July 18, 2015

வாழ்தலின்விருப்பந்தேங்கிய சாவின் நெருக்கம்: ராகவனின் இரண்டு கதைகள்


நடந்ததை எழுதுவது நடப்பியல் வாதமா? இயற்பண்பியல்வாதமா? என்ற விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. தமிழில் நடப்பியல்வாதத்திற்குப் பலரை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இயற்பண்பியல்வாதத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தான் சொல்லமுடியும். நகரம் சார்ந்த எழுத்தில் அசோகமித்திரனின் கதைகளைச் சொல்லலாமென்றால், கிராமம்சார்ந்து பூமணியின் தொடக்ககாலச் சிறுகதைகளை எடுத்துக்காட்டலாம். அவர்களிருவரும் விவரிக்கும் விவரிப்புமுறையில் பிசகின்றி ஒவ்வொன்றையும் அடுக்கிக் கொண்டே போவார்கள்.
உரையாடல் மொழியோடு உடல்மொழி குறித்த வருணனைகளும் தவறாது இடம்பெறும் ஒற்றை நிகழ்வை அதன் நிகழ்கால அளவில் எழுதிக் காட்டி, வாசகர்களை அதே கால அளவில் வாசிக்கும்படியாகத் தூண்டுவது அதன் இயல்பு. எழுத்துமுறை அப்படி இருந்தாலும் கதையை வாசித்து முடித்தபின்பு யோசித்துப் பார்த்தால் இருவரது கதைகளுமே இயற்பண்புவாத அழகியலுக்குள் அடங்காமல்,நடப்பியலின் அழகியலைத் தனதாக்கிக் கொள்வதை உணரமுடியும்
பொதுவாக ஆவணத் தன்மை (documentary) கொண்ட விவரிப்புமுறை இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்ற கோட்பாட்டைச் சரியென நம்பும் தன்மைகொண்டது. உவமை, உருவகம், படிமம்  போன்ற அலங்காரங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு நிகழ்விடத்தையும், நிகழ்வில் பங்கேற்கும் மனிதர்களின் இருப்பு, நகர்வு, பேச்சு, உடல்மொழி என ஒவ்வொன்றையும் நுட்பமாகச் சொல்லிக்கொண்டே போவது அதன் அழகியல்கூறு. நிழல்பட அடுக்குகள் நகர்வதுபோல எழுத்தால் எழுதி நகர்த்தும் அந்த எழுத்துமுறை எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் அலுப்பூட்டும் தன்மைகொண்டது என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் துயரத்தின் பிழிவை வாசகனிடத்தில் கடத்தும் ஆற்றல் இந்த எழுத்துமுறைக்கு உண்டு என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது.
இங்கு தரப்படும் இரண்டு கதைகளின் பகுதிகளை முதலில் வாசித்துப் பாருங்கள்:
அந்த நீண்ட கட்டடத்தினூடாக நடந்து இருமுடக்குகளில் திரும்பி நேராகக் கூட்டிச் சென்றனர். அப்போதுதான் குடல்களிவிடும் கூடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். அங்கே இருகுடல்களிசலக் கூடங்கள் எந்தவொரு மறைப்புமின்றி இருந்தன. குடல்களிசலக் கூடத்தை நெருங்குவதற்கு முன்பாகவே தாங்கிக் கொள்ளமுடியாத மணம் கிளம்பியது. எங்களை இரண்டாகப்பிரித்துத் திரும்பவும் வரிசைப்படுத்தி குடல்களிசலக் கூடத்தினுள் அனுப்ப ஏற்பாடு செய்தனர். என் வாழ்நாளில் இந்தளவுக்கு மோசமான குடல்களிசலக் கூடங்களை நான் பார்த்ததேயில்லை. தரையெங்கும் கும்பிகும்பியாய் குடல்களி கழிக்கப்பட்டிருந்தது. கோப்பை விளிம்புகளிலும் கோப்பைக்குள்ளும் குடல்களி குவிந்திருந்தது. குழாயில் நீர்வரவில்லை. எனக்கு அடிவயிற்றிலிருந்து குமட்டியது. குடல்களி கழிக்காமல் திரும்பியோரை முழந்தாழிடவைத்து குடல்களி கரைத்த வாளிகளுக்குள் தலைகளை முக்கியெடுத்தனர். (உதிரகணம்)
1.===============================================================

எங்கே ஒதுங்கிக்கொள்வதென்ற தீர்மானமில்லாமல் புழுங்கல் பரவியதுபோல வீதியெங்கும் குவிந்திருக்கும் பிரேதங்களைக் கடந்து மீளவும் சாதுரத்தும் பயணம் தொடர்கிறது.
‘கவனமாய் பாத்து நடவுங்கோ! தடுக்கினால் சவங்களுக்கு மேலதான் விழவேனும்’
‘ ஆத்தே என்ன நாத்தமப்பா!’
‘முதல்ல நாறிமனக்கும் பிறகெல்லாம் பழகியிடும். அடுத்த மல்டிபரல் அடிக்கிறதுக்கிடையில் இந்த இடத்தை கடக்கவேணும்’.
‘இவிடம் எவிடம்’
“ஆருக்கு தெரியும்? சலம் நாறி மணக்கிறதால இப்பவும் செல்விழக்கூடிய இடத்தில்தான் போய்க் கொண்டிருக்கிறோம்”
”விசர்க்கதை கதைக்காதேங்கோ! இரவைக்கு என்னென்ன நடக்குமோ? ஆரார் சாவமோ? ஆரார் தப்புவமோ? ஆருக்குத் தெரியும். ஒருத்தரின்ரை கையை மற்றாள் பிடிச்சுக்கொண்டு நடவுங்கோ.. போதாக்குறைக்கு பின்னால் இவர்கள் சுடுறாங்கள். முன்னால் அவங்கள் சுடுறாங்கள்” (மரணநவை)
2 ================================================================

உதிரகணம், மரணநவை எனத் தலைப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த இரண்டு கதைகளின் பகுதிகளையும்  எழுதியவர் ஒருவர் என்றே நினைக்கிறேன். முதல் கதைக்கு இராகவன் என்றும் இரண்டாவது கதைக்கு ராகவன் என்றும் பெயரிடப்பட்டிருந்தாலும் இருவரும் ஒருவரே என  நினைக்கக் காரணமுண்டு. இரண்டுமே கோணங்கியின் கல்குதிரையில் அடுத்தடுத்த இதழ்களில் அச்சாகியுள்ளன என்பதுதான். உதிரகணம் [102-105,கல்குதிரை,25/ முதுவேனிற்காலம்/ மே -ஜூன், 2015] இந்த ஆண்டில் அச்சானது. மரணநவை [ பக்.125-128முதுவேனிற்காலம்/ மே, 2014]போன ஆண்டில் அச்சானது. முன்னது உடலின் அடுக்குகள்; பின்னது உரையாடலின் அடுக்குகள். இரண்டிலும் வெளிப்படுவது வேதனை; வலி; வாழ்தலின் விருப்பம் தேங்கிய சாவின் நெருக்கம். 

போர்க்காலம் என்பது முழுமையும் இரண்டு கதைகளிலும் வெளிப்படவே செய்கின்றது. மரணநவையில் பாத்திரங்களின் உரையாடல் மொழியின் வழி அதனை உணரலாம். அந்தக் கதை முழுக்க, “ முன்னும்பின்னுமாகச் சுடப்படும்” துப்பாக்கிக் குண்டுகளுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும், பீரங்கித் துரத்தல்களுக்கும் மிரண்டு ஓடிக் கொண்டேயிருக்கும் கூட்டத்தின் உரையாடலால் நகர்கிறது. உடன்வந்த உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவரின் மரணத்தையும் நின்றுநிதானித்துப் பார்க்கவும் அழுது புலம்பவும் முடியாமல் ஓடிஓடித்தவித்துப் புதைகுழிக்குள் அழிந்த முள்ளிவாய்க்கால் கொடூரம் பதிவாகியிருக்கிறது. தப்பவே முடியாத துரத்தலில் தப்பிவிடலாம் என்ற நவையோடு சுடப்பட்ட கணத்தில் சவமெனக் கருதிப் போட்டுவிட்டு ஓடியகால்களின் முடக்கம் முள்ளிவாய்க்கால் என்பதைச் சொல்ல முழுமையும் பயன்படுத்தியிருப்பது உரையாடல்மொழி. முள்ளிவாய்க்கால் போரில் தப்பிக்க நினைத்துக் கூட்டங்கூட்டமாக இடம்பெயர்ந்தவர்கள் கொத்துக் கொத்தாகச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்  என்று ஆவணப்படுத்துவதோடு, உயிரோடு புதைகுழிகளில் தள்ளப்பட்டு இறந்தார்கள் என்றும் சாட்சிசொல்கிறது. இத்தகைய மொத்தக் கொலைகளுக்கு அரசபடைகளோடு போரை நிறுத்தாமல் நடத்திய போராளிகளும் பொறுப்பு என்றும் சொல்கிறது அந்தக்கதை.

 உதிரகணம் போருக்குப் பிந்திய விசாரணைக்காட்சிகளை விவரிக்கிறது. ஏனாதிகளின் உறுப்பினர்கள் என நினைத்து நடக்கும் விசாரணையில், எஸ்லோன் குழாய்களில் சுற்றப்பட்ட முள்கம்பி சொருகப்பட்ட குதவாய்களின் வழியாக குடல்களிசலமிறக்கம் முடியாமல் போகும் காட்சிகளும், தங்கநீர்(சிறுநீர்) வாளியிலும், மலம் நிரப்பிய வாளியிலும் முக்கியெடுக்கப்பட்ட மனித முகங்களையும், இவையிரண்டோடு அட்டை, கரப்பான்பூச்சி, தத்துவெட்டியான், பீயுருட்டி வண்டு போன்றன கிடக்கும் உணவை உண்ணவைக்கும் குரூரத்தையும் சித்திரத்தீட்டலாக அடுக்குகிறது கதை.  இவையனைத்துக்குப் பின்னும் வாழ அனுமதி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் ஏற்று நிற்கும் மனிதர்கள் பொட்டில் குண்டுசெலுத்திக் கொள்ளப்பட்டார்கள் என்பதையும் காட்சிப்படுத்திச் சாட்சி சொல்கிறது உதிரகணம்  கதை. பேசுவதற்கான வாய்ப்பளிக்கப்படாத மனிதர்களைப் படக்காட்சியாக ஆக்குவதற்கு ஏற்ற விவரிப்புமுறை ஆவண எழுத்துமுறை என்பதை ராகவன் உணர்ந்தே இந்தக் கதையை எழுதியுள்ளார்.

இரண்டு கதைகளையும் வாசித்தபின் வெளிப்படையாக ஈழ யுத்தம் எனச் சொன்னாலும், சிலவற்றை என்னால் ஊகிக்க மட்டுமே முடிந்தது. கதைநிகழும் வெளியோ, காலமோ குறிப்பாகக் கூடக் காட்டப்படாத இவ்விரு கதைகளின் பாத்திரங்களும் தனிமனிதர்கள் அல்ல. போர்க்காலம், போர் நடக்கும் வெளி, அவற்றில் சிக்கிய மனிதர்கள் என்று பொதுநிலையாக மட்டுமே தகவல்களைக் கொண்டுள்ளன இக்கதைகள்.  இலங்கை அல்லது ஈழம் என்பதற்கான குறிப்புகள் கதைகளில் எங்குமே இல்லை. அங்கு நடந்த யுத்தம் என்றோ, யுத்தத்தை நடத்தியவர்கள் சிங்களப் படையினரும் விடுதலைப்புலிகளும் என்ற குறிப்புகளோ தடயங்களோ எவையுமில்லை. புனைகதையின் நிகழ்தகவை உருவாக்கப் பயன்படும் புனைவுவெளியையும், புனைவுக்காலத்தையும் ராகவன் தனது ஆவணமாக்கலின் பகுதியாக வைக்கவில்லை. இவ்விரண்டு கதைகளும் தமிழ்பேசும் ஈழத்தமிழர்களின் துயரம் என்ற தகவலைத் தரப் பயன்பட்டுள்ள ஒரே ஆதாரம் மொழி மட்டுமே. மரணநவையில் உரையாடல்மொழி அதற்கு உதவுகிறது என்றால் உதிரகணத்தில் ஏனாதி, தங்கநீர், குருதி, குடல்களி, சலக்கூடம் போன்ற கலைச்சொற்கள் அதற்கு உதவுகின்றன. 

புனைகதையென்பது நிகழ்வுகளின் அடுக்கு. மிகக்குறைவான எண்ணிக்கை யில் நிகழ்வுகளை அடுக்கிச் சொல்வது சிறுகதை. அதனால் காலமும், வெளியும் குறைவானதாக ஆகிவிடும். அப்படியாகும்போது பாத்திரங்களும் குறைவானவர்கள் ஆகிவிடுவர். ராகவனின் இரண்டு கதையிலுமே இந்த இலக்கணம் கச்சிதமாகப் பின்பற்றப்பட்டுள்ளது. மூன்று நிகழ்வுகளைத் தாண்டவில்லை. ஆனால், சிறுகதைக் கூறுகளான புனைவுவெளி, புனைவுக் காலம், புனையப்படும் பாத்திரங்கள் என்ற கூறுகளை உருவாக்காமல் பொதுநிலைப்பட்ட விவரிப்பால் எழுதியுள்ளார். இந்த விவரிப்புமுறை - ஆவண விவரிப்பு எழுத்து- கட்டுரையின் அருகில் நிறுத்திவிடக்கூடிய ஆபத்துக் கொண்டது.  அப்படியாகிவிடாமல் தனது விவரிப்பின் வழி - நடந்ததை எழுதுதல் என்னும் ஆவணப்பதிவின் -வழி  ராகவன் கதையாக ஆக்கியுள்ளார். ராகவனின் எழுத்தை இதற்குமுன் நான் வாசித்ததில்லை. கல்குதிரையில் தான் வாசிக்கிறேன். வாசித்தபின் அவருக்குச் சொல்ல வேண்டிய இரண்டு குறிப்புகள் தோன்றுகின்றன. 

1. செய்தியாக மட்டுமே உலகம் அறிந்திருந்த ஈழத்தின் கடைசிப்போரின் - நந்திக்கடல் யுத்தத்தின் - துயரத்தை - மரணத்தின் நெருக்கத்தை- குறிப்பாக ஒரு பாத்திரத்தின் வலியாக அல்லாமல் கூட்டத்தின் வலியாகவே சொல்லியிருக்கிறார். இப்படிச் சொல்லவே கூடாது என்பதல்ல என வாதம். அப்படிச்சொல்லும்போது நிகழ்வெளியையும், காலத்தையும் குறிப்பாகவாவது கதாசிரியர் தரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அப்படித் தரும்போது அந்தக் கதையின் நிகழ்தகவு கூடுதலாகிவிடும்.  அத்தோடு இதுபோன்ற கதைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கதைகள் என்பதில் பலருக்கும் உடன்பாடு இருக்கக் கூடும். அப்படி மொழிபெயர்க்கப்படும்போது , உலகத்தின்  எந்த மூலையிலிருக்கும் வாசகரும் அதன் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.  இதைக் கருத்தில் கொண்டால் நான் சொல்வது ஏற்கத்தக்கதாகத் தோன்றலாம்.  

2.இரண்டாவது குறிப்பு வாசிப்பவர்களுக்கு உதவும் விதமாக எழுதுவது. மரணநவையில் அந்த அம்சத்தில் குறைவில்லை. உரையாடல்களால் உருவாக்கப்படும் நிகழ்வுகளை எளிதில் சிக்கலாக்க முடியாது. ஆனால் இரண்டாவது கதை வாசிப்பவர்களைப் பெரும் களைப்புக்குள் தள்ளும்விதமாக எழுதப்பட்டுள்ளது. கல்குதிரையில் நான்கு பக்கம் அச்சிடப்பெற்ற அந்தக் கதை மூன்றே பத்திகளில் ஓரங்க நாடகத்தின் மூன்று காட்சிகள் போல அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலான பத்திகள் பிரித்து எழுதுவதால் கதையம்சம் ஒன்றும் குறையப்போவதில்லை; அதனால் வாசக எண்ணிக்கை கூடவே செய்யும். அத்தோடு, கதையெழுப்பும் துயரப் பெருமூச்சுகளின் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.எப்படி எழுதினால் இவர் எழுதியுள்ள கதைகளையும், எழுதப் போகும் கதைகளையும் தேடிப்படிக்கவேண்டும்; தொடர்ந்து படிக்க வேண்டும். ஆனால் பலரும் அப்படிச் செய்வார்களா? என்பது சந்தேகம்.
                       

No comments :