July 05, 2015

நல்ல பொழுதுபோக்குப் படம்

நிகழ்காலப் படம் என்பதன் அடையாளங்கள் என்ன? இதனை விளக்க எதிர்மறையிலிருந்து உள்நோக்கி நகரலாம். எது நிகழ்காலப்படமல்ல என்று காட்டினால் ஓரளவு புரியலாம். பாபநாசம் நிகழ்காலப்படமல்ல. அது ஒரு பழைமை பேசும் பழையபடம்

பெண் உடல் மேல் பாரம்பரியம் அணிவித்திருக்கும் மூடப்பட்ட உடல் புனிதமானது; காட்டப்பட்ட உடல் குற்றமிழைத்தது; பாவம் செய்தது எனப் பேசுவதில் தொடங்கி, அதற்காகத் தன்னை அழித்துக் (தற்கொலை) கொள்ளுதல், அல்லது அதற்குக் காரணமானவனை அழித்தல் (கொலை செய்தல்) என்பதைப் பரிந்துரைக்கிறது. டிஜிட்டல் உலகத்தின் வழியாகத் திறந்து கிடக்கும் ஆண் -பெண் உடல்களை மேயும் நிகழ்காலத்தில் இப்படியொரு பரிந்துரை பொருத்தமானதாக இல்லை. இன்னும் இன்னும் பெண்களை ஏதாவதொன்றின்வழிப் பயமுறுத்துவதன் நோக்கம் எவ்வளவுதூரம் ஏற்கத்தக்கது?.
தொடர்ந்து நிகழ்கால மனிதனை நவீன மனிதனாக்குவதில் அக்கறை காட்டும் கமல்ஹாசனின் படமாக இல்லை பாபநாசம். இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் படம். அவரது திரைக்கதையில் திறமை காட்டும் நடிகராகக் கமல்ஹாசன் நடித்திருக்கிறார். அவ்வளவே. கமல்ஹாசன் மட்டுமல்லாமல் எடுத்துக் கொண்ட திரைக்கதைக்குப் பொருத்தமாக நடிக்கத் தேவையான நடிக, நடிகையர்கள் தமிழிலும் மலையாளத்திலும் இருக்கிறார்கள் என்பதையும் படம் உறுதிப்படுத்துகிறது.
அதேபோல் மலையாளப் படம் தமிழில் மாற்றப் படுகிறது என்பதால், மலையாளம் அறிந்த ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். மர்மத்தின் தொடக்கமான கொலை நிகழ்வதுவரை ஜெயமோகனும் சுகாவும் சிரிக்க வைக்கப் பார்த்திருக்கிறார்கள். முயற்சி முழுமையாக வெற்றிபெறவிலை. மற்றவர்கள் சமாளிக்கும் அளவுக்குக்கூடக் கௌதமியால் முடியவில்லை. வட்டாரவழக்குக்குப் பயந்து உடல்சார்ந்த பாவனைகளையும் மனநிலையையும் கூடத் தவற விடுகிறார். ஆனால், கொலைக்குப் பின் பாத்திரங்களின் உடல்மொழியும் மனநிலையையும் பார்வையாளர்களின் கவனிப்புக்குரியனவாக ஆகிவிட்டதால் வட்டார வழக்கைக் கவனத்தில் கொள்ளவில்லை.

வட்டாரவழக்குப் பேச்சை ஒரு படத்தின் கதையே வேண்டிநிற்கவேண்டும். சுப்பிரமணியபுரம், பருத்திவீரன் போன்ற படங்களைப் பொதுத்தமிழில் எடுக்கக்கூடாது. அப்படியொரு தேவையை இந்தத் திரைப்படம் வேண்டவில்லை. காட்சிகளால் வேகம் பிடிக்கும் திகைப்புக் காட்சிகள் கொண்ட ஒரு படத்திற்குத் திருநெல்வேலித் தமிழும், தாமிரபரணிக் கரையிலிருக்கும் பாபநாசம் என்ற ஊரின் அடையாளமும் கூட அவசியமில்லை. பாவம் - அதற்கான தண்டனை அல்லது பரிகாரமாகப் புனிதநீரில் குளித்துக்குளித்துக் கறையைப் போக்கிக் கொள்ள இந்தியாவெங்கும் ஏராளமான சிவத்தலங்கள் இருக்கின்றன. அங்கும் ஆறுகளும் ஓடுகின்றன. அவைகளும் புண்ணியத் தலங்களாகவும் புண்ணிய நதிகளாகவும் கருதப்படவே செய்கின்றன. 

தொய்வில்லாமல் கதைசொல்லுதல் வழியாகத் திகிலூட்டுதல், மர்மங்களை விடுவித்தல் என்ற கூறுகளை விரும்புபவர்கள் பாபநாசத்தை ஒருமுறை பார்க்கலாம். அலுப்பூட்டாமல் மூன்றுமணிநேரம் ஓடும் ஒருசினிமாவைப் பார்க்கவிரும்புபவர்கள் பார்க்கலாம்.அதற்குப்பெயர் பொழுதுபோக்குப் படம்.

No comments :