June 26, 2015

விடுதலை ( ஓரங்க நாடகம்)மலையாள மூலம்; ஜி.சங்கரப்பிள்ளை தமிழில்; அ.ராமசாமி
இளைஞன் :  கேட்டாயா நீ. நான் சொன்னேனே.. அதேதான் கேட்டாயா..? மணி ஏழு..
முதியவன்     : (அமைதியாக) கேட்டேன்.
இளைஞன் :  அப்புறம்.. இப்படி இருப்பதன் அர்த்தம்? அவன் தன் உயிரையும் பணியையும் பணயம் வைத்து இதைச் செய்துள்ளான். நேரம்வரும். ஒரு கயிறு இதுவழியே வரும். அதன் நுனியில் கம்பியை அறுக்கும் அரம். நம்மையும் வானத்தையும் பிரித்து நிற்கும் இந்தக் கம்பிகளை அறுத்து முறிப்பேன். என்னுடைய திட்டங்களை முன்பே சொல்லியிருக்கிறேனே..

முதியவன்     :  (அமைதி)
இளைஞன் :  மாமா உங்களுக்கு வெளியே போகவேண்டுமென்ற ஆசையே இல்லையா?
முதியவன்                 :  (அமைதி)
இளைஞன் :  இங்கிருந்து விடுதலை கிடைத்தால் எங்கே போவீர்கள் மாமா..
முதியவன்                 : நானா .. கல்லறைக்கு போவேன்..
இளைஞன் :  எதற்கு.?
முதியவன்                 : எனக்கு வேண்டியவர்கள் எல்லாம் அங்கேதான் இருக்கிறார்கள்.(நினைவில் மூழ்கியவனாய்) கடைசியாக நான் ஜெயிலுக்கு வரும் முன்பு.. என் மகள்.. சின்னஞ்சிறு பெண்.. ‘அப்பா.. குடிக்காதே.. அப்பா திருடாதே..’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தாள். போதையிலிருந்த நான்.. பேசக்கூட இல்லை. இந்தக் கைகள்.. அந்தச் சின்னஞ்சிறு கழுத்தைப் பிடித்து..
இளைஞன் : எனக்கென்று துயரம் எதுவுமில்லை. எனக்காக அழுவதற்கும் யாருமில்லை. ஆனால்.. ஒரு கொலை மட்டும் பாக்கியிருக்கிறது.. ஒரு தண்டனை.. அது முடிந்துவிட்டால் அதை முடிக்கவேண்டும். நான் வெளியே போகவேண்டும்... எனக்கு அவளைக் கொன்றேயாக வேண்டும்.
முதியவன்                 : போய்த்தொலையேன்
இளைஞன் : இல்லை. மென்மையான வார்த்தைகள் பேசி, கவர்ந்திழுக்கும் உடம்பைக்காட்டி அவள் என்னை வஞ்சித்தாள். அவளை நேசித்ததற்காக எல்லாவற்றையும் இழந்தேன். இல்லையில்லை.. நான் அவளை அழித்தே தீருவேன்.
முதியவன்                 : அந்தமாதிரி முயற்சிதானே உன்னை இங்கே இருக்கச் செய்துள்ளது.
இளைஞன் : ஆம். அதுதான். எனது துர்ப்பாக்கியம் முழுமையாக ஒருவனை நம்பினேன். அவனும் அவளும் ... அவனும் அவளும் சேர்ந்தே என்னை வஞ்சித்தார்கள். அவர்கள் இனியும் உயிரோடு இருக்கக் கூடாது. இரண்டுபேரையும் கொன்றபின் நானும்...  ஆண்களை வஞ்சிக்கும் பெண்களெல்லாம் அதைப் பார்த்து பாடங்கற்றுக்கொள்ள வேண்டும்.
முதியவன்     : (சிரிக்கிறான்)
இளைஞன் : ஏன் சிரிக்கிறீர்கள்.
முதியவன்     : ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் வஞ்சிப்பது இன்று தொடங்கியதல்ல.தாம்பத்யம் எவ்வளவு பழையதோ எவ்வளவு பழையதப்பா.. இந்த வஞ்சனை..
இளைஞன் : என்னால் தாங்க முடியாது. நான் பழி தீர்த்தே ஆவேன்.
முதியவன்     : போ.. போய்ச் செய்.. உன்னை நீயே அழிவுக்குள் கொண்டுபோ.. ஆனால்.. திரும்பவும் இங்கு வராதே.. தப்பித்துக்கொள்.. வரநேர்ந்தால்.. உன்னை.. உன்னிலிருந்தே விடுவித்துக் கொள்
இளைஞன் : நீங்கள் வரவில்லையா.. மாமா..
முதியவன்     : கையிலுள்ள கச்சிக்காய் காசிக்குப்போனால் இனிக்கவா போகிறது. நான் செய்த பாவங்களைக் கழுவ இனிமேல்தான் தீர்த்தம் சுரக்கவேண்டும்.( கயிறு வருகிறது)
இளைஞன் : இதுதான்.. இதுதான்.. அந்த ஆயுதம்.. நமக்கும் விடுதலைக்குமிடையில் நிற்கும் இந்த இரும்புக்கம்பிகள் .. இதைவைத்து.. ராத்திரி வரட்டுமா? ( புதிய இளைஞன் உள்ளே தள்ளப்படுகிறான்)
                      அட நீ.. நீ.. இவன் தான்.. இவனும் அவளும் சேர்ந்துதான் என்னை வஞ்சித்தார்கள்.. இவனை.. இவனை..
முதியவன்                 : வேண்டாம்.. நீங்கள் எப்படி இங்கே..
புதியவன்      : நான்..
இளைஞன் : தெய்வம் கொண்டுவந்தது.. நான் இங்கிருந்து தப்பும் முன்பு பாக்க நேர்ந்தது. இந்த நரகத்தில் இவனும்.. கிடக்கட்டும்.. ஒழிந்துபோ.. அவளுக்கு வழங்க வேண்டிய தண்டனையை என் கைகளால் வழங்குவேன்.. இன்று ராத்திரியே .. வழங்குவேன்
புதியவன்      : இது நடக்காது.. உன்னால் முடியாது
இளைஞன் : பார்ப்போம்.. பார்ப்போம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்து.. நொந்து.. நொந்து அணுஅணுவாகத் துடித்து.. அவள் அவன்..
புதியவன்      : அவள் செத்துவிட்டாள். இறந்தாகிவிட்டது.. நான் அவளைக் கொன்றுவிட்டேன்.
இளைஞன் : நீயா..? .. நீதானே.. அவளைக் காப்பாற்றினாய்..
புதியவன்      : அதனால் தான் அவளைக் கொல்ல நேர்ந்தது.
இளைஞன் : காரணம்..?
புதியவன்      : அவள் என்னையும் வஞ்சித்துவிட்டாள். ( அமைதி)
இளைஞன் : எல்லாம் அர்த்தமிழந்து போய்விட்டதா.. (அரத்தைக்காட்டி) இனி எதற்கு இதுவெல்லாம்
முதியவன்     : வெளியே நீ போக வேண்டாமா?
இளைஞன் : இனியெதற்கு..? என்னுடைய பகை.. என்னுடைய லட்சியம்.. அதைக்கூட.. இவன்.. இனி.. இந்த இருட்டறைகளில்.. இந்தக் கர்ப்பப்பாத்திரத்தில்..
ஜெயிலர்       : வெளியே போகவேண்டுமென்று முக்கியத்திட்டம் போட்டது யார்? உங்கள் மூன்று பேரில் யார் அந்தச் சூத்திரதாரி.. ம்.. சொல்லுங்க..
முதியவன்     : நான் தான்.. எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.. ஆசைப்பட எதுவுமில்லை. இங்கு இருப்பது போலவே..
ஜெயிலர்       : ம்ம்.. வா..
புதியவன்      : என்னைக் கொன்றிருக்கலாமே.. அந்த முதியவன் ‘ நான் தான்’என்று சொல்லி இடையில் புகுந்துவிட்டானே. என்னைக் கொன்றிருந்தால், உனக்கு நான் செய்த வஞ்சத்திற்கு விமோசனமாவது கிடைத்திருக்கும். அவளைக் கொன்றதும் அதற்காகத்தான் .. விமோசனத்திற்காகத்தான் நீயாவது எனக்கு அதைத் தந்திருந்தால் என்னுடைய வேதனையின் சுமையும் பாவங்களும்..
இளைஞன் : ச்சே.நிறுத்து.. அவரைக்காணவில்லையே.. நான் செய்த குற்றத்திர்கு இன்னொருவர் தண்டனை அனுபவிக்கவா.. என்னுடைய ஆத்மாவே.. இந்த வேதனையிலிருந்து.. கொதிப்பிலிருந்து.. என்றைக்கு எனக்கு விமோசனம்? தெய்வமே!
புதியவன்      : உஷ்.. யாரோ.. வருகிறார்கள் (ஜெயிலர் வந்து முதியவனின் சட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த )
இளைஞன் :(கீழே கிடக்கும் சிலுவையையும் மாலையையும் கையிலெடுத்துக்கொண்டு) இது..? இதன் அர்த்தம்..? அந்த மாமாவுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. உடலாலும் மனதாலும்.. எனக்கு.. இதுதான்.. இந்தக்கூடுதான்.. இந்த நிரந்தர நரகத்தில் இருந்து விமோசனம்.. விடுதலை என்பதே இல்லை.. ஒருக்காலும்.. என்றுமே இல்லை..
இசையுடன் நாடகம் முடிகிறது