October 02, 2015

தலைப்பில் தங்கும் கதைப்பொருள் : போகன் சங்கரின் பொதிநிகழ்கால எழுத்தாளனிடம் எதையெழுதலாம் என்று கேட்டால் எதையும் எழுதலாம்;  இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறையெல்லாம் இல்லையென்று சொல்லக்கூடும். அப்படிச் சொல்வது முழுமையான உண்மையல்ல. நிகழ்காலத்தில் எழுதப்படும் எல்லாமும் ஏற்கெனவே இருக்கும் வரையறைகளின் மாற்றுவடிவங்களேயன்றி, முற்றுமுழுதான புத்தாக்கமல்ல.

 ‘அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூல் பயனே’ என்று விதியெழுதி இலக்கியத்திற்கான நோக்கத்தை வரையறை செய்த மரபு இந்திய மரபு. இந்த வரையறைகளை மீறுவதில் உருவாகிறது  நவீன இலக்கியம். இந்தப் புரிதலுள்ள எழுத்தாளர்கள் மட்டுமே நிகழ்காலத்தின் எழுத்தாளர்களாக  இருக்கமுடியும். திரும்பவும் சொல்லத்தோன்றுகிறது. நவீன இலக்கியம் மரபை மீறுவதில் கவனம் செலுத்திவதே தவிர நிராகரிப்பதில் கவனம் செலுத்துவதில் இல்லை.  மரபு மீறல் என்பது இருப்பதின் நீட்சியல்ல; இருப்பதின் மாற்று அல்லது இருப்பின் எதிர்நிலைப்பாடு.

இந்தப் புரிதலோடு எழுதும் நிகழ்கால எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான முக்கியமான  கச்சாப்பொருள்களில் ஒன்றாக இருக்கிறது அழுக்கு.  உவமை, உருவகம், படிமம், குறியீடு எனக் கச்சை கட்டும் கவிதைக்காரர்கள் இண்டு, இடுக்குகளில் சேரும் அழுக்கைத் தேடிப்பிடிக்கிறார்கள். மனிதர்களின் நகம் தொடங்கி, விரலிடுக்கு, ரேகை, மடிப்பு, அக்குள், அல்குல் என அழுக்கின் வாசஸ்தலங்களில் கவிதை எப்போதும் சுகந்தமாக வீசிக்கொண்டிருப்பதைக் கவிதைப்பிரியர்கள் வாசித்திருக்கக் கூடும். ஆனால் கதைக்காரர்கள் வியர்வையின் வாசனையையே அதிகம் எழுதிக்காட்டியுள்ளனர்.

அழுக்கு நீக்கப்பட வேண்டியது;அழுக்குப்படாமல் இருக்க அணிவது ஆடை; ஆடை அழுக்காகிவிடும்போது அவற்றை நீக்கத் துவைக்கவேண்டும்; துவைப்பதற்குக் கல் வேண்டும்; துவைகற்கள் இருக்குமிடம் துறை. துணிகளின் அழுக்கை நீக்குவதற்காகவே ஒரு சாதிக்குழுவை உருவாக்கி வளர்ந்தது இந்திய சமூகம். ஒவ்வொரு வீட்டிலும் குவியும் அழுக்குத் துணிகளைப் பெற்றுப் பொதியாக்கிக் கழுதைமேலேற்றித் துறையில் இறக்கி, நீரில் முக்கி அழுக்கி நீக்கும் தொழில் செய்யும் மனிதர்களை வண்ணான் என்றும் வண்ணாத்தியென்றும் வகைப்படுத்திக் கொண்ட வரலாறு நமக்குண்டு. நீங்காத அழுக்கையும் கறையையும் கறைக்க நீரில் முக்குதல் போதாதென்று தோன்றும்போது சூளையில் வைத்து வெள்ளாவியால் சூடாக்கிக் கறைப்பது அடுத்த கட்டம். நீர் சாதாரண அழுக்கைப் போக்குமென்றால், நெருப்பும் சூடும் திட்டுத்திட்டாய்த் தெரியும் கறையைக் கழுவும். வண்ணான் துறைக்கு எடுத்துச் செல்லப்படும் சுமையின் பெயர் பொதி. பொதி என்ற சொல் வெறும் சுமையல்ல; அழுக்கோடு கூடிய சுமை.   போகன் சங்கரின் இந்தக் கதைத் தலைப்பு பொதி.

அழுக்குச் சேரச்சேர மனித உடலே பெரும் சுமைபோலத் தோன்றிவிடும். அழுக்கான ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக நின்று நீந்திக் குளித்துவிட்டுத் திரும்பும் சுகம் இனிமையானது. உடல் அழுக்கை நீரால் கழுவலாம் என நம்பும் மனிதர்கள் ஆற்று நீரிலும், கிணற்று நீரிலும் குளித்துக் கரையேறும்போது லேசாகிவிடுகிறார்கள்.  அந்த வகையில் அழுக்கின் சேர்மானம் சுமையாகிறது. சுமையையும் அழுக்கையும் நீக்குவது நிர்வாணமாகிறது. அழுக்கான உடல் சுமையானது; நிர்வாண உடல் சுமையற்றது. இப்படிச் சுலபமாகச் சொல்லிவிட முடியுமா? என்றும் தோன்றவில்லை. நீக்க முடியாத அழுக்கைப் பற்றிப் பேசுவது இலக்கியத்தின் உன்னத நோக்கமாக இருக்கிறது.

போகனின் கதையில் வரும் நேரடிப் பாத்திரங்கள் இரண்டே இரண்டு. கதையைச் சொல்பவனாக அவன் வருகிறான். அவன் அவளைச் சந்தித்ததும் பிரிந்துவிட்டதும் தான் கதை. அவர்களுக்குப் பெயர்களைத் தந்திருக்கிறாரா? என்பதுகூட முக்கியமில்லை. அவளின் பெயர் கிரிஜா என்பதாக ஒரு குறிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் நினைத்துக்கொள்ளும் பாத்திரங்களும் அவர்களால் சொல்லப்படும் பாத்திரங்கள் அவர்களிருவரைப்போலவே முக்கியமானவை. அவன் தன் தந்தையை நினைத்துக் கொண்டு சொல்கிறான். அவளோ தன் மகனை நினைத்துக் கொண்டு சொல்கிறாள். அந்த நினைப்புகள் நினைவுகளாக இல்லாமல் அவர்களிருவருக்குள்ளும் அழுக்காகப் படிந்து கிடைக்கின்றன

அவளோடு ஒருமணிநேரம் இருக்க இவ்வளவு. இரவு முழுவதும் இருக்க இவ்வளவு எனத் தனக்கான விலையைத் தீர்மானித்து வைத்திருக்கும் அவளும், தந்தையின் மரணத்தால் கிடைத்த வேலையைச் சுமையாகக் கருதும் ஒருவனும் சந்திக்கும் அந்தச் சந்திப்பு விரும்பி நிகழ்ந்த நிகழ்வல்ல. அவனும் பெண்ணுடலின் தேவையை உணர்ந்து அவளை நெருங்கிப் போனவனும் அல்ல. தனது பெரிய அதிகாரியின் மகள் திருமண வரவேற்பில் கையிலிருக்கும் பரிசுப்பொருளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்பவனைத் தனது விசாரிப்பின் மூலமும், உபசரிப்பின் மூலமும் நெருங்கிக் கொண்டவள்.  

அவனது வருகை அந்தத் திருமண வரவேற்பில் விரும்பத்தக்க ஒன்றல்ல. அவமானப்படுத்திய தனது அதிகாரியைக் குற்றவாளியாக்க நினைத்து அதே அலுவலகத்தில் தூக்குமாட்டிச் செத்துப்போன எடுபிடிவேலை செய்தவனின் மகன் இவன். தந்தையின் மரணத்தால் கிடைத்த  ‘பியூன்’ வேலையைச் செய்யும் அவனின் இருப்பு மேலதிகாரியின் மனச்சாட்சியைக் கேள்விக்குள்ளாக்குள்ளாக்கும் ஒன்றாகவே உணரப்படுகிறது.  அலுவலகத்தில் அதிகாரிகளின் முன்னே நடமாடிக் கோபத்தை உண்டாக்கும் இவன் ஏன் இங்கு - இந்த நிகழ்ச்சிக்கு வந்தானென்றே அந்த அதிகாரி நினைக்கிறார். அவன் வாங்கி வந்த பரிசுப்பொருளைப் பெற்றுக் கொள்ளாமல் மறுதலிக்கக்கூடும் என்ற எண்ணவோட்டம் அவனுக்குள் இருப்பதால்தான் கூட்டத்தில் கலந்துவிட முடியாமல் தனியனாய் நிற்கிறான் அவன். அவனின் நிலையறிந்தெல்லாம் அவள் அவனை அணுகவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவனைத் தள்ளிக்கொண்டுபோய்த் தன் உடலைத் தரவேண்டும். தருவதற்குமுன்பு பேரம் பேசித் தனக்கான கூலியை - சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அப்படியணுகி அவனைத் தள்ளிக் கொண்டு போன,

அவள் பெருமூச்சுடன் சொன்னாள். “ அவனுக்கு இங்கே சுத்தம் பத்தலை” அவன் சின்ன வயசிலிருந்தே என்னைப்போல ஒரு கூதிச்சியின் மோன் போல இல்லை. ஏதோ பெரிய தரவாட்டில் பொறந்த குட்டிபோல. ரொம்ப சுத்தம். இரண்டு பொழுதும் குளிச்சிடுவான்.

தன்னைவிட்டுவிட்டுப் போன மகனைப் பற்றிய நினைவுச் சொற்கள் இவை.  குளிப்பது; உடுப்பது எனத் தன்னிடமிருந்து விலகிப்போனத் தன் மகனை ஒரு ஆசிரியரின் சாயலோடு பொருத்திப் பார்த்துக்கொள்கிறாள். கல்வி, ஒழுக்கம், சுத்தம் ஆகியவற்றின் உருவமான ஆசிரியரைப் போல வரவேண்டியவன் என்னோடு எப்படி இருப்பான்? என்று அவள் மனம் சமாதானம் கொள்கிறது. தன்னைவிட்டுப் போன மகனின் நிலைக்கான நியாயங்களும், சமாதானங்களும் அவளிடமிருந்தாலும், இன்னொருபுறம் அவனது பிரிவைப் பெரும் தண்டனையாகவே கருதுகிறாள். தான் செய்யும் இந்த அழுக்கான தொழிலுக்கான தண்டனை என்பது அடிமனம் சொல்லும் காரணம்; குற்றச்சாட்டு.

உடல் மீது படரும் ஆடையின் அழுக்கைச் சுத்தம் செய்யப் பொதியில் ஏற்றிச் சென்று வெள்ளாவியில் வைத்துச் சூடாக்கி வெளியேற்றிவிடலாம்.  இவளோ தினசரி தனது உடலை நிர்வாணமாக்கிக் கொண்டு புதியபுதிய உடலோடு முயங்கிமுயங்கி அழுக்கைச் சேர்த்துக்கொண்டே இருப்பவள். அந்த அழுக்கின் நாற்றம் தாங்காமல் ஓடிப்போனவன் அவளது மகன். அந்தப் பிரிவின் சோகத்தைச் சொன்னவளுக்கு அவளிடம் சொல்ல உடனடியான ஆறுதல் சொற்கள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக அவன் தன் மனதிற்குள் படிந்து கிடக்கும் அழுக்கைச் சொல்கிறான்.  அந்த நேரத்தில் அவன் சொல்ல நினைத்தது அவனுக்குள் உறையும் அழுக்குப் படிமத்தை.

காசநோய்க்காரியான தன் தாயின் நினைவுகளும் அவளை உதாசீனப்படுத்திவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தந்தையின் மரணம் தந்தவேலையைப் பார்க்கிறான் என்பதும், தனது இருப்பு அந்த அலுவலகத்தில் ஒவ்வொருநாளும் ஒவ்வொருவரிடத்திலும் வெறுப்புடனேயே பார்க்கப்படுகிறது என்பதும், அதனாலேயே தன்னைப் பெரும் அழுக்கு நிரம்பியவன் என்று கருதிக்கொண்டே இருக்கிறேன் என்பதும் அவனது மனதின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டோடு அவளிடம்,

நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். “என் அப்பன் வேலைதான் இப்போ நான் பார்க்கிற வேலை” என்றேன். “ இவங்கெல்லாம் என்னை என் அப்பன் மாதிரியே ஆக்க நினைக்கிறாங்க”

என்பது அவனின் கூற்று.

நடைமுறையில் அழுக்கைக்கழுவிவிட முடியும் என நினைக்கும்  ஒருவரே இன்னொருவருடைய அழுக்கென்றால் முகம் சுழிப்பதும் மூக்கைப் பிடிப்பதுமாய் ஒதுங்கிப்போக எத்தணிக்கிறதைப் பார்க்கிறோம். புற அழுக்குசார்ந்த இந்த நடைமுறை அகவழுக்குசார்ந்து வேறுவடிவம் கொள்கிறது என்பதே எழுத்தாளன் சொல்ல நினைக்கும் உண்மை. இருவரது அழுக்கும் ஒருவித மனப்படிமம் தான். இந்தப் படிமங்களுக்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் குற்ற உணர்வு. குற்றத்திற்கான தண்டனையைப் பெற்றவர்கள் தனிமைச்சிறைக்குள் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வாழ்வதையே தண்டனையாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த மனநிலையில் தான் ஒருவருக்கு இன்னொருவர் ஆறுதலாக இருக்கமுடியும் அல்லது ஆறுதல் சொற்களைச் சொல்லமுடியும். அப்படித்தான் அவன் கதையின் இறுதியில் அந்த ஆறுதல் மொழிகளைச் சொல்லிவிட நினைக்கிறான்.   சொல்லிவிட நினைத்த அந்த வார்த்தைகள் உற்பத்தியாகும் இடம்கூட முக்கியமான ஒன்று. ஆம் குளியலறை. அழுக்கை நீக்கிச் சுத்தமாக்கிவிட முடியுமெனக் கருதுமிடம்.

 நான் அவளிடம், அவள் மகன் நிச்சியமாக எங்கோ நல்லபடியாக இருக்கிறான் என்று சொல்ல விரும்பினேன். அதேசமயம் ஒரு அம்மையின் ஹிருதயத்தைவிட  சுத்தமான இடம் கிடையாது என்றும்.

படிகளில் இறங்கியபோது எனக்கு அவளிடம் சொல்லவேண்டுமென்று பாத்ரூமில் நினைத்துக் கொண்ட ஒன்று நினைவுக்கு வந்தது.

பரிசுப்பொதியைப் போலவே அதையும் அவளிடம் கொடுக்க மறந்திருந்தேன்.

நான் அவளிடம், அவள் மகன் நிச்சியமாக எங்கோ நல்லபடியாக இருக்கிறான் என்று உறுதியாகச் சொல்ல விரும்பினேன்.

அதேசமயம் ஒரு அம்மையின் ஹிருதயத்தைவிட  சுத்தமான இடம் கிடையாது என்றும்...

இந்த நினைப்புகளோடு கதை முடிந்துபோகின்றது.

இந்தியச் சமூகத்தில் மனிதர்களின் புற அழுக்குக்கும்  அக அழுக்குக்கும் நேரடித்தொடர்புகளும் மறைமுகத் தொடர்புகளும் உண்டு என்பது சமூகவியல் விவரிப்பு. போகனின் இந்தக் கதை அதற்குள் நுழையவில்லை; ஆண் உடலுக்குள் நிரப்பிவழியும் அக அழுக்கு ஒன்று வழங்கும் தண்டனையொன்றைப் பேசுகிறது.

போகனின் கதையும் கதை முடிச்சுகளும் புதியன அல்ல. தொடர்ச்சியாக இலக்கிய வாசிப்பில் இருப்பவர்கள் இந்தக் கதைபோல பல கதைகளை வாசித்திருக்கக்கூடும். சிறுகதை நாவலென நவீன எழுத்தை வாசிக்காதவர்களுக்குக் கூட இந்தக் கதையின் முதல் முடிச்சு தெரிந்தே இருக்கும். பரசுராமன் தன் தாயின் தலையை வெட்டி வழங்கிய புராண காலத் தண்டனையே அந்த முடிச்சு. அந்த முடிச்சே, தி.ஜானகிராமனின் அலங்காரத்தைவிட்டு ஓடிப்போய் அப்பு வழங்கிய தண்டனையாக (அம்மா வந்தாள்) , ஜெயகாந்தனின் தங்கத்தைத் தண்டிக்கவிரும்பி நண்பர்களோடு ஓடிப்போகும் சிட்டிபாபுவின் மனநிலையாக(உன்னைப்போல் ஒருவன்), இமையத்தின் தனபாக்கியத்தைத் தண்டனை வழங்க நினைத்துச் செக்குமேட்டுவாசியாகும் அவளது மகனின் (ஆறுமுகம்) அலைக்கழிப்புவாழ்க்கையாக எழுதப் பட்டிருக்கின்றன.

தந்தைசொல் மிக்க மந்திரமில்லையென்று வாழும் அறவொழுக்கம் நிரம்பியவன் பரசுராமன். ஆனால் அப்பு, சிட்டி, ஆறுமுகம் போன்றவர்களும் போகனின் கதையில் வரும் சிறுவனும் நவீன காலத்துச் சிறுவர்கள். அவர்களுக்கு உத்தரவுபோடும் நிலையில் தந்தைகள் இல்லை. இருக்கும் தந்தையும் கண்டும் காணாதவராக இருக்கிறார். அந்தச் சூழலில் தான் தாய்களுக்குத் தண்டனை வழங்குவதாக நினைத்துக் கொண்டு இந்தச் சிறுவர்கள் ஓடிப்போய்த் தங்களுக்கும் தண்டனையை வழங்கிக்கொள்கிறார்கள். அவர்களெல்லாம், தாய்களை மகனின் பார்வையில் எழுதிக்காட்டினார்கள். அந்த அம்மாக்களும் தங்களைக் குற்றவாளிகளாக நினைத்துக் கொண்டு மகனின் ஏற்புக்காக - தண்டனை நீக்கத்திற்காகத் தவிக்கிறார்கள்.

போகனின் கதையில் வரும் அம்மாவிற்கும் அப்படியொரு தவிப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அவள் திரும்ப வரவேண்டும் அழுக்கு நீக்கம் செய்யவேண்டும் என்று நினைப்பில் இருக்கவில்லை. தான் சுத்தமானவள் என்றே நினைக்கிறாள். தனது சூழல் தான் சுத்தமானதில்லையென்று நியாயத்தோடு இருக்கிறாள். அப்படிப்பட்ட அம்மாவின் ஹிருதயம் சுத்தமானது. அதைத் தேடி அவன் வருவான் என்ற ஆறுதலைச் சொல்ல இன்னொருவனை உருவாக்கி - மூன்றாமவனை உருவாக்கிக் கதையாக்கி இருக்கிறார். இந்த வேறுபாடே போகனின் கதையை வேறாக்கியிருக்கிறது. புற அழுக்கு பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கும்போதே அக அழுக்குக்குள் நுழைந்துவிடும் போது அந்த இருவரின் பாத்திர அடையாளங்களும் காணாமல் போய்விடும்விதமாக ஆக்கியிருக்கிறார் போகன். பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது உடலைக் கொடுத்துவிடவும், கொடுத்த பணத்திற்காக அவளை முயங்கிவிட்டுப் போய்விடவுமான சந்திப்பாக இல்லாமல், இருவரும் தொடரும் வாழ்க்கைக்குள் நுழைந்து விடுவார்களோ என்று நினைக்கத்தூண்டும் விதமான முடிவை நோக்கி நகர்த்தியிருக்கிறார். ஆனால் நவீன எழுத்தாளன் அப்படியெல்லாம் சேர்த்துவைத்துவிட மாட்டான். அவனுக்குள் இருக்கும் அறிவுத் தர்க்கம் அப்படிப்பட்டது. ====================                                        உயிர்மை/ செப்டம்பர்/ 53-59

No comments :