August 10, 2015

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கிஎது கதை எழுதும்படி தூண்டுகிறது ?

இந்தக் கேள்விக்குப் புதிதாக எழுதத்தொடங்கும் புனைகதையாசிரியர்கள்  சொல்கிற பதில் : மனிதர்கள் மற்றும் மனிதர்கள்

தன்னைப்பாதித்தவர்களையும் பாதிப்பு உண்டாக்கத்தக்க வகையில் செயல்பட்ட/ சொல்லப்பட்ட மனிதர்களையும் எழுதுவதாகக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவதை அப்படியே ஏற்கவும் முடியாது; தள்ளவும் முடியாது.
 ‘எழுதுபவர்கள் தங்களையே எழுதிக்காட்டுகிறார்கள்’ என்பது ஒரு குற்றச்சாட்டாகவும் நம்பிக்கையாகவும் நீண்டு கொண்டிருப்பதே காரணம். “இதில் வரும் எல்லாப் பாத்திரங்களும் நான்தான்” என ஜெயகாந்தன் சொன்னதாக வாசித்தது நினைவில் இருக்கிறது. ஜெயகாந்தனைப் போலச் சொல்பவர்கள் பெரும்பாலும் நிகழ்கால வாழ்க்கையின் சாயலை நேர்க்காட்சியான விவரங்களால் எழுதும் எழுத்தாளர்கள். அவர்கள் முதலில் கண்டதைச் சொல்கிறேன்; தெளிந்ததைப் பதிவுசெய்கிறேன் என்பதில் தொடங்கிப் பின்னர்த் தன்னை ஒவ்வொருவரிடத்திலும் வைத்து எழுதிக்காட்டுதலாக மாறிக்கொள்கிறார்கள். 

தன்னையோ, தனது சாயலையோ, தன்னோடு தொடர்பில் வருபவர்களையோ குறிப்பிட்ட வெளி மற்றும் காலத்தில் வைத்து எழுதும்போது ஒருவகைக் கதை உருவாக்கம் நடந்துவிடும். ‘தன்’ னின் எல்லைகள் விரியும்போது குடும்பம், வாழிடம், பணியிடம் பயணித்த வெளிகளெனப் பரப்பிக் கொண்டு எழுதுவது அலுத்துப் போகும்போது எழுத்தும் மாறும்.  சந்தித்த மனிதர்களைச் சந்தித்த கணத்தில் எழுதிக் காட்டவேண்டுமென நினைத்து எழுதப்படும் கதைகளாக உருமாறும்.  அதன் வழியாக அவை நுட்பமான கதைகளாக மாறிக்கொள்கின்றன.  நுட்பமாக இருந்தாலும் நுட்பம் குறைவாகத் தட்டையாக இருந்தாலும் இவ்வகை எழுத்துகள் நடப்பியல் பாணி (Realism) எழுத்துகளாகவே அறியப்படுகின்றன.

 கொஞ்சம் மிகைத்தன்மை கொண்ட வருணனையாக இருந்தாலும்  நேசமித்திரனின் இயக்கி கதையின் ஆரம்ப வரிகளும் நடப்பியல் தன்மையிலேயே இருக்கின்றன.   

இலவ மரம் நிறைய கண்கள் விட்டு முடைந்த மிகப்பெரிய கோழிப்பஞ்சாரம் போல தன் நிழலைப் பரப்பி இருந்தது. குளிப்பறையின் கோணிப்படல் திறந்து இசக்கி வெளியேறுவது கேட்டது. அவன் பீடியை நுனி நெறித்துப் பற்ற வைத்தான்.

என்பது கதையின் தொடக்கம். கதையில் வரும் பாத்திரங்கள் இசக்கியும் அவனும் தான். அவன் இசக்கியின் கணவன் என்று நம்பிக்கையைத் தரும் காட்சிச் சித்திரம் உடனடியாக முறிக்கப்படும்போது நடப்பியலிலிருந்து விலக்கப்படுகிறது.  

மலைப்பாம்பு தன் இரையை நெரிப்பது தோற்கும்விதமாய் நரம்புகள் புடைத்த உடல் திரண்டு ஹஹ்ஹ்ஹ்ஹஹோய் என்ற பெரும் சப்தமெழ அவளை நெஞ்சில் உதைத்தாள். கட்டிலில் இருந்து தூரப்போய் சுவரில் மோதி வீழ்ந்தான்.

மோகமூட்டும் அவள் மேனியை இறுக்கிப் பிணைத்துத் திருகியவனை எட்டி உதைத்து வெளியேறும்போது அவளை இழுத்துப் பிடித்து அடக்கிவிடவேண்டுமென நினைப்பது ஆண்மையின் நடப்புமனம். அப்படி செயல்பட்டதாக எழுதப்பட்டிருந்தால், கதை நடப்பியல் கதையாக நகர்ந்திருக்கும். நேசமித்திரன் அப்படி எழுதவில்லை. தன்னை விட்டு விலகிப் போகும்போது பொறுமைகாத்து ஒதுங்கிக் கொள்ளும்  ஓர் ஆணாக அவளருகில் படுத்துக்கிடந்தவனை எழுதுகிறார்.

அவனை விலக்கியெறியும் வல்லமையை இயக்கிக்குத் தந்தது மயிலின் அகவுதல் என எழுதும் கதைசொல்லி, அவள் மீது அவனுக்கிருக்கும் பிரேமைக்கும் பிடிக்கும் தளர்வுக்குமான ஒரு காரணக்குறிபைத் தரும் வரியொன்றைக் கதையின் வருணனைப்போக்கிலேயே எழுதுவிடுகிறார்.

சௌந்தர்யமும் மென்மையும் கொண்ட விரல்களால் மயில்களை விஷம் வைத்துக்கொல்லவும் முடிகிறது என்பது நம்பகத்திற்கு நெருக்கமாய் இல்லைதான்.

இந்தவரியை அவன் மனம் எப்போதும் ஓட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது. அந்தக் காரணமே மயிலின் அகவல் கேட்டுக் குதித்துக்கிளம்பும் அவளை அவன் கண்டுகொள்ளாமல் இருக்கச் செய்கிறது. இந்தக் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பதில் தொடங்குகிறது மந்திர நடப்பியல் (Magical Realism).  கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட அவன், அவள் திரும்பவும் வருவாள் என்று நம்புகிறவனாகவோ, வந்து கூடிக்காமம் தீர்க்கும் உடலின் சூட்டைத் தருவாள் என்று காத்திருப்பவனாகவோ கதை வளர்க்கப்படவில்லை. அப்படி வளர்க்கப்பட்டிருந்தால் இந்தக் கதை நடப்பியலின் இன்னொரு பிரிவான உளவியல் நடப்பாக மாறியிருக்கக் கூடும்.

கதைசொல்லி இயக்கியைக் கடந்தகாலத்திற்குள்ளும் குறிப்பற்ற வெளிகளுக்குள்ளும்  கவனமாக நகர்த்திப் போகிறார். அவனை விட்டு விலகிப்போன இயக்கி, நினைவுகளின் வழியாகப் பின்னோக்கிப் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கிறாள்.

 எழுதப்பட்ட கதைகளை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னாள் எனக்கு நிறையக் கதைகள் சொன்னவர் எனது பெரியம்மா. கொல்லைப்புறத்து வேப்பமரம், கமலைக்கல் பூவரசு, வேலிக்காத்தான் செடிப்படல், தாழையூத்துப் புளியமரம், வடக்கூரணி ஏற்றம், வீரங்கரட்டுச் சுணை, ஊத்துக்காட்டுக் குறிஞ்சித்திட்டு என ஒவ்வொன்றுக்கும் ஒன்றிரண்டு கதைகள் அவரிடம் இருந்தது. மரங்களிலிருந்து முனிக்கதைகள் என்றால் வேலிப்படல்களிலிருந்து பேய்க்கதைகள் கிளம்பும். நீர்நிலைகளிலிருந்து கன்னிமார் கிளம்பிவருவார்கள். எவர் எங்கிருந்து வந்தாலும் அவர்கள் நடந்துவந்ததாகப் பெரியம்மா சொன்னதில்லை. ஆடையுடுத்திக்கொண்டு வாயுரூபத்தில் இசையொலிக்கவே ஒவ்வொருவரும் வருவார்கள். எல்லாப்பேய்களுக்கும் ஏன் கால்கள் இருப்பதில்லை என்று கதைகள் சொல்லும் பெரியம்மாவிடம் கேட்கத்தவறுவதில்லை. நீபேயைப் பார்த்திருக்கிறாயா? என்று திருப்பிக் கேட்பாரென்று ஒவ்வொரு தடவையும் எதிர்பார்ப்பேன். ஆனால் அவர் அதற்குப் பதிலாகக் ”கதைக்குக் காலுண்டா?” என்று தான் கேட்பார்.  கூடுவிட்டுக் கூடுப் பாயும்; தேசம்விட்டுத்  தேசம் செல்லும் பேயின் கால்களைப்போலத்தான் கதையின் கால்களும். வெளியில் தெரியாத அந்தக் கால்கள், தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட பயணங்களும் நினைப்புகளும் கொண்டவை எனப் புரிந்துகொள்ள வேண்டும்.நேசமித்திரனின் கதையில் இசக்கி பற்றிய நினைவுகள் அப்படித்தான் அலைகின்றன.

அது அவர்தான் என்று நம்பவே பலருக்கு மாதக்கணக்காயிற்று. அது எப்போதும்போல ஒரு வதந்தியாக இருந்துவிடாதா? என்று ஏங்கினவர்களில் இவனும் ஒருவன் . ஆனால் அது கனவல்ல எல்லாம் முடிந்தபிறகு குளிப்பாட்டும் போதுதான் அவர்கள் அதைப்பார்த்தார்கள். ஆம் இடது நெஞ்சில் இசக்கி என்று பச்சைகுத்தியிருந்தது.

இடது நெஞ்சில் இசைக்கியைப் பச்சை குத்திய இந்த  ‘அவர்’ யாராக இருக்கக் கூடும் என்ற கேள்வியின் வழியாகப் பயணம் செய்யும் வாசகர் அவரவர்கள் அவரவர் அறிதலுக்கேற்ப ஒருவரை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். நீண்டகாலம் காவல்துறைக்குக் கடுக்காய்கொடுத்த வீரப்பன் என ஒருவர் நினைத்துக் கொள்ளலாம். திரைப்படங்கள் வழியாகக் கொள்ளைக்காரர்களின் கதைகளை அறிந்திருப்பவர் மலையூர் மம்பட்டியான் அல்லது சீவலப்பேரி பாண்டி எனப் புரிந்துகொள்ளலாம். பெரும்படையை எதிர்கொண்டு தனது உயிரைப் பணயம் வைத்துப் படைகட்டிய ஒரு மாவீரனின் இடது நெஞ்சு என நினைப்பவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என நினைத்துக்கொள்ளலாம்.  தனது காமத்தைத் தீர்த்துக்கொள்ள இன்னொருவனின் மனைவியான இசக்கியை எப்படி அணுகுவது என்று தெரியாமல்  கடைசிவரைக் கட்டைப்பிரம்மச்சாரியாகவே இருந்து கொலைசெய்யப்பட்ட உள்ளூர் வஸ்தாதுவாகக்கூட இருக்கலாம். இப்படியான வாசிப்புக்கு வாய்ப்பை வழங்கும் உத்தி எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் நிகழ்வின் வெளி எதுவெனச் சொல்லாத அந்த ஒன்றுதான்.

தனது விளைநிலத்திற்கு மட்டுமல்லாமல் தனது கிராமத்திற்கே மயில்கள் வரக்கூடாது என்ற நினைப்பு இசக்கிக்குள் இருக்கிறது. அப்படி வரும் மயிலினங்கள் அழிக்கப்பட வேண்டியவை என்று கங்கணம் கட்டி - இலக்குவைத்துச் செயல்படுபவள் இசக்கி.  அந்த இலக்கு எண்ணிக்கை 96

ஒவ்வொரு ஆண்மயில் சாகும்போதும் ஓர் இறகை நினைவாய் எடுத்து வைப்பாள். சேமித்தவற்றை ஒரு பெரிய சாமரம் போல் 7 வரிசைகள் அடுக்கி விசிறிக்கோர்த்துக் கொண்டு வருகிறாள். அவ்வரிசையை முழுமை செய்ய 96 இறகுகள் வேண்டும் போல் இருந்தது.

கண்ணுக்குக் கவர்ச்சியையும் அழகின் ரகசியங்களையும் தேக்கிவைத்திருக்கும் மயில்களின் வரவையும் அவற்றின் அகவலோசையையும் வேளாண்குடிகளின் விதைப்பையும் விளைச்சலையும் அழிக்கவந்த ஒன்றாகவே இசக்கியின் மனம் தேக்கிவைத்திருக்கிறது.இசக்கியின் இலக்கான 96 என்ற எண்ணுக்கும் ஒரு தொன்மக்குறிப்பு இருக்கிறது. அது இவனது மூதாதை ஒருவன் வழங்கிய நிவந்தத்தத்தோடு தொடர்புடையது.

அந்தி கவியத்துவங்கி விட்டதை உணர்ந்து ஆடுகளை எண்ணத் துவங்கினான். எண்ணி முடிந்ததும் சாவா மூவா பேராடுகள் என்ற வரி தற்செயலாய் உதட்டில் அமர்ந்தது. தொரட்டி வைத்து அணைத்துச் சேர்த்து வீடு நோக்கி முடுக்கினான். தன் பாட்டன் பள்ளிப் படைக்கு 96 சாவா மூவா பேராடுகள் நிவந்தம் அளித்த லெமூரின் கல்வெட்டு வரிகள் தான் ஒவ்வொரு முறையும் இவனுக்கு பால்கோர்த்த முலைக் காம்புகளின் நிறத்தில் மையம் கொண்ட மயிற் பீலிகளை பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.

சௌந்தர்யத்தின் திகைப்பாகக் காட்சியளிக்கும் முலைக்காம்பைச் சுற்றிய வண்ணக் கலவையை மயிற்பீலியோடு இணைத்துப் பார்க்கும் மனம், நிவந்தமாக அளித்த 96 ஆடுகள் பற்றிய சொல் தொடரையும் உச்சரிக்கிறது. நிவந்தமாக அளிக்கப்படும் ஆடுகள் கொல்லப்படும் என்பது பொதுநிலை. ஆனால் பள்ளிப்படைக்குக் கொடுக்கப்படும் நிவந்தம் கொல்லப் படாதனவாக தப்பிக்கக் கூடியன. அந்தக் குறிப்பு வெளிப்படும் விதமாகவே அவற்றிற்குச் சாவா மூவா ஆடுகள் எனப் பெயர். சாவும் இல்லாமல் மூப்பும் இல்லாமல் உயிர்வாழும் ஆடுகள். ஆடுகளுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு என்று ஏன் நினைக்கவேண்டும். சாவாமூவா மனிதர்களும் சாத்தியமாகக் கூடலாம் அல்லவா?  சாவா மூவா மனுஷியான இசக்கி தனது வேளாண்குடியின் தானியத்தைக் காத்துவைக்கத் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறாள்.

இப்படிக்கதையை வாசிக்கவேண்டுமென்பதற்கான குறிப்புகளைத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்பவராகக் கதைசொல்லி விலகியிருக்கலாம். அப்படி விலகியிருந்தால், காலில்லாத கதை எழுதியவராக நினைக்கப்படும் வாய்ப்பிருக்கிறது என்று கதைசொல்லிக்கு உறைக்கிறது. உடனே அதற்குக் காலுண்டு என்று சொல்லி நிலத்தில் ஊன்றி நிறுத்திவிடவும் நினைக்கிறார். அதற்கான வரிகளாகக் கடைசி வாக்கியங்களை இப்படி எழுதுகிறார்:

தன்னிச்சையாய் அந்த 96 சாவா மூவா பேராடுகள் எந்த வனத்தில் திரிந்துகொண்டிருக்கும் என்ற அபத்தமான கேள்வி மின்னி அக்கணத்திலேயே உறைந்தது.

ஒரு மந்திர நடப்பியல் கதையின் அர்த்தம் என்பது அது உருவாக்கும் அபத்தநிலையில் தான் தங்கியுள்ளது. அதை உணர்ந்தே எழுதியுள்ளவராக வெளிப்பட்டுள்ளார் நேசமித்திரன். கோணங்கியின் தொடக்ககால மந்திர நடப்பியல் கதைகளில் வெளிப்படாத புரிதல் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.நேசமித்திரன் / இயக்கி, கல்குதிரை,23/180-182

No comments :