August 11, 2015

நம்பிக்கையளித்த இரண்டு நாட்கள்:தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்னை கோட்டூர்புரத்தில் செயல்படுகிறது . அண்ணாநூலகம் பக்கத்தில் இருக்கிறது. இணையத்தில் தமிழின் என்னவெல்லாம் இருக்கின்றன; என்னவெல்லாம் இருக்கவேண்டும்; இணையத் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அவற்றை எப்படித் தருவது போன்றவற்றை விவாதிக்கலாம்; இரண்டு நாட்கள் முழுமையாக இருந்து கலந்துரையாடல் செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பார்த்தேன். அழைப்பில்  இரண்டு மாதங்களுக்கு முன்பு இக்கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்திய ஆட்சிப்பணியாளர் திரு த.உதயசந்திரனின் ஒப்பம் இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கையூட்டும் தகவல்களே அழைப்பை ஏற்க முதன்மைக்காரணம்.
ஆகஸ்டு முதல் இரண்டாம் தேதிகளில் நடக்க இருந்த நிகழ்வுகள் முன்னாள் குடியரசுத்தலைவர் அ. ப. ஜெ. அப்துல்கலாமின் மரணத்தினால் ஒருவாரம் தள்ளி 8, 9 - சனி, ஞாயிறு- நடந்தது நம்பிக்கையோடு ஒப்புக்கொடுத்து வந்தேன்.  நம்பிக்கை வீண் போகவில்லை

தொடக்க நிகழ்வில் திரு. த. உதயசந்திரனின் உரை வானவில்லின் வண்ணங்கள் எனக் கவித்துவமாகத் தொடங்கி ஏழு தலைப்புகளில் விவாதங்களுக்கான  முன்வைப்புகளை தனது உரையில் முன் வைத்தார். தொடர்ச்சியாக மூன்று இடங்களில் தனித்தனி அமர்வுகள். 1 எண்மியமாக்கம் 2 கணினி மொழியியல், மொழித்தொழில் நுட்பம் என்ற இரண்டு குழுவினர் மூன்று அமர்வுகளில் விரிவாக விவாதித்து செயல்திட்டங்களைத் தயாரித்தார்கள். 3. பொதுவள ஊடகப்பரப்புரை என்னும் பொருளில் ஒரு குழுவினர் இரண்டு அமர்வுகளில் செயல்திட்டங்களை உருவாக்கினார்கள். 4 கற்றல் கற்பித்தல் என்னும் பொருளில் ஒரு குழுவினர் இரண்டு அமர்வுகளில் விவாதித்து செயல் திட்டங்களை உருவாக்கினார்கள். நிறைவு அமர்வு திரும்பவும் பொது அமர்வாக மாற்றப்பட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் உருவாக்கிய செயல்திட்டங்களை முன்வைத்தனர். அனைத்தும் பொதுவில் திரும்பவும் விவாதிக்கப்பட்டன. விவாதம் முழுவதும் அமர்ந்திருந்த இயக்குநர் தனது முன்னெடுப்புகளும் செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்பதை விளக்கிப் பேசினார். இதுவரை இந்தக் கழகம் தன்னை ஒரு பல்கலைக்கழகம்போலப் பாடங்கள் தயாரித்து அனுப்பிவிட்டுத் தேர்வுகள் நடத்தும் அமைப்புபோலச் செயல்பட்டது; இனி அப்படி  மட்டும் செயல்படாது என்றதோடு இந்தக் கழகத்தைப் பொறுத்தவரை நான் இரண்டு மாதக்குழந்தைதான்; ஆனால் தொடர்ந்து அழுது அடம்பிடிக்கும் குழந்தையாக இருக்கப்போகிறேன் என்று சொன்னபோது நம்பிக்கை கூடியது.
120 பேர் பங்கேற்கலாம் என்று தொடங்கி 220 ஆக மாறி 300 பேர்வரை கலந்துகொண்ட இரண்டு நாள் நிகழ்வுகளையும் திட்டமிட்டுப் பிரித்து ஒருங்கிணைப்புக்குழுக்களை உருவாக்கியதோடு அரசின் பல்வேறு பொறுப்புகளிலிருக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள் 17 பேர் வந்து கலந்துகொள்ளும்படியும் செய்திருந்தார். தகவல் தொழில்நுட்பம், கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, ஊரகவளர்ச்சித்துறை, பதிவுகள் மற்றும் புள்ளியியல் துறைகளின் அதிகாரிகள் இருந்தார்கள்; கவனித்தார்கள்; கேட்டார்கள்; கருத்துக் கூறினார்கள் என்பதைப் பார்த்தேன். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக எனப் பிற மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து நேரில் சிலர் வந்திருந்தனர். சிலர் காணொளி வழியாக உரையாற்றினர். ஆனால் இலங்கையிலிருந்து பேராசிரியர்கள் ஒருவரும் ஏனோ அழைக்கப்படவில்லை.
 ஓராண்டுக்கு முன்பு இதுபோன்றதொரு கலந்துரையாடலைத் தமிழியல் பாடத் திட்டங்களை உருவாக்குவதற்காகத் தமிழ்நாடளவில் எமது பல்கலைக்கழகத்தில் நடத்தினேன். அதைவிடக் கூடுதலாகப் பயனளிக்கும் அளவில் இந்த இரண்டுநாள் அமர்வுகள் இருந்தன என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். நான் நடத்திய விவாதங்களின் தொடர்ச்சியாக எதுவும் நடக்கவில்லை என்பது எனது அனுபவம். சாத்தியமாக்கும் அதிகாரம் என்னிடத்தில் இல்லை என்பது முக்கியக்காரணம். பல்கலைக்கழக அளவிலும் மாநில அளவிலும் அதிகாரத்திலிருந்தவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை; தொடர் நிகழ்வுகளைக் கோரவில்லை. என்னைப்போலத் தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் தோல்வியடைய மாட்டார் என்பது உறுதி. காரணம் அவரிடம் அதிகாரமிருக்கிறது; செயல்திட்டமிருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு  மேலாகக் கணினியைப் பயன்படுத்துகிறேன். பத்தாண்டுகளாகக் கையால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். 2007 இல் இணையத்திற்குள் எனது எழுத்துகளை ஏற்றும் வேலையைத் தொடங்கியவன். எனது வலைப்பூ [அ.ராமசாமி எழுத்துகள் http://ramasamywritings.blogspot.in/ ] 2007 வில் பதிவுகள் ஆரம்பம். முதல் கட்டுரை நகல்களின் பெருக்கம் என்பது.  இணையத்தில் மூலங்கள் குறைவு; நகல்களே அதிகம். ஒருவர் செய்ததைக் கொஞ்சம் மாற்றித் தாங்களும் மூல ஆசிரியர்கள் என்பதாகக் காட்டிக் கொண்டாலும் நகல்களின் பெருக்கங்கள் அதிகம் தான். தமிழ் இணையப்பதிவுகள் சொல்லியது சொல்லல் என்னும் வகைப்பாடு கொண்டவை. இது எனது 430 பதிவு. இணைய நெடுஞ்சாலையில் தினசரிப் பயணி நான். போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகப் பணியில் இருந்த காலத்தில் அங்கு கிடைத்த முழுமையான -வேகமான -இலவச இணையவசதி என்னை அதில் முழுநேரப் பயணியாக மாற்றிவிட்டது. இனி அதிலிருந்து விலகித் துறவுகொள்ளுதல் சாத்தியமில்லை.  எனது தொடர் பயணங்களால் எனக்குக் கிடைத்த பயன்பாடுகளும் தொடர்புகளும் நட்புகளும் பொழுதுபோக்கும் சொல்ல முடியாதவை. இந்த அனுபவத்தோடு இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் பொது நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்றதோடு இரண்டு குழுக்களிலும் பங்கெடுத்து எனது ஆலோசனைகளை முன்வைத்துள்ளேன். பங்கேற்புக்குப் பின் நம்பிக்கை கூடியுள்ளது
 போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழை மூன்றாவது மொழியாகக் கற்பித்த அனுபவத்தைக் கற்றல் கற்பித்தல் குழுவில் பங்கேற்றுப் பகிர்ந்துகொண்டதோடு எல்லாவகையான தமிழ்மொழிக் கல்விக்கும் பொதுவான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொன்னேன். அக்குழு விவாதங்களில் வழக்கம்போல மொழியியல் ஆசிரியர்களுக்கும், மரபான இலக்கண அடிப்படைகளைத் தக்கவைக்க நினைக்கும் மொழியாசியரியர்களுக்கும் உரசல்கள் நடக்கவே செய்தன. மொழிக்கல்வியில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரைவான நடவடிக்கைகள் தேவை. (மொழிக்கல்வி குறித்த எனது அனுபவங்களையும் முன்வைப்புகளையும் தனியாக எழுதவேண்டும்)
பொதுத்தளத்தில் கட்டுரையாசிரியனாகவும் விமரிசகனாகவும் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்ற புரிதலின் அடிப்படையில் பொதுவள ஊடகப்பரப்புரை என்னும் பொருளில் விவாதங்கள் செய்த விக்கிப்பீடியர்களோடு அமர்ந்து தமிழ்விக்கிப்பீடியாவின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைச் சொன்னேன். அதைப் பரவலாக்கப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பயனர்களையும் பங்கேற்பாளர்களையும் உருவாக்கும் சாத்தியங்கள் பற்றிய திட்டங்களை முன்வைத்துள்ளேன்.  ஒரு லட்சம் தலைப்புகளில் விக்கிப்பீடியா கட்டுரைகள் இடம்பெறச் செய்வதைக் கொஞ்சம் கறாராகத் திட்டமிட்டால் ஓராண்டிலேயே எட்டிவிடலாம்.

No comments :