October 20, 2015

நிரல் நிரைப்படுத்தலின் அழகு : க.சீ.சிவக்குமாரின் ரசாயனக் கலப்பைவார இதழொன்றில் இடம்பெறும் சிறுகதையை வாசிக்கத் தூண்டுவதற்கு உடனடிக் காரணங்கள் சில உண்டு. தொடர்ச்சியான வாசகராக இருந்தால் எழுதியவரின் பெயரே வாசிக்கத் தூண்டிவிடும். சிலநேரங்களில் எழுதியவர் கதைக்குத் தரும் தலைப்பு வாசிக்கத் தூண்டும். கதைகளுக்கு ஓவியங்கள் அச்சிடும் இதழாக இருந்தால் அவையும் கதைகளை வாசிக்கத்தூண்டவே செய்யும். நான் மாணவனாக இருந்த காலத்தில் (1970-80கள்) ஓவியர் ஜெ...(யராஜ்) வரையும் தொப்புள் தெரியும் பெண்களின் ஓவியங்களுக்காகவே நானும் என் வயதொத்த இளைஞர்களும் கதைகள் வாசிப்போம்; பேசுவோம்.


ஆனந்தவிகடனில்* வந்துள்ள ரசாயனக்கலப்பை கதையை வாசிக்கத் தூண்டிய முதல் காரணம் க.சீ.சிவக்குமார் என்ற பெயர். அந்தப் பெயரோடு கதைக்குத் தந்திருந்த ரசாயனக் கலப்பை என்ற இருசொல் தலைப்பை இருவேறு கருவிகளாக்கி எழுதியிருந்த முறையும் உடனே வாசிக்கத்தூண்டின. கலப்பை என்ற சொல்லை மேழியோடு கூடிய கலப்பையின் வடிவத்திலும் ‘ரசாயன’ என்ற சொல்லை ஏர்க்கால் வடிவத்திலும் எழுதியிருந்தது கவனத்தை ஈர்த்ததோடு பொருத்தமான தலைப்பில் எழுதப்பட்ட கதை என்ற நினைப்பைத்தந்தது. ஆனால் கதையை வாசிக்கவாசிக்க கதையின் தலைப்பு பொருந்தாமல் இருக்கிறதே என்ற நினைப்பு கூடிக்கொண்டே இருந்தது. அதற்கான காரணங்களைப் பின்னர் சொல்கிறேன்.  

வாசிக்கத்தொடங்கிய வாசகரை வாசிப்பைத்தடுத்து வெளியே தள்ளிவிடாமல் செய்யும் கதைகூறும் உத்தி,பலபேருக்குக் கைவருவதில்லை. கைவந்துவிட்டால் அவர் கவனிக்கத்தக்க எழுத்தாளராகிவிடுவார். அப்படித்தான் எனக்கு க.சீ.சிவக்குமார் கவனிக்க வேண்டிய எழுத்தாளரானார். இக்கதையில் பின்பற்றியிருக்கும் சொல்முறைக் கூடுதல் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. இச்சொல்முறையைப் பழைய இலக்கணிகள் பயன்படுத்திய சொற்றொடரால் குறிக்கலாம் என்று தோன்றுகிறது. நிரல்நி என்பது அச்சொற்றொடர். நிரல்படுத்துதல் என்பது வரிசையாக அடுக்குதல் என்பது பொருள். தொல்காப்பியம் இச்சொற்றொடரை வண்ணங்களில் ஒன்றாகக்க் கூறியுள்ளது. வண்ணமென்பது ஓசையொழுங்கு அல்லது அழகூட்டுதல். அதுவே பின்னர் அணியிலக்கணத்தில் நிரல்நியணியாக வளர்ச்சிபெற்றது.

அடிவரையறைகள் கொண்ட மரபுக்கவிதையில் முந்திய அடிகளில் வரும் ஓசையொழுங்கு அடுத்த வரியில் நிரல்பட வரும்படி எழுதுவது நிரல்நிறை எனப்படும். பலருக்கும் தெரிந்த திருக்குறள் இது:   
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. ‘அன்பும் அறனும்
என்னும் ஓசையொழுங்கோடு நிரல்படப்பொருந்தும்  ‘பண்பும் பயனும்’ என்னும் சொற்கள் ஓசையாலும் பொருளாலும் நிரல்படுகின்றன. மரபுக்கவிதையில் மட்டுமே இத்தகைய வண்ணங்களும் நிரல்படுத்தலும் அழகை உண்டாக்கும் என்பதில்லை. நவீனக் கவிதைகளிலும் நிரல்படுத்தல் முக்கிய அழகியல் கூறாக இருப்பதை எடுத்துக்காட்ட முடியும். இங்கே பேசுவது கவிதைபற்றி அல்ல; சிறுகதைபற்றி. க.சி.சிவக் குமாரின் ரசாயனக் கலப்பை என்னும் சிறுகதைபற்றி. இக்கதையில் ஒருவித நிரல்படுத்துதல் இருக்கிறது. அதுவே இக்கதையின் அழகியலாகவும், ஆழமான அரசியலாகவும் இருக்கிறது. 

கவிதை அடிகளால் - வரிகளால் உணர்ச்சியை எழுதுவது. உணர்ச்சியின் ஊடாக இருப்பும் முரணும் எழுப்பப்பட்டு விவாதத்தளத்தை உருவாக்க முனைவது கவியின் வேலை. விவாதத்தளத்தைக் கருத்தியல் நகர்வாகவோ? ஐயத்தின் தொடர்ச்சியாகவோ முன்னிறுத்துவிட்டு கவி ஒதுங்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் கதைக்காரர்கள் நிகழ்ச்சிகளை எழுதுகிறார்கள். நிகழ்ச்சியில் இடம்பெறும் பாத்திரங்களை எழுதுகிறார்கள்; நிகழ்ச்சிக்குள் அவர்கள் இருந்த காலத்தைக் காட்டுகிறார்கள்.  இம்மூன்றுக்குமே இருப்பது நிகழ்காலம் மட்டுமல்ல; கடந்த காலமும் எதிர்காலமும்.

பொதுவாகக் கதைகள் என்பன நிகழ்காலத்தில் தொடங்குகின்றன. அல்லது இப்படிச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட காலத்து நிகழ்ச்சியை எழுதிக் காட்டுவதில் தொடங்குகின்றன. சேணம் கட்டிய குதிரைக்குத் தெரியும் முன்னோக்கிய பாதையில்  அடுத்தடுத்த நிகழ்வுகளை எழுதிக்காட்டி ஒருகட்டத்தில் நின்றுவிடுகிறது சிறுகதை. இவை முன்னோக்கிய கதை. இதையே முறைமாற்றித் தொடங்கிய இடத்திலிருந்து பின்னோக்கிப் போய்க் கதையை முடித்துவிடலாம். ஒரு சிறுகதைக்கு எத்தனை நிகழ்வுகள் வேண்டுமோ அவைகளை மட்டும் எழுதுவது எழுதுபவரின் திறன். தேவையில்லாதனவற்றை எழுதுவது திறனில்லாத எழுத்தாளரின் நிலை.  

முன்னோக்கு, பின்னோக்கு என்பனவெல்லாம் கதைகூறல் உத்திகள் தான். அதேபோன்றதொரு உத்தியாக நிரல்நிறையும் அமையக்கூடும்.அதைச் சிவக்குமாரின் இந்தக்கதை சிறப்பாகச் செய்திருக்கிறது. அம்மா, மாமன், அப்புச்சிஅய்யன், அய்யன், அத்தை, மாமன் மகன் என உறவுமுறைப் பெயர்களால் ஆன கதாபாத்திரங்கள் வந்து போகும் இந்தக்கதை-  ஒரு மாமனின் கதையை மருமகன் சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.  அந்தக்கதை  இப்படித் தொடங்குகிறது:

“தட்டின் முன்னால் அமர்ந்து உணவில் கைவைப்பதற்குள் ஒரு கட்டளை வந்துவிட்டால், சில சமயங்களில் அது முக்கியத்துவம் கொண்டதாக இருக்கலாம்”.

முக்கியத்துவம் கொண்ட அந்த நிகழ்வு மாமனின் தற்கொலை முயற்சி. குளிப்பறையில் தூக்குமாட்டிக் கொண்டு செத்துவிட முடிவு செய்த மாமனின் தற்கொலை முயற்சியைத் தடுத்து, 

 “இனி இந்தமாதிரிக் கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணிவைக்காத. என்ன இல்லாமக் கிடக்குதுனு இப்படிப் பண்ணிக்கிட்டு அலையுறே?”

என்று அவனின் அம்மா, மாமனின் உடன் பிறந்தவள் சொல்லும் நிகழ்வுதான் கதையின் முதல் நிகழ்வு. அப்படிச்சொன்ன அம்மாவின் சொல்லை மாமா கேட்டுத் தற்கொலை முயற்சிகளை நிறுத்திக் கொண்டதில்லை என்பதுதான் கதை. தற்கொலைக்கு முயல்கிறார் அல்லது காணாமல் போய்விட நினைத்து எங்காவது போய்விடுகிறார். அவரைத் தடுத்து நிறுத்துவதும், தேடிக்கண்டுபிடிப்பதுமே அந்த மருமகனின் வேலையாக இருக்கிறது. ஒருமுறைக் கிணற்றுக்குள்ளிருந்து எடுத்துவருகிறான்; இன்னொருமுறை ஆற்றிடையிருக்கும் கோயிலில் போய்க் கண்டு அழைத்து வருகிறான். அப்படிச் செய்வதில் அவனுக்குப் பெரிதான அலுப்போ ஆத்திரமோ வரவில்லை. அவருக்கும் திரும்பி வரவே கூடாது என்ற வைராக்கியமுமில்லை. காணாமல் போனவர் மருமகனைப் பார்த்தவுடன் எதுவுமே நடக்காதவர்போல அவனோடு பேச்சைத்தொடங்கிவிடுகிறார். அதனால்தான்,

“கயவரும் கவிஞரும் இல்லாத ஒருவருக்கு மொழி கைகூடுகிறது என்றால், அது கிறுக்கு அன்றி வேறு என்ன?

 என்று கதைசொல்லியாகிய மருமகன் சொல்கிறான். மாமா தன்னைக் கவிஞனாக்கிவிட்டதில் அவனுக்கிருக்கும்  மகிழ்ச்சியின் வெளிப்பாடு அந்த வாக்கியம்.  

கதைசொல்லி மாமனின் தற்கொலை முயற்சிகளைச் சொல்லும்போது தற்கொலைக்குத் தூண்டும் வாழ்க்கை அவருக்கு எப்படி வந்தது என்பதை முன்னே போய்த் துண்டுதுண்டாய்ச் சொல்கிறார். ஐந்து ஏக்கர் நிலத்தில் சால்ப் பொட்டியில் நீரிறைத்து விவசாயம் செய்த மாமாவின் மனநிலையைச் சொல்லும் வரிகள் இவை:

 “கமலை அந்த நேரங்களில் மாயமான செவ்வகக் கண்ணாடிப் பெட்டி ஒன்றினுள் அவர் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதாகக் காணும்.”

தன் தோட்டத்தில் தானும் தன் மனைவியுமாகப் பார்த்தவிவசாயம் ஆட்டம் கண்டது. காரணம் மின்சார மோட்டார். மின்சார மோட்டாரின் வரவே கிணற்றடி நீரைக் கீழிறக்கியது, கமலையோட்டங்கள் இல்லாமல் ஆகின; மாடுகளும் தொழுவங்களும் தூர்ந்துபோயின. வறுமை வந்துசேர்ந்தது; மனைவி செத்துப்போனாள். படிக்கப்போன மகன் பத்தாம் வகுப்பில் கோட்டைவிட்டான். கம்பெனியில் கூலிக்காரனான்.  நிலம் பத்திரமாகிப் பத்தாயிரம் மிஞ்சிய நிலையில் வாழ்தலின் அர்த்தம் தொலைகிறது.

நிகழ்காலத்துத் துயர நிகழ்வுகளையும், வீழ்ச்சிகளையும் வீழ்ச்சிக்கு முந்திய கடந்த காலத்து நிறைவு வாழ்க்கையையும் ஒவ்வொன்றாக மாறிமாறி நிரல்படுத்தி அடுக்கப்படும் கதையில் காலக்குறிப்பாக ஒரு பெயர் இடம்பெறுகிறது. அந்தப் பெயர் ஒருதடவை அல்ல; இரண்டு தடவை இடம்பெறுகிறது. அந்தப் பெயர்தான் கதையைக் கால் நூற்றாண்டு அரசியல் தவறின் விமரிசனமாக ஆக்குகிறது.

நான் ஏழாம் வகுப்புப் படிக்கு வரையிலும் கமலை ஏற்றம் ஓடிக்கொண்டிருந்த தோட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னமே அநேக தோட்டங் களுக்கு மின் இணைப்பு வந்துவிட்டிருந்து.

என்பது முதல் குறிப்பு. இரண்டாவதாக அதே பெயரோடு இணைத்துவரும் இன்னொரு குறிப்பு:

மாமாவின் தோட்டத்துக்கு மின்சாரம் வந்தபோது அப்புச்சி அய்யனுக்கும் எம்ஜிஆருக்கும் ஒருசேர இறுதிக்காலம் வந்துவிட்டிருந்தது. அந்தவருடம் கடும் தண்ணீர்ப்பஞ்சம் கவ்விய மேடை.

எம்ஜிஆரின் ஆட்சிக்காலம் என்பது 1977 முதல் 1987. இதற்கு முன்பே இந்தியாவில் பசுமைப்புரட்சியென்ற பெயரில் நவீன விவசாயம் அறிமுகம் செய்யப்பெற்றது. நவீன விவசாயத்தால் மூன்று முக்கியமான விசயங்கள் தமிழ்நாட்டுக் கிராமங்களை வந்தடைந்தன. நவீன விதை ரகங்கள் அல்லது ஒட்டு விதைகள். அவற்றை வளர்த்தெடுக்கும் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும். கூடுதல் விளைச்சலுக்காகக் கூடுதல் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்ய நிலத்தடி நீரையுறிஞ்சி எறியும் மின்சார மோட்டார்கள்.  இம்மூன்றையும் வாங்குவதற்காக விவசாயிகள் பணப்பொருளாதாரத்திற்குள் தள்ளப்பட்டார்கள். அதுவரை விவசாயம் தங்கள் தேவையைக் கிராமத்தின் எல்லைக்குள் தீர்த்துக்கொள்வதாக இருந்தது. முந்தின வருட விளைச்சலில் விதைப்பாட்டைக் குலுக்கைகளில் பத்திரப் படுத்திவைத்திருப்பார்கள். ஆடு,மாடு, கோழி வளர்த்தும், செடிகொடிகளை மிதித்தும் உரமாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். கமலை இறைத்து நீர் பாய்ச்சினார்கள்.

பசுமைப்புரட்சியோடு வந்த வேளாண் மானியங்கள் விவசாயிகளைக் கூட்டுறவு வேளாண்மை வங்கிகளின் முன்னே வரிசையில் நிற்க வைத்த நகர்வு எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்திற்கு முன்பே - கலைஞரய்யாவே தொடங்கி வைத்த நகர்வு.  அரசு தந்த மானியத்தோடு கூடிய கடன்களும், மின்சார மோட்டார்களை வாங்குவதற்குப் பெருந்தனக் காரர்களிடம் வாங்கிய கூட்டுவட்டிக் கடன்களுமே கதையில் வரும் அந்த மாமனைத் தொடர்ச்சியாகத் தற்கொலைக்குத் தூண்டிக்கொண்டே இருக்கிறது.

மாமனின் தற்கொலையைச் சொல்லும் மருமகனான கதைசொல்லி, கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளாக இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்களே? அதற்குக் காரணம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? என்று ஒரு ஆகப்பெரும் கேள்வியை எழுப்புகிறான். அதற்கான விடையைச் சொல்லும்விதமாகவே எம்ஜிஆரின் மரணத்தை மையப்புள்ளியாக்கி மாமாவின் முன் வாழ்க்கையையும் பின் வாழ்க்கையையும் இன்பியலாகவும் துன்பியலாகவும் நிரல்படுத்துகிறான்.

பசுமைப்புரட்சி என்னும் அரசியல் தவறு - வேளாண்மைக் கொள்கையைத் தீர்மானித்த அரசியல் தவறு - இன்றும் சரிசெய்யப்படவில்லை. ஒட்டுவிதைகள், ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும், நிலத்தடி நீரையுறிஞ்சிய மின்சார மோட்டாரும் வரக் காரணமானவர்கள் யாரென்று தெரிந்த பின்னும் ஒதுக்கிவைக்கப்படவில்லை; தண்டிக்கப் படவில்லை; அதற்குப் பதிலாக இன்றும் வேளாண் விஞ்ஞானிகளாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். பத்ம விருதுகளால் கௌரவம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை.  அந்த விமரிசனத்திற்குள் நேரடியாகச் சிவக்குமாரின் கதை நுழையவில்லை.

தொடர்ந்து நீர்நிலைகளை நோக்கி நகரும் மாமனின் தற்கொலை முயற்சிகள் கதை சொல்லிக்கு அர்த்தம் நிறைந்ததாகவும் அபத்தம் கொண்டதாகவும் படுகிறது.  மாமனின் தற்கொலை ஒரு அபத்த நிகழ்வாகிவிடும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறான் கதைசொல்லி. அவனது பயத்தை  அபத்தத்தை வெளிப்படுத்தும் கவிதை வரிகளாக எழுதுகிறான்.

”எனக்குப் பிரச்னை என்னவென்றால் மாமாவின் இப்போதைய நிலையில் ...

கிணற்றினால் சாகமாட்டார்.

கயிறு..’

கயிற்றின் எல்லா ஓட்டமும் வாட்டமும் முடிச்சு வகைகளும் மாமாவுக்கும் தெரியும்

நகைமுரணாக யோசிப்பது எனில் ஒன்று.. அவரை கயிற்றாலேயே கட்டிப்போடவேண்டும் அல்லது கயிறு எனும் ஒரு பொருளே இல்லாததாக அவருக்கு மறைத்து வைத்துவிடவேண்டும்.

பிறகு, யோசிக்க கொஞ்சம் ஆசுவாசம் இருக்கிறது. செவ்வகக் கண்ணாடிக் கூண்டில் இருந்து வெளிவரும் மாமன் பூவரச மரத்தடிக்குத்தான் வரவேண்டுமே அல்லாது வேறு எங்கும் போய்விடக்கூடாது.

முதலில் பேரில் கிணறு உள்ள ஊர்களைத் தேடலாம். அடுத்தது ஊரில் கிணறு உள்ள ஊர்களைத் தேடவேண்டியதுதான்!.

தாவைப்பார்த்து, கதவு, வேட்டி போன்ற தலைப்புகளில் கதையெழுதிக் கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை அரசியலாக முன்வைத்த கி.ராஜநாயணனைப் போலவே விவசாயவாழ்வை அரசியலாகவும் அழகியலாகவும் முன்வைப்பவர் க.சீ.சிவக்குமார்

இப்போது கதையின் தலைப்புப் பொருத்தமில்லையென்ற குற்றச்சாட்டுக்கு வரலாம்: இந்தக் கதைக்கு க.சீ. சிவக்குமார் வைத்த தலைப்பு ரசாயனக்கலப்பை. இந்திய விவசாயத்தைச் சாகடித்ததில் பசுமைப்புரட்சிக்காரர்கள் முன்வைத்த வீரிய விதைகளும், வீரிய விதைகளைப் பயிராக்கிச் செடியாக்கிக் காய், கனியென விளைய வைக்கப்பயன்பட்டவை ரசாயன உரங்களும்,  தெளிக்கப்பட்ட ரசாயனப் பூச்சிக் கொல்லிகளும் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். என்னையும் சிவக்குமாரையும் போன்ற கிராமத்து விவசாயக்குடும்பத்து ஆட்களுக்கும் தெரியும். அதன் விளைவாகவே நாங்கள் கிராமத்திலிருந்து பிய்த்தெறியப்பட்டவர்கள்.

விவசாயத்திற்காக வாங்கிய கடன்கள் அரசாங்கக் கூட்டுறவுச் சங்கங்களின் வழியாகக் கொஞ்சம் மானியத்தோடு வந்துசேரும். ஆனால் ஆண்டுக்கு ஒரு கெஜம் கிணறுவெட்ட வாங்கும் கடன் வங்கிக் கடனல்ல. வீட்டிலிருக்கும் நகையில் தொடங்கும் முதல் கடன் கொஞ்சம் கொஞ்சமாக  நிலத்தை ஈடாக எழுதிக் கொடுத்து வட்டிக்கடனாக மாறும். அந்த ஊரில் அல்லது பக்கத்து ஊரில் இருக்கும் பண்ணையிடம் வாங்கிய வட்டிக்கடன் குட்டிபோட்டுக் குட்டிப்போட்டு நிலமும் மூழ்கிப்போகும். கடன் கொடுத்தவரே தள்ளுபடி விலையில் நிலத்தை வாங்குபவராக ஆகிப்போவார். க.சீ. சிவக்குமாரின் இந்தக்கதை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பக்கமே நுழையாமல் கிணற்றடியும் இறவைத்தண்ணியும் தொலைந்து மின்சார மோட்டார் வந்து நிலத்தடி நீரை உறிஞ்சியதற்குள் மட்டுமே பரவிநிற்கிறது. ஆனால் தலைப்பு மட்டும் ரசாயனக் கலப்பை என்றிருக்கிறது. கதைவிவரிப்பிற்காக மாறான தலைப்பு இது.  அவ்வளவு பொருத்தமாக இல்லை. கதையின் தலைப்பைச் சரிசெய்ய உரக்கடைக்குப் போய்த்திரும்பிய ஒருகாட்சி எழுதப்பட்டிருக்கலாம். அதுவும் மின்சார மோட்டாரின் வருகையோடு சேர்த்துச் சொல்லப்படவேண்டிய ஒன்றே.  நவீன விவசாயத்தின் அனைத்துக் கூறுகளையும் குறியீடாகச் சொல்லும் சொற்றொடராக ரசாயனக் கலப்பையை ஏற்றுக் கொண்டு கதையை வாசிக்கலாம் என்றாலும் பொருத்தமான தலைப்பும் அவசியம் தானே?

சொந்த நிலத்தைத் தானேயுழுது தானேவிதைத்து, பெண்டு பிள்ளைகளோடு சேர்ந்து களையெடுத்துத் தண்ணிகட்டி தன்கை விவசாயம் செய்த தமிழ்நாட்டுச் சிறுவிவசாயிகளின் 1980- களின் கதை இது. இந்தக் கதையை வாசிக்கும் நிகழ்கால நகரவாசிகளுக்கு, அல்லது 1990 -களுக்குப் பிறகு பிறந்த இளையோர்களுக்கு விவசாயத்தில் பயன்பட்ட வேளாண்கருவிகளின் பெயர்களே தெரியாது என்பதால் இந்தக் கதையே அந்நியமாகத் தோன்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.  பாடம் நடத்த உதவிய கதையை எழுதிய சிவக்குமாருக்குப் பாராட்டுகள்.
======================================

ரசாயனக்கலப்பை, க.சீ. சிவக்குமார், ஆனந்தவிகடன், 23-09-15/92-99
No comments :