September 07, 2015

தமிழ் மரபிலிருந்து விமரிசனப்பார்வையை உருவாக்கவேண்டும்யோகி: தமிழ் இலக்கியச்சூழலில் இலக்கியத்தின்அடைவு நிலையை, தமிழ்நாட்டு இலக்கியம்தான் முடிவுசெய்கிறது. இப்படியிருக்கையில் புலம்பெயர் இலக்கியத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?மலேசியா-சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் உங்கள் அபிப்பிராயம் என்ன?
அ.ரா: சிங்கப்பூர்-மலேசியா இலக்கியத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு இன்னும் முழுமையாக நான் வாசித்தது இல்லை. ஆனால் ஒரு பேராசிரியராக இவ்விரு நாட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறேன். அவ்வப்போது மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள்,அல்லது சிங்கப்பூர் நாவல்கள், சிறுகதைகள் போன்ற தலைப்புகளில் அளிக்கப்பெற்ற ஆய்வேடுகளை மதிப்பிட்டு அறிக்கை அனுப்பியிருக்கிறேன். இதன் வழியாகக் கிடைத்த அறிமுகத்தைத் தாண்டி அண்மைக் காலத்தில் மலேசிய, சிங்கப்பூர் எழுத்துகளை இணையம் வழியாக வாசித்து வருகிறேன்.  அதேநேரத்தில், சிங்கப்பூர் நாடகஇலக்கியத்தோடு எனக்கு நீண்டகாலப்  பரிச்சயம் உண்டு. சுந்தரராமசாமியின் சிறுகதையை நான் நாடகமாக்கியதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் நவீன நாடக முயற்சிகள் எனக்கு அறிமுகம் ஆயின. அந்தப் பிரதியை சிங்கையின் நவீன நாடக முன்னோடியான இளங்கோவன் அங்கு மேடையேற்றுவதற்காக அப்போது தொடர்பு கொண்டார். அவரது நாடகப் பிரதிகளின் தொகுப்பான ஊடாடியை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரைப்போலவே பலரும் அனுப்பியிருக்கிறார்கள். அவைகளையும் படித்திருக்கிறேன். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு சொல்வதானால், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்நாட்டு இலக்கியப்போக்கை நகலெடுக்கும் நிலையே இருப்பதாகச் சொல்வேன். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இணையம் வழியாக எனக்கு வாசிக்கக் கிடைத்த வற்றிலிருந்து புதிய கருத்தொன்று உருவாகிவருகிறது. மலேசியத்தமிழர்கள், தமிழ் இலக்கியப் பரப்பில் தங்கள் அடையாளத்தை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்கள் என்பதே அந்தக்கருத்து. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் மனதிற்குள் தமிழ்நிலப்பரப்பும் மண்வாசமும் நிழலாடுகின்றன. ஆனால் சிங்கப்பூரின் பன்னாட்டுத்தன்மை வசீகரிக்கிறது.


நான் இலங்கைத் தமிழ் இலக்கியத்தை தொடர்வாசிப்பாகக் கொண்டுள்ளேன். 40 வருடமாக இலங்கையில் நடந்த போராட்டங்கள் மற்றும் போர்ப்பின்னணியில், படைப்பாளர்கள் முதலில் நிலம்-ஊர் என்கிற விஷயத்தையும் பின்னர் மரணம் குறித்தும் விரிவாகப் பேசினார்கள். தொடர்ந்து, புலம்பெயர்தல் , அகதி வாழ்வு என்கிற விஷயத்தை முன்வைத்தார்கள்.  பிறகு, எங்கள்ஊர், எங்கள்வெளி, எங்கள்நாடு, எங்கள் தேசம் என்ற குரல் தொடர்ந்து ஒலித்தது.


புலம்பெயர்ந்தபிறகு, இரண்டு நாடுகளுக்கிடையிலான அலைவுருதல்  பற்றி எழுதப்பட்டது. மனம் சார்ந்து மட்டுமல்லாமல் பண்பாட்டு சிதைவுகள் குறித்தும் அவர்கள் பதிவுசெய்கிறார்கள். புலம்பெயர் சிறுகதைகள் என்று பார்த்தாலும் போருக்குமுன் – போருக்கு பின் என இருகூறுகளாக  உள்ளன. குறிப்பாக, புலம் பெயர்ந்தவர்கள் தன்சொந்த நாட்டில் நல்ல பணியில் இருந்திருப்பார்கள். புலம்பெயர்ந்த நாட்டில் மிகமோசமாக கூலிவேலையை செய்து கொண்டிருப்பார்கள். தனது சொந்தநாட்டில் அப்படியான வேலைகளை நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், புலம்பெயர்ந்த நாட்டில் தனது விருப்பத்தின் பெயரிலேயே அதைசெய்கிறார்கள். ஐரோப்பிய கலாச்சாரமும் அப்படிதான் இருக்கிறது. அதையெல்லாம் எழுதிவிட வேண்டுமென எழுதுகிறார்கள்


யோகி: நீங்கள் முதல்முறையாக மலேசியாவுக்கு வந்திருக்கிறீர்கள்.  மலேசியாவைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

மலேசியாவைப் பற்றிய நினைவுகள் அகிலன் (பால்மரக்காட்டினிலே), சிங்காரம் (புயலிலே ஒரு தோனி, கடலுக்கு அப்பால்), ஹெப்சிபா யேசுதாசன் (மா-னீ), போன்றவர்களின் நாவல்கள் வழியாக ஒரு சித்திரமாக உருவாகி இருந்தது. ரப்பர் தோட்டங்கள், எஸ்டேட்டுகள் என்பதான சித்திரத்திற்குள் தமிழர்கள் நிறைய வாழும் நாடாகவே அந்தச் சித்திரம் இருந்தது. ரங்கூன் பயணங்கள் பற்றிய கதைகளையும் கூடச் சிலர் வாய்மொழியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தச் சித்திரம் கால் நூற்றாண்டுக்கு முந்திய சித்திரம். ஆனால் இப்போது வந்து பார்த்த பின்பு பொருளாதாரரீதியாக முதலாளித்துவ உற்பத்திக்குள் நுழைந்த நாட்டின் அடையாளங்களைப் பார்க்கிறேன். பளபளப்பான சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், பசுமையான தோட்டங்கள் எனச் சாலையோரக் காட்சிகளையே அதிகம் பார்த்திருக்கிறேன். நண்பர் பாலாவின் துணையோடு தோட்டப்பகுதியில் இருக்கும் சில குடும்பங்களைச் சந்தித்தேன். இந்தப் பார்வையிலேயே ஏழைகளையும் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் பிரச்சினையான பல்லின மக்கள் வாழும் ஒரு தேசத்தின் சிக்கல்களும் முரண்பாடுகளும் இங்கும் இருக்கின்றன; ஊழலும் ஏமாற்றும் கூடப் பொதுவானவையாகவே தெரிகின்றன.


யோகி: மலேசியாவில் உங்களால் மறக்கமுடியாத சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா?

இணையம் வழியாக அறிமுகமான நண்பர்கள் பாலமுருகன், யோகி, மணிமொழி ஆகியோரின் அன்பும் வரவேற்பும் மறக்கமுடியாதவைகளாக இருக்கப்போகின்றன. முதல் பயணத்திலேயே ஒரு நாட்டின் பெருவழிப்பாதையில் 12 மணிநேரம் பயணம் செய்து மலேசியாவைக் குறுக்குவெட்டாகப் பார்த்ததை மறுக்கமுடியாத ஒன்றாகவே நினைக்கிறேன். மலேசியாவின் வடபகுதி ஊரான கெடாவிலிருந்து சிங்கப்பூரின் நுழைவாயிலாக இருக்கும் ஜொகூர் வரை பேருந்தில் தெரிந்தவர் ஒருவரும் இல்லாமல் செய்த பயணம் மறைக்க முடியாததுதான். அந்தப் பயணத்தில் நான் அந்நியனாக யாராலும் நடத்தப்படவில்லை என்பதையும் சொல்லவேண்டும்


யோகி: மலேசிய தமிழர்களின் வாழ்வியல் குறித்த உங்கள் பார்வை என்ன?

மலேசியத் தமிழர்களின் வாழ்வியலைப் பேசும் அளவிற்கு இந்தப் பயணம் நீண்டதல்ல. கல்வி சார்ந்த ஒரு பயணம் தான். என்றாலும் சில தமிழ்க் குடும்பங்களைப் பார்த்தேன். வடக்கு மலேசியாவின் எஸ்டேட் பகுதியிலும் சிறுநகரங்களில் இருக்கும் குடும்பங்கள். அவர்களின் மனத்தில் தமிழ் வாழ்வு பற்றி ஒரு கற்பனை இருக்கிறது. அதனை எதிர்பார்த்துத் தமிழ்நாட்டிற்கு வந்தால் எதிர்பார்ப்பு நிறைவேறாது. நண்பர்களின் உரையாடலின் வழியாக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை கடும் நெருக்கடியில் இருப்பதை உணர்ந்தேன். மலேசியத்தமிழர்கள், இந்த நிலத்தின் மனிதர்கள் என்று நம்பி வாழ்ந்தாகவேண்டும்; அதற்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது பார்வை.  


யோகி: தொடர்ந்து மலேசிய இலக்கியம் குறித்து இங்கு வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

மலேசிய இலக்கியம் என்பதை மலேசியத்தமிழ் இலக்கியம் எனப் புரிந்துகொள்கிறேன். இங்கே இருப்பவர்கள் தமிழ்நாட்டிலிருந்து அறிமுகமாகும் எழுத்துகளை விமரிசனக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அந்தப் பார்வை சரியானதுதான். ஒன்றை விமரிசிப்பதன் மூலமே தங்களுக்கான - தங்களின் தேச அடையாளத்துடன் கூடிய இலக்கியத்தைத் தங்கள் மொழியில் எழுத முடியும்.


யோகி: மலேசியபடைப்பாளிகள், கலைஞர்களுடனான கருத்தாடல்கள் உங்களுக்கு தந்த அனுபவம்என்ன?

மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின் போதும் கெடாவிலும் சில கல்லூரிகளிலும் பேசினேன். அங்கெல்லாம் எழுத்தாளர்கள், கலைஞர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் ஆர்வமும் தீவிரமும் தமிழகத் தமிழ் இலக்கியம் தாண்டி, உலகத் தமிழ் இலக்கியத்தோடு இணையும் ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். அதற்காக ஏற்கெனவே இருக்கும் மரபின் மீது கேலியும் விமரிசனமும் செய்கிறார்கள். அந்த விமரிசனம் தமிழக எழுத்தின் மீதான விமரிசனமாகவும் உணர்கிறேன்
                                                                                                                                  ###############

யோகி:  தமிழ் இலக்கியத்தின் இப்போதைய அடையாளமாக யாரை யெல்லாம்  நினைக்கிறீர்கள்? பொதுவாக அதுமாறு பட்டிருக்கிறதா? அதன் வளர்ச்சி குறித்து சொல்லுங்கள்?

அ.ரா : தமிழ் இலக்கியத்தின் இப்போதைய அடையாளம் யார் என்பதைவிட என்ன போக்கு எனப் பேசுவதே சரியாக இருக்கும்.  காலனிய காலத்துக்குப் பிந்திய வாழ்க்கையின் சிக்கல்களை எழுதுவது; தங்களின் பழைய அடையாளத்தைத் திரும்பக் கொண்டுவருவது பற்றிய விவாதத்தை முன்வைப்பது; மாறுதலில் தாங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறோம் என்று புலம்புவது போன்றன நிகழ்காலத்தமிழ் இலக்கியத்தின் போக்காக இருக்கின்றன.  இந்த நோக்கில் எழுதும் எழுத்தாக ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கிறேன். அதன் காரணமாகவே தமிழ் இலக்கிய உலகில் அவரை மிக முக்கியமாக நினைக்கிறேன். ஆனால் அவர் தமிழ்ப்பாரம்பரிய அறிவை இந்தியப் பரப்பின் அறிவுக்குள் வைத்துப் பூட்டிவிடுவாரோ என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது.   அவர் வட்டாரம், சமூகப்பிரச்னை, பாலியல் பிரச்னை உள்ளிட்ட எல்லாவித இலக்கியத்தையும் எழுதக் கூடியவாரக இருக்கிறார். அவரை குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்க  முடியாது. ஆனால், பல எழுத்தாளர்களை இவர் பெண்ணிய எழுத்தாளர், அரசியல் எழுத்தாளர் என்று அடையாளப் படுத்தி விடலாம். அந்தவகையில் தமிழ் இலக்கியம் ஓரடையாளத்தோடுதான் பயணித்து வந்திருக்கிறது. கோணங்கியும் அவரோடு இணைந்து பயணிப்பதாக நம்பும் சிறுகுழுவும் கூடப் பின்னைக்காலனிய மனநிலையைக் கொண்டவர்கள் தான். தேசியவாதிகள் முன்வைக்கும் பின்காலனியம் ஜெயமோகன் என்றால், இவர்கள் சாதியவாதிகள் முன்வைக்கும் தமிழ்த்தேசியப் பின் காலனியவாதிகள். இருவரும் விலகலான பாதையில் பயணிப்பவர்கள் என்றாலும் எங்கோ சந்திக்கவே செய்வார்கள். நவீனத்துவ எழுத்தாளர்கள் இன்னும் மார்க்சியத்தின் கதவுகளைத் திறந்தபாடில்லை. அதற்குள்ளேயே கம்புசுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதையை தமிழ் இலக்கியச் சூழல் அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்லும்படியாகவும் தோன்றுகிறது. வட்டார இலக்கியம்,  தலித் இலக்கியம், பெண்ணியம் போன்ற போக்குகளில் பயணித்து வந்த சமகாலத்தமிழ் இலக்கியம்  இன்று அடையாளங் களையெல்லாம் விலக்கிய சூழலில் நிற்கிறது.  2000-ஆம் ஆண்டுக்குப் பிறகான தமிழ் இலக்கிய உலகில், ஓர்எழுத்தாளனை இந்த எழுத்துக் குரியவன் என்று சொல்லிவிட முடியாது. உருவாக்கிய அடையாளத்தை  அந்த எழுத்தாளனே அழிக்கும் சூழல் நிலவுவதை  எங்கும் பார்க்க முடிகிறது. 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு அடையாளத்தை உருவாக்குதல் காலத்தின் தேவையாக இருந்தது. 2000-ஆம் ஆண்டுக்குபிறகு, அடையாளத்தை அழித்தல் தேவையாகி விட்டது; உதாரணமாக 1990-ஆம் ஆண்டிற்க்குப் பிறகுதான் தலித் இலக்கியம் தோன்றி வளர்ந்தது. 2000 -க்குப் பிறகு தலித் இலக்கியத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை? தங்களால் உருவாக்கப்பட்ட அந்த அடையாளம் தவறென இலக்கிய வாதிகள் நினைக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. பெண்ணிய இலக்கியங்களும்கூட அப்படித்தான் இருக்கிறது. தமிழ் இலக்கியம் உருவாக்கிய அடையாளங்களை இழந்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தத் தேவையை உருவாக்கிய பின்னணியைப் பின் நவீனத்துவப் பின்னணியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


இன்னொன்றையும் இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புகிறேன். நிகழ்காலத் தமிழ்மொழியும் இலக்கியமும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்தில் மட்டும் இல்லை. திரைகடல் தாண்டி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இலங்கையிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; எழுதுகிறார்கள் என்பதை இணையம் ஒவ்வொருநாளும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்நா நிலத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் போனவர்கள் தமிழைப் பேசவும் தமிழில் எழுதவும் ஆசையாக மட்டுமல்ல; வெறியாகவே இருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிவருகிறது. இதனைத் தமிழிலக்கிய மாணவர்களும் வாசகர்களும் விமரிசகர்களும் உணர்ந்தாகவேண்டிய நெருக்கடி இருக்கிறது. எப்போதும் எதிலும் முன்கை எடுக்கும் தமிழகப் படைப்பாளிகள் இதனை உணர்ந்தவர்களாக இல்லை. அவர்கள் தமிழ்ப்பரப்பைத் தாண்டுவதாக இல்லை. இதையொரு பெரிய குறையாகவே சொல்ல விரும்புகிறேன்.

யோகி: பெண்படைப்புகள் குறித்த உங்கள் பார்வை என்ன?

அ. ரா: நிறைய பெண்கள் எழுதுகிறார்கள். பெண்ணியத்தின் சில கூறுகளை உள்வாங்கிக் கொண்டு கவிதை வடிவத்தைத் தங்களின் வெளிப்பாட்டு வடிவமாக நினைக்கிறார்கள். தன்னை வெளிப்படுத்துதல் என்ற நிலைப்பாட்டிற்குக் கவிதைவடிவம் ஏற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தன்னை வெளிப்படுத்துவதோடு நிற்காமல் பெண்களை வெளிப்படுத்த நினைத்தால் வேறு இலக்கிய வடிவங்களுக்குள் நுழைந்தாக வேண்டும்

நாவலில் சிவகாமி, பாமா, சல்மா, உமாமகேஸ்வரி ஆகியோரின் நாவல்கள் இரட்டை மையம் கொண்டவை. அவற்றைக் குடும்ப அமைப்பையும் ஆண் தலைமையும் விளக்கும் சமூகநாவல்கள் என்ற வகைப்பாட்டில் தான் சொல்லவேண்டும். குடும்ப அமைப்பின் மீது விமரிசிக்கும் தொனி ஓங்கிய பெண்ணெழுத்தாக முன்வைக்க முடியவில்லை. 

தமிழில் இன்னும் நல்ல பெண்ணிய சிறுகதையே வரவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும்  வரவில்லை என்றே சொல்வேன். ஓரிருவரைத் தவிர சிறுகதை என்பது இன்னும் பெண் எழுத்தாளர்களுக்கு கைவராத விடயமாகவே இருக்கிறது. அதோடு அதை எப்படி எழுதவேண்டும் என்ற கலையும் அவர்களுக்கு கைவராத ஒன்றாகவே தோன்றுகிறது. எழுதக்கூடியவர்களின் கதையும் கவிதை தன்மையோடுதான் இருக்கிறதே தவிர அதுகதை வடிவமாக இல்லை. தமிழின் பெண் சிறுகதையின் தொடக்கப்புள்ளியான அம்பையின் கதைகளே அப்படித்தான் இருந்தன. குறிப்பிட்ட சூழலில் பெண் என்னவகையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறவளாக இருக்கிறாள் என்பதில் தான் அனைவரும் கவனம் கொள்கின்றனர். தலைமுறை இடைவெளியென்னும் ஒற்றைப்  பிரச்னையைத்தான் மையப்படுத்துகிறார்களே தவிரபெண்ணியம் சார்ந்து குறைவாகத் தான் இருக்கிறது. நாடக எழுத்தில் பெண்களும், பெண்ணியமும் நுழையவே இல்லை.

யோகி: 1990-களுக்குப் பிறகு 2000-ஆம் ஆண்டு வரை பெண்ணிய எழுத்துகள் மிகத் தீவிரமாக எழுதப்பட்டன. பல காத்திரமான விமர்சனங்களுக் கிடையில் உடல்மொழி குறித்தும், பாலியல் குறித்தும் பேசினார்கள். இப்போது பெண்ணிய எழுத்துகளிலும், பெண் எழுத்தாளர்கள் மத்தியிலும் ஒருதோய்வு உள்ளதே?

பெண்ணியத்தில் மூன்றுவகையான நிலைபாடுகள் உள்ளன. உரிமை,  சமத்துவம், விடுதலை. இந்த மூன்று விஷயத்தையும்தான் பிரித்துப் பிரித்துத் தொடர்ந்து பேசுவதும் விவாதிப்பதும் எழுதுவதுமாக இருக்கிறது பெண்ணியம். பெண்ணுக்கு உரிமைவேண்டும் என்றும் பெண்சமத்துவம் வேண்டும் என்ற போராட்டமும் உலகத்தின் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், பெண்விடுதலை என்பதற்கு சொல்லப்படும் விளக்கத்தில் மட்டும் நிறைய இடங்களில், நாடுகளில் சிலசிக்கல்களும் மாற்றங்களும் இருக்கின்றன. அதாவது ஐரோப்பிய சமூகத்திற்கும் ஆசிய சமூகத்திற்கும் பெண்விடுதலை குறித்த வேறுபாடுகள் உள்ளன.

ஐரோப்பிய சமூகம் பிரிந்து வாழக் கூடிய வாழ்க்கையை கவலையோடு நினைப்பதில்லை. ஆண்-பெண் இருபாலருமே அப்படி நினைப்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. பிரிதலைச் சிலநேரங்களில் கொண்டாடக்கூடிய ஒன்றாகவே நினைக்கிறார்கள். ஏனெனில் அங்கு அது சுதந்திர வாழ்வாகக் கருதப்படுகிறது. ஆசிய சமுகம் அப்படிப்பட்டதல்ல. ஒருபெண் ஆணைச் சார்ந்து வாழாமல் இருந்தால்கூட சேர்ந்திருக்கவே விரும்புகிறாள். தன்மீது செலுத்தும் வன்முறையைச் சகித்துக்கொண்டு ஆண் தன்னுடன் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறாள். இங்கே எது விடுதலை என்ற கேள்வி எழுகிறது. ஓர் ஆணை விட்டு விலகுவதுதான் விடுதலையா? என்றுகேள்விக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களும் ஆசிய எழுத்தாளர்களும் சொல்லும் பதில் வெவ்வேறாக இருக்கிறது. உடல் மொழிக்கான பெண்ணிய எழுத்து இவ்வாறுதான் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கிய அவர்களால் தொடர்ந்து அதனோட பயணிக்கமுடியவில்லை. எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான பிரச்னையில் அதுதோய்வடைந்து விடுகிறது.
                                                                                                                                     #############
யோகி: நீங்கள் நாடகத்துறையைச் சேர்ந்த எழுத்தாளராகவும், இருக்கிறீர்கள்? தற்போதைய நவீன நாடகபாணி, கூத்துகலைஞர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலையையும் கலைஞர்களையும் பாதித்துவிட்டதாகச் சொல்கிறார்களே? உங்களின் பார்வை என்ன?

அது உண்மைதான். இந்தப் பாதிப்பு தெரிந்தே நடந்த ஒன்று என்றும் சொல்லலாம். அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பெற்ற ஒன்று என்றும் சொல்லலாம்.  இன்று விரிவாகப் பேசப்படும் தேசிய மனநிலை அல்லது பின்காலனிய மனநிலையைச் சரியாகக் கணித்தவர்களின் திரைமறைவு அரசியலின் வலைப்பின்னல்கள் இதில் இருந்ததாக அப்போதும் நான் எழுதினேன்; இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன்.

1960 - களின் இறுதியில் எழுத்தாக அறிமுகமான நவீன நாடகங்கள் தொடக்கக் காலத்தில் பெரிய அளவு மேடையேற்றங்களைக் காணவில்லை. இந்திய அரசியல் பொருளியல் சூழல்களைப் பேசுவதற்கேற்ற வடிவமாகக் கருதிய இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, ஞான. ராஜ சேகரன், ஜெயந்தன் போன்றோரின் தொடக்க நாடகங்களைக் கவனித்தால் அவைகளின் வெளிப்பாட்டுத்தன்மை குறியீட்டியல், இருத்தலியம், அபத்தவியல், விமரிசன யதார்த்தவாதம் போன்ற நவீனத்துவத்தின் பல அம்சங்களைக் கொண்ட பிரதிகளாக இருந்தன என்பதைக் கவனிக்க முடியும். இந்த நவீனத்துவத்தைத் திருப்பிப்போடும் விதமாக அனைவரையும் பாரம்பரியத்தை நோக்கித் திருப்பிவிட்டது எது எனக் கேட்கத்தோன்றுகிறது. அரசின் கொள்கை முடிவால் நடந்ததா? வெளிநாட்டு நிதிநல்கை நிறுவனங்கள் இந்தப் போக்கைத் தொடங்கிவைத்தனவா என்ற ஐயம் இன்னும் தீர்ந்தபாடில்லை. ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறைதான் தமிழ்நாட்டில் பாரம்பரியக்கூத்தர்களோடு வேலை செய்வதைத் தொடங்கிய அமைப்பு.  

1984 இல் இந்திய அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்திற்குப் பெயர் இளம் இயக்குநர் திட்டம் என்பது பெயர். இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் புதிய நாடகங்கள் தயாரிக்க இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம் மையசங்கீத நாடக அகாடெமி மூலம் பணம் கொடுத்தது. அப்படிப் பணம் கொடுக்கும்போது நவீன நாடக இயக்குநர்கள் அந்தந்த மாநிலப் பாரம்பரியக் கலைவடிவங்களை உள்வாங்கி / பயன்படுத்தி நாடகங்களை மேடையேற்றவேண்டும் என்ற கட்டுப்பாடு ஒன்றை முன் வைத்தது. தமிழக நவீன நாடகக்காரர்களை தெருக்கூத்து, தேவராட்டம், பறையாட்டம், கரகாட்டம், களரி, சிலம்பம் போன்றவற்றை நோக்கி நகரவைத்தது அந்தத்திட்டம் தான். அதனைக் கற்றுக் கொள்வதற்காகச் சிலர் அந்தக் கிராமங்களுக்கே போனார்கள். சிலநேரங்களில் கிராமத்துக்கலைஞர்களை நகரத்துக்கு அழைத்துவந்த ஒரு வாரம் முதல் ஒருமாதம் வரை தங்கவைத்துப் பயிலரங்குகள் மூலம் பலரும் கற்றுக்கொண்டார்கள்.  10 ஆண்டுகள் அத்திட்டம் நடைமுறையில் இருந்தது.

அந்த நேரத்தில் இந்தியாவெங்கும் இருந்த நாடகப்பள்ளிகளும் கூட இந்தப் போக்குடன் ஒத்துப்போயின. பாடத்திட்டங்களில் அதனை இணைத்துக் கொண்டன. அந்த நேரத்தில் நான் மதுரை நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்டேன். பின்னர் புதுவை நாடகப்பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். நாட்டார் கலைவடிவங்களைக் கற்றுக்கொண்டதைப்  நாட்டார்கலையில் இருந்தவர்கள் நவீன நாடக உத்தியைக் கற்றுக்கொண்டார்கள். தங்கள் குடும்பவாரிசுகளை நவீன நாடகக்குழுக்களோடு சேர்ந்து வேலை செய்ய அனுப்பினார்கள். சில கேரளத்துக் கோழிக்கோட்டிலும், புதுவையிலும், டெல்லியிலும் பட்டங்களைப் பெறுவதற்காகவும் சேர்ந்தார்கள். இந்தத்தாக்கம் இருவழிப்பட்டது. இரண்டும் கொடுத்து வாங்கிக் கொண்டன என்றே சொல்லலாம்.   
                                                                                                                                     ##############

யோகி: தமிழ் சிற்றிதழ் சூழலில் வெகுஜனக் கலைகள் பற்றி, குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் ஊடகம் பற்றி அதிகம் பேசப்படாத காலகட்டத்தில் அது சார்ந்து நீங்கள் தொடர்ந்து எழுதினீர்கள். இதற்காக தனியாக ஊடகம் என்றொரு பத்திரிகையும் நடத்தினீர்கள். தற்போதும் இத்துறைகள் சார்ந்து எழுதி வருகிறீர்கள். தற்கால தமிழ் சினிமா சூழல் பற்றிய உங்கள் பார்வையை சுருக்கமாக சொல்ல முடியுமா?

திறனாய்வின் மையம் 1980 - களின் தொடக்கத்தில் பண்பாட்டுத்தளத்தை நோக்கி நகர்ந்த பின்னணியில் தான் வெகுமக்கள் சினிமாவைப் பற்றி எழுதவேண்டும் என்ற நோக்கத்துடன் ஊடகம் இதழை ஆரம்பித்தோம். பண்பாட்டைப்பற்றிப் பேசுவதில் அமெரிக்கப்போக்கு ஒன்றாகவும், ஐரோப்பியப்போக்கு வேறொன்றாகவும் இருந்தன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் ஊடகங்களும் திரள் மக்கள் பண்பாடு (Mass Culture) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி நாட்டாரியல் சடங்குகள், விழாக்கள், நம்பிக்கைகள் காரணமாகத் திரளும் மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளை முக்கியமாகக் கருதிச் சொல்லாடல்களை உருவாக்கினார்கள். ஆனால்  ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் பண்பாடு (Popular Culture) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி நிகழ்காலப் பண்பாடு வெகுமக்களுக்கான கலைவடிவங்களாக இருக்கும் சினிமா, இசைக்கச்சேரிகள், கண்காட்சிகள், கொண்டாட்டங்கள் போன்றன பண்பாட்டை எவ்வாறு உருவாக்கிக் கட்டமைக்கின்றன என்று விவாதித்தார்கள். ஊடகம் இந்தப்பின்னணியில் - புரிதலில் தான் தொடங்கப்பட்டது.  

அந்த இதழின் தேவைக்காக எழுதத் தொடங்கிய நான் தொடர்ந்து வெகுமக்கள் சினிமாவைப் பற்றிப் பேசுபவனாக மாறிப்போய்விட்டேன். ஒரு திரைப்படத்திற்கு வெகுமக்கள் பத்திரிகைகளில்  எழுதப்படும் திரை விமரிசனம் போன்றதல்ல எனது விமரிசனம். கலை மற்றும் ஊடகத்தின் விதிகளையும் நுட்பங்களையும் பயன்படுத்தி இங்கே பல வகையான பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற பொதுவான நம்பிக்கை எனக்கு உண்டு. அப்பண்டங்கள் பல நேரங்களில்  பார்வையாளர்களாகிய நுகர்வோரின் மனநலனைக் கெடுப்பதாகவே இருக்கிறது. மனநலனைக் கெடுக்கும் அப்படங்கள், மூன்று மணி நேரம் திரை அரங்கில் உட்கார்ந்து பார்க்கும் பார்வையாளனின் உடல் நலத்திற்கும் கூட தீங்கு ஏற்படுத்தி விடும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லும் எனது விமரிசனம், ஒரு சினிமாவை அதன் சூழலில் வைத்து விமரிசிக்கிறது. சினிமா என்கிற பிரதியும், அதனோடு பார்வையாளர்கள் கொள்ளும் உறவும் தான் எனக்கு முக்கியம். மற்றவர்களுக்கு சினிமா என்கிற பிரதியில் பங்கேற்கும் கலை மற்றும் ஊடகப் பணியாளர்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.


தற்காலத் தமிழ் சினிமாச் சூழலில் முக்கியமான மாற்றம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. அதனை வரவே ற்கத்தக்க மாற்றம் என்று கூடச் சொல்லலாம். ஒரு நடிகருக்காகப் படம் ஓடும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. நீண்ட காலமாக நடிகர்களின் ஊடகமாக இருந்தது மாறி, இப்போதுதான் அதன் உண்மையான வடிவத்தில் இயக்குநர்களின் ஊடகமாக ஆகியிருக்கிறது. மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித்தின் இயக்கத்தில் தான் நடிக்கத் தயாரென ஒத்துக் கொண்டு ரஜினிகாந்த் ஒப்புக் கொடுத்துள்ளார்.  சிம்புத் தேவனின் அடையாளத்தோடு கூடிய படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். வெளியில் பேசப்படாமல் தயாரிக்கப்படும் காக்காமுட்டை போன்ற சினிமாக்கள் திரளான பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது. தமிழ் வாழ்வைச் சொல்லும் சினிமாவை உருவாக்கவேண்டும்; அவற்றைப் படவிழாக்களுக்கு அனுப்பவேண்டும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்கள். யோகி: ஓர் எழுத்தாளர், பேராசிரியர், நாடகவியளாலர், விமர்சகர் என நீங்கள் பல பாத்திரங்களை ஏற்றவராக இருக்கிறீர்கள்? நீங்கள் விரும்பும் அல்லது நீங்கள் நீங்களாகவே இருக்கும் பாத்திரம் எது?

எழுத்தாளனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்; அந்த ஆசை இன்னும் மாறிவிடவில்லை.  ‘எழுத்து உன்னதம்; அதைச் செய்பவனைச் சமூகமே காப்பாற்ற வேண்டும்’ என நம்பும் எழுத்தாளனாக என்னைக் கட்டமைத்துக் கொள்ள நினைப்பதில்லை. நாடோடியாகவும், பொது ஒழுங்கிலிருந்து விலகியும், எனது கஞ்சிக்காக எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு அலையும் எழுத்தாளர்களை நான் சாகசக்காரர்களாக மட்டுமே நினைக்கிறேன். சாகசக்காரர்கள் எப்போதும் விமரிசனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்; மக்களாட்சி மனநிலைக்கெதிரானவர்களாகவே - அராஜகவாதிகளாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருந்து விட்டுப்போகட்டும். நான் அப்படி அறியப்பட விரும்பியதில்லை. அதே நேரத்தில் நிலவும் அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் முழுவதும் ஒத்தோடுதல் ஒரு எழுத்தாளனின் வேலையல்ல என்றும் புரிந்துவைத்திருக்கிறேன். 

 பலரையும்போல கவிதையில் தான் தொடங்கினேன். கதைகள் கூட எழுதியிருக்கிறேன். தேன்மழை, தாமரை,கணையாழி, தீபம், மனஓசையெனத்  தொடங்கிய பயணத்தைத் தடுத்து நிறுத்தியது  முனைவர் பட்ட ஆய்வு.  புனைவு மனம் குறைந்து அறிவின் பார்ப்பட்ட தர்க்கம் மனத்தை ஆக்கிரமித்துவிட்டது. புதுவைப்பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையில் சேர்ந்தபோது மாணவர்களின் தேவைக்காக நாடகங்களை உருவாக்கத்தொடங்கினேன். கதைகளிலிருந்து - கவிதைகளிலிருந்து - மொழிபெயர்ப்பாக -தழுவலாக எனக் குறுநாடகங்களையும், பெருநாடகங்களையும் உருவாக்கித்தந்தேன். மேடைக்கான நாடக எழுத்தென்பது ஒருவிதத்தில் உருவாக்குவதுதான். அது தொடங்கி நவீனத்துவ தர்க்கம் இடம் பெறும் நாடக எழுத்தாளனாகவும் தர்க்கத்தை முன்வைக்கும் கட்டுரை எழுத்தாளனாகவும் இப்போது அறியப்படுகிறேன். நாடகங்களைப் பற்றிப்பேசியதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்கள், ஊடகங்கள் ஆகியவற்றை வெகுமக்கள் மனநிலையிலிருந்து விமரிசிக்கும் ஒரு விமரிசகனாக மாறிவிட்டேன் என நினைக்கிறேன். 

இப்போது தமிழ் மரபிலிருந்து உருவான விமரிசனப்பார்வையை முன் வைக்கும் பேராசிரியராக அறியப்பட வேண்டும் என்பதை எனது பாத்திரமாக ஆக்கிவிடும் ஆசை இருக்கிறது.  நிகழ்காலக் கலை இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதற்குத் தொல்காப்பிய அழகியலை மையப்படுத்திய ஒரு விமரிசனப் பார்வையை உருவாக்கும் இலட்சியம் இருக்கிறது. தொல் காப்பியம், அரிஸ்டாடிலின் கவிதையியல் - பொயட்டிக்ஸ் - பரதரின் நாட்யசாஸ்திரம் போன்ற செவ்வியல் கலைக்கோட்பாட்டுப் பிரதி என்பதை  உணர்ந்து வருகிறேன். தமிழவனின் அண்மைக் கால எழுத்துகளில் இதைத் தீவிரமாகச் சொல்லி வருகிறார். இந்திரா பார்த்தசாரதியோடு உரையாடும் காலங்களில் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார். அவர்களெல்லாம் நம்பிக்கையாகவும் கோட்பாடாகவும் சொன்னார்கள்.  கோட்பாடாகச் சொன்னால் போதாது. கோட்பாட்டைப் பொருத்திக் காட்ட வேண்டும். இப்போது நான் அதைத் தொடங்கியிருக்கிறேன். அதைச் செய்து முடிக்கவேண்டும். தொல்காப்பியப்பொருட்கோட்பாட்டைக் கவிதைக்கானதாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்தத் திறனாய்வுக்குமான ஒன்றாக அதை வளர்த்தெடுக்க வேண்டும். இந்த ஆசை நிறைவேறினால் போதும்.
ன்றி - அம்ா/ யோகி


No comments :