August 10, 2015

காட்சி இன்பத்தின் பொருளாதாரம் : ராஜமௌலியின் பாகுபலிமுதலில் அதற்குப் பெயர் டாக்கி (Talkie); மாறிய பெயர் சினிமா (Cinema). பேச்சை முதன்மையாகக் கொண்ட கலை, காட்சியை முதன்மையாகக் கொண்ட கலைவடிவமாக மாறியதன் விளைவு இந்தப் பெயர் மாற்றம்.  காட்சிக்கலையாகச் சினிமா மாறிவிட்டதாக நம்பினாலும் பேச்சை அது கைவிட்டுவிடவில்லை. இன்றளவும் பேச்சின்வழியாகவே சினிமா தனது காட்சியடுக்குகளைப் பெருந்திரளுக்குப் புரியவைக்கிறது; நம்பவைக்கிறது. அதிலும் இந்திய சினிமா பேச்சின் இன்னொரு வடிவமான பாடலையும் விட்டுவிடாமல் தக்கவைத்துக்கொண்டே மாறிக்கொண்டிருக்கிறது.

அண்மையில் வந்து வெற்றிகரமாகப் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது ராஜமௌலியின் பாகுபலி. சென்னை, மதுரை திருநெல்வேலி எனப் பெரும்பாலான நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பார்வையாளர்கள் நிரம்பிய காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.  பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இது தமிழ்ச்சினிமாவா? அல்லது தெலுங்கு சினிமாவா? என்ற சந்தேகம் ஏற்படுவதையும் தாண்டி தமிழ்ப் பார்வையாளர்களைக் கவர்ந்த படமாகப் பார்க்கப்படுகிறது.  கடந்த ஓராண்டில் வேறெந்தப் படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இல்லை. கலைப்படம், வணிகப்படம் எனப் பிரித்துப்பேசுபவர்களுக்கும்கூடப் பாகுபலி நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது. இரண்டிற்குள்ளும் அடங்காத படமாக- இரண்டின் சாயலையும் கொண்ட படமாகவும் தோற்றம் தருகிறது.
இந்த நிலையில் பாகுபலியைப் பற்றிப் பேசுவதற்கான சொல்லாடலை எதிலிருந்து உருவாக்குவது? 100 ஆண்டுகளைக் கடந்து வளர்ந்துள்ள தமிழ்ச்சினிமாவின் அல்லது இந்தியா சினிமாவின் அனைத்து வளர்ச்சிகளையும் உள்வாங்கிய சினிமாவா பாகுபலி? நவீனத்துவ வாழ்க்கையைத் தாண்டிப் பின் நவீனத்துவக் குழப்பங்களுக்குள் நுழையும் பார்வையாளத்திரளுக்கு இந்தப் படம் ஏதாவது செய்தியைத் தருகிறதா?  தருகிறது என்றால் என்ன செய்தி? அந்தச் செய்தி எதன் வழியாகப் பார்வையாளர்களை வந்தடைகிறது? இந்தக்கேள்விகளுக்கான விடைகளைக் காணும் நோக்கத்தில், முதலில் இப்படம் எழுப்பும் உணர்வுகள் அல்லது நினைவுகளை தொகுத்துக் கொள்ளலாம்.

பாகுபலி தரும் நினைவலைகளும் உணர்வுகளும்:
படம் வெளியான நாள் தொடங்கி அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் பாகுபலி பற்றி வரும் விமரிசனங்களையும் பாராட்டுகளையும் வாசித்தாலே அதற்கான தொகுப்பு கிடைத்துவிடும். எழுப்பப்படும் கேள்விகளும்  கிடைக்கும் பதில்களின் பரப்பும் விரிந்துகொண்டே இருக்கின்றன. அவைகளை வாசிக்கும்போது இவை விமரிசனங்கள் என்பதைவிட உணர்வுகளின் அலைப்பரப்பு என்றே சொல்லத்தோன்றுகிறது. அவை பாகுபலி படத்தைப் பற்றிப் பலவற்றை உணர்வலைகளாக முன்வைக்கின்றன.
 ‘பிரமாண்டம்’ என்ற சொல்லால் அனைவரையும் அழைக்கச் செய்த இந்தப் படம், எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்த அடிமைப்பெண் தான் என்பது ஓரலை.  இவ்விருவரும் நடித்த ஆயிரத்தில் ஒருவனையும், அதே பெயரில் செல்வராகவன் இயக்கத்தில் வந்த இன்னொரு ஆயிரத்தில் ஒருவனையும் சிலருக்கு நினைவூட்டுகிறது. தர்க்கம் மற்றும் கற்பனையின் எல்லைக்குள் வசப்படாத படங்களைப் பார்க்கத் தந்த விட்டலாச்சார்யாவின் படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதைவிடக் கூடுதல் காட்சியின்பம் இருப்பதாகப் பொதுப்பார்வையாளர்களின் உணர்கிறார்கள்; ரசிக்கிறார்கள்.  இந்த அளவுக்குக் கவனத்தைக் கவராமல் போன ராஜராஜசோழன் போன்ற படங்களோடு சிலர் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். சிலரோ, இதுபோன்ற படத்திற்குரிய கதையாகக் கல்கியின் பொன்னியின் செல்வனை முன்வைத்துக் கனவுகாண்கிறார்கள்.
எல்லாத்துறைகளையும்போலப் பலவிதமான வகைப்பாடுகள் கொண்ட ஒரு துறைசினிமா என நம்புபவர்கள்  ‘உலக’ வயப்பட்ட பார்வைகொண்டவர்களாக இருப்பார்கள். அது சிறுகூட்டமென்றாலும் அதற்கான தேடலைக் கைவிடாமல் தேடிக்கொண்டே இருக்கும் அச்சிறுகூட்டம். பெரும்பாலும் தரத்தை மையப்படுத்திச் சொல்லாடல்களில் இறங்கும்  ‘உலகத்தரத்தினர்’ பாகுபலியைப் பார்த்தவுடன் நினைவுக்கு வரக்கூடிய படங்களாகப் பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ், மெக்னாஸ் கோல்டு, கிளாடியேட்டர், ஒமர் முக்தார் போன்ற பெயர்களை உதிர்த்துவிட்டு, இவைபோலப் பாகுபலி இல்லையென ஒதுக்கிவிட்டுப் போகிறார்கள். அக்கூட்டம் எப்போதும் எது உலகத்தரம் எதுவென் எடுத்துக்காட்டிப் பேசுவதில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. சினிமாவில் மட்டுமல்ல;எந்தத்துறையிலும் பேசுவதில்லை. என்றாலும் அறிவுத்துறை ஒவ்வொன்றிலுமே இத்தகைய கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. சினிமாவைப்பற்றியும் அதே வயமான பார்வையில் பேசவே விரும்புவார்கள். தமிழில்/ இந்தியாவில் எடுக்கப்படும் ஒவ்வொரு வகை சினிமாவுக்கும் உலகமாதிரியொன்றைக் கற்பிதம் செய்துகொண்டு பேசுவது அவர்களின் வாடிக்கை. அத்தகையவர்களுக்கும் பாகுபலி சில நினைவலைகளை எழுப்பவே செய்திருக்கிறது. ஆக, ஒவ்வொருவகைப் பார்வையாளர்களிடமும் அவரவர் மன அமைப்புக்கேற்பச் சில நினைவுகளை - ஞாபகங்களை- தொன்ம அடுக்கைத்  தூண்டவே செய்துள்ளது இந்தப்படம்.
வெகுமக்கள் ரசனையும் பாகுபலியின் உருவாக்கமும்
வெகுமக்கள் ரசனை என்பதே நினைவுத் தூண்டுதலின் வழியாகவே  உருவாக்கப்படுகிறது. வெகுமக்களின் மனப்பாங்கையும் ரசனையையும் கட்டமைப்பதில் முக்கியமான  இடம் இருப்பின் தொடர்ச்சியை ()முன்னெடுப்பதற்கு உண்டு. வாழ்தலுக்கான அறம் அல்லது வாழ்க்கை முறை என்பதில் புதிதான கருத்துகளையோ, மாற்றங்களையோ முன்வைக்காத வாழ்க்கைமுறையைப் பெரும்பான்மைப் பொதுமனம் ஏற்றுக்கொள்ளும்; கொண்டாடும்.  அதேபோல ஏற்கெனவே ரசித்த- மெய்மறந்த பொருட்களைப் புதுக்கிப்புதுக்கிப் புத்தம் புதிதாக ஆக்கித் தரும் கலைஞர்களையும் ஏற்றுக்கொள்ளும்; கலைகளையும் கொண்டாடும். இவ்விரண்டையும் பாகுபலி கச்சிதமாகச் செய்திருக்கிறது.
வெகுமக்கள் கலைக்கான இப்பொதுநிலையோடு, வெகுமக்கள் சினிமாவில் செயல்படுகிறவர்கள் இன்னொன்றையும் செய்கிறார்கள். தங்களின் படைப்பு அல்லது  உருவாக்கம் பற்றிப் பேசுவதற்கான சொல்லாடல்களையும் சூழலையும், மொழியையும்கூட அவர்களே உருவாக்கித்தருகிறார்கள்.  விமரிசகர்கள் அவற்றை அந்த இயக்குநர்களின் படைப்படையாளம் எனச் சொல்லிப் பேசிக்கொண்டிருக்கக் கூடும், படைப்படையாளம் என்ற கலைச்சொல்லே கூட  விமரிசனத்திற்காக, வெகுமக்கள் கலையில் வேலை செய்பவர்கள் உருவாக்கித்தரும் சொல்லாடல்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  
ராஜமௌலி தரும் சொல்லாடல்கள்
“250 கோடி ரூபாய் முதலீடு; 3 ஆண்டுகள் தயாரிப்புக்காலம், தமிழ்- தெலுங்கு நட்சத்திரங்களின் ஈடுபாட்டோடு கூடிய நடிப்பு, அதன் வழி உருவாக்கப்பட்ட பிருமாண்ட பிம்ப அடுக்கின் நகர்வு ”என்பதே இயக்குநர் ராஜமௌலி தனது ரசிகர்களுக்கும்  விமரிசகர்களுக்குத் தரும் சொல்லாடல்கள். இந்தச் சொல்லாடல்களைக் கொண்டே எனது தயாரிப்பைப் பார்வையாளர்கள் ரசிக்கவேண்டும்; விமரிசகர்கள் விமரிசிக்க வேண்டும் என்னும் நெருக்கடியை உண்டாக்கிவிடுகிறார். அந்தச் சட்டகத்திற்குள் இருந்தே நாம் அதைப் பேச முடியும்; பேசவேண்டும். அதைவிட்டுவிட்டு நம்விருப்பப்படி சத்யஜித்ரேயின்  ஜனசத்ரு, மகேந்திரனின் உதிரிப்பூக்கள், அடூரின் எலிப்பத்தாயம் போன்ற சினிமாக்களை பாகுபலிக்குப் பக்கத்தில் வைத்துப் பேசமுடியாது; பேசக்கூடாது. விமரிசகர்கள் அப்படிப் பேசிக் கொண்டிருந்தாலும் வெகுமக்கள் திரள் அப்படி யோசித்துப் படம் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ரசனைக்கான விதிகள் எப்போதும் வேறானவையே. அவர்கள் அவர்களுக்குத் தரப்படும் பண்டங்களுக்குள்ளேயே அவற்றின் ருசியைத் தேடுகிறார்கள்; கண்டுணர்கிறார்கள்; திருப்திகொள்கிறார்கள்.
பாகுபலிக்கான ருசியைப் படத்திற்குள்ளேயே வைத்திருப்பதாகவே பார்வையாளத்திரள் நம்புகிறது; ஏற்றுக்கொள்கிறது. ராஜமௌலி இதற்கு முந்திய படங்களிலேயே அவரைப் பற்றிப்பேசவேண்டிய சொல்லாடல்களை உருவாக்கித்தந்திருக்கிறார். அதன் மையச் சொல் கற்பனைக் கதை (Fantacy). கற்பனைக்கதைகளே ராஜமௌலியின் விளையாட்டுக்களம். அந்தக் களத்தில் அவர் விளையாடுவதை ரசிக்கமுடிகின்றவர்களுக்காக மட்டுமே அவர் விளையாடுகிறார். மெஹதீரா தொடங்கி நான் ஈ வழியாகப் பாகுபலியில் தனது விளையாட்டுப் பரப்பையும், அதனைப் பார்ப்பதற்கான பார்வையாளத் திரளையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறார். பாகுபலி இப்போதைய உச்சம். இதற்கு முன்பு தமிழில் அத்தகையதொரு உச்சம் ஷங்கர் - ரஜினியின் கூட்டணியில் உருவான எந்திரன். 
கற்பனைக் கதையைச் சினிமாவாக ஆக்குவது என்பது பெரும்பாலும் கலையின் விளையாட்டாக இருப்பதில்லை. அது எப்போதும் பொருளாதாரத்தின் விளையாட்டு. புராணக் கற்பனைகளைச் சினிமாவாக்கியவர்களின் இடத்தைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தனதாக்கிக்கொண்டுவிட்டன. புராணக் கற்பனைத் தொலைக்காட்சிகளுக்காகக் கையளித்துவிட்ட சினிமா வரலாற்றுக் கற்பனைக்குள்ளும் அறிவியல் புனைவுக்குள்ளும் அவ்வப்போது நுழைகின்றது. உலகச் சினிமாவின் உற்பத்திக்கேந்திரமான ஹாலிவுட்டிலும் இதுதான் நடக்கிறது. இப்போது ஹாலிவுட்டின் கச்சிதத்துடன் எந்திரனும் பாகுபலியும் இந்திய சினிமாவை உலக வணிகச்சினிமா வரைபடத்திற்குள் நகர்த்தியுள்ளன.  அந்த நகர்வுக்குப் பின்னணியாக - காரணமாக- இருப்பது பெரும்பணம்.  தேர்ந்த நடிப்புக்கலைஞர்கள்,  திட்டமிட்ட ஒத்திகைகள், கவனமாக உருவாக்கப்பட்ட வரைபடங்கள், நீண்டகாலப் படப்பிடிப்பு, வரையப்பட்ட காட்சிக்கோர்வைகள், அவற்றை உண்மையென நம்பவைக்கும் தொழில்நுட்பப்பயன்பாடு என எல்லாம் சேர்ந்து இயைந்து சினிமாவாக மாறுவதற்கு - இயக்குநரின் சினிமாவாக மாறுவதற்குத் தேவை பெரும் முதலீடு என்னும் பொருளாதாரம். அதனைக் கொண்டே ராஜமௌலி இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார்.
அழகியலும் கலைக்கூறும்
பாகுபலியின் தொடக்கத்தில் வரும் வரைபடம் தரும் நாடுகள், குழுக்கள், அவற்றின் இயல்புகள், அதனைத் தலைமையேற்கும் நபர்கள் பற்றிய தகவல் புத்தம்புதிதானவை அல்ல. அதே நேரத்தில் அவை இந்தியப் பரப்பில் எங்காவது - எந்த நூற்றாண்டிலாவது இருந்தவை பற்றிய குறிப்புகளா? என்றால் அதுவும் உண்மையல்ல. வரலாறுபோலச் சொல்லப்படும் கற்பனை. புராணக்கதையா என்றால் இல்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னால் இருந்த சிறுசிறு தேசக்குழுக்களுக்கிடையிலான போர்களும், சதிகளுமடங்கிய கற்பனைக்கதை. நாடுபிடிப்பதைவிடக் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்ட தீமையான கூட்டம் ஒன்றைக் கற்பனையாக உருவாக்கிக் கொண்ட புனைவுருவாக்கக் கதை இது. இத்தகைய கதைகளால் நிரம்பியது இந்தியப் பொதுச்செவிகள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னால் சில நூறு அரசர்களும், அவர்களின் வாரிசுகளும், பங்காளிகளும் நடத்திய உள்நாட்டுப் போர்களைப் பற்றியும் பக்கத்து நாடுகளோடு கொண்ட பகைமுரண்கள் பற்றியும் கதைப்பாடல்களாகவும், நாட்டார் நாடகங்களாகவும் கேட்ட கதைகளின் ஒரு வடிவமே இந்தப் பாகுபலி. தமிழ்நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட அல்லியரசாணியை அடக்கி மணமுடிக்க அர்ஜுனன் வந்தான் என்ற கதையைக் கதாகாலட்சேபமாகவும், வில்லுப்பாட்டாகவும், கூத்தாகவும் பார்த்துப்பழகிய குழுமனம் இந்தியப்பொதுமனம். அவர்களுக்கு அதுமாதிரியான ஒருகதையைக் காட்சிப் பிரமாண்டங்களோடு விரிக்கின்றபோது லயித்துப் போகாமல் விலகி நின்றால்தான் ஆச்சரியம். எளிய - தெரிந்த கதையை சுவாரசியமாகச் சொன்னாலே கேட்பவர்கள், காட்சிப்படுத்துதலில் இருக்கும் ஆச்சரியத்தை நிச்சயம் ரசிக்கவே செய்வார்கள்.
எளிய - தெரிந்த கதையொன்றை வரலாற்றின் மீதான விமரிசனமாகவோ, நிகழ்கால அரசமைப்போடு முரண்படும் விதமான மறுவிளக்கமோ() படத்தை இயக்கியிருந்தால் கூட பாகுபலி இவ்வளவு தூரம் வசூல் வெற்றி அடைந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்திய வெகுமக்கள் மனதிற்குள் உறையும் அதிகாரம் பற்றிய கனவுகள் பெரும்பாலும் நிலமானியகாலக் கனவுகளே. மாற்றத்தை நோக்கிய நகர்வில் வேகம் காட்டாத இயக்கம் அவர்களுடையது. தனிநபராகச் சக்தியும் அதை அடைவதற்கான பக்தியும், எதிரிகளை வெல்வதற்கான உத்திகளும் தந்திரங்களும் நிரம்பிய தலைவனே தேசத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்க வேண்டியவன் என்ற நம்பிக்கையில் திளைப்பவர்கள். இதை-  இந்திய வெகுமக்கள் திரளின் அரசியல் சமூக உளவியலை- சரியாகவே கணித்துள்ள இயக்குநர் ராஜமௌலி அவர்களுக்கான காட்சி அடுக்குகளைப் பெரும்பொருள் செலவில், புதிய தொழில்நுட்பத்தின் உதவியோடு,  ‘உருவாக்கப்பட்டவை’ என்ற நினைப்புத் தோன்றாத வண்ணம் உருவாக்கித்தந்துள்ளார். 
ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் சில குடும்பங்களின் அதிகாரச் செல்வாக்கு நிலைபெற்ற ஒன்றாக இருப்பது நிதர்சனமான உண்மை. அதற்கான காரணங்களை அறியவோ, அவற்றை நீக்கவோ நிகழ்கால அரசியல் அறிவு எத்தணிக்கவில்லை. இருப்பு தொடர்வது சிக்கலற்றது என நம்பும் பொதுமனப்போக்கு தான் இதற்கு முதன்மையான காரணம். அதேபோல் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரதமரானவர்கூடத் தனக்குக் கிடைத்த அதிகாரத்தை முழுமையாக நம்பாமல், யானை வீசிய மாலையால் அரசியானவளின் நடவடிக்கைபோல -  தேநீர் விற்றவர் பிரதமாராகும் அதிசயம் நடக்கும் தேசமாகக் கற்பனை செய்வதும்- இங்குதான் உண்மையாக இருக்கிறது.  நிதானமாக யோசித்துப் பார்த்தால், நிகழ்கால அரசியலின் கற்பனைக்கதைகளையொத்த ஒரு கதையாகவே பாகுபலி திரைப்படமும் நம்முன் விரிவதை உணரலாம்.
கதைசார்ந்த செய்தியைக் காட்சி அடுக்குகளாக்கியுள்ள பாகுபலியின் இயக்குநர் ரசனைக்கான நுட்பத்தைத் தொடர்ச்சியாக ஒரேயொரு கேள்வியைப் பல்வேறுகேள்விகளாக மாற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கும்படி நகர்த்தியுள்ளார். அந்த ஒருகேள்விக்கு எந்த இடத்திலும் பதிலைச் சொல்ல முயலவில்லை. கேள்விகளைக் கேள்விகளாக மட்டுமே அடுக்கியிருப்பதே இப்படத்தின் அழகியல் மற்றும் கலையியல் தன்மை. 
அப்படிக் கேட்கப்படும் ஒற்றைக்கேள்வி “எப்படி இது?” என்பதுதான்.  கொட்டும் மழையால் புரண்டுவிழும் அருவித்திரட்சியில் விழும் அந்தப் பெண்ணின் உயர்த்திய கையில் இருந்த குழந்தை - சிறுவன் மஹாவீர பாகுபலி இருப்பவன் - தப்பியது எப்படி? என்பதில் தொடங்கும் அந்தக் கேள்விக்கு எங்கேயும் பதிலே இல்லை. காப்பாற்றப்பட்டான்; வளர்க்கப்பட்டான்; பெரியவனான் என்பனவெல்லாம் கேள்விகளே இல்லாமல் தொடர்கின்றன. மனிதர்களால் ஏற முடியாத அந்தப் பாறைகளில் அவன் ஏறிய எப்படி ? அடுத்த கேள்வி. அதற்கும் பதில் இல்லை. சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுத்தது எப்படி என்பது அடுத்த கேள்வி. தனியொருவளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் ராஜமாதாவை மீட்கும் திறமைகொண்ட அவந்திகாவைக் காதல் வயப்படுத்தியது எப்படி? என்பது அடுத்த கேள்வி. காட்டெருமையோடு எதிர்நிலைக்கதாநாயகன் மோதிவென்றது எப்படி? நடுவீதியில் ராஜகுலத்துப் பெண் அடிமைச்சங்கிலியால் பிணைக்கப்பட்டு காத்திருப்பது எப்படி?
இப்படிக் கேள்விகளால் அடுக்கப்பட்ட கதைப்பின்னல் வழியாக ஆர்வத் தூண்டல் உருவாக்கப்பட்டு விடை கிடைக்கும் முன்பே அடுத்ததொரு ஆர்வத்தூண்டலுக்குள் பார்வையாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.  வாளிப்பான உடலும் நடன அசைவுகளில் தேர்ச்சியும் கொண்ட அனுஷ்கா அசையாமல் முதியதொரு பெண்ணாக நிற்கும் பாத்திரத்தில் நடிப்பதற்கும், மென்மையே தனது உடலின் - நடிப்பின் -அடையாளம் என இதுவரை நிரூபித்து வந்த தமன்னா, அதற்கு மாறாக தசைகளை முறுக்கும் வன்மையான காட்சிகளில் நடித்திருப்பது கூட  ‘எப்படி?’ என்ற கேள்விகளின் நீட்சியாகவே இருக்கின்றன. புரட்சிகரமான செயலில் இறங்க இருந்தவளைக் காதல்வயப்படுத்திக் காமத்தின் வயமான பெண்ணாக ஆக்கியது எப்படி என்ற கேள்விக்கும்கூடப் படத்தில் பதில் இல்லை.
சதித்திட்டம் தீட்டும் அமைச்சரும் (நாசர்) அவரது மகனும் (ராணா) அரசகுழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற அந்தப் பெண்ணின் (ரம்யாகிருஷ்ணன் ) உத்தரவுகளை மீறாமல் பொறுமையாக ஏற்றுக் கொள்வதும் கூட எப்படி என்று கேள்வியும் பதிலற்ற கேள்விதான்.  சத்தியராஜின் கட்டப்பன் பாத்திரம் எடுக்கும் முடிவுகளுக்காகவே நாலைந்து எப்படி? கேள்விகளைப் பார்வையாளர்களின் மனம் கேட்கவே செய்யும். 
கொட்டும் மழை, பனித்தூறல், அருவித்திரட்சி, புரளும் ஆறு, விரியும் மணல் பரப்பு, உயர்ந்து நிற்கும் கோட்டை கொத்தளங்கள், ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஒழுங்கியக்கம், திட்டமிடும் வியூகங்கள் மோதிக்கொள்ளும் யுத்தக்காட்சிகள், ரத்தக்களறிகள்,  எனப் பிரமாண்டங்களைத்  திளைக்கத் திளைக்க அடுக்கும் பாகுபலி பெண்களை உடலையும் காண்பதற்குரிய திளைப்பாகக் காட்டுகிறது. குறிப்பாகத் தமன்னாவின் பாத்திர உருவாக்கத்தில் இடம்பெற்றுள்ள திருப்புமுனை இந்திய மனங்களுக்குள் பெண்கள் பற்றிய எண்ணத்தை மறு உருவாக்கம் செய்யக்கூடிய ஒன்று. பெண்மையின் அடையாளம் காமத்தின் இருப்பிடம் என்பதாக உருவாக்கி நிறுவியிருக்கிறது. இதுவும் வெகுமக்கள் திரளின் மன இருப்பின் போக்கை அறிந்த ஒருவரின் சித்திரிப்பு என்பதில் ஐயமில்லை. 
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஏராளமான எப்படிக் கேள்விகளைக் கேட்டாலும் கிடைக்கக்கூடிய ஒரே பதில் ‘ அது அப்படித்தான்’ என்பது மட்டுமே. இந்தப் பதிலின் வழியாகத் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட கற்பனைக்கதை என்ற எண்ணத்தைப் பார்வையாளர்களிடம் உருவாக்கிக் கொண்டு, காட்சி இன்பத்தை மட்டும் கண்டுகளித்துவிட்டுப் போ என்பதாகப் படம் பதில் சொல்கிறது. அந்தப் பதிலைக்கேட்டுக் கொண்ட பார்வையாளர்கள் திருப்தியோடு திரும்பிவருகிறார்கள். திரும்பவும் அதன் தொடர்ச்சியைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் தங்கியுள்ளது. அந்தவகையிலும் ராஜமௌலி தனது அடையாளத்தை - கலைக்கொள்கையை நீட்டித்துக் கொண்டிருக்கிறார். 

No comments :