July 12, 2015

இமையத்தின் வற்றாத ஊற்று: கதையாக மாறாத உரைவீச்சு

இந்தமாத (ஜூலை, 2015) உயிர்மையில் இமையம் எழுதியுள்ள சிறுகதை வற்றாத ஊற்று வெளியாகியுள்ளது. கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் ஆறு. இந்த ஆறுபேரில் இரண்டு பேருக்கு மட்டுமே பெயருண்டு. கதிரவன், பூங்குழலி. புதிதாகத் தொடங்கப்பெற்ற செய்தி அலைவரிசைக்கு வட்டாரச் செய்தியாளனாகத் தேர்வு செய்யப்பெற்று முதலாளியைச் சந்திக்க இருப்பவன். அவனது இடதுபக்கம் அமர்ந்திருந்த பெண்ணின் பெயர் பூங்குழலி. வலது பக்கம் அதே போல் உட்கார்ந்திருந்தவனுக்குப் பெயரில்லை. கதிரவனின் பக்கத்தில் இல்லாமல் 20 பேருக்கு மேல் செய்தியாளர்கள், டெக்னீஷியன்கள், காமிராக்காரர்கள் என நிரம்பிய ஒரு விசாலமான குளிரூட்டப்பட்ட அறையே (கான்பரன்ஸ் ஹால் ) கதைவெளி. கதையை நகர்த்துவதற்காக இமையம்மூன்று பேரை உள்ளே அனுமதிக்கிறார். ஒருவர் அலைவரிசையின் முதலாளி. இன்னொருவர் மானேஜர், மற்றொருவர் செய்திப்பிரிவு ஆசிரியர். இவர்களுக்கும் பெயரில்லை. அலைவரிசைக்கு மட்டும் பெயருண்டு அதன் பெயர் விடிவெள்ளி.

கதிரவன் மட்டும் பதற்றத்தோடு இருக்கிறான் மற்றவர்கள் அப்படியிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. விடிவெள்ளியின் கடலூர்ச் செய்தியாளனாகத் தேர்வாகி வந்துள்ள கதிரவனிடம் முதலாளி ஏதாவது கேள்வி கேட்டுவிடக் கூடும் என்பதுதான் அவனது பதற்றத்துக்கான காரணம். கதிரவனின் பதற்றத்தில் ஆரம்பிக்கும் கதை கடைசியில் “நம்ம முதலாளி தங்கமானவர் ” என்று பதற்றம் நீங்க முடிகிறது. சிறுகதையின் இலக்கணத்தைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார் இமையம். ‘வில்லில் அம்பைப் பொருத்தி நாணேற்றினான்’ என்று தொடங்கினால், ‘அம்பு பறந்தது’ என்று எழுதும்போது கதை முடிந்து விட வேண்டும் எனச் சிறுகதைக்குச் சொன்ன இலக்கணம் நினைவுக்கு வந்தபோது ஒரு புன்னகையும் சேர்ந்துகொண்டது.
கதையை வாசித்து முடித்தபின்பு, தொடங்கும்போது பதற்றத்தோடு அமர்ந்திருந்த கதிரவன் தனது பதற்றம் தணிய என்ன செய்தான் எனக் கதைக்குள் தேடினால் அவன் ஒன்றுமே செய்யாமல் முன்னால் வந்தமர்ந்த முதலாளி, மானேஜர், செய்திப் பிரிவு ஆசிரியர் ஆகியோரைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். பக்கத்திலிருந்த பூங்குழலியோடு ஏதாவது ரகசியம் பேசிச் சிரித்தானா? பின்னர் தொடர்புகொள்ள அவளோடு தொலைபேசி எண்ணாவது வாங்கினானா? குறைந்தபட்சம் ஒரு ‘செல்பி’ யாவது எடுத்தானா என்றால் அதுவும் இல்லை. அவ்வப்போது அவளைத் திரும்பிப் பார்த்ததோடு சரி. நகரவே இல்லை; யார்கூடவும் பேசவில்லை; உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே இருந்து ஒன்றும் பேசாமலேயே பதற்றத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அவனது பதற்றம் தீர்த்த மாயம் என்ன? என்று தேடினால் கதையில் கிடைப்பது ஓர் உரை; உரையென்று கூடச் சொல்லக் கூடாது; பேருரை.
விடிவெள்ளி செய்தி அலைவரிசையின் முதலாளி, மானேஜரை ஒருபக்கமும், தலைமைச் செய்தியாசிரியரை இன்னொரு பக்கமும் வைத்துக்கொண்டு, தனது பணியாளர்களை நோக்கி ஆற்றும் அந்தப் பேருரைதான் கதை. வற்றாத ஊற்றாக -நிற்காத நதியாக ஓடுகிறது உரை. நமது காலம் ஊடகங்களின் காலம் என்பதை விரிவாக விளக்கும் அந்த உரையில் செய்திச்சேனல் ஆரம்பிக்கப்படுவதில் மறைவாக இருக்கும் நோக்கம், உத்தி, தந்திரம், கைவிட வேண்டிய அறம், கவலைப்படக் கூடாத சமூகப் பொறுப்பு, முந்தித் தருவதில் காட்டவேண்டிய அக்கறை .. என ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு வைக்கிறார் முதலாளி. அப்படிப்புட்டுபுட்டு வைப்பதற்குக் காரணம் பணம்.. பணம். ஊடகத்திற்குள் போடப்பட்ட பணத்தை வற்றாத ஊற்றாக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் எனச் சொல்லும் அந்த உரையை - மலைப்பிரசங்கம் போன்றதொரு ஊடகவியலின் நுட்ப உரையை - கதிரவன் கேட்கிறான். பதற்றம் தணிகிறான். மற்றவர்களும் கேட்கிறார்கள்; கைதட்டிக் கலைகிறார்கள். கதை முடிந்துபோகிறது.
நிகழ்கால ஊடகவலைப்பின்னல் பற்றியும், அதற்குள் இருக்கும் தகவல் தொடர்புக்கருவிகள் பற்றியும், அதன் சாகசங்கள் பற்றியும் தனக்குத் தெரிந்ததையெல்லாம் ஒருவரின் உரையாக மாற்றித் தந்துள்ள இமையம் அதைக் கதையாக ஆக்காமல் விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படிச் சொன்னவுடனேயே அது, “ஒரே உரையாக இல்லை. இடையிடையே நிறுத்தித் தண்ணீர் குடிப்பது, கைதட்டலைப் பெற்றுக் கொள்வது, ஆமோதிப்பைப் பெற்றுப் புன்னகைப்பது” போன்றனவற்றையும் முதலாளி செய்கிறார். அதனால் அதனை உரையெனச் சொல்ல முடியாது; கதைநிகழ்வாக்கும் உத்தியென ஒருவர் வாதிடலாம். அப்படியொருவர் வாதிட முன்வந்தால், அவருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.
ஊடகங்கள் அடிப்படையில் தகவல் தொடர்புக்கருவிகள். அவற்றின் பணிகளால் அரசியல், சமூகப்பொருளாதார மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் அவை ஒரு மக்களாட்சி நடக்கும் தேசத்தின் நான்காவது தூணாகக்கருதப்படுகிறது. ஒரு சமூகமாற்றுக்கருவியாக இருக்கவேண்டிய ஊடகத்தொழிலை இன்று தனியார் முதலாளிகள் பணம் காய்க்கும் மரமாக - வற்றாத ஊற்றாக நினைக்கிறார்கள் என விமரிசனம் செய்ய நினைத்தது இமையத்தின் கதைநோக்கம் என்பது புரிகிறது. ஆனால் யாரை விமரிசனம் செய்ய நினைத்தாரோ அவரையே அனைத்தையும் பேசும் பாத்திரமாக ஆக்கும்போது கதாசிரியன் நினைத்த நோக்கம் நிறைவேறுமா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் முன்பு இந்தக் கதையில் வரும் முதலாளிபோல் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசும் முதலாளி எந்தத் தேசத்தில் இருக்கிறான்? எந்தமொழியில் அலைவரிசையை ஆரம்பித்திருப்பான் என்று அந்தப் பாத்திரத்தின் மீதான நம்பிக்கையின்மையும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கதையை ஒருதடவைக்கு இரண்டு தடவை வாசித்து முடித்தபின்பு கதையின் சூழல் தமிழ்நாட்டுச் சூழல்தான் என்பது புரிகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழில் தொடங்கப்பட்ட செய்தி அலைவரிசைகள் எல்லாம் கூட நினைவுக்கு வருகிறது. புதிய தலைமுறை தொடங்கி ஏழெட்டுச் செய்தி அலைவரிசைகள் வந்துவிட்டன. விவாதங்கள் தொடங்கி ஊர் ஊராய்- தெருத் தெருவாய்க் காமிராவும் ஒலிவாங்கியுமாக அலையும் ஒரு கூட்டம் உருவாகிவிட்டார்கள்; ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு முகத்தையும் புதிய அர்த்தத்தில் - புதிய பொலிவுடன் முன் வைக்கிறார்கள் என்பதும், அதன் பின்னணியில் வெறும் வியாபாரம் மட்டுமே இருக்கிறது என்பதும் உண்மைதான். இவையனைத்தையும் இமையத்தின் கதை சொல்கிறது. ஆனால் முதலாளியின் பிரசங்கமாகச் சொல்லும்போது அவரைப்பற்றிய விமரிசனமாக இல்லாமல் ஆகிவிடுகிறது. அதே நேரத்தில் இங்கே அரசியல் கட்சிகளின் செய்தி அலைவரிசைகள் பற்றிய நினைவுகள் வாசிப்பவனிடத்தில் உண்டாகாமல் தவிர்க்கும் நோக்கமும் வெளிப்பட்டுள்ளது.
பொதுவாகக் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளால் (சி.இ.ஓ) நடத்தப்படும் வாராந்திர - மாதாந்திரக் கூட்டங்களை நினைவு படுத்துவதோடு, அவர்கள் ஆற்றும் உரையின் வெளிப்படைத் தன்மையையும் கொண்டிருக்கிறது இந்த உரை. அவற்றில் தலைமை நிர்வாக அதிகாரிகள் அதிகபட்ச ஊதியம் பெறும் இடத்தில் இருப்பதால், முதலாளியின் முதலீடும், நிறுவனத்தின் வளர்ச்சியும் முக்கியம் என்பதை வலியுறுத்திப் பேசும் உரைகளில் வேலைக்கான அறம் மட்டுமே வலியுறுத்தப்படும். சமூக நலன், நுகர்வோர் நலன், தேச நலன் என்பதெல்லாம் பேசப்படாமல் வாங்கும் சம்பளத்திற்குக் கூடுதலாக உழைக்கவேண்டியதின் அவசியத்தைச் சொல்வார்கள். ஆனால் இந்தக் கதையில் கண்ணுக்குத் தெரியாத முதலாளியே வெளிப்படையாகப் பேசுகிறார்.
கதைக்கான காலம், உருவாக்கப்படும் நிகழ்வுகளுக்கான தொடர்பு, நிகழ்வுகளில் இடம்பெறும் பாத்திரங்கள், அவை பேசும் உரையாடலுக்கும் உள்மனவோட்டத்திற்கும் தேவையான மொழியாளுமை எனக் கவனமாகக் கதையை உருவாக்கும் இமையம் இப்படியொரு கதையை எழுத நேர்ந்ததின் காரணத்தைத் தேடிச் சொல்வது வாசிப்பவனின் வேலை இல்லை. என்றாலும் தோன்றும் ஒரு காரணத்தைச் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை. பார்த்தல், கேட்டல், உணர்தல் என்னும் அனுபவங்கள் சார்ந்த கதைவெளியை விட்டுவிலகிப் புதியதொரு கதைவெளியைத் தேர்வு செய்து ஒரு எழுத்தாளன் எழுதும்போது இந்தச் சறுக்கல் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. அதற்காகப் புதியதொரு கதைவெளிக்குள் நுழையாமல் கிராமத்தை எழுதுபவர்கள் அதை மட்டுமே எழுதவேண்டும் என்று வலியுறுத்தவும் முடியாது. ஆனால் புதியதொரு வெளிக்குள் நுழையும்போது அதன் இயல்பையும், அங்கு இயங்கும் பாத்திரங்களையும் இன்னும் கவனமாகக் கவனித்துப் புரிந்து கொண்டு எழுதும்போது கதையாக உருவாவதில் சிக்கல் ஏற்படாது.

இமையத்தின் வற்றாத ஊற்று கதையாகவில்லை.வெற்று உரைவீச்சாக இருக்கிறது.

No comments :