நண்பனாக ஆகிவிடுவான், அரசியல்வாதியாக இருந்தால் வழிகாட்டும் தலைவனாக ஆகிவிடுகிறான். கலைப் படைப்புகளில் இடம் பெறும் நபராக இருந்தால் மனம் விரும்பும் கலைஞனாக ஆகிவிடுகிறான். இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் தான் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. பார்வையாளத்திரளின் கோபத்துடன் கூடிய அதிருப்தியின் மீதே தனது பொதுப்புத்தி சார்ந்த விமரிசனங்களை விவேக் கருத்தாக முன்வைககிறார்.

நடைமுறை சார்ந்து யோசிக்கிறவராகத் தன்னைக்  காட்டிக் கொள்ளாமல்  தனது குரல் தனியொரு குரலாக இருக்கிறது என்பதாகவும், தனது வேலை இதைப் பற்றியெல்லாம் கருத்துச் சொல்வது மட்டுமே என்பதாகவும் அமைத்துக் கொள்கிறார் என்பதுதான் அவரது பலவீனம் என்பதை உணராமலேயே முன்வைக்கிறார் என்பதுதான் சொல்ல வேண்டிய ஒன்று.  அந்த எண்ணம் காட்சிகளில் தெறிக்கும் வசனமாக மட்டும் இல்லாமல் படத்தின் கட்டமைப்பிலேயே நுழைந்து விடும் போது அவரது பாணிக்கே ஆபத்தை உண்டாக்கும் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கே.பாலச்சந்தரின் புதுப் புது அர்த்தங்களில் மையக் கதாபாத்திரமான பாடகன் மணி பாரதியின் உதவியாளன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த போதும் இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்என்ற வசனத்தின் மூலம் நகைச்சுவையை வெளிப்படுத்தி அறிமுகமான அவர் சில படங்களில் நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் [சங்கரின் பாய்ஸ், அழகம்பெருமாளின் டும்டும்சூர்யாவோடு சேர்ந்து பேரழகன், தங்கர் பச்சானின் அழகி, வி.சேகரின் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஷாமுடன் இணைந்து நடித்த 12 B,  இயற்கை போன்ற படங்களில் ] என்றாலும்அதிகம் விவேக்¢ நடித்த படங்கள் தனி டிராக் காமெடிகள் தான் என்றே சொல்லலாம்.
நடிகர் விக்ரமுடன் நடித்த தூள் , சாமி, அஜித்துடன் நடித்த காதல் மன்னனமுகவரி, விஜயுடன் நடித்த ஷாஜகான், யூத், மாதவனுடன் நடித்த ரன் போன்ற படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்களுக்குத் தனியான பெயரும், காட்சிகளும் உண்டு என்றாலும் அவை அப்படங்களில் தான் இடம் பெற வேண்டிய காட்சி என்றோ , பாத்திரங்கள் என்றோ சொல்ல முடியாது. நாயகர்கள் இடம் பெறும் காட்சிகளைப் பெரிதும் தவிர்த்துவிட்டுத் தனியாக ஒரு போக்கில் போய்விட்டு ஏதாவது ஓரிடத்தில் மையக்கதாபாத்திரத்தை அப்பாத்திரம் சந்திப்பதாக அமைக்கப்பட்ட தன்மை தான் இருந்தன. பிரபலமான நாயக நடிகர்களின் படங்களில் மட்டும் அல்லாமல் புதிதாக அறிமுகமான நாயக நடிகனுடன் நடிக்கும் படத்திலும் கூட இதே பாணியையே அவர் பின்பற்றினார். மற்றவர்கள் மனதில் உள்ள நினைப்புகளை அறியும் ஆற்றல் கொண்ட மனிதனாக வந்து அதை மாற்ற மருத்துவ மனைக்கு வந்து உடலின் பகுதிகளை இழந்து நிற்கும் இளைஞனாக வரும் விசில், டிடக்டிவ் சங்கராக வரும் த்ரி ரோஸஸ் , ஆல்தோட்ட பூபதியாக வரும் யுனிவர்சிடி , பிரேக் வயர் அறுந்து விடுவதை மையப்படுத்திக் காதலியை அடைவதாகக் காட்சி அமைத்த ஜூட் , இலங்கைத் தமிழ்ப் பேச்சுடன் வந்து  நாயகனை ஒரு தடவை மட்டுமே சந்திக்கும் திருட்டுப்பயலே போன்ற படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த தன்மையை உணரலாம். 
சாதாரணமான அல்லது  இயல்பான ஒன்றிற்கு மாறாக  அசாதாரணமான அல்லது  பொருத்தமற்ற ஒன்றைப் பயன்படுத்தும் பொழுதுதான் நகைச்சுவை தோன்றுகிறது. சாதாரணமான நிகழ்வுகளுக்கும் சொற்களுக்கும் அசாதாரணத்தன்மையை உருவாக்குவதன் மூலம் தனது நகைச்சுவை நடிப்பு பாணியை உருவாக்குகிறார். தேர்ந்த நகைச்சுவை நடிகர்கள் அசாதாரணத் தன்மையை இயல்புக்கு மாறான நிலையை உருவாக்க நடிகனின் அடிப்படைக் கருவிகளான மனம் , உடல் மற்றும் குரல் என்ற மூன்றையும் பயன்படுத்துவர். ஆனால் நடிகர் விவேக் எந்த நிலையிலும் உடலையும் அதன் மொழியையும் பயன்படுத்துவதே இல்லை. விவேக்கின்  மனம் கூடப் பயன்படுகிறது; ஆனால் திரைப்படங்களின்¢ காட்சிகளில் அல்ல. காட்சிகளை உருவாக்கத் தேவையான கச்சாப் பொருளைத் திரட்ட மட்டுமே அவரது மூளையைப் பயன்படுத்துகிறார். ஆனால் முழுமையாக அவர் பயன்படுத்துவது குரல் ஒன்றைத்தான் . அது ஒன்று தான் நகைச்சுவை நடிகர் விவேக்கின் பலம் . வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் அவர் எழுப்பும் ஓசைகள் தான் அவரது பலம். அவரது இயல்பான பேச்சு எது என்று பார்வையாளர்களுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு குரலில் பேசும் அவரது திறன் முழுக்க அவர் எழுப்பும் ஓசைகளில் தான் இருக்கிறது.
பலகுரல் கலைஞர்கள் [Mimicry Artists] நகைச்சுவை நடிகர்களாகத் தங்களைக் கருதிக் கொள்வது புதிய விசயமல்ல. பலவித ஓசைகளைத் தனது குரல்வழியாக எழுப்புவதன் மூலம் பார்வையாளர்களுக்குத் தற்காலிகக் களிப்பை உண்டாக்குவது மிமிக்ரிக் கலைஞர்களின் பணிதான். அதை வைத்துக் கொண்டு பழைய படங்களின் வசனங்களை [பராசக்தி, மனோகரா, அடிமைப்பெண், திருவிளையாடல், பாட்ஷா, தேவர்மகன்] திரும்பவும் பேசுவது நகைச்சுவை நடிப்பாகுமா..? என்றால்  அது நடிப்பு அல்ல ; விதம் விதமான ஓசைகளை எழுப்பும் திறன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.1 comment :

ko.punniavan said...

என்.எஸ். கேவுக்குப் பிறகு விவேக் தன் நகைச்சுவையில் உளவியலையும், மெய்யியலையும் சேர்த்துக்கொண்டவர். தனக்கான வசனத்தைத் தானே எழுதிகொள்வார் என்றே புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு நடிகனின் சமுகப் பிரக்ஞையைப் பழுதில்லாமல் செய்தவர் என்ற முறையில் அவர் வரலாற்றில் நினைக்கப்படுவார்,என் எஸ்.கே போல. நன்றி சார் அரிய கட்டுரை.

கோ.புண்ணியவான்