இச்சையைத் தவிர்க்கும் புனிதப் பசுக்கள் :எஸ்.செந்தில்குமாரின் புத்தன் சொல்லாத பதில்.


ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று கதைகள். காலச்சுவடில் ஒரு கதை. உயிர்மையில் ஒரு கதை. பழைய ஆனந்தவிகடனின் சாயலைத் தொடரும் ஜன்னலில் ஒரு கதை என மூன்றுகதைகள் ஓர் எழுத்தாளருக்கு அச்சாவது அவருக்கும் ஆச்சரியமாகவே இருந்திருக்கும்.
முதலில் வாசித்தது காலச்சுவடில் வந்த கதை. தலைப்பு: கண்மலர்*.
இப்படியாக நகர்கிறது அவர்களின் - மொட்டைபோடும் நாவிதர்கள், காதுகுத்தும் ஆசாரிகளின் -வாழ்க்கை என்பதைச் சொல்லும் எழுத்து. வாசித்துமுடித்தபோது. சிறுகதையின் இயல்புகள் எதுவுமில்லாமல் அவரது நாவலின் - காலகண்டத்தின் பகுதியையே நினைவூட்டியது. ஆனால் காலச்சுவடில் சிறுகதை என்று அச்சாகியிருந்தது.

உயிர்மையில் வந்திருந்த கதையை வாசிக்கத் தொடங்கும் முன் அவரது இன்னொரு கதை அச்சாகியிருந்த தகவலை அவரது நண்பரொருவர் முகநூலில் தெரிவித்திருந்தார். அதற்காகவே ஜன்னல் பத்திரிகையையும் வாங்கிப் படிக்கவேண்டியதாகிவிட்டது. அந்தக் கதையின் தலைப்பு நிர்மலாவின் சைக்கிள் **. (சமூகத்தின் ஜாளரம் என இந்த இதழ்-ஜன்னல்- விளம்பரப்படுத்திக்கொண்டாலும் மதன் ஆசிரியராக இருந்த ஆனந்தவிகடன் போலவே இருப்பதால் ஒன்றிரண்டு இதழைப் பார்த்துவிட்டுப் படிப்பதை நிறுத்திவிட்டேன். பல ஆயிரம்பேர் படிக்கும் வெகுமக்கள் பத்திரிகைக்கு எழுதும்போது நமது தீவிர எழுத்தாளர்களின் எழுத்து மாறும் மாயத்தைப் படிக்க வேண்டும் என்றால் இந்தக் கதையைப் படித்துப்பாருங்கள். கதைநிகழ்வுவெளியைத் தேர்வு செய்வதிலும் பாத்திரங்களை வர்ணிப்பதற்கான மொழியையும் புத்தம்புதிதாக ஆக்கிக்கொள்கிறார்கள். சடசடவென நிகழ்வுகளை அடுக்கும் வேகமும் கூடப் புத்தம்புதிதாக இருக்கிறது. நத்தையின் வேகத்தில் நகரும் எஸ். செந்தில்குமாரிடம் இந்த வேகத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகமும் எழுகிறது. இந்த வேகம் இவர்களே எடுப்பதா? அல்லது வெகுமக்கள் இதழின் ஆசிரியர் குழு அப்படியொரு வேகமெடுக்கும்படி உத்வேகம் உண்டாக்குகிறார்களா? என்பதுதான் அந்தச் சந்தேகம்.)

மூன்றாவதாகவே உயிர்மையில் வந்த அந்தக் கதையைப் படித்தேன்.ஆகஸ்டு உயிர்மையில் வந்துள்ள யுவன் சந்திரசேகரின் கதையும், ஆத்மார்த்தியின் கதையையும் வாசித்தபின்பு கடைசியாகத் தான் எஸ். செந்தில்குமாரின் அந்தக் கதையை - புத்தன் சொல்லாத பதில் *** -படித்தேன்.

எஸ். செந்தில்குமாரின் மூன்று கதைகளையும் இரண்டுவார இடைவெளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதால் இந்த மூன்று கதைகளும் அடுத்தடுத்தோ அல்லது ஒரு மாதத்திற்குள்ளோ எழுதியிருப்பாரென்று நினைக்க வேண்டியதில்லை. எந்த வரிசையிலும் எழுதியிருக்கலாம். வாசித்த இந்த மூன்று கதைகளிலும் நிதானமும் நவீன விசாரிப்புத் தளமும் கொண்ட கதை புத்தன் சொல்லாத பதில். படித்தவுடன் சட்டென்று நிகழ்காலத்துப் புனிதபசுக்கள் பலரை நினைவூட்டத் தொடங்கியதுதான் அதன் சிறப்பு. தலைப்பில் இருக்கும் புத்தனின் தொடர்ச்சியாக இந்திய மனத்திற்குள் அலையும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும், கறுப்புக் காந்தியான காமராஜரும் முதலில் நினைவுக்கு வந்தனர். அவர்களோடு சமீபத்தில் இணைந்த அப்துல் கலாமும் வேகமாக இணைந்துகொண்டார். அம்மூவரைத் தொடர்ந்து தமிழர்களின் வாழ்க்கையில் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்களாகப் பாவனை செய்த எம்.ஜி.ராமச்சந்திரனும், அவரது வாரிசான ஜெ.ஜெயலலிதாவும் கூட நிழலாடினார்கள். அதற்கான காரணத்தைப் பின்னர் பேசலாம். முதலில் கதை பற்றிய சிறு அறிமுகத்தைத் தரலாம்.

இந்தக் கதையின் மொழிநடை எளிய விவரணைகளால் விரிகின்றது:

“தங்கள் செயலால் பெரும்பிழையொன்று நடந்துவிட்டது என்பதை உணர்ந்து வரப்போகும் ஆபத்திலிருந்து தப்பிவிட நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணையும் பெண்ணையும் - தந்தையையும் மகளையும்- முன்னிறுத்தி வளரும் கதை. கதையின் நிகழ்காலம் நமது நிகழ்காலமல்ல. அதனை வரலாற்றுக் காலம் என்றுகூடச் சொல்ல முடியாது. புத்தன் வாழ்ந்த தொல்பழங்காலம். தன் முன்னால் நடந்தனவற்றைக் கண்டு மற்றவர்களுக்கு விரிக்கும் நடப்பியல் பாணிக்கதை. புத்தன் காலத்தை நிகழ்காலத்துக் கதாசிரியரொருவர் எப்படி நேரடிக்காட்சியாகச் சொல்ல முடியும்? ஆனால் சொல்லியிருக்கிறார். புதுமைப் பித்தனின் அகல்யாவில் இப்படியான நேரடிக் காட்சிச் சித்திரிப்பை வாசித்திருக்கக்கூடும். அதுபோன்றதொரு நேரடிக் காட்சிச் சித்திரங்களால் நகர்த்தியுள்ளார் கதாசிரியர். கடந்தகாலத்தைச் சொல்கிறேன் என்ற பதற்றமே இல்லாமல் நகர்வதில் தேர்ந்த எழுத்தின் சாயல் வெளிப்படுகிறது.
 
கடந்த ஏழுநாட்களில் தாங்கள் வந்த கிராமங்களிலும் சாவடிகளிலும் ஊர்மன்றங்களிலும் சிறுநகரத்திலும் புத்தன் இறந்த சேதியை பலரும் பலவாறு பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் கேட்டனர். புத்தன் இறந்துபோனது ஊர்ஜிதமானது. அவரைக்காப்பாற்ற முடியவில்லை. சாப்பிட்ட உணவு விஷமாகி விஷத்தை முறிக்கமுடியாது இறந்துபோனார் என்று பேசிக் கொண்டார்கள். அவர் சாப்பிட்ட இரவு உணவைத் தயாரித்துக் கொடுத்தது தான் தான் என்றும் தங்களது வீட்டில்தான் அவர் தங்கி இரவு உணவை உண்டார் என்பதையும் சாந்தினி நினைக்கும்போது அவளுக்கு அச்சம் ஏற்பட்டது.
 
கதையின் இரண்டாவது பத்தியாக இருக்கும் இந்தப் பத்தியையே முதல்பத்தியாகக் கருதி வாசிக்கத் தொடங்கினேன். (அச்சிட்டுள்ள முதல் பத்தியை இதற்கு அடுத்த பகுதியாக வைத்திருக்கலாம் ; வைக்காமல் கூட விட்டுவிடலாம். எஸ். செந்தில்குமாரின் கதைகளில் இப்படிப்பட்ட குறைகள் பல உண்டு. வாக்கியங்களை இடம் மாற்றிப் போடுவதும், சொற்களை முன்பின்னாக வைப்பதுமான குறைகள். தேவைப்படாத பத்திகளை எழுதுவது என அந்தக்குறைகளைப்பட்டியலிடலாம். காலச் சுவடில் வந்துள்ள கண்மலர் கதையில் இந்தக் குறைகள் அதிகம் உள்ளன. இதுவும் இருக்கட்டும் என்று தான் கதையை வாசிக்க வேண்டியுள்ளது.)
********
உயிர்மையில் வந்துள்ள இந்தக் கதையை வாசிக்க விரும்புபவர்களுக்கு சித்தார்த்தன் புத்தனான கதை தெரிந்திருக்க வேண்டும் என்பது முன் நிபந்தனை. சித்தார்த்தன் தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துபோய்ப் போதி மரத்தடியில் ஞானம்பெற்றபின் அலைந்து திரிந்தான்; முதலில் அவனது கருத்துக்கு உடன்பட்டோர் அவனது சீடர்கள் ஆனார்கள்; அவர்களோடு ஊர் ஊராய்த் திரிந்து மனிதர்களைத் தனது கருத்துகளின் வசமாக்கிக் கொண்டே வந்தான். அகிம்சை, கொல்லாமையெனும் உயர்தத்துவத்தை உலகத்திற்குத் தந்த பௌத்தமதத்தை உருவாக்கினான்; புத்தனானான் என்பது நமக்குத் தெரிந்த கதை.
 
சித்தார்த்தான், புத்தனான இந்தக் கதையில் அவனது பற்றறுத்த உறுதி திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதுண்டு. ‘தான், தனது’ என்று நினைப்பதின் தொடக்கம் வளர்ச்சியடையும்போது ஆசையாக மாறுகிறது; ஆசை பேராசையாக ஆகும்போது ஆக்கிரமிப்பு மனம் உண்டாகும்; ஆக்கிரமிப்பு மனம் தான் போரைத் தூண்டுகிறது என்பது புத்தனின் தரிசனம். ஆக போரில்லாத உலகத்தை உண்டாக்க முதலில் தான், தனது என்று நினைப்பதை விடவேண்டும். அந்த நினைப்பை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டாக்கும் அமைப்பு அவனது குடும்பம். குடும்ப அமைப்பு உருவாகக் காரணம் உடல் இச்சை - காமம். காமமே அனைத்துக்கும் காரணம் என்பது அவனது விளக்கம். இந்தப் பின்னணி தெரிந்து கதையை வாசிக்கும்போது கதையின் விவாதத் தளம் விரியும்.

புத்தனின் மரணமும் அதற்குக்காரணமான சுந்தா -சாந்திலினி என்ற தந்தை- மகளின் பதற்றமும் என்று கதை ஆரம்பிக்கிறது. அவர்களின் பதற்றம், குற்றவுணர்வின் உச்சத்தை அடைந்து தங்களைத் தாங்களே தண்டித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியது என்பதாகக் கதையை நகர்த்தியிருந்தால், எஸ். செந்தில்குமாரின் கதை நவீன கதையாக ஆகியிருக்காது; தொன்மக் கதையொன்றைத் திரும்பவும் சொன்ன கதையாக ஆகியிருக்கும். அதற்குமாறாக அவர்களின் குற்றவுணர்வு அர்த்தமற்றது என்பதை உணரவைப்பதற்காக இன்னொரு கதைக்குள் நகர்கிறது.

மேகலை என்னும் பெண்ணைத் தங்களின் மனைவியாகக் கொண்ட ஆமூதன், ஆபூதன் என்ற சகோதரர்களின் குடும்பக் கதை. ஒரு பெண்ணை இருவர் மணந்து குழந்தை பெற்றுக் கொண்டு, ஒவ்வொருவரின் சாயலும், குணமும் அந்தக் குழந்தையிடத்தில் இருப்பதை ஏற்றுக் கொண்டு வாழும் இயல்பான வாழ்க்கையின் கதை. ஆமூதனும் ஆபூதனும் காமத்தை அறுத்தெறிந்தவர்கள் அல்ல; காமத்தை இயல்பானதாக நினைத்தவர்கள்; ஏற்றுக்கொண்டவர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டால் உந்தப்பட்டு ஒரு பெண்ணை உடமையாக நினைக்காமல் ஒருபெண்ணை இருவரும் இணையாக்கித் தனித்தனியாக வாழ்பவர்கள். ஒருவன் சாந்தமானவன்; இன்னொருவன் கோபமானவன். உடைமையின் பலன், உழைப்பு, இன்பதுன்ப நுகர்வு என வாழ்வின் அனைத்தையும் ஏற்று வாழ்பவர்கள். சித்தார்த்தனைப் போலப் புத்தனாக ஆசைப்பட்டவர்கள் அல்ல என்பது முக்கியம். அவர்களில் ஒருவன் தான் புத்தனிடம் பதில் இல்லாத முதல் கேள்வியைக் கேட்டவன்.
“நீங்கள் எதற்காக உங்களது வீட்டையும் மனைவியையும் மகனையும் ஊரையும் உறவுகளையும் துறந்துவிட்டு வந்தீர்கள். அவர்கள் யாரும் உங்களை தேடி வரவில்லையா?”என்று கேட்டேன். அவன் சிரித்துக் கொண்டான். பிறகு “ சிறுபிள்ளைத்தனமான கேள்விதான். ஆனால் புத்தர் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தது அவரிடம் பதில் இல்லையென்று தானே பொருள்”
“புத்தர் பதில் சொல்லாத இரண்டாவது கேள்வி இது”
“ முதல் கேள்வியை நீங்கள் கேட்டீர்களா?”
“ இல்லை. அவரது சீடன் ப்ரீத்திவி கேட்டான். அவர் பெற்ற குழந்தைகள் பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டான்.
பதில் இல்லாத முதல் கேள்வியைக் கேட்ட புத்தன் - ஆபுதன் சந்திப்பின்போது சுந்தாவும் சாந்தினியும் அருகில் இருக்கவில்லை. ஆனால் இரண்டாவது பதில் இல்லாத கேள்வியைக் கேட்ட ப்ரீத்திவியை இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் சந்தித்திருக்கிறார்கள். அவன் கேட்டபோது அவர்களும் இருந்தார்கள். அப்போதும் அவரிடம் பதில் இல்லை. பதில் இல்லாத கேள்விகளை வைத்திருப்பவர்களே மகான்களாக ஆகிறார்கள். அவர்களை மகான்களாகவும் மகாத்மாக்களாகவும் புனிதப் பசுக்களாகவும் காப்பாற்ற இந்த உலகம் தரும் விலை எவ்வளவு? இதுதான் கதை எழுப்பும் முக்கியமான கேள்வி. நவீனமனத்திற்குள் திரும்பத்திரும்ப அலையடிக்கும் கேள்வி.
புத்தரே கூட காமத்தைத் துறந்தவர் தானா? இச்சையை விட்டவர் தானா? என்ற ஐயத்தைக் கதை எழுப்புகிறது. சாந்தினியின் குழந்தையிடத்தில் புத்தனின் சாயல் இருக்கக்கூடும் என்று கருதியே அவனது சீடன் ப்ரித்தீவி இருவரையும் தேடி வருகிறான். வந்து கண்டவுடன்,
“நான் யாசகன் தான். ஆனால் கௌதமபுத்தனின் சீடன். கௌதமர் தனது குழந்தைகளைப் பார்க்கவரமாட்டார். நான் அவரது குழந்தைகளைப் பார்க்கவேண்டுமென விரும்புகிறேன். என்னை அனுமதியுங்கள்” என்று கதறத்தொடங்கினான்.
அப்படியானால் சாந்தினி தயாரித்த உணவில் விஷம்? உணவு விஷமானதா? விஷம் வைக்கப்பட்டதா? முன்பு பதில் இல்லாத கேள்வியைக் கேட்ட ஆபூதன் - புத்தர் சந்திப்பில் என்ன நிகழ்ந்திருக்கும்?
இப்படியான ஐயங்களையும் சந்தேகங்களையும் கதை தொடர்ச்சியாக எழுப்புகிறது.
 
ஆசையை அறுத்தெறி; பற்றைத் துற; குறிப்பாகத் தனது மனைவி; தனது குழந்தையென்ற பற்றை விலக்கிவிடு எனச் சொல்லியதன் மூலம் புனிதராக ஆனவர் புத்தர். அவரைப் போலக் காமத்தை வென்றவராகக் காட்டிய காந்தி மகாத்மா ஆகிறார். கல்யாணமே செய்துகொள்ளாமல் நாட்டுக் குழைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட காமராஜர், அப்துல்கலாம் என அனைவரும் ஒன்றிணைவது காமத்தை - இயல்பான உடலிச்சையைத் துறத்தலில் தான். காமத்தின் விளைவான குழந்தையா? குட்டியா? தலைவருக்கும், தலைவிக்கும் என அடிமட்டத்தொண்டன் கேட்கும் கேள்வியில் தொங்கிக் கொள்கிறது புனிதப்பசுவின் ஒளிவட்டம்.
 
உடலிச்சையைத் துறந்துவிட வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. அந்த ஆசை நிறைவேறாத ஆசை என்று தெரிந்தபின்னும் அதைத் துரத்திக் கொண்டிருக்கவே மனித மனம் விரும்புகிறது. அப்படித் துரத்தியவர்களாக அறியப்படுபவர்களே வழிகாட்டிகளாக ஆகிறார்கள்.
காமம் இயல்பானது; பெருந்திரளின் சாதாரண வாழ்க்கையின் பாற்பட்டது. எல்லோரும் வாழும் வாழ்க்கையின் பகுதி காமம். ஆனால் அதைத்துறத்தலே இங்கு உன்னதமாக நினைக்கப்படுகிறது. ஏன் இந்த முரண்? கதை முடியும்போது ஏன் ஆசையைத் துறக்கவேண்டும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நேரத்திலும், சாந்தினியின் தந்தை ‘நான் கௌதம புத்தன் பின்பாகச் சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கு வழிவிடு’ என்று சொல்லிவிட்டு அந்த மாயமானைத் துரத்துவதாக இருப்பது அதனால் தான்?
காமம் பற்றிய விவாதங்களால் தமிழ்ப் புனைவுலகம் நிரம்பி வழிகிறது.
===========================================================
*கண்மலர், காலச்சுவடு இதழ்188, ஆகஸ்டு 2015/பக். 52-58
** ஜன்னல் 1:17/பக். 36-40
*** உயிர்மை இதழ் 144, ஆகஸ்டு 2015 / பக்.33-39


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்