காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்பு



குடும்பம், சமூக அமைப்பின் மிகச்சிறிய நுண் அலகு. எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் விரும்புகின்றன. மதம், இனம், மொழி, பண்பாடு என்பதான காரணிகளால் வேறுபாடுகள் கொண்ட எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையைத் தொலைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் அவை ஏற்படுத்திக் கொண்ட நடைமுறையின் பெயர் திருமணம். திருமணத்தின் வழியாக நிகழும் ஆண் பெண் உறவின் முதன்மை நோக்கம் மனித உற்பத்தி ; வாரிசுகளை உருவாக்குதல். வாரிசுகளின் செயல்பாடுகள் பண்பாட்டின் அடையாளங்கள்.


ஆண் - பெண் உறவைக் குறிக்கத் தமிழில் இருக்கும் வசீகரமான சொல் காமம். காமத்தைக் காமம் என்று சொல்லலாமா? என்று தயங்கிய நவீன சமூகம் இன்னொரு சொல்லால் சொல்லிப்பார்க்கிறது. காமத்தைக் காதல் என்னும் சொல்லால் வெளிப்படையாகப் பேசிக்களிப்பதில் எல்லாச் சமூகத்திற்கும் குறைந்ததல்ல தமிழ்மொழி பேசும் தமிழ்ச்சமூகம். உலகம் முழுக்க இலக்கியங்களோ, காதலைக் காமமாகவும், காமத்தைக் காதலாகவும் எழுதிப் பார்த்து விவாதிக்கின்றன. தமிழிலும் நடந்துகொண்டே இருக்கும் ஒரு புள்ளையை - இழையை - இமையமும் எழுதிப் பார்த்துள்ளார். இமையத்தின் நான்காவது நாவலான எங்கதெ வேறெதன் பக்கமும் திசைதிருப்பாமல் முழுமையாக அந்த விவாதத்திற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று நிறுத்த முயன்றிருக்கிறது.

“ அவன் எதுக்கு வந்தான்? என்னா சொல்லிட்டுப் போறான் பாத்தியா? என்னெப் பத்தி அவனுக்கு எப்பிடித் தெரியும்? நீ சொன்னியா?”

“ எனக்கு அவன் ஆபீசரு. மாவட்ட அதிகாரி. ஊட்டுக்கு வந்தவங்கிட்ட எதுக்கு வந்தன்னு கேக்க முடியுமா?”ன்னு கேட்டா.

“ அவன் பேச்சும் செய்கையும் சரியில்ல. நமக்கிடையில அவன் நெருப்ப வைக்கிறான். அவன் சனி கிரகம். கோளாற உண்டாக்குவான். குடும்பத்துல கொழப்பத்த உண்டாக்குவான்னு சொன்னன்.


நாவலில் இடம்பெற்றுள்ள இந்த உரையாடல் பகுதியில் ’நீ’யென ஒரு பெண்ணை நோக்கிப் பேசுபவன் கதை சொல்லி. அவன் பெயர் விநாயகம். இந்தப்பெயர் நாவலில் ஒரேயொரு தடவை மட்டுமே இடம் பெற்றுள்ளது.  ஆனால் கமலா என்ற அந்தப் பெண்ணின் பெயர் 110 பக்க நாவலில் பக்கத்திற்கு இரண்டு தடவையென்ற அளவில் இடம்பெற்றுள்ளது. விநாயகத்தால் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி விடுவான் என எச்சரிக்கையோடு சொல்லப்படும் பாத்திரம் மாவட்டக் கல்வியதிகாரியாக -சி.இ.ஓ.வாக வருபவரின் வயது 57. ஏழெட்டு மாதத்தில் ஓய்வுபெறப் போகும் நிலையில் தான் நாவலுக்குள் வருகிறார். அவருக்கும் நாவலில் பெயரில்லை.  

தனக்கான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற தெளிவு இல்லாமலும், மூன்று தங்கச்சிகளின் திருமணம், தொடங்கிக் குடும்ப விவசாயம், வரவுசெலவு என அதன் உள்விவகாரங்களில் பெரிதும் அக்கறை காட்டாமல் 33 வயதைக் கடந்துவிட்ட தன் வாழ்க்கைக்குள் கமலா என்னும் விதவை நுழைந்து பாடாய்ப் படுத்திய கதையைத் தான் எங்கதெ எனச் சொல்கிறான். அவளது உடல் தரும் சுகத்தின் பொருட்டு 90 மைல்களுக்கு அப்பால் இருந்த தனது கிராமத்திலிருந்து  கடலூருக்கு அலைந்த கதையில் வெறும் காமம் மட்டுமில்லை; அதையும் தாண்டி அவளை உடமையெனக் கருதிய மனம் இருந்தது எனக் கதையைக் கட்டிச் சொல்கிறான். தன் கதையைச் சொல்வதாகச் சொன்னாலும், அவன் சொல்வதெல்லாம் கமலா.. கமலா..கமலா என உருகியுருகிப் பெயர் சொல்லி- வர்ணித்து- குதூகலித்து -கோபித்து - பாராட்டி- சிரித்து -சினந்து சொல்லும் அவளின் கதைதான். அவளால் அவன் அடையும் வேதனைகளின் கதை


விநாயகத்தோடு கமலா கொண்ட உறவுக்கு ஊரும் சமூகமும் தரும் பாத்திரப்பெயர் வைப்பாட்டி. இந்த வார்த்தை நாவலில் ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை கல்யாணமே செய்துகொள்ளாத ஒருவனின் வாழ்க்கைக்குள் நுழையும் ஒருத்தியை - அவன் வயதொத்த ஒருத்தியை- வைப்பாட்டியென ஏன் சொல்லவேண்டும்; காதலியென்று சொல்லக் கூடாதா? காதல் காமமாகக் கனிந்தபின்பு மனைவியாகிவிடும் வாய்ப்பும் இருக்கத்தானே செய்கிறது? அப்படியான நகர்வைத் தடுப்பது எது? எதையும் உடைமையாக்கிச் சொந்தம் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாது இருக்கும் கமலாவின் மனமா? அல்லது கமலாவின் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளா? திருமணவாழ்க்கை என்பது ஒரு பெண்ணுக்கு ஒருமுறைதான் என வலியுறுத்தியுள்ள சமூகநடைமுறையா?  கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைய இருக்கும் பெண்பிள்ளைகளையும் மறந்து, சிக்கல் இல்லாத வாழ்க்கைக்காக மேலதிகாரிக்கு அடிபணிந்து போக நினைக்கும்போது அவள் மனம் உருவாக்கிக் கொள்ளும் சமாதானங்களை என்னவென்று சொல்வது? கமலாவின் பாத்திரநிலையை எந்தச் சொல்லால் சொல்வது? காமக்கிழத்தி ? அப்படிச் சொல்லிவிட்டு அவன் ஒதுங்கியிருக்கலாம்.  


ஏழெட்டு ஆண்டுகளாகத் தனது சொந்தம் எனக் கருதிக் கொண்டு அந்தரங்க உரிமையாய் அனுபவித்துக் கொண்டிருக்கும் கமலா தனது கையைவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறாள் என்ற ஆதங்கம் ஏற்படும்போது அவனிடம் ஏற்படுவது பதைபதைப்பு மட்டுமல்ல; கொலை வெறி. அவளையும் கொன்று தன்னையும் மாய்த்துக்கொள்ள நினைக்கும் கொலைவெறி. ஆனாலும் அவன் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்வதே நடப்பில் நிகழக்கூடியது. ஆனால் எழுத்தாளன் கொலையை அனுமதிப்பதில்லை. 

“ கமலா” ஒம்போது வருசம் கழிச்சி அவள் பேரச் சொன்னன்.

“ நீ யார்கூட வேணுமின்னாலும் இரு. எப்பிடின்னாலும் இரு. ஆனா உசுரோட இரு. இதான் என் ஆச.” ரகசியமா குனிஞ்சி அவ காதில் சொன்னன்.

சொல்லிவிட்டுக் கிளம்பியவன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான் என்பதாக நாவல் முடிகிறது.


வெளிப்படையாகச் சமூகம் அங்கீகரிக்காத ஆண்- பெண் உறவுக்குள்  ஒரு பெண்ணின் இருப்பை ஆண்மைய நோக்கில்  எழுதியிருக்கிறார் இமையம்.  விநாயகமே தன் மனத்தையும் சொல்கிறான். கமலாவின் மனம் இப்படித்தான் உருவாகியிருக்கிறது என்றும் சொல்லிக் கொள்கிறான். அவளது நகாசுத்தனம், தவிர்ப்பது - அனுமதிப்பது என ஒவ்வொன்றிலும் அவளின் முடிவெடுக்கும் திறன் போன்றன தனக்கில்லை என்ற கழிவிரக்கத்தில் அல்லது இயலாமையில் மனம் விலகிவிடச் சொன்னாலும் தடுத்து நிறுத்துவது அவளிடம் கிடைத்த உரிமை; உடல்வழியான உரிமை. அந்த உரிமையை அனுபவிப்பதன் மூலமாக, அவளின் முடிவுகளெல்லாம் தன்னை மையமிட்டதாக இருக்கவேண்டும் என நினைக்கிறது விநாயகத்தின் மனம். ஒருவிதத்தில் இது எதிர்பார்ப்பு சார்ந்தது. அந்த எதிர்பார்ப்பு ஆண்மையின் நிலைபாடு.  எங்கதெ  எழுப்பும் விவாதங்கள் முழுமையும் ஒருபெண்ணின் உளவியல் சார்ந்தவை போலத் தோன்றினாலும், கணவன் இல்லாத பெண்ணின் வகை மாதிரியாகவும், காமந்தீரா இளமையோளாகவும் கட்டமைக்கப்பட்ட  கமலாவின் மீது குற்றம் சுமத்தும் தொனிகொண்ட உரையாடலையும், தனிமொழியையும் கொண்டது விநாயகத்தின் தன்னிலை. அது  கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. சொந்த வாழ்க்கையில் செய்யவேண்டிய எதையும் செய்யத் தவறிவிட்டேன் என்ற அங்கலாய்ப்புகளை குறைவாகவும், கமலாவின் சேர்க்கையால் தவிக்கும் மனத்தவிப்பை அதிகமாகவும் மொழியும் கதைசொல்லித் தனது நிலைபாட்டை நியாயப்படுத்தும் வாதங்களின் பக்கமே அதிகமாக நிற்கிறான். இது முன்னிலையில் கதைசொல்லும் எழுத்தின் சிக்கல். அந்தச் சிக்கலை இமையம் இந்த நாவலில் சந்தித்திருக்கிறார். வட்டார வழக்கின் இயல்பை மிகைப்படுத்த உதவும்  பழமொழி, சொலவடை போன்றவைகளால் நிரப்பப்படும் விநாயகத்தின் பேச்சு அவனது தரப்பை நிறுவ உதவும் கருவிகளாக மாறிவிடுகின்றன. மொழியைக் கருவியாக்கிக்  கமலாவின் செயல்பாடுகளால் தத்தளிக்கும் அவனின் மனதையே முன்வைக்கிறான். 


இந்திய/ தமிழ்ச் சமூகத்தில் ஆணின் வாழ்க்கைக்குள் நுழையும் ஒரு பெண் என்னவாக நினைக்கப்படுகிறாள் என்பதைத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கும்விதமான தனிமொழி நாவல் முழுக்க விரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பெண் ஆணின் உடைமைப் பொருள்; அவன் நினைத்தால் எடுத்துப் புழங்குவான்; அதற்காகவே அவள் அல்லது  அது இருக்கிறது என நினைக்கும் மனநிலையை உருவாக்கி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் தனிமொழி. தனது தனித்துவமான ஆளுமையால் தன்னைப் பற்றிய சித்திரத்தை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்ட கமலா போன்ற ஒரு பெண்ணை உடைமைப் பொருளாக மட்டும் நினைப்பதும் சரியல்ல என்றும் அவனது மனம் சொல்கிறது. அப்படியானால் கிடைக்கும்போது எடுத்து ரசித்து நுகரும் பண்டமா அவள்? தாலி கட்டிய உரிமையைப் பெறாததன் காரணமாக ஆவேசமும் ஆத்திரமும் கொள்கிற ஆண் மனம் தனக்கான நுகர்பண்டம் இன்னொருவரால் நுகரப்படுவதை ஏற்கத் தயங்குவதாக கதை விவரிக்கிறது. இந்த நிலையை ஆணின் மனநிலை என்றுகூட நினைக்க வேண்டியதில்லை. இருபாலாரின் பொதுநிலைப்பட்ட ஒன்றுதான். ஆணின் நோக்கில் சொல்லப்பட்ட கதையென்பதால் இங்கே  ஆணின் மனநிலையாக நாவல் முன்நிறுத்துகிறது. 


தமிழின் புனைகதைப் பரப்பில் தனது மூன்று நாவல்களாலும்(கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல்) நான்கு தொகுதிகளிலுள்ள ( மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவுச்சோறு) அரைசதத்திற்கும் அதிகமான சிறுகதைகளாலும் பெத்தவன் என்னும் குறுநாவல் மூலமும் தமிழின் முக்கியமான புனைகதையாசிரியராக நிறுவிக்கொண்டவர் இமையம். அவரது மொத்தக் கதைகளிலும் அதிகமும் எழுதப் பெற்றவர்கள் பெண்களே. வயது சார்ந்து சிறுமிகளும் குழந்தைகளுமே அதிகம். வெளிசார்ந்து கிராமங்களில் வாழ்பவர்கள். ஆண்களின் உழைப்பை நம்பி, அவர்களைச் சார்ந்தே வாழவேண்டுமென நினைக்காத - தன்னுழைப்பில்- சொந்தக்காலில் நிற்கும்  விளிம்புநிலைப் பெண்களே அதிகம். இதுவரை அவர் உருவாக்கி வைத்திருந்த இந்த அடையாளத்தைத் திட்டமிட்டு அழிக்கும்விதமாக இந்தநாவல் எழுதப்பட்டுள்ளது. கிராமத்து வாழ்க்கைக்குள் இருந்தாலும், படித்த பெண்ணாக, நடுத்தரவர்க்கக் வாழ்க்கையும் குணங்களும் கொண்ட ஒரு பெண்ணாகக் கமலாவை எழுதியிருக்கிறார். இந்த எழுத்து சமூக நடைமுறைக்குள் மனிதர்களை நிறுத்துபவர் என்ற இடத்திலிருந்து, ஆண் -பெண் உறவு சார்ந்த உளவியல் விவாதங்களை எழுப்பும் திசைக்குள் இமையத்தை நகர்த்தியிருக்கிறது. இத்தகைய நகர்வு தமிழின் முன்னோடிப் புனைகதை ஆசிரியர்கள் பலரின் பயணமுறையே.  


பேச்சுமொழியின் லாவகத்தைக் கொஞ்சமும் குறைத்துவிடாமல், தனிக் குரலாகவும், உரையாடலாகவும் கதையை நகர்த்துவது என்பது இமையத்தின் தனித்துவமான மொழிநடை. பேச்சுமொழிக்குள் அவர் நிரப்பிக் காட்டும் பழமொழிகளும் சொலவடைகளும், உவமைகளும் ஆச்சரியமூட்டுபவை. பேச்சுமொழியின் சாத்தியங்களைத் திறமாகக் கையாள்வதில் இமையத்தின் தேர்ச்சி முதல் நாவலான கோவேறு கழுதைகளில் தொடங்கி ஒவ்வொரு கதையிலும் கூடிக்கூடி வந்த ஒன்று.  இந்நாவலில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தொகுத்து வைத்துக் கொண்டு திட்டமிட்டுப் பயன்படுத்துகிறாரோ என்று நினைக்குமளவுப் பயன்படுத்தியுள்ளார். இதனைத் தாண்ட அல்லது மறுக்க இன்னொரு நாவலை அவரே எழுத வேண்டும்.

============================================================

நன்றி; தீராநதி/ ஆகஸ்டு/ 2015

கருத்துகள்

ko.punniavan இவ்வாறு கூறியுள்ளார்…
காமத்தைத்தான் காதல் என்று மென்மையான பெயரிட்டு அழைக்கிறார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். நம் சமூகம் உடலுறவை ஒரு
ஒரு பண்பாடற்ற செயல்பாடு என்று உள்வாங்கிக்கொண்டதால் காமம் என்ற சொல்லைக் கொச்சையாகவே கருதுகிறார்கள். காதலும் காமமும் வெவ்வேறான சமூகப் புரிதல் அல்லவா?

கோ.புண்ணியவான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்