September 17, 2015

வில்பூட்டுச் சிறுகதை“நவீனச் சிறுகதைகளில் வடிவ ஒழுங்கைத் தேட வேண்டியதில்லை” என்பதை மனம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்றாலும், வடிவ ஒழுங்கில் இருக்கும் கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் மறுப்பதற்கில்லை. தான் எழுதும் சிறுகதையை வடிவ ஒழுங்குடன் எழுதவேண்டுமென நினைக்கும் கதாசிரியர், வடிவ ஒழுங்கிற்காக மட்டும் மெனக்கெடுகிறார் என்பதில்லை.
தான் எழுத நினைத்த உள்ளடக்கத்திலும் வாசகர்களை இணைத்துக் கொள்ளவேண்டுமென நினைப்பார் என்பது எனது அனுமானம். இந்த அனுமானத்தை பாவண்ணன், வண்ணதாசன், பிரபஞ்சன், யுவன் சந்திரசேகர்  போன்ற செவ்வியல் கதைக்காரர்கள் இப்போதும் உறுதி செய்கிறார்கள். இந்த மாதக் காலச்சுவடில் வந்துள்ள மீரான் மைதீனின் இந்தக் கதை - பலாமரம் நிற்கும் புதிய வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்கிறான் - என்றொரு நீளமான தலைப்பிட்டுக்கொண்டுள்ள இந்தக் கதையும் வடிவ ஒழுங்கினாலும், எழுதியிருக்கும் உள்ளடக்கத்தாலும் வாசிக்கும் என்னைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. இவ்விரண்டும் சேர்ந்து மீரானைச் செவ்வியல் கதைக்காரர் எனச் சொல்லச் சொல்கிறது.

தமிழ் இலக்கணங்கள் சொல்லும் பொருள்கோள் என்பது செய்யுளின்/ கவிதைகளின் பொருளை அறிவதற்கான ஒரு வாசிப்புமுறையென நமது ஆசிரியர்கள் பாடம் நடத்தி விட்டதால், அவற்றை அப்படியே மனப்பாடம் செய்து தமிழ் மாணவர்கள் தேர்வுகளில் எழுதி மதிப்பெண்கள் வாங்கிய பிறகு மறந்துவிடுகிறார்கள். ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என வகைப்படுத்தப்படும் ஒவ்வொன்றும் கவிதையைப் பொருள்கொள்ள உதவும் உத்தி என்பதோடு, எந்த இலக்கியவகையையும் பொருள்கொள்ள உதவும் வாசிப்புமுறை என்பதைச் சிறுகதைகளை எடுத்துக் காட்டிவிளக்க வேண்டும். ஒரு இலக்கியப்பிரதியை வாசிப்பதென்பது, அதன் வடிவத்தைக் கண்டுபிடித்து வாசிப்பது என்பதை முதலில் புரிந்துகொண்டால் போதுமானது. ஒன்றின் வடிவத்தை அறிய அதன் தொடக்கப் புள்ளியும் நிறைவுப்புள்ளியும் அடையாளப்படுத்தப் படவேண்டும். இரண்டு புள்ளிகளையும் இணைக்கும் கோடு எப்படி வரையப்பட்டது என்று புரிந்துவிட்டது என்றால், அந்த இலக்கியப்பிரதியின் வடிவம் புரிந்துவிடும். அந்த வாசிப்பு முறையைத் தனியாகச் செய்யலாம்.


இப்போது மீரான் மைதீனின் கதையைப் பார்க்கலாம்.

கடைசியாக அவன் வீடு மாற உத்தேசித்தபோது வீட்டில் அவனும் அவளும் இரண்டு பிள்ளைகளும் கூடவே நான்கு பூனைகளும் இருந்தனர். அவன் பூனைகளுக்குத் தனியாகப் பெயர் வைத்திருக்கவில்லையென்றாலும் வெள்ளையன், கருப்பி, சின்னவெள்ளையன், புலி என்பதுதான் அவற்றின் அடையாளப்பெயர்களாக இருந்தன

இப்படித் தொடங்கும் மீரான் மைதீனின் கதை,

பொருட்களைக் கட்டத்துவங்கிய இரவில் பவனத்தின் வராந்தாவில் அமர்ந்திருந்த அவன், வாழ்ந்த வீடுகளையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான். தீ அறுவாளோடு நடந்துபோய்க்கொண்டிருந்தாள். முறிக்கப்பட்ட பவனத்தின் சேம்பை மரம் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அவன் அருகே வெள்ளையனும் கருப்பியும் சின்னவெள்ளையனும் புலியும் சுற்றிக் கிடந்தனர். கருப்பி சூலியாக இருக்கிறாள். இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் சில குட்டிகள் போடக்கூடும். அவன் பலாமரம் நிற்கும் புதிய வீட்டுக்கு எல்லாவற்றையும் கொண்டுபோகும் யோசனையில் ஆழ்ந்திருக்கிறான்.

என்று முடிகிறது. வில்லி ஒரு பக்கத்தில் போடப்பட்ட மூன்று முடிச்சுகளைப் போல முடியும்போதும் அதே மூன்றுமுடிச்சுகள். இந்த ஆரம்பத்தையும் முடிவையும் வாசிக்கும்போது இடையில் என்ன நடந்திருக்கும் என ஒருவரால் யூகிக்கவே முடியாது. நாணேற்றிய வில்லில் பூட்டப்பட்ட அம்பு நாணிலிருந்து கிளம்பாததுபோல எதுவும் நடந்துவிடவில்லை. ஆனால் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தபோது வீடு மாற நினைத்தான். முடியும் போது வீடுமாறத் தயாராகிவிட்டான். அதே பரிவாரங் களுடன். ஆமாம் அதே மனிதன், அதே பூனைகள். ஆனால் அவன் இன்னும் நகர்ந்துவிடவில்லை. ஆனால் போக வேண்டிய வீட்டைப் பார்த்து முடிவு செய்துவிட்டான். அந்த வீட்டின் பின்புறம் பலாமரம் நிற்கிறது என்பதைக் கதையின் தலைப்பு சொல்கிறது. பலாமரத்தில் பலாக்காய்களும் பழங்களும் கிடைக்கும். அத்தோடு அந்த மரத்தில் மிசிருகளும் இருக்கும். ஒன்றிரண்டல்ல. கூட்டங்கூட்டமாக அவை திரியும். அந்த மிசிருகளோடு கூடிய பலாமரம் நிற்கும் வீட்டைத் தேடிய பயணத்தின்போது புதிய வீடும், அதன் சூழலும் தரப்போகும் சுகதுக்கங்கள் மட்டுமே அவனின் நினைவுகள் அல்ல.

அவனது நினைவென்னும் அம்பின் பயணம் தங்கித் தங்கி வந்த ஒவ்வொருவீடாக நினைத்துக்கொள்கிறது. தந்தையின் வீட்டிலிருந்து சொற்பமான பொருட்களுடன் போய்ச் சேர்ந்த முதல்வீடு மேற்குப் பார்த்த வீடு. மேற்குப் பார்த்த வீட்டைத் திறக்காமலேயே கிழக்குவாசல் வழியாகச் சேர்த்த பொருட்கள் தொடங்கி, தன்னை மிரட்ட வந்து துப்பாக்கியைக் காட்டிய காவல் அதிகாரிக்கு முன்னால் வந்து நின்று புடவையைச் சுருட்டித் தலைமேலே தூக்கி, “ உனக்க தோக்கெடுத்து இஞ்ச சுடுலே ” என்று சவால் விட்ட ‘தீ’ யின் வீட்டிற்கு முன்பிருந்த பண்ணையார் வீடு பெருமிழப்பாக நினைவில் வந்து போகிறது. இப்போதிருக்கும் பவனத்தின் நினைவுகளோடு, அதற்கு முன்பிருந்த அவ்வளவாக விரும்பாத மாடிவீடும்கூட நினைவில் வந்துபோகிறது.  இப்போதிருக்கும் அந்தப் பவனத்தின் மீதுகொண்ட காதலும் அன்பும் அதன் முன்னால் நின்ற சேம்பமரங்களின் மீதுகொண்ட பிரியத்தின் நீட்சி என்பதைப் புரியவைக்க முடியாமல் போனதன் விளைவே அந்த மரங்கள் வெட்டப்பட்டது. உடமஸ்தான் அந்த மரங்களை வெட்டியபோது வீடுமாறிவிடும் எண்ணமும் வேகம் பிடித்ததென நினைவுகள் நேராகச் செல்லும் அம்பு போல, ஆனால் ஆங்காங்கே நின்று நிதானித்துச் செல்லும்  காற்றில் மிதக்கும் அம்புபோலச்சென்று முடிகிறது. தங்குமிடத் திலெல்லாம் எவையெல்லாம் சேர்ந்தன; எவையெல்லாம் விலகின என்றும் அசைபோட்டுப் பார்க்கிறது. முத்தமிட்டுப் பிரிந்த படுக்கையறைச்சுவரும் தடவித் தடவிப் பிரிந்த காரும் அந்த அசைவுகளில் புகைப்படிமங்களாக அசைந்து விலகின்றன.

இந்த நினைவுகளும் படிமங்களும் தான் கதை. இந்தக் கதையைப் படிக்கும் ஒரு நடுத்தரவர்க்க மனிதனுக்கு அவையெல்லாம் தனது நினைவுகளாகவும், அசைவுகளாகவும், படிமங்களுமாக வந்து போவதைத் தடுக்கமுடியாது. எனக்கு வந்தன. என்னைப்போலப் பலருக்கும் வந்துபோகவே செய்யும்.

கடந்த 10 ஆண்டுகளாகச் சொந்தவீடு என்ற கட்டிப்போட்ட நினைவுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கும்கூட மதுரையிலிரண்டு, புதுச்சேரியில் மூன்று, நெல்லையில் இரண்டு, வார்சாவில் ஒன்று என எட்டு வீடுகளுக்கு மாறிய அனுபவங்களும் ஒவ்வொரு வீட்டோடும் கொண்ட பிணைப்புகளுமென நினைவுகள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். முன்னிரண்டு பின்னிரண்டென நான்கு வேப்ப மரத்தோடு பல்கலைக்கழக ஆய்வாளர் குடியிருப்பில் தான் என் மகளுக்கான ஊஞ்சலைக் கட்டியிருந்தேன். மதுரை கே.கே. நகரிலிருந்த மேற்குப் பார்த்த வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து தான் மதுரை நண்பர்கள் உலகக் கலை இலக்கியம் பற்றிய விவாதங்களையும் பியர் பாட்டில்களையும் திறப்பார்கள்.  காலைக்கடனுக்குக் கண்மாய்க்குப் போவதில் இருந்த ஆர்வம் அந்த வீட்டிலும் தொடர்ந்தது.

புதுச்சேரி முத்தியால் பேட்டை வீட்டிலிருந்து கைலியைக் கட்டிக்கொண்டு மீனவக் குப்பத்தின் வழியே கடல் தண்ணிக்குள் நடந்துபோய் நின்று சூரிய உதயம் பார்த்ததும், கி.ரா.வின் நாசுக்குத்தனத்தை ரசித்தபடி தென்னந்தோப்புக்குள் கதைபேசிச் சிரித்ததும் வந்துபோகின்றன. லாசுப்பேட்டை வீடுகள், வசதிகூடியபோது கண்டுபிடித்த வசதியான வீடுகள். நெல்லை வந்தபோது வீடுகள் விசாலமாகவே கிடைத்தன. சாதியின் இருப்பு சூழக் கிடைத்த அந்த வீடுகள் சொந்தவீட்டுக் கனவை விரைவுபடுத்தின. ஆம்  நாம் தேடிய வீடுகளும் விலகிய வீடுகளும் பற்றிய நினைவுகளைச் சிதைக்கும் சொந்தவீடு இன்னொரு சிறை. ஆனால் பாதுகாப்பான சிறை.

மீரானின் இந்தக் கதையின் வடிவம் ஒரு வில்பூட்டு வடிவம். அம்பை ஏவிவிடுவதற்கான நாணை வில்லின் ஒருமுனையில் கட்டியிறுக்கிக்கொண்டு அம்பு செல்லவேண்டிய தூரம் மற்றும் பாதைக்கேற்ப இன்னொரு முனையில் இழுத்துக் கட்டுவான் வில்லாளி. வில்லாளி கட்டிய விதமே - நாணிற்கு அளித்த அசைவுத்திறனே அம்பின் திசையைத் தீர்மானிக்கும். அந்தத் தீர்மானிப்பில் அம்பை நாணின் எந்த இடத்தில் வைத்து இழுக்கிறான் என்ற கைநுட்பத்திற்கும் இடமுண்டு. அதுபோன்றதொரு வேலைநுட்பம் கொண்டதே வில்பூட்டுக் கதைவடிவத்தின் சிறப்பு. அப்படியான சிறப்பான வடிவத்தோடு அது உருவாக்கித் தரும் அனுபவம் வாசிப்பவர்களை அனுபவப்பகிர்வு என்பதாக மட்டும் நிறுத்திவிடாமல், வீடென்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல என்பதோடு மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதையும் சேர்த்தே சிந்திக்கச் செய்கிறது. கட்டிய கட்டடத்தோடு மரங்களும் மரங்களில் ஓடிவிளையாடும் அணில்களும் பறவைகளும் மிசிருகளும் கொண்டதாக வீடு இருக்க வேண்டும் என்பதாகவும் காட்டுகிறது. மனிதர்களோடு உறவுகொள்ள முடியாத மனிதன் தாவரங்களோடும் விலங்குகளோடும் பறவைகளோடும் கொள்ளும் உறவால் அந்த இழப்பை ஈடுகட்டலாமல்லவா?

================================================================

மீரான் மைதீன்/  பலாமரம் நிற்கும் புதிய வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்கிறான்/ காலச்சுவடு/ செப்டம்பர், 2015/ பக். 54-59 


No comments :