June 16, 2015

பேச்சென்னும் லாவகம்பல நேரங்களில் இதை நான் அனுபவத்திருக்கிறேன். கல்லூரிகள் நாடகப்பட்டறை அல்லது நடிப்புப்பட்டறைகள் நடத்துவதற்காக மாணவிகளை அல்லது மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகச் சந்திக்கும்போது பெரும்பாலும் இதுதான் நடக்கும். இதைத் தான் தங்களின் நடிப்புத் திறமை என்று நம்பும் இளைஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண்களிடம் எங்கே கொஞ்சம் நடித்துக் காட்டுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் செய்யும் முதல் காரியும் கைகளை எங்காவது இருக்கிப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கிவிடுவார்கள். பேசுவதற்காக அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வசனம்:


நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.
புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.பூசாரியை தாக்கினேன்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
நீங்கள் எதிர்பார்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்க போகிறேன் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.கோவில் கூடாதென்பதற்காக அல்ல.
கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாதென்பதற்காக.
பூசாரியை தாக்கினேன்.அவன் பக்தன் என்பதற்காக அல்ல.
பக்தி பகல்வேஷமாய் ஆகி விட்டதை கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்க பட்டேன்.நேரடியாக பாதிக்க பட்டேன்.
சுயநலம் என்பீர்கள்.என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.
ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல.
என்னை குற்றவாளி என்கிறார்களே.
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்.
படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன.
தென்றலை தீண்டியதில்லை நான்.தீயை தாண்டியிருக்கிறேன்.
கேளுங்கள் என் கதையை.
தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்.
பிறக்க ஒரு நாடு.பிழைக்க ஒரு நாடு.
தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?
ரங்கூன் என் உயிரை வளர்த்தது. உயந்தவன் ஆக்கியது.
திருமண கோலத்திலே இருக்கும் என் தங்கையை காண வந்தேன்.
மோசடி வழக்கிலே ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாளே இதோ இந்த ஜாலக்காரி ஜாலி.
இவள் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்.
பணப்பெட்டியை பறி கொடுத்தேன்.பசியால் திரிந்தேன்.மெலிந்தேன்.
கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக.
ஆம். கைம்பெண்ணாக.தங்கையின் பெயரோ கல்யாணி.
மங்களமான பெயர். ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை.
செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது.
கையிலே பிள்ளை.கண்ணிலே நீர்.கல்யாணி அலைந்தாள்.
கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்கு கருணை காட்டினார்கள் பலர்.
அவர்களிலே காளையர் சிலர் கைமாறாக அவள் காதலை கேட்டனர்.
கொலை வழக்கிலே சம்பந்த பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு.
இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை.
நான் தடுத்திறாவிட்டால் என் தங்கை அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள்.
ப்ரதி உபகாரமாக அவள் கடைகண் பார்வையை கேட்டு.
அவளில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி.
கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்.
பராசக்தியின் பெயரால்.உலக மாதாவின் பெயரால்.
கல்யாணி உலகத்தில் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்.
அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த பூசாரிதான்.
தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்திலே விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை.
ஆதரவற்று தன் குழந்தை துடித்துச் சாவதை அவள் விரும்பவில்லை.
அவளே கொன்றுவிட்டாள்.விருப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல.
உலக உத்தமர் காந்தி.அஹிம்சா மூர்த்தி.
ஜீவகாருண்ய சீலர்.அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுகுட்டியை கொன்றுவிட சொல்லியிருக்கிறார்.அது கஷ்ட்டமுறுவதை காண சகிக்காமல்.
அதே முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி.
இது எப்படி குற்றமாகும்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வதற்க்கு வழி இல்லை.
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்க்கு பாதுகாப்பில்லை.
என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்..
கோடீஸ்வரனின் வீட்டு பள்ளியறையிலே ஒருநாள்.
மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியில்லே ஒருநாள்.
இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை.
இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
பகட்டு என் தங்கையை விரட்டியது.
பயந்து ஓடினாள்.பணம் என் தங்கையை துரத்தியது.மீண்டும் ஓடினாள்.
பக்தி என் தங்கையை பயமுறுத்தியது.
ஓடினாள்.ஓடினாள்.வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா.வாழ விட்டார்களா என் கல்யாணியை.
 

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை.
அதுவும் என் வழக்குதான்.என் தங்கையின் வழக்கு.
தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு.
கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம்.
குழந்தையை கொன்றது ஒரு குற்றம்.நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?யார்? யார் காரணம்?
கல்யாணியை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலையவிட்டது யார் குற்றம்.
விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?
பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?
கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும், கல்யாணிகளும் குறைய போவதில்லை.
இதுதான் எங்கள் வாழ்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
மு.கருணாநிதியின் பராசக்தியில் இடம்பெற்ற நீண்ட நீதிமன்றத்தனிமொழிகள் https://www.youtube.com/watch?v=SdnOlP94x2g 
இதற்குப் பதிலாகக் கட்டபொம்மனும் ஜாக்ஸன் துரையும் பேசும் உரையாடல் காட்சிகளை ஒருவரே மாறிமாறிப் பேசி நடித்துக் காட்டுவார்கள் .https://www.youtube.com/watch?v=VwYTCFO3Gak. 
பெண்களாக இருந்தால் பேசும் காட்சி மாறிவிடும்.பேசப்படும் வசனம் பூம்புகாரின் காட்சியாக இருக்கும்.: https://www.youtube.com/watch?v=svvgz4Bt3Vo
எனக் கோபம் கொப்பளிக்க வசனம் பேசுவார்கள். நடிகர்களாக ஆகவிரும்பும் ஒருவர் பேசிப்பழகி நடித்துக்காட்ட நிறைய சினிமாக்காட்சிகள் இருக்கின்றன. அவை பலவும் முன்னர் மேடை நாடகங்களாக இருந்தவை என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.
வசனம் பேசுவது அதுவும் நீண்ட வசனம் பேசுவது - கோபமும் ஆத்திரமும் வெளிப்பட வசனம் பேசுவது நடிப்பின் ஒரு பகுதி தான். அதனைக் கைக் கொள்ளவும் சில வழிகள் இருக்கின்றன.
பேசுவது நடிப்பின் மூன்று முக்கியமான கூறுகளுள் ஒன்று. எல்லாக்கலைகளுமே வெளிப்பாடுதான். ஒவ்வொன்றும் அதன் அடிப்படைக் கருவிகளின் வழியாக வெளிப்படுகின்றன. நடிப்பும் ஒரு கலை என்ற வகையில் அதுவும் வெளிப்படுகிறது. அதன் அடிப்படைக்கருவி வழியாக. நடிப்பிற்கான அடிப்படைக்கருவி உடல். மனித உடல் பிற மனித உடல்களோடும், உறவுகொள்வதற்காக உருவாக்கப்படும் பொருட்களொடும் கொள்ளும் உறவில் - வெளிப்பாட்டு  உறவில் நடிப்புக்கலை வடிவம் கொள்கிறது.  உடல் குரல் மனம் என்ற மூன்றுமே நடிப்புக்கலையின் அடிப்படைக் கூறுகள். இம்மூன்றையும் நாம் பிரித்துப் பேசினாலும் உடலே அதன் இருப்பிடம்; வசிப்பிடம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பயிற்சிகள் இருக்கின்றன.
நடிகன் தனது உடலைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளில் சிறப்புக்கவனம் செலுத்தும்போது மனவளப்பயிற்சியாகவும் குரல்வளப்பயிற்சியாகவும் ஆகிவிடுகின்றது. குரல்வளப்பயிற்சியைப் பெற நடிகர்கள் செய்யவேண்டிய சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

உடல் தளர்ச்சி
உடல் சார்ந்த எந்தப் பயிற்சியையும் உடம்பு  தளர்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்போது தொடங்குவது நல்லது. எனவே முதலில் நாம் நம்மை உணரவேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் உடம்பு எப்படி இருக்கிறது என்பதை உணர்வதே ஆகும். அதன் பிறகு நமது மனம் எப்படி இருக்கிறது என்பதை உணர்வதாகும்.
மூச்சுப்பயிற்சி செய்யவிரும்பும் ஒருவர் முதல் உடலைத் தளர்வாக வைக்கப்பழக வேண்டும். கைகள், கால்கள், கழுத்து, இடுப்பு என மடங்கி நிமிரக்கூடிய இடங்களைத் தளர்வாக்க வேண்டும். தளர்வாக இருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே உணர வேண்டும். தேவையானால் பற்றிக்கொள்ளும்படியாக நாற்காலிக்கருகே நின்றுகொண்டு கைகளை மெல்லமெல்ல மேலே உயர்த்திச் செல்லவேண்டும். முடிந்தவரை உயர்த்தலாம். குதிகாலில் நின்று எட்டாத உயரத்தைத் தொட முயல்வதுபோல் உயரவேண்டும். கத்தவேண்டும் என்றால் கத்தலாம். மெதுவாகத் தலையையுயர்த்தி கடல்காற்றை - ஆற்றோர ஈரக்காற்றை சுவாசிப்பதாக நினைத்து உணரவேண்டும். புல்வெளியில் படுத்து அதன் மணத்தை உணரவேண்டும். பிறகு மெதுவாகக் கைகளை இறக்கித் தளரவிடலாம் குனிந்து அனைத்து சக்தியையும் வெளியே விடுவதுபோலக் காற்றை வெளியே தள்ள வேண்டும்.  நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி வெளியேற்றும் பயிற்சியைப் பல தடவை செய்யவேண்டும். கழுத்துப்பகுதியில் பிடிப்பு தோன்றும். அதை இடமும் வலமும் திருப்பிப் பலதடவை இயக்கவேண்டும்.
இப்போது நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம்.வசதியாக உட்கார்ந்துள்ளதாக உணரவேண்டும். இருபுறமும் கைகள் தளர்வாகத் தொங்கட்டும். குதிகாலைத் தரையில் ஊன்றி முன்புறமும் பின்புறமும் அசைக்கவேண்டும்.  மெலிதான சூரியவெப்பத்தில் கடற்கரையில் அல்லது கப்பல் தளத்தில் அமர்ந்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். மெதுவாக அசையலாம். பிறகு தலையைப் பாதத்தில் படும்படி கொண்டுசெல்லவும். இப்போது ரத்தம் உடலின் பலபாகங்களுக்கும் செல்லும்.
இப்போது மெதுவாக எழுந்து நீண்டதாக மூச்சை இழுத்து வெளியே விடவேண்டும். கைகளை மடக்கி நீட்ட வேண்டும். தொங்கவிட வேண்டும். உதறவேண்டும். கை மணிக்கட்டு, விரல்கள் வெளியே கழன்று விழும்விதமாக உதறவேண்டும். நாற்காலியைப் பிடித்துக்கொண்டு குதிகாலை உயர்த்தித் தளர்த்திட வேண்டும். இடது கால் வலதுகால் என மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும்.

மூச்சுப் பயிற்சிகள்
ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது ‘ பாத்திரத்தை உருவாக்குதல் ( Creating a Role)' என்னும் நூலில் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்கிறார்:  ஒரு மனிதன் முழுமையாகத் தனது சுவாச உறுப்புகளை ஒன்றுபடுத்திக் கட்டுப்படுத்தினால், அதன் பலன் மிக உயரியதாக அமையும். உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் நுழையும்; இதயம் துடிக்கும்; ரத்தம் சுத்தமடைந்து சுற்றும்போது வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செயல்படும்; அனைத்தும் புதிதாகிவிடும். நடிகன் என்னும் மனிதனின் வெளிப்பாட்டுக் கருவியே அவனது உடல் என்பதை நினைவில் கொண்டால் அவரது இந்தக் கூற்றின் முக்கியத்துவம் புரியும்.
நடிப்புக்கு கட்டுப்பாடுள்ள சுவாசம் அவசியம். அது மேடை அல்லது காமிராவின் பயத்தைப் போக்கும் சாதாரண சுவாசம் தடுமாற்றத்தை உண்டாக்கும். சுவாசக்கட்டுப்பாட்டிற்கான பயிற்சிகள் சிலவற்றைச் செய்யலாம். ஒவ்வொரு நாள் பயிற்சியின் போதும் ஏதாவது சில நாடகங்களின் வசனங்களை மனனம் செய்து வைத்துக் கொள்வது நல்லது. சில வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
              i.     இதனால் பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், அரசன் எழுப்பிய அற்புதக்கோயிலின், சிலைப்பிரதிஷ்டை விழா நாளை தொடங்குகிறது
             ii.     ஆம் இன்னொரு மஹல். இந்துஸ்தான் முழுவதும் மஹல்கள். பூந்தோட்டங்கள்.சாவை ஏன் வெறுக்க வேண்டும். இந்தமாதிரி சமாதிகள் கட்ட முடிந்தால்..! இயற்கை மனிதனைப் பார்த்து, ‘ என்னைக்கவிதையாக்கு’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதோ பார்..! கல்லில் எழுதிய வெண்பா.. தாஜ்மஹல்.! இன்னொரு கவிதை.. இன்னொரு கவிதை [இந்திரா பார்த்தசாரதியின் ஔரங்கசீப்பில் ஷாஜகான்]
iii.     (கோபாவேசத்துடன்) சின்ன விஷயமா..? நான் என் தந்தையைக் கொன்றது சின்ன விஷயமா..?.தொழுகை சமயத்தைக் களங்கப்படுத்தியது சின்ன விஷயமா? எனக்கு ஜனங்களின் வார்த்தையைப் பற்றிக் கவலையில்லை பரணி. ஆனால் அவர்களுடைய கோணலான மனங்களைப் பற்றித்தான். என் தாய். என்னைப் பெற்றெடுத்த பெண்! அவளுக்கு என் தந்தையைப் பிடிக்காது. ஆனால், அவளுக்கும் என் மேல் கோபம். ஏன் தெரியுமா? அவரோடு என் தம்பியும் இறந்தான். (கிரிஷ் கர்னாடின் துக்ளக்கில் முகம்மது துக்ளக்)

iv.     ஆசை தணித்தாயடா !- உயிர் மாமனே! ஆவியைக் காத்தா யடா
பூசை புரிவோமடா! - உயிர் மாமனே! பொங்கலுனக்கிடுவோமடா
நாச மடைந்ததடா!- நெடுநாட் பகை நாமினி வாழ்ந்தோ மடா!
பேசவுந் தோன்று தில்லை; - உயிர் மாமனே- பேரின்பங் கூட்டி விட்டாய்.       ( பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன்)
குரல்வளப் பயிற்சிகள்
தளர்வாக நின்று மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளே நிறுத்திக் கொண்டே கைகளையும் தோள்பட்டைகளையும் உயர்த்தவேண்டும். எவ்வளவு நேரம் காற்று உள்ளே இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளே இருக்கலாம். பின்னர் காற்றை வெளியே அனுப்பலாம். இதைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். அதன் பின்பே பேசத்தொடங்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கு கழுத்துப்பட்டை சுவாசப்பயிற்சி என்று பெயர்
தளர்வாக நின்று, திறந்த கையை மார்பின்மீது வைத்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது மார்பு உயரும். மூச்சைவெளியிட வேண்டும். பலமுறை இதைச் செய்ய வேண்டும். திரும்பவும் அந்த வாக்கியங்களைப்பேச வேண்டும். இந்தப் பயிற்சி மார்புக்கூடு சுவாசப்பயிற்சியென அழைக்கப்படுகிறது.
3. தளர்வாக நின்று, மூச்சை உள்ளிழுத்து கையால் கீழ்விலா எலும்புப் பகுதியை அழுத்த வேண்டும். அவ்விலாவெலும்புகளை முன்புறமாகத் தள்ளி மேலேயுயர்த்திவிட வேண்டும். திரும்பவும் சிலமுறை செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களைப் பேச வேண்டும்.பேசும்போது சுவாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்பயிற்சி இடைசார் மூச்சுப்பயிற்சி எனப்படுகிறது
4. தளர்வாக நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வலது உள்ளங்கையை அடிவயிற்றில் - விலா எலும்புகளின் அருகில் இடது உள்ளங்கை இருக்கட்டும். மூச்சை இழுத்துவெளிவிடவும். இப்போது அதே வாக்கியங்களை முயற்சிக்கவும். இது உதரவிதான - அடிவயிற்றுச் சுவாசமாகும். நெஞ்சில் சுவாசிப்பதை நடிகர்கள் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். அது சாதாரண சுவாசமே. நடிகர்களுக்குத் தேவையானது மார்புக்கூட்டில் சுவாசிப்பதும், இடையிலிருந்து சுவாசிப்பதுமாகும்.
5. தளர்வாக நின்று, முழுமையாகக் காற்று இழுத்து நுரையீரலை நிரப்ப வேண்டும். வாயைச் சிறிதாகத் திறந்து வெளியே அனுப்பவும். திரும்பவும் இதைச் சில தடவை செய்ய வேண்டும். இப்படிச்செய்வது ஆழமான சுவாசம் எனப்படுகிறது.
6. தளர்வாக நின்று ஆழமாக மூச்சுக்காற்றை இழுத்து நிரப்பிய பின் மனத்திற்குள் 1,2,3,4,5 என எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது காற்றை வெளியே விட வேண்டும். அப்போது 6,7,8,9,10 என எண்ணிக்கை செய்ய வேண்டும். 10 முறை இப்படிச் செய்யலாம். இந்தச் சுவாசமுறை கட்டுப்பாட்டுச் சுவாசமாக அமையும் .

குரல் வீச்சு
1.    இரண்டுபேர் 10 அடி தூரத்தில் நின்று குறிப்பிட்ட சொற்களை , வாக்கியங்களைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் கேட்க வேண்டும். ஒருவர் சொன்னதை மற்றொருவர் திரும்பச் சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியைக் கூட்ட வேண்டும்.
2.    உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் நாதஸ்வர மேளக்கச்சேரி அல்லது மேற்கத்திய இசைக்கிடையே ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாகக் கேட்கும்படி பேச வேண்டும்

கால அளவு
ஒரு நடிகர் ஒரு நிமிடத்தில் குறைந்தது 160 வார்த்தைகளைப் படிக்க வேண்டும். படிப்பது புரியவேண்டும். சாதாரண - அன்றாட நடப்பு - செய்தித்தாள் கட்டுரை போன்றனவாக இருந்தால் ஒரு நிமிடத்தில் 190 வார்த்தைகள் படிக்க வேண்டும்.
உச்சரிப்பு
ஒலியளவும் உச்சரிப்பில் ஒருபோல் இருக்கும் சொற்களை உச்சரிப்புக்காகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மொழியிலும் நா திரிப்புச் சொற்களும் வாக்கியங்களும் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்துப்பயன்படுத்தலாம்.
1.    ஆசை              தோசை          பூஜை
2.    காக்கை          கச்சை             இச்சை
3.    காகம்              பாசம்              தாகம்
4.    வேகம்            பாசம்              கஜம்
5.    பல்லக்கு       சில்லறை        வல்லமை                  
6.    பலப்பல         சிலச்சில         கொழகொழ
7.    பள்ளம்           கள்ளம்           வள்ளம்
8.    பழம்                பலம்               கிழம்
9.    தாத்பரியம்               சந்தோஸம்                வியாக்யானம் 
        மகிழ்ச்சி                   இகழ்ச்சி                      புகழ்ச்சி
1 புறப்படுகின்றது           நடந்துபோனான்       சென்றுநின்றாள்
1 அற்றைத் திங்கள்        இற்றைத் திங்கள்      எற்றைத் திங்கள்
1 திங்கள்மாலை             வெள்ளிக்காலை       எங்கள் வேளை
வந்தேமாதரம்              சொந்த பந்தம்           நொந்த மனசு
1 கண்டேன் சீதையை     தந்தேன் நீதியை       கொன்றேன் தேவியை
           
பின்வரும் வசனத்தொடர்ச்சியை வேதபாராயணம் செய்வது போலவும், வேள்விக்கு முன் அமர்ந்து முனிவர்கள் சொல்வதுபோலவும் சொல்லிப்பார்க்கலாம்

1.    லோகநாதரே, என்னிடத்தினின்று இவ்வுலகத்தோற்றத்தையறியுங்கள்.முன்னே அங்கு எல்லாம் ஜயரூபமாகவே யிருந்தது. அதில் பூமி சிருஷ்டிக்கப்பட்டது.
2.    குஷிக்கு விகுஷியென்ற ஒரு வீரர் பிள்ளையாய்ப் பிறந்தார்.
3.    நஹீஷர் குமாரர்.தருமத்தை கைவிடாதவரான நாபாகர்.
4.    ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

5.    அதன்பிறகு, சுயம்புவான பிரமா, தேவதைகளுடன் தோன்றினார்.
6.    விகுஷியின் குமாரர் வெகு காந்தியுடன் விளங்கிய பிரதாபமுள்ள பாணர்.
7.    நாபாகருக்கு, அஜரென்றும் ஸீவரதர் என்றும் இரண்டு குமாரர்கள்.
8.    ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

9.    இஷ்வாகுவை அயோத்தியில் பூர்வ அரசராகவெண்ணுங்கள்
10. பின்பு பிரசித்தரான நாராயணமூர்த்தி வராஹரூங்கொண்டு பூமியை ஜலத்திலிருந்து எடுத்தார்.
11. பாணருக்கு மகாபாகுவான அநரண்யரென்ற கீர்த்திபெற்ற மகனாற்பிறந்தார்.ஸத்துக்களு ளுத்தமமான அவர் மகாராஜாராயிருந்த காலத்தில் , மாதம் மும்மாரி பெய்தது. ஒரு திருடனுமில்லை.
12. அஜருடைய குமாரர் வெகு தருமாத்மாவாகிய தசரதர்.
13. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.


14. இஷ்வாகுவை அயோத்தியில் பூர்வ அரசராகவெண்ணுங்கள்
15. அவரிடமிருந்து மரீசி யுண்டானார்.
16. அஸமஞ்சனுக்கு வீரியவானான அம்சுவான் என்ற பிள்ளையுண்டானான்.
17. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.


18. மரீசியினிடமிருந்து காசியபர் பிள்ளையாகப் பிறந்தார்.
19. அம்சுவான் குமாரர் திலீபர்.
20. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.
21. காசியபரிடமிருந்து சூரியபகவான் உண்டானான்.திலீபருக்கு பிள்ளை பகீரதர்.
22. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.

23. அவனுடைய பிள்ளை மநு. அவர் ஒரு பிரஜாபதி.
24. பகீரதரிடமிருந்து ககுஸ்தர் பிறந்தார். அவரால் இவ்வம்சம்த்தவர்கள் காகுஸ்தரென்று பெயர் பெற்றார்கள்.
25. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்.


26. மநுவின் குமாரர் இஷ்வாகு.அந்த இஷ்வாகுவை அயோத்தியில் பூர்வ அரசராக எண்ணுங்கள்.
27. ககுஸ்தர் பிள்ளை ரகு. அவரால் இவ்வம்சத்தவர்கள் ராகவரென்று பெயர் பெற்றார்கள்.
28. ராமரென்று புகழ்பெற்ற தாங்கள் அவருடைய மூத்த குமாரராகின்றீர்கள். ஆகையால் தாங்கள் தங்களுடைய ராச்சியத்தைக் கைப்பற்றுங்கள்

நூற்றுப்பத்தாம் சருக்க்கம்.வசிஷ்டர் ராமரைப் பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்ளவேண்டல்.

நடிக்கவிரும்பும் நீங்கள் நடிங்க. அதற்குமுன் பயிற்சிகளைத் தொடங்குங்கள்.

- பயிற்சிகள்தொடரும்

No comments :