October 08, 2015

அரங்கியல் பெருவெளியை நிரப்பிய ந. முத்துசாமி.அரங்கியலாளர் ஒருவரை அவரது நாடகமேடையேற்றம் சார்ந்தே கொண்டாட வேண்டும்; விமரிசிக்கவேண்டும். அதுவே அவருக்கு  உவப்பானது. விமரிசிக்கிறவனின் நிலைபாட்டுக்கும் சரியானது.  ந.முத்துசாமியின் அனைத்து நாடகங்களும் ஒரே தொகுதியாக கே.எஸ். கருணாபிரசாத் அவர்களால் தொகுக்கப்பட்டு என் முன்னே இருக்கிறது. அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று இங்கிலாந்து. அந்நாடகம் கால் நூற்றாண்டிற்குப் பிறகு திரும்பவும் புதிய நெறியாள்கையில் -இடதுசாரி நாடகக்காரராக அறியப்படும் பிரளயனால் மேடையேற்றம் கண்டுள்ளது. நாடகப் பிரதிகளின்  வழியாகவும் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் களத்தின் வழியாகவும் உலக வரைபடத்திற்குள் தமிழ் மொழியையையும் தமிழ் அரங்கியலையும் கொண்டுபோன ந. முத்துசாமியைப் பற்றிப் பேச ஏற்ற தருணம் இது.

80 வயதைத் தாண்டிவிட்ட  ந.முத்துசாமி, அதில் பாதியை நாடக இலக்கியத்தோடு தொடர்புபடுத்தி வாழ்ந்திருக்கிறார். முதல் நாடகமான காலம் காலமாக சி.சு. செல்லப்பாவின் எழுத்து இதழில் அச்சானது.. 2011 வரை  அவர் எழுதிய நாடகங்கள் 21. சிறுகதை எழுத்தாளராகத் தொடங்கியவர் முழுநேர நாடகக்காரராக ஆகும்பொருட்டு 1977 இல் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் நிறுவனமொன்றைத் தொடங்கினார். அந்நிறுவனம் அரங்கியல் செயல்பாடு களுக்காக நிதிவழங்கும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து அவ்வப்போது நிதியுதவி பெற்று அரங்கச் செயல்பாட்டைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தது. சென்னை மாநகரத்தின் மிகச்சிறிய அசைவுகளில் ஒன்றாக ஆரம்பித்த கூத்துப்பட்டறை தற்போது அதனிடமிருந்து பயிற்சிபெற்றுக் கிளம்பிய நடிகர்களின் மூலம் தமிழ்ச் சினிமாவின் பரப்பிற்குள்ளும் அறியப்படுகிறது. 

அரங்கியலாளர் ந.முத்துசாமியை நமது மைய, மாநில அரசுகள் விருதுகளும் பரிசுகளும் வழங்கிக் கவனிப்புக் குள்ளாக்கியிருக்கின்றன. நாடகத்துக்காக வழங்கும் சங்கீத் நாடக் அகாடெமி விருதும்,  பத்மஸ்ரீ விருதும் மைய அரசிடமிருந்து கிடைத்ததைப் போலவே மாநில அரசிடமிருந்து கலைமாமணி, கலைஞர் பொற்கிழி போன்றனவும் கிடைத்துள்ளன. இவ்வளவு கவனத்தையும் பெற்ற ஒரு நாடக ஆளுமை தமிழ்ச் சமூகத்தின் வெகுமக்கள் பரப்பிற்குள் நுழையவில்லையென்றாலும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற அறிவுசார் பரப்பிற்குள்ளாவது நுழைந்திருக்கவேண்டும். தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படியான தாக்கம் நிகழாமல் போவதின் காரணங்கள் எவையென்பதை யோசிக்கவேண்டிய நெருக்கடி இருக்கிறது. ந.முத்துசாமி என்றில்லை. அவரைப்போல ஒவ்வொரு துறையிலும் ஆகப்பெரும் ஆளுமைகளாக இயங்கிய பலரைத் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பரப்பு பெயரளவில் கூட அறியாமல் தான் இருக்கிறது.  இதுபற்றிப் பேச ந. முத்துசாமியின் நாடகங்கள் ஒரு காரணமாக ஆகியிருக்கின்றன. ஏனென்றால், அந்நாடகப் பிரதிகளுக்குள் தமிழ் வாழ்வின் கதைவெளிப்பரப்பும் நாடகநிலமும் பதிவாகியுள்ளன. அவற்றை விரிவான ஆய்வுக்குட் படுத்தவேண்டிய அவசியம் நிகழ்காலத்தேவை. அத்தேவை முழுமையடையும்போது தமிழின் நாடகவியலைத் தமிழ் அரங்கியலின் பரிமாணத்தோடு முன்னெடுக்க உதவுவதாக அமையக்கூடும். 
சி.சு. செல்லப்பா வழங்கிய எழுத்துப் பத்திரிகை நான்கு தொகுதிகளாக நான் பயின்ற மதுரைப் பல்கலைக்கழகத்தில்  இருந்தது. புதுக்கவிதை இயக்கமும் எழுத்துப் பத்திரிகையும் என்றொருவர் முனைவர் பட்டம் செய்துகொண்டிருந்தார்.  அவரிடம் எழுத்துப் பத்திரிகையை வாங்கிப் படித்தபோது முதலில் அறிமுகமானவை ந.முத்துசாமியின் சிறுகதைகள்.  அதன் பின்னரே நாடகங்களை வாசித்தேன். முதல் நாடகமான காலம் காலமாக நாடகத்தை எழுத்துவில் தான் வாசித்தேன். நாடக எழுத்தோடு எந்தவித உறவும் இல்லாதவை அவரது சிறுகதைகள். தி.ஜானகிராமன் வழியாக அறிமுகமாகியிருந்த காவிரிக்கரைக் கிராமமாக இல்லாமல் உள்ளொடுங்கிய கிராமத்தை முத்துசாமியின் எழுத்து அறிமுகம் செய்தது.  கவித்துவமான வர்ணனைகள் வழியாக அவரது சொந்த ஊரான புஞ்சையின் மண்ணையும் நீளும் பாதைகளையும், பிரிந்து கிடக்கும் நிலப்பரப்பையும் கண்முன் விரிப்பனவாக எழுதியிருப்பார். வாய்க்கால்கள், வரப்புகள், வண்டிப்பாதை என விரியும் பரப்பில் கூட்டமாக இல்லாமல் தனித்துத் திரியும் மனிதர்களைப் பற்றிய எழுத்தாகத் தோற்றம் தருபவை.
50 ஆண்டு கால எழுத்து வாழ்க்கையைக் கொண்ட ந.முத்துசாமியின் நாடக எழுத்தின் நுழைவு, நவீனத்துவ ஈர்ப்பு காரணமாகவே நிகழ்ந்துள்ளது. முதல் நாடகமான காலம் காலமாக  (1968) தொடங்கிப் பத்தாவது நாடகமான இங்கிலாந்து (1989) வரையிலான நாடகங்களில் நவீனத்துவத்தின் முக்கியக் கூறுகளான அங்கதமும் குறியீட்டுத்தன்மையும் அபத்த நிலைப்பாடும் தூக்கலாக இருக்கின்றன. இவ்விரண்டிற்குமிடையே அவர் எழுதிய அப்பாவும் பிள்ளையும் (1968), நாற்காலிக்காரர்(1971), சுவரொட்டிகள்(1977) உந்திச்சுழி (1978), கட்டியக் காரன்(1979), விறகுவெட்டிகள்(1980), வண்டிச்சோடை(1985) நற்றுணையப்பன் அல்லது கடவுள்(1988) ஆகியனவற்றை எழுதப்பெற்ற காலத்தோடு சேர்ந்து அறிந்துகொள்வது விவாதத்திற்குத் துணைசெய்யக்கூடிய ஒன்று. இவைகளை முழுமையாக நவீனத்துவ எழுத்துமுறை வெளிப்படும் நாடகங்கள் எனச் சொல்லலாம்.
சிறுகதைக்காரராக அறியப்பட்டிருந்தாலும், கதை எழுத்திலிருந்து விலகிய தன்மையை அவரது தொடக்ககால நாடகங்கள் கொண்டிருக்கின்றன. நாடகத்தின் வெளியையோ, காலத்தையோ, பாத்திரங்களையோ நேரடியாகக் காட்டி விடாத தன்மையுடன் எழுதப்பட்டவை. முதல் நாடகமான காலம் காலமாகவும் சரி, அதிகம் மேடையேற்றப்பட்ட நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் போன்ற நாடகங்களும் சரி பாத்திரங்களின் பெயர்களைக் கவனமாகத் தவிர்த்திருந்தன. இரண்டாவது நாடகமான அப்பாவும் பிள்ளையும் நாடகத்தில் பாவாடை, பெரியப்பா எனப் பாத்திரங்களுக்குப் பெயர் வைத்துவிட்டு ராமசாமி 1,2,3 எனப் பெயர் சூட்டியதின் மூலம் அவைகளை அடையாளமற்றவைகளாக ஆக்கியிருப்பார். இந்தத்தன்மையே - குறிப்பான வெளியில், குறிப்பான அடையாளங்கள் கொண்டதாக இல்லாமல் - எழுதப்பட்ட தன்மையே நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கணிக்கப்பட்டன.

தமிழில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நவீனத்துவம் நேரடித் தன்மையை விலக்கிவிட்டு மறைமுகத்தன்மையை வெளிப்பாட்டு வடிவமாகக் கொள்ளத் தொடங்கியிருந்த காலகட்டம்.  நடப்பியல் எழுத்து, இருநிலை எதிர்வுகளை முன்வைத்துச் சார்பைக்கோரிய நிலையில், அதனை மறுதலிப்பவர்களாக நவீனத்துவ எழுத்தாளர்கள் தங்களை முன்னிறுத்த விரும்பினார்கள். நம்பிக்கைவைக்க வேண்டியதை முதன்மையாக வலியுறுத்திய சமயநடவடிக்கைகளே நவீனத்துவத்தின் முதன்மையான கேள்விக்குரியாக-கேலிக்குரியதாக இருந்தன. 
கடவுளின் இருப்பும், மீட்பும் பற்றிய பேச்சை நம்பிக்கையின்மையோடு அணுகிய நவீனத்துவம், அதன் தொடர்ச்சியாக அரசு, குடும்பம், நிறுவனங்கள், செயல்பாடுகள் என ஒவ்வொன்றையும் நம்பிக்கை யின்மையோடு பார்க்கத் தொடங்கியது. அப்பார்வையைச் சரியாகச் சொல்வதற்கேற்ற முறையாக கேலித்தன்மை கூடிய எழுத்தையும் முடிவை நோக்கி நகர்த்தாத வடிவத்தையும் கைக்கொண்டன நவீனத்துவ எழுத்துகள்.  ஐரோப்பிய நவீனத்துவத்தின் பின்னணியில் இரண்டு உலகப் போர்களும், மீட்பைத் தருவதாகச்சொல்லிச் சர்வாதிகார ஆட்சிகளைத் தந்த பெருந்தலைவர்களும் இருந்தார்கள். இந்தியச் சூழல் அதிலிருந்து மொத்தமாக விலகியதில்லை என்றாலும், விடுதலை பெற்ற இந்தியா, தருமென நினைத்த வளமான வாழ்க்கை பற்றிய கனவுகளும் பொய்யாகவும் அபத்தமாகவும் தோற்றம் தந்தன.
தமிழ் நவீனத்துவத்தின் தொடக்கம் இன்னும் வித்தியாசமானது. அது இந்தியப் பரப்பில் கவனம் செலுத்தாமல் தமிழகப் பரப்பிற்குள் மட்டுமே நிலை கொண்டது. குறிப்பாக சமயநம்பிக்கை, வைதீக இந்துமதத்தின் ஞானமரபு, உடல் உழைப்பிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கை, கலை, கல்வியறிவு போன்றவற்றைப் பரவலாக்க வேண்டியதில்லை என நம்பும் குடும்பவெளியிலிருந்து - பிராமணக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களே தமிழின் நவீனத்துவத் தொடக்கநிலையாளர்கள். மணிக்கொடி, எழுத்து, இலக்கியவட்டம், கசடதபற எனப் பத்திரிகைகள் சார்ந்து  வெவ்வேறு குழுக்களாக அறியப்பட்ட அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களின் முன்னால் இந்துசமயம் உண்டாக்கிய படிநிலை வேறுபாடுகளும், சடங்குகள் சார்ந்த தினசரி வாழ்க்கையும், சமத்துவத்துவமின்மையைப்  பேணிய தேசப்பெருவெளியும் கேலிக்குரியனவாகவும் கேள்வி கேட்கப்பட வேண்டியனவாகவும் இருந்தன என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால், அவர்களைவிடவும் அதிதீவிரமாக இவற்றின் மீது விமரிசனங்களை வைத்த  பகுத்தறிவுவாதத்தையும் தமிழ்ச் சமூகத்திற்குள் அதன் பரப்பாளர் ஈ வே. ராமசாமியையையும் அவரது பின்னோடிகளான திராவிட இயக்கத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கடும் நெருக்கடியையும் சந்தித்தார்கள். ஈ. வே. ராமசாமி, பிராமணர் x பிராமணரல்லாதார் என்ற எளிதான எதிர்நிலையை உண்டாக்கிக் கடும் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இப்படியானதொரு எளிமையான எதிர்வின் மீது இயங்குவது நவீனத்துவத்திற்கு உவப்பானதல்ல. அது எல்லாவற்றையும் பரப்பி வைத்து விட்டு  முடிவை முன்வைக்காத நிலையை மேற்கொள்ளும் கலைக்கோட்பாட்டில் இயங்கக் கூடியது. ஐரோப்பிய நவீனத்துவம் அப்படித்தான் இயங்கியது. அதற்கு நடப்பியல் எழுத்தின்மீது விமரிசனங்கள் உண்டேயொழிய எதிர்நிலைப்பாடு கிடையாது.தமிழில் இது தலைகீழாக நடந்தது. நவீனத்துவ எழுத்தாளர்கள் பகுத்தறிவு இயக்கத்தை எதிர் இயக்கமாகவும் எதிர்வுகளை முன்வைத்த நடப்பியல் பாணியை எதிர்க் கலைக்கோட்பாடுகளாகவும் கணித்தன. தமிழின் நவீனத்துவத்திற்கு இன்றளவும் திராவிட இயக்க எழுத்துகளின் மீதும் இடதுசாரி எழுத்துகளின் மீதும் இருக்கும் எதிர்மனநிலையைப் புரிந்துகொள்ள இந்தப்பின்னணி அவசியமானது.பிராமணர்களை நேரடியாகக் குற்றவாளிக் கூண்டிற்குள் நிறுத்திய திராவிட இயக்கத்தோடு இணைந்து செயல்பட முடியாத போதும் அதனை எதிர்நிலையில் வைத்துப் பார்த்திருக்கவேண்டிய தேவையில்லை என்பதை நவீனத்துவ எழுத்தாளர்கள் உணரவில்லை. உணரவிடாமல் தடுத்தது இந்தியக்குடும்ப அமைப்பும் சாதி அமைப்பும் அவை தரும் பாதுகாப்பும் என்று சொல்வதில் பிழையில்லை.
நவீனத்துவம் முன்வைத்த ஐயப்பாடு, அபத்தம், இருப்பின் மீதான கேள்வி, அங்கதம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களைப் பகுத்தறிவு வாதத்தை உள்வாங்கியதாக அறியப்பட்ட திராவிட இயக்கத்தின் அரசியல் கருத்துகளோடு இணையவிடாமல் தடுத்த ஆளுமை பெரியார் ஈ. வே.ரா. என்பதையும், அவரது பரப்புரைகளில் வெளிப்பட்ட இரட்டை எதிர்வை மையப்படுத்திய தாக்குதல் மொழியும் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியதில்லை. இவைகளே தமிழ் நவீனத்துவத்தின் மைய விவாதத்தை இந்தியச் சமூகம், இந்திய அரசியல், இந்து மதச்சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பதை நோக்கி நகர்த்தாமல் திராவிட இயக்க அரசியல், மொழிப்பற்று, பொற்காலப்பெருமை பேசும் அபத்தம், பொதுவெளி வாழ்க்கைக்கும் தனிமனித வாழ்க்கைக்கு மிடையே இருக்கும் பாரதூரமான வேறுபாடு என்பனவற்றைக் கவனப்படுத்தும் ஒன்றாக மாற்றியது. இதனைத் தமிழின் தொடக்கநிலை நவீனத்துவக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஒவ்வொன்றிலும் விரிவாகக் காணமுடியும். நவீன நாடகப் பிரதியில் தொடங்கிவைத்தவர் ந.முத்துசாமி; தொடர்ந்தவர் இந்திரா பார்த்தசாரதி. நாடகப்பிரதிகளிலிருந்து எடுத்துக்காட்டுத் தந்து விவாதிக்க இங்கு வாய்ப்பில்லை.  இந்த ஈர்ப்பு - நவீனத்துவத்தின் பெயரால் திராவிட இயக்கத்தை இறுகிய கெட்டிதட்டிய அமைப்பாகக் காட்டி விமரிசனம் செய்த போக்கு 1980 -களின் பின்பாதியில் திசைமாற்றம் அடைந்தது. திசைமாற்றத்தின் காரணிகள் ஒன்றுக்கும் மேற்பட்டன. சொந்த வாழ்க்கை சார்ந்த காரணிகளை ஊகித்துச் சொல்லுதல் விமரிசகனின் வேலையல்ல; பிரதிகளின் வழியாக வெளிப்படும் காரணிகளால் உறுதிப்படுவன மட்டுமே விவாதத்திற்குரியன. ந,முத்துசாமியின் பிரதிகளின் உருவாக்கமும் கட்டமைப்பும் மொழிப்பயன்பாடும் இங்கிலாந்து நாடகத்திலிருந்து முற்றிலும் மாற்றம் அடைந்ததைப் படைப்பாக்கக் கூறுகளும் எந்திரவியல் கூறுகளும் இணைந்து நாடக இலக்கியத்தை எவ்வாறு உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்களால் புரிந்துகொள்ளலாம். 

நூல்கண்டு என முதலில் பெயரிடப்பட்டுப் பின்னர் இங்கிலாந்து எனப்பெயர் மாற்றப்பட்ட நாடகத்தின் எழுத்தாக்கத்தின் பின்னணியிலும் மேடையேற்றத்தின் பின்னணியிலும் அக்கால கட்டத்தில் இந்தியா முழுவதும் செயல்பட்ட - மையப்படுத்தப்பட்ட ஓர் அரங்கியல் போக்கு இருந்தது. காலனிய அடையாளங்கள் தொலைந்த - இந்திய அடையாளங்கள் வெளிப்படும் அரங்கை - இந்திய அரங்கை உருவாக்கும் திட்டம் அது. இந்திய அரசின் சங்கீதநாடக அகாடெமியின் நாடகத்தயாரிப்புத் திட்டம் அது. இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட வரையறைகளின்படி நாடகங்களைத் தயாரிக்கவும் மேடையேற்றவும் பரிவர்த்தனை செய்யவும் நிதி வழங்கப்பெற்றது. நாடகச் சொல்முறை, நிகழ்த்துமுறை, அழகியல் கூறுகள் என ஒவ்வொன்றிலும் இந்தியத்தனம் வெளிப்படும் நாடகங்கள் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டன. தமிழிலும் 20 -க்கும் மேற்பட்ட நாடகங்கள் உருவாக்கப்பெற்றன. அவ்வுருவாக்கம் இயல்பாகவே வட்டார அடையாளந்துறந்து தேசிய அடையாளம் நோக்கிய நகர்வு. இத்திட்டத்தோடு இணைந்து கூத்துப்பட்டறை பல நாடகங்களைத் தயாரித்தது. அத்தயாரிப்புகளுக்காகவே 1990- களுக்குப் பிந்திய நாடகங்களை எழுதியதாக ந.முத்துசாமியே தனது நாடகப் பெருந்தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் அறிமுகமான ராமாயணக் கதைகள், பாரதத்தின் கிளைக்கதைகள், தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தியன் கதை, பரமார்த்த குருகதை போன்றவற்றைச் சொல்பிரதிகளாக்கிய நாடகங்கள் அவை என்பதைத்  தலைப்பை வாசித்தாலே தெரிந்துவிடும்.   இந்நகர்வு நிகழ்ந்த காலகட்டத்தில் தமிழக அரசியலில் திராவிட இயக்கம் தனது கறாரான நிலைபாடுகளைக் கைவிட்டதோடு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டிருந்தது என்பதும் இணையாக வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
ந.முத்துசாமியென்னும் அரங்கப்பெருவெளிக்கலைஞனின் திசைமாற்றம் நடந்த நாடகம் இங்கிலாந்து என்பதை உணர அந்நாடகப்பிரதியை வாசித்துப்பார்த்தால் மட்டும் போதாது. அதன் மேடையேற்றத்தையும் காணவேண்டும். அந்த வாய்ப்பை இப்போது பிரளயனின் நெறியாள்கை உருவாக்கித் தந்திருக்கிறது. இங்கிலாந்து நாடகத்தை ந,முத்துசாமியே இயக்கியபோது நூல்கண்டு (1990) என்று பெயரிட்டிருந்தார். பின்னர் இங்கிலாந்து எனப் பெயர் மாற்றி அன்மோல் வெலானி என்பவர் இயக்கியபோது தீவுத்திடல் சிற்றரங்கத்தில் பார்த்தேன்.  நூல் நூற்றல், ராட்டையில் நூல் நூற்றல், இந்தியப் பருத்தி இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குப் போய், இங்கிலீஷ் பேசும் பெண்களால் நூற்கப்பெற்ற - எந்திரத்தில் நூற்கப்பட்ட முறுக்கேறிய நூல்களாகத் திரும்பவந்த கதையை முக்கியத்துவப்படுத்திய மேடையேற்றமாக அப்போது எனக்குள் பதிந்திருந்தது. காந்தியை முன்வைத்து ஒரு வரலாற்று நாடகம்போலக் கால்நூற்றாண்டுக்கு முன்பு அர்த்தம் தந்த நாடகம் அண்மையில் வேறு அர்த்தத்தளங்கள் நகர்த்திக்கொண்டு போனது.  
இந்தமாதம் முதல்வாரத்தில் (05-09-2015) பிரளயன் இயக்கத்தில் பார்த்தபோது காலனியக் காலத்திலிருந்து பின் காலனியத்திற்குள் நுழைந்த இந்தியா அனைத்துப் பரப்பிலும் பெருந்தவிப்பில் இருக்கிறது என்பதைக் காட்சிக் கீற்றுகளாகவும், மொழிக் கீற்றுகளாகவும் பதிக்க முயன்றது. 1947 இல் நமது விடுதலைப்போராட்ட வீரர்களும் தலைவர்களும் அனுப்பிவிட்டதாக நம்பிய பிரிட்டானியக் காலனியவாதிகளும் அவர்களது கூட்டாளிகளும் வேறுவடிவங்களில் நமது அனைத்துப் பரப்பிலும் இருப்பதைச் சொல்லும் பிரதியாக அர்த்தம் தருகிறது. இன்றைய உலகமயப் பொருளாதாரச் சூழல் பின்னணியிலும், சாதீய முரண்பாடுகளும் சமய முரண்பாடுகளும் கனன்று கொண்டிருக்கும் நிலையிலும் புதுப்புது அர்த்தங்களைக் கொண்ட எழுத்துப்பிரதியாக முத்துசாமி உருவாக்கித் தந்திருக்கும் நாடக நிலம் ஆகப்பெரு நிலம்கூட அல்ல.  அவரது கதைகளில் வரும் சொந்த ஊரான புஞ்சை தான் அந்நாடகத்தின் நிலம். ஆனால் புஞ்சைகள் தான் இந்தியாவில் எங்கும் உள்ளனவே. புஞ்சையில் இருப்பதுபோல சமூகப் படிநிலைகளைத் தக்கவைப்பதற்காக உயர்ந்து நிற்கும் கோயிலும், கோயில் பண்பாடும், அதற்கான கருத்தியலைத் தரும் பிராமணர்களும், அவற்றை உள்வாங்கி ஆண்டான் - அடிமைநிலையைப் பேணும் அமைப்பும் எங்கும் இருக்கவே செய்கின்றன தானே. தீண்டாமையை ஒழிக்காமல், அதற்குத் தத்துவ விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் சுதந்திர இந்தியாவின் மீது கோபம் கொண்டு காறியுமிழும்  மொழியில் எழுதப்பெற்ற பிரதியாக ந. முத்துசாமியின் பிரதி இருக்கிறது.
இப்பிரதியைப் பிரித்துப் பிரித்துத் தனித்தனிக் கதை நிகழ்வுகளாகக் காட்சிப் படுத்துவதை மட்டுமே பிரளயன் செய்திருந்தார். தங்களுக்குள் கண்பார்த்துப் பேசிக்கொள்ளவும் செய்தியைக் கடத்தவும் வாய்ப்பளிக்காத நாடக உரையாடல் மொழியைக் கொண்ட நாடகப்பிரதிகளை இப்படித்தான் இயக்கமுடியும். ஆனால் பரப்பி வைத்துக் காட்டும் (display) வகையில் நவீனத்துவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததோடு சமகாலத்தோடு இணைக்கும் ஒரு தொடர்புச் சங்கிலையைப் பிரளயன் கண்டறிந்திருக்கலாம். அதைத் தவறவிட்டிருக்கிறார் என்றே  நான் உணர்ந்தேன். அத்தொடர்புக் கண்ணி கதை கூற்றுமுறையாகவோ, இசைக் கோர்வையாகவோ, ஊடும் பாவுமாகப் பயணம் செய்யக்கூடிய ஒற்றைப்பாத்திரமாகவோ கூட இருந்திருக்கலாம்.  கடும் பயிற்சியும் தீவிரமான ஈடுபாடும் கொண்ட அரங்கநடிகர்களின் உழைப்பு முழுமையாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட வேண்டுமென்றால் அத்தகைய இடையீடுகள் தேவை. தொடர்ந்து பார்வையாளர்களோடு உரையாடுவதில் கவனம் செலுத்தும் பிரளயன் இதை அறியாதவரல்ல. அவரது விருப்பப்படி நீட்டிக்கவிடாமல் கட்டிப்போடும் மொழி ந.முத்துசாமியினுடையது என்பதையும் இங்கே மறந்துவிட முடியவில்லை.
 நன்றி: தீராநதி.

2 comments :

Chellappa Yagyaswamy said...


தங்களின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துப் பயன்பெற்றுவரும் எளிய வாசகன் நான்.

ந முத்துசாமி அவர்களின் நாடகத்துறை பங்களிப்பை நான் அறிவேன். அறிவுஜீவிகள் பலரும் அறிவர். (அறிவுஜீவிகள் என்னும் சொல், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கல்வித்துறையினருள் மிகச் சிலரையும், பொதுவாசகர்களுக்குள் மிகப்பலரையும் குறிக்கப் பயன்படும் சொல் என்பதைத் தாங்கள் அறியாமலிருக்க வழியில்லையே!)

'பரவலாகத் தெரிந்திராத -பாதிப்பினை ஏற்படுத்தியிராத -ஒன்று அவரது பங்கு' என்பது போன்ற தாங்கள் கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் குறிப்பிட்டுள்ள கருத்தை நடுநிலையான கருத்தாக என்னால் ஏற்க முடியவில்லை. இது, அவரது பங்களிப்பை அல்லாது, மிகவும் சிறியதொரு பரப்புக்குள் குறுகிவிட்ட தமிழ் நாடகத்துறையின் வளமின்மையைக் குறிப்பதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வளமின்மைக்குக் காரணிகள் பல. தாங்கள் அறிந்தவையே.

மற்றபடி, தங்கள் விமரிசனம் ஆழமான, அற்புதமான, தங்கள் எழுத்தை விரும்பிப்படிப்போரை ஏமாற்றிடாத ஒன்று என்பதில் ஐயமில்லை.
பிரளயனின் படைப்பில் இங்கிலாந்து நாடகத்தை எப்போது இனிக் காண முடியுமோ என்று ஆவலாக இருக்கிறேன். - இராய செல்லப்பா, சென்னை

அ.ராமசாமி said...

வெகுமக்கள் பரப்பில் தாக்கமும் கவனமும் பெறவில்லையென்ற கருத்தில் பிழையெதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை