வெகுமக்கள் எழுத்தின் இரண்டு ஆளுமைகள்: யுவகிருஷ்ணா, அதிஷா


தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள்,  முகநூல், ட்விட்டர் என இணையத்தின் அச்சு ஊடகத்தில் வேலைபார்க்கும் ஒருவருக்கு இணையவெளிப் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட காலம் நமது காலம். தமிழகத்தின் பிரபலமான அச்சு ஊடகங்களுக்குள் பணியாற்றும் இந்த இரண்டு  பெயர்களையும் இணையவெளியில் அலையும் ஒருவர் சந்திக்காமல் இருந்தால் ஆச்சரியம். ஒருவர் யுவகிருஷ்ணா, இன்னொருவர் அதிஷா..
நடப்பு நிகழ்வுகளையும் ஆளுமைகளையும் கவனிப்பவராகவும் கருத்துச் சொல்பவராகவும் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ள அவர்,எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையின் இணைய எழுத்தாளர் விருதுபெற்றவர். சரோஜாதேவி யுவகிருஷ்ணாவின் ஆறாவது நூல். சமர்ப்பணம் சாரு நிவேதிதா..பிரதியுருவாக்கம் பற்றிப் பேசும்போது எவை எழுதப்படுகின்றன என்ற கேள்விக்கு  வெளிப்படையாகத் தெரிவது ஒன்று, அடியில் ஓடும் சங்கதிகள் எப்போதும்  அழியாத சரக்குகளே.  இருப்பதும் இல்லாமல் போவதும் என்ற பேருண்மையின் சிறகுகளை எழுதியெழுதித் தீர்க்கின்றன எழுத்துகள். அந்தப் பேருண்மைகளை  மரணம், உழைப்பு, காமம், மொழி  என வகைப்படுத்திச் சொல்கிறது திறனாய்வும் வாழ்வியலும். இந்நான்கும் எப்போதும் தீராத சங்கதிகளாக - எழுதப்படும் பனுவல்களின் பக்கங்களாக நீள்கின்றன.  எழுதப்படும் விதத்தின் வழியாகவும் உருவாக்கப்படும் கருத்தியல் மூலமும் சில உண்மைகள், பேருண்மைகளாகவும்  சில உண்மைகள்,  சிற்றுண்மைகளாகவும் கிளை பிரித்து எழுதப்படும்போது எழுத்துகளின் வகைப்பாடுகள் உருவாகின்றன.

யுவகிருஷ்ணாவும் காமமென்னும் பேருண்மையின் சிறுகிளையையே எழுதிப் பார்க்கின்றார். அந்தச் சிறுகிளை சிற்றின்பம் எனைத் தாழ்த்திக் கொள்ளும் சிக்கலுக்குரிய ஒன்று. எழுத்தாளன் காமத்தை எழுதலாம். அது விளக்கப்படும் ஒன்றாக இருக்கும்போது பாடநூலாக மாறி அறிமுக நோக்கத்தை நிறைவேற்றும். அப்படியெழுதுபவன் புனைவெழுத்தாளனாக நினைக்கப்படும் வாய்ப்பில்லை. புனைவெழுத்தாளன் காமத்தைக் கொண்டாடலாம்; அப்போது காமம் அனுபவிக்கத்தக்கதாக ஆகிவிடும். அதன் தொடர்ச்சியாகக் காமம் கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நினைக்கப்படவும் வாய்ப்புண்டு. எல்லாப் பேருண்மைகளையும் மனிதர்கள் கடந்துசெல்ல முயல்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் நடப்பதுதான் இல்லை. காமமும் கடந்து சென்றுவிடக்கூடிய ஒன்றல்ல.
காமம்சார்ந்த நுழைவைக் கோரும் - நினைப்பைத் தூண்டும் 40 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள், துணுக்குகள், புனைவுகள் எனும் ஒவ்வொன்றும் காமத்தை நினைவுப்பரப்பில் கொண்டுவருகின்றன. பொதுப்புத்தியில் காமத் தூண்டலுக்கான பொருட்களாக - பெயர்களாக  - நபர்களாக- சொற்களாக - இருப்பனவற்றைக் கொண்டு அதன் பொதுப்புத்தி அர்த்தத்திலேயே எழுதப்படுகின்றன. சினிமாவை - குறிப்பாக நடிகைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் இந்த அர்த்தம் ஆண்களால் கொள்ளப்படும் அர்த்தம் என்பது கூடுதல் தகவல். அதனாலே இக்கட்டுரைகள் அனைத்தும் பெண்ணுடலை எழுது வெளியாகக்கொண்டிருக்கின்றன.
காமத்திற்கு உடல்கள் தேவை. ஓருடல் அல்ல; ஈருடல்கள். எதிர்பால் உடல்களாயின் கூடுதல் சிறப்பு. அப்படியானால் காமத்தை எழுதும் எழுத்தும் ஈருடல்களையும் எழுதவேண்டும்; பேச வேண்டும்; தேடவேண்டும்; கொண்டாட வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஒன்றை மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் அதன் நோக்கம் காமத்தை எழுதுவதல்ல. காமம் சார்ந்த கற்பனையைத் தூண்டுவது. பொதுப்பார்வையாளர்களின் விருப்பத்திற்காகத் தமிழ்ச் சினிமாக்களில் இடம்பெறுவதாகச் சொல்லப்படும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தையொத்த எழுத்துப்பகுதியை அச்சுவெளியிலும் இணையவெளியிலும் எழுதிக்காட்டும், எழுத்துக்காரரான யுவகிருஷ்ணா, தனது முன்மாதிரிகளாக சுஜாதாவையும் சாரு நிவேதிதாவையும் நினைக்கிறார்.

காமத்தைப் பற்றிய பார்வையில் சுஜாதாவும் சாருவும் ஒருபடித்தானவர்கள் அல்ல. சாரு நிவேதிதா, காமம் அனுபவிக்கத்தக்க ஒன்று எனவும் கொண்டாடப் பட வேண்டியது எனவும் பேசிவருபவர். அவரது எழுத்து அந்த இலக்கை அடையாமல் பலநேரங்களில் ரசிப்பதற்கான வர்ணனையாகவும் வாசிப்பவர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் நோக்கத்தோடும் வினையாற்றுக்கூடியது. அத்தோடு இருபால் உடலையும் எழுதிப்பார்த்தவர். இரண்டிற்கும் சமமான விகிதம் இருக்கிறதா? ஆண் நோக்கிலிருந்து பெண்ணுடல் எழுதப்பட்டிருக்கிறதா? என்பது தனிப்பேச்சாக விரியக்கூடியது. ஆனால் சுஜாதாவிடம் காமம், அறிந்து கொள்ளவும், அனுபவிக்கும், கடந்து செல்லவும் வேண்டியது என விவாதிப்பதல்ல. வாசகனிடமிருந்து விலகி நிற்கும் ஒன்று.  மூக்கைத் துளைக்கும்போது அந்த மணத்தை மல்லிகை மணமா? தூரத்தில் போகும் நபர் பூசியுள்ள அத்தர் வாசமா? எனக் கேட்டுவிட்டு நகரும் மனநிலைக்கு உரியது.  அத்தோடு பெண்ணுடலை மட்டுமே நுகரும் மணமாக நினைக்கும் நோக்குடையது. இதனை ஆண் நோக்கு என்ற கலைச்சொல்லால் குறிக்கிறது பெண்ணியம்.  
நூலுக்குத்தலைப்பு வைப்பதில் தொடங்கி காமத்தின் மீது ஈர்ப்பற்றவராக வெளிப்படும் யுவா, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் - வேடிக்கை பார்க்கச் சொல்லி விவரிக்கும்- எழுத்துக்காரராகவே இருக்கிறார்.

மூன்று கதைகள், ஐந்து விமரிசனங்கள், எட்டு நினைவுக்குமிழிகள்

அதிஷா அதிஷா

ஃபேஷ்புக் பொண்ணு, 2014 இல் உயிர்மை வெளியிடுகளில் ஒன்றுசிறுகதை என்ற வகைப்பாட்டில் 15 தலைப்புகளில் அச்சிடப்பட்டுள்ள தொகுப்பு. மொத்தமாக வாசித்தபின் இப்பதினைந்தும் சிறுகதைகள் தானா? என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளாமல் நகரமுடியவில்லை.

கதைக்குள் பாத்திரங்களை உருவாக்கும் கதாசிரியரால், ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளின் இணைப்பு மூலமும், அவை நிகழும் காலப்பின்னணி உருவாக்கும் முரண்பாடுகள் அல்லது மனவோட்டங்கள் மூலமும் கதையின் வடிவம்  உருவாகின்றது என நம்புபவன் நான். இந்த அளவுகோல்களோடு அதிஷாவின் கதைகளை வாசித்தபோது  நீலக்கை, ஓம்புயிர், கெட்டவார்த்தை ஆகிய மூன்று மட்டுமே கதைகளாக இருந்தன. கோயம்புத்தூரில் நடந்த தொடர்வெடிகுண்டு வெடிப்புப் பின்னணியில் நடக்கும் நீலக்கை, நேசிக்கப்படும் நாய்க்கும் அதன் குட்டிக்குமான உறவுக்குப் பின்னால் தன் தாயைத் தேடும் குழந்தை மனம் வெளிப்படும் ஓம்புயிர், தாயின் மரணத்தின் பின்னணியில் ஒருவனது இயலாமை உருவாக்கும் கெட்டவார்த்தைக் கோர்வைகள் என மூன்றும் கதை வாசிக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றனஅவற்றத் தாண்டினால் ஐந்து பிரதிகள் சமகால நிகழ்வுகளை வெளிப்படையாக நினைவூட்டுகின்றன. சமகாலத்தின் மீது விமரிசனங்களை வைக்கின்றன. ஆனால் நினைவூட்டல்கள், கதையென எழுதியனவற்றைக் கட்டுரைத் தொனிக்குள் கொண்டுபோய் நிறுத்தி விடுகின்றனநித்யானந்தா ஆஸ்ரமத்தை நினைவூட்டும் சாமியார் மகிமை, விஜய் தொலைக் காட்சியின் சூப்பர் சிங்கரை நினைவு படுத்தும் பாட்டுத்தலைவன், குழந்தைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க உதவும் தொண்டு நிறுவனங்களை நினைவுபடுத்தும் பத்து பத்து எழுத்தாளர்- வாசகர் உறவை விமரிசிக்கும் இரண்டு கதைகள் (வாராது வந்த வாசகன், விதியுடனொரு விளையாட்டு)  என ஐந்தும் உருவாக்குவன நகைச்சுவைத் தொனி. முழுமையும் நகைச்சுவையாகவும் இல்லாமல் விமரிசனமாகவும் இல்லாமல் இவை வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் ஒரு புன்னகையைத் தோற்றுவிக்கின்றனஅதைத் தாண்டி அவை உருவாக்கும் அனுபவம் நிலையானவையல்ல; உடனடித்தன்மை கொண்டவை. மீதமுள்ள அனைத்தும் தீவிரமான சிறுகதைத் தொனியுடன் எழுதத் தொடங்கி, தொடங்கிய இடத்திலேயே நிற்கின்றன. பெரும்பாலும் ஒரு தகவல், ஒரு நபர் அல்லது ஒரு சந்திப்பு காரணமாக உண்டாகும் எண்ண ஓட்டங்களாகவே விவரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணங்களின் முடிவில் ஏதாவதொரு நீதியை  அல்லது நடைமுறைச் சிக்கலை(குழந்தை பொய் சொல்லாது ஆணும் ஆணும் காதலிக்க முடியாது, கல்யாணமானவன் காதலிக்க மாட்டான், ஒருபால் உறவு ஏற்கத்தக்கதல்ல போன்ற ஒழுக்கவிதிகள்) முன்வைத்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த முடிப்புகள் பெரும்பத்திரிகைக் கதைகளின் தன்மையிலானவை. ஆனால் எண்ண ஓட்டங்கள் தீவிரமானவை

பாதிக்கும் மேற்பட்ட கதைகள் நிகழ்காலத்தின் தகவல் தொடர்புச் சாதனங்களையே கதைவெளிகளாகக் கொண்டிருக்கின்றன. பிறமொழிச் சொற்களை எப்படி எழுத வேண்டுமென்ற அக்கறை எதுவும் இல்லாது, மொழியைப் பயன்படுத்தியுள்ளார். உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் மீதான நம்பகத்தன்மையைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்ற தீர்மானமும்கூட வெளிப்படவில்லை. ஆனால்,  அவரது கதைகளை அவரே படித்து விமரிசனப் பார்வையை உருவாக்கிக்கொள்ளும்போது எழுத்துப் பாணியையும் கண்டடையக்கூடும். அந்தப் பக்குவம் அதிஷாவுக்கு இருப்பதாக இந்தப் புத்தகம் சொல்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்