June 03, 2015

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...


முன்னுரை;
மனிதன் என்னவாக இருக்கிறான் என்ற கேள்வி தத்துவம் சார்ந்ததாக இன்று அறியப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வி அடிப்படையில் உலகில் உள்ள மனிதன் உள்ளிட்ட உயிரினங்களும்,  கடல், வான், அண்டம், பூமி, கோள்கள் என இயங்கும் இயற்கைப் பொருட்களும், இவ்வியற்கைப் பொருட்கள் தரும் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பெறும் செயற்கைப் பொருட்களும் எவ்வாறு இருக்கின்றன என்ற அறிதலுக்கான அடிப்படைக் கேள்வியிலிருந்து உருவாகும் அறிவுத்தோற்றவியல் ( Epistemology) கேள்வியே என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.


மனிதன் என்னவாக இருக்கிறான் என்ற மூலக்கேள்வியை மனிதத் தன்னிலை என்னவாக இருக்கிறது என மாற்றிக் கேட்கலாம். அத்தன்னிலை உடலாகவும் உயிராகவும் இருக்கிறது என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. உயிர் என்பதை ஆன்மா என விளக்கிச் சொல்ல பலர் முயன்றனர். ஆன்மாவின் பயணம் பற்றிப் பேசிய கருத்துகளின் தொகுதி சமயவியலாகவும், இறையியலாகவும் வளர்ச்சி பெற்றன

மனிதத் தன்னிலை என்னவாக இருக்கிறது என்ற அதே கேள்விக்கு உடலாகவும் உயிராகவும் மட்டுமல்ல; அந்த உடலும் உயிரும் எந்தப் பரப்பிற்குள் வாழ நேர்கின்றதோ, அந்தப் பரப்பு உருவாக்கும் சூழலின் பகுதியாகவும் இருக்கிறது  என்ற விளக்கம் ஒரு கட்டத்தில் தரப்பட்டது. சூழல் வாழிடம், உணவு உடை, உறையுள் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொள்ளத் தேவையான நடைமுறைகள், அவற்றிற்காக  உறவு கொள்ளும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், அவற்றால் உருவாக்கப்படும் எதிர்பார்ப்புகள் என விரியும் காரணிகளால் ஆகக்கூடியது.

மனித உயிரியின் எதிர்பார்ப்பு நிலையற்றது. குறிப்பாக விளக்கி விட முடியாதது. அதனைத் தீர்மானிக்கும் சக்தி வெளிப்படையாகத் தெரியும் சூழலுக்கு மட்டுமே உரியதல்ல. ஆழ்மனத்திற்கும், அம்மன அமைப்பை உருவாக்கும் தொல்படிவக் கூறுகளுக்கும் கூட அதில் பங்கு உண்டு என நவீனச் சிந்தனை முறைகள் கூறுகின்றன. தனிமனிதத் தன்னிலையை உருவாக்கும் மன அமைப்பை விளக்கும் அறிவுத் துறை அதனை ஆளுமைத்திறன் என வகைப்படுத்திக் காட்டுகின்றது. ஆளுமைத் திறனை - அறிவு எனக் கூறுவதும் உண்டு. இவ்வாளுமைத் திறனை - அறிவை உருவாக்கிக் கொள்ள ஒரு மனித உயிரிக்குப் பல்வேறு கூறுகள் துணைபுரிகின்றன; வினைபுரிகின்றன.

அறிவுத் தோற்றவியலின் உட்பிரிவுகளே பின்னர் ஒவ்வொரு புலமாகவும் துறையாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. அவ்வளர்ச்சியின் போக்காகவே மனித நாகரிகம், சமூக வளர்ச்சி போன்றன கணிக்கப்படுகின்றன. ‘மனித நாகரிகம் தோன்றி வளர்கின்றது’ என்று விளக்குகின்ற போது மனிதத் தன்னிலையின் ஒவ்வொரு கூறும் மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றது என்பது பொருள். அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றிய அறிவு மட்டுமல்ல. அவன் இயங்கும் குடும்பம், பணியிடம் போன்ற நிறுவனங்களைப் பற்றிய அறிதலும் தான்.  அந்த அறிவைப் பெறும் வழிகள் பல. 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை (learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல் (debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல் (open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning) என நவீனக் கல்வி அவற்றை விளக்குகிறது.

தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறிவுத்தோற்றவியல்

தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்றதிகாரம் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களால் ஆனது. பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மரபியல் தொல்காப்பியப் பனுவலின் கடைசி இயல். அவ்வியலில் பேசப்படும் பொருள்கள் மொழி, இலக்கணம் என்பதைத் தாண்டியன என்பதைச் சொல்வது இக்கட்டுரையின் நோக்கம். 

 உயிருள்ள பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன; அவற்றின் இளமைப் பெயர்கள் எவ்வாறு சுட்டப்படும் என்றும் அங்கே பேசப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக உயிர்கள் அவற்றின் புலனுணர்வை மையப்படுத்தி ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான வகைப்பிரிப்பைப் பேசும்

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.(தொல். பொருள். மரபியல். 27 )

என்ற சூத்திரம் அமைந்துள்ளது. 


தமிழின் சமூகவியல் பார்வை

            தமிழகத்தின்  இனக்குழுக்களை முறைப்படுத்தி, ஒரு பகுப்புக்குள் கொண்டு வருவதில் காணப்படும் குழப்பமும் தெளிவின்மையும், தொல்காப்பியர் காலத்திலேயே காணப்படுகின்றன எனலாம்.  இக்குழப்பம், வட இந்திய மரபான வருணாசிரம முறையைத் தமிழகச் சூழலில் பொருத்திக்காட்ட முயன்றதன் விளைவாகத் தோன்றியதாவேறு காரணங்களினால் விளைந்ததா என்பது தனியான ஆய்வுக்குரியது. இங்குத் தொல்காப்பியத்தில் தொடங்கி, சாதிப்பகுப்பு முறைகள் எவ்வாறிருந்தன என்பதை முதலில் காணலாம். தொல்காப்பியம் அகத்திணையியலிலும், மரபியலிலும் இத்தகு பகுப்பு முறைகள் பற்றிக் கூறக் காணலாம். நிலம்என்ற அடிப்படையில் அவற்றிற்குரிய மாந்தர்களாகப் பகுப்பு செய்வதற்கு முதலில் தொல்காப்பியம் முயலுகிறது. ஆயர், வேட்டுவர் என்று குழுக்களைப் பகுப்பது இத்தகைய முயற்சியேயாகும். ஆயின்  இதே அகத்திணையியில், ‘மேலோர் முறைமைநால்வர்க்கும் உரித்தே’ ‘’மன்னர் பாங்கின் பின்னோர் ஆகபஎன்றும் கூறுகிறது.மரபியலில் வருணமுறையையொட்டிய ஒரு பிரிப்பாக ‘‘அந்தணர், அரசர், வைசியர்,வேளாளர்என்றும் பாகுபாடு செய்கின்றது. அப்பாகுபாட்டில் ஒவ்வொரு குழுவினரின் கடமையும் கூறப்பட்டுள்ளது.

            தொல்காப்பியர் தரும் அந்தணாளர் என்ற பிரிவு மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதைப் போலவே கடமைகளைக் கொண்டதாக இருக்கிறது.  ஆனால் இரண்டாவது வருணமாகிய சத்திரியன் என்பது அந்த வரிசையில் வைத்துப்பார்க்கும் போது ‘‘அரசர்என்று குறிப்பிடப்படுகின்றது. அவர்கள், அரசர் என்றும் மன்னர் என்றும், வேந்தர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் இவர்கள் படையும் குடையும் முரசும் கொண்ட செங்கோல் அரசர்களாகவே சொல்லப்படுகின்றனரேயன்றி, மனு கூறுவது போல அனைவரையும் அதாவது ஒரு குலம் முழுக்கவும் கூறவில்லை.

            மேலும் வைசியர் என்பது, சிறப்பாகப் பயிர் செய்தல், தொழில் செய்தல், வணிகம் செய்தல் முதலிய கடமைகளைக் கொண்டிருப்போரைக் குறிப்பது.  ஆனால் தொல்காப்பிய மரபியல், ‘’வைசியகன்  பெறுமே வணிகவாழ்க்கை’  என்று அறுதியிட்டு உரைப்பதுபோலக் கூறுகிறது. இனிச் சூத்திரர் என்ற சொல்லோ வருணாசிரமதர்மத்தில் அதற்குத் தருகின்ற விளக்கமோ தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. மாறாக, நான்காவது வருணம் என்ற அந்த இடத்தில் வேளாளர்என்பவர்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  வேளாளர் பற்றிக் கூறும்பொழுது,‘வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி

என்று கூறுகிறது. எனவே வைசியர்க்கு மனு கூறுகின்ற பயிர்த்தொழில் என்பதைத் தனிப்படுத்தி, அத்தொழிலுக்குரியவர் ‘’வேளாண்மாந்தர்என்பவராகக் கூறி, வகைப்படுத்த முயலுவதைத் தொல்காப்பியத்தில் காணமுடிகின்றது.

            மேலும் சத்திரியர் என்பார்க்குரிய கடமைகளாக மனு கூறுகிற போர்த்தொழில் அவர்க்கு மட்டுமின்றி ஏனோர்க்குமுரிய ஒரு பொதுப்பண்பாக மரபியல் பேசுகின்றது.வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்குமுரிய

என்பது தொல்காப்பியம். ஏனோர் என்பார் வைசியரும், வேளாளரும் ஆவர். எனவே மனு கூறுகின்ற கடமைகளும், அவற்றிற்கேற்ற பகுப்புமுறைகளும் தொல்காப்பியத்தில் அப்படியே காணப்படவில்லை என்பது உண்மை. ஆனாலும் நால்வர் என்று பிரிப்பதும் உயர்ந்தோர்’ ‘இழிந்தோர்என்று கூறுவதும்  அக்காலத்தில் வழக்கில் இருந்தன என்பது கண்கூடு.இந்தத் தெளிவற்ற வருணப்பிரிவினைதான் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு பகுப்புமுறையாகக் கருதப் பட்டு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கால கட்டத்திலும் நிலவிய பல்வேறு சாதிகளை இந்த நான்கனுக்குள்  பகுத்து அடக்குவதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

            வடஇந்திய மரபும் தமிழக மரபும் ஒன்றல்ல; இரண்டும் வேறு வேறானவை; அவை எப்பொழுதுமே இணைந்து நிற்கவில்லை என்பதை முந்திய ஆய்வுகள் சிலவும் நிரூபித்துள்ளன.  ‘’இந்தியக் கலாசாரத்தில் திராவிடர்களின் பண்பாட்டுக்கூறுகள்’ (The Dravidian Elements in the Indian Culture,  என்ற நூலையெழுதிய கில்பர்ட் ஸ்லேட்டர்  (Gilbert Slater), திராவிடர்களிடையே காணப்பட்ட பிரிவினைகளுக்குப் பொருளாதாரமும் தொழில்களுமே அடிப்படையாக இருந்தன என்கிறார்.  இதே போல் சங்க இலக்கியங்களையும் பிறவற்றையும் மூலங்களாகக் கொண்டு பண்டைய கேரளம்எனும் நூலையெழுதிய குஞ்ஞன்பிள்ளையும் வருணமுறைக்குள் பண்டைய கேரளத்து மக்களைத் தினிப்பதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது எனக் காட்டுகின்றார் [ிரிவாகாசிக்கங்கே செல்க:.http://ramasamywritings.blogspot.in/2012/09/blog-post_3.html}


நூலறிவும் முறையியல் முறைமைகளும்


. நூல் அல்லது பனுவல் உருவாக்கத்தில் இருக்க வேண்டிய முறையியலை விரிவாகச் சொல்லும் தொல்காப்பிய மரபியல் தமிழ் அறிவுத்தோற்றவியலின் மூலக்கிடங்கு  அதில் உலகம் என்பது ” நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் “  என்ற குறிப்பும்,  இரு திணை ஐம் பால் இயல்பு மாறாமல் வாழும் வாழ்க்கை நெறி தழுவப்பட வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. ( 91) மொழியின் வழக்கு இரண்டு வகையானது என்ற தகவலும் அதனைக் கொண்டு எழுதப்படும் பனுவல்கள் முதன்மைப் பனுவல்கள், வழிப்படுபனுவல்கள் என இருவகை என்ற குறிப்பும் அவற்றை உருவாக்கும் விதம் தொகுத்தல்  விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்ற விளக்கங்களும் சொல்லப்பட்டுள்ளன.  அதனைப் பேசும்போது 10 குற்றங்கள், 32 உத்திகள் பற்றியெல்லாம் தொல்காப்பியம் பேசுகிறது. அவை இன்றுள்ள நூலாக்கம் மற்றும் பதிப்புத் துறை நுட்பங்கள் மட்டுமல்ல. ஆய்வு முறையியல் விதிகளும் கூட.

2 comments :

வன்பாக்கம் விஜயராகவன் said...

ஐயா

நீங்கள் குறிப்பிடும் கில்பர்ட் ஸ்லேடர் மிகவும் பிர‌ச்சினைக்குறியது, ஸ்லேட்டரின் எழுத்தினால் இந்திய வரலாறு கிஞ்சித்தும் விளங்கப்போவதில்லை. ஸ்லேடர் 19ம் நூற்றாண்டு குழப்பங்களை விமர்சனம் இல்லாமல் உள்வாங்கிக்கொண்டுள்ளார். முக்கியமாக ஒரு மொழிக்குடும்ப‌த்தை ஒரு இனமாக சமன்வயப்படுத்துவது தர்க்கரீதியாக செல்லாது, அந்த தவற்றை 20ம் நுற்றாண்டு ஆய்வாளர்கள் கைவிட்ட‌னர் - வட, வடகிழக்கு, வடமேற்கு இந்தியாவில் எந்த அளவு திராவிட மொழிகள் இருந்தன என்பது சர்ச்சைக்குறியது, மேலும் திராவிட மொழிக்குடும்பம் மட்டுமல்ல, ஆஸ்திரலேசியன், டிபடோ-பர்மீஸ், மற்றும் அடையாளம் தெரியாத மொழிக்குடும்பங்களும் வட, வடமேற்கு, வடகிழக்கு இந்தியாவில் இருந்தன, இருக்கிற‌ன.

இன அடையாளமாக, இன சுய அடையாளமாக திராவிட மொழிகள் பேசும் மக்கள் எப்போதும் தன்னை "திராவிடன்" என அழைத்ததில்லை. இன அடையாளமாக , இந்திய மரபில் பஞ்ச திராவிட பிராமணர்கள்தான் , திராவிடன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டனர். மேலை நாட்டு ஆய்வாளர்கள் - கால்ட்வெல் உட்பட - இந்திய மரபு அடையாளங்கள் தெரியாமல் , தாங்கள் கடண்டுபிடித்த திராவிட மொழிக்குடும்பத்தை மடத்தனமாக இனக்குழுவாக பேசினர், ஆனால் இப்போது அப்படியில்லை.

மேலும் நீங்கள் " வடஇந்திய மரபும் தமிழக மரபும் ஒன்றல்ல; இரண்டும் வேறு வேறானவை" எனும் பொழுது தென் இந்தியாவை தமிழ்நாடாக சமன்வயப்படுத்தியுள்ளீர்கள் , எப்படி ஆந்திராவையும், கர்நாடகத்தையும் , கேரளத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் ? அது தவறு. தமிழ்நாட்டில் இருந்த கலாசார வளர்ச்சிக்கு சமமாக மற்ற தென் இந்திய பகுதிகளும் இருந்தன.

ஸ்லேடரை ந்ம்பி வாதம் வைப்பது மண்குதிரையை ந்ம்பி ஆற்றக்கடப்பதாகும். நீங்கள் 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனைகளை தாண்டவில்லை என தெரிகிரது.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

வன்பாக்கம் விஜயராகவன் said...

இந்த பின்னூட்டத்தை தங்கள் 20 ஜூன் ஃபேஸ்புக் பதிவுடன் சேர்த்து படிகக்வும். நன்றி.

வவி