July 22, 2015

வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள்

நேற்று (19-07-2015) ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளாக இல்லாமல் வேலைநாளாகிவிட்டது. நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது 25 ஆண்டுவிழாவை - வெள்ளிவிழா நிகழ்வை இந்த ஓய்வு நாளில் தான் கொண்டாடியது. தமிழக மக்களுக்காக ஓய்வு ஒளிச்சலின்றிப் பணியாற்றும் அமைச்சர்களுக்கு ஓய்வு நாட்களே இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால் விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன்.

1990 செப்டம்பர் 7 ஆம் தேதியில் சட்டப்படி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே வெள்ளிவிழா ஆண்டு தொடங்கிவிட்டது. என்றாலும் அதன் தொடக்கவிழா நிகழ்வு நேற்றுதான் நடந்தது. காரணங்கள் பலப்பல. அதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் உள்ளரசியல் சொல்லாடல்களாகவும் வெளியரசியல் நெருக்கடிகளாகவும் மாறிவிடும்.
இந்தப் பல்கலைக்கழகத்தோடு எனது தொடர்புக்கு வயது 18 ஆண்டுகள் . 1997 பிப்பிரவரி 14 இல் தமிழியல் துறையின் இணைப்பேராசிரியராக இணைந்த நான் 2 ஆண்டுகள் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்குப் போய்விட்டேன். இங்கிருந்த காலம் 16 ஆண்டுகள். இப்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்களில் ஒருவன். இந்தப் பல்கலைக்கழகத்தின் பலவிதச் செயல்பாடுகளில் - பொறுப்புகளில் - இருந்தவன் அதன் ஏற்ற இறக்கங்களை அறிந்துள்ளேன். என்னைவிடவும் மூத்த உறுப்பினர்கள் இங்கே இருக்கிறார்கள். தங்கள் வாழ்வின் கால் நூற்றாண்டு வாழ்க்கையை இதன் சுகதுக்கங்களில் இணைத்துக்கொண்ட ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் இதன் இயக்கம் என்னவகையான நினைவுகளை உண்டாக்கியிருக்கும் என்று கேட்கவேண்டும்; பதிவு செய்ய வேண்டும். அதனை நேற்று நடந்து விழாவில் தவறவிட்டுவிட்டார்கள். இங்கிருந்து ஓய்வுபெற்றுப் போனவர்கள், முன்னாள் மாணவர்கள், வளர்ச்சியில் பங்கெடுத்த துணைவேந்தர்கள், அதிகாரிகளென ஒருவரும் பங்கெடுக்காமல் வந்துபோகும் மனிதர்களால் நிரம்பியிருந்த நேற்றைய நிகழ்வை ஒரு பகல்கனவாக நினைத்து மறந்துவிடவே விரும்புகிறேன். இதனை வைகறைக்கனவாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பகலில் கண்ட கனவு.
என்னை இலக்கியமாணவனாக உருவாக்கிய அமெரிக்கன் கல்லூரியின் 125 ஆம் ஆண்டுவிழாச் சிறப்பு மலரில் அலையும் நினைவுகளை எழுதியது நினைவுக்கு வருகிறது. மதுரைப் பல்கலைக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு(பொன்) விழாக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்த நினைவும் வந்துபோகிறது. புதுவைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் தந்த நினைவுப்பரிசு இன்னும் இருக்கிறது. வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை ஆரம்பிக்கப்பட்ட 80 ஆவது ஆண்டு நிகழ்வின் நினைவும், தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்ட 40 ஆவது ஆண்டுவிழாக் கருத்தரங்கில் நான் வாசித்த கட்டுரை அடங்கிய தொகுப்பும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் எனது 16 ஆண்டுகளைத் தின்று தீர்த்த இந்தப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழா நினைவாக எதையும் தரவில்லை.

ருஷ்ய எழுத்தின் ஓரடையாளம் மார்க்சிம் கார்க்கி. மொழிபெயர்ப்பில் நான் வாசித்த முதலும் முதன்மையுமான தாய் நாவலின் ஆசிரியன். அந்நாவலை வாசித்தபின் அவனது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன். தாய் நாவலைவிடவும் கூடுதலாக என் மனதில் தங்கியிருப்பது அவன் எழுதிய “ யான் பயின்ற கல்வி நிறுவனங்கள்” என்ற நூல். ஆய்வுமுடித்து அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகப் பணியேற்றபோது எடுத்த ஒரு முடிவு ஒன்று உண்டு. நானும் கார்க்கியைப் போல - “ யான் பயின்ற கல்வி நிறுவனங்கள்” என்றொரு நூலை எழுதவேண்டும் என்பது அந்த முடிவு. ஆனால் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து புதுவைப்பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறை எனச் சுற்றிவிட்டுத் திரும்பவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என வந்துவிட்டபோது எழுத நினைத்துள்ள அந்த நூலின் பொருள் “ கல்விநிறுவனங்களும் நானும்” என்பதாக மாறிவிட்டது.

பொருளும் தலைப்பும் மாறியதால் எழுதத் தொடங்கும் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்தேன். இன்னும் 4 ஆண்டுகளில் பணி ஓய்வுக்குப் பின் முக்கியமான வேலை அது எனக் கணக்கு. அந்தக் கணக்கை நேற்றைய பகல் கனவு கலைத்துவிட்டது. நாளை முதலே எழுதத்தொடங்கிவிடச் சொல்கிறது. பெருமையாக நினைத்துப் பேசிக்கொள்ள ஏதாவது இருக்கும்போதே எழுத முடித்துவிடு எனச் சொல்கிறது. இப்போது எழுதத்தொடங்கினால் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் உயிர்ப்புமிக்க கல்வித்துறையின் துன்பியல் கதையொன்று கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்கிறது மனம். இன்னும் தள்ளிப்போனால் அபத்தங்களால் நிரம்பிய அர்த்தமற்ற புலம்பல்களால் நிரம்பி வழியும் எழுத்துக்குவியல்களே மிஞ்சும் என்பது மனம் சொல்லும் எச்சரிக்கையின் தொடர்ச்சி.
தேவை துன்பியல் கதையா? அபத்த நாடகத்தின் குறியீடுகளா? இதை முடிவு செய்துவிட்டால் எழுதுவதும் உறுதியாகிவிடும்.

No comments :