October 02, 2015

நாகேஷ்: உடல் மொழியின் பரிமாணங்கள்துன்பத்தை விளைவிப்பதும், அழிவைத் தோற்றுவிக்காததுமான ஒரு பொருளைக் கருத்தாகக் கொண்டு இயற்கையாக உள்ள மனித நிலைக்கு மாறாக, தாழ்ந்த நிலையில் உள்ளவனைச் சித்திரிக்கும் நாடகம் இன்பியல்  (Comedy) நாடகம் .   அரிஸ்டாடிலின் கவிதையியல்

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நபர்களில் பலர் ஒரு முறை நாயகக் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்துவிட்டால், அதன் பிறகு தங்களை வேறுவிதமான பாத்திரங்களில் நடிப்பதற்கான நடிகராகக் கருதுவதில்லை.தொடர்ந்து நாயகப் பாத்திரத்தில் நடிக்கவே விரும்புகின்றனர். அத்தகைய விருப்பத்தின் பின்னணியில் செயல்படும் சமூக, உளவியல் காரணங்கள் பல. விதிவிலக்குகள் உண்டு என்றாலும் தமிழ் சினிமாவில் இது ஒரு பொதுப் போக்கு. இந்தப் பொதுப்போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட நடிகர் ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் நாகேஷ் தான். அவரது தொடக்ககாலப் படங்களான நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், அனுபவி ராஜா அனுபவி, பாமா விஜயம், போன்றவற்றில் அவர் தான் நாயகப் பாத்திரம். நாயகப் பாத்திரம் என்றால் இன்று வரும் கதாநாயகர்கள் போல புஜபல பராக்கிரமமும், இளம்பெண்களைச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியும், சமூக அநீதிக்கெதிராகக் கோபம் கொண்டு திரை முழுக்க ரத்தஞ் சிதற அடிதடியில் இறங்கும் நாயகன் என்று நினைத்தால் நாகேஷ் ஏற்ற பாத்திரங்கள் நாயகப் பாத்திரங்கள் அல்லதான். அந்தச் சொல்லை வாபஸ் வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக மையக்கதாபாத்திரம் என்ற சொல்லை வைத்துக் கொள்ளலாம்.
நடிப்புக்கலையைப் பற்றிப் பேசும்போது நாயகக் கதாபாத்திரத்தை ஏற்பதற்கும், அதற்கு எதிராக நிறுத்தப்படும் வில்லத்தனக் கதாபாத்திரத்திற்கும் திடமான உடல்வாகு எதிர்பார்க்கப்படும். நளினம் கொப்பளிப்பதாக சமூகத்தின் பொதுப்புத்தி நம்பும் நிறம், மென்மை, முகவெட்டு ஆகியன நாயக நடிகனின் அடையாளங்கள் என்றால், இவற்றிற்கெல்லாம் எதிர்நிலையில் நிறுத்தப்படும் நிறம், முரட்டுத்தனம், கோணலாக முக அமைப்பு போன்றன வில்லன் நடிகரின் அடையாளங்களாக நம்பப்படுகின்றன. இத்தகைய பார்வைகள் பெரும்பாலும் இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளின் பார்வை என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கத்திய சினிமாவில் அல்லது நாடகங்களில் இத்தகைய கறாரான பார்வைகள் கிடையாது. அங்கு பாத்திரங்கள் தான் எதிரெதிர் குணங்களுடன் நிறுத்தப்படும். நடிகர்களின் உடல் அல்ல. ஆனால் மேற்கத்திய நடிப்புக்கலையும் கீழ்த்திசை அரங்கியலும் நகைச்சுவை நடிகர்களின் உடல்வாகில் ஒன்றுபடுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரணமான உடல்வாகிலிருந்து வேறுபட்டுக் குண்டாகவோ ஒல்லியாகவோ இருக்கும் மனித உடல் நகைப்பைத் தோற்றுவிக்கக் கூடியது என்ற நம்பிக்கை உலகப் பொதுக் குணமாகவே காணப்படுகிறது. லாரல் & ஹார்டி என்ற இணை மேற்கத்திய சினிமாவில் உண்டாக்கிய சிரிப்பலைகளின் பின்னணியில் இருப்பது இந்த உடல்பற்றிய நம்பிக்கைதான். நாயகன், வில்லன் என்ற இருவகைக் கதாபாத்திரங்களின் அடையாளமும் உடல் வலிமையோடு தொடர்புடையன. ஆனால் நகைச்சுவைப் பாத்திரங்களோ இவ்விரண்டிற்கும் இடையில் நிற்கக் கூடியன. நாயகனை வந்து சேரும் அனைத்து அம்சங்களும் தனக்கும் வரும் என்று ஆசையுடனும், வில்லனைப் போலத் தவறான வழிகளிலேனும் அடைந்துவிட எத்தணிக்கும் மோகமும் கொண்ட மனநிலையுடன் அலையும் பிம்பமாகத் தன் உடலை ஆக்கித் தருவதில் ஒரு நல்ல நகைச்சுவை நடிகனின் சாகசங்கள் வெற்றி பெறுகின்றன. நடிகர் நாகேஷ் ஏற்ற பல பாத்திரங்கள் இத்தகைய சாகசங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. சிறந்த ஓர் உதாரணம் இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லையில் அவர் ஏற்ற பாத்திரம்.  

ஒரு பணக்காரத் தொழிலதிபரின் மகனாக வரும் நாகேஷ், திரைப்பட இயக்குநரின் அபாரத்திறமை நிரம்பிய வராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டே இருப்பார். திரைப்படம் எடுப்பதற்கான இயக்கம், நடிப்பு, நடனம், ஒளிப்பதிவு, கதை என்பதோடு கதாநாயகிகூடத் தயார்; ஆனால் முதலீடு செய்யப் பணம் தான் இல்லை என்பதாக அமைந்து நீளும் அவரது காட்சிக் கோர்வைகளில் ஒரு நேர்கோட்டுப் பயணத்தைக் கவனித்துப் பார்க்கலாம். தொடக்கத்திலிருந்து தன்னைப் பற்றியும் தனது இலட்சியங்கள் பற்றியும் ஓயாது பேசுபவராகவும், ஓடியாடி தனது உடல் அதற்காகப் பயிற்சிகளிலும் வேலையிலும் ஈடுபட்டிருப்பதாகவும், சதா அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் காட்டப்படும் போது இருப்பது அம்மூன்றின் மீதான அபார பலம். அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளில் மூளையின் பலமும், உடலின் பலமும் கடைசியாகக் குரலின் பலமும் என வீழ்ச்சி அடைந்து, கடைசியில் அடுத்தவர்களின் தயவில் அவரது முயற்சி ஆரம்பிக்கப் படலாம் என்பதாகப் படம் முடியும். இப்படி உச்சத்திலிருந்து வீழ்ச்சி அடைவதில் தான் நகைச்சுவைக் கதாபாத்திரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
பொதுவாக நகைச்சுவை நடிக உடலின் பொதுக் குணங்கள் என்று சில உண்டு. நடிப்பின் அடிப்படைச் சாதனங்களான உடல், குரல், மனம் என்ற மூன்றிற்கும் அபார சக்தி உள்ளதாகக் கருதிச் செயல்படுவது அதன் ஒரு வெளிப்பாடு. கடைசிவரை அந்த நம்பிக்கையைச் சிதைக்காமல் செயல்படும் நடிப்பு, நகைச்சுவை நடிப்பு என்ற எல்லையைத் தொடாமல் வெறுமனே தட்டையாக முடிந்து போகும். ஆனால் சிறந்த நகைச்சுவை நடிப்பு, அபாரசக்தி உள்ளதாக நம்பிய உடல், குரல், மனம் என்ற மூன்றின் பலத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகவோ, மொத்தமாகவோ இழந்து நிற்கும் நிலையில் கிடைக்கும் இரங்கத் தக்க வெளிப்பாட்டில்தான் இருக்கிறது. நாகேஷ் இந்த உண்மையை நன்கு அறிந்த நடிகர் என்பதற்கு அவர் ஏற்றபாத்திரங்கள் பலவற்றிலிருந்து உதாரணங்களைக் காட்ட முடியும்.
எழுபதுகளில் சென்னையில் கொடி கட்டிப் பறந்த சபா நாடக வடிவத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட கே.பாலச்சந்தர், அந்த நாடகங்களின் வழியாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த போது அவற்றின் மையக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் நாகேஷ். தமிழ் திரை உலகம் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் என்ற இரு பெரும் நடிகர்களின் படங்களின் வழியாக நடத்திக் கொண்டிருந்த வியாபாரப் போட்டிக்கிடையில் அவர்களிடமிருந்து தப்பித்து வேறுவிதமாகப் படம் எடுக்க விரும்பிய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இருவர். ஒருவர் ஸ்ரீதர், இன்னொருவர் கே.பாலச்சந்தர். இந்த இருவரின் படங்களிலும் முக்கிய பாத்திரங்களில் ஏற்று நடித்த நடிகர் ஒருவர் உண்டென்றால் நடிகர் நாகேஷைத் தான் சொல்ல வேண்டும்.
திரைப்படத்துறைக்குள் நுழைந்த பின் சினிமாவாக்கப் பட்ட கே.பாலச்சந்தரின் மேடைநாடகப் பிரதிகள் மையக் கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்கள் கொள்ளும் இரக்கத்தை முழுமையாகப் பெறவேண்டும் என்ற நோக்கத்திலேயே கட்டமைக்கப்பட்ட பிரதிகள். வெளிப்படையாகப் பார்த்தால் கீழ் நடுத்தரவர்க்கப் பின்னணியில், நகரங்களில் வாழ நேர்ந்தவர்களின் அடையாளங்கள் அம்மையக்கதாபாத்திரங்களுக்கு உண்டு. சர்வராக, கடைச் சிப்பந்தியாக, எடுபிடியாக, வீடுவீடாக அலைந்து சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுவராகக் காட்டப்படும் அத்தகைய பாத்திரங்களின் நேர்மை, ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை, தொடர்ந்து சந்திக்கும் தோல்வி, பொதுவெளியில் கிடைக்கும் கேலிப் பேச்சுக்கள் எனச் சித்திரிக்கப்பட்ட அந்தப் பாத்திரங்களினூடாகச் சென்று  ஆழமாகத் தேடினால் நகரவாழ்க்கை தரும் நெருக்கடிக்குள் வாழ முடியாமல் தவிக்கும்  பிராமணர்களின் சாயல் அவற்றிற்கு உண்டு எனச் சொல்வது சிரமமல்ல. நடுத்தர வர்க்கப் பிராமணர்களின் குறியீட்டுப் பாத்திரங்களாகப் படைக்கப் பட்ட கே.பாலச்சந்தரின் பாத்திரங்களை ஏற்று நடிக்கத் தோதான உடலாக நாகேஷின் உடல் இருந்தது என்பது அதன் பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
கே.பாலச்சந்தரின் நாடகங்கள் மேடையேற்றம் கண்ட போதும், திரைப்படங்கள் ஆன போதும் அரசியல் வெளியில் ஆதிக்கம் செலுத்தியது பெரியாரின் பிராமண எதிர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்த  திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை இங்கே நினைவில் கொண்டால் நாகேஷின் உடல், அன்றைய ஆட்சி அதிகாரம் நம்பிய ஒரு கருத்துக்கு எதிர்க் கருத்தைச் சுமந்த உடலாக நின்றது என்பது புரியக்கூடும். அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்ற நிலையில் தனிமனித வாழ்வில் நேர்மையையும், எத்தகைய வேலையையும் செய்யத் தயாராகவும் இந்த உடல் தான் இங்கு அதிகாரம் செய்யும் உடலாகவும், ஆதிக்க வாதிகளின் குறியீடாகவும் சொல்லப் படுகிறது. அப்படிச் சொல்லப்படுவது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியைப் பார்வையாளர்களிடம் எழுப்ப விரும்பிய நோக்கம் அப்பிரதிகளை எழுதிய பாலச்சந்தருக்கு உண்டு எனச்சொல்லுவது குற்றச்சாட்டும் கூற்று அல்ல.
தான் சார்ந்த குழுவின் தாழ்வின் போது அவர்களின் சார்பாகப் பேச எல்லாப் படைப்பாளிகளுக்கும் உரிமை உண்டு. தனது நாடகத்தின்/சினிமாவின் வழி கீழ்நடுத்தர வர்க்கப் பிராமணர்களின் பொது இரக்கத்தைப் பெற விரும்பிய பாலச்சந்தர், நாகேஷின் இயல்பான உடலின் வழி உண்டாக்க முயன்றார்; ஓரளவு வெற்றியும் பெற்றார் என்பதுதான் வரலாறு. அந்த வகையில் நாகேஷ் என்ற நடிகரின் உடல் பலம் வாய்ந்த அரசியல் உடலாக வெளிப்பட்டது என்பதை அவர் அறிந்தோ அறியோமலோ கூட நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்பதில் அவருக்கு தொடர்ந்து ஈடுபாடு இருந்து வந்துள்ளது என்பதும் வெளிப்படையான உண்மை. கமல்ஹாசன் நாயகனாக நடித்த நம்மவர் படத்தில் நாகேஷ் ஏற்ற பாத்திரம் கூட அத்தகைய பாத்திரம் தான். நியாயத்தின் பக்கம் நின்றதால் தனது மகளை வன்முறையாளர்களின் ஆயுதத்திற்கு இரையாக்கிவிட்டுத் தவிக்கும் ஓர் அப்பாவி அப்பாவாக அவர் நடித்த அந்தப் பாத்திரம் அவருக்குப் பத்திரிகைகளின் பாராட்டையும் பரிசினையும் பெற்றுத்தந்தது.
நாகேஷ் ஏற்று நடித்த பாத்திரங்கள் தொடக்கம் முதல் இன்று வரை நகைச்சுவைப் பாத்திரங்களாகவே கவனிக்கப்படுகின்றன; ரசிக்கப்படுகின்றன. அப்படி ரசிக்கப்படுவதற்குக் காரணம் முழுக்க முழுக்க அவரது உடல் தான். வலிய மற்றும் திடகாத்திரமான உடல் என்ற அடையாளத்திற்கெதிராக நிறுத்தத் தக்க உடல்  அவருடையது. ஒரு சராசரி மனிதனின் எலும்புகளைச் சுற்றி இருக்க வேண்டிய சதைப் பிடிப்பிற்குக் குறைவாகவே சதைப்பிடிப்புக் கொண்ட அவரது உடலை வைத்துக் கொண்டு நாயகனின் சாகசங்களைச் செய்ய நினைக்கும் வெளிப்பாடு தான் பார்வையாளர்களின் மனதில் நகைச்சுவை உணர்வை உண்டாக்கி ரசிக்க வைத்தன எனலாம். இயலாத உடல்கள் செய்ய நினைக்கும் சாகசங்கள் மீது பொது உளவியல் எழுப்பும் உடனடி வெளிப்பாடு சிரிப்பொலிகளும் கைகொட்டிச் சிரித்தலும் தான், என்றாலும் அதன் தொடர்ச்சியாகப் பார்வையாளர் களிடம் உண்டாவது இரக்க உணர்வுதான். இந்திய மொழிகளில் நாடகம் நடனம் போன்றவற்றிற்கான அடிப்படைகளைச் சொன்ன பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஏற்கத்தக்கவர்கள் யார் என்பதைப் பற்றிப் பேசும் போது,
"விதூஷகன் ( மன்னனுடன் கூட நட்புக் கொண்டு தன் வேடம், பேச்சு, செய்கை முதலியவற்றால்    சிரிப்பு மூட்டும்) பாத்திரத்தை ஏற்கத் தக்கவர்கள்  குறளன், கூனன், அந்தணர் குலத்தில் தோன்றியவன், விகாரமான தோற்றம் கொண்டவன், வழுக்கைத் தலை உள்ளவன், பூனைக்கண்ணன் போன்றவர்கள்
என்று கூறும்.[35 ம் அத்தியாயம்]. இந்த விதி இன்று முழுமையாகப் பொருந்தக்கூடியது அல்ல என்றாலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகனின் உடல்வாகு பற்றிய சிந்தனை அன்றிலிருந்து இன்றுவரை ஒருவிதத்தொடர்ச்சியில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள அது உதவத்தான் செய்கிறது.

நாகேஷ் நடித்த காதலிக்க நேரமில்லை, பட்டணத்தில் பூதம், அதே கண்கள், போன்ற படங்களில் நாகேஷின் பாத்திரம் நாயகர்களாக நடித்த ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். என்றாலும்  அப்படங்களில் அவரது இருப்பு நகைச் சுவைப் பாத்திரம் ஒன்றின் இருப்பாகவே பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது; இன்றும் பார்க்கப் படுகிறது. அப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்பதுதான்  அப்படங்களின் இயக்குநர்களின் நோக்கமும் நடித்த நாகேஷின் நோக்கமும் கூட. அந்த நோக்கத்தை நிறைவேற்ற இத்தகைய படங்களின் இயக்குநர்களோ, நடிக்கும் நாகேஷோ தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது கூட இல்லை. காமிராவின் முன்னால் நாகேஷ் என்ற நடிக உடல் நின்று பாவங்களைக் காட்டிப் பேசினாலே போதும். நகைச்சுவை உணர்வு பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்ளும். காரணம் தன்னையே இரக்கத்திற்குள்ளாக்கிக் கொள்ளும் அந்த உடல்தான்.
நடிகர் நாகேஷின் அந்த உடல் திரை உலகில் வலிமைவாய்ந்த நடிப்புச் சக்திகளாகத் தங்களை நிறுத்திக் கொண்ட சிவாஜிகணேசனுடனும் எம்.ஜி.ராமச்சந்திரனுடனும் இணைந்து ஏற்ற பல கதாபாத்திரங்கள் குணச் சித்திரப் பாத்திரங்கள் என்று வகைப்படுத்தத் தக்கன என்றாலும் நகைச்சுவையை உண்டாக்குவதற்காகவே அவை படத்தில் உருவாக்கப்பட்டன என்பது உண்மை. அவ்வாறு உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் ஆற்றிய பங்கை விட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் ஆற்றிய பங்கே அதிகம் எனலாம். பெரும்பாலும் நடிப்பில் வேறுபட்ட உணர்வுகளை எழுப்பாத நடிப்பு எம்.ஜி.ஆருடையது. அதனைத் தட்டையான நடிப்பு என்பதை விட சமநிலை என்னும் ஒற்றைப் பரிமாணத்தை வெளிப்படுத்திய நடிப்பு என்பதாக அதனை வகைப்படுத்தலாம். எனவே அவரோடு சேர்ந்து நடிக்கும்போது நடிகர் நாகேஷின் பன்முக உணர்வுகள் வெளிப்படும் நடிப்புப் பலமுடைய வெளிப்பாடாக இருந்தது ஆச்சரியமூட்டும் ஒன்றல்ல. எம்.ஜி.ராமச்சந்திரன் தன்னுடன் நகைச்சுவை நடிக இணையை இணைத்துக் கொண்டு வெற்றி பெற்ற பாணியும் கூடப் பின்னர் வந்த நாயக நடிகர்களால் பின்பற்றப்படுகிறதைக் காணலாம். ரஜினிகாந்த் தொடங்கி விஜய் வரை நீளும் நாயகர் நடிகர்களோடு ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல் என நகைச்சுவை நடிகர்கள் தங்களுக்கு இணையாக ஒரு நடிகையை ஜோடி சேர்த்துக் கொண்டு அந்தப் பாணியைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என்றாலும் நடிகர் நாகேஷ் எம்.ஜி. ராமச்சந்திரனின் படங்களிலும், சிவாஜிகணேசனின் படங்களிலும் ஏற்ற பாத்திரங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. சில படங்களை நினைவுக்குக் கொண்டு வந்து அவை பற்றிப் பேசலாம்.
நாயகனின் பாதியாகும் வித்தை
உடல்மொழியின் அதிகப்படியான சாத்தியங்களிலிருந்தே நகைச்சுவை நடிப்பு உருவாகிறது. இதற்கு  நாகேஷ் நடித்த ஏராளமான படங்களை உதாரணமாகச் சொல்லலாம். தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களாக வெகுமக்கள் மனதில் தங்கியுள்ளவர்களின் படங்களைப் பட்டியலாகத் தரலாம். ஆனால் ஒவ்வொரு நடிகருக்கும் பெயர் சொல்லும் நடிப்பு என்று சிறு பட்டியல் ஒன்றைத் தயாரித்தால் அந்தப் படங்கள் இந்தப் பொது போக்கிலிருந்து விலகி நிற்கும். அவ்விலகலுக்குக் காரணம் அந்த நடிகனின் கூடுதல் பங்களிப்பாக உடல்மொழியுடன் குரலும் சேர்ந்ததைச் சொல்லலாம். நடிகர் நாகேஷைப் பொறுத்து,  உடல்மொழியுடன் குரலையும் சேர்த்து நடிப்பின் உச்சபட்ச வெளிப்பாட்டைக் காட்டிய ஒரு பாத்திரம் உண்டு என்றால் தருமி பாத்திரத்தைத் தான் சொல்ல வேண்டும்.
திருவிளையாடல் என்ற படத்தில் நடிகர் நாகேஷ் ஏற்ற அந்தப் பாத்திரம்  திரைநடிப்பில் அவருக்கும் மறக்க முடியாத பாத்திரம்; தமிழர்களும் மறந்து விடாத பாத்திரம். தமிழ் வாழ்விற்குள் அழியாத் தொன்மமாகவும் புதிய சேர்க்கைகளுடன் புதுப்புது பரிமாணங்களுடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தக் காட்சிக் கோர்வையை ஒருசினிமாவின் பகுதி என்று கூடச் சொல்ல முடியாதுதான். கறாராகச் சொல்வதானால் வெள்ளிவிழாக்கள் கொண்டாடிய திருவிளையாடல் என்ற படத்தை ஒரு திரைப்படத்தின் அழகியலுக்குள்ளும் வெகுமக்கள் சினிமா என்ற வரையறைக்குள்ளும் கூட அடக்கிக் காட்டுவது சிரமம் தான்.
ஒரு கதாகாலட்சேப வடிவத்தை திரையில் காட்சி ரூபமாக்கிய வடிவம் திருவிளையாடல் என்று கூட விமரிசனங்கள் அன்று வைக்கப்பட்டன. என்றாலும்  அந்தப் படத்தின் செல்வாக்கு இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அதிலும் அந்தப் படத்தில் நடிகர் நாகேஷ் ஏற்ற தருமி கதாபாத்திரத்தின் செல்வாக்கு தமிழ் வாழ்வில் ஒரு தொன்மமாகவே மாறி புதுப் புதுப் பரிமாணங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
"ஒன்றைப் பெருவதற்குரிய முழுத் தகுதியும் திறமையும் ஒருவனுக்கு இல்லை; ஆனால் அதனைப் பெறுவது அவன் வாழ்க்கையைச் சிரமமின்றி நடத்த அந்த ஒன்று அவசியம்"  இது மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் தருணம். இத்தகைய தருணங்களைச் சந்திக்காத மனித வாழ்வு நிச்சயம் இருக்காது. அப்படிச் சந்திக்கின்ற சூழலில் மனிதனின் மனமும் அதன் தவிப்பும் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதைக் காட்ட தருமி பாத்திரம் தமிழ் வாழ்வில்  உதாரணமாக ஆகி இருக்கிறது. அறிவு அல்லது திறமை சார்ந்த போட்டியாக வடிவமைக்கப்பட்ட அந்தக் காட்சிக் கோர்வை  இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும்  போட்டி என்ற பரிமாணத்திலும் விரியக் கூடிய காட்சிக் கோர்வையாக அந்தப்படத்தில் இடம் பெற்றிருந்தது.
புலவன் தருமிக்கு இரண்டு உண்மைகள் தெரியும். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்ற சந்தேகத்தை போக்கும் அறிவு அவனுக்கு இல்லை என்பது ஓர் உண்மை. இரண்டாவது உண்மை , அந்தச்  சந்தேகத்தைப் போக்கினால்,  பாண்டிய மன்னன் தரப்போகும் 1000 பொற்காசுகள்  அல்லல்படும் தனது வாழ்க்கைக்கு அவ மிகமிக அவசியம் என்பது. இந்த இரண்டு உண்மைகளையும் அறிந்தவன் ஒரு விதத்தில் கடவுளை- கடவுளின் உதவியை- நெருங்கிக் கொண்டிருப்பவனும் கூட. மனிதனின் இருப்பு, கடவுளின் இருப்பு என்ற சமயத் தத்துவ விவாதங்களுக்குள் நுழையத்தக்க இந்தக் காட்சி திருவிளையாடல் படத்தில்  மிக எளிமையான ஒரு கபடி விளையாட்டுப் போல அமைக்கப்பட்டிருந்தது. 1000 பொற்காசுகளைப் பெறுபவனாக இருக்கப் போகும் தருமி அந்த விளையாட்டில் வினாக்களைத் தொடுத்து விடைகளைப் பெறுபவன் மட்டுமே என்பது கவனிக்கத் தக்க ஒன்று. இப்படி அமைத்தது அந்தப் பட இயக்குநரின் திறமை சார்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சிவனின் 64 திருவிளையாடல்களைப் பற்றிப் பேசும்  பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தின் மூலத்திலிருந்து  தேர்வு செய்து எடுக்கப்பட்ட புராணக்காட்சிகள் தான் திருவிளையாடல் என்ற படத்தின் தனித்தனிக் கதைகள். ஆனால் திருவிளையாடல் புராணத்தில் காட்சிகளுக்கான கதை மூலங்கள் மட்டுமே உண்டு என்பது சுவாரசியமான உண்மை. தருமிக்குப் பொற்கிழி கிடைத்த திருவிளையாடலைத் தேடிப் படித்தால், இறைவன் தருமியைச் சந்தித்தாகவோ, புலவனாக வந்த இறைவனின் அறிவுத் திறமையைச் சோதிக்கும் விதமாக நீண்ட விவாதம் நடத்தி,"ஆசைக்கு நீ [தருமி] .. அறிவுக்கு நான் [புலவனாக வந்த சிவன்].." என்று முடிவு செய்து கொண்டதாகவோ எந்தத் தடயமும் இல்லை. அப்படியானால் இந்த விவாத விளையாட்டு படத்தின் இயக்குநரின் முழுக் கற்பனையா என்றால் அதுவும் இல்லை.
இங்கு தான் தமிழ் வாழ்வில் பாரம்பரியக் கலைகளும் மரபு ஊடகங்களும் பெற்றிருந்த செல்வாக்கின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது.  இன்று வெகு மக்களின் கலையாகவும் ஊடகமாகவும்  விளங்குகிற சினிமாவின் முன்னோடி வடிவங்களான கூத்து , ராஜாராணி ஆட்டம், கதாகாலட்சேபம், நாடகம் போன்றன ஒரு வித நெகிழ்ச்சியான கட்டமைப்பைக் கொண்டிருந்தன. அன்று நடைபெறும் நாடகத்தின் மைய நோக்கத்தை மட்டுமே பேசாமல் மனிதர்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வி அறிவையே அவைதான் வழங்கியுள்ளன.
அடிப்படைக் கல்வி என்றவுடன் இன்றுள்ள கல்வி முறையை நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அடிப்படையான உலக ஞானம், சிந்திக்கும் முறை, பாரம்பரியம் பற்றிய தகவல் உடல் நலம் பேணுதலின் அவசியம் என்றெல்லாம் விலகிச் செல்வதும் பின்னர், திரும்பவும் மைய நோக்கத்திற்குள் திரும்பிக் கொள்வதும் என அந்த வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சங்கரதாஸ் சுவாமிகள் வள்ளி திருமணம் நாடகத்தின் அச்சுப் பிரதிக்கும் மேடையில் நிகழ்த்தப்பட்ட பிரதிக்கும் இடையிலிருந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டாலே போதும். தருமிக்கும் புலவனாக வந்த இறைவனுக்கும் இடையே நடந்த விவாத விளையாட்டு வள்ளி திருமணத்தில் வள்ளிக்கும் நாரதருக்கும், வள்ளிக்கும் வேடனுக்கும்,  வேலனுக்கும், விருத்தனுக்கும் இடையில் நடக்கும் விவாதத்தில் கூட இடம் பெற்றிருக்கும். இப்படியான தொடர்ச்சியில் தான் பல நகைச்சுவைக் காட்சிகள் அழியா வடிவமாக- தொன்மமாக மாறி நிற்கின்றன.
தருமி - புலவன் விவாத விளையாட்டுத் தொன்மம், கல்லூரி விடுதியில் ஊற்றப்படும் சாம்பாருக்கு இயற்கையிலேயே ருசி இருக்கிறதா..? என்ற கேள்வியில் தொடங்கி போடப்படும் சிறு நாடகமாகவும், பட்டிமன்றங்களாகவும் அதன் பரிமாணங்கள் வெகுமக்கள் தளத்தில் விரிவதைப் பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவே கூட இந்தத் தொன்மத்தினைத் திரும்பத் திரும்ப வேறு ரூபத்தில் மாற்றிக் காட்சிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. மிகச்சமீபத்தில் ஒரு படத்தில் சத்யராஜும் விவேக்கும் லாரி ஓட்டுதலின் நுட்பங்கள் என்ற மையத்திலிருந்து தருமி-இறையனார் என்ற எதிர்வுகளைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். கடைசியில் லாரியின் ஓட்டுநரான சத்யராஜைவிட அதிகப்படியான நுட்பங்கள் தெரிந்த விவேக் லாரியின் கிளீனராக வேலை பெறுவார் என்பதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இப்படி வெகுமக்கள் உளவியலுக்குள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும்- வினையாற்றிக் கொண்டிருக்கும் காட்சிகளும் பேச்சுகளும் " நவீனச் சிறுபத்திரிகைகளின்" கவனத்திற்கு வரவேண்டியதில்லை என்று நினைப்பதும், அவைகளைப் பற்றிய பேச்சையும் விமரிசனத்தையும் புத்திசாலித் தனமான விமரிசனம் மட்டுமே என ஒதுங்கிக் கொள்வதும் தான் சிறுபத்திரிகை வாசகனின் அடையாளம் என்றால், அந்த அடையாளத்தை முதலில் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. மொத்த சமூகத்தின் நிகழ்வுப் போக்கிலிருந்து அந்நியமானவர்களாகவும், மேலான கலைகளின் வாசகர்களாகவும் பார்வையாளர்களாகவும் அவர்களைக் காட்டிக் கொள்ள உதவும்  சிறுபத்திரிகை வாசிப்பு,  மேலான மனிதர்களாக ஆக்கியிருக்கிறதா என்ற கேள்வியை அடுத்துக் கேட்க வேண்டியிருக்கிறது. இது இத்துடன் நிற்க.
இரங்கத்தக்க மையக்கதாபாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட நாடகபாணிக் கதைகளில் அறிமுகமான நாகேஷின் திரையுலக வாழ்க்கை, அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களைப் போலவே பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு கட்டத்தில் அன்றைய தன்னேரில்லா நாயக நடிகர்களாகத் திகழ்ந்த சிவாஜி கணேசனின் படங்களிலும், எம்.ஜி.ராமச்சந்திரனின் படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக அவர் இருந்தார். இன்று நகைச்சுவை நடிகர்களாக நடிக்கும் பலர் தன்னுடன் நடிக்கும் நாயக நடிகர்களின் பாத்திரங்களுக்கேற்பத் தங்களது பாத்திர வார்ப்பை உருவாக்கிக் கொள்வதில்லை.
நடிப்பு, அது மேடை நடிப்பானாலும் சரி, திரைப்பட நடிப்பானாலும் சரி, தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது அவசியமான ஒன்று ; அவ்வுருவாக்கம் ஒரு நடிகரின் திறமையாலும் தொடர்ந்து நடிப்புத் தொழில் மேல் காட்டும் தனிக்கவனத்தாலும் நிகழ்கிறது. ஆனால் பாத்திரவார்ப்பு அல்லது வகைமாதிரி நடிப்பு என்பது தொடர்ந்த சிந்தனையாலும் போட்டி நிறைந்த தொழில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாலும் உருவாகிறது.  நடிகர் நாகேஷ் திரைப்படத்தில் தனக்கான வகைமாதிரிக் கதாபாத்திரம் என்ற தனி அடையாளத்தோடு, தன்னுடன் நடிக்கும் நாயக நடிகர்களின் நடிப்புக்கு ஏற்ற தனித்தனி வகை மாதிரிகளையும் வெளிப்படுத்தியவர் என்று சொல்லலாம்.
எம்ஜிஆர் நாயக நடிகராக நடித்த படங்களில் நாகேஷ் ஏற்ற பாத்திரங்கள் ஒருவித விலகல் தன்மை கொண்டவையாக அமைக்கப்பட்டன. தொடக்கத்திலேயே நாயகனுடன் இல்லாமல், வேறு முகாமிலிருந்து அல்லது வில்லன்களிடமிருந்து அல்லது கதாநாயகி குடும்பத்திலிருந்து வரும் பாத்திரமாக அறிமுகம் இருக்கும் படிக் கட்டமைக்கப்பட்டதைப் பல படங்களில் காணலாம்.பின்னர், நாயகனின் உதவும் குணத்தால் அல்லது அன்பால் ஈர்க்கப்பட்டு இடம் மாறுகிறவராக அந்த வகைமாதிரிகள் பெரும்பாலும் இருந்தன. அப்படி இடம் மாறினாலும்  எம்ஜிஆர் ஏற்கும் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களுக்கு நேர் எதிரான குணங்கள் கொண்டதாக அமையும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.
கருப்பு- வெள்ளைக் காலத்தில் வந்து வேட்டைக்காரன் ஒரு நல்ல உதாரணம். அதில் எம்ஜிஆர் சுறுசுறுப்பான வேட்டைக்காரன்.ஆனால் அவரது நண்பரான நாகேஷோ படுசோம்பேறி. காலையில் எழுவதே பத்து மணிக்கு மேல் தான். ஆனால் வாய் மட்டும் வேட்டையைப் பற்றிச் சவடால் அடிக்கும். இதே போல் தான் ஆயிரத்தில் ஒருவனில், படகோட்டியில் என ஒவ்வொரு படத்திலும் எம்ஜிஆரின் எதிர்நிலைக் குணத்தோடு அவருக்கு வேண்டியவராக வருவார். வந்து அதிகம் உடல் மொழியைப் பயன் படுத்தாத எம்ஜிஆரின் அசைவற்ற உடலின் அருகில் நின்று உடல் மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்துவார். இருவரும் வார்த்தைசார்ந்து மோதிக் கொள்வதோடு, உடலாலும் மோதிக் கொள்வதுபோல பாவனை காட்டி தலையை மேலே உயர்த்தி நிறுத்திவிட்டு , ஒரு சின்ன அசட்டுச் சிரிப்புடன் பின்வாங்குவார். எம்ஜிஆரின் ஆளுமையை எதுவும் செய்ய முடியாது என்ற பாவனையுடன் அந்தப்பின்வாங்கல் அமையும். நினைத்தால் அவரை வெல்ல முடியும்; ஆனால் அவர் நாயகன்; நான் துணைக் கதாபாத்திரம் ; அதனால்பின்வாங்குகிறேன் என்று சொல்லும் விதமாக முகபாவங்களுடன் விலகும் பல காட்சிகளை எம்ஜிஆரின் வெற்றிப்படங்களான அன்பேவா, பரிசு, பெரிய இடத்துப் பெண், கலங்கரை விளக்கம், பணத்தோட்டம், உரிமைக்குரல் எனப் பலவற்றில் காணலாம். பட்டியல் தேவையில்லை என்பதால் விடப்படுகிறது.
இதே போல் நடிகர் திலகம் என அழைக்கப்பட்ட சிவாஜி கணேசனுடன் நாகேஷ் நடித்த படங்களின் வகைமாதிரிக்கும் சில பத்துப் படங்களை உதாரணமாகக் காட்டலாம். ஆனால் சிவாஜியுடன் அவரது நடிப்பு பாணியும் கதாபாத்திர அடையாளங்களும் வேறானவை.பல படங்களில்சிவாஜி ஏற்கும் கதாபாத்திரத்திற்கு மிக நெருக்கமான உறவுடைய பாத்திரங்களாகவே நாகேஷின் பாத்திரங்கள் அமையும்படி பார்த்துக் கொள்ளப்பட்டன.எம்ஜிஆர் படங்களில் தனது உடலை மேலே உயர்த்திப் பின்வாங்கும் நாகேஷ் அதற்கு மாறாக சிவாஜியின் முன்னால் மேலேயிருந்து தனது உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறக்கிக் கொண்டு வந்து சிவாஜியுடன் கலந்து விடுவது போல ஒப்புக் கொடுப்பார். அத்தகைய ஒப்புதலை ஏற்றுக் கொண்ட பாவனையில் சிவாஜியிடமிருந்து ஒரு புன்னகை வெளிப்படும். இந்த வித்தியாசத்தைச் சரியாகக் காண வேண்டும் என்றால் முன்னர் விவரித்த திருவிளையாடல் காட்சியைப் பார்த்தாலே போதும்.
அவர் காலத்தில் தன்னேரில்லா நாயகர்களாக விளங்கிய எம்ஜிஆர் படங்களில் ஒருவிதக் கதாபாத்திரங்களிலும் சிவாஜியின் படங்களில் வேறுவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்தார்.வேறுவேறு நடிப்புப் பாணிகளையும் கூட அவர் வெளிப்படுத்தினார்.எம்ஜிஆர், சிவாஜி என்ற இருவருடன் மட்டுமல்லாமல் அதே கால கட்டத்தில் இரண்டாம் நிலை நாயக நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர், முத்துராமன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் போன்றவர்களுடன் அவர் நடித்த படங்களும் வேறுபட்ட தன்மை கொண்டவை. அவர்களுடன் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை நகைச்சுவைப் பாத்திரம் என்று மட்டும் சுருக்கி விட முடியாது. நாயகர்களுக்குச் சமதையான வாய்ப்புக்கள் கொண்ட பாத்திரங்கள் அவை. மூன்று தெய்வங்கள், மூன்றெழுத்து,  காலம் வெல்லும், பட்டணத்தில் பூதம் , பணமா.. பாசமா., நான் போன்ற படங்களைக் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் இதனை உணரலாம். இவற்றில் சில படங்கள் மூன்று கதாபாத்திரங்களை- நாயகர்களை- கொண்ட படங்களும் கூட.. இத்தகைய படங்கள் சிவாஜியையும் எம்ஜிஆரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒற்றைமையச் சினிமாவுக்கு மாற்றான- எதிரான போக்குகள் என்று கூடச் சொல்லலாம். இப்படியான மாற்று முயற்சிகள் பலவற்றில் நடிகர் நாகேஷ் இருந்தார் என்பதும் அத்தகைய படங்களை வெகுமக்கள் பார்க்கத்தக்க படங்களாக அவரது நடிப்புதான் மாற்றியது என்பதும் தமிழ்த் திரையுலக வரலாற்றில் சொல்ல வேண்டிய செய்திகள்.
இத்தகைய வேறுபாட்டிற்கும் பலவிதப் பரிமாணங்களுக்கும் பொறுப்பு நாகேஷ் மட்டுமே என்று சொல்ல முடியாதுதான். அந்தந்தப் படங்களில் நடித்த நாயக நடிகர்களும் அவர்களை இயக்கிய இயக்குநர்களும் கூடப் பொறுப்புடையவர்கள் தான். ஆனால் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று, அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் இருந்த ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கின் பொறுப்பை உணர்ந்திருந்தார்கள்; அத்துடன் கூட்டுப் பொறுப்பையும், கூட்டுப் பொறுப்பில் தங்கள் அடையாளங்கள் தொலைந்து போகாமலும் இருப்பது எப்படி என்பதையும் கவனித்துக் கொண்டார்கள் என்பதும் தான்.
நகைக்குறிப்போடு மருவிய உரை, செயல், வேடம் என்றின்னவற்றைப் பொருளாகக் கொண்டு தோன்றும் நகையானது முறுவல் [ஸ்மிதம்], புன்னகை [ஹசிதம்], மெல்லச் சிரித்தல் [விஹசிதம்], அளவே சிரித்தல் [உபஹசிதம்], பெருகச்சிரித்தல் [அபஹசிதம்], ஆர்ப்பொடு சிரித்தல் [அதிஹசிதம்] என அறுவகைப்பட்டு, நித்திரை, மடிமை, இளைப்பு, களைப்பு, அயர்ச்சியென்னும் வழிநிலையவிநயங் களோடு நடக்கும். அறுவகை நகையினுண் முதலிரண்டும் தலையாயினருக்கும், நடுவிரண்டும் இடையாயினருக்கும், இறுதியிரண்டும் கடையாயினாருக்குமுரிய.
      மதங்கசூளாமணியில் விபுலானந்த சுவாமிகள்      


No comments :